54) அஹோம்கள் அரசு
அஹோம்கள் (கி.பி.1228-1826) :
யார் இந்த அஹோம்கள்? சரித்திரத்தில் மறைக்கப்பட்ட பக்கங்களில் இவர்களின் வரலாறும் ஒன்று. இவர்களின் அரசானது சீனாவின் மொங் மை அரச வம்சத்திலிருந்தோ அல்லது பர்மாவிலுள்ள ஹூகாவூங் சமவெளியிலிருந்து வேரூன்றியது என்று நம்புகிறார்கள். இவர்கள் பர்மா, சீனா பகுதிகளை முன்பு ஆண்டவர்கள். இவர் தாய் மொழியை பேசும் மக்கள். இவர்கள் சீனாவிலுள்ள கியாங்ஸி பிரதேசத்தில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு நகர்ந்து வந்தனர். சுகப்ஹா என்பவரே இவர்களின் முதல் அரசர். இவரே அஹோம்களின் அரசை தோற்றுவித்தார். இவர்களின் தலைநகராக சரைய்டியோ, கத்கன், ரங்பூர் மற்றும் ஜோர்கத் இருந்தது. இவர்களின் அரசில் அஸ்ஸாமி மற்றும் அஹோம் மொழிகள் பேசப்பட்டது. கி.பி.16,17 நூற்றாண்டுகளில் இந்தியா முழுவதுமே வேரூன்றிய மொகலாயப் பேரரசை இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களான அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் தலையெடுக்க விடாமல் ஒவ்வொரு முறையும் விரட்டியவர்கள். 17 முறை மொகலாயப் படைகளை கி.பி.1615-1682வரை விடாமல் தோற்கடித்தவர்கள் இவர்கள். மிகச்சிறந்த போர்வீரர்களான இவர்கள் மொகலாய படையெடுப்புகளை விரட்டியடித்தாலும் பின்னர் கி.பி.19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் தங்களது அரசை இழந்தனர். 598 ஆண்டுகள் ஆட்சிக்கால இவர்களது அரசை மொத்தம் 39 அரசர்கள் ஆண்டனர். இவர்களில் சுஹாம்ப்ஹா என்பவர் அதிக ஆண்டுகள் (51 ஆண்டுகள்) அரசு புரிந்திருக்கிறார். சுஹாங் என்பவர் மிகக்குறைந்த நாட்களே (வெறும் 21 நாட்கள்) மட்டுமே அரசு புரிந்திருக்கிறார். முதலாம் ஆங்கிலேய பர்மிய யுத்தத்தின் முடிவில் யாந்தபே ஒப்பந்தத்தம் கி.பி.1826 பிப்ரவரி 24ல் பர்மிய அரசனுக்கும் கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தலைவர் ஆர்ச்சி பால்டு காமபெல்லுககும் இடையே யாந்தபே என்னும் கிராமத்தில் கையெழுத்தாயிற்று. இதன் மூலம் அஹோம் அரசு, மணிப்பூர் இராஜ்ஜியம், அரக்கான் ஆகிய பிரதேசங்களை ஆங்கிலேயர்களுக்கு சொந்தமாயிற்று.
அஹோம்களின் அரசர்கள் அவர்களின் முதல் அரசரான சுஹாபாவின் வழிவந்தவர்கள். அவரின் இரத்த வழியில் வந்தவர்களே. சுஹாபாவுககு இரண்டு வம்சங்கள் நிர்வாகத்தில் உதவி புரிந்தார்கள். கி.பி. 1280களில் இந்த இரு வம்சங்களில் ஒருவரான ஃபுர்ஹாகோஹெய்ன் வம்சம் சாதியா மற்றும் கிரெல்லா நதிகளுக்கு இடைப்பட்ட பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு பகுதிகளை ஆண்டார்கள். ஃபோர்கோகெய்ன் வம்சம் பிரம்மபுத்திரா ஆற்றின் மேற்கு பகுதிகளை ஆண்டார்கள். கி.பி.1527ல் மூன்றாவது மாகாணமாக ஃபோர்பத்ரோகோகெய்ன் இரண்டு இராஜ்யங்களுக்கும் இடையே உதயமாயிற்று.
இவர்களின் 17வது அரசரான சூசெங்ப்ஹா (பிரதாப் சிங்ஹா) இரண்டு வகையான ராணுவ அதிகாரிகளை அரசரின் கீழ் நியமித்தார். அவர்கள் போர்பாருவா மற்றும் போர்புகான் என்பவர்கள்.
ரஹ்மத் பானு பேகம் - அஸ்ஸாமின் அஹோம் அரச இளவரசி . ரமானி கப்ஹாரு என்பது இவரின் இயற்பெயர். அஹோம்களின் 20வது அரசரான சுதாம்லா (ஜெயத்ராஜ் சிங்ஹா) - பக்கோரி கப்ஹாருவின் மகளாக கி.பி.1656ல் பிறந்த இவர் மொகலாயர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் 7 வயதில் மொகலாய அரண்மனைக்கு வந்து பின்னர் முஸ்லீமாக மாறி 5 வருடங்கள் கழித்து கி.பி.1668ல் ஓளரங்கசீப்பின் மகனான (அவருக்கு பின் ஆட்சியேறியவர்) அஸம்ஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் அஹோம்களுக்கு கோரிக்கை விடுத்தும் இவரது மாமாவான அஹோம்களின் இராணுவ ஜெனரல் லக்சித் போர்புகான் மொகலாயர்களின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை.
அஹோம் - மொகலாயர்களின் 17 மோதல்கள் : இந்த 18 மோதல்களில் ஒருமுறை மோதல் நிகழாமல் ஒப்பந்தம் மட்டுமே செய்துக்கொண்டனர் என்பதால் 17 மோதல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படவேண்டும்.
- கி.பி.1615ல் ஃபார்நகர் (ஹஜோ,சம்தோரா கோட்டை) மொகலாயப் படைகளை தலைமை தாங்கி வந்த அபுபக்கர் மற்றும் பூஸ்னாவின் ராஜா சத்ரஜித் அஹோம்களின் வெளிக்காவல் படையினரை தோற்கடித்தாலும் மொகலாயர்களால் அந்த இடத்தை தக்கவைக்க முடியாமல் மீண்டும் அஹோம்களிடம் இழந்தனர்.
- கி.பி.1619ல் மொகலாய வெளிக்காவல் படையினருக்கும் அஹோம்களின் தாக்குதல் வீரர்களுக்கும் இடையே தானிகல் & ராணிகட் கோட்டைகளில் நடந்த முற்றுகையில் அஹோம்கள் வெற்றி பெற்றாலும் வெற்றியை தக்க வைக்க முடியாமல் மொகலாயர்களிடம் மீண்டும் அந்த பாசறைகளை இழந்தனர்.
- கி.பி.1619ல் மொகலாய கூடுதல் சிறப்பு படையினருக்கும் பாலிநாராயணுக்கும் நடந்த அஸ்ஸாமின் கெளஹாத்தியில் நடந்த மோதலில் மொகலாயர்கள் அஸ்ஸாம்மை விட்டு வெளியேற்றப்பட்டனர்
- கி.பி.1636ல் மொகலாய பிரதம படைகளுக்கும் அஹோம்களின் வெளிகாவல் படையினருக்கும் கெளஹாத்தியில் நடந்த போரில் மொகலாயர்கள் வெற்றி பெற்று பாசறையை கைப்பற்றினார்கள்
- கி.பி.1637ல் மொகலாய கூடுதல் சிறப்பு படைகளுடன் அஹோம்மின் பாலிநாராயணுக்கும் அஸ்ஸாம்மில் நடந்த போரில் மொகலாயப் படை காமரூபத்தை (அஸ்ஸாம்) கைப்பற்றியது.
- கி.பி.1638ல் மொகலாய கூடுதல் சிறப்பு படைகளுடன் அஹோம்களின் புறக்காவல் படையினர் சம்தோரா கோட்டையில் மோதியபோது அஹோம்கள் கோட்டையை கைப்பற்றினர். பின்னர் அசூரார் ஒப்பந்தத்தின் படி மொகலாயர்கள் காமரூபத்தை பெற்றனர்.
- கி.பி.1648ல் மொகலாய புறக்காவல் படையினருக்கும் அஹோம் அரசர் ஜெயத்வாஜ் சிங்ஹாவுககும் காபமரூபத்தில் நடந்த மோதலில் அஹோம்கள் மொகலாயர்களை அஸ்ஸாம்- வங்காளம் எல்லை வரை விரட்டியடித்தனர்.
- கி.பி.1662ல் மொகலாய வங்காள ஆளுநர் மீர் ஜூம்லாவுக்கும் அஹோம்களின் புறக்காவல் படையினருக்கும் கெளஹாத்தி,கஜாலி, சிமாலுகார்க், சம்தோரா, கார்கெளவுன் ஆகிய இடங்களில் நடந்த மோதல்களில் அஹோம் அரசர் தலைநகரான கார்கெளவுனை மொகலாயர்களிடம் இழந்தார்.
- கி.பி.1662ல் மொகலாய வங்காள ஆளுநர் மீர் ஜூம்லாவுக்கும் அஹோம்களின் அரசர் ஜெயத்வாஜ் சிங்ஹாவுக்கும் நடந்த மோதலில் அஹோம்கள் தலைநகர் கார்கெளவுனை மீட்டனர். மொகலாயர்கள் திரும்ப காமரூபத்திலுள்ள தங்கள் பாறைக்கு திரும்பினர்.
- கி.பி.1663ல் மொகலாய ஆளுநர் மிர்ஜூம்லா மற்றும் அஹோம்களின் அரசர் ஜெயத்வாஜ் சிங்ஹா ஆகியோருக்குமிடையே தலைநகர் கார்கெளவுனில் நடந்த மோதலில் அஹோம் அரசர் தலைநகரை இழந்தார். பின்னால் கிலாஜ்ஹரிகாத் ஒப்பந்தத்தின்படி நிறைய பணத்தை போர் வரியாக மொகலாயர்களுக்கு கொடுத்து தலைநகரை மீட்டுக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தின்படி தான் அஹோம்களின் இளவரசி ரமானி கப்ஹாரு மொகலாய அரண்மனைக்கு அனுப்பப்பட்டு அங்கேயே வளர்க்கப்பட்டு முஸ்ஸீம்மாக மதம் மாறி ஓளரங்கசீப்பின் மகனான அஸம்ஷாவுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
- கி.பி.1667ல் மொகலாய புறக்காவல் படையினருக்கும் அஹோம்களின் அரசரான சக்ரவத்வாஜ் சிங்ஹாவின் படைகளுடன் கெளஹாத்தி, இட்டகுளி மற்றும் ஹஜோ ஆகிய இடங்களில் நடந்த மோதல்களில் அஹோம்கள் மொகலாய படைகளை அவர்களின் பாசறையிலிருந்து அஸ்ஸாம்-வங்காளம் எல்லை வரை விரட்டியடித்தனர்.
- கி.பி.1667ல் மொகலாயர்களின் படைகளை அம்பரின் ராஜா முதலாம் ராம்சிங் மற்றும் ரஷீத் கான் தலைமை தாங்க அஹோம்களின் புறக்காவல் படையினருடன் ரங்கமதியில் நடந்த மோதலில் அஹோம்கள் பாசறையை இழந்தாலும் கெளஹாத்தியை மீட்டுக் கொண்டனர்.
- கி.பி.1669ல் மொகலாயர்களின் படைகளை அம்பரின் ராஜா முதலாம் ராம்சிங் மற்றும் ரஷீத் கான் தலைமை தாங்க அஹோம்களின் புறக்காவல் படையினருடன் தேஸ்ப்பூரில் நடந்த மோதலில் ஆரம்பத்தில் மொகலாயர்கள் பாசறைகளை கைப்பற்றினாலும் பின்னர் அஹோம்களால் தோற்கடிக்கப்பட்டு ஹஜோவை அஹோம்களிடம் இழந்தனர். பாசறைகளையும் அஹோம்கள் மீட்டனர்.
- கி.பி.1669ல் மொகலாயர்களின் படைகளை அம்பரின் ராஜா முதலாம் ராம்சிங் மற்றும் ரஷீத் கான் தலைமை தாங்க அஹோம்களின் சிறப்பு பாதுகாப்பு படையினருடன் சிவுல்குச்சியில் நடந்த மோதலில் அஹோம்கள் மொகலாயர்களின் பாசறைகளை கைப்பற்றி அவர்களை விரட்டியடித்தனர்.
- கி.பி.1670ல் மொகலாயர்களின் படைகளை அம்பரின் ராஜா முதலாம் ராம்சிங் அஹோம்களின் புறக்காவல் படையினருடன் தாலிபரி அருகிலுள்ள அலாபோய் மலைகளில் நடந்த மோதலில் மொகலாயர்கள் பாசறைகளை கைப்பற்றினர்.
- கி.பி.1671ல் மொகலாயர்களின் படைகளை அம்பரின் ராஜா முதலாம் ராம்சிங் அஹோம்களின் தளபதியான லட்சித் போர்ஃபுஹான் சராய்கத் போர்களத்தில் மோதியதில் அஹோம்கள் வெற்றி பெற்றனர். ஒட்டுமொத்த மொகலாய படைகளையும் பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கடித்து அஹோம்கள் வெற்றி பெற்றனர். அம்பரின் ராஜா முதலாம் ராம்சிங் தோற்று ரங்கமதிக்கு ஒடிப்போனார்.
- கி.பி.1679ல் பெங்கால் நவாப் மற்றும் லாலுக்சோலா போர்ஃபுஹானுக்கும் நடந்த ஒப்பந்தத்தின் விளைவாக எந்த மோதலும் நடக்கவில்லை ஆனால் லாலுக்சோலா போர்ஃபுஹான் கெளஹாத்தியை மொகலாயர்களிடம் விட்டு நீங்கினார்.
- கி.பி.1682ல் மொகலாயர்கள் மன்சூர் கான் தலைமையிலும் அஹோம்கள் திஹிங்கியா அலூன் போர்ஃபரூவா தலைமையிலும் இட்டகுளி போர்களத்தில் மோதியதில் அஹோம்கள் காமரூபத்தை மீட்டனர். அஹோம்களின் ஆதிக்கம் மானஸ் நதிவரை தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். பின்னர் கி.பி.1826ல் பிரிட்டிஷ்ஷார் அஸ்ஸாம்மை வீழ்த்தும் வரை இந்த பகுதிகள் அஹோம்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
அஹோம்களின் அரசர்கள்:
1) சுகப்ஹா (கி.பி.1228-1268) :
இன்றைய சீனாவிலுள்ள யூன்னான் பிரதேசத்திலுள்ள மாங் மோ என்னும் ஊரில் கி.பி.1189ல் பிறந்தவர். இவர் பர்மிய தாய் இனத்தை சேர்ந்தவர். Chao Chang Nyeu - Blak Khem Sen ஆகியோருக்கு மகனான இவர் மாங் மோ வை விட்டு கி.பி.1215ல் கிளம்பியவர் மையிட்டிகெய்னா, மோகெளவுங் மற்றும் இர்ராவாடி ஆற்று சமவெளியை கடந்து அஸ்ஸாம்மை வந்தடைந்தார்.பின்னர் நம்ரூப் (பிரம்மபுத்திரா சமவெளி)பை கி.பி.1228 டிசம்பரில் வந்தடைந்து அஹோம்களின் அரசை தோற்றுவித்தார். மாங் மோ - நம்ரூப் இடையே வந்தடைய 13 வருடங்களாயிற்று. இவருடன் 9000 வீரர்கள் வந்து சேர்ந்தனர். இவருக்கு 5 படைத்தளபதிகள் இருந்தனர். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள் (அய்-மீ-ஸோ-லோ, நங்-செங்-சும்-பா & இ-லோ-வெங்-சின்க்-சும்-பா) மற்றும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். நம்ரூப்பை அடைந்தவுடன் ஸிர்ஸா ஆற்றின் இடையே பாலத்தை கட்டினார். அங்கு ஆற்று நீர் பாசனத்தின் வழியாக அரிசி விவசாயத்திற்கு முயற்சி பண்ணினார். அங்கு விவசாயத்திற்கு வழியில்லாததால் அவர் திபம் என்ற இடத்தின் கழிவாரபகுதிகளுக்கு இடம்புகுந்தார். கி.பி.1236ல் திபம்மை விட்டு அபய்ப்பூர்ககு இடம் மாறினார். கி.பி.1240ல் பிரம்மபுத்திரா வெள்ளத்தினால் ஹாபுங் (இன்றைய பெயர் தாக்குவாக்கானா)க்கு இடம் மாறினார். கி.பி.1244ல் இன்னொரு முறை வெள்ளத்தினால் திகோவ்முக் என்ற இடத்திற்கு திரும்பவும் இடம் மாறினார். பின்னர் லிகிரிகெளன் என்ற இடத்திற்கு மாறி பின்னர் அங்கிருந்து கி.பி.1246ல் சிமாலுகுரி என்ற இடத்திற்கு மாறி பின்னர் கி.பி.1253ல் அங்கிருந்து சாரைய்டியோவுக்கு தனது தலைநகரை மாற்றினார். அவரின் ஆயுட்காலம் முடியும்வரை கி.பி.1268வரை அதுவே அவரது தலைநகராக இருந்தது. இவர் உள்ளூர் தலைவர்களின் மகள்களை மணந்து கொண்டு இராஜ்ய உறவுகளை வலுப்படுத்தினார். தனது படைவீரர்களையும் உள்ளூர் பெண்களுடன் திருமண உறவு கொள்ள வலியுறுத்தினார். இவரது மறைவு சமயத்தில் அஹோம்களின் அரசு மேற்கே பிரம்மபுத்திரா ஆறும் வடக்கே திஸாங் ஆறும், தெற்கே திக்ஹொவ் ஆறும், கிழக்கே நாகா மலைகளையும் எல்லைகளாக கொண்டிருந்தது.
2) சுடேப்ஹா (கி.பி.1268-1281) :
இவர் சுஹாப்ஹாவின் மறைவிற்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரது மூத்த மகன். தந்தை மறைந்ததும் தந்தையின் பூர்வீக இடத்தை ஆட்சி புரியும் தந்தையின் மூத்த சகோதரரான சுக்ரான்ம்ப்ஹாவுக்கு தந்தையின் மரண செய்தியையும் தான் பட்டமேறிய செய்தியையும் அறிவிக்க அவர் இவருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி இவரை கெளரவித்தார். தந்தைக்கு பிறகு தனது இராஜ்யத்தின் விரிவாக்கத்தில் இறங்கிய இவருக்கு பக்கத்து அரசான கச்சாரிகளுடன் மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. கச்சாரிகளின் திக்ஹாகு நதிவரையிலான பகுதிகளை கைப்பற்றினார். நாராக்களுக்கும் அல்லது முங்காங்களுக்கும் பர்மிய அரசனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தாரா/முங்காங்கள் இவரின் உதவியை நாடினர். நாரா அரசனின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் உதவி புரிவதாக கூற அவர் மறுத்துவிட்டார். நாராக்களின் மீது படையெடுக்க அவர்கள் புர்ஹாகோகெய்ன் படைகளை தோற்கடித்து விரட்டினார்கள். பின்னர் இரண்டாம் முறையாக போர்புகான் வந்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் இவரது ஆட்சியில் நாராக்களும் இவருக்கும் பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாராக்களுடன் பிரச்சினை சுகாம்ப்ஹா அல்லது கோரா ராஜா ஆட்சிக்காலத்தில் என்று தான் கூறுகின்றனர். கி.பி.1281ல் இவர் மறைய இவருக்கு பிறந்த 4 மகன்களில் மூத்தவரான சுபின்ப்ஹா அடுத்த பட்டத்துக்கு ஏறினார்.
3) சுபின்ப்ஹா (கி.பி.1281-1293) :
இவர் சுடேப்ஹாவின் மூத்த மகன். இவரது ஆட்சியில் அஹோம்கள் தங்களுக்குள் மூன்று பிரிவுகளாக இராஜ்யத்தை பிரித்து ஆட்சி புரிய ஆரம்பித்தனர். அரசர், புர்ஹாகோகெய்ன், போர்கோகெய்ன் என்று மூன்று மாநிலங்களாக பிரித்து ஆள ஆரம்பித்தனர். இவரது மனைவியின் பெயர் ஹிங்குலி. இவருக்கு பின் இவரது மகன் சுஹ்ஹான்ப்ஹா ஆட்சிக்கு வந்தார்.
4) சுஹ்ஹான்ப்ஹா (கி.பி.1293-1332) :
இவர் சுபின்ப்ஹாவின் மகன். இவருக்கு மூன்று மகன்கள். இவருக்கு பின்னர் மூவரும் ஒருவருக்கு பின் ஒருவராக ஆட்சிக்கு வந்தனர். இவரது ஆட்சியில் தான் அஹோம்கள் முதன்முதலில் பக்கத்து இராஜ்யமான காமாதா அரசரான பிரதாப்த்வாஜ் உடன் நீண்ட போரை துவங்கினர். போர் நீண்டு எத்தரப்பிற்கும் வெற்றியில்லாமல் போகவே காமாதா அரசரின் மகள்களான ரஜனீ மற்றும் பஜனீயை மணந்துக்கொண்டு இருவருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தார். ரஜனீக்கு 4 மகன்கள் பிறந்தனர் (சுக்ரங்ப்ஹா,சுடுப்ஹா,டியோ காம்டி மற்றும் டியோ சுலாய்). பஜனீக்கு ஒரே ஒரு மகன் பிறந்தார் (ஸோ புலாய்).
5) சுக்ரங்ப்ஹா (கி.பி.1332-1369) :
இவர் முந்தைய அரசர் சுஹ்ஹான்ப்ஹாவின் 5 மகன்களில் மூத்த மகன். இவரின் பதவியேற்புக்கு பின்னர் இவரது இளைய சகோதரரான ஸோ புலாய்யுடன் இவருடன் பிரச்சினைகள் செய்து தனது தாயின் நாடான காமாதா நாட்டுக்கு உதவிக்கு சென்று விட்டார். அங்கு ஆட்சிபுரிந்த இவரின் மாமாவின் படைகளுடன் தனது சகோதரரை எதிர்த்து வந்தார். இதை அறிந்து கொண்ட சுக்ரங்ப்ஹா சகோதரருடன் போர் புரியாமல் அவருக்கு இராஜ்யத்துக்கு உட்பட்ட சாரிங் பகுதியை அவரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். அது முதல் ஸோ புலாய் மற்றும் அவரின் வழித்தோன்றல்கள் "சாரிங் ராஜா" என்று அழைக்கப்படுகின்றனர். பிரம்மபுத்திரா நதிககரையிலுள்ள பழங்குடியினரை வென்று தனது ஆட்சியை விரிவுபடுத்தியதை தவிர பெரும்பாலான இவரது ஆட்சி அமைதியாகவே இருந்தது. இவருக்கு மகன்கள் இல்லாததால் இவரது சகோதரர் சுடுப்ஹா கி.பி.1364-69 வரையில் ஆட்சியில் உடனிருந்தார். கி.பி.1369ல் இவரது மறைவுக்கு பின்னர் சகோதரர் சுடுப்ஹா ஆட்சிக்கு வந்தார்.
6) சுடுப்ஹா (கி.பி.1369-1376) :
இவர் முந்தைய அரசர் சுகரங்ப்ஹாவின் சகோதரர். சகோதரர் உடல்நலமில்லாததால் அவருடன் கி.பி.1364-1369களில் இணைந்து ஆட்சி நடத்தியவர் சகோதரனின் மறைவுக்கு பின்னர் ஆட்சியேறினார். இவர் கி.பி.1380ல் கொல்லப்பட்டார். ஆட்சியேறியவுடன் அரசை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியதால் சுதியா அரசர்களுடன் பகையுண்டாயிற்று. நட்புறவு வேண்டி கி.பி.1376ல் சுதியா அரசர் சாப்பாகுரிக்கு வந்து இவரை சந்தித்து விடைபெறும்போது தனது நாட்டுக்கு அழைத்தார். அவ்வாறு இவரும் ஸாப்ராய் நதிக்கரையில் அவ்வாறு செல்லும்போது சுதியா அரசரின் காவலர்களால் இவர் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு மகன் வாரிசு இல்லாததால் கி.பி.1376-80வரை புர்ஹாகோகெய்ன் மற்றும் போர்கோகெய்ன் பதவி வகித்தவர்கள் நாட்டின் நிர்வாகத்தை நடத்தினார்கள். ஆனால் நாட்டிற்கு அரசர் தேவையென்பதால் சுடுப்ஹாவின் இளைய சகோதரரான டியோ காம்டியை அடுத்த அரசராக கி.பி.1380ல் அறிவித்தனர்.
7) டியோ காம்டி (கி.பி.1380-1397) :
இவர் முந்தைய அரசர் சுடுப்ஹாவின் சகோதரர். கி.பி.1376-1380களில் புர்ஹாகோகெய்ன் மற்றும் போர்கோகெய்ன் உடன் இணைந்து ஆட்சி நடத்தியவர். சகோதரர் சுடுப்ஹாவின் படுகொலைக்கு பின்னர் கி.பி.1380ல் ஆட்சியேறிய இவரும் 17 வருட ஆட்சிக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். தான் ஊரில் இல்லாத நேரங்களில் தனது மூத்த மனைவியின் பொறுப்பில் தனது நாட்டை ஒப்படைத்து விட்டுச் சென்றார். அந்த நேரத்தில் இவரின் பிரியமான இரண்டாவது மனைவி கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த இரண்டாவது மனைவி மீது பொறாமை கொண்டு மூத்த மனைவி அவரின் மீது குற்றம் சுமத்தி அவரை தண்டிக்க முயன்றார். மற்ற அமைச்சர்கள் தலையிட்டதால் அவரை நாடு கடத்தினர். அந்த நேரத்தில் அவர் பிரம்மபுத்திரா நதி கரையில் ஒரு பிராமணரின் குடிலில் மகனைப் பெற்றெடுத்து பிரசவத்தில் மறைந்துவிட்டார். பின்னர் நாடு திரும்பிய டியோ காம்டி இந்த விஷயங்களை அறிந்து மூத்த மனைவியை கண்டித்தார். இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனான சுடங்ப்ஹா இவருக்கு பின்னர் ஆட்சியேறினார். ஆட்சியில் இவரது மூத்த மனைவியின் தலையீடுகள் மக்களின் மீது அக்கறையின்மையினால் அமைச்சர்கள் டியோ காம்டி மற்றும் அவரது மூத்த அரசியையும் கொன்றனர். இவர்களின் சமாதி சாரைய்டியோ நகரில் அமைந்துள்ளது. இடைப்பட்ட 1389-1397 காலங்களில் அமைச்சர்கள் குழுவே ஆட்சியை நடத்தியது. பின்னர் டியோ காம்டியின் இரண்டாவது அரசியின் மகனான சுடங்ப்ஹாவை ஆட்சியில் அமர்த்தினர்.
8) சுடங்ப்ஹா (கி.பி.1397-1407) :
பாமினி குன்வர் என்பது இவரது இன்னொரு பெயராகும். முந்தைய அரசர் டியோ காம்டியின் மகன். தந்தையின் மறைவுக்கு பின்னர் இவர் கி.பி.1397ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அஹோம்களின் வணிகரான "தோ சியோகின்" என்பவர் வணிகத்திற்காக பிரம்மபுத்திரா நதியை கடந்து ஹாபுங் ராஜ்யத்திற்கு சென்றபோது இளவயது இவரை கண்டு சந்தேகம் கொண்டு இவரை பற்றி விசாரிக்க இவர் டியோ காம்டியின் இளைய ராணியின் மகன் என்பதை அறிந்துக் கொண்டு புர்ஹாகோகெய்ன் மற்றும் மற்ற அமைச்சர்களிடம் இந்த விவரங்களை தெரிவிக்க இந்த இளவரசனான சுடங்ப்ஹா தனது 15வது வயதில் சாரைய்டியோவுககு வந்து அஹோம்களின் அரசப் பொறுப்பை ஏற்றார். இவரை வளர்த்த பிராமணர் இவருக்கு ஆலோசகராக இருந்தார். அவரால் தான் நிறைய இந்து ஆலயங்கள் கட்டப்பட்டது. இவரால் தான் அரண்மனையின் பூஜையில் லக்ஷ்மி-நாராயண் சாலகிராம் பயன்படுத்தப்பட்டது. மேல் அஸ்ஸாம்மின் முங்காங் வம்சத்து அரசர்களுடன் போரில் தலைமையேற்று கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். இளவயதில் சுகானுபவங்களில் திளைத்ததால் ஆட்சியேறிய 10 வருடங்களிலையே மரணமடைந்தார்.
9) சுஜங்க்ப்ஹா (கி.பி.1407-1422) :
இவர் முந்தைய அரசர் சுடங்ப்ஹாவின் மூன்று மகன்களில் மூத்த மகன். தந்தையின் மறைவுக்கு பின்னர் இளவயதில் ஆட்சியேறினார். 15 வருடங்கள் ஆட்சி புரிந்த இவரின் காலத்தில் எந்த முக்கிய சம்பவங்களும் நடைபெறவில்லை. கி.பி.1422ல் மறைந்த இவருக்கு பின் இவரது மகன் ஆட்சிக்கு வந்தார்.
10) சுபக்ப்ஹா (கி.பி.1422-1439) :
இவர் முந்தைய அரசர் சுஜங்க்ப்ஹாவின் மகன். தந்தையின் மரணத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் திபாம் இளவரசியை மணந்தார். 17 வருடங்கள் ஆட்சிபுரிந்த இவர் கி.பி.1439ல் மறைந்தார்.
11) சுசென்ப்ஹா (கி.பி.1439-1488) :
இவர் முந்தைய அரசர் சுபக்ப்ஹாவின் மூத்த மகன். இவரது இயற்பெயர் தையோபாஸுபுக். தந்தையின் மரணத்திற்கு பின் ஆட்சியேறிய இவர் 49 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் மிக நல்ல அரசராக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளார். அக்ஹாம்பனி நாகாக்கள் தங்களது பூர்விக வாளை இவரின் முன்னே வைத்து தாங்ஸூ நாகாகளிடம் இருந்து தங்களை காக்க வேண்டினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று தாங்ஸூ நாகாக்களை போரில் சந்தித்து அவர்களை வென்றனர். இவரின் ஆட்சிகாலத்தில் தான் பிரபலமான வைஷ்ணவரான ஸ்ரீமந்த் சங்கர்தேவ் கி.பி.1449ல் பிறந்தார். 49 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் இவர் கி.பி.1488ல் மறைந்தார்.
12) சுகேன்ப்ஹா (கி.பி.1488-1493) :
இவர் முந்தைய அரசர் சுசென்ப்ஹாவின் மகன். அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அஹோம்களின் இராஜ்ய விரிவாக்கத்தின் காரணமாக நாகாக்கள் மற்றும் கச்சாரிகளின் அரசுகளுடன் இவருக்கு மோதல்கள் நிகழ்ந்தது. இவர் 5 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் அஹோம்களின் ஒரு பிரிவான தாய்ருன்ங்பான் கிளையினால் கொல்லப்பட்டார்.
13) சுபிம்ப்ஹா (கி.பி.1493-1497) :
இவர் முந்தைய அரசர் சுகேன்ப்ஹாவின் மகன். பதவிக்கு வந்தவுடன் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கொன்றார். கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தண்டித்தார். கொலைக்கு உதவியாக "குன்லுங் புர்ஹாகோகெய்ன்"னுக்கு தொடர்பு இருந்ததாக கூறி அவரை தண்டிக்க முற்பட அவர் தனது இராஜ்யத்திற்கு ஓடினார். இதனால் கோபமுற்ற இவர் அவரை பதவியிலிருந்து அகற்றி வேறொருவரை அந்த பதவியில் அமர்த்தினார். பின்னர் "குன்லுங் புர்ஹாகோகெய்ன்" கைது செய்யப்பட்டு தண்டிக்க முற்பட்ட போது அவரை மற்ற அமைச்சர்கள் தலையீட்டினால் தண்டிக்காமல் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து நாடு கடத்தினார். இவரது தந்தையின் காலத்தில் இருந்து நாகாக்களின் தலைவர்களுடன் சுமூக உறவு இருந்ததால் அவர்களின் தலைவர் வருடாவருடம் இவரை சந்தித்து பரிசு பொருட்கள் வழங்கி கெளரவிப்பது வழக்கம். அப்படியான நேரத்தில் இவரது அரசிகளுள் ஒருவர் நாகா தலைவரின் அழகை சிலாகித்து பேசியது இவரின் காதுகளில் விழ கர்ப்பமாக இருந்த அந்த அரசியை சிறையில் அடைத்தார். சிறையில் இருந்த போது பிறந்த மகன் தான் கான்செங் என்பவர். பின்னால் சுபிம்ப்ஹாவின் பின்னால் ஆட்சியேறிய சுகுங்முங் என்பவர் கான்செங்கின் பூர்விகத்தை கேள்விப்பட்டு மூன்றாவது ராஜ்யமாக இராணுவ பிரிவாக "போர்பத்ரோகோகெய்ன்" பிரிவாக நியமித்தார். இவர்கள் சுகுங்முங்குடன் பல போர்களில் இணைந்து போரிட்டனர்.
14) சுகுங்முங் (கி.பி.1497-1539) :
சுவர்கநாராயண், டிஹிங்கியா ராஜா I என்பது இவரது இன்னொரு பெயர்களாகும். இவர் முந்தைய அரசர் சுபிம்ப்ஹாவின் மகன். அஸ்ஸாமின் மத்தியகால வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரசர் இவர். இவர் சுதியா மற்றும் திமாஸா அரசுகளுடன் போரிட்டு அரசை விரிவுபடுத்தினார். முதன்முதலில் முஸ்லீம் படையெடுப்புகளிலிருந்து வெற்றிகரமாக தன் நாட்டை காப்பாற்றினார். முதன்முதலில் இந்து பெயரை தாங்கிய மன்னர் இவரே. இவருக்கு பின்னர் வந்த மன்னர்கள் பின்னால் இந்து பெயர்களை தாங்கி வழிவந்தனர். கி.பி.1504ல் அய்டோனியா நாகாக்களை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்தினார். கி.பி.1510ல் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இளைஞர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.(முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு). கி.பி.1512ல் சிதியா ராஜ்யத்தின் ஹாபுங் நகரை கைப்பற்றினார். கி.பி.1531ல் கச்சாரி அரசர் தனது சகோதரர் தலைமையில் அனுப்பிய படைகளை தோற்கடித்தார். கச்சாரிகளின் தலைநகரான திமாப்பூரை கைப்பற்ற அவர்கள் மாய்பாங்க் நகருக்கு தலைநகரை மாற்றினார்கள். கி.பி.1527,1532களில் நடந்த இரு முஸ்லீம் படையெடுப்புகளையும் முறியடித்தார். 42 வருட ஆட்சிக்கு பின்னர் இவரும் படுகொலை செய்யப்பட்டார். இவரை இவரது வேலையாளான ரதிமன் இவர் தூங்கும்போது கொன்றார். கொலையில் இவரது மகனான சுக்லேன்முங் மற்றும் அவரது மனைவியான கச்சாரி வம்ச இளவரசிக்கும் தொடர்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டது.
15) சுக்லேன்முங் (கி.பி.1539-1552) :
கார்கயான் ராஜா என்பது இவரது இன்னொரு பெயர். இவர் முந்தைய அரசர் சுகுங்முங்கின் மகன். இவரின் தந்தையின் படுகொலையில் இவரும் உடந்தை என்று வதந்தி பரவியதால் கொலையாளி மற்றும் அவரது சகோதரர்களை உடனே தண்டித்தார். தந்தையின் ஆட்சியில் பெங்காலின் முஸ்லீம் ஆட்சியாளரான டர்பெக்கின் கி.பி.1532 ஆண்டு படையெடுப்பில் இவர் தலைமை வகித்தார். போரில் காயம்பட்டதால் போர்பத்ராகோகெய்ன் இவருக்கு பதிலாக தலைமையேற்று ஆக்ரமிப்பாளரை விரட்டியடித்தார். கி.பி.1546ல் கூச்சின் தளபதியான சிலாராய் ரகசியமாக சாலைகள் கட்டி பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் முகாம் அமைத்தார். இவர் கூச் படைகளை அங்கிருந்து விரட்டியடித்தார்.
16) சுக்ஹாம்ப்ஹா (கி.பி.1552-1603) :
அஹோம்களில் அதிக ஆண்டுகள் (51 ஆண்டுகள்) ஆண்ட மன்னர் இவர் தான். இவர் முந்தைய அரசர் சுக்லேன்முங்கின் மகன். இவர் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமுடையவர். பதவியேற்பு முடிந்த சமயத்தில் யானைச்சவாரியில் ஈடுபட்டபோது கீழே விழுந்ததால் சற்று விந்தியே நடப்பார் என்பதால் கோரா ராஜா என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது தந்தையின் ஆட்சியில் நாட்டை விட்டு சென்ற வைஷ்ணவ பக்தர்களான சங்கர்தேவ் மற்றும் மஹாதேவ் இவரின் ஆட்சியில் ஏகாஸரனா தர்மா மையங்களை ஆரம்பித்தனர்.
கி.பி.1562ல் கூச் அரசுடன் ஏற்பட்ட மோதல்களால் கி.பி.1563 ஜனவரியில் கூச் தளபதி சிலாராய் அஹோம்களின் புர்ஹாகோகெய்ன்னை தோற்கடித்து அஹோம்களின் தலைநகரான கார்கெளவுனை கைப்பற்றினார். சுக்ஹாம்ப்ஹா நம்ரூப்க்கு தப்பிப்போனார். பின்னர் ஏற்பட்ட மாஜூலி ஒப்பந்தத்தின் படி நிறைய தங்கம் வெள்ளி துணிகள் ஆகியவற்றைபெற்று கூச் தளபதி சிலாராய் கார்கெளவுன்னை விட்டு நீங்கினார். கி.பி. 1576ல் சுதியா ராஜ்யம் இவரின் ராஜ்யத்துடன் வேறுபட்டு நின்றதால் முங்காங்கின் நாரா அரசர் நம்ரூப்பில் அஹோம்களை தோற்கடித்து ஸேஸா நதிக்கரை வரை வந்தவர்களை அஹோம்கள் மீண்டும் திரும்பி வந்து விரட்டியடித்தனர். கி.பி.1603ல் 51 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் மறைந்தார்.
17) சூசெங்ப்ஹா (கி.பி.1603-1641) :
பிரதாப் சிங்ஹா, புர்ஹாராஜா, புத்திஸ்வர்க் நாராயண் என்பவை இவரது இன்னொரு பெயர்களாகும். இவர் முந்தைய அரசர் சுக்ஹாம்ப்ஹாவின் மகன். அஹோம்களின் அரசில் இராணுவத்தில் போர்புஹான் என்ற பதவியை ஏற்படுத்திய எல்லைகளை காக்கும் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தியவர் இவர் தான். இவர் ஜைய்ந்தியா இளவரசி மற்றும் கூச்சின் இளவரசி மங்கள்தாஹியை மணந்தார். இவருக்கு சுரம்ப்ஹா மற்றும் சுதீன்ங்ப்ஹா என்ற இரு மகன்கள் பிறந்தனர். இவரது இயற்பெயர் லங்கி கோஹெய்ன் என்பதாகும். இவர் பட்டமேற்கும் போது இவரின் வயது 58 என்றும் பதவியேற்கும் போது சூசெங்க்ப்ஹா என்ற பெயரில் பதவியேற்றார். பதவியேற்கும் போது ஜைய்ந்தியா இளவரசியை மணந்துக்கொண்டார். கூச் ஹஜோ ஆட்சியாளரின் மகளான மங்கல்தாஹியையும் மணந்து கொண்டார். இவரின் காலத்தில் தான் அஸ்ஸாமில் துர்க்கை வழிபாடு துவங்கியதாக சொல்கிறார்கள். கூச் பிஹார் மற்றும் கூச் ஹாஜோ பகுதிகளுடன் மொகலாயர்கள் மோதல் அஹோம்கள் மற்றும் மொகலாயர்கள் மோதலாக கி.பி.1615ல் உருவெடுத்து கி.பி.1682 வரை தொடர்ந்தது. இவரின் ஆட்சிக் காலத்தில் கச்சாரிகள் மற்றும் மொகலாயர்களுடன் தொடர்ச்சியான போர்களில் மோதினாலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக சாலைகள் மற்றும் அணைகள் ஆகியவற்றை செவ்வனே செய்தார். 38 ஆண்டுகள் ஆண்டு கி.பி.1641ல் மறைந்தார்.
18) சுரம்ப்ஹா (கி.பி.1641-1644) :
ஜெயதித்ய சிங்ஹா, போகா ராஜா என்பது இவரது வேறு பெயர்கள். இவர் முந்தைய அரசர் சூசெங்க்ப்ஹாவின் 3 மகன்களும் இவரும் ஒருவர். இவரது ஒழக்ககேடான நடத்தையினால் முறைகேடான உறவில் வந்த ஒருவரை தனது வாரிசாக அறிவித்ததை ஏற்காத அஹோம் பிரபுக்கள் இவருக்கு விஷமிட்டு கொன்றனர். 3 ஆண்டுகளில் இவரது ஆட்சியை முடித்து இவரின் சகோதரர் சுதீன்ங்ப்ஹாவை ஆட்சியில் அமர்த்தினார்கள.
19) சுதீன்ங்ப்ஹா (கி.பி.1644-1648) :
நோரியா ராஜா என்பது இவரது இன்னொரு பெயராகும். இவர் முந்தைய அரசர் சுரம்ப்ஹாவின் சகோதரர். இவரது ஆட்சியில் எப்போதும் பல்லக்கிலையே பயணம் செய்ததால் மக்களை நேரிடையாக சந்தித்ததேயில்லை என்பதே இவரது குறை. இவரது 4 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் இவரது மகனான சுதாம்லாவால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு கொல்லப்பட்டார்.
20) சுதாம்லா (கி.பி.1648-1663) :
ஜெயத்வாஜ் சிங்ஹா, பாகனியா ராஜா என்பது இவரது வேறு பெயர்களாகும். இவர் தந்தையான சுதீன்ங்ப்ஹாவை கொன்று ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மகன்கள் யாருமில்லை. ஒரேயொரு மகள் மட்டுமே. அவர் தான் ஓளரஙகசீப்பிற்கு பின்னால் ஆட்சிக்கு வந்த அவரின் மகனான அஸம்ஷாவின் முதல் மனைவியான ரஹ்மத் பானு பேகம். இவருடைய ஆட்சியில் வங்காளத்தின் மொகலாய ஆளுநரான இரண்டாம் மிர் ஜூம்லா அஹோம்களின் மீது போர் தொடுத்து இவரை தலைநகர் கார்கெளவுனிலிருந்து நம்ரூப்புக்கு விரட்டியடித்தார். பின்னர் கி.பி.1661ல் மொகலாயர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் காரணமாக 5 வயதான அஹோம் இளவரசி ரமானி கப்ஹாரு மொகலாயர்களின் டெல்லி அரண்மனையில் வளர்க்கப்பட்டு மூஸ்ஸீம்மாக மதம் மாற்றப்பட்டு மொகலாய இளவரசர் அஸம்ஷாவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சுதாம்லாவின் மறைவுக்கு பின்னர் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சுபங்முங் ஆட்சிக்கு வந்தார்.
21) சுபங்முங் (கி.பி.1663-1670) :
சக்ரத்வாஜ் சிங்ஹா என்பது இவரது வேறு பெயராகும். முந்தைய அரசர் சுதாம்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர். இவரின் ஆட்சியில் தான் மொகலாய ஆளுநரான மிர் ஜூம்லாவால் ஏற்படுத்தப்பட்ட கிலாஜ்ஹரிகாட் ஒப்பந்தத்தை மீறி மொகலாயர்களின் பிடியில் இருந்த கெளஹாத்தியை அஹோம்கள் மீட்டனர். இவரது பதவியேற்பின் போது ஓளரங்கசீப் கீலத் என்னும் மரியாதை கயிற்றை அனுப்பினார். அதை அவரின் தூதுவர்கள் இவரை கட்ட வலியுறுத்தியபோது அரியணையிலிருநது "அந்நியர்களின் அடிபணிவதை விட மரணமே மேலானது" என்று வீர கர்ஜனையிட்டவர் இவர். ஆட்சியில் ஏறியவுடன் சம்தாரா மற்றும் பாடகாலங்கந்த் கோட்டைகளை பழுதுபார்த்து இராணுவத்தை பலப்படுத்தினார். கி.பி.1665 மார்ச்ல் தனது அமைச்சர்கள் குழுக்கு தங்கள் பகுதியிலிருந்து மொகலாயர்களை மேற்கு அஸ்ஸாமிலிருந்து விரட்ட உத்தரவிட்டார். தனது முன்னோர்கள் எந்த அன்னியருக்கும் அடிபணிந்தததில்லை. நானும் எந்தவித அந்நிய சக்திகளுக்கும் அடிபணிந்து நடக்கபோவதில்லை. நான் பெருமை வாய்ந்த சுதந்திர மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் அதனால் எனது எதிரிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க ஆயுத்தமாகிறேன் என்று அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கி.பி.1667 ஆரம்பத்தில் கெளஹாத்தியின் மொகலாய தானாதாரான ரஷீத் கான் பழைய பாகங்களை கேட்டு இவருக்கு கடிதம் அனுப்ப மொகலாயர்களுடன் இவர் போருக்கு தயாரானார். கி.பி.1667 ஆகஸ்டில் "லட்சித் போர்புஹான்" கெளஹாத்தியை மொகலாயர்களிடமிருந்து கைப்பற்றி அவர்களை விரட்டினார். பின்னர் அதே ஆண்டு கி.பி.1667 நவம்பர் 2ல் மொகலாயப் படைகள் முகாமிட்டிருந்த இட்டாகுளியை கைப்பற்றி அவர்களை விரட்டினார். மொகலாயர்களிடமிருந்து யானைகள், குதிரைகள், துப்பாக்கிகள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். மொகலாயர்களை மானஸ் ஆற்றுவரை விரட்டியடித்து மீர் ஜூம்லா முன்பு அவர்களிடம் முன்பு இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டனர். மொகலாயர்களுடன் சாராய்காத் போர்களத்தில் வெற்றியை அஹோம்கள் சுவைப்பதற்கு முன்பே இவர் கி.பி.1670 ஏப்ரலில் காலமானார்.
22) சுண்யத்ப்ஹா (கி.பி.1670-1672) :
உதயாதித்யா சிங்ஹா என்பது இவரது வேறு பெயராகும். இவர் முந்தைய அரசர் சுபங்முங்கின் சகோதரர். இவரது சகோதரரின் காலத்தில் ஆரம்பித்து சாராய்காத் போரில் லட்சித் போர்புஹான் மொகலாய தளபதியான அம்பரின் இராஜபுத்ர இளவரசனான முதலாம் ராம்சிங் கை தோற்கடித்தார். 2 வருட ஆட்சியில் திபோரா போர்பருவாவால் இவரும் இவரது மூன்று மனைவிகளும் விஷமிட்டு கொல்லப்பட்டனர்.
23) சுக்லம்ப்ஹா (கி.பி.1672-1674) :
ராமாத்வாஜ் சிங்ஹா என்பது இவரது வேறு பெயராகும். இவர் முந்தைய அரசனான சுண்யத்ப்ஹாவின் சகோதரர். அவரை திபோரா போர்பருவாவின் உதவியினால் விஷமிட்டு கொன்று ஆட்சிக்கு வந்த இவரும் அவராலையே விஷமிட்டு கி.பி.1674 நவம்பரில் கொல்லப்பட்டார்.
24) சுஹூங் (கி.பி.1674-1675) :
சமகுரியா ரோஜா காம்ஜங் என்பது இவரது வேறு பெயராகும். வெறும் 21 நாட்களே அரசு புரிந்த மன்னர் இவர். சிலர் 45 நாட்கள் ஆட்சியில் இருந்ததாகக் கூறுகின்றனர். இவர் முந்தைய 14வது அரசரான சுஹூன்முங் வழிதோன்றலாவார். முந்தைய 23வது அரசனான சுக்லம்ப்ஹாவை விஷமிட்டு கொன்று திபோரா போர்பருவா இவரது தாய் வழியில் உறவினர் என்பதால் இவரை பதவியில் அமர்த்தினார். பதவியில் அமர்ந்த பிறகு இவரை சுற்றி இவரை கண்காணிக்க பெண்களை நியமித்தார். 20வது அரசரான சுதாம்லாவின் மனைவியான பஹாரி கப்ஹாருவை (இவர் மாமாய்-தமுளி போர்பரூவாவின் மகளும் லட்சித் மற்றும் லாலுக் சோலா போர்புஹான் ஆகியோர்களின் சகோதரியுமாவார்) இவரது பட்டத்தரசியாக ஆக்கினார். திபேரா போர்பரூவாவின் மோலாதிக்கத்தை விரும்பாத சுஹூங் அவரை கொல்ல முயற்சிக்க அவர் இவரை விஷமிட்டு கொன்றார்.
25) கோபர் ரோஜா (கி.பி.1675) :
சுஹூங் கொலைக்கு பின்னர் திபோரா போர்பரூவா இவரை ஆட்சியில் அமர்த்தினார். துங்குன்ஜியா வம்சத்தில் இருந்து வந்த முதல் அஹோம் அரசர் இவரே. பின்னால் வந்த 29வது அஹோம் அரசரான சுபாத்ப்ஹா இவரது மகனே. வெறும் 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த இவரையும் திபோரா போர்பரூவாவையும் அடான் புர்ஹாகோஹெய்ன் தலைமையில் அஹோம் பிரபுக்கள் கொன்றனர். பின்னர் அஹோம் பிரபுக்கள் அடான் புர்ஹாகோஹெய்ன்னை அரசராக பதவியேற்க வலியுறுத்த அவர் மறுத்து சுஹாப்ஹாவின் வழிதோன்றலில் வந்த அர்ஜீன் குன்வரை அடுத்த அரசராக முன்மொழிந்தார்.
26) சுஜின்ப்ஹா (கி.பி.1675-1677) :
அர்ஜீன் குன்வர், திஹிங்கியா ராஜா என்பது இவரது வேறு பெயர்களாகும். முதலில் அடான் புர்ஹாகோஹெய்ன் மற்றும் அஹோம் பிரபுக்களின் வழிகாட்டுதலில் ஆட்சிபுரிந்த இவர் பின்னால் இவரது மனைவி மற்றும் அவரின் ஆலோசகர்களின் படியே நடந்து அடான் புர்ஹாகொஹெய்ன்னின் அதிகாரங்களை குறைக்க அவர் அரசருடன் முதல் போரில் தோற்றாலும் பின்னால் இரண்டாவது மோதலில் வெற்றி பெற்று சுஜின்ப்ஹாவை சிறைப்பிடித்து இவரது கண்களை குருடாக்கினார் என்றும் சில தகவல்கள் போரில் தோற்றதும் இவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் சில தகவல்கள் லாலுக்சோலா போர்புகானின் சகோதரரான பாத்தாரா புஹானால் இவர் கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றது.
27) சுடோய்ப்ஹா (கி.பி.1677-1679) :
பர்வதிய ராஜா மற்றும் தேஜ் சிங்ஹா என்பது இவரது வேறு பெயர்களாகும். முந்தைய 26வது அரசரான சுஜின்ப்ஹாவுக்கு பின்னர் அடான் புர்ஹாகோஹெய்ன் இவரை அஹோம்களின் அரியணையில் அமர்த்தினார். பர்வதிய மரபில் வந்த இவர் சுஹூங்முங்கின் பேரன் வழியில் வந்தவர். இவர் இளவரசனாக இருந்த போது சரைய்டியோ மலைகளில் இருந்த அவரது இடத்தில் இருந்து விவசாயம் செய்து வந்தார். பதவியேற்றவுடன் தனது அரசை வலுப்படுத்த நிறைய திருமணங்கள் செய்தார். அடான் புர்ஹாகோஹெய்னின் மகளான பார்குன்வாரியை முதலிலும் பின்னர் லாலுக்சோலா போர்புஹானின் மகளை இரண்டாவதாகவும் பின்னர் மெச்சா போர்பரூவாவின் மகளையும் பாத்தாரா புஹானின் மகளையும் திருமணம் செய்தவர் கடைசியாக பெட்மேலா புஹானின் சகோதரியையும் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் நிர்வாக அலுவலகர்களின் நியமனத்தில் ஏற்பட்ட மனகசப்புகள் அடான் புர்ஹாகோஹெய்ன் மற்றும் அரசருக்கும் உறவுமுறை சரியில்லை. இதனால் அவரும் ராம் புஹான் , பெட்மேலா புஹான் மற்றும் சிஹான் தாமுளி ஆகியோருடன் ரகசிய ஆலோசனைக்கு பின்னர் சிஹான் தாமுளி அரசரின் அறையில் யாருக்கும் தெரியாமல் புகுந்து அரசர் மீது அம்பெய்தார். விஷயமறிந்த முதலமைச்சர் அடான் புர்ஹாகோஹெய்ன் மற்றும் புஹான்கள் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள். சிஹான் தாமுளி கெளஹாத்திக்கு தப்பிப்போனார். அரசர் காயங்களுடன் நலம் பெற்றார். கி.பி.1676 மத்தியில் அம்பரின் முதலாம் ராம்சிங் கெளஹாத்தியை வசப்படுத்த முயன்று தோல்வியை தழுவிய பின்னர் ஓளரங்கசீப் தனது மகன் அஸம்ஷாவை வங்காளத்தின் சுபேதாராக நியமித்தார். அஸம்ஷா தனது மனைவியான ரமானி கப்ஹாருவின் மாமாவான லட்சித் மற்றும் லாலுக்சோலா போர்புஹானுக்கு கீழ் அஸ்ஸாம் மற்றும் கெளஹாத்தியை மொகலாயர் வசம் ஒப்படைக்க கடிதம் எழுத அவர்கள் அதை அரசர் மற்றும் முதலமைச்சர் அடான் புர்ஹாகோஹெய்ன்க்கு அதை அனுப்பினார். முதலமைச்சர் மொகலாயர்களுடன் மோத முடிவெடுக்க லாலுக்சோலா போர்புஹான் தன்னை அஹோம்களின் அரசனாக்கினால் கெளஹாத்தியை ஓப்படைப்பதாகவும் 4 லட்சம் ரூபாய் பணம் அளிப்பதாகவும் மொகலாயர்களிடம் (அஸ்மஷாவிடம்) ஒப்பந்தம் செய்து கெளஹாத்தியை ஒப்படைத்தார். பின்னர் கார்கெளவுனுக்கு விரைந்த படையினர் அரசரை சிறைப்படுத்தி அவரை குருடாக்கி கொன்றனர்.
28) சுலிக்ப்ஹா (கி.பி.1679-1681) :
ரத்னாவத்வாஜ் சிங்ஹா மற்றும் லோரா ராஜா என்பது இவரது வேறு பெயர்களாகும். லோரா ராஜா என்பது இவர் 14 வயதில் (இளவயதில்) ஆட்சியேறியதை குறிக்கும் வார்த்தை. இவரை ஆட்சியில் அமர்த்திய லாலுக்சோலா போர்புஹான் இவரது பின்னாலிருந்து ஆட்சி புரிய ஆரம்பித்தார். இவரது இயற்பெயர் சாருகோஹெய்ன் என்பதாகும். இவர் சாமுகுரியா வம்சத்தில் இருந்து வந்தவர். முன்னால் அஹோம் அரசரான சுஹூங்கின் சகோதரரான நாராயண் திபெம் ராஜாவின் பேரன் இவர். அடான் புர்ஹாகோஹெய்ன் மற்றும் அரசரை வீழ்த்திய பின்னர் லாலுக்சோலா தன்னையே அரசராக நினைத்தாலும் அஹோம் பிரபுக்களுக்கு பயந்து சுலிக்ப்ஹாவை அரசராக்கினார். இவரது ஆட்சியில் கோபர் ராஜாவின் மகனான கடாதார் ஆட்சியில் குழப்பத்தை உண்டு பண்ணினார். அவருக்கு அஹோம் பிரபுக்கள் மற்றும் அமைச்சர்கள் குழுக்கள் உதவி புரிய கார்கெளவுனை கைப்பற்றி சுலிக்ப்ஹாவை நம்ரூப்புக்கு அனுப்பி வைத்து பின்னர் கொல்லப்பட்டார்.
29) சுபாத்ப்ஹா (கி.பி.1681-1696) :
கடாதார் சிங்ஹா என்பது இவரது வேறு பெயர். இவர் கோபர் ராஜாவின் மகன். கடாபானி என்ற இயற்பெயருடைய இவர் கடாதார் சிங்ஹா என்று பெயர் மாற்றிக்கொண்டு ஆட்சி புரிந்தார். பார்கோலாவை தனது தலைநகராக கொண்டு ஆள ஆரம்பித்தார். சராய்காத் போரில் மொகலாயப் படைகளை தோற்கடித்து அவர்களிடமிருந்து கெளஹாத்தி மற்றும் கீழ் அஸ்ஸாம் பகுதிகளை மீட்டுக் கொண்டார். கி.பி.1679ல் லாலுக்சோலா போர்புஹான் அடுத்த வாய்ப்புள்ள இளவரசர்களை கொன்று குவிக்க திட்டமிட்ட போது இவர் நாகா மலைகளில் மறைந்து கொண்டார். இதனால் சுலிக்ப்ஹா மற்றும் லாலுக்சோலா போர்புஹான் இவரது மனைவியான ஜோய்மோதி குன்வாரியை சித்திரவதை செய்து கொன்றனர். மனமுடைந்த இவரை இவரது ஆதரவாளர்கள் கோன்யாக் பெண்ணான வால்டிங்கை திருமணம் செய்ய வலியுறுத்தி அதன் படி அவர் குழந்தையை பெற்றெடுத்து விட்டு மரணமடைய நாகா பெண்ணான தாலிமியை மணந்தார். பின்னர் சுலிக்ப்ஹாவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார். 14 1/2 வருட ஆட்சிக்கு பின்னர் கி.பி.1696ல் இவர் மரணமடைந்தார். இவருக்கு லாய் மற்றும் லீச்செய் என்ற இரு மகன்கள் உண்டு. இதில் லாய் இவருக்கு பின் சுக்ரூங்ப்ஹா என்ற பெயரில் அரியணை ஏறினார். இவரிலிருந்து துங்குன்கியா மரபை சேர்ந்தவர்கள் தான் அஹோம் அரச பதவிகளில் இனி அமரப்போகிறார்கள்.
30) சுக்ருங்ப்ஹா (கி.பி.1696-1714) :
ருத்ர சிங்ஹா என்பது இவரது இன்னொரு பெயர். லாய் என்பது இவரது இயற்பெயர். தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் ரங்க்பூரை தனது தலைநகராக ஆக்கினார். இவர் எழுத படிக்க தெரியாதவராக இருந்தாலும் நல்ல அரசியல் ஞானத்தை கொண்டிருந்தார். கி.பி.1706ல் திமாஸாவை தன் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்தார். பக்கத்து ஜைய்ந்தியா அரசர்களுடன் நல்ல நட்புறவு கொண்டு தனது அரசை விரிவாக்கும் முயற்சியில் இறங்கினார். தனது தாயான ஜோய்மோதி குன்வாரியின் நினைவாக ஜோய்சாகர் அணையை இவர் கட்டினார். கி.பி.1703ல் போர்டூவர் நகரில் ரங்கநாதசுவாமி கோயிலை கட்டினார். தனது தாயின் நினைவாக பிரமிடு வடிவில் ஒரு கோயிலை கட்டினார். இவருக்கு சிப சிங்ஹா, பிரமத்தா சிங்ஹா, ராஜேஷ்வர் சிங்ஹா, லக்ஷ்மி சிங்ஹா மற்றும் போர்ஜன கோஹெய்ன் என்னும் 5 மகன்கள் உண்டு.
31) சுடன்ப்ஹா (கி.பி.1714-1744) :
சிப சிங்ஹா என்பது இவரது இன்னொரு பெயர். இவர் தந்தையான ருத்ர சிங்ஹாவின் திட்டமான வங்காளத்தின் மொகலாயப் படைகள் மீது தொடுக்க நினைத்து இருந்த போரை நிறுத்தினார். தந்தையின் வழியில் கிருஷ்ணாராம் பட்டார்ச்சார்ய்யாவின் வழிகளை பின்பற்றினார். கிருஷ்ணாராமிடம் காமாக்யா கோயில் நிர்வாகத்தை ஒப்படைத்தார்.
தனது மூத்த ராணியான புலேஸ்வரியை பரமேதஸ்வரி தேவி என்ற பெயரில் அரசியாக அறிவித்து தன் பெயரிலும் அவர் பெயரிலும் நாணயங்களை வெளியிட்டார். அவர் கி.பி.1731ல் மரணமடைய அவரது சகோதரியான திரெளபதியை மணந்து அவருக்கு அம்பிகா என்ற பெயரை வைத்தார். அவரும் கி.பி.1738ல் மரணமடைய யனதாரி என்ற பெண்ணை சர்பேஸ்வரி என்ற பெயரில் மணந்து கொண்டார். கி.பி.1744ல் இவர் மரணமடைய இவருக்கு பின்னர் இவரது சகோதரர் பரமத்தா சிங்ஹா அடுத்த அரசராக பதவியேற்றார்.
32) சுனென்ப்ஹா (கி.பி.1744-1751) :
பரமத்தா சிங்ஹா என்பது இவரது வேறு பெயர். முந்தைய அரசர் சிபா சிங்ஹாவின் சகோதரர் இவர். ருத்ர சிங்ஹாவின் 2வது மகன் இவர். அண்ணனின் மரணத்திற்கு பின்னர் அரியணை ஏறி 7 ஆண்டுகள் ஆண்ட இவரது ஆட்சியில் அமைதியே நிலைத்திருந்தது. இவர் நிறைய கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டினார். ரங் ஹர் என்ற பெயரில் திறந்தவெளி மைதானத்தின் காலரியில் அரசரும் பிரபுக்களும் அமர்ந்து விளையாட்டுகளை கண்டுகளிக்கும் பால்கனி மாதிரியான அமைப்பு இவரின் ஆட்சியில் தான் கட்டப்பட்டது.
சிபா சிங்ஹா இறந்தவுடன் முதலமைச்சர் செங்முங் புர்ஹாகொஹெய்ன் மற்றும் ரூப்சந்திரா போர்பரூவா மற்றும் சில அஹோம் பிரபுக்கள் சாரிங் ராஜாவை அடுத்த அரசராக்க நினைத்தனர். ஆனால் ருத்ர சிங்ஹா தனக்கு பிறகு தனது 5 மகன்களுமே அரசராக வேண்டும் என்று முன்பு இறக்கும் தருவாயில் கூறியதால் அவரின் ஆசைப்படி 2வது மகனான பரமத்தா சிங்ஹா சுனென்ப்ஹா என்ற பெயரில் அரசராக பதவியேற்றார். இவர் ஆட்சியில் சுக்ரேஸ்வர் மற்றும் ஜனார்தன் கோயில்கள் கெளஹாத்தியில் கட்டப்பட்டது. கி.பி.1749ல் தன் தந்தை ருத்ரசிங்ஹா கடைசியில் வாழ்ந்த இடத்தில் சிவன் கோயில் கட்டினார். அது இன்று ருத்ரேஸ்வர் கோயில் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஹஜோ நகரில் கணேஷ் கோயில் கட்டப்பட்டது. இவரது இறப்பு சுற்றி ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இவருக்கு எப்போதும் அதிகமாக தலைவலி இருககுமாம். இவரது கனவில் ஒரு முஸ்லீம் துறவி இவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டால் இவரது உடல்நலம் மேம்படும் என்று வந்ததாம். அதனால் ஒரு முஸ்லீம் துறவியை மெக்கா நகருக்கு அனுப்பி இவர் உடல்நலம் பெற பிரார்த்திக்க அனுப்ப 2 1/2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் திரும்பும்முன் இவர் உடல்நலமில்லாமல் கி.பி.1751ல் மறைந்தார். இவருக்கு மாலோய் கோஹெய்ன் மற்றும் மாதாப் கோஹெய்ன் என்ற இரு மகன்கள் இருந்தாலும் இவருக்கு பின் இவரது இளைய சகோதரரான ராஜேஷ்வர் சிங்ஹாவை அடுத்த அரசராக முதலமைச்சர் கீர்த்தி சந்திரா போர்பரூவா அறிவித்தார்.
33) சுரெம்ப்ஹா (கி.பி.1751-1769) :
ராஜேஷ்வர் சிங்ஹா என்பது இவரது இன்னொரு பெயர். இவர் ருத்ர சிங்ஹாவின் 4வது மகன். 3வது மகனான மோகன் மாலா கோஹெய்ன் முகத்தில் சின்னம்மை தழும்புகள் இருந்ததால் அவர் அரசராக இருப்பதற்கு நிராகரிக்கப்பட்டு அவரின் தம்பியான இவர் அடுத்த அரசராக கீர்த்தி சந்திரா போர்பரூவாவால் நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சியில் நிறைய இந்து கோயில்கள் கட்டப்பட்டதுடன் நிறைய நிலங்கள் பிராமணர்களுக்கு தானமாகவும் வழங்கப்பட்டது. கி.பி.1755ல் மணிகர்ணேஸ்வர் கோயில் சுக்ரேஸ்வர் கோயிலின் நிதியினால் கட்டப்பட்டது. கி.பி.1764ல் சுவால்குச்சியில் சித்தேஸ்வரா கோயில் கட்டப்பட்டது. இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட கேதரா சிவன் கோயில் ஹஜோ நகரில் இவர் ஆட்சியில் கட்டப்பட்டது. இவர் ஆட்சியில் மிஹிர் பழங்குடியினர் பிரச்சினை செய்ததால் ரகசியமாக அனுப்பிய படை அவர்களை தோற்கடிக்க அவர்கள் இவரிடம் மன்னிப்பு கோரினார்கள். இவரும் மிஹிர் பழங்குடியினரை மன்னித்தார். கி.பி.1765 நவம்பரில் கச்சாரி அரசுடன் ஏற்பட்ட பிரச்சினைகளால் போர்பரூவாவை அனுப்பி அவர்களை அடக்கினார். பின்னர் மணிப்பூர் அரசர் ஜெய்சிங் என்பவர் இவரிடம் பர்மியர்களின் ஆதிக்கத்தை விரட்ட இவரிடம் உதவி கேட்டார். காடுகள் அடர்த்தியாக இருந்ததால் வீரர்கள் பாம்பு கடியினால் மரணமடைந்தும் திடிதிடிரென்று ஏற்பட்ட வெள்ளத்தினாலும் காடுகளை கடக்க சிரமப்பட்டதால் அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டார். பின்னர் கி.பி.1768 நவம்பரில் கீர்த்தி சந்திரா போர்பரூவாவின் தலைமையில் அனுப்பிய படை பர்மிய ஆக்கிரமிப்பாளரை வீழ்த்தி ஜெய்சிங்கை மணிப்பூர் மன்னர் பதவியில் அமர்த்தியது. மனம் மகிழ்ந்த அவர் தனது மகளான குரங்கநாயனியை அஹோம் அரசர் ராஜேஷ்வர் சிங்ஹாவுக்கு கி.பி.1768ல் திருமணம் செய்து வைத்தார். இவர் பின்னர் பட்டத்து இராணியாக அறிவிக்கப்பட்டார். கி.பி. 1769ல் ராஜேஷ்வர் சிங்ஹா மரணமடைந்த பின்னர் அவரது சகோதரர் லக்ஷ்மி சிங்ஹாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கி.பி.1770ல் மோமோரியா புரட்சியில் இவர் கொல்லப்பட்டார்.
34) சுன்யோப்ஹா (கி.பி.1769-1780) :
லக்ஷ்மி சிங்ஹா என்பது இவரது இன்னொரு பெயர். சகோதரர் இராஜேஷ்வர் சிங்ஹா மறைவுக்கு பின்னர் ருதரசிங்ஹாவின் 5வது மகனான லக்ஷ்மி சிங்ஹா "சுன்யோப்ஹா" என்ற பெயரில் அரசராக பதவியேற்றார். பட்டத்து அரசியாக மணிப்பூர் இளவரசியான முன்னாள் அரசரின் மனைவியான குரங்கநாயனியை மணந்து கொண்டார். பதவியேற்ற பின்னர் குறைந்த நாட்களிலையே மோமோரியா புரட்சியினால் பதவியிலிருந்து இறககப்பட்டார். ஆனாலும் பட்டத்தரசி குரங்கநாயனியின் உதவியினால் மோமோரியா புரட்சியை அடக்கி ஆட்சியை மீண்டும் பிடித்தார். திரும்பவும் பதவியேற்ற பின்னர் புரட்சிக்கு காரணமானவர்களை போர்பரூவா ரஹோ உட்பட அனைவரையும் அழித்தார்.
35) சுகித்பாங்ப்ஹா (கி.பி.1780-1795) :
கெளரிநாத் சிங்ஹா என்பது இவரது வேறு பெயர். லக்ஷ்மி சிங்ஹா மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். மோமோரியா புரட்சியாளர்களிடம் தனது தலைநகரான ரங்ப்பூரை இழந்து நாகோன் நகருக்கு இடம்பெயர்ந்தார். இதனால் புரட்சி நடைபெற்ற நேரத்தில் பாதுகாப்புக்காக புர்ஹாகொஹெய்னின் ஆதிக்கத்திலிருந்த ஜோர்கத்தை தனது தலைநகராக ஆக்கிக் கொண்டார்.
36) சுக்லிங்ப்ஹா (கி.பி.1795-1811) :
கமலேஷ்வர் சிங்ஹா என்பது இவரது இன்னொரு பெயர். இவர் ருத்ரசிங்ஹாவின் சகோதரரான லச்சாய்யின் பேரன். முந்தைய அரசர் கெளரிநாத் சிங்ஹா வாரிசின்றி கி.பி.1795ல் இறந்ததால் சாரிங்க ராஜா பரம்பரையில் வந்த இவரை முதலமைச்சர் பூர்ணாநந்தா புர்ஹாகோஹெய்ன் இவரை அடுத்த அரசராக அறிவித்தார். முதலமைச்சர் இவரது ஆட்சியில் மோமோர்யா புரட்சியை அடக்கினார். அந்த நேரத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபுக்கு தங்க நாணயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி அவரின் தளபதியான கேம்ப்பெல் உதவியால் புரட்சியை அடக்கினார். கி.பி.1811ல் காமரூபத்தில் ஏற்பட்ட துன்டியா புரட்சியையும் முதலமைச்சர் அடக்கினார். முதலமைச்சர் பூர்ணாநந்தா புர்ஹாகோஹெய்னின் இரண்டாவது மகனுக்கு தனது தங்கையான மஜூயூ அய்டியோவை திருமணம் செய்து கொடுத்தார். இவர் கி.பி.1811ல் மறைந்தார்.
37) சுதிங்ப்ஹா (கி.பி.1811-1818) & (1819-1821) :
சந்திரகாந்தா சிங்ஹா என்பது இவரது இன்னொரு பெயர். முந்தைய அரசர் கமலேஷ்வர் சிங்ஹாவின் சகோதரர். அவரது மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் தான் பர்மியர்கள் அஸ்ஸாமின் மீது போர் தொடுத்ததும் கிழக்கிந்திய கம்பெனி அஸ்ஸாம்மை ஆக்ரமித்ததும் நடந்தது. இவர் இரண்டு முறை அரசராக பதவி வகித்தார். முதல்முறை ருச்சிநாத் புர்ஹாகொஹெய்னால் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இரண்டாம் முறை பர்மியர்களால் தோற்கடிக்கப்பட்டவுடன் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். பின்னர் கி.பி.1826ல் முதலாம் ஆங்கில-பர்மிய போருக்கு பின்னர் ஏற்பட்ட "யாந்தபே உடன்படிக்கை" படி அஸ்ஸாம் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. இவருக்கு பிரிட்டிஷ்ஷாரின் கீழ் மாதம் 500/- ரூபாய் பென்ஷன் வழங்கப்பட்டது. இவர் முதலில் கலியபோரிலும் பின்னர் கெளஹாத்தியிலும் வசித்தார். கல்கத்தாவிலுள்ள கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது அரசை திரும்ப வழங்க கோரியும் கிடைக்காத விரக்தியில் கி.பி.1839ல் கெளஹாத்தியில் மறைந்தார்.
38) புரந்தர் சிங்ஹா :(கி.பி.1818-1819) & (கி.பி.1833-1838) :
இவர் அஹோம்களின் கடைசி அரசர். கி.பி.1818ல் சந்திரகாந்தா சிங்ஹா முதலமைச்சர் ருச்சிநாத் புர்ஹாகோஹெய்ன்னால் பதவியிலிருந்து விலக்கி இவரை முதல்முறையாக ஆட்சியில் அமர்த்தினார். கி.பி.1819ல் பர்மீய படையெடுப்பினால் இவர் ஆட்சியை இழந்து ஓட பர்மியர்களின் கீழ் மீண்டும் சந்திரகாந்தா சிங்ஹா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். மீண்டும் முதலாம் பர்மீய- ஆங்கிலேயர் போரினால் சந்திரகாந்தா சிங்ஹா ஆட்சியை இழக்க இவர் மீண்டும் பிரிட்டிஷ்ஷாரின் உதவியை நாடி மீண்டும் அரசராக முயற்சித்தார். ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை. பின்னர் பிரிட்டிஷ்ஷாரால் பழக்கமில்லாத காலநிலை கொண்ட இடத்தில் நிர்வாகம் பண்ணுவது சிரமமாக இருந்ததால் திரும்பவும் கி.பி.1833ல் வருடந்தோறும் 50000/- ரூபாய் திறைப்பணம் செலுத்த ஒப்புக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த இவர் திறைப்பணம் செலுத்தாததால் மீண்டும் கி.பி.1838ல் இவரது ஆட்சியை பிரிட்டிஷ்ஷார் நீக்கினார்கள். கி.பி.1838ல் கெளஹாத்தியில் மறைந்தார். இவருடன் அஹோம்களின் ஆட்சி முடிந்தது.
39) ஜோகேஸ்வர் சிங்ஹா (கி.பி.1821-1825) :
இவர் பாஹகொனவர் திபெம் ராஜாவின் மூத்த மகன். சாரிங் ராஜா பரம்பரையில் வந்த கடாதார் சிங்ஹாவின் இளைய சகோதரர். பர்மியர்கள் படையெடுத்து அஸ்ஸாமை கைப்பற்றியதில் சந்திரகாந்த் சிங்ஹாவும் பர்மியர்களால் அமர்த்தப்பட்ட புரந்தர் சிங்ஹாவும் பர்மியர்களை வெளியேற்ற முயற்சிகள் செய்ததால் பர்மியர்கள் இவரை பொம்மை அரசராக ஆக்கினார்கள். கி.பி.1824ல் ஆரம்பித்த முதல் ஆங்கிலேய-பர்மிய யுத்தத்தில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதால் இவர் ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் இருந்தார். உடல்நலமில்லாமல் கி.பி.1825ல் இவர் மறைந்தார்.



Comments
Post a Comment