55) மதுரை சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள் (கி.பி.1335-1378)‌‌ : 

மதுரையில் சுல்தான்கள் ஆட்சி கி.பி.1335ல் தான் ஆரம்பித்தாலும் அதன் வேர் கி.பி.1310ல் மாலிக் காபூரின் படையெடுப்புகளினால் தான் ஆரம்பித்தது. கி.பி.1308ல் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவுக்கு பின்னர் மாற்றாந்தாய் சகோதரர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியனுக்குமிடையே நடந்த வாரிசுரிமை போரில் வீரபாண்டியன் டெல்லி சுல்தான்களின் தளபதியான மாலிக் காபூர் உதவியை நாடினார். அதை தொடர்ந்து மாலிக் காபூர் கி.பி.1310-11ல் சுந்தரபாண்டியனை வென்றும் வீரபாண்டியனை அடிமைப்படுத்தியும் மதுரையின் செல்வங்களை சூறையாடியும் டெல்லிக்கு கொண்டு சென்றார். இந்த காலகட்டத்தில் தான் மதுரை மீனாட்சியம்மன் சிலைக்கு தடுப்பாக சுவர் கட்டி பாதுகாத்த வரலாறும் மதுரை மீனாட்சி அம்மன் சிலை தடுப்புச்சுவர் நீக்கப்பட்டதும் நடந்தது. பின்னர் அலாவூதின் கில்ஜிக்கு பின்னர் வந்த அவர் மகன் குப்த்-யூதின் முபாரக் ஆட்சியில் கி.பி.1317ல் குஸ்ரூகான் சூறையாடியதும் பின்னர் கியாத்துல் துக்ளக் ஆட்சியில் கி.பி.1323ல் அவர் மகன் உலா கான் (இவர் தான் முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்டவர்) சூறையாடியதும் பின்னர் மதுரையை டெல்லியுடன் இணைத்துவிட்டார். பின்னர் கி.பி.1325ல் அவரே முகமது பின் துக்ளக்காக பட்டமேறிய பின்பு மதுரைக்கு என்று ஆளுநரை நியமித்ததும் அந்த ஆளுநரே  (ஜலாலுதீன் ஆசன் தான்) துக்ளக்கின் ஆட்சியிலிருந்து வெளியேறி கி.பி.1333ல் தனியாக மதுரை சுல்தான்களின் அரசை ஆரம்பித்து வைத்தார்.இந்த இடைப்பட்ட 68 ஆண்டுகளில்  (கி.பி.1310-1378) வரை இந்த சுல்தான்களின் கொட்டத்தினால் மதுரையே ஆடிப்போய் தான் இருந்தது. விஜயநகர எழுச்சி புக்கரின் மகனான குமார கம்பணாரின் போர்வெற்றியே மதுரையை சுல்தான்களின் பிடியிலிருந்து வீழ்த்தியது. இந்த சுல்தான்களின் ஆட்சியையும் படையெடுப்புகளை பற்றியுமான சரித்திர பதிவுகளை அமீர் குஸ்ரூ (அலாவூதின் கில்ஜியினால் ஆதரிக்கப் பட்ட பாரசீக கவிஞர்-இந்தியாவின் கிளி என்று அழைக்கப்பட்டவர்), ஃபெரிஸ்டா, ஜியா உதின்பர்னி, மொராக்கோ நாட்டு பயணி இபின் பதூதா, அப்துல்லா வாசஃப், கங்கா தேவி (மதுரா விஜயம் எழுதிய குமார கம்பணாரின் மனைவி) ஆகியோர்களின் பதிவுகள் மட்டுமில்லாது திருவரங்க ரெங்கநாதர் கோயில் ஒழுகு மற்றும் வைஷ்ணவ குரு பரம்பரை நூல்களிலிருந்தும் விவரங்களை பார்க்கலாம். இதற்கு முந்தைய காலகட்டத்தில்(கி.பி.1311ல் மாலிக்காபூர் படையெடுப்பு) தான் திருவரங்கம் அரங்கநாதன் சிலையை டெல்லிக்கு கவர்ந்து சென்றதும் அதை அலாவூதின் கில்ஜி பங்கு பிரிக்கும்போது அப்துல்லா உசேன் கசன்பி என்ற பிரபுக்கு கொடுக்க அதை அவர் மகள் (சுரதாணி) தன் விளையாட்டு தோழனாக நினைத்து தன்னுடனே வைத்திருக்க கலைக்குழு பெயரில் அரங்கனின் பக்தர்கள் குழு அதை கைப்பற்றி கொண்டுவர அரங்கநாதனின் பிரிவை தாங்க முடியாமல் சுரதாணி திருவரங்கம் வரை தேடிவந்து காணாமல் பிரிவின் துயரில் உயிரை விட்டு துளுக்கநாச்சியார் என்ற பெயருடன் இன்றும் திருவரங்கம் கோயிலில் தனி சன்னதியாக விளங்குவது தனி கதை.

ஜலாலுதீன் அசன் கான் (கி.பி.1325-1339) :

மதுரையில் ஆளுநராக முகமது பின் துக்ளக்கால் நியமிக்கப்பட்டு இருந்த இவர் கி.பி.1335ல் துக்ளக்கின் ஆட்சியை களைந்து தனி அரசாக செயல்பட ஆரம்பித்தார். மாபார் (தமிழகம்) தனது அரசிலிருந்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் முகமது பின் துக்ளக் டெல்லியில் தன்னிடம் வேலையிலிருந்து  ஜலாலுதீன் அசன் கானின் மூத்த மகனான இப்ராஹிம்மை கொடூரமாக கொலை செயதார். மேலும் மாபாரை (தமிழகத்தை) மீட்க துக்ளக் ஒரு படையை மதுரைக்கு அனுப்பினார். வந்த படையும் ஜலாலுதீன் அசன் கானுடன் சேர்ந்து கொண்டதால் கோபம் கொண்ட துக்ளக் தானே படையெடுத்த வர அவருக்கும் படையினருக்கும் வழியிலையே ப்ளேக் தொற்று ஏற்பட டெல்லிக்கு திரும்பினர். அந்த நேரத்தில் சாகர் பகுதியை ஆண்ட ஃபக்ரூதின் குஸ்தாப் (இவர் துக்ளக்கின் ஒன்றுவிட்ட சகோதரர்) துக்ளக் இறந்ததாக கருதி சுதந்திர அறிவிப்பை விட அவரை தண்டிக்க எண்ணி மதுரையை பற்றிய எண்ணத்தை கைவிட்டதால் ஜலாலுதீன் அசன் கான் மதுரையை தலைநகராக கொண்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுல்தானாக ஆனார். ஜலாலுதீன் அசன் கானின் ஒரு மகளை பின்னால் கி.பி.1340-1344ல் ஆட்சியேறிய கியாஸ்தீன் முகமது தம்கானியும் இன்னொரு மகளை இபின் பதூதாவும் மணந்து இருந்தார்கள். இதனால் ஜலாலுதீன் புரட்சி கொடி தூங்கியதால் இபின் பதூதாவை துக்ளக் சிறையில் அடைத்தார். பின்னர் மனம்மாறி 10 நாட்களில் அவரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். பின்னர் சீனா வழியாக தனது நாடான மொராக்கோ சென்றுவிட்டார். அவரின் பயணகுறிப்புகள் "ரிகிலா" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் தமிழகத்திற்கு "மாபார்" என்ற பெயர் இருந்தது. கி.பி.1339ல் ஜலாலுதீன் அசன் கான் தன்னுடைய மந்திரி ஒருவரால் கொல்லப்பட்டார். 


அலாவூதின் உதாஜி (கி.பி.1339-1340)‌‌ : 

அசன் கானுக்கு பின்பு வந்த இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான இந்துக்களை கொன்றார். இந்த தாக்குதல்களினால் அவருக்கு நிறைய செல்வம் கிடைத்தது. பதவியேற்ற ஒரு வருடத்தில் ஹொய்சால அரசன் வல்லாளத்தேவனுக்கும் திருவண்ணாமலையில் நடந்த போரில் தண்ணீர் குடிப்பதற்காக தலை கவசத்தை கழற்றிய நேரத்தில் எதிர்பாராத அம்பு அவரை தாக்க அலாவூதின் உதாஜி போர்களத்தில் மாண்டார்.

குதுப்துதீன் ஃபெரோஸ் (கி.பி.1340) :

அலாவூதின் உதால்ஜியின் மருமகனான இவர் 3வது மதுரை சுல்தானாக பதவியேற்றார். இவரது நடவடிக்கைகள் அமீர்களுக்கு பிடிக்காததால் பதவியேற்ற 40வது நாளிலையே முதல் சுல்தானான ஜலாலுதீன் அசன் கானின் மருமகனான கியாஸ்தீன் முகமது தம்கானியால் கொல்லப்பட்டார்.

கியாஸ்தீன் முகமது தம்கானி (கி.பி.1340-1344) :

முந்தைய அரசரை கொன்று பதவிக்கு வந்த இவர் ஒரு கொடுங்கோலனாக இருந்தார் என்று இவரது சகலையான இபின் பதூதாவே குறிப்பிடுகிறார். இவருடைய ஆட்சியில் இராமேஸ்வரம் காட்டு பகுதியில் மறைந்திருந்த காபிர்களை (இந்து மதத்தில் சிலை வழிபாடு செய்தவர்கள்) மரங்களை வெட்டி வீழ்த்தி அவர்களை பிடித்து கழுமரம் ஏற்றிக்கொன்றனர்.  அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் மனைவிகளை இழுத்து வந்து அவர்களுடனே கழுமரம் ஏற்றிக்கொன்றனர். கையில் இருந்த குழந்தைகளும் அந்த பெண்களுடன் அணைத்திருந்த நிலையிலையே கொல்லப்பட்டார்கள். பின்னர் அந்த உடல்களை அங்கேயே விட்டுவிட்டு வேறொரு இடத்தில் தேடி திரும்பவும் இதே கொடுமைகளை செய்தனர்.  இதனால் தான் அல்லா இவரை வெகுவிரைவில் கண்டித்தார் என்றும் இபின்பதூதா குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் இபின்பதாதாவுடன் சுல்தான் உணவருந்தி கொண்டிருந்த போது பிடித்து வந்த காபிர் மற்றும் அவரின் மனைவி மற்றும் ஏழு வயது மகன் ஆகியோர் சுல்தானின் கண்ணசைவுக்கு ஏற்ப தலை துண்டிக்கப்பட்டனர்.

ஹொய்சாலா அரசரான வீரவல்லாளத்தேவருடனான கொப்பளம் போரில் கி.பி.1342ல் அவரை சிறைபிடித்து செல்வங்களை அபகரித்து வலல்லாளத்தேவரின் தோல் உரிக்கப்பட்டு உடல் வைக்கோல் அடைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக மதுரை மாநகரின் வாசலில் தொங்க விட்ட குரூரமான சுல்தான் இவர். ஆண்மையை அதிகரிக்க இரும்பு துகள்கள் கொண்ட சித்தர் கொடுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக உண்டது மிகுந்த உடல் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்த நேரத்தில் மதுரையில் காலரா போன்ற தொற்றுநோய் பரவியது. அரண்மனையில் உள்ளவர்களுக்கும் பரவியதால் சுல்தான் ஆற்றங்கரையில் தங்கினார். முதலில் சுல்தானின் மகனும் பின்னர் சுல்தானின் தாயும் அடுத்த வாரத்தில் சுல்தானும் வாரிசில்லாமல் கி.பி.1344ல் இறந்து போனார்.

நஸ்ரூதீன் தம்கானி (கி.பி.1344-1356) :

கியாஸ்தீன் தம்கானியின் உடன்பிறந்தவனின் மகனான இவர் அடுத்து பட்டத்திற்கு வந்தார். டெல்லி அரண்மனையில் சமையல்காரனாக இருந்த இவர் கியாஸ்தீன் சுல்தானாக ஆனபிறகு முஸ்லீம் பக்கீர் போல வேடமணிந்து டெல்லியிலிருந்து கிளம்பி மதுரை வந்து பெரியப்பாவுடன் இணைந்த இவருக்கு அவர் மறைந்தவுடன் சுல்தான் பதவி கிடைத்தது அதிசயம் தான். பதவிக்கு வந்தவுடன் கியாஸ்தீன் வஸீரை மிரட்டி அவரது சொத்துகளை பிடுங்கிக்கொண்டு கொன்றுவிட்டு தனக்கு வேண்டியவரை வஸீராக நியமித்தார். கியாஸ்தீனின் மருமகனை கொன்று கியாஸ்தீனின் விதவை மகளை மணந்துக்கொண்டார். கியாஸ்தீன் ஆதரவாளர்கள் ஒருவரையும் விடாமல் கொன்று குவித்தார். தனக்கு ஆதரவுக்காக பொற்காசுகளை அள்ளி வீசினார். இவர் எப்படி இறந்தார் எவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தார் என்ற விவரம் கிடைக்கவில்லை.

சம்ஸ்சுதீன் ஆதில் ஷா (கி.பி.1356-1358)

அதன்பின்னர் சம்ஸ்சுதீன் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.

ஃபக்ரூதீன் முபாரக் ஷா (கி.பி.1358-1368) :

அதன்பின்னர் ஃபக்ரூதின் முபாரக் ஷா பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தார்.


அலாவூதின் சிக்கந்தர் ஷா (கி.பி.1368-1378) :

அவருக்கு பின்னர் பத்து வருடங்கள் இவர் ஆட்சியில் இருந்தார். கி.பி.1378ல் விஜயநகர அரசின் புக்கரின் மகனான குமார கம்பணன் படையெடுத்து வந்த போரில் அலாவூதின் சிக்கந்தர் ஷா போரில் தோற்கடித்து கொல்லப்பட்டார். இந்த போரின் விவரங்களை குமார கம்பணருடன் போர்கள்த்திற்கு வந்த அவரின் பட்டத்தரசியான கங்காதேவி வடமொழியில் எழுதிய "மதுரா விஜயம்" நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த நூலின் ஓலைச்சுவடிகள் திருவனந்தபுரத்திலுள்ள ஆவணகாப்பகத்தில் கி.பி.1916ல் முழுமையாக கிடைக்கவில்லை. சில பகுதிகள் செல்லரித்து போயிருந்தது. மீதமுள்ள பகுதிகள் தான் புத்தகமாக வெளியிடப்பட்டது. போரில் இறந்த சிக்கந்தர் ஷாவின் சமாதியும் அவனுக்கு முந்தைய சுல்தானாக ஃபக்ரூதின் முபாரக் ஷாவின் சமாதியும் மதுரையில் இன்றும் உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் இந்த சமாதிகள் இருந்த இடத்தில் தர்கா எழுப்பப்பட்டது. அது இன்றும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ளது. 

உதவிய நூல்கள்:

மதுரை சுல்தான்கள் - S.P.சொக்கலிங்கம்

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

திருவரங்கன் உலா - வேணுகோபாலன்

மாலிக்காபூர் - செ.திவான்

விக்கிபீடியா தகவல்கள்

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு