56) விஜயநகர பேரரசு - சங்கம மரபு

விஜயநகர பேரரசு (கி.பி.1336-1646) :

ஹரிஹரர்-புக்கர் என்ற இரு சகோதரர்களால் (இவர்கள் 5 சகோதரர்களுள் இருவர் மட்டுமே) கி.பி.1336ல் ஆரம்பிக்கப்பட்ட விஜயநகர அரசு பேரரசாக மாறி கி.பி.1560ல் பரப்பளவில் சுருங்கி கி.பி.1646ல் அழிவுற்றது. 


கி.பி.1335ல் மதுரையை சுயாட்சியாக அறிவித்த ஜலாலுதீன் அசன் கானை வீழ்த்த முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து படையெடுத்து வரும் வழியில் ப்ளேக் நோயினால் படையினரும் துக்ளக்கும் படாத பாடு பட்டு நேரத்தில் துக்ளக் மரணமடைந்ததாக தவறான செய்தி பரவியதால் அந்த நேரத்தில் சாகர் (குல்பர்காவிற்கு அடுத்துள்ள) பகுதியை ஆண்ட அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஃபக்ரூதின் குஸ்தாப் தன்னை சுதந்திரமாக அறிவிக்க மதுரையை விட்டுவிட்டு ஃபக்ரூதின் குஸ்தாபை கைது செய்து டெல்லிக்கு இழுத்து வர குஜராத்தின் ஆளுநரான மாலிக் ஸதாவிற்கும் தேவகியின் ஆளுநரான மாஜிர் அபுரிஜாவுக்கும் உத்தரவிட்டார். குஸ்தாப் துக்ளக்கின் படைகளால் தோற்கடிக்கப்படு மனைவி குழந்தைகளுடன் அருகிலுள்ள இந்து தேசமான காம்பிளி தேசத்தை (இன்றைய அனந்தபூர்,  சித்தூர், சிமோகா,ராய்ச்சூர்,தார்வாட் மற்றும் பெல்லாரி மாவட்டங்களை உள்ளடக்கியது) ஆண்ட காம்பிளி தேவனிடம் தஞ்சமடைந்தார். அந்த நேரத்தில் தென்னகத்தில் இவரை தவிர மற்றவர்கள் எல்லாம் டெல்லிக்கு கப்பம் கட்டி வந்தனர். தன்னிடம் அடைக்கலம் புகுந்த காரணத்தால் காம்பிளி தேவன் துக்ளக்கை எதிர்த்து போரிட்டு தோல்வியடைந்தார். தோல்வியுறும் தருவாயில் குஸ்தாப்பை ஹொய்சாலர்களிடம் பாதுகாப்பாக அனுப்ப ஹொய்சால வல்லாளத்தேவன் அவரை துக்ளக்கிடம் ஒப்படைத்து அவரை சித்திரவதை செய்து கொன்றது வேறு விஷயம். இந்த போரில் காம்பிளி தேவன் தலை துண்டாக்கப்பட்டு டெல்லியில் துக்ளக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது படைவீரர்கள் மற்றும் தளபதிகள் கைது செய்யப்பட்டு டெல்லியில் முகமதியர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். அதில் முன்னர் காகத்திய மன்னரிடம் தளபதியாக இருந்த சங்காமாவின் ஐந்து புதல்வர்களும் பின்னால் காம்பிளி தேசத்தில் தளபதிகளாக இருந்தவர்களான ஹரிஹர, புக்கர் சகோதரர்களும் அடக்கம். காம்பளி தேசத்தை ஆள மாலிக் முகமதுவை துக்ளக் விட்டு செல்ல அவரை எதிர்த்து மக்கள் கலகம் செய்ய உள்ளூர் நபர் தான் நிர்வாகம் பண்ண சரியாக இருக்கும் என்று எண்ணி துக்ளக் குரானின் மேல் சத்தியம் பெற்று ஹரிஹர, புக்கர் சகோதரர்களை நிர்வாகம் செய்ய அனுப்பினார். இங்கே வந்தபின் புகழ்பெற்ற சிருங்கேரி சாரதா வித்யாபீடத்தின் ஆச்சார்யராக இருந்த வித்தியாரண்யரின் உபதேசத்தால் சகோதரர்கள் இந்து மதத்திற்கு மாறி துக்ளக்கின் ஆட்சியை விட்டெறிந்து தனி சமஸ்தானத்தை உருவாக்கினர். இதுவே பின்னாளில் புகழ்பெற்ற விஜயநகர பேரரசாக விளங்கியது. விஜயநகர பேரரசு மொத்தம்  சங்கம,சாளுவ, துளுவ மற்றும் அரவிடு என மொத்தம் 4 மரபுகளாக 310 ஆண்டுகள் ஆண்டனர்.


1. சங்கம மரபு (கி.பி.1336-1485) :
முதலாம் ஹரிஹர ராயன் (கி.பி.1336-1356) :

ஹக்கா சங்கம மரபை தொடங்கியவரான பாவன சங்கமரின் மூத்தமகன் இவர். தற்கால அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (குட்டி) என்ற இடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தில் வடக்கு பகுதிகளை நிர்வகித்து வந்தார்.  இவர் வித்யா விலாஸா (மிகுந்த அறிவு திறமை கொண்டவர்), ஆங்ரயவிபாடா (எதிரிகளுக்கு தீ போன்றவன்) என்று புகழப்படுகிறார். சிருங்கேரி சாரதா பீடத்தின் ஆச்சார்யராக இருந்த வித்யாரண்யதீர்த்தர் வழிகாட்டுதலின்படி விஜயநகரம் என்ற "ஹம்பி"யை தலைநகராக கொண்டு கி.பி.1336ல் விஜயநகர பேரரசு ஆரம்பிக்கப்பட்டது. இவருடைய தம்பிகளான புக்கா ராயன் பேரரசுக்கு அடுத்த நிலையில் இருந்து இவரின் மறைவுக்கு பின்னர் அரசை ஏற்றார். மற்ற தம்பிகளான கம்பண்ணா நெல்லூரையும், முட்டப்பா முலபாகலுவையும், மாரப்பா சந்திர குட்டியையும் நிர்வாகம் செய்து வந்தனர்.

தொடக்ககால போர்கள் மூலம் துங்கபத்திரை ஆற்று பள்ளத்தாக்கு பகுதிகளை தன்னுடைய அரசுடன் இணைத்து தன்னை "கிழக்கு-மேற்கு கடல்களின் தலைவர்" என்று அழைத்துக் கொண்டார். பின்னர் கொங்கன்,மலபார் பகுதிகளிலும் அரசு விரிவாக்கப்பட்டது. கி.பி.1343ல் ஹொய்சால அரசன் மூன்றாம் வீர வல்லாலளின் மறைவுடன் (மதுரை சுல்தானால் போரில் கொடூரமாக கொல்லப்பட்டு மதுரை வாயிலில் தொங்கவிடப்பட்ட கோரம் உடனே நினைவுக்கு வரும்) ஹொய்சால வம்சம் முடிவுக்கு வந்தபோது ஹொய்சால அரசையும் தனது அரசுடன் சேர்த்துக்கொண்டார். 


முதலாம் புக்கா ராயன் (கி.பி.1356-1377) :

ஹரிஹரருக்கு பின்னர் நாட்டை ஆண்ட அவரது தம்பி இவர். இவரது ஆட்சியில் ஆற்காடு மற்றும் கொண்டவீடு ரெட்டி ராஜ்யத்தையும் வென்றார். கி.பி.1378ல் இவரது மகனான குமார கம்பண்ணர் மதுரை சுல்தான்களை வென்று சுல்தான்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினார். இந்த நிகழ்வு குமார கம்பண்ணரின் மனைவியான கங்காதேவியால் எழுதப்பட்ட "மதுரா விஜயம்" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "மேற்கே கோவா, கிழக்கில் துங்கபத்திரை ஆறு, வடக்கில் கிருஷ்ணா ஆறு மற்றும் தெற்கே மதுரை வரை ஆட்சி நடத்தினார். இலங்கையிலுள்ள யாழ்பாண அரசும் கேரளத்தின் மலபார் அரசும் இவருக்கு பணிந்து திறை செலுத்தியது. இவரது காலத்திலையே விஜயநகரம் தலைநகரமாயிற்று.  கி.பி.1367ல் துங்கபத்திரா நதிக்கரையில் முட்கல் கோட்டையை தாக்கி கைப்பற்றி ஒருவர் இல்லாமல் கொன்று குவிக்க பாமினி சுல்தான் வெகுண்டு விஜயநகர பேரரசின் மீது படையெடுத்தார். இப்போரில் தான் இரு தரப்பினரும் முதன்முதலில் பீரங்கிகளை உபயோகப்படுத்தியதை அறியமுடிகிறது. இதில் புக்கர் தோல்வியுற்று காட்டிற்கு பதுங்க பாமினி சுல்தான்கள் ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் கொன்று குவித்ததுடன் இருதரப்புக்கும் வெற்றியில்லாமல்  அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி போரில் கொடூரமாக நடந்து கொள்ளாமல் இருப்பதும் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் படுகொலைக்கு ஆளாகாமல் இருப்பதும் ஓரளவுக்கு தடுக்கப்பட்டது. இவர் கி.பி.1380ல் மறைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் ஹரிஹர ராயன் (கி.பி.1377-1404) :

முதலாம் புக்கா ராயரின் மகனான குமார கம்பணன் (இவர் தான் மதுரையை சுல்தான்களின் ஆட்சியில் இருந்து மீட்டவர். சுல்தான்களின் ஆட்சியில் மூடிகிடந்த மீனாட்சியம்மன் கோயிலை மீண்டும் திறந்தவர்) இரண்டாம் ஹரிஹர ராயன் என அரியணை ஏறியதும் அழைக்கப்பட்டார். இவர் விஜயநகர பேரரசை கிருஷ்ணா நதிக்கு மேலும் விரிவுபடுத்தி ஒட்டுமொத்த தென்னிந்தியா முழுவதையும் விஜயநகர  பேரரசின் கீழ் கொண்டு வந்தார். மதுரையில் சுல்தான்களின் ஆட்சி தூக்கியெறிப்பட்டபின் தமிழகம் மட்டுமல்லாது சேர நாடான கேரளா முதற்கொண்டு விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. கொண்டவீடு ரெட்டிகளை தோற்கடித்து நெல்லூர் முதல் கலிங்கம் வரையும், தெலுங்கானாவின் ராச்சகொண்டா வேளமாக்களையும் வெற்றிகொண்டார். பாமினி சுல்தானான முஜாஹித் பஹ்மானி கிபி.1378ல் இறந்ததை தொடர்ந்து கோவா,சாவுல் மற்றும் டாபோல் துறைமுகப்பகுதிகளை கைப்பற்றினார். இன்றைய ஹம்பியில் இடிந்தநிலையில் இவரது அரண்மனையின் மீதத்தையும் காணலாம்.

விருபக்ஷ ராயன் (கி.பி.1404-1405) :

இரண்டாம் ஹரிஹர ராயரின் மறைவுக்கு பின் அரசுரிமைக்காக சகோதரர்களான விருபக்ஷ ராயன், இரண்டாம் புக்கா ராயன் மற்றும் முதலாம் தேவ ராயன் ஆகியோரிடையே வாரிசுரிமை போட்டியில் முதலில் விருபக்ஷ ராயன் அரசனாக ஆனார். இவரது ஆட்சியில் கோவா, சாவுல், டாபோல் பகுதிகளை இழந்து விட்டதாகவும் இவர் கொடூரமானவராகவும் மது மாதுக்களிலையுமே காலத்தை கழித்ததாகவும் விஜயநகரத்துக்கு வந்த பயணியாக "பெர்னாவோ நூணிஸ்" குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களிலையே இவர் தனது சொந்த மகன்களால் கொலை செய்யப்பட்டார்.

இரண்டாம் புக்கா ராயன் (கி.பி.1405-1406) :

 அண்ணனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இவரும் குறுகிய காலமே அரசாள முடிந்தது. முடிசூட்டிக் கொண்ட சில மாதங்களிலையே இவரது இன்னொரு சகோதரரான "முதலாம் தேவராயனால்" பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

முதலாம் தேவ ராயன் (கி.பி.1406-1422) :

இவர் தற்கால ஓரிஸாவின் கஜபதி பேரரசை கைப்பற்றினார். பின்னர் பாமினி சுல்தானுடன் நடந்த போரில் (கி.பி.1406ல்) தோற்று பின்னர் அமைதி உடன்படிக்கை கொண்டு ஆண்டிற்கு ஒரு லட்சம் அணாக்களும் 5 மணங்கு முத்துகளும் 50 யானைகளும் கப்பம் கட்டினார். மேலும் தனது மகள்களில் ஒருவரை சுல்தானான தாஜீதீன் ஃபெரோஷ் ஷாவுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருதரப்புக்கும் இடையில் இருந்த பங்காப்பூர் வரதட்சிணையாக பாமினி சுல்தானுக்கு வழங்கப்பட்டது. மேலும் ராய்ச்சூர் பகுதிகளை பாமினி சுல்தானிடம் இழந்தார். இவரது தலைநகரமான விஜயநகரம் (ஹம்பி) 60 மைல்கள் விட்டமாக பரந்து விரிந்திருந்ததாக ஐரோப்பிய பயணியான "நிக்காலோ காண்ட்டி" விவரித்துள்ளார். இவர் நீர்ப்பாசன வசதிக்காக துங்கப்பத்திரா நதிக்கு குறுக்கே ஒரு அணை கட்டினார். மேலும் ஹரித்ரா நதிக்கு குறுக்கேவும் ஒரு அணையை கட்டினார். ரெட்டி அரசாட்சியில் ஏற்பட்ட குழப்பநிலையை பயன்படுத்தி வாரங்கல்லை கைப்பற்றியதுடன் பாமினி சுல்தானுடனான போரில் வென்று ரெட்டிகளின் ஒட்டுமொத்த பரப்பையும் தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.

ராமச்சந்திர ராயன் (கி.பி.1422) :

தந்தையான முதலாம் தேவ ராயனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்ததால் இவரது ஆட்சியை பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை. இவருக்கு பின்னர் இவரது தம்பியான வீரவிஜய புக்கா ராயன் ஆட்சிக்கு வந்தார்.

வீரவிஜய புக்கா ராயன் (கி.பி.1422-1424) :

சகோதரனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இவர் இரண்டு ஆண்டுகளே ஆண்டாலும் போர்த்துக்கீசிய பயணி "பெர்னாவோ நூணிஸ்" இவர் ஆறு ஆண்டுகள் ஆண்டதாக தவறாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் தேவ ராயன் (கி.பி.1424-1446)‌‌ : 

வீர விஜய புக்கா ராயனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகன். சங்கம மரபில் இவரே சிறந்த அரசராக கருதப்படுகிறார். கி.பி.1432ல் கொண்டவீட்டை கைப்ற்றினார். பாமினி சுல்தானான முதலாம் அஹ்மத் ஷாவிடம் ராய்ச்சூரை இழந்தாலும் 'முட்கல்' கோட்டையை தக்கவைத்துக் கொண்டார். ஒரிசாவின் கஜபதியை கி.பி.1427,1436,1441 ஆண்டுகளில் மும்முறை வென்றார். ரெட்டி அரசான "இராஜமுந்திரி"யை கைப்பற்றினார். கேரளாவின் சில பகுதிகளையும் கைப்பற்றினார். கேரளத்தின் கிலான் அரசனையும் பிற அரசர்களையும் வென்றார். கோழிக்கோடு, பர்மாவின் பெகு, தன்செரிம் அரசர்களிடமிருந்தும் இலங்கை அரசரிடமிருந்தும் திறைபணம் பெற்றார். இவரது ஆட்சியில் நிகழ்ந்த படையெடுப்பினால் தான் குல்பர்காவிலிருந்து 'பிதர்'க்கு தங்கள் தலைநகரை பாமினி சுல்தான்கள் மாற்றினர். இந்த தகவல்கள் போர்த்துகீசிய பயணி "பெர்னோவா நூணிஸ்"ன் எழுத்துகளின் மூலம் தெரியவருகிறது. பாமினி சுல்தான்களின் படையின் பலமே குதிரைப்படை மற்றும் குதிரை வில் வீரர்கள் என்று உணர்ந்து தனது படையிலும் முஸ்லீம் வீரர்களை இணைத்துக் கொண்டு தன் வீரர்களுக்கு நல்ல பயிற்சிகள் அளித்து படைபலத்தை பெருக்கினார். 



மல்லிகார்ஜீன ராயன் (கி.பி.1446-1465)‌‌ : 

தந்தை இரண்டாம் தேவராயரை போலன்றி திறமையற்றவனாகவும் ஊழல் நிறைந்தவனாகவும் இருந்தார். தொடக்க காலத்தில் பாமினி சுல்தான்கள், ஒரிஸா அரசன் தாக்குதல்களை சமாளித்தாலும் பின்னர் ஓரிஸாவின் கஜபதிகளிடம் கி.பி.1454ல் இராஜமுந்திரியையும் கி.பி.1463ல் உதயகிரியையும் சந்திரிகிரியையும் இழந்தார். கி.பி.1450ல் பாமினி சுல்தான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி கொண்டனர். போர்த்துகீசியர்கள் பல துறைமுகங்களை கைப்பற்றி கொண்டதும் இந்த மரபின் வீழ்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாயிற்று. இவரது ஒன்றுவிட்ட சகோதரன் கி.பி.1465ல் ஆட்சியை கைப்பற்றினார்.

இரண்டாம் விருபக்ஷ ராயன் (கி.பி.1465-1485) :

சகோதரனை வீழ்த்தி பதவிக்கு வந்த இவர் தனது ஆட்சிக்காலம் முழுவதும் குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் பகை அரசர்களையுமே சந்திக்க வேண்டி இருந்தது. கி.பி.1470ல் கொங்கணம் கடற்கரையோரப்பகுதியை பாமினி சுல்தானிடம் இழந்தார். பின்னர் பாமினி சுல்தான் முதல் அமைச்சரான முகமது கவான் இவரிடமிருந்து கோவா பகுதிகளை கைப்பற்றினர். பாமினி சுல்தான்கள் கிருஷ்ணா துங்கபத்திரை ஆற்று பகுதிகளையும் கைப்பற்றினார்கள். ஒரிசாவின் அரசனான "புருஷோத்தம கஜபதி" திருவண்ணாமலையை கைப்பற்றியது இவரது மதிப்பை இழக்க செய்து பேரரசில் கிளர்ச்சிகள் ஏற்ப்பட்டது. இவரது சொந்த மகன் "பிரெளத ராயன்"னால் கொல்லப்பட்டார்.

பிரெளதா ராயன் (கி.பி.1485) :

உள்நாட்டிலும் வெளியிலிருந்தும் பிரச்சினைகள் தோன்றின. திறமையற்றவராக இருந்ததாலும் தந்தையை கொன்று ஆட்சிக்கு வந்ததாலும் மக்களால் மதிக்கப்படாத அரசராக இருந்த இவரை சந்திரிகிரியின் ஆளுநராக இருந்த "சாளுவ நரசிம்ம தேவ ராயன்" துளுவ நரச நாயக்கர் என்பவரை அனுப்பி பிரெளதா ராயரை அகற்றி சங்கம வம்ச அரசுக்கு முடிவுரை எழுப்பி "சாளுவ" வம்ச அரசை ஆரம்பித்தார்.

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு