57) விஜயநகர பேரரசு - சாளுவ மரபு

சாளுவ மரபு (கி.பி.1485-1491)


சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி.1485-1491) :

சங்கம மரபை சேர்ந்த பிரெளத ராயனை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த இவர் சந்திரகிரியின் ஆளுநராக இருந்தவர். இவருடைய தந்தையான சாளுவ குண்டா முதலில் ஆளுநராக இருந்து மறைந்த பின்னர் விஜயநகர பேரரசன் "மல்லிகார்ஜீன ராயன்" காலத்தில் இவர் ஆளுநராக பதவி வகித்த ஆரம்பித்தார். பேரரசர் இரண்டாம் விருபக்ஷ ராயரை கொன்று ஆட்சிக்கு வந்த அவரின் மகனான பிரெளத ராயரின் காலத்தில் ஆட்சி பெருஞ்சிக்கலுக்கு உள்ளானது. பாமினி சுல்தான்கள் மற்றும் போர்த்துகீசியர்களின் எதிர்ப்புகளை சமாளிக்க திறமையற்றவராக இருந்த அரசனை தனக்கு விசுவாசமான துளுவ நரச நாயக்கனை அனுப்பி வீழ்த்தி அரசை கைப்பற்றினார். பேரரசுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை சமாளித்து எல்லைகளை விரிவாக்குவதில் ஈடுபட்டார். கி.பி.1489ல் ஒரிசாவின் கஜபதி பேரரசர் கபிலேந்திராவிடம் உதயகிரி போரில் தோற்று பிடிபட்டு உதயகிரியையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் கஜபதி பேரரசுவிடம் கொடுத்தபின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும் கர்நாடகத்தில் மங்களூரில் மேற்கு துறைமுகங்களான பாத்கல், ஹொன்னாவர், பாக்கனூர் ஆகியவற்றை கைப்பற்றி வாணிபத்தை பெருக்கினார். இவர் கி.பி.1491ல் காலமான பின்னர் இவரது மகனானா திம்ம பூபாலன் ஆட்சிக்கு வந்தார்.

திம்ம பூபாலன் (கி.பி.1491) :

சாளுவ நரசிம்ம தேவ ராயனின் மறைவுக்கு பின்னர் குழப்பங்கள் நிறைந்திருந்த காலத்தில் ஆட்சிக்கு வந்த அவரின் மகனான இவர் சில மாதங்களிலையே தளபதி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இரண்டாம் நரசிம்ம ராயன் (கி.பி.1491-1505) :

திம்ம பூபாலன் கொல்லப்பட்ட பின்னர் சாளுவ நரசிம்ம தேவ ராயனின் தளபதியான துளுவ நரச நாயக்கன் அவரின் இன்னொரு  இளவயது தம்பியான இரண்டாம் நரசிம்ம ராயனுக்கு முடி சூட்டினார். இவரது சார்பாக தளபதியான துளுவ நரச நாயக்கரே இவர் சார்பில் ஆட்சியை நடத்தினார். இரண்டாம் நரசிம்மன் உண்மையிலையே காவலில் வைக்கப்பட்டு இருந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கி.பி.1503ல் துளுவ நரச நாயக்கன் தனது பொறுப்பை தனது மகனான வீர நரசிம்ம ராயனிடம் ஒப்படைத்தார். கி.பி.1505ல் காவலில் வைக்கப்பட்டு இருந்த பெனுகொண்டா என்னுமிடத்தில் இரண்டாம் நரசிம்ம ராயன் கொல்லப்பட்டதை அடுத்து தளபதியான வீர நரசிம்ம சிம்மன் புதிய அரசராக பதவியேற்று துளுவ மரபின் ஆட்சியை தொடங்கி வைத்தார்.

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு