59) விஜயநகர பேரரசு - அரவிடு மரபு
அரவிடு மரபு (கி.பி.1542-1646)
அலிய ராம ராயன் (கி.பி.1542-1565) :
அலிய ராம ராயன் என்ற ராமராயனான இவரே விஜயநகர பேரரசின் அரவிடு மரபை தோற்றுவித்தவர். இவர் கிருஷ்ண தேவராயரின் மருமகன் . ஆந்திரபிரதேசம் பெனுகொண்டாவை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தவர்கள் இவர். கிருஷ்ண தேவராயர் காலத்திலையே நிறைய படையெடுப்புகளை வெற்றிகரமாக நடத்தியவர். சிறந்த போர் தளபதி. கிருஷ்ண தேவராயருக்கு பின்னர் அவரின் ஒன்றுவிட்ட தம்பியான அச்சுத தேவராயர் கி.பி.1529ல் பதவிக்கு வந்து கி.பி.1542ல் மறைந்தார். அந்த நேரத்தில் அச்சுத தேவராயரின் இளவயது மருமகனான சதாசிவ ராயனின் சார்பில் ஆட்சி பொறுப்பை நடத்த ஆளுநராக பதவியேற்று சதாசிவ ராயன் உரிய வயது வந்தபிறகும் அவரை தனது கைதி போல வைத்துக் கொண்டு இவரே ஆட்சியை நடத்தினார். கி.பி.1565ல் தக்காண சுல்தான்களுடன் தலைக்கோட்டை போரில் பிடிபட்டு போர்களத்திலையே இவரின் தலையை வெட்டிக் கொன்றனர்.
திருமலை தேவ ராயன் (கி.பி.1565-1572) :
இவர் அலிய ராம ராயனின் தம்பி . தலைக்கோட்டை போரில் தோற்ற பின் இவர் அரசனான சதாசிவ ராயருடன் பேரரசின் செல்வங்களுடன் ஆந்திரமாநிலம் பெனுகொண்டாவுக்கு தப்பி ஓடி அங்கிருந்து விஜயநகர பேரரசை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். கி.பி.1567ல் பிஜப்பூர் சுல்தான்களின் தாக்குதலை முறியடித்தார். இதற்கிடையில் கி.பி.1570ல் சதாசிவ ராயர் மரணமடைந்தார். இந்த நேரத்தில் மதுரை செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்ல முற்பட திருமலை தேவராயரும் அவர்களது நிலையை ஏற்றுக்கொள்ள அவர்கள் திருமலை தேவராயரை பேரரசராக ஏற்றுக்கொண்டு அரசுக்கு திறை செலுத்த ஆரம்பித்தனர்.
முதலாம் ஶ்ரீரங்கா (கி.பி.1572-1586) :
ஶ்ரீரங்க தேவராயன் என்ற இவர் முதலாம் ஶ்ரீரங்கா என்று அழைக்கப்பட்டார். சிதைந்து போயிருந்த ஆட்சியை சீர்படுத்த முயன்றார். இவரது ஆட்சியில் கி.பி.1576ல் சுல்தான் அலி ஆதில்ஷா பெனுகொண்டா கோட்டையை மூன்று மாதமாக முற்றுகையிட்டார். இறுதியில் சுல்தானின் படைகளில் இருந்த இந்து தளபதிகளின் உதவியால் ஶ்ரீரங்காவின் படைகள் சுல்தான் படைகளை வெற்றிக்கொண்டனர். கி.பி.1579ல் சுல்தானின் படை முராரி ராவ் என்ற பிராமண தளபதியின் கீழ் கிருஷ்ணா ஆற்று தென்பகுதிகளை தாக்கினார். அஹோபிலாம் கோயிலை தாக்கி அழித்து மணிகள் பதித்த திருமாலின் தங்கசிலையை சுல்தானுக்கு பரிசாக அனுப்பினார். ஶ்ரீரங்கா முராரி ராவ்வை வென்று அவனை சிறைப்படுத்தி கோல்கொண்டா படைகளை தாக்கி அழித்தார். பின்னர் முராரி ராவ்வை பிராமணர் என்பதால் கொல்லாமல் விட்டார்.
புதிய சுல்தான் இப்ராஹிம் குதுப் ஷா கொண்டவீடுவை தாக்கி உதயகிரியை கைப்பற்றினார். எனினும் இவர் விடாது போராடி உதயகிரியை மீட்டார். பின்னர் சுல்தான் பெனுகொண்டாவை தாக்கி கோட்டையை கைப்பற்ற அங்கும் சென்று சுல்தானை விரட்டி மீண்டும் கோட்டையை கைப்பற்றினார். மதுரை செஞ்சி நாயக்கர்களும் திறை கொடுக்காது போகவே குறைந்த செல்வத்துடன் எதிரிகளை சமாளித்து நாட்டை காத்து வந்த இவர் கி.பி.1586ல் வாரிசு இல்லாமல் மறைந்தார்.
இரண்டாம் வெங்கடா (கி.பி.1586-1614) :
முதலாம் ஶ்ரீரங்காவுக்கு பின்னர் அவரது தம்பியான வெங்கடபதி ராயன் இரண்டாம் வெங்கடா என்ற பெயரில் அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் விஜயநகர அரசு சிறிது வலுபட்டது. பிஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களை வெற்றிகரமாக சமாளித்தார். உள்நாட்டு குழப்பங்களை சமாளித்து கிளர்ச்சி செய்த தமிழ்நாடு மற்றும் ஆந்திர நாயக்கர்களை தனது ஆட்சியின் கீழ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். சுமார் 28 ஆண்டுகள் ஆண்டது விஜயநகர தந்தை ஓரளவுக்கு நல்ல பொருளாதார நிலைக்கு கொண்டு வந்தது.
இரண்டாம் ஶ்ரீரங்கா (கி.பி.1614-1614) :
இரண்டாம் வெங்கடாவால் இவர் அரசனாக நியமிக்கப்பட்டார். இவரை யச்சம நாயுடு என்ற அமைச்சர் ஆதரிக்க கொப்புரி ஜக்க ராயன் என்ற அமைச்சர் எதிர்த்தார். இவரை வேலூர் கோட்டையில் சிறைவைத்து இரண்டாம் வெங்கடாவின் மகனை கொப்புரி ஜக்கராயன் அரசனாக்கினார். யச்சம நாயுடு இவரை மீட்க முயற்சிக்க இரண்டாம் ஶ்ரீரங்கா மற்றும் அவனது குடும்பத்தினரும் கொப்புரி ஜக்கராயனால் கொல்லப்பட்டனர். இவர் பதவியேற்ற நாலு மாதத்திலையே கொல்லப்பட்டார். பின்னர் யச்சம நாயுடு ஶ்ரீரங்காவின் இன்னொரு 12 வயது மகனான ராம தேவனை சிறையிலிருந்து மீட்டு வந்து "தோப்பூர் போர்"என்றழைக்கப்பட்ட போரில் வென்று ராம தேவனை அரசனாக்கினார்.
ராம தேவா (கி.பி.1617-1632) :
வாரிசுரிமை போரான தோப்பூர் போரில் வென்று அரசனாக இவர் இரண்டாம் ஶ்ரீரங்காவின் மகன். சிறுவனாகயிருந்த இவர் ஜக்க ராயனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யச்சம நாயுடுவால் கடத்தி வரப்பட்டதால் கொலை முயற்சியிலிருந்து தப்பித்துக் கொண்டார். தோப்பூர் போரில் ஜக்கராயன் கொல்லப்பட்ட பின்பு அவரது படைகள் பின்வாங்கின. செஞ்சி நாயக்கன் செஞ்சியை தவிர மற்ற அனைத்து கோட்டைகளையும் இழந்தான். கி.பி.1617ன் ஆரம்பத்தில் ராம தேவராயர் தனது 15வது வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். தோப்பூர் போரில் தோற்ற பின் ஜக்கராயனின் தம்பியான யேத்தி ராயன் செஞ்சி நாயக்கனுடன் சேர்ந்து தஞ்சை கோட்டையை தாக்கி தோல்வியுற்றதுடன் செஞ்சி நாயக்கரும் கைது செய்யப்பட்டார். யேத்தி ராயன் தனது மகளை ராம தேவராயனுக்கு திருமணம் செய்து கொடுத்து அவருடன் சமரசம் செய்துக்கொண்டார். கி.பி.1619ல் அரசுக்கு உரிமை கோரிவந்த இரண்டாம் வேங்கட ராயரின் மகன் என்று சொல்லப்பட்டவர் இறந்து போனார். விஜயநகரில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தால் பிஜப்பூர் சுல்தான் கி.பி.1620ல் கர்நூலை தாக்கி தோல்வியுற்று திரும்பினார். பின்னர் கி.பி.1624ல் மீண்டும் படையெடுத்து அதனை கைப்பற்றினார்.
மூன்றாம் வெங்கடா (கி.பி.1632-1642) :
பேடா வேங்கடராயன் என்ற இவர் அலிய ராம ராயனின் பேரன். இவர் இரண்டாம் ஶ்ரீரங்காவின் மற்றொரு மகனான இவர் அண்ணனுக்கு பின் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் இவரது சித்தப்பாவான (இரண்டாம் ஶ்ரீரங்காவின் தம்பி) திம்மராயன் தனக்கே அரசுரிமை என்று வேலூர்க்கோட்டையை கைப்பற்றினார். இதனால் இவர் பெனுகொண்டாவிலையே இருக்க வேண்டியதாகிற்று. செஞ்சி, மதுரை, தஞ்சை நாயக்கர்கள் அனைவரும் வேங்கடராயனுக்கே ஆதரவு தெரிவித்தனர். தனது மருமகனான மூன்றாம் ஶ்ரீரங்கா மற்றும் போர்த்துகீசியர்களின் உதவியுடன் நடந்த போரில் வேங்கட ராயனின் படைகளால் கி.பி.1635ல் திம்மராயன் கொல்லப்பட்டான். பின்னர் இவருக்கே எதிராக இவரது மருமகனான மூன்றாம் கிருஷ்ணாவே பீஜப்பூர் சுல்தானுடன் சேர்ந்து கி.பி.1638ல் பெங்களூரை தாக்கினான். சமாதான உடன்படிக்கை செய்தாலும் அந்த கூட்டணி படைகள் வேலூர் வரை படையெடுத்து வந்ததை நாயக்கர்களின் கூட்டுப்படைகளின் உதவியால் விரட்டியடித்தார். கி.பி.1641ல் கோல்கொண்டா சுல்தான் சென்னையருகே இவரின் படைகளை தோற்கடித்து வேலூர் கோட்டையை நோக்கி முன்னேறியதால் மூன்றாம் வெங்கட ராயன் சித்தூர் காட்டுபகுதிக்கு பின்வாங்கினார். அங்கேயே கி.பி.1642ல் இறந்தவுடன் இவருக்கு வாரிசு இல்லாததால் இவரது மருமகனான மூன்றாம் ஶ்ரீரங்கா பிஜப்பூர் முகாமிலிருந்து வேலூர் வந்து அரசனாக பொறுப்பேற்றார்.
மூன்றாம் ஶ்ரீரங்கா (கி.பி.1642-1646) :
இவர் அலிய ராமராயனின் கொள்ளுப்பேரன். தனது மாமனான மூன்றாம் வெங்கடாவை பிஜப்பூர் படைகளுடன் சேர்ந்து அகற்ற முற்பட்டவர். ஆரம்பத்தில் மாமாவுடன் இணைந்து செயல்பட்டவர் பின்னர் மாறிய காரணம் தெரியவில்லை. முந்தைய மூன்றாம் வெங்கடா கி.பி.1642ல் சித்தூர் காட்டில் மறைந்த பின்னர் இவர் அரசராக முடிசூட்டிக் கொண்டார். நான்கு வருடங்களிலையே சுல்தான்களின் படையெடுப்புகளால் விஜயநகர அரசு வீழ்ந்தது.
உதவிய நூல்கள்:
மதுரை சுல்தான்கள் - S.P.சொக்கலிங்கம்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்


Comments
Post a Comment