60) பாமினி சுல்தான்கள் அரசு
பாமினி சுல்தான்கள் (கி.பி.1347-1538)
தென்னிந்தியாவில் தக்காண பகுதிகளில் அமைந்த முதல் சுதந்திர இஸ்லாம் பேரரசு இதுவே. இவர்கள் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்ஸீம்களாவர். இவர்கள் ஈரான் மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்திலிருந்து வந்தவர்கள். இவர்களின் ஆட்சிகாலத்தில் தான் இந்தியாவில் பாரசீகம் பரவலாக பரவிற்று. இவர்களின் தலைநகரம் முதலில் அஸன்பாத் (இன்றைய குல்பர்கா)வாகவும் பின்னர் முகம்மதாபாத் (இன்றைய பிடர்) வாகவும் இருந்தது. முகம்மது பின் துக்ளக்கின் கீழ் சிற்றரசாக இருந்த பாமினி சுல்தான்கள் துக்ளக் ஆட்சியில் உள்நாட்டு கலகங்களால் இராஜ்ஜியங்கள் பிரிந்து போனதை பயன்படுத்தி பாமினி சுல்தான்கள் சுதந்திர தனியரசை அமைத்தனர். கி.பி. 1347ல் அலாவூதின் பாமன் ஷா வால் ஆரம்பிக்கப்பட்டு கி.பி. 1538ல் கலீம்வுல்லா ஷா காலம் வரை சுமார் 191 ஆண்டுகள் இவர்களின் ஆட்சி தக்காண பகுதிகளில் நடைபெற்றது. கடைசியில் பாமினி சுல்தான்களின் அரசு அகமது நகர் சுல்தானகம், பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் என்று 5 அரசுகளாக பிரிந்தது.
அலாவூதின் பாமன் ஷா (கி.பி.1347-1358) :
முகமது பின் துக்ளக்கின் ஆட்சியின் கீழ் கவர்னராக இருந்த நஸ்ரூத்தின் இஸ்மாயில் ஷா கி.பி.1347ல் டெல்லியின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விலக்கி சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டு "அலாவூதின் பாமன் ஷா" என்ற பெயருடன் குல்பர்காவை தலைநகராக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆட்சியை தொடங்கி வைத்தார்.
முதலாம் முகம்மது ஷா (கி.பி.1358-1375) :
இவர் அலாவூதின் பாமன் ஷாவின் மூத்தமகன். இவர் தனது காலத்தில் ஏராளமான தங்க நாணயங்கள் அச்சிட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டார்.கி.பி.1360ல் விஜயநகரத்து முதலாம் புக்கருக்கு எதிரான போரில் வென்றார். கி.பி.1362ல் நடந்த வாரங்கல் போரிலும் பாமினி சுல்தான்கள் வெற்றி பெற்றனர். அளவுக்கு அதிகமான குடியினால் இவர் இறந்ததாக சொல்கிறார்கள்.
அலாவூதின் முஜஹித் ஷா (கி.பி.1375-1378) :
முதலாம் முகம்மது ஷாவுக்கு பின்னர் அவரது மகனான அலாவூதீன் முஜஹித் ஷா பட்டத்திற்கு வந்தார். இவர் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தாவூத் ஷாவினால் விஜயநகரத்திலிருந்து திரும்பும் வழியில் கொல்லப்பட்டார்.
தாவூத் ஷா (கி.பி.1378) :
35 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். இவர் அலாவூதினின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார்.
இரண்டாம் முகம்மது ஷா (கி.பி.1378-1397) : தாவூத் ஷாவுக்கு பின்னர் அவரது சகோதரரான இவர் ஆட்சிக்கு வந்து தாவூத்தின் மகனின் கண்களை குருடாக்கினார். ஏன் குருடாக்குகிறார்கள் என்றால் பார்வை இல்லையென்றால் ஆட்சிக்கு போட்டிக்கு வரமாட்டார்கள் என்ற எண்ணத்தினால் தான். கோவா பகுதி இவரது ஆட்சியை விட்டு போனாலும் பெரும்பாலும் இவரது ஆட்சி அமைதியாகவே இருந்தது.
கியாஸ்ஸீதீன் ஷா (கி.பி.1397) :
இரண்டாம் முகமது ஷாவின் மகனான இவர் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். பழைய துருக்கிய பிரபுக்களும் பெர்ஷியாவிலிருந்து வந்தவர்களுக்குமான அதிகார போட்டியில் இந்த சுல்தான் கொல்லப்பட்டார்.
சம்ஸ்சுதீன் ஷா (கி.பி.1397) :
வெறும் 5 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.
தாஜீதீன் ஃபெரோஸ் ஷா (கி.பி.1397-1422) :
இவரது காலத்தில் விஜயநகர பேரரசுடன் சண்டை பூசல் இருந்துக்கொண்டே இருந்தது. கி.பி.1398 மற்றும் கி.பி.1406 போர்களில் இவர் வென்றாலும் கி.பி.1419 போரில் தோற்றுப் போனார். இவர் விஜயநகரத்துக்குட்பட்ட இராய்ச்சூர் பிரதேசத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டார். இவர் விஜயநகரத்து அரசர்களுடன் போரிட்டு வெற்றியின் உடன்பாட்டில் தேவாராயாவின் மகளை மணந்துக்கொண்டார். இவர் பீமா ஆற்றங்கரையில் ஃபெருஸாபாத் (Firuzabad) என்ற நகரை நிர்மாணித்தார். இவரது ஆட்சியில் நிறைய இந்துக்களுக்கு அமைச்சரவையில் பதவி தந்தார். பல இந்து பெண்களை மணந்துக்கொண்டார். அவர்களுள் விஜயநகர மன்னரின் மகளும் ஒருவர்.
அஹ்மத் ஷா வாலி பாமினி (கி.பி.1422-1436):
இவர் முந்தைய ஆட்சியாளர் தாஜீதீன் ஃபெரோஸ் ஷாவின் சகோதரர். இவரது ஆட்சிகாலத்தில் கி.பி.1432ல் தலைநகரம் பிடர் பகுதிக்கு மாறியது. இவர் நிறைய சூபி துறவிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஏன் இவரே கூட அவர்களில் ஒருவராக கூட மதிப்பிடப்பட்டார். இவரது கல்லறை புனித குரானின் வாசகர்களால் பொறிக்கப்பட்டது. இவரை வாலி (கடவுளின் நண்பன்) என்ற பெயரில் அழைத்தார்கள்.இவரது ஆட்சியில் விஜயநகரம் (கி.பி.1423), வாரங்கல் (கி.பி.1424-25) ஆகிய போர்களை விஜயநகர அரசுக்கும் எதிராகவும் மால்வாவுக்கு எதிரான போர்களையும்(கி.பி.1425,1435) குஜராத்திற்கு எதிரான போர்களையும் (கி.பி.1425,1435) நடத்தினார். கி.பி.1425ல் போரில் வாரங்கல்லை ஆண்ட வேலமகுல அரசரை கொன்று பெரும்பாலான தெலுங்கானாவின் பெரும்பகுதிகளை கைப்பற்றினார்.
அலாவூதின் அஹ்மத் ஷா பாமினி (கி.பி.1436-1458) :
அஹ்மத் ஷா வாலிக்கு பின் வந்த இவர் அவரின் மூத்த மகன். அஹ்மத் ஷா மற்ற மகன்களுக்கு இராஜ்ஜியங்களின் பகுதிகளுக்கு ஆளுநராக்கிவிட்டு சுல்தானான அண்ணனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இவரது ஆட்சியின் கடைசி வருடங்களில் இவரது மருமகன் மால்வா சுல்தானுடன் சேர்ந்து கிளர்ச்சி செய்தார். இந்த நேரத்தில் தான் பெர்ஷியாவிலிருந்து வந்த வணிக மற்றும் இராணுவ பிரபுவான மஹ்மூத் காவன் தனது இராணுவ திறமையினால் கிளர்ச்சியாளர்களை அடக்கினார்.
அலாவூதின் ஹீமாயூன் ஷா (கி.பி.1458-1461) :
நிஸாம் ஷா பாமினி (கி.பி.1461-1463) :
இவர் அலாவூதின் ஹீமாயூன் ஷாவின் மூத்த மகன். இவரின் தந்தையான முந்தைய அரசர் இறக்கும்போது இவருக்கு வயது எட்டு. அதனால் சிறுவனாக இருந்ததால் இவரது வஸீரான முஹ்மூத் காவனுக்கும் இவரது தாயான மக்துமா-இ-ஜஹான் நர்கீஸ் பேகமும் இவரது பாதுகாவலர்களாக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். இவர் அடுத்த இரு வருடங்களில் இறந்ததால் இவரது தம்பியான மூன்றாம் முகம்மது ஷா பாமினி அடுத்து ஆட்சிக்கு வந்தார்.
மூன்றாம் முகம்மது ஷா பாமினி (கி.பி.1463-1482) :
இவர் அலாவூதின் ஹீமாயூன் ஷாவின் இளையமகன். பட்டத்திற்கு வரும்போது இவர் சிறு வயதினராக இருந்ததால் இவரது வஸீரான பெர்ஷியாவிருந்து இந்தியா வந்த வணிகரான மஹ்மூத் காவன் என்பவரே ஆட்சியை திறம்பட நடத்தினார். இவரது வஸீரின் பெயரில் மஹ்மூத் காவன் மதராஸா சிறந்த கல்வியை அளித்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. முகம்மது காவன் கி.பி.1466 முதல் கி.பி.1481 வரை பணியாற்றினார்.
மஹ்மூத் காவனின் முயற்சியினால் கொங்கண பிரதேசத்திலுள்ள முக்கியமான கோட்டைகளான கெல்னா, பெல்காம் மற்றும் கோலாப்பூர் பாமினி சுல்தான்களின் வசம் வந்தது. மேலும் முக்கியமான கோவா துறைமுகத்தையும் விஜயநகர அரசிடம் இருந்து பறித்தார்.கி.பி.1481ல் சாளுவ அரசரான நரசிம்ஹாவிடம் இருந்து கொண்டப்பள்ளி பகுதிகளை வென்றார். கி.பி.1470களில் பாமினி சுல்தான் அரசு நான்கு ஆளுநர்களின் கீழ் இருந்தது. தெளலதாபாத், மஹீர், பிதர் மற்றும் குல்பர்கா ஆகியவை ஆளுநர்களின் கீழ் இருந்தது. இவரை பிடிக்காத மற்ற அமைச்சர்களின் சொற்களை கேட்டு இவரை கி.பி.1481ல் சுல்தான் தூக்கிலிட்டார். இந்த விசுவாசமான வஸீரின் மறைவுக்கு பின் கி.பி.1482ல் சுல்தானும் மறையவே மாலிக் நைஃப் என்பவர் முதலமைச்சரானார்.
இரண்டாம் மஹ்மூத் ஷா பாமினி (கி.பி.1482-1518) :
இவரது தந்தையான முந்தைய ஆட்சியாளர் மூன்றாம் முகம்மது ஷா லக்ஸ்காரி பாமினி இறக்கும்போது இவருக்கு வயது 12. அதனால் இவரது தாயார் மற்றும் வஸீரான நைஃப் முகம்மது உதவியுடன் ஆட்சியை தொடங்கினார். இவரது ஆட்சியில் இராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றாக பிரிய ஆரம்பித்தன. கி.பி.1486ல் வஸீரான மாலிக் நைஃப் மரணமடைய குவாசிம் பரீத் முதலமைச்சரானார். முதலில் முதலாம் மாலிக் அஹ்மத் நிஸாம் அல்-முல்க் (இவர் மறைந்த வஸீரான மாலிக் நைஃப்பின் மகன்) தலைமையிலான் படைகள் சுல்தானின் படைகளை கி.பி.1490ல் தோற்கடித்ததன் காரணமாக அஹமது நகர் - நிஸாம் ஷாகி சுல்தான்கள் உதயமாயினர். பின்னர் அந்த வருடமே கி.பி.1490ல் யூசுப் யடில்ஷா பிஜப்பூரில் அடுத்ததாக பிஜப்பூர் - அதில் ஷாகி சுல்தான்கள் அரசை தோற்றுவித்தார்.பின்னர் பதயுல்லாஹ்-இமாத்-உல்-முல்க் அதே வருடத்தில்(கி.பி.1491ல்) பிரார் - இமாத் ஷாகி சுல்தான்கள் அரசை ஆரம்பித்தார். அடுத்த வருடமே கி.பி.1492ல் குவாசிம் பரீத் பீதர் - பரீத் ஷாகி சுல்தான்கள் அரசை தோற்றுவித்தார். கடைசியில் கி.பி.1512ல் குலி குப்த் முல்க் தலைமையின் கீழ் கோல்கொண்டா - குதுப் ஷாகி சுல்தான்களும் தனியரசை ஆரம்பித்தனர். இவரது ஆட்சியில் குவாசிம் பரீத்திற்கு பின் கி.பி.1505லிருந்து அவரின் மகனான அமீர் பரீத் ஆட்சியை பின்னாலிருந்து நடத்தினார். இவரது ஆட்சியில் கி.பி.1501லிருந்து புனிதபோரை (ஜிகாதி) இந்து ராஜ்யங்களுக்கு எதிராக நடத்தி நிறைய செல்வங்களை சேர்த்தார். கி.பி.1509ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் கடுமையாக போரிட்டு இவர்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விரட்டியடித்தார்.
இரண்டாம் அஹ்மத் ஷா பாமினி (கி.பி.1518-1520) :
இரண்டாம் மஹ்மூத் ஷா பாமனிக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகனாவார்.
இரண்டாம் அலாவூதின் ஷா பாமினி (கி.பி.1520-1523) :
வாலியுல்லா ஷா பாமினி (கி.பி.1523-1526) :
கலிமுல்லா ஷா பாமினி (கி.பி.1526-1538) :
இவரின் ஆட்சியை விஜயநகர சாம்ராஜ்யத்தின் கிருஷ்ணதேவராயர் வீழ்த்தி பாமினி சுல்தான்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினார்.
உதவிய நூல்கள்:
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
விக்கிபீடியா தகவல்கள்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
மதுரை சுல்தான்கள் - S.P.சொக்கலிங்கம்




Comments
Post a Comment