61) மைசூர் அரசு, ஹைதர் அலி & திப்பு சுல்தான் அரசு

மைசூர் சாம்ராஜ்யம் : (கி.பி.1399-1947)

வாடியார் சாம்ராஜ்யம் அல்லது உடையார் சாம்ராஜ்யம் என்ற பெயரை தாங்கியது தான் மைசூர் அரசு. "வாடியார்" என்ற தெய்வீக தன்மை கொண்டவர்கள் என்று கன்னடத்தில் பொருள். இவர்கள் கிருஷ்ணனின் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேற்கு திசையிலுள்ள துவாரகாவை ஆண்ட பரம்பரையில் இருந்து வந்தவர்கள். யாதுரயா உடையார் என்பவரே கி.பி.1399ல் மைசூர் சாம்ராஜ்யத்தை ஆரம்பித்து வைத்தவர். அந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு கட்டுப்பட்ட அரசாக (கி.பி.1399-1565 வரை) விளங்கிய மைசூர் அரசு விஜயநகர வீழ்ச்சிக்கு பின்னர் தனி அரசாக (கி.பி.1565-1761 வரை) விளங்கியது. இடையில் ஹைதர் அலி திப்பு சுல்தான்கள் காலத்தில் அவர்களின் வழிகாட்டுதலில் கட்டுப்பட்ட அரசாகவும் (கி.பி.1761-1799 வரை) பின்னர் அவர்களின் தோல்விக்கு பின்னர் பிரிட்டிஷ்ஷாரின் கீழும் (கி.பி.1799-1947வரை) வந்தது. பின்னர் இந்திய விடுதலையின் போது இந்தியாவுடன் கி.பி.1950ல் இணைந்தது. யாதுரயா உடையாரில் ஆரம்பித்து தற்போது யதுவீர சாமராஜ உடையார் வரை மொத்தம் 27 அரசர்கள் ஆண்டனர். மகிஷ நாடு அல்லது எருமை நாடு என்ற பெயர் முற்காலத்தில் வழங்கப்பட்டது. எருமை உருவத்தில் இருந்த அரக்கன் மகிஷாசூரனை வீழ்த்திய அன்னை சாமுண்டி தேவி (மகிஷாசூரவர்த்தினி) யின் பெயரால் மகிஷ நாடு என்ற பெயர் நிலைத்தது. மைசூர் அடையாளங்களில் ஊருக்குள்ளே மலை மீது இருக்கும் அன்னை சாமுண்டி தேவி ஆலயம் முக்கியமானது.  


யாதுரயா உடையார் : (கி.பி.1371-1423)

ஆட்சி - கி.பி.1399-1423

இவர் துவாரகாவை ஆண்ட அரசரின் மூத்த மகன். இவருக்குள்  மகிஷ நாட்டுக்குள் செல் என்று ஒரு அசீசரி ஒலித்துக்கொண்டே இருந்தது. தந்தை மற்றும் இராஜகுருவிடம் அனுமதி பெற்று தன் இளைய சகோதரனான கிருஷ்ணரயாவுடன் மைசூர் வந்தார். முந்தின இரவில் மைசூரின் ராஜாவான சாமராஜ பூபதியை தளபதி மார நாயக்கா கொன்று அரசியிடம் இளவரசி சிக்கதேவரசியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கூறி அரண்மனையை சுற்றி காவல் வைத்தான். மைசூர் வந்தவுடன் யாதுரயா ஒரு துறவியிடம் தனக்குள் கேட்கும் அசீசரியை பற்றி சொல்ல அவர் சாமூண்டிஸ்வரி தாய் தான் உன்னை மகிஷ நாட்டை காப்பதற்கு அனுப்பியிருக்கிறாள் என்று கூறி மைசூர் அரசின் நிலையை விளக்கி சொல்ல சகோதரருடன் சென்று தளபதி மார நாயக்கரை கொன்று இளவரசி சிக்கதேவரசியை மணந்து கொண்டு மைசூர் அரசராக பதவியில் அமர்ந்தார்.  சிலர் மைசூர் நாட்டின் அழகை சுற்றி பார்க்க வந்த யாதுரயா இந்த நாட்டின் நிலையை உணர்ந்து நாட்டை தீயவனான தளபதியிடம் இருந்து காத்தார் என்றும் சொல்லுகிறார்கள். விஜயநகரத்து பேரரசர் இரண்டாம் ஹரிஹரர் இவரை தனக்கு கீழ்பட்ட அரசராக அங்கீகரித்தார். கி.பி.1423ல் மைசூரில் மறைந்த இவருக்கு பின் இவரது மகனான முதலாம் சாமராஜ உடையார் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் சாமராஜ உடையார் : (கி.பி.1408-1459)

ஆட்சி : (கி.பி.1423-1459)

இவர் உடையார் வம்சத்தின் 2வது அரசர். தந்தை யாதுரயாவுக்கு பின் கி.பி.1423ல் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்தார். யாதுரயா தன் மாமனாரும் முன்னாள் ஆட்சியாளருமான சாமராஜ பூபதியின் நினைவாக இவருக்கு வைத்த பெயர் தான் பெட்டாடா சாமராஜா. இவரின் காலத்திலும் இவரது தந்தையின் காலத்திலும் விஜயநகர பேரரசின் சங்கம பரம்பரையின் மன்னர்கள் அடுத்தடுத்து சில ஆண்டுகளில் மறைந்ததால் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகவே இந்த காலகட்டத்தில் மைசூரை சுற்றியுள்ள நகரங்களை கைப்பற்றி மைசூர் அரசை விரிவுபடுத்த தொடங்கினர். இவரது காலத்தில் பாமினி சுல்தான்கள் மற்றும் தக்காண சுல்தான்களின் படையெடுப்புகளுக்கு மத்தியில் விஜயநகரமும் மைசூரும் வலுவான இந்து சாம்ராஜ்ய அரசுகளாக இருந்தது. இவர் தனது ஆட்சியில் மூன்று விஜயநகர பேரரசர்கள் கீழ் அரசு புரிந்துள்ளார். இவரது 36 ஆண்டுகால ஆட்சியில் விஜய புக்கராயர், இரண்டாம் தேவ ராயர் மற்றும் மல்லிகாரஜூன ராயர் ஆட்சியில் இருந்தாலும் பெரும்பாலான ஆண்டுகளை கழித்தது இரண்டாம் தேவராயர் ஆட்சியில் தான். இரண்டாம் தேவ ராயர் மற்றும் இவரின் ஆட்சியில் தான் விஜயநகரத்தில் நிலவிய உட்பூசல்கள் மறைந்து சாம்ராஜ்ய விரிவாக்கம் பெற தொடங்கியது.

திம்மராஜ உடையார் : (கி.பி.1433-1478)

ஆட்சி : (கி.பி.1459-1478)

இவர் முதலாம் சாம்ராஜ உடையாரின் மகன். அவருக்கு பின்னர் உடையார் வம்சத்தின் 3 வது அரசராக பதவிக்கு வந்தார். இந்த நேரத்தில் மல்லிகார்ஜூன ராயர் விஜயநகரத்தை ஆண்டு வந்தார். அவர் கி.பி.1565ல் மறையவே அவரது உறவினரான விருபாக்ஷ்ஷ ராயர் ஆட்சிக்கு வந்தாலும் அவரால் நல்ல ஆட்சியாளராக அரசின் பகுதிகளை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தார். இந்த நேரத்தில் வட இந்தியா முழுவதும் சுல்தான்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் ஆதிக்கத்திற்கு போகவே ஓரிஸாவின் புருஷோத்தம கஜபதி விஜயநகர சாம்ராஜ்யத்தின் கிழக்கு பகுதிகளை ஆக்ரமிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் திம்மராஜ உடையாரும் தந்தை மற்றும் பாட்டனார் வழியில் பக்கத்து நகரங்களை கைப்பற்றி மைசூருடன் இணைக்க ஆரம்பித்தார். 19 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி.1478ல் மறைந்தார்.

இரண்டாம் சாமராஜ உடையார் : (கி.பி.1463-1513)

ஆட்சி : (கி.பி.1478-1513)

முந்தைய அரசர் திம்மராஜ உடையாரின் மகனான இவர் அவருக்கு பின்னர் 4வது அரசராக பதவியேற்றார். இவர் தனது ஆட்சிக்காலத்தில் விஜயநகரத்தின் மூன்று அரச பரம்பரைகளைகளும் அதன் எட்டு அரசர்களின் கீழ் அரசு புரிந்துள்ளார். தனது 35 ஆண்டு கால ஆட்சியில் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளை சமாளித்து ஆட்சி புரிந்துள்ளார். துளுவ நரசிம்மராயரை எதிர்த்து மைசூரும் மற்ற சின்ன அரசுகளும் உம்மாத்தூரில் எதிர்த்து நின்ற போது போர்த்துகீசியர்கள் விஜயநகரத்து அரசருக்கு உதவிக்கு நின்றனர். இந்த போரில் மைசூரின் தோல்விக்கு பின்னர் கி.பி.1509ல் விஜயநகரத்து அரசர் நரசிம்ம ராயர்  மறைவுக்கு பின்னர் கிருஷ்ணதேவராயர் பட்டத்திற்கு வந்தபோது நிலைமையை உற்று கவனித்து அரசுக்கு எதிராக எந்த செயலும் செய்யாமல் அமைதியாக இருந்து விட்டார். கி.பி‌.1513ல் தனது 50வது வயதில் 35 ஆண்டுகால ஆட்சியை தொடர்ந்த இவர் இயற்கை மரணம் எய்தினார்.

மூன்றாம் சாமராஜ உடையார் : (கி.பி.1492-1553)

ஆட்சி : (கி.பி.1513-1553)

இரண்டாம் சாமராஜ உடையாரின் மகனான இவர் அவருக்கு பின்னர் 5வது அரசராக பதவிக்கு வந்தார். விஜயநகரத்து அரசர்களின் கீழ் கட்டுப்பட்ட அரசராக இருந்த கடைசி மைசூர் மன்னர் இவரே. இவரே இன்றைய மைசூர் அரண்மனை இருக்குமிடத்தில் கோட்டை மற்றும் மாளிகையை கட்டினார். இந்த கோட்டை பின்னாளில் பலமுறை திரும்ப கட்டப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு கி.பி.1912ல் ஜெயசாமராஜ உடையாரால் கட்டப்பட்ட மாளிகையே தற்சமயத்தில் உள்ளது. 40 ஆண்டுகால ஆட்சியை நடத்திய 4 விஜயநகரத்து அரசர்களின் கீழ் ஆட்சியை தொடர்ந்துள்ளார். 11 வயதில் ஆட்சி பொறுப்பேற்ற இவர் 51 வயதில் கி.பி.1553ல் மரணமடைந்தார்.

இரண்டாம் திம்மராஜ உடையார் : (கி.பி.1507-1572)

ஆட்சி : (கி.பி.1553-1572)

முந்தைய அரசர் மூன்றாம் சாமராஜ உடையாரின் மூத்த மகனான இவர் அவருக்கு பின்னர் 6வது மகாராஜாவாக பதவியில் அமர்ந்தார். இவரது காலத்தில் தான் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு கி.பி.1565 முதல் தனியரசாக ஆயிற்று. விஜயநகரத்து அரசர் ராமராயரின் ஆட்சி காலத்தில் அரசிடமிருந்து நிறைய பகுதிகள் பிரிந்து போயின. அந்த நேரத்தில் பாமினி சுல்தான்கள் மற்றும் மொகலாயர்களின் படையெடுப்புகளை விஜயநகரம் சந்தித்த வேளையில் மைசூர் தன்னை சுதந்திரமான ஆட்சியாக பிரகடனப்படுத்திக் கொண்டது.

நான்காம் சாமராஜ உடையார் : (கி.பி.1507-1576)

ஆட்சி : (கி.பி.1572-1576)

இரண்டாம் திம்மராஜ உடையாரின் மறைவுக்கு பின்னர் அவரின் சகோதரனான இவர் 7வது அரசராக அரியணை ஏறினார். அரியணை ஏறும் போதே இவருக்கு வயது 65. அரியணை ஏறிய 4வருடத்தில் மறைந்தார். இவரை சாமுண்டி ஆலயத்திற்கு சென்று திரும்பும் வழியில் மழைப்பொழிவின் போது மின்னல் தாக்கியதால் தலையிலுள்ள முடி அனைத்தும் உதிர்ந்து சொட்டையாக காட்சியளித்ததால் இவருக்கு "போலா" என்ற பட்டப்பெயர் உண்டு. இவரது காலத்தில் கி.பி.1574ல் விஜயநகரத்து படைகள் தளபதி ரெமட்டி வேங்கடராயர் தலைமையில் மைசூரை 2 மாதங்கள் முற்றுகையிட்டதும் விஜயநகரத்து படைகளுக்கு உணவு வரும் வழியை அடைத்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அவர்கள் திரும்பி போயினர். இவரின் இளமை காலங்களில் தான் முதலாம் கெம்பே கவுடா என்பவர் தரிசு நிலங்கள் மற்றும் காடுகளை பயன்படுத்தி பெங்களூர் நகரத்தை நிர்மாணித்து ஆட்சி புரிந்து வந்தார். முதலாம் கெம்பே கவுடா கி.பி.1569ல் மறைந்த நிலையில் இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் பெங்களூரை கைப்பற்றி மைசூரின் அரசை விரிவுபடுத்தினார். ஆட்சிக்கு வந்த 4 வருடத்தில் கி.பி.1576ல் மறைந்தார்.

ஐந்தாம் சாமராஜ உடையார் :  

ஆட்சி : (கி.பி.1576-1578)

நான்காம் சாமராஜ உடையாருக்கு பின் அவரின் சகோதரர் முறை உறவினரான பெட்டடா ஐந்தாம் சாமராஜ உடையார் 8வது அரசராக அரியணை ஏறினார். அரியணை ஏறிய 2 வருடங்களிலையே ஆட்சியில் நிதிநிலை சரியில்லாத காரணத்தால் நான்காம் சாமராஜ உடையாரின் மகனான ராஜ உடையாருக்கு ஆட்சியை கொடுத்து விட்டு அருகிலுள்ள குண்டுலு தெரகணம்பி கிராமத்திற்கு சென்று விட்டார். சில தகவல்கள் இவர் கி.பி.1578ல் மறைந்ததால் முதலாம் ராஜ உடையார் ஆட்சியில் ஏறினார் என்று கூறுகின்றன. ஆனால் இந்த தகவல்கள் உறுதியாக பொய்யாக தான் இருக்கமுடியும். ஏனெனில் இவரது மகனே கி.பி.1638ல் பட்டத்திற்கு வந்த முதலாம் நரசராஜ உடையார் என்பதிலிருந்து அறியமுடிகிறது.

முதலாம் ராஜ உடையார் : (கி.பி.1552-1617)

ஆட்சி : (கி.பி. 1578-1617)

நான்காம் சாமராஜ உடையாரின் மூத்த மகனான இவர் அடுத்து 9வது அரசராக அரியணையில் அமர்ந்தார். இவரது காலத்தில் விஜயநகரத்து அரசரான இரண்டாம் வேங்கட ராயரின் ஸ்ரீரங்கப்பட்டினத்து ஆளுநர் திருமலாராயர் வரி கேட்ட முடியாது என்று சொல்லி மைசூரை சுற்றி சுவர் எழுப்பியும் வரிகேட்டு வந்தவர்களை அடித்தும் விரட்டினார். பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்ற சமயத்தில் வரவேற்பு பிரச்சினையில் கெம்பல் பகுதியின் அரசரான தீபராஜ உடையாருடன் மோதல் ஏற்படவே அவருடன் போரிட்டு வீழ்த்தி கெம்பல் பகுதியை தன்னரசுடன் இணைத்துக்கொண்டார். திருமலையில் பிறவிகுருடராக வசித்து வந்த அந்தணருக்கு கனவில் திருமாலின் உத்தரவுப்படி மைசூருக்கு வந்து ராஜ உடையார் மனமுருகி வேண்டி கண்களை தொட பார்வை வந்ததாக கூறப்பட்ட நிகழ்வு நிகழ்ந்தது அரண்மனை வளாகத்திலுள்ள லக்ஷ்மி ரமணசுவாமி கோயிலில் தான். கி.பி.1595ல் மைசூருக்கு உட்பட்ட காருகஹல்லியின் தளபதி வீரராஜய்யா நஞ்சன்குடி என்ற ஊரிலுள்ள ஸ்ரீகந்தேஸ்வரா ஆலயத்துக்கு இவர் தினமும் தரிசனம் செய்ய வரும்போது தீர்த்தத்தில் விஷம் கலந்து கொல்ல முயன்ற நிகழ்வு தடுக்கப்பட்டு வீரராஜய்யாவை பசவன்திட்டு காடுகளில் நடந்த போரில் முறியடித்து அவரின் காதுகள் மற்றும் மூக்கும் வெட்டப்பட்டு அவரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. கி.பி.1596ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் தசரா திருவிழாவின் போது இரண்டாம் திருமலைராயருக்கும் இவருக்கும் மோதல் வரவே அவர் மைசூரின் மீது படையெடுக்க இவரும் இவரது சகோதரர் தேவராஜ உடையாரும் போரில் இறங்கி விஜயநகரத்து படைகளை விரட்டியடித்தனர். இதன்பின் விஜயநகரத்து அரசரான இரண்டாம் வேங்கடா ராயர் ராஜ் உடையாருடன் நட்பு பாராட்டினார். அவரின் தளபதியை நரசிபுரம் மன்னர் சிறைவைக்கவே ராஜ் உடையார் அவரை மீட்டுக் கொடுத்தார். இதனால் இரண்டாம் வேங்கடா ராயர் ராஜ உடையார் வசம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கொடுத்ததாகவும் கி.பி.1610ல் ராஜ உடையாரின் மகனான நரசராஜ உடையார் படையுடன் திருமலைராயரை தோற்கடித்து விரட்டி ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றியதாகவும் இரு செய்திகள் உள்ளது. இதன் பின் திருமலை ராயர் அவரது இரு மனைவிகளான அலமேலு அம்மாள் மற்றும் ரங்கம்மாள் உடன் தலைக்காடு அருகில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.இவரது காலத்தில் கி.பி.1610லிருந்து மைசூரில் தசரா திருவிழா விமர்சையாக யானைகள் பவனி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் நடக்க ஆரம்பித்தது. 

அலுமேலு அம்மாவின் தலைக்காடு சாபம் சம்பவம் கி.பி.1612ல் இவரது ஆட்சியில் தான் நடந்தது. திருமலை ராயரின் மனைவியான அலமேலு அம்மாவின் பொறுப்பில் தான் ஸ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள ரங்கநாதசுவாமி ஆலயத்திலுள்ள ரங்கநாயகி அம்மனின் நகைகள் பொறுப்பில் இருந்தது. அதை அவர் தன் பரம்பரை நகைகள் என்று எடுத்துக்கொண்டு சென்று விடவே ராஜ உடையாரின் படைகள் அதை பெற்றுக்கொள்ள முயல அவர் தப்பித்து ஓடி தலைக்காட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிடுவதற்கு முன்னர் "தலக்காடு மலிங்கி காவிரி ஆற்றின் நீரால் மூழ்கி போகட்டும். மண்ணுக்குள் புதைந்து போகட்டும். மைசூர் மஹாராஜாக்களுக்கு ஆண் வாரிசே இல்லாமல் போகட்டும்" என்ற சாபம் கொடுத்து நகைகளுடன் ஆற்றில் மூழ்கி இறக்க ராஜ உடையார் பத்தினியின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமே என்று வருந்தினார். அலமேலு அம்மாள் மறைந்த பத்து நாட்களில் தலைக்காட்டில் மணல் மழை பொழிந்து வைத்தீஸ்வரன் கோயில் உட்பட பல கோயில்கள் மண்ணில் புதைந்து போயின.


காவிரி ஆறு தன் பாதை மாறி மலிங்கிக்குள் புகுந்தது. இதனால் ராஜ உடையார் வெண்கலத்திலான அலமேலு அம்மாள் சிலை வடித்து தசராவின் 9வது நாள் அவருக்கு இன்று வரை வழிபாடு செய்கின்றனர். அலமேலு அம்மாவின் சாபத்தினால் பின்னால் ராஜ உடையாரின் நேரிடை வாரிசுகளுக்கு அல்பாயுசே கிடைத்தது. அதன்பின் நேரிடை வாரிசு அரியணை ஏறுவது அரிதாயிற்று. அப்படி ஏறியவர்களும் அல்பாயுளில் மறைந்தனர். சிலருக்கு மஹாராணிக்கு ஆண் வாரிசு இல்லாமல் ஆசை நாயகிகளுக்கு பிறந்தது. இதனால் அலமேலு சாபத்தின் காரணமாக இவ்வாறு நடப்பதாக நினைக்கிறார்கள். கி.பி. 14ம் நூற்றாண்டில் விஜயநகரத்து பேரரசின் மாதவ மந்திரி காவிரியின் அணை கட்டியதே இந்த பாதை மாற்றத்திற்கு காரணம் என்றும் பருவக் காற்றினால் தான் தலைக்காட்டில் மணல் சேருகிறது என்றும் காவிரி ஆறு பாதை மாறியதால் தான் மலிங்கியினுள் நீர் புகுந்து அதன் பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலமாக மாறிவிட்டதாகவும் புவியிலாளர்கள் கூறுகின்றனர்.

ஆறாம் சாமராஜ உடையார் : (கி.பி.1603-1637)

ஆட்சி : (கி.பி.1617-1637)

முதலாம் ராஜ உடையாருக்கு பின்னர் அரியணை ஏற அவரது மகன்களான நஞ்சராஜாவும் பெட்டாட ராஜாவும் அவருக்கு முன்பே மரணமடைந்ததால் அவரது போரனான ஆறாம் சாமராஜ உடையார் தனது 14வயதில் 10வது அரசரானார். ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததும் சுகானுபவங்களில் சிக்கி திளைக்க இவருக்கு கெட்ட வழியை காண்பித்தவர்களை தளவாய் பெட்டாடா அவர்களை சிறைவைக்க ஆறாம் சாமராஜ உடையார் தளவாய்யை சிறை வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தளவாய் பெட்டாடாவின் கண்களை தோண்டியெடுத்தார். பின்னர் தளவாய்யாக நியமிக்கப்பட்ட தளவாய் லிங்கண்ணா எதிரிகளோடு மோதி அரசை விரிவுபடுத்த இவர் 5 பெண்களை திருமணம் செய்து கொண்டு உல்லாசத்தில்  திளைத்தார். கி.பி.1637ல் தனது 33வயதிலையே மரணம் அடைந்தார். இவருடன் இவருக்கு வாழ்க்கைப் பட்ட 5 பெண்களும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தனர். இவரது 20 ஆண்டுகால ஆட்சியில் விஜயநகர பேரரசு மெல்ல மெல்ல வலுவிழக்க மைசூர் அரசு பலம்பெற ஆரம்பித்தது. 

இரண்டாம் ராஜ உடையார் : (கி.பி.1612-1638)

ஆட்சி : (கி.பி. 1637-1638)

முதலாம் இராஜ உடையாரின் கடைசி காலத்தில் பிறந்த 4வது மகனான இவர் இராஜ உடையாரின் பேரனான ஆறாம் சாமராஜ உடையாருக்கு பின்னர் 11வது அரசராக பதவிக்கு வந்த இரண்டாவது வருடத்தில் இவரின் தளவாய் விக்கிரமராயாவினால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

முதலாம் நரசராஜ உடையார் : (கி.பி.1615-1659)

ஆட்சி : (கி.பி. 1638-1659)

இவர் முதலாம் ராஜ உடையாரின் விதவை மனைவியால் தத்து எடுக்கப்பட்ட உறவினர். இவர் ராஜ உடையாருககு பதவியை கொடுத்துவிட்டு போன ஐந்தாம் சாமராஜ உடையாரின் மகன். சிறந்த மல்யுத்த வீரர் இவர். அந்நாளில் திருச்சிராப்பள்ளியின் சிறந்த மல்யுத்த வீரரான மகாமாயாவை தோற்கடித்தவர்.‌ தளவாய் விக்கிரமராயா அனுப்பிய மல்லர்களை தோற்கடித்து  தம்பி முறையான அரசர் இரண்டாம் ராஜ உடையாரை விஷமிட்டு கொன்ற தளவாய் விக்கிரமராயாவை கொன்று அரியணை ஏறினார். இவரது காலத்தில் தான் மைசூரின் ஆதிக்கம் தென்னிந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. முதன்முதலில் நாணயங்களை அச்சிட்டது இவரே. ஆட்சிக்கு வந்த புதிதில் பிஜப்பூரின் அடில்ஷா ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்ததில் இவரால் மோசமாக தோற்கடிக்கப்பட்டு திரும்பினார். பின்னர் அடில்ஷா இவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்.பின்னர் மதுரை நாயக்கர்களிடம் இருந்து சத்தியமங்கலம் பகுதியை கைப்பற்றினார். மேற்கே மைசூரின் அருகே பிரியப்பட்டனா நகரத்தையும் வடக்கே ஓசூர் நகரத்தையும் கைப்பற்றி அரசை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சியில் தான் கிறிஸ்தவர்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மைசூர் மிஷன் அமைப்பு கி.பி.1649ல் இத்தாலி நாட்டை சேர்ந்த லியானார்டோ சின்னாமி என்ற பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் நரசரா‌ஜாவுக்கு எதிராக சில செயல்களை கூறியதால் இவர் பின்னர் சில வருடங்களில் மைசூரை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனாலும் பின்னர் சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் முறையாக மைசூர் வந்து முதலாம் நரசராஜாவின் அனுமதி பெற்று அவரின் ஆட்சிபகுதிக்குள் 6 மிஷன்களை ஏற்படுத்தினார். முதலாம் நரசராஜாவுக்கு மொத்தம் 10 மனைவிகள் உண்டு. ஆனாலும் ஆண் வாரிசு இல்லை. நீண்ட வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகனும் 5 வருடங்களை தாண்டவில்லை.  இவர் 21 ஆண்டுகாலம் ஆண்டு கி.பி.1659ல் மறைந்தார். இவருடன் இவரது 10 மனைவிகளும் உடன்கட்டை ஏறினார்கள்.

தொட்ட தேவராஜ உடையார் : (கி.பி.1627-1673)

ஆட்சி : (கி.பி. 1659-1673)

முதலாம் நரசராஜா மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு இவர் அவரது உறவினர். இவர் முதலாம் ராஜ உடையாரின் தம்பியான தேவராஜரின் மகன். இவரது ஆட்சியில் தான் விஜயநகரத்துடன் மைசூர் முற்றிலுமாக தொடர்புகளை முறித்து தனியரசாக பிரகனப்படுத்தப்பட்டது. இவரது ஆட்சிகாலத்தில் விஜயநகரத்து அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அடைக்கலம் புகுந்தார். அதனால் கேளடி நாயக்கர் அந்நகரை தாக்க தொட்ட தேவராஜா உடையார் பெரிய படையை எதிர்த்து போர் புரிந்து நகரை காப்பாற்றினார். இதனால் விஜயநகரத்து அரசுடன் சுமூக உடன்பாடு கொண்டாலும் தன் அரசை விஜயநகரத்துக்கு கட்டுப்பட்ட அரசாக இருக்காமல் தனி அரசாக இருக்கும்படி பார்த்து கொண்டார். பின்னர் மதுரை நாயக்கர்கள் மைசூரின் மீது படையெடுத்து வந்ததில் அவர்களை விரட்டியடித்து தாராபுரம் மற்றும் ஈரோடு பகுதிகளை  கைப்பற்றிக் கொண்டார். மேலும் இலங்கையில் திரிகோணமலை அரசர் இவருக்கு கட்டுப்பட்டு வரிப்பணம் செலுத்த வைத்தார். இவரது 14 ஆண்டு கால ஆட்சியில் மைசூரின் அரசு சேலம் தாராபுரம் வரை விரிந்திருந்தது. இவரது ஆட்சியில் சாமுண்டி கோயிலுக்கு 1000 படிகள் அமைத்து கொடுத்தார். சாமுண்டி மலையில் பெரிய நந்தி சிலையை வைத்ததும் இவரே. கி.பி.1673ல் தும்கூர் அருகிலுள்ள சிக்கநாயக்கனஹள்ளியில் இயற்கை எய்தினார்.

சிக்க தேவராஜ உடையார் : (கி.பி.1645-1704)

ஆட்சி : (கி.பி.1673-1704)

இவர் தொட்ட தேவராஜ உடையாரின் அண்ணன் மகன்களில் மூத்தவர். மொகலாயர்கள் வசமிருந்த பெங்களூரை 3 லட்சம் பணம் கொடுத்து வாங்கினார். இவரது ஆட்சியில் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி வரை மைசூரின் ஆட்சி விரிவடைந்தது.


இவரது முதல் மனைவியான தேவஜெயம்மணிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்தனர். ஆனால் அந்த மகனுக்கு பிறவியிலையே காது கேட்காமல் பேச முடியாத நிலை இருந்தது. அதனால் மேலும் 9 மனைவிகளை திருமணம் செய்தும் அவருக்கு ஆண் வாரிசு இல்லை. இதனால் தளவாய்யாக இருந்த பசவராஜ் கலாலே மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அவர் மூலம் பேரன் பிறந்தார். பேரன் பிறந்த இரண்டு வருடத்தில் கி.பி.1704ல் இவர் மரணமடைய இவரது மகனான இரண்டாம் நரசராஜ உடையார் அரியணை ஏறினார். 

இரண்டாம் நரசராஜ உடையார் : (கி.பி.1673-1714)

ஆட்சி : (கி.பி.1704-1714)

பிறவி செவிட்டு ஊமையான இவர் 15வது அரசராக பதவிக்கு வந்தார். இவர் பதவிக்கு வருவதற்கு இவரின் முதலமைச்சராக இருந்த திருமலை அய்யங்கார் என்பவரே காரணகர்த்தாவாக இருந்தார். மேலும் இவர் தளவாய்யாக இருந்த பசவராஜ் கலாலேயின் மகளை திருமணம் செய்ததால் அவரின் உதவியும் இருந்தது. 10 ஆண்டுகள் ஆண்ட இவர் கி.பி.1714ல் மரணமடைந்தார்.

முதலாம் கிருஷ்ணராஜ உடையார் : (கி.பி.1702-1732)

ஆட்சி : (கி.பி.1714-1732)

இவர் இரண்டாம் நரசராஜ உடையாரின் மூத்த மகன். அவருக்கு பின் 16வது அரசராக ஆனார். 12 வயதில் பட்டத்துக்கு வந்த இவர் ஆண் வாரிசு இல்லாமல் தனது 30வது வயதிற்குள் மரணமடைந்தார். இவர் 9 திருமணங்களை செய்தாலும் ஆண் வாரிசு இல்லாமல் நேரிடையான உடையார் வம்சத்து வாரிசு இவருடன் முடிந்தது. இவருக்கு பின்னர் தத்து எடுக்கப்பட்ட வாரிசுகள் தான் பதவிக்கு வந்தனர். இதற்கு அலுமேலு அம்மாவின் சாபம் தான் காரணம்.

ஏழாம் சாமராஜ உடையார் : (கி.பி.1704-1734)

ஆட்சி : (கி.பி.1732-1734)

முதலாம் கிருஷ்ணராஜ உடையாரின் விதவை மனைவியான தோடா தேவஜம்மணி அவாரு அவர்களால் தத்து எடுக்கப்பட்ட மகன் இவர். இவரது ஆட்சியில் தளவாய் தேவராஜயய்யா மற்றும் அவரது சகோதரர் நஞ்சராஜய்யா கைகளில் ஆட்சி அதிகாரம் இருந்தது. தளவாய்யின் முறைகேடுகளை கண்டுபிடித்ததால் இவருக்கும் இவரது தளவாய்க்கும் ஏற்பட்ட உரசலால் இவர் மற்றும் இவரது இராணியும் இரண்டே வருடத்தில் சிறைவைக்கப்பட்டனர். பின்பு உணவில் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். 

இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் :  (கி.பி.1728-1766)

ஆட்சி : (கி.பி.1734-1766)

இவரும் முதலாம் கிருஷ்ணராஜ உடையாரின் விதவை மனைவியான மஹாராணி தோடா தேவஜம்மணியினால் தத்து எடுக்கப்பட்டு 6வது வயதில் மைசூரின் 18வது அரசராக அமர்ந்தார். இவர் வயதில் சிறுவனாக இருந்ததால் இவரின் ஆட்சியின் அதிகாரம் தளவாய் மஹிசுர தேவராஜய்யா அர்ஸ் மற்றும்  நஞ்சராஜய்யா கைகளில் இருந்தது. தளவாய்யான நஞ்சராஜய்யாவின் வளர்ப்பிலையே ஹைதர் அலி வளர்ந்தார். இதற்கிடையில் நஞ்சராஜய்யாவின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட பணம் விரயமாக அவரை அகற்ற மஹாராஜா முடிவெடுக்க நஞ்சராஜய்யா ஸ்ரீரங்கப்பட்டிணம் அரண்மனையில் புகுந்து தாக்குதல் நடத்தவே சகோதரர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் படைப்பிரிவில் சம்பள பாக்கி ஏற்படவே வீரர்கள் நஞ்சராஜய்யாவின் மாளிகையை சூழவே ஹைதர் அலி வந்து சம்பள பாக்கியை தீர்த்து வைத்து தன்னை வளர்த்த நஞ்சராஜய்யாவுக்கு உதவினார். தேவராஜய்யா நஞ்சராஜய்யா சகோதரர்களின் விரிசலையும் சேர்த்து வைத்தார். தேவராஜய்யாவின் மறைவுக்கு பின்னர் புதிய தளவாய்யாக ஹைதர் அலி பொறுப்பேற்க இவரின் வளர்ச்சியை கண்ட ராஜமாதா தேவஜம்மணி மற்றும் அவரை ஒழிக்க எண்ண அதற்குள் ஹைதர் அலி நஞ்சராஜய்யாவின் உதவியால் மைசூர் படைகளை வைத்தே மைசூரின் நிர்வாகத்தின் பொறுப்பை கைப்பற்றினார். இவரது ஆட்சி காலத்தில் கி.பி.1761லிருந்து ஹைதர் அலியின் கீழ் மைசூர் அரசு வந்தது. ஹைதர் அலி தன்னை மைசூரின் சுல்தானாக கி.பி.1761ல் அறிவித்துக் கொண்டார். 

ஹைதர் அலி : (கி.பி.1720-1782)

ஆட்சி : (கி.பி. 1761-1782)


கி.பி. 1720ல் (சிலர் கி.பி.1717 முதல் கி.பி.1722 என்று சொல்லுகிறார்கள். பிறந்த வருடமும் தேதியும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை) பஃதே முஹம்மது - லால் பாய் தம்பதியினருக்கு மகனாக இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள கோலார் மாவட்டத்தில் புடிகோட்டே என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை முதலில் கர்நாடக நவாப்பிடம் தளபதியாக ராக்கெட் பிரிவில் இருந்தார். ஹைதர் அலியின் முன்னோர்கள் பாக்தாத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்றும் பிரெஞ்சு படைப்பிரிவில் ஹைதர் தன்னை பற்றி அரபு பானி ஹஸும் பரம்பரையில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டதாகவும் மூன்று வேறுபட்ட தகவல்கள் உள்ளது. இவரது கொள்ளு தாத்தா காலத்தில் குடும்பமாக பஞ்சாப்பில் இருந்து  குல்பர்காவில் வந்து தங்கினார்கள். இவரின் கொள்ளு தாத்தா சூஃபி முஸ்லிம் மத துறவியாக (பக்கீராக) இருந்துள்ளார். இவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அறிஞர்களாகவும் போர்வீரர்களாகவும் தர்ஹா பணியாளர்களாகவும் பிஜப்பூர் சுல்தான்களிடம் பணிபுரிந்தனர். கி.பி.1686ல் ஓளரங்கசீப்பின் பிஜப்பூர் படையெடுப்பின் போது அவரை எதிர்த்து போரிட்டு இவரது குடும்பத்தினர் மடிந்தும் இருக்கின்றனர். இவரது தந்தை கோலாரில் தங்கினார். ஆற்காடு நவாப்பின் படையில் முக்கிய தளபதியாக ஆனபோது தஞ்சாவூரிலுள்ள செய்யது புர்கானுதீன் என்ற மார்க்க அறிஞரின் மகளான லால் பாய்யுடன் திருமணம் நடந்தது. இவரது தந்தை மைசூர் சமஸ்தானத்தில் பதவிக்கு வந்த போது அவருக்கு ஜாகீராக "புடிகோட்டே" கொடுக்கப்பட்டது. பஃதே முஹம்மதுவின் 5வது மகனாக (மூன்றாவது மனைவியின் இரண்டாவது மகனாக) ஹைதர் அலி பிறந்தார். இவரது தந்தையின் மரணத்திற்கு பின்னர் இவர் தனது மூத்த சகோதரர் ஷாபாஸ் சாஹிப்புடன் ஆற்காடு நவாப்பிடம் நிறைய வருடங்கள் பணியில் இருந்தார். ஆற்காடு நவாப்பிடம் இவரது தந்தை வாங்கிய கடனுக்காக இவரையும் இவரது சகோதரர் ஷாபாஸ் சாஹிப்பையும் நவாப்பின் பேரன் குலிகான் பெரிய முரசில் அடைத்து அதை ஒலிக்க செய்தார். இதனால் ஹைதர் அலிக்கு ஒரு காதில் கேட்கும் திறன் குறைந்து இருந்தது. பின்னர் அவரது தாயின் முறையீட்டினால் அப்போதைய மைசூர் அரசர் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் குலிகானுக்கு 10000 வராகன்கள் பணம் கொடுத்து மீட்டார். பின்னர் சகோதரர்கள் இருவரும்  ஸ்ரீரங்கப்பட்டிணம் வந்து அப்போது தளவாயாக இருந்த தேவராஜய்யா அர்ஸ்ன் அறிமுகம் பெற்று இரண்டாம் கிருஷ்ணராஜ உடையாரின் படைகளில் பணியில் சேர்ந்தார். கி.பி.1749ல் நடந்த தேவனஹல்லி போரில் இவர் காட்டிய வீரத்திற்கு பரிசாக குதிரைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். கி.பி.1750ல் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையே நடைபெற்ற கர்நாடக யுத்தத்தில் மைசூர் பிரெஞ்சுக்காரர்கள் சார்பில் இருந்ததால் ஹைதர் அலி நவீன ஆயுதங்களையும் இர்ணுவ நுட்பங்களையும் அறிய முடிந்தது. ஆங்கிலேயர்கள் சார்பாக கான்சாகிப் என்றழைக்கப்பட்ட மருதநாயகமும் மைசூர் சார்ப்பாக ஹைதர் அலியும் திண்டுக்கல் அருகே நடைபெற்ற போரில் ஹைதர் அலியை மருதநாயகம் தோற்கடித்தார். ஆனால் பின்னாளில் அதே மருதநாயகம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய போது ஹைதர் அலியின் உதவியை நாட இவரும் உதவி புரிந்தார். மைசூரின் அமைச்சர் நஞ்சராஜா ஹைதர் அலியின் திறமையை பார்த்து திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினார். அங்கு இராணுவ ஆய்வுகூடத்தை நிறுவி பீரங்கி படையை அங்கு உருவாக்கினார். மைசூர் ராஜாவுக்கு எதிராக சம்பள பிரச்சினை காரணமாக படையில்  நிலவிய அதிருப்தி கி.பி.1758ல் கலகமாக மாறியது. இதை ஹைதர் அலி அடக்கி அனைவருக்கும் சம்பள பாக்கியை தன் கையில் இருந்து கொடுத்தார். இதனால் படைவீரர்கள் ஹைதர் அலியின் தலைமையை கொண்டாடினார்கள். கி.பி.1759ல் மராட்டிய படைகளுடனான மோதலில் பெற்ற வெற்றியினால் "வெற்றி சிங்கம்"என்ற பட்டம் மைசூர் அரசவையால் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஹைதர் அலியின் வளர்ச்சியை கண்ட தளவாய் தேவராஜய்யா அர்ஸ் மற்றும் அமைச்சர் நஞ்சராஜீவும் இவரை தடுக்க பண்ணிய காரியங்களை புரிந்து கொண்டு நஞ்சராஜூவையும் மற்றும் தேவராஜய்யாவையும் சிறைப்படுத்தி பொம்மை அரசராக இருந்த கிருஷ்ணராஜா உடையாரையும் ஒரங்கட்டி கி.பி.1761ல் மைசூரின் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். பதவியேற்றதும் இராணுவத்தை விரிவுப்படுத்தினார். 200 ஜரோப்பியர்களை படையில் சேர்ந்து நவீனத்துவத்தையும் பீரங்கி மற்றும் இராக்கெட் நுட்பத்தையும் விரிவுபடுத்தினார். அவருடையில் மொத்தம் 1,80,000 வீரர்களும் 40 நாட்களுக்கு ஒருமுறை மாதசம்பளம் முறையை அறிமுகப்படுத்தினார். 

கி.பி.1767-68ல் நடைபெற்ற முதல் மைசூர் யுத்தத்தில் ஈரோட்டில் ஆங்கிலபடையை ஹைதர் அலி தோற்கடித்தார். யுத்தத்தின் முடிவில் ஆங்கிலேயர் ஹைதர் அலியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பிடித்த பகுதிகளை திரும்ப கொடுத்தனர். 


கி.பி.1780ல் மராத்தியர்கள் மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர் முதலாம் மைசூர் போர் ஒப்பந்தப்படி ஆங்கிலேயப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் கோபம் கொண்ட ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். 4 ஆண்டுகள் நடந்த இந்தப் போர் ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி ஆகிய இடங்களில் தீவிரமாக நடந்தது. 2 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். 2000 ஆங்கில வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.நான்காண்டுகள் நடந்த இந்தப் போரில் தன் படையினரை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இந்த சமயத்தில் கி.பி.1782 ஜனவரியில் தனது படையினருடன் வீர உரையை ஆற்றினார். "ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். அவர்களை ஒரு இடத்தில் தோற்கடிப்பதின் மூலம் அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. கந்தகார் மற்றும் பாரசீக மன்னர்களையும் வங்காளத்தின் மீதும் மராட்டியர்களை மும்பை மீதும் படையெடுக்க செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்கள் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர் தாக்க வேண்டும் " என்று கூறினார். இரண்டாம் மைசூர் போரில் வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது ஹைதரின் உடல்நிலை முதுகு தண்டுவட புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அவரது உடல் இயங்க முடியாமல் முடங்கியது. கிபி 1782 டிசம்பர் 6 இல் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது. அவரது மகனான திப்பு சுல்தானால் ஹைதர் அலியின் உடல் ஸ்ரீரங்கப்பட்டினம் எடுத்து வந்து அடக்கம் செய்யப்பட்டது.

திப்பு சுல்தான் : (கி.பி.1750-1799)

ஆட்சி : (கி.பி. 1782-1799)


கி.பி.1750 நவம்பர் 27ம் தேதி பெங்களூர் அருகிலுள்ள தேவனஹள்ளியில் ஹைதர் அலி - பஹ்ருன்னிஸ்ஸா பாத்திமா பேகம் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தார். ஹைதர் அலியின் முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு பக்கவாதத்தால் படுக்கையில் விழுந்ததால் இரண்டாவது மனைவியாக கடப்பா கோட்டையின் ஆளுநரின் மகளான பஹ்ருன்னிஸ்ஸாவை 2வது திருமணம் செய்தார். இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பின்பு திப்பு மஸ்தான் என்ற பக்கீரின் ஆசிர்வாதத்தால் பிறந்த மூத்த மகனே திப்பு சுல்தான். அந்த பக்கீரின் பெயரை வைத்தும் திப்புசுல்தானை இறைபணிக்கு என்று நேர்ந்துவிட நினைத்து பின்னர் 2 வது மகன் பலவீனமாக பிறந்ததால் இறைபணியிலிருந்து இவர் மக்கள் பணிக்கு வர நேர்ந்தது. தந்தையுடன் நிறைய போர்க்களங்களில் பங்கு கொண்டுள்ளார். ஹைதர் அலி முறையான கல்வியறிவு இல்லாததால் திப்புவுக்கு உருது, அரபி,பெர்ஷியன்,கன்னடம் மொழிகளும் குதிரையேற்றம்,வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் தகுந்த ஆசிரியர்களை நியமித்து கற்றுக்கொடுத்தார். 

இரண்டாம் மைசூர்-ஆங்கிலேய யுத்தம் கி.பி.1781-84வரை நடந்து கொண்டிருந்த சமயத்திலையே கி.பி.1782ல் ஹைதர் அலி தண்டுவட புற்றுநோயால் மரணமடையவே அடுத்த மைசூர் சுல்தானாக இவர் பதவியேற்றார். 


இவரது ஆட்சியில் மதுபானம் மற்றும் விபச்சாரம்  தடை செய்யப்பட்டிருந்தது. மேலும்  போதை தரும் பொருட்களின் பயன்பாடும் உற்பத்தியும் தடைசெய்யப்பட்டது. கேரளாவில் பல கணவர் திருமணம் தடை செய்யப்பட்டது. கேரளாவில் இருந்த உயர்குடி பெண்கள் தவிர மற்ற பெண்கள் மார்பகங்களை மூடக்கூடாது என்ற இருந்தவற்றை மாற்றி சட்டம் இயற்றினார். திப்புவுக்கு பின்னர் திரும்பவும் அதே நிலை தொடர்ந்து அய்யா வைகுண்டர் தலைமையில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலைவரி போராட்டம்  தொடர்ந்து நடந்து 20ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் அது முடிவுக்கு வந்தது. இவர் அந்த காலத்தில் கலப்பின விதைகளை விவசாயத்தில் புகுத்தினார். கப்பல் கட்டும் தளம் அமைத்தார். பொதுவிநியோகத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். ராக்கெட்டுகளை தயாரித்து போரில் பயன்படுத்தினார்.


இவரது ராக்கெட்டே ஆங்கிலேயர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு முன்னோடி. லண்டன் அருகில் ஊல்ரிச்சில் உள்ள அருட்காட்சியத்தில் திப்பு பயன்படுத்திய ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கி.பி.1790ல் திப்புசுல்தான் படைகள் குடகு ராஜ்ஜியத்தை ஆக்கிரமித்தது. பாகமண்டலேஸவர் கோயில் சிதைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான குடகு பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டனர். பின்னர் குடகு மன்னரான சிக்க வீரராஜேந்திரன் திப்புவை சமாளிக்க திப்புவுக்கு எதிரியான ஆங்கிலேயருடன் இணைந்தார். இருவரும் இணைந்து திப்புவை குடகு ராஜ்ஜியத்திலிருந்து விரட்டியடித்தனர். திப்புவின் படையெடுப்பின் விளைவுகளால் தான்  இன்றும் குடகர்கள் திப்புவை வெறுக்கின்றனர்.‌

மூன்றாம் மைசூர்-ஆங்கிலேய யுத்தத்தில் முடிவில் ஸ்ரீரங்கப்பட்டினம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி மலபார் மற்றும் மங்களூர் பகுதிகள் இவர் கையை விட்டு போனது. திப்புவின் இரு மகன்களை காரன் வாலிஸ் பணயத்தொகையாக பிடித்து வைத்துக்கொண்டு பணம் பெற்றுக்கொண்ட பின்னரே விடுவித்தார். நெப்போலியனுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயர்களை விரட்ட முடிவு செய்து அவருக்கு கடிதம் அனுப்ப அந்த கடிதம் ஆங்கிலேயர்களிடமே கிடைத்தது. கி.பி.1799ல் நான்காவது மைசூர்-ஆங்கிலேய யுத்தத்தில் திப்புவை எதிர்த்து மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோர் கூட்டு சேர்ந்து போரிட்டனர். இந்த சமயத்தில் இவரின் திவானாக இருந்த பூர்ணய்யா ஆங்கிலேயர் வசம் சென்றார். இதற்கு கூறப்படும் காரணத்தின் உண்மைத்தன்மை எந்தளவுக்கு என்று தெரியவில்லை. பூர்ணய்யாவின் குடும்பத்து பெண்ணை திப்புவின் வீரர்கள் நாசமாக்கியதால் அவரிடம் நியாயம் கேட்க சென்றவரிடம் திப்பு வேண்டுமானால் என் அந்தப்புரத்தில் இடம் இருக்கிறது என்று கூற நொந்து போன பூர்ணய்யா இராஜமாதா லட்சுமம்மிணியிடம் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு தகவல்களை அளித்தார். ஒரு மாத முற்றுகையின் முடிவில் சூழ்ச்சிகளால் சூழப்பட்ட அந்த வீரப்புலி திப்புசுல்தான் கோட்டைக்கு வெளியே வந்து போரிட்டார். ஆடுகளை போல 200 ஆண்டுகள் பிழைத்து இருப்பதை விட புலியை போல 2 நாட்கள் வாழ்ந்து முடியலாம் என்று கூறி போரில் இறங்கிய திப்பு சுல்தான் போரில் முடிவில் பிணமாக இருந்ததை தான்  கண்டுபிடித்தனர். 



லண்டன் பத்திரிக்கையில் வெல்லெஸ்லி பிரபு "நான் அவனை கண்டு அஞ்சுகிறேன். மற்ற மன்னர்களை போல இல்லாமல் இவன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறான். அவரை மற்ற மன்னர்கள் பின்பற்றாதது நம் அதிர்ஷ்டம்" என்று எழுதினார். திப்புவின் மரணத்தை அறிந்தவுடன் ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் "இன்று முதல் இந்தியா நம்முடையது" என்று கூறியதிலிருந்து திப்புசுல்தான் ஆங்கிலேயர்களின் கண்களில் எவ்வளவு தூரம் விரலை விட்டு ஆட்டியிருப்பார் என்று அறியலாம்.

நஞ்சராஜ உடையார் : (கி.பி.1748-1770)

ஆட்சி : (கி.பி.1766-1770)

19வது அரசரான இவர் 4 வருடங்கள் மட்டுமே அரசாண்டார். வெறும் பொம்மை அரசராக ஹைதர் அலியின் கீழ் இருந்தார். இவருக்கு பாலில் விஷமிட்டு ஹைதர் அலி கொன்றார்.

எட்டாம் சாமராஜ உடையார் : (கி.பி.1759-1776)

ஆட்சி : (கி.பி.1770-1776)

இரண்டாம் கிருஷ்ணராஜ உடையாரின் இரண்டாவது மகனான தனது மூத்த சகோதரன் நஞ்சராஜ உடையாரின் மறைவிற்கு பின்னர் இவர் 20வது அரசராக 6 ஆண்டுகள் அரசாண்டார். இவரும் சகோதரரை போலவே மர்மமான முறையில் மரணமடைந்தார். குளிக்கும்போது ஹைதரின் ஆட்களால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் உண்டு.

ஒன்பதாம் சாமராஜ உடையார் : (கி.பி.1774-1796)

ஆட்சி : (கி.பி.1776-1796)

காருஹாஹல்லி பரம்பரையை சேர்ந்த சிக்க தேவராஜ் அர்ஸின் மகனான இவர் 21வது அரசராக ஹைதர் அலி மற்றும் அவருக்கு பின்னர் அவர் மகன் திப்பு சுல்தான் ஆகியோருக்கு கட்டுப்பட்ட அரசராக இருந்தார். இவரது ஆட்சியில் ராஜமாதாவான லட்சுமம்மணியின் ஆட்கள் திப்புவின் படைகளில் நிறைந்து தகவல்களை அனுப்ப அதை பிரிட்டிஷ்ஷாருக்கு திப்புவின் திட்டங்கள் கசிய விட்டுக்கொண்டே இருந்தார். 5 திருமணங்கள் செய்து ஒருவழியாக ஆண்வாரிசை கி.பி.1794ல் பெற்றெடுத்தார். 1796ல் ஒன்பதாம் சாமராஜ உடையார் மறைந்தார். சின்னம்மையினால் மறைந்தார் என்றும் திப்புவின் சதியினால் மறைந்தார் என்றும் சொல்லுகிறார்கள்.

மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் : (கி.பி.1794-1868)

ஆட்சி : (கி.பி.1799-1868)

இவரது ஆட்சியிலிருந்து தான் பிரிட்டிஷ்ஷாரின் கீழ் ஆட்சி துவங்கியது. கி.பி.1798ல் புதிய கவர்னர் ஜெனரலாக வெல்லெஸ்லி பிரபு நியமிக்கப்பட்டார். இவர் துணைப் படை திட்டம் கொண்டு வந்தார். இந்த நேரத்தில் திப்பு பிரெஞ்சுகாரர்களுடன் உறவு கொள்ள கி.பி.1799ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்தின் மீது படையெடுத்த போரில் திப்பு சுல்தான் வீழ்ந்தார். திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்கு பின்னர் 22வது அரசராக அரியணை ஏறிய இவர் 70ஆண்டுகள் ஆண்டார். துணைப் படை திட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் இவரை ஆட்சியில் அமர்த்திய (அப்போது இவருக்கு 5 வயது) ஆங்கிலேயர்கள் மைசூரின் சில பகுதிகளை தங்களோடும் திப்புவை போரில் வீழ்த்த  உதவிய ஹைதராபாத் நிஜாம் சில பகுதிகளை எடுத்துக்கொண்டார். பூர்ணையாவின் மகளுக்கு திப்புவின் வீரர்கள் அநீதி இழைத்ததை திப்பு கண்டுகொள்ளாமல் இருந்ததால் பூர்ணையா ஆங்கிலேயர் பக்கம் சென்று திப்புவின் வீழ்ச்சிக்கு பின்னர் மும்முடி (மூன்றாம்) கிருஷ்ணராஜ உடையாருக்கு பாதுகாவலராக தளவாய்யாக ஆங்கிலேயர்கள் நியமித்தனர். அரியணை ஏறியதுமே 7 வயதிலையே இவருக்கு திருமணம் நடத்தி வைத்தனர். குழந்தை ராணி சிறு வயதிலையே  இறந்து போக 11வது வயதில் இரண்டாவது திருமணம் செய்தார். வாலிப வயது வரும்போது இவரின் மன்மத விளையாட்டுகள் அதிகமாயின. கி.பி.1810ல் 16 வயது ஆனபோது பூர்ணய்யா தளவாய் பொறுப்பிலிருந்து விடுபட்டு முழு அரசராக இவரை ஆள ஆங்கிலேய அரசுக்கு பரிந்துரைக்க அவர்களும் அவ்வாறே செய்தனர். அதே வருடத்தில்  ரா‌ஜமாதாவான லட்சுமம்மிணி மறைந்தார். கி.பி.1812ல் தளவாய் பூர்ணய்யாவும் மறையவே இவரின் அந்தப்புர விளையாட்டுகள் அதிகரித்தன. இவரை சுற்றி இவரது உறவினர்களும் புதிய தளவாய்யின் உறவினர்களும் இருந்தனர். மைசூரின் வருவாய் வரி வசூல் சரியாக நடந்தாலும் நலத்திட்டங்கள் எதுவுமே முழுமை பெறவில்லை. அரசின் கஜானாவும் காலியாக இருந்தது. கொள்ளை வரி வசூலும் சுங்க சாவடி வசூலும் மக்களை வாட்டி எடுக்க கி.பி.1830ல் மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதனால் சென்னை ஆளுநர் தாமஸ் முன்ரோ மைசூர் வந்து நிலைமையை கவனித்து தகவல் அனுப்ப கி.பி.1831ல் கம்பெனி மைசூர் அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு மும்முடி கிருஷ்ணராஜ உடையாருக்கு மாதந்திர பென்ஷன் திட்டத்தை வழங்கியது. கி.பி.1834-1861 வரை மைசூர் நிர்வாகத்தை கவனித்த லெப்டினன்ட் ஜெனரல்  மார்க் கப்பன் பிரபுவினால் நல்ல முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக ஆகியது. பெங்களூரிலுள்ள கப்பன் பார்க் இவரின் நினைவாக கட்டப்பட்டது தான். இவரின் காலத்தில் தான் பெங்களூர் பெருதகரமாயிற்று. திப்புவின் அரண்மனையை தலைமை செயல்களாக மாற்றினார்.இவர் மொத்தம் 14 பெண்களை திருமணம் செய்தாலும் பிறந்தது எல்லாம் பெரும்பாலும் பெண் வாரிசுகளே. பிறந்த இரண்டு ஆண் வாரிசுகளும் சிறு வயதிலையே இறந்தார்கள். திரும்பவும் இழந்த அதிகாரத்தை பெற முட்டிமோதிக்கொண்டிருந்த மும்முடியார் கி.பி.1867 பிப்ரவரியில் பெற்றார். ஆனாலும் அடுத்த ஒரு வருடத்தில் கி.பி.1868 மார்ச் 27ல் மறைந்தார். மைசூர் அரியணையில் மிக நீண்ட ஆண்டுகள் அரசாண்டவர் இவரே.

பத்தாம் சாமராஜ உடையார் : (கி.பி.1863-1894)

ஆட்சி : (கி.பி. 1868-1894)


இவர் முந்தைய அரசர் மும்முடி கிருஷ்ணராஜ உடையாரின் மகளான புட்டம்மணியின் மகன். இவர் பிறந்தவுடன் அடுத்த வாரிசாக தத்தெடுத்தார்.  23வது அரசராக தனது 5வது வயதில் அரியணை ஏறினார். இவருக்கு பிரிட்டிஷார் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். தென்னிந்திய மொழிகளை எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டார். கிரிக்கெட் விளையாட்டு, குதிரையேற்றம், போலோ விளையாட்டு, நீச்சல், மல்யுத்தம், வாள் பயிற்சி, துப்பாக்கி பயிற்சி ஆகியவற்றை எல்லாம் கற்றுக்கொண்டார். 18வயது நிறைந்ததும் முழு அதிகாரத்துடன் இவரை ஆள பிரிட்டிஷார் அங்கீகரித்தனர். ஆட்சிக்கு வந்த புதிதிலையே மாதிரி பிரதிநிதித்துவ மக்கள் சபையை அமைத்து சமஸ்தானத்தின் பிரச்சினைகளை ஆலோசித்தார். கி.பி.1892ல் நவம்பர் மாதத்தில் மைசூரில் பல இடங்களில் ஆன்மீக உரை நிகழ்த்திய விவேகானந்தர் அரசரின் அழைப்பை ஏற்று அரண்மனைக்கும் விருந்தினராக வந்தார். இவர் அந்த நேரத்தில் பெண்களின் கல்வி பற்றிய பேச சிகாகோ மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தரை தன் செலவில் அனுப்பி வைக்க முன் வந்தாலும் விவேகானந்தர் மறுத்து விட்டார். கி.பி.1894ல் மஹாராஜாவுக்கு அமெரிக்கா சென்று வந்த பின் அதன் செழிப்பையும் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் கடிதம் எழுதினார். கி.பி.1894 டிசம்பரில் கல்கத்தா சென்றிருந்த நேரத்தில் தொடர் காய்ச்சல் மற்றும் டிப்தீரியா வியாதியினால் இந்த ஏகபத்தினி விரதரான பத்தாம் சாமராஜ உடையார் தனது 27வயதிலையே மரணமடைந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள் சிறு வயதிலையே இறக்க மூத்த மகன் 4ம் கிருஷ்ணராஜ உடையாராக அடுத்த அரசரானார்.

நான்காம் கிருஷ்ணராஜ உடையார் : (கி.பி. 1884-1949)

ஆட்சி : (கி.பி. 1894-1940)

இவரது தந்தை பத்தாம் சாமராஜ உடையார் மறைவின் போது இவர் 10 வயது சிறுவனாக இருந்ததால் இவருக்கு பொறுப்பாக இவரின் தாயாரான ராணி வாணி விலாஸ் சன்னிதானா இவருக்கு உரிய வயது வரை (கி.பி.1894-1902) அரசாண்டார்.


இவர் மைசூர் அரசின் 24வது அரசராக ஆட்சி புரிந்தார். இவரது திருமணநாளின் போது கி.பி.1897ல் அரண்மனையான அம்பா விலாஸில் தீ பிடித்து மாளிகையின் பெரும்பகுதி  கருதிப் போனது. அதன் பின்னர் அருகிலிருந்த ஜெகன்மோகன் அரண்மனைக்கு குடி போனார். இதற்கிடையில் கி.பி.1900ல் குஜராத்திலிருந்து செளராஷ்டிரா பகுதியின் ராஜகுடும்பத்து பெண்ணான பிரதாபகுமாரி பாய்யுடன் திருமணம் நடந்தது. தனது 18 வயதில் கி.பி.1902ல் முறைப்படி அரசராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் தான் 15 வருடங்களாக கட்டப்பட்ட தற்போதைய மைசூர் அரண்மனை கி.பி.1912ல் கட்டி முடிக்கப்பட்டது.

இதன் பின்னர் கி.பி.1912ல் அடுத்த திவானாக விஸ்வேஸ்வரய்யாவை நியமித்தார்.  இவரே இன்றைய கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டை நியமித்த பொறியியலாளர்.

இவரது காலத்தில் கல்வியை வளர்க்க பள்ளிகள் கல்லூரிகள் கட்டினார். மைசூர் பல்கலைக்கழகம் கி.பி.1916ல் ஆரம்பிக்கப்பட்டது. பெங்களூரில் பொறியியற் கல்லூரி ஆரம்பித்தார். மைசூரில் சந்தன எண்ணெய் ஆலை, பத்ராவதியில் இரும்பு தொழிற்சாலை ஆகியவை இவரின் காலத்தில் கட்டப்பட்டது. கி.பி.1921ல் மைசூர் சமஸ்தானத்தில் இட ஒதுக்கீடு முறை அமுல்படுத்தப்பட்டது. கி.பி.1911ல் மைசூரில் முதன்முதலில் சாரணர் இயக்கம் மஹாராஜாவின் தம்பியான இளவரசர் கந்திரவா நரசிம்ம உடையாரால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கிடையில் சகோதரர்களுகிடையே உரசல்கள் வர திவான் மிர்ஸா காரணமாக இருந்தார். இளவரசர் ஜரோப்பிய பயணத்தில் தலையிட்டதால் இருவருக்கும் உரசல் ஏற்பட பம்பாயிலையே தங்கிவிட்டார். பம்பாயில் தங்கியிருந்த தம்பி அங்கேயே மரணமடைந்தார். நால்வடியாரின் காலத்தில் தான் நீரிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் மைசூரில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. ஆசியாவிலையே முதன்முதலில் பெங்களூரில் தான் தெருவிளக்குகள் ஒளிர்ந்தது. தம்பியின் மரணத்தை அடுத்த நால்வடியாரும் மரணமடைந்தார்.

ஜெயசாமராஜ உடையார் : (கி.பி.1919-1974)

ஆட்சி : (கி.பி. 1940-1974)

 25வது மஹாராஜாவாக அரியணையில் அமர்ந்த இவர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் தம்பியான கந்திரவா நரசிம்மராஜ உடையாரின் மகன். கி.பி.1938ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது இளஙகலை பட்டத்தை பெற்றார். அதே வருடத்தில் மஹாராணி சத்ய பிரேமகுமாரியை மணந்தார். அடுத்த வருடம் ஜரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அந்த பயணத்திற்கு பின்னர் இவரை நான்முடியார் தனது வாரிசாக அறிவித்தார். நான்முடியாரின் மரணத்திற்கு பின்னர் மைசூரின் அரியணையில் அமர்ந்த இவரே இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் ஆண்ட கடைசி மைசூர் மஹாராஜா ஆவார்.


கி.பி.1942ல் மஹாராணி திரிபுரசுந்தரம்மானியை மணந்தார். தனது நிர்வாகத்தில் ஜனநாயக முறையை புகுத்தினார். இவரது ஆட்சிகாலத்தில் தான் இந்தியா சுதந்திரம் அடந்து மைசூர் அரசு மைசூர் மாநிலம் என்றாகிறது. இவர் கி.பி.1947-56 வரை ராஜபிரமுக் (கவர்னர்) என்ற அந்தஸ்த்தில் இருந்தார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஹைதராபாத்திலிருந்து சில பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் சேர்ந்த பிறகு கி.பி.1956-64 வரை மைசூர் மாநிலத்தின் முதல் கவர்னராகவும் பின்னர் கி.பி.1964-66 வரை சென்னை மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். பின்னர் கி.பி.1971ல் இந்திராகாந்தி  மன்னர் மானிய முறையை ஒழித்தவுடன் (அந்த நேரத்தில் வருடத்துக்கு 24லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார்) கி.பி.1966-1974 வரை ராஜா பட்டத்துடன் வாழ்ந்து மறைந்தார். இவர்  குதிரையேற்றம்  அறிந்தவர். இராமநாதன் கிருஷ்ணன் டென்னிஸ்ஸின் பெரிய போட்டிகளுள் ஒன்றான விம்பிள்டன் போட்டிகளில் விளையாட உதவி புரிந்தார். 

ஸ்ரீகந்த உடையார் : (கி.பி. 1953-2013)

ஆட்சி : (கி.பி.1974-2013)

26வது மஹாராஜாவாக பதவியில் அமர்ந்த இவர் அடிப்படையில் ஒரு உடையியல் நிபுணர். இவர் மைசூர் பட்டு சேலைகளை விற்பனையில் முன்னிலைக்கு வர பாடுபட்டார். இவர் மைசூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஜெயசாமராஜ உடையாரின் இரண்டாவது மனைவியான திரிபுரசுந்தரம்மாணிக்கு மகனாக பிறந்தவர். பல்கலைகழக கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாடிய இவர் கர்நாடக கிரிக்கெட் அஸோசியேஷன் தலைவராக இருந்தார். இவர் பிரமோத தேவியை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லை. மஹாராஜா பட்டம் இல்லாவிட்டாலும் மக்கள் இவரை மஹாராஜா என்றே அழைத்தனர். 6 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 4 வெற்றியும் 2 முறை தோல்வியும் அடைந்தார்.  கி.பி.2013 டிசம்பரில் பெங்களூரில் "கார்டியாயிக் அரெஸ்ட்"டினால் மரணம் அடைந்தார்.

யதுவீர சாமராஜ உடையார் : (கி.பி.1992 - தொடர்கிறார்)

ஆட்சி : (கி.பி.2015- தற்போது வரை)

ஸ்ரீகந்த உடையாரின் மனைவி இவரை தத்து எடுத்து அடுத்த மன்னராக அறிவிக்க யதுவீர கோபால் ராஜ் அர்ஸ் என்ற இயற்பெயருடைய இவர் யதுவீர சாமராஜ உடையார் என்ற பெயரில் 27வது மைசூர் அரசராக தற்போது இருந்து வருகிறார்.தற்போது தசரா என்ற நிகழ்வு மட்டுமே ராஜா என்ற நினைவுகளை மக்கள் மனதில் வைத்துள்ளது. மற்றபடி தற்சமயம் தசரா சமயங்களில் ராயல் தர்பார் என்பது பெயரளவுக்கு நடப்பதே ராஜ பரம்பரை பெயரளவுக்கு தொடர்வதற்கு சாட்சி. யானை அம்பாரியில் மஹாராஜா ஊர்வலமாக வருவதற்கு பதிலாக இன்று சாமுண்டீஸ்வரி அம்மனின் விக்ரஹம் வலம் வருகிறது.


உதவிய நூல்கள் :

மைசூர் மஹாராஜா - முகில்

திப்பு சுல்தான் - மருதன்

சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்




Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு