62) குஜராத் சுல்தான்கள்

குஜராத் சுல்தான்கள் (முஸாஃபரீத் வம்சம்) : (கி.பி.1407-1573)

கி.பி.1298ல் டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் அவர்களால் நியமிக்கப்பட்ட கவர்னர்களால் ஆளப்பட்ட குஜராத் அரசு (அகமதாபாத்) பின்னர் டெல்லி சுல்தான்களின் வீழ்ச்சிக்கு பின்னர் குறிப்பாக கி.பி.1398ல் தைமூரின் படையெடுப்பினால் நலிவுற்ற சமயத்தில் அதன் கவர்னராக இருந்த கி.பி.1407ல் முதலாம் முஸாஃபர் ஷாவால் தனி அரசாக அறிவிக்கப்பட்டு குஜராத் சுல்தான்கள் என்ற வரிசை ஆரம்பிக்கப்பட்டது. இது கடைசியில் கி.பி.1573ல் மூன்றாம் முஸாஃபர் ஷாவை அக்பர் முறியடித்ததுடன் குஜராத் சுல்தான்களின் ஆட்சி மொகலாயர்கள் வசம் போயிற்று. கி.பி.1300க்கு முன்பு குஜராத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவே இருந்தது. காம்பே வளைகுடா(காம்பத்) மற்றும் பரூச் வழியாக கடல் வழி வாணிகம் நடந்ததாலும் கடற்போர்களின் வழியாகவும் அரபிக்கள் குஜராத்தில் அதிகரித்தனர். இந்த நேரத்தில் டெல்லியை கைப்பற்றி ஆண்ட அலாவூதின் கில்ஜியின் தொடர்ச்சியான படையெடுப்புகளால் இரண்டாம் கர்ணாவின் காலத்தில் வகேலா வம்ச ஆட்சி முடிந்து டெல்லி சுல்தான்களின் ஆட்சி துளிர் விட்டது. பின்னர் அடுத்து வந்த துக்ளக் ஆட்சியில் அது முழுவதுமாக டெல்லி சுல்தான்களின் வசம் போயிற்று. 

முதலாம் முஸாஃபர் ஷா : (கி.பி.1342-1411)

ஆட்சி : (கி.பி.1391-1403) & (கி.பி.1404-1411)  & 

முஹம்மத் ஷா : (கி.பி.1403-1404)

இவர் பஞ்சாப்பை சேர்ந்த சத்திரிய வம்சத்தை சேர்ந்த இவர் டெல்லியில் கி.பி.1342 ஜூன்30ல் பிறந்தவர். மதம் மாறி முஸ்ஸீம்மாக ஆனவர். இவரது சகோதரியை டெல்லியை ஆண்ட ஃப்ரோஸ் ஷா துக்ளக்கிற்கு திருமணம் செய்து கொடுத்ததால் பிரபுக்கள் அந்தஸ்த்தில் உயர்ந்தார். துக்ளக் வம்சத்தினரினால் இவர் சுல்தானாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் இன்றைய பதான்னிலிருந்து (வகேலா வம்சத்தினரை வீழ்த்திய பின்னர் அதுவே தலைநகராயிற்று) டெல்லி சுல்தான்களின் சார்பாக கவர்னராக ஆட்சி புரிய ஆரம்பித்தார். 

முகம்மது பின் துக்ளக் கி.பி.1351ல் காய்ச்சலினால் மரணமடைந்த சமயத்தில் அவருக்கு வாரிசு இல்லாமல் போகவே அவரது சகோதரர் ஃபெரோஸ் ஷா துக்ளக் அரியணை ஏறினார். இவர் கி.பி.1377ல் மாலிக் முபாஃரக் (பர்ஹத் உல்-முல்க் ரஷ்டி கான்) என்பவரை கவர்னராக நியமித்தார். பின்னர் கி.பி.1387ல் சிக்கந்தர் கான் என்பவரை கவர்னராக நியமிக்க அவரை ரஷ்டி கான் போரில் கொன்றார். இதற்கிடையில் ஃபெரோஸ் ஷா துக்ளக் மரணமடையவும் அவரது பேரன் இரண்டாம் கியாஸ்தீன் துக்ளக் அரியணை ஏறி 5 மாதங்களே ஆள அவருக்கு பின் இன்னொரு பேரன் அபு பக்கர் ஷா 9 மாதங்கள் ஆள அவரை ஃபெரோஸ் ஷாவின் மகன் இரண்டாம் நஸிரூத்தின் முஹம்மத் ஷா வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1391ல் ஸஃபர் கானை (முஸாஃபர் கான்) கவர்னராக நியமிக்க படைகளுடன் ரஷ்டி கானை காம்போய் என்ற கிராமத்திற்கு அருகில் வீழ்த்தி பதானை பிடித்தார். போரில் வெற்றி பெற்ற கிராமத்திற்கு ஜித்பூர் என்று பெயரிட்டார். 

கவர்னராக அமர்ந்தவுடன் இடரின் (Idar) ராவ்கள் வழக்கமான திறைப்பணம் செலுத்தாததால் கி.பி.1393ல் படையெடுக்க அவர்கள் பணிந்து கப்பம் கட்டினார்கள். கி.பி.1394ல் ஜூனாகத்தை ஆண்ட ராவ்களை எதிர்த்து போரிட்டு பணிய வைத்தார். பின்னர் சோம்நாத் சென்று அங்குள்ள சிவன் கோயிலை இடித்து அங்கே ஜூம்மா மசூதியை கட்டினார். அந்நகருக்கு சோம்நாத் பதான் (அல்லது) தேவ பதான் என்று பெயரிட்டார். பின்னர் மண்டூ நகரில் இந்துக்களால் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுவது அறிந்து  ஒரு வருடம் முற்றுகையிட்டு அந்நகரை பணிய வைத்தார். பின்னர் அங்கிருந்து அஜ்மீருக்கு புனித பயணமாக சென்றார். வழியில் சாம்பார் மற்றும் தண்ட்வானா பகுதிகளின் தளபதிகளை வென்று பின்னர் தெல்வாடா மற்றும் ஜாலாவாடாவை ஆண்ட இராஜபுத்திரர்களை வென்று கி.பி.1396ல் பதான் திரும்பினார். அந்த நேரத்தில் கி.பி.1397ல் இவரது மகன் டாடர் கான் (முஹம்மத் ஷா) பானிபட்டிருந்து டெல்லியை பிடிக்க செல்ல அந்த நேரத்தில் இக்பால் கான் என்பவர் பானிபட்டை பிடித்து டாடர் கானின் படைகளை கைப்பற்றி டாடர் கானை குஜராத்திற்கு விரட்டியடித்தார்.  கி.பி.1398-99ல் தைமூரின் படையெடுப்பில் டெல்லியின் சுல்தான்னான இரண்டாம் மஹ்மூத் ஒடி முஸாஃபர் கானிடம் தஞ்சம் புகுந்து உதவி கேட்க இவர் மறுக்கவே மாள்வா ஓட அங்கேயும் உதவியில்லாமல் போக இந்த நேரத்தில் சுல்தானின் வஸீரான இக்பால் கான் டெல்லியை பிடித்து அங்கே கவர்னராக ஆட்சி புரிந்தார். கி.பி.1403ல் டாடர் கான் தன் தந்தை முஸாஃபர் கானை டெல்லியை பிடிக்க சொல்ல அவர் மறுக்கவே முஸாஃபர் கானை ஆஸாவால் என்னுமிடத்தில் சிறைவைத்து தன்னை அடுத்த சுல்தானாக "முஹம்மத் ஷா" என்ற பெயரில் பிரகனப்படுத்திக்கொண்டு டெல்லியை பிடிக்க ஆயுத்தமானார். டெல்லியை பிடிக்க போகும் வழியில் சினோர் என்னுமிடத்தில் முஸாஃபர் ஷாவின் சகோதரனான ஷாம்ஸ் கான் தண்டானியால் விஷமிட்டு கொல்லப்பட்டார். பின்னர் ஷாம்ஸ் கான் தண்டானி தன் சகோதரனை சிறையில் இருந்து விடுவிக்க அவர் தண்டானியை பதவியேற்க வலியுறுத்த அவர் மறுக்கவே மீண்டும் முஸாஃபர் ஷா அடுத்த ஆண்டே கி.பி.1404ல் இரண்டாவது முறையாக பதவியேற்றார். சிலர் முஹம்மத் ஷா அவரின் குடிப்பழக்கத்தினால் மோசமான காலநிலையினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் கூறுகிறார்கள். பின்னர் கி.பி.1407ல் ஸாஃபர் கான் (முஸாஃபர் கான்) தன்னை சுயாட்சி பெற்ற சுல்தானாக பிரகடனப்படுத்திக் கொண்டு முஸாஃபர் ஷா என்ற பெயரில் தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டார். கி.பி.1408-09ல் மால்வாவை ஆண்ட திலாவர் கான்னை அவரின் மகனான அல்ப் கான் (சுல்தான் ஹூசாங் கோரி) விஷமிட்டு கொன்றதாக வதந்தியால் மால்வா மீது படையெடுத்து வென்று தன் சகோதரனான ஷாம்ஸ் கான் தண்டானியின் (நஸ்ரத் கான்) பொறுப்பில் ஒப்படைத்தார்.  கி.பி.1409-10ல் டெல்லியை ஆண்ட நஸ்ரூத்தின் மஹ்மூத் ஷா துக்ளக்கிற்கு உதவியாக ஜான்பூரின் இப்ராஹீம் சுல்தான்னை எதிர்த்தார். கி.பி.1410களின் இறுதியில் உடல்நலமில்லாமல் தனது பேரன் அஹ்மத் ஷாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து 5 மாதங்களில் உடல்நலமில்லாமல் படுக்கையில் மறைந்தார்.

முதலாம் அஹ்மத் ஷா : (கி.பி.1389-1442)

ஆட்சி : (கி.பி.1411-1442)

இவர் முஸாஃபர் ஷாவின் பேரனும் அவரை சிறையிட்டு ஆட்சியை பிடித்த டாடர் கான்னின் (முதலாம் முஹம்மத் ஷா) மகன். தாத்தாவான முஸாஃபர் ஷா படுக்கையில் விழந்த சமயத்தில் இவர் ஆஸாவால் (இன்றைய அகமதாபாத்) பகுதியிலுள்ள கோலி பழங்குடியினரின் எதிர்ப்புகளை அடக்க புறப்பட்டார். உலமாக்களின் வேண்டுகோளினால் பதான் திரும்பி ஆட்சி பொறுப்பை ஏற்றார். இவர் பதவியேற்றதும் இவரது உறவினரான மொகையூதீன் ஃபெரோஸ் கான் (பரோட்டாவின் கவர்னர்) என்பவர் மற்றவர்களின் துணையுடன் இவரை எதிர்க்க பின்னர் முடியாமல் காம்பத் நகருக்கு ஒடி பின்னர் அங்கிருந்து பரூச் நகருக்கு வர அஹ்மத் ஷா படைகளுடன் வர அவரிடம் மன்னிப்பு கோர அவரும் மன்னித்து ஆஸாவால் திரும்பினார். 

ஆஸாவாலில் சபர்மதி ஆற்றங்கரையில் முகாமிட்டு இருந்த போது ஹேர் (பெரிய வகை முயல்) மிருகம் கோபமான நாய்யை விரட்டுவதை கண்ட அஹ்மத் ஷா தனது ஆன்மீக வழிகாட்டிகளை வினவ இது நல்ல சகுனம் என்று கூற  கி.பி‌.1411 பிப்ரவரி 26ம்தேதி அகமதாபாத் நகரை நிர்மாணிக்க அஸ்திவாரம் அமைக்க உத்தரவிட்டார். தனது பெயரான அஹ்மத் தனது குருவான ஷேக் அஹ்மத் மற்றும் தனது தோழர்களான காஸி அஹ்மத் மற்றும் மாலிக் அஹ்மத் ஆகியோரின் பொதுவான பெயரான அஹ்மத் என்ற பெயராக புதிதாக உருவாக்கப்பட்ட நகரத்திற்கு "அகமதாபாத்" என்று பெயரிட்டார். புது தலைநகரத்திற்குள் பாத்ரா கோட்டை  கட்டப்பட்டது.


இதற்கிடையில் கி.பி.1413-14ல் ஆஸாவாலின் தளபதியான பில் இனத்தவரான ஆஸா பில்லை தோற்கடித்தார். கி.பி.1415ல் சித்பூரிலுள்ள "ருத்ரமஹாலயா " என்ற புகழ்பெற்ற சிவன் கோயிலை இடித்து விட்டு அதில் சிறிய அளவில் மசூதியை எழுப்பினார்.


இன்றும் அந்த கோயில் இடிபாடுகளுடன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் கி.பி.1424ல் அஹ்மத் ஷா மசூதி மற்றும் ஜூம்மா மசூதியையும் அகமதாபாத்தில் கட்டினார்.

 கி.பி.1425ல் ராவ் புஞ்சா ஆண்ட இடர் ராஜ்ஜியத்தை தாக்க ராவ் புஞ்சா காடுகளில் மறைந்து கொண்டார். இடர் ராஜ்ஜியத்திற்கு சோதனைக்காகவே அஹ்மத் நகர் (தற்போதைய பெயர் ஹிம்மத் நகர்) என்ற ஊரை நிர்மாணித்தார். அந்நகரில் கோட்டை ஒன்றையும் கி.பி.1427ல் கட்டி முடித்தார். காட்டில் மறைந்து வாழ்ந்த ராவ் புஞ்சா அவ்வப்போது தாக்குதல் நடத்தினாலும் கி.பி.1428ல் அவர் மறைந்தார். பின்னர் அஹ்மத் ஷா விசால் நகரை (தற்போது விஸ்நகர்) கைப்பற்றி  பின்னர் ராவ் புஞ்சாவின் மகனான ஹராய்யுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள அவர் இவருக்கு கப்பம் கட்டி இவரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டார்.  ஆனாலும் கி.பி.1428 நவம்பரில் ஹராய் கப்ப பணத்தை தராததால் இடர் நகரத்தை தாக்கி கைப்பற்றினார். கோட்டையை கைப்பற்றி அங்கு ஒரு மசூதியை கட்டினார். தனது 53வது வயதில் கி.பி.1442ல் மறைந்தார். 

இரண்டாம் முஹம்மத் ஷா (கி.பி.1442-1451) :

முதலாம் அஹ்மத் ஷாவின் மகனான கரீம் கான் அவரது மறைவுக்கு பின்னர் முஸ்ஸூயூத்தின் இரண்டாம் முஹம்மத் ஷா என்ற பெயரில் அரியணை ஏறினார். இவரது ஆட்சியில் இராஜ்ஜியத்தின் எல்லைகள் விரிவடைந்தது. கி.பி.1445ல் பிர் ராய் ஆண்ட இடர் ராஜ்ஜியத்தின் மீது படையெடுக்க அவர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் துங்கார்பூரை ஆண்ட கன்ஹா ராய் மீது படையெடுக்க அவர் மலையில் போய் ஒளிந்து கொண்டு பின்னர் இவரின் ஆளுமையை ஏற்று திறை செலுத்துவதாக ஒப்புக்கொண்டார். பின்னர் சம்மா இராஜ்ஜியத்தை சேர்ந்த பீபீ முஹ்லியை மணந்து கொண்டார். அவருக்கு பிறந்த மகனான பஃதே கான் என்பவரே பின்னர் மஹ்மூத் பேகடா என்ற பெயரில் 53 ஆண்டுகள் ஆண்டார். இவரது ஆட்சியில் கி.பி.1448ல் மால்வா ராஜ்ஜியத்துடன் இணைந்து மேவார் ராஜ்ஜியத்தின் தலைநகரான சித்தூர்கார்க்கை தாக்கி தோல்வியடைந்தார். இவரை வென்ற நினைவாக ராணா கும்பா சித்தூரில் விஜயஸ்தம்பம் ஒன்றை எழுப்பி அதை விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணித்தார். கி.பி.1450ல் சம்பனீர் மீது படையெடுத்தார். அப்போது சம்பனீரை ஆண்ட கங்காதாஸ் மால்வாவின் சுல்தானான "மஹ்மூத் கில்ஜி"யிடம் கொண்ட நட்புறவினால் அவர் இவரை தாக்க சம்பனீரை விட்டு கோத்ராவுக்கு தப்பி ஓடினார். மஹ்மூத் கில்ஜி 80000 குதிரைபடைகளுடன் இவரை வீழ்த்த வர பயந்து போய் "டையூ"க்கு ஓட்டம் பிடித்தார். இவரின் கோழைத்தனம் காரணமாக பிரபுக்கள் இவருக்கு விஷம் வைத்ததாகவும் வரும் வழியிலையே இவர் உடல்நலமில்லாமல் இறந்ததாகவும் இரு வேறுபட்ட தகவல்கள் உண்டு. இவர் கி.பி.1451 பிப்ரவரியில் மறைந்ததாகவும் இவரின் தந்தையின் கல்லறை அருகே அகமதாபாத்தில் புதைக்கப்பட்டார்.

இரண்டாம் அஹ்மத் ஷா :

ஆட்சி : (கி.பி.1451-1458)

இரண்டாம் முஹம்மத் ஷாவின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜலால் கான் குப்த்-யூதீன் இரண்டாம் அஹ்மத் ஷா என்ற பெயரில் அரியணை ஏறினார். இந்த நேரத்தில் மாள்வா (மத்தியப்பிரதேசம்) வின் மஹ்மூத் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து சுல்தான்பூரை கைப்பற்றினார். இதனால் இவர் ஸார்ஸா-பால்டி வழியாக பரூச்சை அடைய அந்த நேரத்தில் மஹ்மூத் கில்ஜி பரோடாவை கொள்ளையிட்டு நதோத்தை கொள்ளையிட்டார். மஹ்மூத் கில்ஜியை இரண்டாம் அஹ்மத் ஷா கபத்வன்ஜ் என்னுமிடத்தில் தோற்கடித்து இந்த போரை நடத்தி அவரை தூண்டிய முஸாஃபர் கான் என்பவரின் தலையை வெட்டி வீழ்த்தி கப்த்வன்ஜ் நகர வாசலில் வைத்தார். இந்த வெற்றியை கொண்டாட அகமதாபாத் அருகில் "கான்காரியா ஏரி" கட்டப்பட்டது. பின்னர் அதே ஆண்டு மஹ்மூத் கில்ஜி ஃபெரோஸ் கான் (இவர் இரண்டாம் அஹ்மத் ஷாவின் உறவினர்) நகோர் மீது படையெடுத்தார். இதனால் இரண்டாம் அஹ்மத் ஷா படைகளை அனுப்ப அதற்குள் ஃபெரோஸ் கான் மரணமடைய மஹ்மூத் கில்ஜி சாம்பார் வழியாக மால்வா திரும்பினார். இந்நிலையில் சித்தூரை ஆண்ட இராணா கும்பா நகோரை பிடிக்க படைகளுடன் வர குஜராத் சுல்தான்களுடன்‌ மோதி இராணா கும்பா வெற்றியுடன் கொள்ளையிட்டு சித்தூர் திரும்பினார். இதற்கு பழிவாங்க இரண்டாம் அஹ்மத் ஷா கி.பி.1456-57ல் படைகளுடன் சித்தூர் நோக்கி செல்லும் வழியில் சிரோஹியை‌ ஆண்ட தேவ்ர ராஜா ராணா கும்பாவின் ஆதிக்கத்தில் இருக்கும் தனது அபு கோட்டையை மீட்டு தர கோரிக்கை வைத்தார். கும்பல்மீரை அடைந்து கொள்ளையிட்ட குஜராத் சுல்தான் அடுத்து சித்தூரை நோக்கி விரைய அங்கு ராணா கும்பாவின் படைகளுடன் நடந்த போரில் வெல்ல ராணா கும்பா நகோரை இனி கொள்ளையடிக்க மாட்டேன் என்றும் அதற்கு பதிலாக கப்பம் கட்டுவதாகவும் கூற அதை ஏற்றுக்கொண்டு குஜராத் திரும்பினார். பின்னர் 3 மாதங்களில் ராணா கும்பா மறுபடியும் நகோரை கொள்ளையிட இவர் திரும்பவும் கி.பி.1458ல் படையெடுத்து சிரோஹி கும்பல்மீர் வழியாக சித்தூரை அடைந்து எந்தவித பலனில்லாமல் திரும்பினார். வந்தவுடன் கி.பி.1458 மே மாதத்தில் மரணமடைந்தார். இவரின் மரணத்திற்கு எதிர்பாராமல் பட்ட வாட்காயமே காரணம் என்றும் இவரின் மனைவியரில் ஒருவர் இவருக்கு விஷமிட்டதே காரணம் என்றும் இரு தகவல்கள் உள்ளது. இவரது மரணத்துக்கு பின்னர் இவருக்கு  "சுல்தான்-இ-காஸி" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தவூத் ஷா :

ஆட்சி : (கி.பி.1458)

இரண்டாம் அஹ்மத் ஷாவுக்கு பின்னர் முதலாம் அஹ்மத் ஷாவின் மகனான தவூத் ஷா ஆட்சிக்கு வந்தார்.இவர் அமைச்சர்களின் பொம்மை அரசராக இருந்தார். பதவியேற்ற 27 நாட்களில் இவரது மாற்றாந்தாய் சகோதரரின் மகனான இரண்டாம் முஹம்மத் ஷாவின் ( கி.பி.1442-1451வரை ஆண்டவர்) மகனான 13 வயதான சிறுவனான முதலாம் மஹ்மூத் ஷா இவரை பதவியிலிருந்து இறக்கி அடுத்த அரசராக "மஹ்மூத் பேகடா" என்ற பெயரில் அரியணை ஏறினார்.

மஹ்மூத் பேகடா : (கி.பி.1445-1511)

ஆட்சி : (கி.பி.1458-1511)

இவர் இரண்டாம் முஹம்மத் ஷாவின் மகன். பஃதே கான் என்ற இயற்பெயருடன் முதலாம் மஹ்மூத் ஷா என்ற பெயரில் 13 வயதில் பட்டமேறிய இவர் சம்பனீர் பாவகத் மற்றும் ஜூனாகத் கோட்டைகளை கைப்பற்றியதால் மக்கள் இவரை பேகடா என்று அழைக்கவே இவரது பெயர் "மஹ்மூத் பேகடா" என்ற பெயராக சரித்திரத்தில் நிலைத்து விட்டது.  கி.பி.1461-62ல் மாள்வாவின் சுல்தானான மஹ்மூத் கில்ஜி தக்காணத்தின் பாமினி சாம்ராஜ்யத்தை ஆண்ட நிஸாம் ஷா பாமினி மீது படையெடுத்து வந்தார். உடனே பாமினி சுல்தான் இவரிடம் உதவி கேட்கவே இவர் தனது படைகளுடன் பெர்ஹாம்பூரை நோக்கி விரைந்தார். இவர் தனது நாட்டை நோக்கி செல்வதை என கேள்விப்பட்ட மஹ்மூத் கில்ஜி அந்த சமயத்தில் கோண்டுவானாவில் முகாமிட்டு இருந்தவர் தன் நாடு நோக்கி விரைந்தார். பாமினி சுல்தான் இதனால் மஹ்மூத் பேகடாவுக்கு நன்றி தெரிவித்தார். கி.பி.1462ல் மால்வாவின் மஹ்மூத் கில்ஜி மீண்டும் தக்காணத்தின் மீது படையெடுத்து தெளலதாபாத் நகரை சூறையாடவே பாமினி சுல்தான்கள் மீண்டும் இவரின் உதவியை நாட மாள்வா சுல்தானுக்கு  தக்காணத்தை தொட்டால் மாண்டூவை நான் தாக்குவேன் என்று கடிதம் எழுத அவர் மீண்டும் திரும்பி போனார். கி.பி.1467ல் ஜூனாகத்தை மீது படையெடுக்க அதை ஆண்ட ராவ் மூன்றாம் மண்டலிக்கா இவரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோயிலுக்கு தங்க குடையில் செல்வதை கேள்விப்பட்ட இவர் மீண்டும் படையெடுக்க அவர் தங்க குடையை இவருக்கு பரிசளித்தார். பின்னர் சோரத்தை பிடிக்க படைகளை அனுப்பி கடைசியில் ஜூனாகத் மற்றும் கிர்னரை பிடித்தார். இவரின் படையெடுப்பில் இணைந்த ராவ் மூன்றாம் மண்டலிக்கா நான் தான் உங்களது ஆளுமையை ஏற்றுக்கொண்டேனே? பிறகும் எதற்காக தாக்குதல் என்று வினவ இவர் நீங்கள் இஸ்ஸாம்முக்கு மாறிவிடுங்கள் என்று கூற மண்டலிக்கா இரவோடு இரவாக கிர்னருக்கு ஒடிப்போனார். பின்னர் கி.பி.1472-73களில் பலமுறை பலமுறை மோதி தோல்வியை தழுவிய பின்னர் அவர் இஸ்ஸாம்க்கு மாறி கோட்டையை மஹ்மூத் பேகடா வசம் ஒப்படைத்தார்.

கி.பி.1479ல் ஜூனாகத் நகருக்கு வெளியே இருந்த ஜூஹன்பானா கோட்டையை செப்பனிட்டார். தனது பிரபுக்களையும் வீடுகளை கட்ட வற்புறுத்த அவர்களும் அவ்வாறே செய்ய இவரும் தனக்கு ஒரு மாளிகை கட்ட அவ்வாறே புது நகரமாக "முஸ்தபாபாத்" உதயமாயிற்று. இவர் தனக்கு அடங்கிய நாடுகளில் வரிவசூல் செய்ய தனி ஆட்களை நியமித்து வரிவசூல் செய்தார். கி.பி.1479ல் சமபனீர் மீது படையெடுத்து செல்லும்போது அகமதாபாத் அருகில் கொள்ளையர்கள் தொல்லை அதிகமானதால் மெஹ்மூதாபாத் (இன்றைய பெயர் மெஹம்தாவாத்) என்ற நகரை உருவாக்கினார். கி.பி.1482ல் சம்பனீர் ராஜ்ஜியம் இவரது படைகளை தாக்கி அளித்ததால் கோபமுற்று பரோடா மீது படையெடுத்து வந்தார். அப்போது சம்பனீர் ராவல் இவரிடம் தூதுவர்களை அனுப்பி சமாதானம் முயற்சிக்க "நமக்கிடையே வாட்கள் மட்டுமே பேசமுடியுமே தவிர வேறு எதுவும் பேசுவதற்கில்லை" என்று சமாதானத்தை மறுக்க சம்பனீர் ராவல் மாள்வாவின் கியாஸ்ஸூதீன் கில்ஜியிடம் உதவி கேட்டார். 20 மாத முற்றுகைக்கு பின்னர் சம்பனீரை கைப்பற்றினார். பின்னர் சம்பனீர் நகரத்தை சுற்றி சுவர் எழுப்பி அதை தனது தலைநகராக "முஹம்மதாபாத்" என்று பெயரிட்டார். பின்னர் அதற்கு அருகில் "ஹலோல்" என்ற நகரை நிர்மாணித்தார். அந்த நகரம் முழுவதும் கனி வகைகளாகும் மலர்கள் அடங்கிய தோட்டங்களாலும் நிறைந்து பூத்து குலுங்கியது. பின்னர் சம்பனீர் நகரில் ஜூம்மா மசூதி


மற்றும் கேவடா மசூதிகளை

கட்டினார். கி.பி.1494-95ல் கோவா மற்றும் தப்ஹோல் துறைமுகங்களில் பாமினி சுல்தானின் பொறுப்பாளராக இருந்த பகதூர் கான் கிலானியின் அட்டகாசங்கள் பொறுக்காமல் தப்ஹோல் நோக்கி 300 படகுகளில் படையெடுத்து வர பாமினி சுல்தான் பிரச்சினையை முடிக்க பகதூர் கானின் மீது தானே படையெடுத்து சிறைப்பிடித்து அவரின் தலையை வெட்டி மஹ்மூத் பேகடாவுக்கு அனுப்பி நிலையை சரி செய்து கொண்டார். கி.பி.1499-1500ல் மால்வாவின் அரசனான கியாஸ்ஸூதீன் கில்ஜியை அவரது மகனான நஸ்ஸூரூதீன் கொன்று ஆட்சியை பிடித்ததை கேள்விப்பட்டு அவரை எதிர்க்க படைகளை அனுப்ப அவர் இவரிடம் பணிவாக படையெடுத்து வரவேண்டாம் என்று சமாதான கோரிக்கை விடுக்க அதை ஏற்றுக்கொண்டார். காம்பே நகர் குஜராத்தின் வியாபார துறைமுகமாக விளங்கியது. போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு நுழைந்து தங்களது ஆதிக்கத்தை அரபிக்கடலில் நிலைநிறுத்த துவங்க கோழிக்கோடு அரசருடன் இணைந்து  டாமன் அருகில் போர்த்துகீசிய படைகளை இவரின் படைகள் தோற்கடித்தது. பின்னர் கி.பி.1509ல் டையூ அருகில் நடந்த போரில் போர்த்துகீசியர்கள் வெற்றி பெற்று இந்தியாவில் ஜரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கு ஆரம்பபுள்ளி இட்டனர். இவருக்கு மொத்தம் 4 மகன்கள் கலீல் கான் (இரண்டாம் முஸாஃபர் ஷா), முஹம்மது காலா, அபா கான் மற்றும் அஹ்மத் கான் ஆகியவர்கள். இதில் முஹம்மது காலா தந்தைக்கு முன்பே அவரின் ஆட்சிகாலத்திலையே மரணமடைந்து விட்டார். இரண்டாவது மகன் அபா கான் தவறான பழக்கங்களால் தந்தையால் விஷமிட்டு கொல்லப்பட்டார். மூன்றாவது மகனான அஹ்மத் கான் தந்தையின் காலத்திலையே அவரை கவிழ்க்க முயன்று தோல்வியுற்றார். மஹ்மூத் பேகடா கடைசி காலத்தில் தலைநகரிலையே இருந்து அங்கேயே கி.பி.1511 நவம்பர் 23ல் மறைந்தார். இவரது உடல் அகமதாபாத்தில் "சர்கேஜ் ரோஸா" என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டாம் முஸாஃபர் ஷா : (கி.பி.1475-1526)

ஆட்சி : (கி.பி.1511-1526)

இவர் மஹ்மூத் பேகடா மற்றும் அவரது இராஜபுத்ர மனைவியான ஹிராபாய்க்கு பிறந்த மூத்த மகன். கலீல் கான் என்ற இயற்பெயருடைய இவர் தந்தையின் மரணத்திற்கு பிறகு இரண்டாம் முஸாஃபர் ஷா என்ற பெயரில் அரியணை ஏறினார். கி.பி.1514ல் போர்த்துகீசிய தளபதி அபோன்சா என்பவர் இவரிடம் டையூ தீவில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி கோரினார். இவ பக்கமும் பரிசுப்பொருட்கள் பரிமாறப்பட்டாலும் எந்தவித ஒப்பந்தமும் நடக்கவில்லை. இவர் அபோன்ஸாவிற்கு காண்டாமிருகத்தை (அதற்கு ஜென்டா என்று பெயர்) பரிசளிக்க அவர் போர்த்துகீசிய மன்னருக்கு பரிசளித்தார். கி.பி.1515ல் அவர் அதை போப் ஜந்தாம் லியோவிற்கு பரிசாக கப்பலில் அனுப்ப அந்த கப்பல் கடலில் மூழ்கி போனது. பின்னர் போப் தனக்கு பரிசாக வந்த மிருகம் எவ்வாறு இருக்கும் என்ற ஆவலினால் அந்த மிருகத்தை ஓவியரிடம் படம் வரைந்து பார்த்துக்கொண்டார். ஏனெனில் அந்த நேரத்தில் ஜரோப்பாவில் காண்டாமிருகங்கள் கிடையாது.

ராணா ராய்மல் (ராணா சங்காவின் மருமகன்) இடரின் ராவ் பார்மலை தனது மாமனாரான சித்தூரின் ராணா சங்கா உதவியினால் அகற்றிவிட்டு இடரை கைப்பற்றினார். இதை கேள்விப்பட்ட  இரண்டாம் முஸாஃபர் ஷா அஹ்மத் நகரின் கவர்னரான நிஸாம் கானை ராவ் பார்மலுக்கு உதவியாக அனுப்ப அவர் ராணா ராயமல்லை விரட்டிவிட்டு ஆட்சியை பார்மலுக்கு ஆட்சியை மீட்டு கொடுத்தார். சுல்தான் இடர் நகரில் பார்வையிட்டு திரும்பியவுடன் அந்நகருக்கு பொறுப்பாக இருந்த நிஸாம் கானின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு பதில் "ஷாகிர்-உல்-முல்க்" என்பவரை நியமிக்க மலையிலிருந்து வந்த ராணா ராய்மல் திடீர் தாக்குதல் நடத்தி "ஷாகிர்-உல்-முல்க்" மற்றும் சில  வீரர்களை கொன்று குவிக்க இதை கேள்விபட்டு கோபமுற்ற சுல்தான் நிஸாம் கான்னை பிஜப்பூரை அழிக்க உத்தரவிட்டார். கி.பி.1517ல் மால்வாவின் இரண்டாம் மஹ்மூத் கில்ஜியை அவரின் அமைச்சர்களின் உதவியோடு இராஜபுத்திர சந்தேரி வம்சத்து அரசர் "மெதினி ராய்" அகற்ற முயல அவர் குஜராத் சுல்தானாக இவரின் உதவியை நாடினார். கி.பி.1518ல் இரண்டாம் முஸாஃபர் ஷா கோத்ரா வழியாக மால்வா நோக்கி விரைய மெதினிராய் ராணா சங்காவின் உதவியை நாடினார். ராணா சங்கா சாரங்க்பூரை அடையவும் அவரை எதிர்த்து போரிட்டு விரட்டி மண்டூ நகரை கைப்பற்றினார். பின்னர் மால்வாவை இரண்டாம் மஹ்மூத் கில்ஜி வசம் ஒப்படைத்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி குஜராத் திரும்பினார்.

கி.பி.1519ல் ராணா சங்கா மாள்வாவை கைப்பற்றி சுல்தான் மஹ்மூத் கில்ஜியை சிறைபிடித்தார். இதனால் இரண்டாம் முஸாஃபர் ஷா மண்டூவுக்கு படைகளை அனுப்ப ராணா சங்கா மஹ்மூத் கில்ஜியை விடுவித்தார். நிஸாம் கான் பின்னர் ராணா சங்காவை விரட்டியடித்தார். இந்த பிரச்சினைகளினால் நிஸாம் கான் அகமது நகரை விட்டு இடர் நகரிலையே தங்க ஆரம்பித்தார். பின்னர் ராணா சங்கா அகமது நகரை முற்றுகையிட்டு கொள்ளையடித்து நிஸாம் கான்னை அகமதாபாத்திற்கு விரட்டியடித்து விஷால் நகரையும் கொள்ளையிட்டார். பின்னர் கி.பி.1521ல் சோரத் கவர்னராக இவரின் மூத்த மகனான மாலிக்-இஷ்-ஹேக் நியமிக்கப்பட்டார். பின்னர் தனது ஆட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் எல்லைப்புறங்களில் போர்களில் ஈடுபட்டார். பின்னர் கி.பி.1526ல் இவர் மறைந்தவுடன் இவரது தந்தையின் கல்லறையான "சர்கேஜ் ரோஸா"வில் அடக்கம் செய்யப்பட்டார்.

சிக்கந்தர் ஷா :

ஆட்சி : (கி.பி‌.1526)

இரண்டாம் முஸாஃபர் ஷா மறைவுக்கு பின்னர் அவரது மகனான சிக்கந்தர் கான் "சிக்கந்தர் ஷா" என்ற பெயரில் பட்டத்திற்க்கு வந்தார். இவரது தாயாரான பீபீ ராணியினால் இமாத் உல்-முல்க் என்பவரை தனது ஆலோசகராக நியமித்தார். அகமதாபாத்திலிருந்து சம்பனீர் வந்து தங்கியிருந்தார். போலா விளையாடி விட்டு வந்து நல்ல உறக்கத்தில் இருந்தவரை இமாத் உல்-முல்க் கொலை செய்தார். 6 வாரங்களே பதவியில் இருந்த சிக்கந்தர் ஷாவுக்கு பிறகு பட்டத்திற்கு சிக்கந்தர் ஷாவின் இளைய சகோதரரான 6வது வயது சிறுவன் நஸீர் கான் "இரண்டாம் மஹ்மூத் ஷா" என்ற பெயரில் வந்தார். சிக்கந்தர் ஷாவுக்கு சம்பனீர் அருகிலுள்ள "ஹலோல்"வில் மஸோலியம் ஒன்றை பின்னால் வந்த பகதூர் ஷா கட்டினார். 



இரண்டாம் மஹ்மூத் ஷா : (கி.பி.1520-1527)

ஆட்சி : (கி.பி.1526)

சிக்கந்தர் ஷாவின் மாற்றாந்தாய் சகோதரரான 6‌ வயது சிறுவனான இவர் சிக்கந்தர் ஷாவின் படுகொலைக்கு பின்னர் இமாம் உல்-முல்க்கால் பொம்மை அரசராக நியமிக்கப்பட்டு பட்டத்திற்கு வந்தார். சிக்கந்தர் ஷா கொல்லப்பட்டது அறிந்து அவரின் சகோதரனான பகதூர் கான் அப்போது வட இந்தியாவில் இருந்தவர் படைகளுடன் குஜராத் நோக்கி விரைந்து வந்தார். தண்டூகாவின் தாஜ் கான் இவருக்கு உதவிபுரிய நிறைய ஆதரவாளர்கள் வழியில் சேர சம்பனீர் வந்தார். சம்பனீரை வென்று இமாம் உல்-முல்க்கை பிடித்து சிறையிலிட்டு கொன்றார். பின்னர் நஸீர் கானாகிய "இரண்டாம் மஹ்மூத் ஷா"வை சிறையிலிட்டு விஷமிட்டு கொன்றார். பின்னர் பகதூர் கான் "பகதூர் ஷா" என்ற பெயரில் பட்டத்திற்கு வந்தார்.

பகதூர் ஷா : (கி.பி.1506-1537)

ஆட்சி : (கி.பி.1527-1537)

இரண்டாம் முஸாஃபர் ஷாவின் மகனும் சிக்கந்தர் ஷாவின் சகோதரனுமான பகதூர் கான்  சிக்கந்தர் ஷாவின் மறைவுக்கு காரணமாக இருந்த  இமாத்-உல்-முல்க் மற்றும் மாற்றாந்தாயின் சகோதரனான சிறுவன் "இரண்டாம் ம‌ஹ்மூத் ஷா"வையும் கொன்று பகதூர் ஷா என்ற பெயரில் அரியணை ஏறினார். இவரது சகோதரர் சிக்கந்தர் ஷா ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்று பயந்து குஜராத்தை விட்டு சித்தூரில் அடைக்கலம் புகுந்தார். பின்னர் இப்ராஹிம் லோடியிடமும் அடைக்கலம் புகுந்தார். இந்த நேரத்தில் முதலாம் பானிபட் போர் நடந்தாலும் இவர் அதில் பங்கு பெறவில்லை. பின்னர் சிக்கந்தர் ஷா தனது அடிமையான இமாத்-உல்-முல்க் குஷ் காடம்மினால் கொல்லப்பட்டு மாற்றாந்தாய் சகோதரனான நஸீர் கானை (இரண்டாம் மஹ்மூத் ஷா) பட்டத்திற்கு கொண்டு வந்தவுடன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சம்பனீர் வந்து ஆட்சியை கைப்பற்றினார். இவரது இன்னொரு சகோதரரான லத்தீப் கான் ராணா பீம் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற முனைந்து போரில் படுகாயமுற்று மரணமடைந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மொகலாயர்களான பாபரும் அதன்பின்னர் அவர் மகன் ஹூமாயூனும் போர்த்துகீசியர்களாலும் பல தொல்லைகள் ஏற்பட்டது. பின்னர் இடர் ராஜ்ஜியத்திலும் கி.பி.1528ல் தெளலாபாத்திலும் ஆட்சியை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கி.பி.1529ல் அகமது நகர் மற்றும் பேரர் சுல்தான்களுக்குள் ஏற்பட்ட போட்டியில் இவர் இருவருக்கும் நடுவாக இருந்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தார். கி.பி.1526-30களில் துருக்கியர்களுக்கு டையூவில் வாணிகம் செய்ய அனுமதியளித்தார். கி.பி.1531ல் மாள்வாவின் சுல்தான் இரண்டாம் மஹ்மூத் ஷாவுக்கு எதிராக மண்டூவை கைப்பற்றியவும் மால்வா இவரின் ஆளுமைக்கு கீழ் வந்தது.

கி.பி.1532ல் பாபரின் மகள் வழிப் பேரன் முஹம்மத் ஸமான் மிர்ஸாவுக்கு இவர் அடைக்கலம் கொடுக்கவும் ஹூமாயூனுக்கும் இவருக்கும் உரசல் ஏற்பட்டது. இவரின் பொறுப்பற்ற பதிலினால் கோபமுற்ற ஹூமாயூன் இவர் மீது படையெடுத்து வர அந்த நேரத்தில் இவர் சித்தூரின் மீதான படையெடுப்பில் இருந்தார். கி.பி.1535 மார்ச்ல் சித்தூர் இவரிடம் தோல்வியுற்றாலும் மண்டூஸர் என்னுமிடத்தில் ஹூமாயூன் படைகளால் சுற்றி வளைக்குப்பட்டு நடந்த போரில் தோல்வியுற்று மொகலாயரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் ஷெர்ஷா சூரி பீஹார் மற்றும் ஜான்ப்பூரில் கிளர்ச்சிகள் செய்யவே அவரை அடக்க ஹீமாயூன் புறப்பட்டார். தனது சகோதரனான ஹிண்டல் மிர்ஸா (பாபரின் கடைசி மகன் - பாபரின் முதல் இந்திய விஜயத்தின் போது பிறந்தவர் என்பதால் இவருக்கு ஹிண்டல் என்று பெயராயிற்று) அகமதாபாத்திற்கும் காசிக் பெக் பரூச்சிற்கும் பதானுக்கு நாஸிர் மிர்ஸாவையும் பொறுப்பாக ஒப்படைத்து விட்டு புறப்பட்டவுடன் திரும்பவும் மொகலாயர்களுக்கு எதிராக கிளர்ச்சிகள் பரவி இன்றைய மஹேம்தாவாத் அருகில் நடந்த போரில் மொகலாயர்களை தோற்கடித்து விரட்டி மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

கி.பி.1534 இறுதியில் குஜராத் மொகலாயர்களிடம் வீழும் சமயத்தில் போர்த்துகீசியர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன்படி அவர்கள் டையூ தீவில் தொழிற்சாலை அமைக்க அனுமதி கொடுத்தார். ஆனால் போர்த்துகீசியர்கள் அதற்கு பதில் கோட்டையை கட்டினார்கள். கி.பி.1536ல் மீண்டும் ஆட்சியை பிடித்தவுடன் போர்த்துகீசியர்களை சற்று அடக்கி வைக்க முடிவு செய்து டையூவை கைப்பற்றினார். 6000  வீரர்கள் அடங்கிய போர்த்துகீசிய படை பம்பாயிலிருந்து புறப்பட்டு டையூவை அடைந்தது. இருதரப்புக்கும் நடந்த மோதலில் பகதூர் ஷாவை பிடித்து கொன்று கடலில் வீசினார்கள். சில தகவல்கள் இருவரும் ஒப்பந்தம் செய்து கொள்ள ஒரு கப்பலில் இருந்து மறு கப்பலுக்கு செல்லும்போது வீசிய புயற்காற்றில் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார் என்றும் கூறுகிறது. இந்த நிகழ்வு நடக்கும்போது அவருக்கு 31 வயதே ஆகியிருந்தது. இதற்கு பின்னர் போர்த்துக்கீசியர்கள் டையூ நகரில் கி.பி.1538 முதல் நிலைத்து இருந்து கி.பி.1961 ல் இந்தியாவில் இருந்து விடைபெற்றனர்.

முதலாம் மீரான் முஹம்மத் ஷா :

ஆட்சி : (கி.பி.1537)

பகதூர் ஷாவுக்கு வாரிசில்லாமல் மறைந்ததால் "முஹம்மத் ஸமான் மிர்ஸா( பாபரின் மகள் வயிற்று பேரன்) என்ற மொகலாய இளவரசர் அடுத்த பட்டத்திற்கு களத்தில் குதிக்க பகதூர் ஷாவின் தாய் அவரை தனது மகனாக தத்தெடுத்தார். ஆனால் அரசவை பிரபுக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் கந்தேஷ்ஷை ஆண்ட பகதூர் ஷாவின் உறவினரான "மீரான் முஹம்மத் ஷா"வை அடுத்த அரசராக அறிவித்தனர். அவர் கந்தேஷ்ஷிலிருந்து குஜராத் வரும் வழியிலையே மரணமடைந்தார். இதனால் பிரபுக்கள் கடைசியில் பகதூர் ஷாவின் சகோதரனான லத்தீப் கானின் மகனான மஹ்மூத் கான்னை "மூன்றாம் மஹ்மூத் ஷா" என்ற பெயரில் அரியணையில் அமர்த்தினார்கள்.

மூன்றாம் முஹ்மூத் ஷா :

ஆட்சி : (கி.பி.1538-1554)

பகதூர் ஷா மறைந்தவுடன் ப்ரூக்கி சுல்தான்கள் வம்சத்தில் கந்தேஷ் அரசை ஆண்ட முதலாம் மீரான் முஹம்மத் ஷாவை அடுத்த அரசராக பிரபுக்கள் அறிவிக்க அவர் மத்திய பிரதேசத்திலுள்ள கந்தேஷ் ராஜ்ஜியத்திலிருந்து புறப்பட்டு குஜராத் வரும் வழியிலையே மரணமடைய வேறு வழியின்றி பகதூர் ஷாவின் சகோதரனான லத்தீப் கானின் 11 வயது மகனான மூன்றாம் மஹ்மூத் ஷாவை அடுத்த அரசராக பிரபுக்கள் அறிவித்தனர்.  இவர் அரசராக பதவியேற்றாலும் தார்யா கான் மற்றும் இமாத் உல்-முல்க் ஆகியோர் இவருக்கு பின்னால் இருந்து அரசை நடத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் யார் பெரியவர் என்ற பிரச்சினையில் இருவரும் மோத தார்யா கான் வெற்றி பெற்று இமாத்-உல்-முல்ககை விரட்டினார். கி.பி.1554ல் இவரது பணியாளான புர்ஹான் இவருக்கு மயக்கமருந்து கொடுத்து தூக்கத்திலையே இவரை கொலை செய்தான்.

முன்றாம் அஹ்மத் ஷா :

ஆட்சி : (கி.பி.1554-1561)

மூன்றாம் முஹம்மத் ஷா படுகொலைக்கு பின்னர் கொலையாளியான புர்ஹான் கொல்லப்பட்ட பின்பு அரசவை பிரபுக்கள் ஒன்று கூடி வம்சத்தில் வழித்தோன்றலான அஹ்மத் கானை மூன்றாம் அஹ்மத் ஷா என்ற பெயரில் அரியணை ஏற்றினார்கள். இவர் வயதில் இளையவர் என்பதால் பொம்மை அரசராகவே வைத்து தங்களுக்குள் நாட்டை பிரித்து வைத்துக்கொண்டு தங்களுக்குள் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு இவரை பெயரளவுக்கு அரசராக நடத்தினார்கள். இந்நிலையில் கந்தேஷ்ஷை ஆண்ட முபாரக் ஷா குஜராத் அரசை கைப்பற்ற வர பிரபுக்களின் படை அரசரின் தலைமையில் பரூச் நகருக்கு அருகில் போரிட்டு விரட்டியது. கி.பி.1561ல் வாஜி-உல்-முல்க் என்பவரின் மாளிகையில் தங்கியிருந்த சமயத்தில் வாஜி-உல்-முல்க் மற்றும் ரஸி-உல்-முல்க் என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு சபர்மதி ஆற்றங்கரையில் வீசப்பட்டதுடன் இவரின் 8ஆண்டு கால ஆட்சி முடிந்தது. ஆனால் கள்வர்கள் இந்த செயலை செய்ததாக செய்திகள் பரப்பப்பட்டது. 

மூன்றாம் முஸாஃபர் ஷா : (கி.பி.1554-1592)

ஆட்சி : (கி.பி.1561-1573) & (கி.பி.1584)

முஸாஃபரீத் வம்சத்தின் கடைசி அரசர் இவரே. இவர் மூன்றாம் மஹ்மூத் ஷாவின் மரணத்திற்கு பின்னர் பிறந்த மகன். மூன்றாம் அஹ்மத் ஷா மறைவுக்கு பின்னர் பிரபுக்கள் கூடி 7வது சிறுவனான இவரை அரசராக தேர்ந்தெடுத்தனர். அதிகாரங்கள் எல்லாம் பிரபுக்களிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருந்தது. இவரும் பெயரளவுக்கு மன்னராக இருந்தார். கி.பி.1573ல் மொகலாய பேரரசர் அக்பர் குஜராத் மீது படையெடுத்து வந்து அதை கைப்பற்றினார். இவரையும் கைது செய்து ஆக்ரா சிறையில் அடைத்தார். கிட்டத்தட்ட ஆக்ரா சிறையில் 10 வருடங்களுக்கு மேலாக அடைபட்டு கிடந்த இவர் சிறையிலிருந்து தப்பி வந்து மீண்டும் கி.பி.1583 இறுதியில் பிரபுக்களின் உதவியோடு ஆட்சியில் அமர அக்பரின் தளபதியான அப்துல் ரஹூம் கானால் மீண்டும் கி.பி.1584 ஜனவரியில் தோற்கடிக்கப்பட இவர் நவாநகர் (இன்றைய பெயர் ஜாம்நகர்) ராஜ்ஜியத்தில் அடைக்கலம் புகுந்தார். கி.பி.1591ல் இவரை பாதுகாக்கும் கத்தியவார் படைகளுக்கும் மொகலாயப் படைகளுக்கும் பூச்சார் மோரியில் (த்ரோல்) போர் நடந்தது. கத்தியவார் படைகளில் நவாநகர் இராஜ்யம், ஜூனாகத் இராஜ்யம், குண்ட்லா, கட்ச் இராஜ்யம், ஓஹ்ஹா இராஜ்யம் (துவாரகா) மற்றும் முலி இர்ஜ்யம் இணைந்து போரிட்டும் அக்பரின் படைகளே வென்றது. இந்த போர் செளராஷ்டிராவின் பானிபட் போர் என்றழைக்கப்படுகிறது. பின்னர் கட்ச் அரசர் இவரை மொகலாயர்களிடம் கி.பி.1592ல் சரணடைய செய்ததால் இவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

உதவிய நூல்கள் :

மொகலாயர்கள் - முகில்

எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு