64) செஞ்சி நாயகக்ர்களுக்கு பிறகு செஞ்சி அரசுகள்
செஞ்சி நாயக்கர்களுக்கு பிறகு செஞ்சி : (கி.பி.1649 - 1714)
செஞ்சியை பற்றி சொல்லிட்டு அதன் கதாநாயகனான ராஜா தேசிங்கை (தேஜ் சிங்) பற்றி சொல்லாமல் போக முடியாது. செஞ்சி கி.பி.1649ல் நாயக்கர்களின் கட்டுப்பாட்டிலிருந்து பிஜப்பூர் சுல்தான்களின் கட்டுபாட்டில் சென்றது. பின்னர் அவர்களிடமிருந்து கி.பி.1677ல் மராத்தியர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருநது 8 ஆண்டுகள் முற்றுகைக்கு பின்னர் கி.பி.1698ல் மொகலாயர்கள் கைப்பற்றினர். மொகலாயர்களிடம் குதிரைப்படை தலைவனாக இருந்த "பொந்தில்" இராஜபுத்ரரான ஸ்வரூப் சிங்கை செஞ்சியின் ஜாகிர்தாராக ஓளரங்கசீப் நியமித்தார். அவருக்கு பின்னர் அவரின் மகனான தேஜ் சிங் (இவரே ராஜா தேசிங்கு) ஆட்சியை ஏற்க இவரை எதிர்த்து திறைப்பணம் செலுத்தாததால் ஆற்காடு நவாப் (கர்நாடகாவில் இருந்து ஆட்சிபுரிந்தவர்) சாதத் உல்லாகான் படையெடுத்து இவரை வீழ்த்தினார். போரில் இவரது வீரம் இன்றும் நாட்டுப்புற கதைப்பாடல்களாக வலம் வருகிறது.
பிஜப்பூர் ஆட்சி : (கி.பி.1649-1677)
கிபி 1649 டிசம்பர் மாதத்தில் கடைசியாக செஞ்சியை ஆண்டுவந்த நாயக்க அரசரை திறைப்பணம் செலுத்தாததால் பிஜப்பூர் படைத்தலைவனால் வீழ்த்தப்பட்டார். இதன்பிறகு அடுத்த 28 ஆண்டுகள் செஞ்சி பிஜப்பூர் சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. கிபி 1677ல் மராத்திய படைத்தலைவனால் செஞ்சி கைப்பற்றப்பட்டது.
மராத்தியர்கள் ஆட்சி : (கி.பி.1677-1698)
தெற்கே தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த படையெடுத்து வந்த சிவாஜியின் மராத்திய வீரர்கள் (சிவாஜியின் மரணத்திற்கு முன்னர்) பிஜப்பூர் சுல்தானின் செஞ்சி கவர்னரான நாசர் முகம்மதுவை மராத்திய படைத்தலைவன் சந்தித்து 50,000 பெறுமானமுள்ள ஜாகீர்களை கொடுத்து செஞ்சியை விட்டுச்செல்லுமாறு கூற அவரும் பணத்தை பெற்றுக்கொண்டு செஞ்சி ஆட்சியை மராத்தியர்களிடம் விட்டு செல்ல செஞ்சி மராத்தியர்களின் கைவசமாயிற்று. சிவாஜி செஞ்சியில் ஆட்சி பொறுப்பை தன் மகன் சாம்பாஜிடம் கொடுத்தார். கி.பி. 1690ல் ஓளரங்கசீப்பின் மொகலாயப் படை தளபதி ஜூல்பிர்கான் தலைமையில் செஞ்சியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போரில் மதுரையை ஆண்ட நாயக்கர் ராணி மங்கம்மாள் மொகலாயர்களுக்கு ஆதரவாக இருந்தார். 8 ஆண்டுகள் மொகலாயப்படைகள் முற்றுகையிட பின்னர் முற்றுகையை தாக்குபிடிக்க முடியாமல் கி.பி. 1698ல் மராட்டியப்படைகள் செஞ்சியை விட்டு விலகிச்செல்ல செஞ்சி மொகலாயர் வசமாயிற்று.
மொகலாயர்கள் ஆட்சி : (கி.பி.1698-1714)
கி.பி. 1698 செஞ்சியை மொகலாய தளபதி ஜூல்பிர்கான் பிடித்த நிகழ்வில் மிகுந்த வீரம் காட்டியவர் பொந்தில் வம்சத்து ராஜபுத்திரரான பண்டல்கண்ட்டின் தலைவரான சொரூப்சிங். இவர் மொகலாயப் படைகளின் குதிரைப்படைகளின் படைத்தலைவராக இருந்தார். இவரது வீரம் போரில் வெற்றியின் பங்கு அதிகமாக இருந்தது. வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவான இவரையே கி.பி. 1698ல் செஞ்சியின் ஜாகிர்தாராக்கி அவரிடம் ஓளரங்கசீப் ஆட்சியை ஒப்படைத்தார்.
அவுரங்கசீப் மறைவிற்குப் பின்னர் டெல்லியை ஷா ஆலம் (அஸம் ஷா) ஆண்டார். அவர் வாங்கிய புதிய முரட்டு குதிரையை யாரும் அடக்க முடியாததால் குதிரை நிபுணரான சொரூப் சிங்கை டெல்லிக்கு வரவழைத்தார். அவருடன் அவரது மகனான தேஜ் சிங்கும்
சென்றிருந்தார். சொரூப் சிங்காலும் அந்த குதிரையை அடக்க முடியவில்லை. தேசிங்கு ராஜா தனக்கு குதிரையை அடக்க ஒரு வாய்ப்பு அளிக்க கோரி சுல்தானிடம் கேட்டார். சுல்தானும் அப்படியே நடக்கட்டும் என்று கூற அனைவரும் வியக்கும் வண்ணம் பரிகாரி என்ற பெயருடைய அக்குதிரையை அடக்கி சவாரி செய்து காட்டினார். தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அந்த குதிரையை அவருக்கே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். அப்படி தேஜ் சிங் மணம்புரிந்த மனைவியின் பெயர்தான் ராணி பாய். (இவரின் பெயரால் உருவான ஊர்தான் தற்போதைய ராணிப்பேட்டை)
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். மிகப்பழமை வாய்ந்த சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயத்தின் தெய்வமான அரங்கன் தான் ராஜா தேசிங்கு வழிபட்ட தெய்வம். ராஜா தேசிங்கு எந்த வேலையை செய்தாலும் அந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். செஞ்சிகோட்டை அரண்மனையிலிருந்து அந்த கோயிலுக்கு செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். இதில் ராணியும் அவர் தோழிகளும் பாதுகாப்பாக செல்ல சுரங்கப்பாதை பயன்பட்டது. எந்த போருக்கு சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் செல்வாராம்.
இவரது தந்தை சொரூப் சிங் மறைந்தவுடன் இவர் அடுத்த அரசராக பட்டமேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் சொரூப் சிங் 70 லட்சம் திறைப்பணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால் டெல்லி பாதுஷாவின் தளபதியான ஆற்காடு நவாப் இவர் பதவியேற்பதை எதிர்த்தார். உரிமையை விட்டுக்கொடுக்காமல் ராஜா தேஜ் சிங் பதவியேற்றார். இதற்கு அவரது நண்பரான முகமது கான் ஆதரவாக இருந்தார். கப்பத்தொகையை கேட்டபோது முடியாது என்று கூறியதால் நவாப் போர் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ராஜா தேஜ் சிங்கின் தளபதியான முகமது கான் தனது திருமணத்திற்காக வழுதாவூர் சென்றிருந்தார். இந்த நேரத்தில் செஞ்சியை கைப்பற்ற நல்ல வாய்ப்பு என்று நவாப் படையெடுக்க நண்பனுக்கு உதவ தன் திருமணத்தை நிறுத்தி விட்டு வந்து தளபதியாக போரிட்டு வென்று திரும்பும்போது மறைந்திருந்த ஒருவனால் குறுவாளால் குத்தி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டு ராஜா தேஜ் சிங் ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த அரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது இன்று போருக்குச் செல்ல வேண்டாம் நாளை செல் என்று கூறினாராம். தேசிங்கு எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டது முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் இன்று சொல்லட்டுமா என்று கேட்க அதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் இந்த கோயிலில் அரங்கநாதர் முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போர்களத்தில் பீரங்கி குண்டுகள் மழையாய் பொழிய ராஜா தேஜ் சிங்கின் குதிரையாக நீலவேணி குதிரை கால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது. சுபாங்கி துரை என்பவன் மறைந்திருந்து சுட்டதில் ராஜாதேசிங்கு வீரமரணம் அடைந்தார். இவர் மரணம் அடைந்த நாள் கி.பி.1714 அக்டோபர் 3ம் தேதி. கணவனின் வீரமரணம் அறிந்த அவர் மனைவி ராணி பாய்யும் உடன்கட்டை ஏறி உயிரை விட்டாள். வீர மரணம் அடைந்த ராஜா தேஜ் சிங்கின் உடலை ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான் செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் நீலாம்பூண்டி கிராமத்தில் அடக்கம் செய்தார். தேசிங்கு ராஜனின் சமாதியும் அவனது படைத் தலைவன் முகமது கானின் சமாதியும் இருக்கின்ற இடத்தில் கூடவே அவனது உயிருக்குயிராக நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் உள்ளது. உடன்கட்டை ஏறி உயிர்விட்ட ராணி பாய்யின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட ஊருக்கு "ராணிபேட்" என்று பெயரிடப்பட்டு இன்று அது ராணிப்பேட்டை என்று அழைக்கப்படும் தொழில் நகரமாக உள்ளது.

Comments
Post a Comment