65) மதுரை நாயக்கர்கள் அரசு

மதுரை நாயக்கர்கள் : (கி.பி.1529-1736)

கி.பி.1378ல் மதுரை சுல்தான்களின் ஆட்சியை விஜயநகர புக்கரின் மகனான குமார கம்பணன் வீழ்த்திய பின்னர் நாயக்கர்கள் அரச பிரதிநிதிகளாக மட்டுமே இருந்தனர். அந்த நேரத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் இடிக்கப்பட்டு மீனாட்சி அம்மனின் சிலை திருவாங்கூரில் உள்ள சிறு மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருந்தது. சுல்தான்களை வீழ்த்திய பின்னர் குமார கம்பணரின் மனைவியுமான "மதுரா விஜயம்" நூலை எழுதியவருமான அரசி கங்கம்மா தேவி இடிக்கப்பட்ட மீனாட்சியம்மன் கோயிலை புதுப்பிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் தான் தெலுங்கை பூர்விகமாக கொண்ட நாயக்கர்கள் இன மக்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நிரந்தரமாக வந்து தங்கலானார்கள். காலச்சக்கரம் மெதுவாக சுழன்று மதுரையின் ஆட்சிமொழியாக தமிழுடன் தெலுங்கும் இரண்டற கலந்து ஆட்சிமொழியாக வழக்கத்தில் வந்தது. இந்த நேரத்தில் கி.பி‌.1529ல் மதுரையை வீரசேகரன் என்ற சோழ மன்னன் படையெடுத்து கைப்பற்றி சந்திரசேகர பாண்டியனை அரியணையிலிருந்து அகற்றினார். இதனால் பாண்டிய நாட்டு ஆட்சியாளரான சந்திரசேகர பாண்டியன் கிருஷ்ண தேவராயரை உதவிக்கு அழைத்தார். பாண்டிய நாடு விஜயநகரத்துக்கு உட்பட்ட அரசாக இருந்ததால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு விஜயநகரத்து பேரரசர் கிருஷ்ண தேவராயர் தனது தளபதியான நாகம்ம நாயக்கரை அனுப்ப அவர் சோழ மன்னர் வீரசேகரனை வென்று  அடக்கி அவரே மதுரையை ஆட்சி புரிய தலைபட்டார். இதனால் கோபமடைந்த கிருஷ்ண தேவராயர் படைகளை அனுப்ப அந்த படைகளும் நாகம்ம நாயக்கருடன் சேர்ந்து கொண்டது. இதனால் கோபமடைந்த கிருஷ்ண தேவராயர் யார் நாகம்ம நாயக்கரை அடக்கி என் முன்னே நிறுத்துவார் என்று வினவ அவரின் படைதளபதிகள் எவரும் பதிலேயில்லை. இந்த நேரத்தில் நாகம்ம நாயக்கரின் மகனான விசுவநாத நாயக்கர் தான் தனது தந்தையை அடக்கி தங்கள் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாக கூறி படையெடுத்து சென்றார். நாகம்ம நாயக்கர் தன் மகனை எதிர்த்து போரிடுவதா என்று குழப்பமடைந்து விசுவநாத நாயக்கரிடம் சரணடைய தந்தையை கிருஷ்ண தேவராயர் முன்னே கொண்டு நிறுத்தினார். அவரின் கடமையுணர்ச்சி விசுவாசத்தை மெச்சிய கிருஷ்ண தேவராயர் அவரை விஜயநகரத்துக்கு கட்டுப்பட்ட மதுரை நாயக்கர்களின் முதல் மன்னனாக கி.பி.1529ல் நியமித்தார். அன்று முதல் மதுரையில் நிலைபெற்றிருந்த நாயக்கர்கள் ஆட்சி கி.பி.1736ல் வாரிசுரிமை பிரச்சினையில் அரசி மீனாட்சிக்கு உதவிபுரிவதாக கூறி கர்நாடக நவாப்பின் மருமகனான சந்தா சாகிப் வந்து அரசி மீனாட்சியை வஞ்சகமாக சிறைப்பிடித்து மதுரையில் 207 ஆண்டுகள் நிலைபெற்ற நாயக்கர்கள் வம்ச ஆட்சியை முடித்து வைத்தார்.

விசுவநாத நாயக்கர் (கி.பி.1529-1564) :


இவர் கிருஷ்ண தேவராயரின் தளபதியான நாகம்ம நாயக்கரின் மகன். அவர் குழந்தைபேறு இல்லாததால் காசிக்கு சென்று விசுவநாத பெருமானை வணங்கி அதன்பின் பிறந்த மகனாததால் இவருக்கு விசுவநாதன் என்றே பெயரிட்டார். இவர் கி.பி.1495ல் பிறந்தார். இவர் தனது 16 வயதில் கிருஷ்ண தேவராயருக்கு அடைப்பைகாரராக (வெற்றிலை மடித்து கொடுக்கும் ஊழியராக) பணியாற்றியதால் இவர் மேல் கிருஷ்ண தேவராயருக்கு மிகுந்த பிரியமுண்டு. இவர் பல மொழிகளையும் கணிதத்திலும் போர் பயிற்சிகளிலும் திறமை பெற்றவர். இவரின் தந்தை கி.பி.1529ல் மதுரை கிளர்ச்சிகளை அடக்கி தனியாட்சி நடத்த ஆரம்பித்தபோது கிருஷ்ண தேவராயரின் சார்ப்பாக தந்தை என்றும் பாராமல் விசுவாசமாக அவரை கைது செய்து மன்னர் முன்னே நிறுத்தினார். நாகம்ம நாயக்கரை மன்னித்து விசுவநாத நாயக்கரையை மதுரையின் மன்னனாக கிருஷ்ண தேவராயர் முடிசூட்டினார். மதுரையின் மன்னனாக இருந்தாலும் விஜயநகரத்துக்கு கட்டுப்பட்ட ஆளுநராக தான் இருந்தார்.

விசுவநாத நாயக்கர் மதுரையின் மன்னனாக வரும்போது அவருடன் அரியநாதர் என்பவரும் உடன் வந்தார். இவர் அரசில் தளவாய்யாக பதவியேற்றார். தளவாய் என்பது படைத்தலைமை பதவியும் அமைச்சர் பதவியும் சேர்ந்ததாகும். கி.பி. 1530 கிருஷ்ணதேவராயர் இறந்ததும் மதுரையை சீர்படுத்த வேண்டும் என்று எண்ணி வல்லம் என்னும் ஊரை தஞ்சை நாட்டுடன் இணைந்தார். இன்று நெல்லைக்கு அருகிலுள்ள "கிருஷ்ணாபுரம்" ஊரை நிர்மாணித்தவர் இந்த அரியநாத முதலி தான். தஞ்சைக்கு சொந்தமாக இருந்த திருச்சிராப்பள்ளியை மதுரை நாட்டுடன் இணைக்க செய்தார். இவர் திருச்சிராப்பள்ளியில் தெப்ப குளத்தை வெட்டினார். தாயுமானவர் கோயிலை பழுது பார்த்தார். காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் கள்ளர்களின் உறைவிடமாக இருந்த காடுகளை அழித்து சாலைகளை அமைத்தார். இதனால் கள்ளர்கள் தொல்லை ஒழிந்தது. திருவரங்கம் கோயிலை சீர்படுத்தி அதைச் சுற்றி தெருக்களை அமைத்து வீடுகளைக் கட்டி அங்கு மக்களை குடியேற்றினார்.  இதனால் மதுரையின் வட பகுதியான திருச்சியில் ஒழுங்கும் அமைதியும் நிலவுகிறது. பின்னர் தென்பாண்டி நாட்டிலும் அமைதியை கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்தார். தாமிரபரணியின் இரு கரைகளிலும் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டது. இதனால் கள்ளர்களின் தொல்லை ஒழிந்தது. திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலும் பழுது பார்க்கப்பட்டது. நகரம் விரிவாக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டன. பயிர்த்தொழில் இதனால் வளர்ச்சியுற்றது. 

தற்போதுள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல்,சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களும் கேரளாவிலுள்ள திருவாங்கூரில் ஒரு பகுதியும் விஸ்வநாதர் ஆட்சிக்கு உட்பட்ட இருந்த மதுரை நாடாகும். இந்த பரந்துபட்ட நாட்டில் ஒரு செம்மையான ஆட்சி முறையை நிறுவ 72 பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த பகுதிக்கு தலைவராக பாளையக்காரர் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த 72 பாளையக்காரர்களில் சிலர் கன்னடர்கள் சிலர் தெலுங்கர்கள் மீதி உள்ளவர்களில் தமிழர்கள். பாளையக்காரர்களில் பாண்டிய பரம்பரை சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாக இருந்தவர்களும் இருந்தார்கள். இவர்களது வேலை தங்களது பாளையங்களில் கிடைக்கும் வருவாயில் 1/3 பகுதியை மதுரை நாயக்கருக்கு கொடுக்க வேண்டும். மீதி 1/3 பகுதியை படைகளுக்கு செலவிட வேண்டும். மீதி 1/3 பகுதியை தங்களது சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் தங்கள் பகுதியை பாதுகாக்க வேண்டும். போர்க்காலங்களில் மதுரை நாயக்கர்களுக்கு படை துணை புரிய வேண்டும். தங்கள் பகுதியில் ஏற்படக்கூடிய வழக்குகளை எல்லாம் விசாரித்து நீதியும் வழங்க வேண்டும் இதுவே பாளையக்காரர்களின் கடமைகளாக வலியுறுத்தப்பட்டது. இந்த ஓழங்குமுறையானது குழப்பத்தில் இருந்த பாண்டிய நாட்டை நல்ல முறைக்கு கொண்டு வந்தது. 

கி.பி.1544ல் திருவாங்கூர் சமஸ்தானம் விஜயநகரத்துக்கு கப்பம் கட்ட மறுத்ததால் அலிய ராம ராயர் திருவாங்கூர் மீது படையெடுத்து வந்ததற்கு இவர் உதவி செய்தார். போரின் முடிவில் திருவாங்கூர் பணிந்து கப்பம் கட்ட இசைந்தது.

முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்  (கி.பி.1563-1573) :


விசுவநாத நாயக்கருக்கு பின் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகன். தந்தையின் தளவாய்யாக இருந்த அரியநாத முதலியே இவருக்கும் தளவாய்யாக இருந்தார். இவர் துணிச்சலான ஆட்சியாளராக இருந்தார். இவரது ஆட்சியில் பாளையர்களின் தலைவனான தும்பச்சி நாயக்கரை அடக்கி சிறைபிடித்தார். தும்பச்சி நாயக்கரின் நண்பரான கண்டி மன்னர் மதுரைக்கு கப்பம் கட்ட மறுத்ததால் கண்டி மீது படையெடுத்தார். போரில் கண்டி மன்னர் கொல்லப்பட்டார். கண்டி மன்னரின் மனைவி மற்றும் குழந்தைகளை அநுராதபுரத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். தனது மருமகனான விஜய கோபால நாயுடுவை வைஸ்ராய்யாக நியமித்து வரிவசூல் செய்ய ஏற்பாடு செய்தார். இவரின் ஆட்சியில் தான் சுல்தான்களால் சேதப்பட்டிருந்த  மதுரை மீனாட்சியம்மன் கோவில் புதுப்பித்தல் கி.பி.1569ல் முடிந்தது.


இவர் ஆட்சியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பரமக்குடி பாளையக்காரரை அடக்கினார்.

வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595) :

இவர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் மகன். இவர் ஆட்சிக்காலம் அமைதியாகவே இருந்தது. சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் இவர் கட்டினார்.  ஆயிரங்கால் மண்டபத்தின் முன் புறத்தில் தளவாய் அரியநாத முதலியின் சிலை வைக்கப்பட்டது.

இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595-1602) :
முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1602-1609) :

இவர் முந்தைய அரசர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன். இவரது ஆட்சியில் தான் ராமநாதபுரத்தில் சேதுபதிகளால் மறவர் நாடு ஏற்படுத்தப்பட்டது. மறவர் நாட்டிற்கு இவர் அங்கீகாரம் கொடுத்திருந்தார். அந்த நாட்டில் குற்றங்களை தடுப்பதற்காகவும் ராமநாதபுரத்திற்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதையும் சேதுபதிகளுக்கு கட்டளையாக வழங்கப்பட்டிருந்தது. இதுவே ராமநாதபுரம் அரசின் தோற்றமாக இருந்தது.

முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் : (கி.பி.1609-1623) :

இவர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன். இவரின் காலத்தில் தலைநகர் மதுரையில் பாதுகாப்பு அரண்கள் இல்லை என்ற காரணத்தாலும் மதுரை தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதாலும் கி.பி.1616ல் தலைநகர் மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. இவர் அந்த நேரத்தில் விஜயநகரம் வலுவிழந்து இருந்ததால் திறைப்பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்தார்.

திருமலை நாயக்கர் (கி.பி.1623-1659) :


இவர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகன். முதலாம் முத்து வீரப்ப நாயக்கரின் இளைய சகோதரர்‌. இவர் தனது மூத்த சகோதரரான முத்து வீரப்பநாயக்கருக்கு வாரிசில்லாமல் போனதால் அவருக்கு பின் பட்டத்திற்கு தனது 39 வயதில் வந்தார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பரம பக்தர். ஆண்டாளுக்கு பூஜை முடிந்தவுடன் தான் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு ஒவ்வொரு 5 கி.மீ தூரத்திலும் மணி கட்டி கோயில் பூஜை முடிந்தவுடன் மணியை அடித்து ஒவ்வொரு 5 கி.மீ தூரத்தில் உள்ளவர்களும் அந்த சத்தம் கேட்டு தொடர்ச்சியாக மணியடித்து அந்த ஒலி கேட்டவுடன் தான் காலை உணவை உண்ணும் வழக்கத்தையே கொண்டிருந்தார்.

கி.பி. 1623ல் இவர் பதவியேற்கும் போது திருச்சிராப்பள்ளி தான் தலைநகராக இருந்தது. கி.பி.1634ல் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஒரு நிகழ்வை காரணமாக சொல்லுகிறார்கள். திருமலை நாயக்கருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மதுரை மீனாட்சியம்மன் திருவிழாவுக்கு உடல்நலத்தை பொருட்படுத்தாமல் வரும் வழியில் திண்டுக்கல் அருகே வந்தபோது மிகுந்த சிரமமாக இருந்தது.  அன்றைய இரவில் கனவில் ஒரு சித்தர் தோன்றி மதுரையிலையே தங்கு. மீனாட்சியம்மன் மற்றும் சொக்கநாத பெருமானுக்கு வழிபாடும் திருவிழாவும் நடத்திவை. உன் உடல்நலன் சரியாகும் என்று கூற அவ்வாறு நீங்கினால் ஜந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணி செய்து வைக்கிறேன் என்று பதிலுரைக்க சித்தர் மறைந்தாராம். உடனே மதுரையில் வந்து சேர்ந்தவுடன் அவருக்கு உடல்நலம் சரியாகிற்றாம். அதனால் தலைநகரை மதுரைக்கு மாற்றினார். புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹாலும் கட்டப்பட்டது.


இரண்டு கோட்டைகளை கட்டினார். 20000 வீரர்களை கொண்ட படையை திரட்டினார். 5 பெரும் போர்களை நடத்தினார்.

1) பழைய பகைமையாலும்,  மதுரை நாட்டின் செழிப்பாலும் மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர் அவரை எதிர்த்துப் போராடி வெற்றி கொண்டு விரட்டினார்.

2) திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா என்பவர் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாததனால் அவர் மீது படையெடுத்துச் சென்று போர் புரிந்து கப்பத்தை வசூலித்து திரும்பினார்.

3) அந்த காலத்தில் விஜயநகர பேரரசு மிகவும் பலவீனமாக இருந்ததால் விஜயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர் தொடுத்து வெற்றி பெற்று தனி அரசரானார்.

4) இராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகங்கள் ஏற்பட்ட காலத்தில் அவற்றை அடக்கி அமைதியை நிலைநிறுத்த இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்து அமைதியை நிலைநாட்டி திரும்பினார்.

5) மைசூர் மன்னர் படைகள் மதுரை நாட்டைத் தாக்கி மதுரைக் குடிமக்களின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தியதால் பழிக்குப் பழி வாங்க மைசூரின் மீது மூக்கறுப்புப் போரை நடத்தினார். திருமலை நாயக்கரின் படைவீரர்கள் மைசூர் நாட்டு எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள மக்களின் மூக்குகளை அறுத்து மூட்டையாகக் கட்டி மதுரைக்குக் கொண்டுவந்து பழி தீர்த்தனர்.

இவர் கட்டிய திருமலைநாயக்கர் மகாலில் அற்புதமான வேலைப்பாடு அமைந்த வளைவுகள் வட்டவடிவமான மேற்கூரைகள் விரிந்து அகன்ற கூடங்கள் மிகப்பெரிய தூண்கள் எல்லாம் மிகவும் அழகாக அமைக்கப்பட்டடு இருந்தது.  மீனாட்சியம்மன் கோயிலுக்கு கிழக்கே உள்ள பெரிய கோபுரத்தின் எதிரே உள்ள புது மண்டபம், ராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மைய மண்டபத்துடன் உருவாக்கிய தெப்பகுளம் ஆகியவை இவர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. திருமலை நாயக்கர் ஊட்டத்தூர் முதல் கன்னியாகுமரி வரையில் சாலை அமைக்க செய்து இடையிடையே பயணிகள் தங்குவதற்கு சத்திரங்கள் பலவற்றின் கட்டி வைத்தார். பின்பு அந்த சத்திரங்களில் அன்னதானம் செய்யுமாறும் ஏற்பாடு செய்தார். மதுரை கோயில் ஆட்சிமுறை அபிஷேக பண்டாரம் என்பவர் இடம் இருந்தது. இவரின் நிர்வாகத்தின் கோயில் சீர்கெட்டு போயிருந்தது. வழிபாட்டு முறைகள் நன்றாக நடைபெறவில்லை. கோயிலின் வருவாய் எல்லாம் அப்போது அந்த நிர்வாகியால்  கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இதனை தெரிந்துகொண்ட திருமலைநாயக்கர் அக்கோயில் நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தினார். மேலும் கோயிலில் அறக்கட்டளையை ஏற்படுத்தி ஒழுங்குமுறை ஏற்பாடுகளை செய்தார். மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். பல விழாக்களை ஏற்று நடத்தினார்.  39 வயதில் ஆட்சிக்கு வந்த இவர் 36 ஆண்டுகள் ஆண்டு தனது 75வது வயதில் கிபி 1659ல் மறைந்தார்.

இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் : (கி.பி.1659)

திருமலை நாயக்கர் மறைவிற்கு பின்னர் அவருடைய மகனான இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவர் 4 மாதங்களே ஆட்சியில் இருந்து இறந்தார்.

சொக்கநாத நாயக்கர் : (கி.பி.1659-1682)

இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் மறைவிற்கு பின்னர் அவர் மகனான சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இராணி மங்கம்மாளின் கணவர் இவர். இவர் பதவியேற்கும் போது இளைஞராக இருந்தார். இதனால் தளவாய் லிங்கம நாயக்கரும், பிரதானியும், ராயசமமும் இணைந்து பெயரளவில் மன்னரை வைத்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை எடுத்து செஞ்சியின் மீது போர்தொடுதது போர்செலவுகளுக்கு மக்களை துன்புறுத்தி பணம் வசூலித்தனர். இந்த சதி தெரியவர ராயசத்தை கொன்று பிரதானியை குருடாக்கி அரசை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆள ஆரம்பித்தார்.

இவரது ஆட்சியில் தொடர்ச்சியான இஸ்ஸாமிய ஆட்சியாளர்களின் படையெடுப்புகளுடன் பஞ்சம் வந்தது. மக்கள் சொந்த ஊரைவிட்டு பற்பல ஊர்களுக்குச் சென்று குடியேறினார்கள்.  இந்த சமயத்தில் மக்கள் உணவின்றி வாடிக்கொண்டு இருக்கும்போது டச்சு வாணிகர்கள் அவர்களுக்கு உணவு உடை இவற்றை கொடுத்த மகிழ்ச்சிப்படுத்தி அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமையாக விற்றனர். இந்த நேரத்தில் தஞ்சையிலும் பஞ்சம் அந்த மன்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஆனால் சொக்கநாதரும் யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கினார். ஆனாலும் இவர் அளித்த உணவுப்பொருட்கள் போதுமானதாக இல்லை. இந்தப் பஞ்சம் மட்டுமில்லாமல் காடுகளிலிருந்து வனவிலங்குகளும் நாட்டில் புகுந்து சேதத்தை விளைவித்தது. பயிர்களை அழித்தன மதுரையில் அதிகமான மக்கள் நோய்வாய்பட்டு மடிந்தனர். 

பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவிடம் படைத் தலைவனாக இருந்த வனமியான் அவன் தந்தையின் உதவியுடன் திருச்சிக்கு படையெடுத்து வந்தான் திருச்சியின் மீது படை எடுத்து  பயிர்களை அழித்தான். மக்களைத் துன்புறுத்தினான். பெரும் தடையாக இருந்ததால் தன் மக்களுக்கு தொந்தரவு நேராது இருக்கும் பொருட்டு வனமியானிடம் பெரும் பொருள் கொடுத்து சமாதானம் செய்து கொண்டார்.

சொக்கநாத நாயக்கர் நடத்திய போர்கள்:
1) தஞ்சை போர் :

வனமியான் படையெடுப்பில் தனக்கு உதவி புரியாமல் இருந்த தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கர் எதிரியுடன் சேர்ந்து கொண்டதால் அவரை பழிவாங்க கருதி தஞ்சை மீது கி.பி 1664 படை எடுத்துச் சென்று வல்லத்து கோட்டையைக் கைப்பற்றினார். தஞ்சை நாயக்கர் சொக்கநாத நாயக்கர் சொல்படி நடக்க ஒப்புக்கொண்டார்.  வல்லத்தில் தனது பாதுகாப்புப் படையை நிறுத்திவிட்டு மதுரைக்குத் திரும்பினார். ஆனால் சிறிது காலம் கழித்து விஜயராகவ நாயக்கர் வல்லத்தை மீட்டுக் கொண்டார்.

2) சேதுபதியுடன் போர் :

வனமியான் படையெடுப்பில் திருமலை சேதுபதி படைபலம் அனுப்பி தனக்கு உதவி செய்யாமல் இருந்ததால் அவர் மீது போர் தொடுத்தார். மறவர் சீமையில் புகுந்து திருப்பத்தூர் புதுக்கோட்டை மானாமதுரை காளையார்கோயில் போன்ற இடங்களை கைப்பற்றினார். சேதுபதி நேருக்கு நேர் நின்று போர் புரிவதை கைவிட்டு மறைந்து தாக்கும் கொரில்லா போரில் ஈடுபட்டார். இதனால் சொக்கநாதரின் போர்வீரர்கள் மடியிலாயினர். அந்த நேரத்தில் மதுரையில்  சமய விழாவை தலைமையேற்று நடத்த வேண்டியிருந்ததால் சொக்கநாதர் மதுரைக்கு திரும்பினார்.

3) தஞ்சை போர் : (பெண் கொடுக்க மறுத்ததற்கான போர்)

தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கரிடம் தமக்கு பெண் கொடுக்குமாறு சொக்கநாத நாயக்கர் கேட்க அவர் மகளைக் கொடுக்க மறுத்ததால் சொக்கநாதர் தஞ்சை மன்னரோடு போர் தொடுத்தார். தஞ்சை மன்னர் நாயக்க அரசர் வழி வந்தவர். ஆனால் சொக்கநாதர் அரசாங்க ஊழியராக இருந்த விசுவநாத நாயக்கரின் பரம்பரையில் வந்தவர். அரச பரம்பரையில் வந்தவராக இல்லாத காரணத்தால் சொக்கநாதருக்கு பெண் கொடுக்கவில்லை.  பலமுறை கேட்டும் தூது அனுப்பியும் மறுத்ததால் கி.பி.1673 போர்தொடுத்தார். இந்த போரில் தோற்றால் அரண்மனையை வெடி வைத்து தகர்க்குமாறு கட்டளையிட்டு விஜயராகவ நாயக்கர் போர்புரிந்து மாண்டார். இவரது மகளும் மாண்டு போனார். இந்த போருடன் தஞ்சை நாயக்கர் வம்சம் முடிந்து போனது.கி.பி.1682ல் சொக்கநாத நாயக்கர் மறைந்தார்.

அரங்க கிருஷ்ணப்ப முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1682-1689) :

இவர் சொக்கநாத நாயக்கரின் மறைவுக்கு பின்னர் பதவிக்கு வந்த அவர் மகன்.  இவர் தனது 7 ஆண்டுகால ஆட்சியில் மதுரையின் ஆட்சியில் இழந்த பகுதிகளை மீட்டார். இவர் இறக்கும்போது இவரது மகனான மனைவியின் வயிற்றில் கருவாக இருந்தார். அதனால் பாட்டியான இராணி மங்கம்மாளே குழந்தையின் சார்ப்பாக ஆட்சியை நடத்தினார்.

இராணி மங்கம்மாள் (கி.பி.1689-1706) :

சொக்கநாத நாயக்கரின் மனைவி. இவரது மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் இளமையிலே மறைந்ததார். அந்த நேரத்தில் இவரது பேரனான விஜயரங்க சொக்கநாதன் தாயின் கருவில் இருந்தார். பேரனின் சார்பாக இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 


இந்த காலகட்டத்தில் தென்னகத்தில் இருந்த பெரும்பாலான அரசர்கள் அவுரங்கசீப்பின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டனர். மைசூர் மன்னன் சிக்க தேவராயன் அவுரங்கசீப்பின் உடன்படிக்கை செய்து கொண்டான். தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய வேந்தன் ஷாஜி என்பவனும் திறை செலுத்த ஒப்புக் கொண்டுவிட்டான். இதெல்லாம் அறிந்துகொண்ட மங்கம்மாளும் அரசு நிலைக்க வேண்டி  ஓளரங்கசீப்பிற்கு திறை செலுத்தி மதுரையை தக்க வைத்துக் கொண்டார். தஞ்சை மன்னன் மதுரை நாட்டுப் பகுதிகள் சிலவற்றை முன்பே கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தான்.  அவர் ஓளரங்கசீப்புக்கு திறை செலுத்தி வந்த காரணத்தால் அவரோடு போர் புரிய முடியவில்லை. இருந்த போதிலும் முகலாயப் படை தலைவன் சுல்பிகர்கான் கி.பி. 1697 தெற்கே வந்த போது மங்கம்மாள் அனக்கு விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக அளித்து அவன் உதவியால் தஞ்சை மன்னன் பிடித்திருந்த மதுரை பகுதிகளை  மீட்டுக்கொண்டார். எனினும் மராட்டியர்களின் மதுரை நாயக்கர்கள் அரசுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தனர்.

இவரது ஆட்சியில் நடந்த 4 போர்கள் முக்கியமானவை:


1) மைசூர் போர் :

திருச்சியை கைப்பற்ற மைசூர் மன்னன் சிக்கதேவராயன் தனது தளபதி குமரய்யாவை அனுப்ப திருச்சியை முற்றுகையிட்டு கடும்போர் புரிந்த போது மைசூரை மராட்டியர்கள் தாக்கியதால் தளபதி மைசூருக்கு நகர்ந்த போது மைசூர் படைகளை தாக்கி அழித்து வெற்றி பெற்றார்.

2) தஞ்சை போர் :

கி.பி.1700ல் தஞ்சையை ஆண்ட ஷாஜி தனது படைத்தலைவன் மூலம் மதுரை நாட்டிற்கு அடங்கிய திருச்சி பகுதியில் நுழைந்து கொள்ளையடித்தார்.  தளவாய் நரசப்பையா எவ்வளவோ முயன்றும் கொள்ளையை தடுக்க முடியவில்லை.  இந்த நேரத்தில் கொள்ளிடத்தில் ஆற்று வெள்ளம் குறைந்தபோது தனது படைவீரர்களுடன் தஞ்சை நாட்டிற்கு சென்று நரசய்யா பதிலுக்கு பதிலாக கொள்ளையடித்தார். இதனை அறிந்து தஞ்சை படைவீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஷாஜியின் முதலமைச்சராகிய பாலோஜி என்பவர் நிறைய பொருட்களை தனது வியாபாரிகளிடமிருந்தும் கஜானாவில் இருந்தும்  எடுத்துக்கொண்டு போய் நரசப்பையாவிடம் கொடுத்து ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன் மூலம் மதுரைக்கும் தஞ்சைக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

3)திருவாங்கூர் ரவிவர்மன் மீதான படையெடுப்பு :

திருவாங்கூரை ஆண்ட ரவிவர்மனின் அமைச்சர்களான எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் அவருக்கு உள்ளே தொல்லை கொடுத்து வந்தனர். இவர்களை ஒழிக்க வேண்டும் என்று ரவிவர்மன் சூழ்ச்சி செய்தான். மதுரை படையினரை அணுகி அவர்களை நாட்டை விட்டு விரட்டினால் திருவாங்கூரில் பாதியை தருவதாக ஒப்புக் கொண்டான். இதை நம்பிய மதுரை படையினர் அவர்களை தாக்கி அழித்தனர். ஒப்பந்தப்படி திருவாங்கூரில் பாதியை கொடுக்காததால் மங்கம்மாள் கி.பி. 169ல்  தளவாய் நரசப்பய்யா தலைமையில் பெரும் படையை திருவாங்கூர் அனுப்பி போரில் வெற்றி பெற்றார். வெகுநாள் திறைப்பணம் கட்டாமல் இருந்ததால் திறைப்பணம் முழுவதும் பெற்றுக்கொண்டு தளவாய் நரசப்பய்யா மதுரை திரும்பினார்.

4) சேதுபதியுடன் போர்:

சேது நாட்டை ஆண்ட சேதுபதி மங்கம்மாளின் ஆட்சி காலத்தில் கிபி 1698ல் மதுரையை கைப்பற்றி சில காலம் ஆண்டார். தளவாய் நரசப்பைய்யா மதுரை மீது படையெடுத்து சென்று சேதுபதியை அங்கிருந்து விரட்டினார்.  ஆனாலும் அவரை அப்படியே விடாமல் கி.பி.1702ல் சேதுநாட்டின் மீது படை எடுத்துச் செல்லுமாறு தளவாய் நரசப்பைய்யாவுக்கு ஆணையிட்டார். இந்தப் போரில் மங்கம்மாள் உடன் கொண்டிருந்த நட்புறவை கைவிட்டு தஞ்சை மன்னர் ஷாஜி சேதுபதியுடன் சேர்ந்து கொண்டார். போரில் தளவாய்  நரசப்பைய்யா கொல்லப்பட்டார். நரசப்பைய்யா தலைமையில் சென்ற மதுரை படையும் தோல்வியடைந்தது. இந்த போரின் மூலம் சேதுநாடு முழு உரிமை பெற்ற தனி நாடாகியது.

செளராஷ்டிரா மக்களும் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவரே என்று சாஸ்திர நிபுணர்களை வைத்து அறிந்து அவர்களுக்கும் பூணூல் அணியும் உரிமையை கி.பி.1705ல் பனையோலையில் "செளராஷ்டிரா சாசனம்"மாக எழுதி கொடுத்தார். மேலும் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவர்களை மறவர் நாட்டினர் கொடுமைபபடுத்தியதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார். மறவர்களின் சிறையில் இருந்த "மெல்லோ" பாதிரியாரை விடுவித்தார். கி.பி.1692ல் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காக நிலங்களை தன் பேரன் பெயரால் வழங்கினார். கி.பி.1701ல் தர்க்காவுக்காக திருச்சி அருகே சில கிராமங்களை விட்டு கொடுத்தார். கோயில்கள் மட்டுமின்றி குளங்களையும் வெட்டினார். சாலைகளையும் அதன் ஓரங்களில் மரங்களையும் வழிப்பயணத்திற்கு சத்திரங்களையும் தண்ணீர் பந்தல்களையும் கட்டினார். இவர் கட்டிய சாலைகளின் ஓரங்களில் உருவான நகரங்கள் தான் இன்றைய சிவகாசி, சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகியவனை. கட்டிய சத்திரங்களில் அன்னதானங்களுக்கு நிலம் ஒதுக்கினார். மதுரை இரயில் நிலையத்திற்கு எதிரேயுள்ள மங்கம்மாள் சத்திரம் இவர் கட்டியதே.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1706-1732) :

சொக்கநாத நாயக்கரின் மகன். ராணி மங்கம்மாளின் பேரனும் ராணி மீனாட்சியின் கணவருமாவார் இவர். இவருக்கு குழந்தையில்லாமல் இறந்ததால் உறவின் முறையில் ஒரு சிறுவனை இவரின் மனைவி இராணி மீனாட்சி தத்தெடுத்து அவரை அரசராக அங்கீகரித்து ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சியில் திருச்சியில் கட்டப்பட்ட சொக்கநாதர் மாளிகை மிகுந்த கட்டிட வேலைப்பாடு கொண்டு அமைந்திருந்தது.

இராணி மீனாட்சி (கி.பி.1732-1736) :

விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவியான இவர் கணவருக்கு வாரிசின்றி இறந்ததால் இவர் ஆட்சிக்கு வந்தார். தன் உறவுகளும் ஒரு சிறுவனான விஜயகுமாரனை தத்தெடுத்து ஆட்சியில் அமர்ததி அவர் சார்ப்பாக ஆட்சி புரிந்தார். இந்நிலையில் விஜயகுமாரனின் தந்தையான பங்காரு திருமலை என்பவர் (திருமலை நாயக்கரின் தம்பி உறவு முறையில் வந்தவர்) மகனுக்கு பதிலாக தனக்கு  ஆட்சி உரிமை வேண்டும் என்று குழப்பம் செய்ய உறவினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் கர்நாடக நவாப்பின் மருமகனான சந்தா சாகிப்பை திருமலை பங்காரு சந்தித்து தனக்கு உதவி புரிய கேட்க இராணி மீனாட்சி சந்தா சாகிப்புக்கு ஒரு கோடி பணம் தருவதாக சொல்லி உதவி கேட்டார். குரான் மேல் சத்தியம் செய்வதாக சொல்லி செங்கல்லின் மீது சத்தியம் செய்து ஏமாற்றி ஒரு கோடி பணத்தை பெற்றுக்கொண்ட சந்தா சாகிப் உதவிபுரிவதாக வந்து நாட்டை அபகரிக்க பார்த்தார் . இதனால் இராணி மீனாட்சியின் படைகளுக்கும் ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானின் மகன் சப்தர் அலி கான் மற்றும் சந்தா சாகிப்பின் படைகளுக்கும் இடையே மதுரை அருகே அம்மையநாயக்கனூர் என்னும் இடத்தில் நடந்த போரில் இராணி மீனாட்சி போரில் தோற்று கைது செய்யப்பட அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சந்தா சாகிப் பங்காரு திருமலையையும் கொன்று முழுமையாக நாயக்கர் வம்சத்து ஆட்சியை மதுரையில் முடித்து வைத்தார்.

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு