66) தஞ்சை நாயக்கர்கள் அரசு
தஞ்சை நாயக்கர்கள் : (கி.பி.1532-1675)
ஆற்காடு பிரதேசத்தின் ராஜ பிரதிநிதியாக இருந்த திம்மப்பா என்ற திம்மபூபதியின் மகனான செவ்வப்ப நாயக்கரை விஜய நகரத்தை ஆண்ட அச்சுத தேவராயர் (கிருஷ்ண தேவராயரின் தம்பியான இவர் கிருஷ்ண தேவராயருக்கு பின் ஆட்சிக்கு வந்தார்) தஞ்சையின் ராஜ பிரதிநிதியாக அனுப்பி வைக்க அன்றிலிருந்து கி.பி.1532ல் தஞ்சையில் நாயக்கர் வம்ச ஆட்சி நடைபெற ஆரம்பித்தது. இவர்கள் தஞ்சை வடஆற்காடு பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். இவர்களது காலத்தில் டேனிஷ் போர்ச்சுகீசியர்கள் டச்சுக்காரர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்களது காலத்தில் அடிக்கடி மதுரை நாயக்கர்களுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி போர்கள் நேர்ந்தது. அரசு ஆரம்பித்த அன்றிலிருந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்த ஆட்சி கி.பி.1673ல் விஜயராகவ நாயக்கர் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் வீழ்த்தப்பட்ட பின்னர் மதுரை சொக்கநாதரின் மாற்றாந்தாயின் மகனான முத்தழகிரி நாயக்கர் என்பவர் தஞ்சையை ஆள அமர்த்தப்பட விஜயராகவ நாயக்கரின் மகனான செங்கமல தாஸ் என்பவர் பிஜப்பூர் சுல்தானிடம் உதவி கேட்க அவர் மராத்திய தளபதி வெங்கோஜி என்பவரை அனுப்ப அவர் முத்தழகிரி நாயக்கரை விரட்டி தஞ்சையை கைப்பற்றி செங்கமல தாஸ்ஸிடம் ஒப்படைக்காமல் தன்னையே ராஜாவாக அறிவித்து தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சியை முற்றிலுமாக துடைத்தெறிந்து கி.பி.1675ல் மராத்தியர்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்.
செவ்வப்ப நாயக்கர் (கி.பி.1532-1572) :
மாமன்னர் கிருஷ்ண தேவராயரிடம் வாயில் காப்போனாக பணியாற்றியவர் திம்மப்பா. இவரது சகோதரர் தான் மதுரையில் கலவரத்தை அடக்க கிருஷ்ணதேவராயரால் அனுப்பப்பட்ட தளபதியான நாகம நாயக்கர். மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவரான விசுவநாத நாயக்கர் தஞ்சையின் செவ்வப்ப நாயக்கருக்கு சகோதரர் முறை. இந்த செவ்வப்ப நாயக்கர் கிருஷ்ண தேவராயரிடம் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அரசாங்க ஊழியராக இருந்தார். வெறும் வெற்றிலைகளை மட்டும் மடித்து கொடுப்பதல்ல இந்த பதவி. மன்னருக்கு மெய்ப்பாதுகாவலும் சேர்ந்த பதவிதான் இது. இந்த பதவிக்கு நம்பிக்கையான அவர்களை மட்டுமே அமர்த்துவார்கள். கிருஷ்ண தேவராயரின் சகோதரரும் அவருக்கு பின்னர் அரியணை ஏறியவருமான அச்சுத தேவராயரின் மனைவியான திருமலா தேவியின் தங்கையை மணம் புரிந்தவர் என்பதால் அச்சுத தேவராயருக்கு இவர் சகலை முறையில் வருகிறார். அச்சுத தேவராயர் தனது ஆட்சி காலத்தில் அதனால் இவருக்கு தஞ்சையின் "வாசல்" ஆக நியமிக்கிறார். வாசல் என்பது தஞ்சையின் ஆளுநர் மற்றும் மன்னருக்கு இணையான பதவி. தனக்கு உயர்வு கொடுத்த அச்சுத தேவராயருக்கு நினைவாக தனது மகனுக்கு அச்சுதப்ப நாயக்கர் என்று பெயரிட்டார்.
கி.பி.1544ல் விஜயநகர பேரரசர் இராமராயரின் கட்டளைப்படி விட்டல தேவராயன் தமிழ்நாட்டுக்குள் படையெடுத்து வரும்போது அவனுக்கு உதவி புரிந்தார். விஜயநகர பேரரசர் இராமராயர் தலைமையின் கீழ் நடத்திய தலைக்கோட்டை போரிலும் தன் படைகளை அனுப்பி உதவி புரிந்தார். இவருடைய காலத்தில் தான் தஞ்சையில் புதிய நகரம்,கோட்டை கொத்தளங்கள் அரண்மனை அகழி குளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டது. தஞ்சை கோட்டையையும் அரண்மனையையும் எழுப்பினார். நீர்பாசன வசதி மற்றும் குடிநீருக்காகவும் தன் பெயரில் செவ்வப்பன் என்ற ஏரியை அமைத்தார். இவருடைய காலத்தில் தெலுங்கு மக்களும் செளராஷ்டிரா மக்களும் தஞ்சாவூரில் அதிகம் குடியேறினர்.
போர்த்துகீசியர்கள் நாகப்பட்டினத்தில் வணிக அமைப்பை ஏற்படுத்தினர். அவர்கள் அங்கே 10 கிறிஸ்தவ தேவாலயங்களை எழுப்பினர். இவர் சைவ மதத்தை பின்பற்றினாலும் அனைத்து மதங்களையும் அரவணைத்துச் சென்றார். வைணவ அடியார்களுக்கும் உபச்சாரம் செய்தார். ஸ்ரீரங்கத்தில் ஒரு தோப்பையும் மண்டபத்தையும் எழுதிக்கொடுத்தார். மத்வாச்சாரியார் மதத்தைச் சார்ந்தவர்களுக்கு கிராமங்களை தானமாக அளித்தார். திருவண்ணாமலை ராஜகோபுரம் என்று கட்டிக் கொடுத்தார். இவர் சமண மதத்திற்கும், பெளத்த மதத்திற்கும் நிறைய கிராமங்களை தானமாக கொடுத்தார். தஞ்சாவூர் "ஷமஸ்பீர்பள்ளி" என்னும் பள்ளிவாசலை சேர்ந்த பக்கிரிகளுக்கு ஒரு வேலி நிலம் கொடுக்கவும் உத்தரவிட்டார். மேலும் போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் இருந்து கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தஞ்சை பெரிய கோயில் சுப்பிரமணியருக்காக "கந்தக்கோட்டம்" என்ற கோயிலையும் கட்டினார்.
அச்சுதப்ப நாயக்கர் (கி.பி.1572-1600) :
தந்தை செவ்வப்ப நாயக்கர் காலத்திலையே கி.பி.1560 முதலே அவருக்கு துணையாக ஆட்சிபுரிந்த இவர் தந்தையின் மறைவுக்கு பின்னர் தனியாக கி.பி.1572 முதல் ஆட்சி புரியலானார். விஜயநகர பேரரசு தலைக்கோட்டை யுத்தத்தில் கி.பி. 1565 தோற்கடிக்கப்பட்ட போதும் அதற்கு விசுவாசமாக இருந்தார். இவருடைய காலத்தில் விஜய நகரத்தின் மீது கோல்கொண்டா படைகள் படையெடுத்து தலைநகரம் பெனுகொண்டாவை சுற்றி வளைத்தபோது அச்சுதப்ப நாயக்கர் தனது மகன் ரகுநாதன் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். இந்தப் படைகள் விஜயநகர அரசருக்கு உதவியாக கோல்கொண்டா படைகளைத் தோற்கடித்தது. ஒருமுறை மதுரை நாயக்கர் முத்துவீரப்பன் விஜயநகர அரசருடன் போரிட்டபோது படையை அனுப்பி மதுரை படைகளை தோற்கடித்தார். இவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதனின் கோயில் விமானத்தை பொன்மயமாக்கினார். காவிரிக்கரையில் உள்ள திருவையாறு, கும்பகோணத்திலும் படித்துறைகளையும் மண்டபங்களையும் கட்டினார். காவிரியில் ஒரு அணையை கட்டினார். சிவகங்கையில் ஒரு கோட்டையை கட்டி அதில் "லட்சுமி விலாசம்" என்ற தர்பார் அறையை கட்டினார்.
ரகுநாத நாயக்கர் (கி.பி.1600-1634) :
இவர் விஜயநகர மன்னர் முதலாம் வேங்கடாவின் அதிதீவிர விசுவாசியாக செஞ்சி மன்னர் இரண்டாம் கிருஷ்ணா விஜயநகர மன்னருடன் எதிர்த்தபோது விஜயநகர மன்னருக்கு உதவியாக போரிட்டு வெற்றி தேடித்தந்தார். பின்னர் விஜயநகரத்திற்கு திறைப்பணம் செலுத்த மறுத்து அவருக்கு எதிராக இருந்தார். கி.பி 1610ல் சாந்தோம் நகரை விஜயநகர அரசர் வேங்கடா முற்றுகையிடும்போது இவர் போர்ச்சுகீசியர்களுக்கு ஆதரவாக விஜயநகர அரசரை எதிர்த்தார். கி.பி.1617ல் விஜயநகர அரசர் ராமதேவருக்கு ஆதரவாக மதுரை முத்து வீரப்ப நாயக்கரையும் ஜக்கராயரையும் "தோப்பூர்" என்ற இடத்தில் எதிர்த்தார். இதன்மூலம் தஞ்சாவூர் அரசின் விசுவாசத்தை விஜயநகர மன்னர்கள் காட்டிக்கொண்டார்.
இலங்கை மன்னருடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். ஆகவே இலங்கை மன்னர் போர்ச்சுகீசியர் தோற்கடிக்கப்பட்ட போது அவருக்கு உதவியாக தனது படைகளை அனுப்பி வைத்து அவரை ஆட்சியில் அமர்த்தினார். ஆனால் திரும்பவும் போர்ச்சுகீசியர்கள் இலங்கையை மன்னரை விரட்டிய போதும் இவர் அவருக்கு உதவி புரிந்து இலங்கை மன்னர் ஆட்சியில் அமர்வதற்கு உதவினார். போர்ச்சுகீசியர்களின் நாகப்பட்டினத்தையும் இவர் தாக்கினார். போர்ச்சுகீசியர்களின் அத்துமீறல்களை தடுத்து வந்தார். அதற்காக மற்ற எல்லா வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் தஞ்சாவூரில் வாணிக வளாகம் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். கி.பி.1610ல் தேவனாம்பட்டினத்தில் டச்சுக்காரர்களுக்கு வாணிக வளாகம் அமைக்க அனுமதி கொடுத்த அதே நேரத்தில் அவர்கள் வளர்ச்சியடையும் நோக்கத்தை தடுப்பதற்காக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கி.பி. 1620ல் தரங்கம்பாடியில் டேனிஸ்காரர் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். பிரிட்டிஷ்காரர்கள் காரைக்காலில் வணிகம் செய்ய முயற்சி வந்தனர். ஆனால் அவர்களுக்கு எளிதில் அனுமதி கொடுக்கவில்லை. விஜயநகர மன்னர் இரண்டாம் ராம ராயருக்கு பகைவர்களால் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கி கும்பகோணத்தில் அவருக்கு முடி சூட்டினார். இவர் மதுரை நாயக்கர் மகளை மணம் முடித்திருந்தார். அதன் மூலம் அவருக்கு ராமபத்ரன் விஜயராகவன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இவருக்கு பின்னர் இவரது இளைய மகன் விஜயராகவன் அரசுரிமை பெற்றார். இவர் மிகச் சிறந்த பக்திமானாக இருந்தார். எப்போதும் ஒரு சன்யாசி போலவே வாழ்ந்தார். தனக்கு வேண்டிய உணவை தானே சமைத்துக் கொண்டார். இவர் குருவுக்குப் பணிந்து நடந்து கொண்டார். எப்போதும் தலை முழுவதும் மொட்டையடித்துக் கொண்டு காணப்பட்டார். இவரது சபையில் ராமபத்ராபா மற்றும் மதுரவாணி போன்ற பெண் புலவர்கள் இருந்தனர். ரகுநாத நாயக்கர் நல்ல இசைக் கலைஞர் ஆவார். "ஜெயந்த சேனா" எனும் புதிய ராகத்தை கண்டுபிடித்தார். மேலும் "சங்கீத சபா" மற்றும் "பாரத் சபா" என்ற இரண்டு சமஸ்கிருத நூல்கள் எழுதினார். இவர் ஓரு சிறந்த ராம பக்தர். கும்பகோணம் ராமசாமி கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தார்.மேலும் கும்பகோணம் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் 16 சிறு கோயில்களுடன் தான மண்டபமும் அமைத்தார்.
விஜய ராகவ நாயக்கர் (கி.பி.1631-1673) :
இவர் தான் தஞ்சை நாயக்கர்களின் கடைசி அரசர். இவர் மன்னாருதாஸா என்ற பெயரில் கூட அழைக்கப்படுகிறார். இவர் தனது முந்தைய அரசர்களை போலவே பிரகாரங்களையும், கோவில் கோபுரங்களையும் மண்டபங்களையும் மன்னார்குடியிலுள்ள இராஜகோபாலசுவாமி கோயிலில் கட்டினார். இவரது அவையில் நிறைய அறிஞர்களும் புலவர்களும் நிறைந்து இருந்தனர். இவரே 30க்கும் மேற்பட்ட நூல்களை தெலுங்கில் எழுதியுள்ளார். இவரது அவையை கோனேடி தீட்சிதர்,புருஷோத்தம தீட்சிதர், யக்ரு நாராயண தீட்சிதர் ஆகியோர் அலங்கரித்தனர். இவர் தினமும் பிராமணர்களுக்கு உணவளித்த பிறகு தான் காலை உணவே சாப்பிடுவார். தஞ்சாவூரிலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடைசியில் இவரது ஆட்சிக்கு மதுரை சொக்கநாத நாயக்கரால் முடிவுரை எழுதப்பட்டது.
இவர் தஞ்சாவூர் கோட்டையை கட்டி முடித்தார். இவர் விஜயநகர மன்னர் மூன்றாம் ஸ்ரீலங்காவிற்கு எதிராக திருமலைநாயக்கர் சேர்த்திருந்த அணியில் இருந்தார். பின்னர் திடீரென்று அந்த கூட்டணியில் இருந்து விலகி விஜயநகர மன்னருக்கு ஆதரவாக மாறினார். இதனால் திருமலை நாயக்கர் கோல்கொண்டா சுல்தான்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்தார். இந்தப் போரில் கோல்கொண்டா சுல்தானின் படைகளிடம் தஞ்சாவூர் நாயக்கர் தோல்வியடைந்தார். பிஜப்பூர் சுல்தான் அதில்ஷா மதுரையை தாக்கினார்.அப்போது மதுரையை ஆண்ட இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கரின் உதவியை கேட்டார். ஆனால் விஜயராகவ நாயக்கர் உதவிக்கு வரவில்லை. பின்னர் அதில்ஷா தஞ்சாவூர் மீது போர் தொடுத்தார். முற்றுகைப்போர் கடுமையாக இருந்தது. முற்றுகை போரினால் பெரும் பஞ்சம் நிலவியது. மக்கள் வெறும் அரிசிக்காவும் ரொட்டிக்காகவும் அடிமைகளாக மாறினார். இந்த கோர பஞ்ச நிலையைக் கண்ட பிஜப்பூர் சுல்தான் போரை நிறுத்தினார்.
இவரது காலத்தில் போர்ச்சுகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் டச்சுக்காரர்கள் கை ஓங்கியிருந்தது. அவர்கள் நாகப்பட்டினத்திலிருந்து போர்ச்சுக்கீசியர்கள் விரட்ட முயற்சித்தனர். டச்சுக்காரர்களின் கப்பல் நாகப்பட்டினத்தில் தரையிறங்கும் அந்த நேரத்தில் தஞ்சாவூர் நாயக்கர் படையெடுத்து வந்ததால் டச்சுக்காரர்கள் ஓடிவிட்டனர். அதேநேரத்தில் நாகப்பட்டினத்தில் இருந்த போர்ச்சுகீசியர்களை விரட்ட முயற்சித்தார். ஆனால் போர்ச்சுகீசியர்கன் நாயக்கரிடம் சரணடைந்து கப்பம் கட்டினார்கள். ஆனால் சில ஆண்டுகள் கழித்து போர்ச்சுகீசியர்கள் நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு மிக்க மதில்களை கட்டினர். சுற்றிலும் ஏழு பீரங்கி தளங்களை அமைத்து கோட்டையை வலிமைப்படுத்தியதை விரும்பாத விஜயராகவ நாயக்கர் போர்ச்சுகீசியர்கள் டச்சுக்காரர்கள் ஆதரவளித்து நாகப்பட்டினத்துக்கு படைகளுடன் வந்தார். இதைக்கண்ட போர்ச்சுகீசியர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் டச்சுக்காரர்களிடம் நாகப்பட்டினத்தை கொடுத்துவிட்டு நகர்ந்தனர். போர்ச்சுகீசியர்களின் விரட்டிவிட்டு டச்சுக்காரர்களுக்கு நாகப்பட்டினத்தை அளித்தார். நாகப்பட்டினத்தை சுற்றியிருந்த புத்தூர், முட்டம், வலசேரி கிராமங்களை அவர்களுக்கு அளித்தார். அவர்கள் உள்ளூர் வணிகர்களுடன் சண்டை போடக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். ஏற்றுமதி இறக்குமதி பொருட்களுக்கு வரி வசூலித்தார். மேலும் கி.பி. 1666ல் நாயக்கர் திருமலைராயன் பட்டினத்தை அளித்தார்.
விஜயராகவ நாயக்கர் காலத்தில் டேனிஷ்காரர்கள் நிலை வியாபாரத்தில் இறக்கமாக இருந்தது. ஆகவே அவர்கள் வணிக இருப்பிடமான தரங்கம்பாடியை கைப்பற்ற ஆங்கிலேயர், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் என ஒவ்வொருவரும் முயற்சித்தனர். ஆனால் இவைகள் எதுவும் வெற்றி பெறவில்லை. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியை ஒரு ராணுவ கோட்டையாக கட்டிக்கொண்டனர்.
விஜயராகவ நாயக்கர் காலத்தில் ஆங்கிலேயர்கள் தஞ்சையை வணிக கம்பெனி தளமாக்க முயற்சி செய்தனர். இவர்களுக்கு காரைக்காலில் இறங்க முயற்சி செய்து தோல்வி வைத்தனர். விஜயராகவ நாயக்கர் வியாபாரத்தில் ஈடுபட ஆங்கிலேயர்களை அனுமதிக்கவில்லை.
கிபி 1659 இல் சொக்கநாத நாயக்கருக்கு எதிராக அவரின் தளவாயான லிங்கம நாயக்கருக்கும் ராஜி என்பவருக்கும் மதுரையின் உட்பூசலில் உதவினார். மேலும் பிஜப்பூர் சுல்தானின் தளபதி வானமியான் தன் மீது ஏற்படுத்திய பழைய படையெடுப்புக்கு இவர் உதவாவததால் சொக்கநாத நாயக்கருக்கு இவர் மேல் கோபம் ஏற்பட்டது. இவரது மகளை சொக்கநாத நாயக்கர் பெண் கேட்டும் கொடுக்கவில்லை. இவர்களின் மூதாதையரான விஸ்வநாத நாயக்கரும் செவ்வப்ப நாயக்கரும் சகோதர உறவுமுறையில் தான் வந்தாலும் தஞ்சை நாயக்கர்கள் விஜயநகர அரசர் குடும்பத்தில் பெண் எடுத்ததால் (செவ்வப்ப நாயக்கர் அச்சுத தேவராயரின் மனைவியின் தங்கையை மணந்ததால்) தாங்கள் உயர்வு என்று கருதி பெண் கொடுக்க மறுத்தார். இதனால் கோபமுற்ற சொக்கநாத நாயக்கர் கிபி 1673 இல் தஞ்சையின் மேல் படையெடுத்து விஜயராகவ நாயக்கர் போரில் தோற்கடித்து கொன்றார். மேலும் தனது மாற்றாந்தாய் மகனான அழகிரி நாயக்கர் என்பவரை தஞ்சை அரசு பொறுப்பில் அமர்த்தினார். பின்னர் விஜயராகவ நாயக்கரின் மகனான செங்கமல தாஸ் என்பவர் பிஜப்பூர் சுல்தானிடம் உதவி கேட்க அவர் மராத்திய தளபதி வெங்கோஜி என்பவரை அனுப்ப அவர் முத்தழகிரி நாயக்கரை தஞ்சையை விட்டு விரட்டி அதை தஞ்சையை கைப்பற்றினார். தஞ்சையை விஜயராகவ நாயக்கரின் வாரிசிடம் ஒப்படைக்காமல் தன்னையே அரசராக அறிவித்துவிட்டு தஞ்சையை ஆள ஆரம்பித்தார். இவ்வாறாக தஞ்சையில் நாயக்கர்கள் வம்ச ஆட்சி முடிவுற்று மராத்தியர்கள் வம்ச ஆட்சி துவங்கியது.

Comments
Post a Comment