67) சூர் அரசு

சூர் வம்சம் (சூரி வம்சம்) (கி.பி.1540-1555) :


மொகலாயர்களை அடுத்து பார்ப்பதற்கு முன்பு மொகலாயர்கள் வம்சத்தின் ஸ்தாபகர் பாபரின் மகனான ஹீமாயூனை ஓட ஓட விரட்டி டெல்லியை கைப்பற்றிய ஷெர்ஷா சூரி வம்சத்து ஆட்சியை பார்ப்போம். கிட்டத்தட்ட 16 வருடங்கள் தான் ஆட்சியில் இருந்தனர். ஆப்கானிஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஷெர்ஷா சூரி. புலியை கையால் அடித்து கொன்ற நிகழ்ச்சியினால் இவருக்கு ஷேர்கான் என்ற பெயரும் உண்டு.

ஷெர்ஷா சூரி (கி.பி.1540-1545) :


இவர் பாபருக்கு கீழ் தளபதியாய் இருந்தவர். இயற்பெயர் பரீத் கான். இவர் இன்றைய ஹரியானா மாநிலத்தில் மஹேந்திரகர் மாவட்டத்தில் பிறந்தார் என்றும் பீஹாரிலிலுள்ள சாசாராம் நகரில் பிறந்தார் என்றும் கூறுகிறார்கள்.இவர் ஆப்கானிய பழங்குடியினத்தவரான பஷ்தூன் இனத்தை சேர்ந்தவர். (இந்த பஷ்தூன் இனத்தவர்களை தான் பின்னாளில் பாகிஸ்தான் காஷ்மீரை கைப்பற்ற அனுப்பியது. அந்த படை வழியில் முஸாராபாத்தில் கொள்ளையிட்டு பின்னர் பாரமுல்லாவில் வந்தும் கொள்ளையிட்டும் அங்குள்ள சர்ச்சில் புகுந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கன்னியாஸ்திரிகளை கற்பழித்த கொடூரம் இந்திய பிரிவினைக்கு பின் நிகழ்ந்த நிகழ்வு கி.பி.1947ன் இறுதியில்). பரீத் கான் பீஹாரின் காட்டில் ஒரு புலியை தன் வெறும் கைகளால் அடித்து கொன்ற வீரத்தை கண்டு பீகாரின் ஆளுநரான பஹார்கான் லோஹினி அவருக்கு "ஷேர் கான்" என்ற பட்டத்தை அளித்தார். பின்னர் அவருக்கு பின் அவரது இளவயது மகனுக்கு பாதுகாவலனாக இருந்தார். இவரின் புகழ் பரவவே சுல்தான் வங்காள சுல்தானுடன் சேர அவரை வென்று ஒட்டுமொத்த பீஹாருக்கும் பொறுப்பாளராக ஆனார். மெல்ல மெல்ல வங்காளம் மற்றும் பிற பகுதிகளை இணைத்து மொகாலய பேரரசுக்கு சவால் விடும் வகையில் சூரி பேரரசை தொடங்கினார். இதனால் ஏற்பட்ட போரில் கி.பி.1539ல் சாவ்சா போர்களத்தில் ஹீமாயூனை தோற்கடித்தார். இந்தியாவில் முதன்முதலில் "ரூப்பயா" என்ற பெயரில் 178 கிராம் வெள்ளி நாணயங்களை புழக்கத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் இந்திய பகுதிகளுக்கு போஸ்ட்டல் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவரே. கி.பி.3 ம் நூற்றாண்டில் குப்தர்களால் போடப்பட்ட "கிராண்ட் டிரங்க் சாலை"யை காபூல் வரைக்கும் விரிவுபடுத்தினார். ஹீமாயூனால் கட்டப்பட்ட "தீனா-பானா" நகரை மேம்படுத்தி "ஷேர்கார்க்" என்று பெயரிட்டார் . பாடலிபுத்திரம் நகரை மேம்படுத்தி இன்றைய "பாட்னா" உருவாக்கத்திற்கு இவரே காரணம். நிர்வாக சீர்திருத்தம் அக்பரின் ஆட்சியில் கொண்டு வந்ததற்கு முன்னோடி இவரே. பாபரின் கீழ் பணியாற்றும் போது விருந்தில் இவருக்கான மாமிசத்தை வெட்டும் கத்தி சரியில்லாத போது தன் வாளால் மாமிசத்தை வெட்டி சாப்பிட்ட நிகழ்வும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாபர் தன் மகனிடம் இவரை கவனித்துக்கொள் என்று சொல்லாமல் விட்டதன் விளைவு ஹீமாயூன் 16 வருடங்களுக்கு காடு மேடொல்லாம் சுற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக்கியது. இராஜபுத்ரர்களுக்கு எதிரான பந்தல்கோட்டிலிலுள்ள கலிஞ்ஞார் கோட்டையை முற்றுகையிட்டு தோல்வியுற்றார். பின்னர் கோட்டையை கைப்பற்ற அதன் வாயில்களில் வெடிமருந்துகளை வெடிக்க செய்த நிகழ்வில் இவர் மோசமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 


இஸ்லாம்ஷா சூரி (கி.பி.1545-1554) :

ஷெர்ஷா சூரி கொல்லப்பட்ட பின் அரியணை ஏறிய இவர் அவரது இரண்டாவது மகன். பிரபுக்கள் எல்லாரும் கூடி முடிவெடுத்து "ஜலால் கான்" என்ற இவரை "இஸ்லாம்ஷா சூரி" என்ற பெயருடன் அரியணையில் அமர்த்துகிறார்கள். மூத்த மகனான ஆதில் கான் படைகளுடன் இவரை ஆக்ராவில் எதிர்கொண்டு தோற்று ஒடிய பின் கடைசி வரை அவரின் விவரமே தெரியவில்லை. இஸ்லாம் ஷாவின் கல்லறை பாதி கட்டப்பட்ட நிலையில் ஸஸராமில் ஷெர்ஷாவின் கல்லறையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஃபெரூஸ்ஷா சூரி (கி.பி.1554) :

இஸ்லாம் ஷா இறந்த பின் அவரது 12 வயது மகனான ஃபெரூஸ்ஷா சூரி அரியணையில் ஏறிய சில நாட்களிலையே அவரது உறவினரான முகமது முபாரிஸ் கான்னால் கொல்லப்பட்டார்.

முஹமத் அடில்ஷா (கி.பி.1554-1555) :

இவரது இயற்பெயர் முகமது முபாரிஸ் கான். இஸ்லாம் ஷாவின் மகனான 12வயது இளைய அரசன் ஃபெரூஸ்ஷா சூரியை கொன்றுவிட்டு முஹமத் அடில்ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஷெர்ஷா சூரியின் இளைய தம்பி நிஸாம் கானின் மகன். இவரது சகோதரியை தான் இஸ்லாம் ஷா திருமணம் செய்திருந்தார். இவர் ஹெமு என்ற இந்து தளபதியை தனது ஆட்சியின் வஸீராக நியமித்தார்.இவரை எதிர்த்து இவரது மருமகன் இப்ராஹிம் ஷா சூரி ஆக்ராவில் புரட்சி செய்து ஆக்ரா மற்றும் டெல்லியை கைப்பற்றினார்.  ஆக்ரா வெளிப்புறம் முதல் பீஹார் வரை அடில்ஷா ஆட்சியிலும் வங்காளம் ஏற்கனவே சம்ஸ்சுதீன் முஹம்மத் ஷாவின் கீழ் ஏற்கனவே பிரிந்தும் 4 பகுதிகளாக பிரிந்தது. வங்காளம் சுல்தானான முஹ்மத் ஷா சூரியின் மகனான கிஸிர் கான் சூரியினால் போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இப்ராஹிம்ஷா சூரி (கி.பி.1555)‌‌ : 

இப்ராஹிம் ஷா சூரி கிஸிர்கானின் மகன். மஹ்மூத் அடில்ஷாவின் மருமகனான இவர் ஆக்ராவின் கவர்னராக இருந்தார். இவர் அடில்ஷாவின் படைகளை தோற்கடித்து டெல்லிக்கு சென்று அரியணையை கைப்பற்றினார். பின்னர் அதே வருடத்தில் சிக்கந்தர் ஷா சூரியினால் ஆக்ராவிலிருந்து 32 கி.மீ தொலைவிலுள்ள பராஹ் என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்.

சிக்கந்தர்ஷா சூரி (கி.பி.1555) :

இவரது இயற்பெயர் அஹ்மத் கான் சூரி. இவரும் சுல்தான் முஹமத் அடில்ஷாவின் இன்னொரு மருமகன்.  லாகூரின் கவர்னராக இருந்த இவர் கி.பி.1555ல் தனியாட்சியாக அறிவித்துவிட்டு ஆக்ராவை நோக்கி படையெடுத்து வந்து இப்ராஹிம் ஷா சூரியை ஆக்ராவில் தோற்கடித்து டெல்லியில் சுல்தானாக அமர்ந்தார். இந்த நேரத்தில் பாபரின் மகனான ஹீமாயூன்  1555 பிப்ரவரியில் லாகூரை கைப்பற்றினார். பின்னர் திபால்பூர் மற்றும் ஜலந்தர் பகுதிகளை கைப்பற்றி டெல்லியை நோக்கி வந்தார். சிக்கந்தர் ஷாவின் 30000 வீரர்கள் கொண்ட படையை சிர்ஹிந்த்ல் தோற்கடித்து மச்சிவாரா மற்றும் சிர்ஹிந்த்தை ஹீமாயூன் கைப்பற்றினார். பின்னர் சிக்கந்தர் ஷா 80000 வீரர்களுடன் சிர்ஹிந்த்ல் ஹீமாயூன் படைகளுடன் மோதி தோல்வியுற்று சிவாலிக் மலைகளுக்கு தப்பித்து ஓடினார். பின்னர் ஹீமாயூன் டெல்லியை நோக்கி விரைந்து டெல்லியை கைப்பற்றினார். பின்னர் கி.பி.1556ல் அமிர்தசரஸ் மாவட்டத்தில் முகலாய படைகளை தோற்கடித்தார். பின்னர் அக்பரின் பாதுகாவலராக இருந்த பைராம் கான் படைகளை சமாளிக்க முடியாமல் ஜீலை 1557ல் சரணடைந்த இவர் வங்காளத்தில் சிறைவைக்கப்பட்டு கி.பி.1559ல் மறைந்தார்.

அடில்ஷா சூரி (கி.பி.1555-1556) :

இவர் சிக்கந்தர் ஷா சூரியின் சகோதரர். சிக்கந்தர் ஷா சூரி ஹீமாயூனால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவர் கிழக்கு டெல்லியை ஆண்டார். அடில்ஷா மற்றும் அவரின் தளபதியான ஹெமு என்ற ஹேமச்சந்திர விக்ரமாதித்யாவும் ஆரம்பத்தில் வங்காளத்தின் மஹ்மூத் ஷாவுடன் மோதியதில் மஹ்மூத் ஷா கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் டெல்லியில் அக்பர் இல்லாததை பயன்படுத்தி அவரின் ஆளுநரான தார்டி பெக் கானை தோற்கடித்து ஹெமு சிக்கந்தர் ஷாவை பதவியில் அமர்த்தாமல் தானே டெல்லியின் அரசராக வெறும் 29 நாட்களே இருந்தார். ஹெமுவுககும் அக்பரின் சார்பாக பைராம் கானுக்கும் இடையே நடந்த பானிபட் போரில் பைராம் கான் வெற்றி பெற்று ஹெமுவின் தொடர்ச்சியான 22 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே வங்காளத்தின் அரியணை மஹ்மத் ஷாவின் மகனான கியாஸ்வூதின் அபுல் முஸாபர் பகதூர் ஷாவுக்கு வந்தது. அவர் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க அடில்ஷாவின் மீது படையெடுத்து ஃபாத்பூர் போரில் அடில்ஷாவை தோற்கடித்து அவரை பிடித்து கொன்றார். இத்துடன் சூரி வம்ச ஆட்சி முற்றிலும் வெறும் 16 ஆண்டுகளிலையே உட்பூசல்களினாலும் அவர்களிடையே எழுந்த பதவி போட்டிகளினாலும் தூக்கியெறிப்பட்டு மொகலாய அரசு மீண்டும் டெல்லியில் அரியணையில் அமர்ந்து ஒட்டுமொத்த பெருன்பான்மையான இந்தியாவையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆள தொடங்கியது.

உதவிய நூல்கள்:

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மத்திய கால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

மொகலாயர்கள் - முகில்

மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு