68) மொகலாய பேரரசு - பாபர்
ஷாகிருதீன் முகம்மத் பாபர் (கி.பி.1483-1530) :
டெல்லி அரசு (கி.பி.1526 ஏப்ரல் 13 - கி.பி.1530 டிசம்பர் 26)
இன்றைய இந்தியா என்ற வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்தை கொண்ட தற்போதைய நிலை கி.பி.16ம் நூற்றாண்டு வரை உருவாகி இருக்கவில்லை. காரணம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கணக்கற்ற இராஜ்யங்கள் சுதேசி மாகாணங்கள் சிற்றரசுகள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் பகைமை கொண்டு பிரிந்து இருந்தனர். ஒன்றுபட்ட இந்தியா என்பதே மொகலாயர்கள் இந்தியாவுக்கு வந்து டெல்லியை கைப்பற்றி பின்னர் தென்னிந்தியா வரை கைப்பற்றி அகன்ற பாரதத்தை தங்கள் கையில் வைத்திருந்தனர். பின்னர் ஆங்கிலேயர் அதை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து பிடுங்கி கொண்டனர். கடைசியில் 20ம் நூற்றாண்டில் மத்தியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து. சுதேசி மாகாணங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இன்றைய இந்தியாவை சிந்தாமல் சிதறாமல் ஒரு அமைப்பாக கொண்டு வந்ததில் மொகாலயர் மற்றும் ஆங்கிலேயருக்கு தான் நன்றி சொல்லணும். இல்லையென்றால் இன்று பல மாகாணங்கள் நாடுகளாக அப்போதே பிரிந்து போய் வேற்றுமையில் ஒற்றுமை என்ற எண்ணமே அடிபட்டு போயிருக்கும். இன்றைய இந்தியா என்ற நாடு முழுமையாக உருவாகியிருக்காது. இனி மொகாலய பேரரசை உருவாக்கிய பாபரிலிருந்து ஆரம்பிப்போம்.
கி.பி.1483 ல் பிப்ரவரி 14ல் (அட காதலர் தினத்தன்று) இன்றைய உஸ்பெஸ்கிஸ்தானிலுள்ள ஆன்டிஜென் என்னுமிடத்தில் பிறந்தவர். காதலர் தினத்தன்று பிறந்தவர் என்பதாலே என்னவோ மனைவிகள் எண்ணிக்கை மட்டுமே 10. ஆனாலும் தொடர்ச்சியான அலைகழிப்புகள் தோல்விகள் இவற்றால் காதலின் சுவையை முழுவதுமாக அறிய முடியாவிட்டாலும் காதலை நன்கு உணர்ந்தவர் தான். இவருக்கு 4 மகன்கள் 4 மகள்களும் உண்டு. தந்தை வழியில் துருக்கியரான தைமூர் வம்சத்தையும் தாய் வழியில் மங்கோலியரான செங்கிஸ்கான் வம்சத்தையும் கலந்து பிறந்தவர். மங்கோலியர்கள் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் என்ற எண்ணத்தை கொண்டிருந்த அவருக்கு பின்னால் அவருடைய வம்சம் மொகலாயர்கள் என்ற பெயரில் மங்கோலியர்கள் என்பதை நினைவுப்படுத்த போவதை அவர் அறியவில்லை. மேலும் அன்று கி.பி.1528ல் அவரின் உத்தரவால் அவரின் தளபதியான மீர்பாகியால் அயோத்தியில் கட்டப்பட்ட மசூதியினால் (பாப்ரி மஸ்ஜித்) 21ம் நூற்றாண்டு வரை 500 ஆண்டுகளுக்கு அவர் பெயர் சர்ச்சையில் அடிபடப்போவதையும் அவர் அறியவில்லை. கி.பி.1526ல் இப்ராஹிம் லோடியை டெல்லிக்கு அருகிலுள்ள பானிபட் போர்களத்தில் வென்று அங்கேயே ஒரு மசூதி கட்டினார். அதற்கு தன் மனைவியின் பெயரை வைத்தார். இன்று அந்த மசூதி தொல்பொருள் இலாகாவால் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் பெயரால் தளபதியினால் கட்டப்பட்ட மசூதி தான் இன்று வரை சர்ச்சைகளை சுமந்தே வருகிறது. கி.பி.1992 டிசம்பர் 6ல் இடிக்கப்படடும் விட்டது. அதெல்லாம் விட்டுவிட்டு இப்போது "பாபர் நாமா (பாபரின் சுய சரிதை- அவரே எழுதியது) வில் தன்னை பற்றியும் தன் தந்தையை பற்றி தான் எதிர்கொண்ட துரோகங்கள் சூழ்ச்சிகள் பின்னர் அடைந்த வெற்றிகளையும் முன்னோர்கள் ஆண்ட தேசமான காபூல் அரியணையின் மீது கொண்ட ஆசையும் புலப்படுத்துவதையும் பார்க்கலாம்.
ஜரோப்பாவையும் ஆசியாவையும் கலங்க வைத்த துருக்கிய சேர்ந்த மன்னனான தைமூரின் (இவர் தான் கி.பி.1398ல் டெல்லி மீது படையெடுத்து வந்து துக்ளக் பரம்பரையை முடித்து வைத்து டெல்லியில் மட்டுமே 5 லட்சம் மக்களை கொன்று குவித்து இரத்தம் ஆறாக ஒடிய வரலாற்றை உருவாக்கியவர். போர்களத்தில் ஒரு அம்பு தொடையில் குத்திய பாதிப்பு இருப்பதால் சற்று விந்தி விந்தி நடப்பவராகதால் நொண்டி தைமூர் என்று கூட அழைக்கப்பட்டவர். அப்படி ஒரு பெயர் தனக்கு இருக்கும்னு தெரியும் ஆனால் அந்த பெயரில் தன்னை யாரும் அழைக்கமாட்டிக்குறார்களே என்று குரூர நகைச்சுவையாக தன்னை பற்றி எழுதிய குறிப்புகளும் உள்ளன) பரம்பரையில் வந்த உமர்ஷேக் மிர்ஸா என்ற சிற்றரசருக்கும் செங்கிஸ்கானின் நேரடி பரம்பரையில் வந்த குத்லூக் நிஹார் கானும் (மோகுஸிஸ்தானின் அரசரான செங்கிஸ்கான் பரம்பரையில் வந்த யூனுஸ் கானின் இரண்டாவது மகள் ) என்பவருக்கும் மகனான பிறந்தவர் தான் பாபர். துருக்கியர்கள் நாகரீகத்தில் சிறந்தவர்கள் மங்கோலியர்கள் யாருக்குமே அஞ்சாத நாடோடி போர்வீரர்கள். அதனால் தான் தன்னை துருக்கிய பரம்பரையில் வந்தவர் என்று அழைக்கவே பிரியப்பட்டார். தைமூரின் சாமர்கண்ட் தலைநகருக்கு 100 மைல் தொலைவிலுள்ள "பெர்கானா" என்ற பிரதேசத்தை தான் பாபரின் தந்தை உமர்ஷேக் மிர்ஸா ஆண்டுவந்தார். அவருடைய தந்தையை பற்றி வர்ணனைகள் பாபர்நாமாவில் "அவர் குள்ளம். பருத்த தொந்தி. அவர் சிரிக்கும்போதெல்லாம் மோலாடையின் பட்டன்கள் அறுந்துவிடும். என்ன பரிமாறினாலும் அதை ஒரு பிடி பிடித்து விடுபவர். படு ஜாலியான மனிதர். நல்ல பாரசீக கவிதைகளை உரத்த குரலில் பாடுவார். அழகான பெண்களை கண்டால் முகம் மலரும். குறும்புகள் கொப்பளிக்கும். குத்துச்சண்டை என்று வந்துவிட்டால் எதிராளி இவரின் ஒரு குத்திற்கு மேல் களத்தில் இருந்ததே கிடையாது. கி.பி.1494 ஜீன் 8ம் தேதி மேல் மாடியில் தான் வளர்த்த புறாக்களுக்கு தீனி கொடுத்தபோது கால் தடுமாறியதால் புறாக்களுடோடு அவரும் பறந்து வந்து கீழே விழுந்த மறுகணம் அவர் உயிர் மேலே பறந்துவிட்டது"என்று ரசிக்கும் தன்மையாய் பாபர் விவரித்துள்ளார்.
தந்தை இறந்தபின் பெர்ஹானா அரசை ஏற்றபோது பாபருக்கு வயது 11. உமர்ஷேக் இறந்தவுடன் அவருடைய அண்டை நாடுகளை ஆண்ட மாமன்கள் இவர் அரசை கைப்பற்ற வந்தனர். அவர்களை எதிர்த்து மக்களையும் வீரர்களையும் திரட்டி விரட்டியடித்தார். படைத்தலைவர்களை அழைத்து "பெர்கானாவை மட்டுமே நம்பியிருந்தால் நாளை இதையும் இழக்க நேரிடும். அதனால் சாமர்கண்ட்டை கைப்பற்றி நம் பலத்தையும் செல்வாக்கையும் கூட்டவேண்டும் என்று கூறி படையெடுப்பை எடுக்கும்போது பாபருக்கு வயது வெறும் 13ஆகியிருந்தது. சாமர்கண்ட்டை நெருங்கிய போது தன் காதலியை தூக்கி செல்ல அண்டை பிரதேச இளவரசர்கள் படை முற்றுகையிட்டு இருந்தது. காதலர் தினத்தன்று பிறந்ததால் என்னவோ காதலின் மேல் மதிப்பு கொண்ட பாபர் அவருடைய காதலுக்கு உதவி புரிந்து அவர்களை சேர்த்து வைத்தார். இடையில் குளிர்கால புயல் சாமர்கண்ட்டை தாக்கவே பெர்கானா திரும்பி சில மாதங்களில் மீண்டும் பின்னர் 7 மாத முற்றுகைக்கு பின்னர் தனது 14 வயதில் சாமர்கண்ட்டை கைப்பற்றி அரியணையில் அமர்ந்தார். சாமர்க்ண்ட் நகரில் தைமூரின் கல்லறைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி அந்நகரிலுள்ள புகழ்பெற்ற நூலகங்களில் நேரத்தை செலவிட்டார். மாலை வேளைகளில் பூங்காக்களில் உலாவுதலும் வாடிக்கையாயிற்று. ஆட்சியில் அமர்ந்த 3 மாதங்களில் கடுமையான குளிர்காலம் மற்றும் பஞ்சத்தினால் இவரது தளபதிகளும் வீரர்களும் இவரை விட்டு விலகி சென்றனர். சாமர்கண்ட்டில் இருந்த நேரத்தில் பாபரை புறக்கணித்து சென்ற பெக் இனத்தை சேர்ந்த "அகமது டாம்பால்" மற்ற பெர்ஹானா பிரபுக்களுடன் சேர்ந்து பாபரின் இளைய சகோதரரான ஜஹாங்கீரை பெர்கானாவின் அரியணையில் அமர்த்தினார். இந்த நேரத்தில் பாபரின் தாயாரும் பாட்டியும் ஆன்டிஜென்னை கலவரக்காரர்களிடமிருந்து மீட்க வருமாறு கடிதம் அனுப்பினர். கடிதம் கொண்டு வந்த தூதுவன் நோய்வாய்ப்பட்டு முடங்கியிருந்த பாபரின் நிலையை பார்த்து ஆண்டிஜென் ஆளுநரிடம் அரசர் பிழைப்பது கடினம் என்று தெரிவிக்க ஆளுநர் கலகக்காரர்களிடம் ஆன்டிஜென் நகரை ஒப்படைத்தார். உடல்நலம் தேறி சாமர்கண்ட் நகரை நோக்கி புறப்பட்ட அவருக்கு "சுல்தான் அலி" இவர் சாமர்கண்ட்டை விட்டு சென்றதும் அதை கைப்பற்றிய செய்தி வந்து சேர்ந்தது. தந்தையின் சகோதரரான மகமூத் கானை மங்கோலிய படைவீரர்களுடன் அனுப்ப அவரும் கலகக்காரர்களுடன் சமாதானம் செய்து திரும்பிவிட்டார். துரோகங்கள் மற்றும் சோகங்கள் அடுத்தடுத்த இழப்புகள் அவரின் வாழ்வை தாக்கவே பாலைவனத்தின் நடுவே சிறு நகரான "கோஜன்ட்" மட்டுமே அவருக்கும் அவர் படையில் உள்ளவர்களுக்கும் இருப்பிடமாக இருந்தது. ஆன்டிஜென் கலகக்காரர்கள் அவருடைய பாட்டியையும் தாயையும் ஒன்றும் செய்யாமல் விட அவர்களும் பாபருடன் வந்து சேர்த்துக் கொண்டனர்.
கோஜண்ட் நகரில் பாலைவனத்துக்கு நடுவில் சிக்கிக்கொண்ட பாபருக்கும் அவர் வீரர்களுக்கும் உணவுபிரச்சினை ஏற்பட்டது. அதற்காக பக்கத்து கிராமங்களில் கொரில்லா தாக்குதல் நடத்தி உணவுப்பொருட்களை கைப்பற்றி காலத்தை ஓட்டினார். சில மாதங்களில் நிறைய வீரர்களை சேர்த்துக்கொண்டு பெர்கானாவை கைப்பற்றினார். தன்னுடைய சகோதரனான ஜஹாங்கீரை கொல்லாமல் விட்டதுடன் பெர்கானாவை இருவரும் ஆளலாம். உன் படையை கொண்டு சாமர்கண்ட்டை வெற்றிக்கொள்ளுகிறேன். பிறகு உனக்கு பெர்ஹானா எனக்கு சாமர்கண்ட் என்று தம்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெர்ஹானில் சில மாதங்கள் நிம்மதியாக கழிந்தது. பெர்ஹானாவில் தனது 16 வயதை எட்டியவுடன் உறவுக்கார பெண்ணான ஆயிஷா சுல்தான் பேகத்துடன் முதல் திருமணம் நடந்தது. இவருடனான இல்லற வாழ்க்கை இனிக்கவில்லை. இருவருக்கும் ஒத்துவராததால் பின்னர் சில வருடங்களில் இவர் பிரிந்து சென்று விட்டார். பாபருக்கு இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லை என்பதை அவரே பாபர் நாமாவில் குறிப்பிட்டாலும் மொத்தம் அவருக்கு 10 திருமணங்கள் நடந்தது. ஆயிஷா சுல்தான் பேகத்தை விட்டு விலகினாலும் அவரின் தங்கையான மஸூமா பேகத்தின் காதல் வலையில் வீழ்ந்தார். மஸூமா பேகமே இவரின் காதல் மனைவி. இது போக பாரசீக மன்னர் அன்பளிப்பாக அனுப்பிய ஐரோப்பிய அழகிகள் இருவரும் மனைவி அந்தஸ்து இல்லாமல் காதலிகளாக இருந்தனர். இதற்கிடையில் சாமர்கண்ட்டை கி.பி.1500ல் தைமூர் வழிவந்த சைபானிகான் கைப்பற்றினார். சாமர்கண்ட்டை மீட்க சென்ற பாபர் இரவு நேரத்தில் அங்கு செல்ல மக்கள் ஆரவாரமிட்டு அமோக வரவேற்பு கொடுக்க சைபானிகான் மற்றும் அவர் படைகளும் நகரமே தம்மை தாக்க முயல்வதாக கருதி சாமர்கண்ட்டை விட்டு ஓடினார். பின்னர் சில மாதங்களில் சைபானிகான் பெரும்படையுடன் வந்து போரிடாமல் முற்றுகையிட சாமர்கண்ட் கோட்டைக்குள் உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட கழுதைகளை சுட்டு சாப்பிட்டதாக பாபர் எழுதியுள்ளார். வேறு வழியின்றி சமாதானமாக போக சைபானிகானுக்கு தன் தங்கையான கான்ஸாதா வை திருமணம் செய்து கொடுத்து சத்தமில்லாமல் ஒருநாள் இரவு பாபரும் அவர் வீரர்களும் குடும்பத்தினரும் கோட்டையை விட்டு தப்பி சென்றனர்.
சாமர்கண்ட்லிருந்து தன் மாமன்கள் வசித்த தாஷ்கண்ட் வந்து சேர்ந்தார். விரக்தியின் விளிம்பில் இருந்த பாபருக்கு மாமன்களும் உறவினர்களும் உதவி செய்ய தான் பிறந்த பெர்கானாவை மீண்டும் கைப்பற்றினார். ஆனால் திரும்பவும் சில மாதங்களில் சைபானிகான் வந்து பெர்கானாவை கைப்பற்ற மீண்டும் ஓட்டம்.
கி.பி.1504ல் காபூல் சுல்தான் மரணமடைய அவரின் மகன் ஆட்சிக்கு வந்தார். காபூலின் மீது படையெடுத்து சென்ற பாபருடன் வழியெங்கும் இளைஞர்கள் இணைத்து கொள்ள காபூலை அடைந்தது. பாபரின் படை 4 பிரிவாக பிரித்து காபூலை தாக்க தொடங்கப்போகிறது என்ற கிளப்பிவிட்ட பொய்செய்தியினால் சம்பிரதாயத்துக்கு போரிட்ட சுல்தான் ஒடி ஒளிய காபூலில் அரியணையில் அமரும்போது அவருக்கு வயது 22 தான் ஆகியிருந்தது. காபூலில் ஆட்சி அமர்ந்த அடுத்த வருடம் கி.பி.1505 ஜீன் மாதத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியான காய்ச்சலால் அவருடைய தாயார் குத்லூக் நிஹார் கானும் மறைந்தார். அவருடைய உடல் காபூலில் நியூ இயர் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இத்தகைய சிறு வயதில் பற்பல தோல்விகள் துரோகங்கள் எல்லாம் கடந்து அரியணையை கைப்பற்ற உதவியது பாபரின் அசாத்திய மனவலிமை தான். தோல்வியில் துவண்டு விடவில்லை. உடல் வலிமை மிக்கவர் அதனால் அவ்வப்போது தன் இரு நண்பர்களை இரு கையில் தூக்கிக்கொண்டு ஒடி தன் வலிமையை மேம்படுத்தி கொள்வாராம். குதிரையேற்றம் மல்யுத்தம் வாட்பயிற்சிகளை தினமும் தவறவிட்டதில்லையாம். நீச்சலடிப்பதில் மிகப்பிரியமானவர். இந்தியாவின் படையெடுக்கும் போது கங்கை நதியை இரு முறை நீந்தி கடந்தாராம். மது குடிப்பதில் ஆர்வமில்லாத இவர் தாஷ்கண்ட் நகருக்கு சென்றபோதும் கூட மது அருந்தாமல் இருந்தவர் பிற்காலத்தில் அந்த பழக்கம் பழகி மொடாக்குடியர் என்ற அளவில் மதுப்பிரியர் ஆனார். பின்னர் கி.பி.1527ல் ராணா சங்காவுடன் நடைபெற்ற போருக்கு முன் மதுபாட்டில்களை உடைத்து அன்றோடு மதுவை மறந்தவர். கி.பி. 1507ல் அவரது மனம் கவர்ந்த மஸூமா பேகத்தை (இவர் முதல் மனைவி ஆயிஷா பேகத்தின் தங்கை - முதல் மனைவி இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார்) தனது ஏழாவது மனைவியாக திருமணம் செய்தார். பாபர்-மஹேம் பேகத்துக்கு கி.பி.1508 மார்ச் 7ல் மூத்த மகனான நஸ்ரூதின் ஹீமாயூன் பிறந்தார். பின்னர் கி.பி.1509ல் கம்ரான் மிர்ஸா கி.பி.1516ல் அஸ்காரி மிர்ஸாவும் பாபர்-குல்ரூக் பேகத்திற்கும் கி.பி. 1519ல் ஹிண்டல் மிர்ஸா பாபர்-தில்தார் பேகத்திற்கும் என 4 மகன்களும் பிறந்தனர். இது போக ஷாரூக் மிர்ஸா என்ற மகனும் பிறந்து இறந்தார். இது போக மொத்தம் அவருக்கு 17 குழந்தைகளில் எட்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. மீதி நான்கு மகள்களுள் குல்ஃபதீன் பேகம்,மஸூமா பேகம் (இறந்த காதல் மனைவியின் நினைவாக மகளுக்கு இதே பெயரிட்டார்) ஃபகிர்-உன்-நிஸா மற்றும் அய்ஸான் தெளலத் பேகம் என்று நான்கு மகள்கள் பெயர்கள் மட்டுமே அறியப்படுகிறது.
இவரது மனைவிகளின் விவரம் :
1)ஆயிஷா சுல்தான் பேகம்,
2)பீபி முபாரிகா யூசுவ்சே,
3)தில்தார் பேகம்,
4)குல்நார் அகச்சா,
5)குல்ருக் பேகம்,
6)மஹேம் பேகம்,
7) மஸூமா பேகம் (இவர் முதல் மனைவி ஆயிஷா சுல்தான் பேகத்தின் தங்கை)
8)நார்குல் அகச்சா,
9)சாயிதா அஃபாக் மற்றும்
10)ஸெய்னாப் சுல்தான் பேகம்.
இது போக இரண்டு ஐரோப்பிய பெண்கள் மனைவி அந்தஸ்த்து இல்லாமல் ஆசைநாயகியாக இருந்தனர்.
இவரது மகன்-மகள்களின் விவரம்:
a) பாபுல் மிர்ஸா :
மஹேம் பேகத்தின் மகன். குழந்தையிலையே மரணமடைந்து விட்டார்
b) ஃபரூக் :
மஹேம் பேகத்தின் மகன். இவரும் குழந்தையிலையே மரணமடைந்து விட்டார்.
c) அய்ஸான் தெளலத் பேகம் :
மஹேம் பேகத்திற்கு பிறந்த மகள். குழந்தையிலையே மரணமடைந்து விட்டார்.
d) மிஹிர் ஜான் :
மஹேம் பேகத்தின் மகள். குழந்தையிலையே மரணமடைந்து விட்டார்.
e) பஹ்கர்-அல்-நிஸா :
ஆயிஷா சுல்தான் பேகத்தின் மகள். இவர் குழந்தையிலையே மரணமடைந்து விட்டார்.
f) ஹூமாயூன்:
மஹேம் பேகத்தின் மகன். பாபருக்கு பிரியமான மகன். பாபருக்கு பின் டெல்லி அரியணையில் ஏறியவர். கி.பி.1508ல் பிறந்தவர். இவர் கி.பி.1556ல் மறைந்தார்.
g) அஸ்காரி மிர்ஸா:
இவர் குல்ரூக் பேகத்தின் மகன். கி.பி.1516ல் பிறந்தவர்.இவர் மறைந்தது கி.பி.1558ல்
h) காம்ரான் மிர்ஸா:
இவரும் குல்ரூக் பேகத்தின் மகன் தான். கி.பி.1509ல் பிறந்தவர். இவர் மறைந்தது கி.பி.1557ல்.
i) ஹிண்டல் மிர்ஸா:
இவர் தில்தார் பேகத்திற்கு பிறந்தவர். பாபர் முதன்முதலில் இந்தியாவுக்கு வரும்போது பிறந்ததால் ஹிண்டல் என்ற பெயரை வைத்தார். ஹிந்துகுஷ் என்ற பெயரிலிருந்து இட்ட பெயர். ஹூமாயூனுக்கு மிகவும் பிரியமான தம்பி இவர். கி.பி.1518ல் பிறந்த இவர் கி.பி.1551ல் ஹூமாயூனுக்காக காம்ரான் மிர்ஸாவுடன் நடந்த போரில் இறந்தார்.
j) குல்பதீன் பேகம்:
இவர் தில்தார் பேகத்திற்கு பிறந்த மகள்.
k) மஸூமா பேகம்:
இவர் மஹூமா பேகத்திற்கு பிறந்த மகள். இவரது பிறப்பின் போது இவரின் தாய் பிரசவத்தில் இறந்ததால் அவரின் பெயரே இவருக்கும் இடப்பட்டது.
கி.பி.1504ல் காபூலில் அரியணை ஏறிய பாபரை தேடி கி.பி.1508ல் அவரது மங்கோலிய மாமன் அகமது கானின் மகன் சையது கான் பாபரின் பரம எதிரியான சைபானிகானினால் துரத்தப்பட்டு புகலிடம் தேடி வந்தார். தனக்கு முன்பு புகலிடம் கொடுத்த உறவு என்பதால் பாபர் இவரை நன்கு கவனித்துக் கொண்டார். 2 1/2 ஆண்டுகாலம் காபூலில் குடித்ததால் வரும் தலைவலியை தவிர வேறு வலி அவருக்கு வந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பாபரின் பங்காளி கான் மிர்ஸா இவர் ஏற்கனவே பாபரின் அரியணையை கைப்பற்றி பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டு மன்னிக்கப்பட்ட இவர் படக்கஸ்தானில் உள்ள சிறிய பகுதிக்கு ஆளுநராகும் ஆசையில் பாபரை விட்டு பிரிந்து செல்லும் போது அவனுடைய சூழ்ச்சி திறன் கொண்ட பாட்டி ஷாபேகத்தையும் உடன் அழைத்து சென்றது பாபருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். கான் மிர்ஸா தனது ஆயுள் காலம் வரை பாபருக்கு அடங்கியே படக்கஸ்தானை ஆண்டு வந்தான். கி.பி.1510ல் குளிர்காலத்தில் கான் மிர்ஸாவின் தூதுவன் பாபருக்கு தூது கொண்டு வந்தான். பாரசீக அரசன் ஷா இஸ்மாயில் படைகள் சைபாலி கானை வென்றதாகவும் உஸ்பெக்குகள் கொரோசானை விட்டு குணிடுஷ் பகுதிக்கு ஒடியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்கு முன்பே ஷா இஸ்மாயிலின் போரினால் சைபாலி கான் கொல்லப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டு அவரின் மண்டை ஓடு அழகிய வேலைப்பாடு அமர்ந்த மது கிண்ணமாக மாறியது பாபருக்கு தெரியாது. இதற்கிடையில் பாபரின் படை உஸ்பெக்குகளின் சைபாலி கானின் தளபதியான ஹம்சா சுல்தான் தலைமையிலான படைகளை தோற்கடித்து பாரசீக மன்னர் ஆதரவுடன் தனது மூதாதையரான தைமூரின் சாமர்கண்ட் அரியணையில் கி.பி.1511ல் அமர்ந்தார்.எட்டு மாதங்கள் சாமர்கண்ட்டில் ஆட்சி செய்த பாபர் கி.பி.1512 மே மாதத்தில் சாமர்க்ண்ட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் கி.பி.1519வரை அவரின் டைரி குறிப்புகள் காணப்படவில்லை. மீண்டும் கி.பி.1519ல் இந்திய படையெடுப்புகளிலிருந்து குறிப்புகள் உள்ளது. கி.பி.1504ல் காபூலை கைப்பற்றியவுடன் இந்தியாவுடன் நடந்த வணிகத்தை பார்த்து மிரண்டு செல்வ செழிப்பான இந்தியாவை கைப்பற்ற வேண்டும் அதன் வளங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவரின் ஆவல் கி.பி.1519ல் படை திரட்டி ஒரு மணி நேரத்திற்குள் பீஜப்பூர் கோட்டையை கைப்பற்றினார். படையினர் கொள்ளையிடுவதையும் சூறையாடுவதையும் தடுத்து பொதுமக்களிடம் வரி வசூலித்து படைவீரர்களுக்கு பிரித்து கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1519 முதல் கி.பி.1526 வரை எட்டு ஆண்டுகளில் ஹிந்துஸ்தானுக்குள் 5 முறை படையுடன் நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல்முறை கி.பி.1519ல் ஹிந்துஸ்தான் வந்த போது பிறந்த மகனுக்கு அதனால் தான் ஹிண்டல் மிர்ஸா என்ற பெயரை சூட்டினார். பாபரின் நினைவுகுறிப்புகளில் பீரங்கி பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. அவற்றை கையாளுவதில் திறமை வாய்ந்தவராக உஸ்தாத் அலிகுலி என்பவர் இருந்ததாகவும் பீரங்கி ஒன்று உருவாக்கப்படுவதை நேரில் கண்டதாகவும் பாபரின் குறிப்புகளில் உள்ளது. இந்தியாவுக்கு சிந்து நதியினை கடந்து தனது முன்னோர் தைமூர் வழியில் பஞ்சாப் மீது தனக்கு உரிமை இருப்பதாக டெல்லிக்கு தகவல் அனுப்ப அவரின் தூதுவன் லாகூரிலையே தடுத்து நிறுத்தப்பட்டான். இதனால் ஜீலம்-செனாப் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளை கைப்பற்றி தனது ஆட்களை ஆளுநராக நியமித்து விட்டு காபூல் திரும்பினார்.
ஹிராட்டில் அவரது மாமன் மகன்கள் வற்புறுத்தியபோதும் கூட மது அருந்தாமல் அந்த பழக்கம் இல்லாமல் இருந்த அவருக்கு எப்போது அந்த பழக்கம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. கி.பி.1519ல் கபீர்ஸ்தான் நாட்டு மதுவை பசவூர் கோட்டையில் அருந்தியதாக குறிப்பிட்டுள்ளார். சில நாட்கள் பின்னர் கிமால் எனப்படும் அதிக போதை தரும் போதைப்பொருளை உபயோகித்ததால் அரசவைக்கு செல்ல கூட முடியவில்லை என்றும் பின்னர் அவர் போலஸ், கஞ்சா, அபின் மற்றும் பாங் எனப்படும் போதைப்பொருட்களையும் அதிக அளவில் உபயோகிக்க ஆரம்பித்ததாக கூறியுள்ளார். பீரை மட்டும் விரும்பியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சிற்றின்பங்களையும் காண்டாமிருகம் மற்றும் புலிகளை வேட்டையாடுவதையும் விட்டுவிடவில்லை. கி.பி.1525 டிசம்பர் மாதத்தில் ஜீரத்தினாலும் வயிற்றுபோக்கினாலும் பாதிக்கப்பட்டு இரத்த வாந்தி எடுத்த போதும் குடிப்பழக்கத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டார். ஆனாலும் குடியை நிறுத்தாத பாபர் கி.பி.1527 பிப்ரவரி 25ம் தேதி சிக்ரிக்கு அருகில் மேவார் ராணா சங்காவுக்கு எதிராக போரிட தயாராகும் வேளையில் அவரின் படைவீரர்கள் காபூலுக்கு திரும்பும் ஆசையில் இருந்த போது "ஒரு காலத்தில் நிற்க கூட இடம் இல்லாத நிலையிலும் பின்னர் அல்லாவின் கருணையினால் காபூலின் அரசை கைப்பற்றினோம். அல்லாவின் விருப்பம் ஹிந்துஸ்தான் என்றால் நாம் யார் அதை மீறுவதற்கு. உங்களுக்கு தெரியும் நான் மது குடிப்பதில் எவ்வளவு பிரியமுள்ளவன் என்று. அல்லாவின் ஆசையை நிறைவேற்ற இன்றுமுதல் மது குடிக்க மாட்டேன்" என்று வீரர்களிடைய வீர உரை நிகழ்த்தி மது ஜாடிகளை போட்டு உடைத்தார்.
கி.பி.1519 முதல் கி.பி.1526 வரை ஜந்து படையெடுப்புகளை இந்தியாவின் மீது நிகழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளார். இப்ராஹிம் லோடிக்கும் அவரது சகோதரருக்கும் வாரிசுமை போரில் இப்ராஹிம் லோடி வெற்றி பெற்ற பின்னர் டெல்லி அரசு குடும்பத்தை சேர்ந்த ஆலம் கான் எனப்படும் இப்ராஹிம் லோடி சுல்தானின் மாமன் முறையிலான அலாவூதின் என்ற இளவரசனும் காபூலில் பாபரை சந்தித்து தன்னை டெல்லியில் அமர உதவி புரியுமாறு கேட்க இதற்கிடையில் லாகூரின் ஆளுநராக இருந்த தெளலத்கான் என்ற பிரபுவும் டெல்லி சுல்தானான இப்ராஹிம் லோடியினால் அவமானப்படுத்தப்பட்ட காரணமாக காபூலில் இருந்த பாபருக்கு அழைப்பு விடுத்தார். வரும் வழியிலையே பாபர் இப்ராஹிம் லோடியை வெல்வது மட்டுமல்ல டெல்லியின் அரியணையில் அமர ஆசைப்படும் விஷயம் தெரிந்து தெளலத்கான் பாபரை எதிர்த்து போர் புரிந்து விரட்டினார். பின்னர் மீண்டும் 50000 வீரர்களுடன் படையெடுத்து வந்து தெளலத்கான்னை தோற்கடித்தார். தெளலத்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று உத்தரவிட்ட பாபரின் உத்தரவை மீறிய அவரது தளபதியை பாபரே வெட்டி வீழ்த்தினார். இது தனது படையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கிறார். பின்னர் தெளலத்கான்னை அழைத்து சகோதரா நீங்கள் தான் என்னை வலிந்து உங்கள் துன்பத்திலிருந்து விடுபட அழைத்து பின்னர் எதிர்க்கலாமா? என்று கேட்க பின்னர் தெளலத்கான்னை மன்னித்து லாகூரை ஆளவும் கட்டளையிட்டார். அதன் பின்னரும் அவர் திருந்தாமல் எதிர்க்க ராவி நதிக்கரையில் தோற்று சரணடைய அவருக்கு உயிர்ப்பிச்சை அளித்த பின்னர் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் தெளலத்கான் இறந்து போனார். பின்னர் டெல்லி நோக்கி சென்ற பாபரின் படையை இப்ராஹிம் லோடியின் படை கி.பி.1526ல் ஏப்ரல் 21ம் தேதி பானிபட் போர்களத்தில் சந்தித்தது. (முதலாம் பானிபட் போர்) அப்போது தான் பாபரின் படையில் துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் அறிமுகமாகி இருந்தது. வட இந்தியாவில் அதுவரை துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் எந்த போர்களத்திலும் பயன்படுத்தப்படவில்லை. மதியம் ஆரம்பித்த போர் பாபரின் துப்பாக்கி, பீரங்கி மற்றும் குதிரைப்படையின் சாகசத்தால் மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பே பாபருக்கு வெற்றியாக முடிந்தது. முண்ணனியில் வந்த இப்ராஹிம் லோடியின் யானைப்படையை பாபரின் துப்பாக்கி மற்றும் பீரங்கி படையின் சத்தங்கள் மிரட்டலுடன் தாக்க துவங்க யானைகள் சத்தத்தினால் மிரண்டு திரும்பின. லோடியின் தளபதிகள் திரும்ப எத்தனிப்பதற்குள் சுற்றி வளைத்து பாபரின் துப்பாக்கிகள் டெல்லியின் படையை கொன்று குவிக்க போர் ஒருதரப்பாக முடிந்தது. போர்களத்தில் வீரர்களிடையே சுல்தான் இப்ராஹிம் லோடியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் பானிபட் போர்களத்திலையே புதைக்கப்பட்டது. இன்றும் அந்த சமாதி பானிபட் நகரின் கடைவீதிக்கு அருகில் பூங்காவின் ஒரமாக பராமரிப்பின்றி உள்ளது. அந்த பூங்காவில் பானிபட் போரின் நினைவாக பீரங்கி மற்றும் வீரர்களின் நினைவுச்சின்னம் சிலை நிறுவப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கே அது பானிபட் போர் களம் என்றோ இப்ராஹிம் லோடியின் கல்லறை எங்குள்ளது என்று தெரியாத அளவில் உள்ளது. பின்னர் டெல்லி வந்து அரியணையில் ஏறிய பாபர் இப்ராஹிம் லோடியின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் அரண்மனையில் தனி பகுதியை ஒதுக்கினார். ஆனாலும் இப்ராஹிம் லோடியின் தாயார் பாபரின் சமையற்காரனுக்கு கையூட்டு கொடுத்து உணவில் விஷம் கலந்தார். உணவை ஒரு கவளம் ருசித்த பாபரின் வயிற்றின் சுரீரென வலி ஏற்பட ஒவ்வாமையினால் வாந்தி எடுக்கவே உயிர் பிழைத்ததாக பாபர்நாமாவில் குறிப்பிடுகிறார். பின்னர் என்ன சமையல்காரன் தோல் உயிரோடு உரிக்கப்படடு கழுவில் ஏற்றி கொல்லப்பட்டான். இப்ராஹிம் லோடியின் வயது முதிர்ந்த தாயை கொல்லாமல் சிறையில் அடைத்தார். பின்னர் காவலருக்கு லஞ்சம் கொடுத்து சிறையிலிருந்து தப்பித்த அவரின் தாயார் நேராக யமுனை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். டெல்லியை கைப்பற்றியவுடன் ஆக்ராவுக்கு தனது 17 வயது ஹீமாயூன் தலைமையில் படைகளை அனுப்ப அங்கே ஒளிந்திருந்த இப்ராஹிம் லோடிக்கு போர்களத்தில் உதவியாக வந்து தோற்றோடிய குவாலியர் மன்னர் விக்ரம்ஜித்தின் குடும்பத்தை சிறைப்படுத்த அதற்கு ஈடாக இன்றும் உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை ஹீமாயூனிடம் கொடுத்து தப்பித்துக் கொண்டார். பின்னர் ஹீமாயூன் அந்த கோஹினூர் வைரத்தை பாபருக்கு பரிசாக தர அதன் மேல் ஆர்வமில்லாமல் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டதாக கூறினார். மேலும் ஹீமாயூனுக்கு போரின் வெகுமதியாக 70 லட்சம் ரூபாய் அன்றைய மதிப்பில் வழங்கப்பட்டது. டெல்லி ஆக்ராவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டு காபூலில் உள்ள ஒவ்வொராவருக்கும் ஒரு வெள்ளி நாணயம் வழங்க உத்தரவிட்டார். அது மட்டுமல்லாது போருக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கியவர்களுக்கும் பாசறை பணியாளர்களுக்கும் வெகுமதி வழங்கினார். பெர்கானா, கொரோசான், கந்தஹார் மற்றும் பாரசீகத்திலிருந்த நண்பர்களுக்கும் பரிசுப்பொருட்கள் அனுப்பப்பட்டது. செல்வத்தின் மீதோ நவரத்ன கற்களின் மீதோ பாபருக்கு ஆசையில்லாததால் டெல்லியில் கொள்ளையிட்ட பொருட்களை ஊதாரித்தனமாக எல்லோருக்கும் வாரி வழங்கியதால் "கலாந்தர் (பிச்சைக்கார ஆண்டி)" என்ற பட்டப்பெயரினை பெற்றார்.
கி.பி.1527ல் மார்ச் மாதம் ராணா சங்காவின் படைகளுடன் இப்ராஹிம் லோடியின் சகோதரனான மகமூத் லோடி தனது 10000 வீரர்களுடனும் பில்சாவின் தலைவன் 30000 வீரர்களுடன் சேர்ந்து கன்வா போர்களத்தில் பாபருடன் மோதியதில் பாபர் வெற்றிபெற்றார். தோல்வியுற்றாலும் பாபர் தனது குணநலன்களுடன் வீரத்தையும் கருணையையும் கொண்டிருந்த ராணா சங்காவை மிகவும் போற்றி புகழ்ந்துள்ளார். இதன் பின்னர் ராணாவின் நண்பரின் இராஜ்யமான சந்தோரியை அடைந்தார். ராணா சங்காவின் தளபதியும் நண்பருமான மெதினிராய் 5000 வீரர்களுடன் இருந்தார். போரிடுவதற்கு முன்பு கோட்டையில் கூச்சல் குழப்பம் கேட்டது. இராஜபுத்ர பெண்களையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு நிர்வாணமாக கோட்டை வாசலை திறந்து போரிடுவதற்காக வந்த இராஜபுத்ரர்களை கண்டு ஒருகணம் மலைத்து போனார். இராஜபுத்ரர்கள் மரணம் நிச்சயம் என்னும் போது குடும்பத்தை கொன்றுவிட்டு முற்றிலும் துறந்து போர்புரிந்து வீர மரணம் எய்துவார்கள் என்ற செய்தி பாபருக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சந்தேரியை வென்று அதை கைப்பற்றினார். பின்னர் எதிர்த்த இராஜ்யங்களை எளிதாக வென்று கி.பி.1528ல் அயோத்திக்கு வெளியே கூடாரமிட்டதுடன் ஏப்ரல் 8ம்தேதியுடன் அவரது குறிப்புகள் நின்றுவிட்டது. இடைப்பட்ட காலத்தில் உள்ள குறிப்புகள் கிடைத்திருந்தால் பாப்ரி மஸ்ஜித் உண்மையிலையே ராமர் கோவிலை இடித்துவிட்டு தான் கட்டினார்களா இல்லை வெற்று நிலத்தில் கட்டினார்களா என்ற விவரம் அவரின் சுயசரிதை மூலமாகவே உண்மை அனைவருக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்துஸ்தானில் திராட்சை பழங்களும் முலாம் பழங்களும் கிடைக்காததால் இவரே தோட்டத்தில் பயிரிட்டார். இந்தியாவின் வெப்பம் தாங்க முடியவில்லை. இங்கு ஐஸ்கட்டிகள் குளிர்ந்த தண்ணீர் கிடைப்பதில்லை என்று எழுதியுள்ளார். மாம்பழத்தின் சுவை இவருக்கு மிகவும் பிடித்தமானது. இவர் மட்டுமன்று ஓளரங்கசீப் வரை அனைத்து மன்னர்களுமே மாம்பழத்தின் மீது ஆசை கொண்டிருந்தவர்கள் தான். ஹீமாயூன் நோயுற்ற பின்னர் சம்பல் பகுதியிலிருந்து படகின் மூலம் கொண்டு வரப்பட்டார். பாபர் இறைவனிடம் என் மகனின் துன்பங்கள் என்னிடம் சேரட்டும் என்று வேண்டி மகனின் படுக்கையை மூன்று முறை சுற்றிவந்தார். மகன் படுக்கையிலிருந்து எழுந்த மூன்றாம் நாள் கி.பி.1530 டிசம்பர் மாதம் 30 நாள் இறந்து போனார். மற்ற செய்திகள் இறந்தது டிசம்பர் 26 என்று குறிப்பிடுகின்றன. ஆக்ராவில் புதைக்கப்பட்ட அவரது உடல் பின்னர் காபூல் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள அவருக்கு பிரியமான தோட்டத்தில் அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தில் அவரது சமாதி எழுப்பப்பட்டது.
முதலில் பாபரால் துருக்கிய மொழியில் எழுதப்பட்ட "பாபர் நாமா" பின்னர் 19ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் ஆங்கில மூலத்திலிருந்து பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
உதவிய நூல்கள்:
பாபர் - ஸ்டான்லி லேன் ஃபூல் (இந்த நூல் பாபர்நாமாவிலிருந்து எடுத்த குறிப்புகளுடன் ஆசிரியரின் கருத்தும் சேர்ந்துள்ளது)
மத்திய கால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் - முகில்
மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
அயோத்தி - என்.சொக்கன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்



Comments
Post a Comment