69) மொகலாய பேரரசு - ஹூமாயூன்
நஸ்ரூதீன் ஹீமாயூன் (கி.பி.1508-1556)
ஆட்சி : கி.பி.1530-1540 & 1555-1556
பிறந்தது காபூல் அரண்மனையில் செல்வ செழிப்பின் உச்சத்தில் இருக்கும்போது இருந்ததாலையோ என்னவோ இவர் சுபபோக வாழ்வையே விரும்பியவர். கி.பி.1508 மார்ச் 6ல் பாபருக்கும் அவர் மனைவியான மஹேம் பேகத்திற்கும் காபூலில் பிறந்தவர். பாபர் படைத்த சாம்ராஜ்யத்தின் மேலையே அருமையாக பயணித்திருக்க வேண்டியவர் இவரது பலவீனங்களாலையே வீழ்ந்து 15 வருடங்கள் அநாதையாக காடு மேடு எல்லாம் கடந்து பாரசீக மன்னரின் ஆதரவுடன் இருந்தவர். பின்னர் அவரின் உதவியாலையே 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா சிம்மாசனத்தையை கைப்பற்றினார். கைப்பற்றிய 6 மாதங்களுக்குள்ளையே மரணமடைந்ததும் காலத்தின் கொடுமை. மிகச்சிறந்த கலா ரசிகன் தத்துவ ஞானி ஜோதிட ஞானங்களை கற்று அறிந்தவர் மிகச்சிறந்த வீரர் நல்ல அழகன் என்ற பிளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும் இவரது மைனஸ் பாயிண்ட்களான எல்லாரையும் நம்புவது, அசாத்திய பொறுமை, தம்பிகள் தவறு செய்தாலும் கண்டிக்காதது, அசாத்திய குடி, அபின் பழக்கங்கள் மற்றும் அநதப்புரத்திலையே வாசம் ஆகியவை பாபருக்கு பின் பத்து ஆண்டுகளில் ஷெர்ஷாவால் இவரது ஆட்சியை பறித்து இவரை விரட்ட முடிந்தது.
இவரின் மனைவியர்கள் விவரம்:
1) ஹாஜி பேகம்
2) குன்வார் பீபீ
3) ஹமீதா பானு பேகம்
4) பிஹாஹ் பேகம்
5) மா சூசாக்
6) குல் பார்க் பேகம்
7) கானீஷ் ஆஹா
8) ஸாஸாதி காணும்
9) மிவேஹ் ஜான்
இவரது மகன் மகள்கள் விவரம்:
1) அல் அமன் மிர்ஸா:
ஹாஜி பேகத்தின் மகனான இவர் கி.பி.1528ல் பிறந்தார். குழந்தையிலையே இறந்துவிட்டார்.
2) பக்ஃஷி பானு பேகம்:
குன்வார் பீபீயின் மகளான இவர் கி.பி.1540ல் பிறந்தார்.
3) ஜலாலுதீன் முஹம்மத் அக்பர்:
ஹமீதா பானு பேகத்தின் மகனான இவர் கி.பி.1542ல் பிறந்தார். ஹூமாயூனுக்கு பின்னர் பட்டத்திற்கு வந்தவர் இவரே. சரித்திரத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுபவர் இவரே. கி.பி.1605ல் மறைந்தார். இவரின் சொத்து மதிப்பு 1350 லட்சம் கோடிகள் என்று தற்போதைய மதிப்பில் மதிப்பிட்டப்பட்டுள்ளது. அந்நாளில் உலகின் மிகப்பெரிய செல்வந்த அரசர் இவரே.
4) அக்கயா பேகம்:
பிஹாஹ் பேகத்திற்கு பிறந்த மகள். தனது 8வது வயதில் கி.பி.1539ல் இறந்தார்.
5) பக்ஃத் அல்-நிஸா பேகம்:
கி.பி.1550ல் பிறந்த இவர் மறைந்தது கி.பி.1608ல்.
6) மிர்ஸா முஹம்மத் ஹகீம்:
இவர் மா சூசாக்கிற்கு பிறந்த மகன். கி.பி.1553ல் பிறந்த இவர் கி.பி.1585ல் மறைந்தார்.
7) இப்ராஹிம் சுல்தான் மிர்ஸா:
8) முஹம்மத் ப்ரூக்ல்லா மிர்ஸா
9) மெஹருன்னிஸ்ஸா பேகம்
10) ஹகீனா பானு பேகம்
11) அமீனா பானு பேகம்
பாபருடன் கி.பி.1526ல் பானிபட் போரில் தளபதியாக பணியாற்றியபோது இவரின் வயது 18 தான். அப்போரில் வீரத்துடன் போரிட்டு லோடியை வீழ்த்திய பின் பாபர் டெல்லியில் அமர்ந்தபின் இவரின் தலைமையில் ஒரு படை ஆக்ராவிற்கு சென்றது. அங்கு ஆக்ரா கோட்டையில் ஒளிந்து கொண்டிருந்த இப்ராஹிம் லோடியின் கூட்டாளியான குவாலியர் மன்னர் விக்ரம்ஜித்தை குடுமபத்துடன் கைது பண்ணினார். அவர் ஹீமாயூனுடன் நடந்த பேரத்தில் பொன்னும் மணியும் அள்ளி கொடுத்ததுடன் உலகப்புகழ் பெற்ற "கோஹினூர்"வைரத்தையும் (அன்றைய எடை 320 கேரட்) சன்மானமாக கொடுத்தார். பின்னர் டெல்லி வந்து கோஹினூர் வைரத்தை பாபரிடம் கொடுக்க அதை திருப்பி பார்த்துவிட்டு ஹீமாயூனிடமே கொடுத்துவிட்டார். பானிபட் யுத்தத்தின் வெற்றியாக ஹீமாயூனுக்கு சன்மானமாக அன்றைய மதிப்பில் 70 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது (சில நூல்குறிப்புகளில் 4லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது).
கி.பி.1530ல் டிசம்பர் கடைசியில் நோய்வாய்பட்டிருந்த ஹீமாயூன் சம்பலிலிருந்து படகின் மூலம் ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்டார். பிரியமான மகனின் படுக்கையில் இறைவனிடம் கதறிய பாபர் என் மகனின் நோய்களை நான் அனுபவிக்கிறேன். அவனுக்கு சுகம் கொடு இறைவா என்று வேண்டி தன் மகனின் நோயை தன்னிடம் இடம் மாற்றிக்கொண்டதாக உணர்ச்சிகரமான நிகழ்வு சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வு நடந்திருக்குமான்னு என்று தெரியவில்லை. பாபர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த இறுதிக்காலத்தில் அவரது தங்கை கணவரான "மாது காஜ்வர்" அரசனாகலாம் என்ற ஆசையில் மண்ணை போட்டு இறப்பதற்கு முன்பு ஹீமாயூன் வந்து சேர்ந்ததாகவும் அவரே அரசராக பொறுப்பேற்றதாகவும் தெரிகிறது. தில்லியின் அரியணையில் அரசராக அமரும்போது ஹீமாயூனுக்கு வயது 22 தான். இவரின் வயதில் பாதியான 11ல் அரசராக அமர்ந்த இவரின் தந்தையின் வேகம் விவேகம் இவரிடம் இல்லை.
ஹீமாயூனின் ஆட்சியில் பேரரசின் வடக்கு பகுதியான "காபூல் மற்றும் கந்தஹார் (காந்தாரம்)" இவரின் தம்பியான காம்ரான் மிர்ஸா ஆட்சியின் கீழ் இருந்தது. அவர் மெல்ல லாகூரையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்தார். கேட்டதற்கு தான் என்றும் அண்ணனின் அடிமை என்றும் அண்ணனின் அரச பளுவை குறைப்பதற்காகவே பேரரசின் பகுதிகளை எடுத்துக்கொண்டேன் என்று கூறி முல்தான்னையும் எடுத்துக்கொண்டார். பாபரின் அறிவுரையால் தம்பியின் மீதுள்ள பாசத்தினால் இவரும் லாகூர் மற்றும் பஞ்சாப் பகுதிகளை மீட்க படைகளை அனுப்பவில்லை.
தம்பியின் உட்பகை மட்டுமின்றி வெளிப்பகையும் சேர்ந்தே இருந்தது. வங்காளத்தில் இப்ராஹிம் லோடியின் தம்பியான முகமது லோடியும் பீஹாரில் ஷேர் கான் (இவர் தான் பின்னாளில் ஷெர்ஷா என்றழைக்கப்பட்டவர்) தங்களது அரசை விரிவுபடுத்தினார்கள். அதிலும் இந்த ஷெர்ஷா நான் தங்கள் தந்தையின் அடிமை மட்டுமல்ல தங்களுக்கும் அடிமை பீஹார் பகுதியில் நான் தங்களுக்கு கட்டுப்பட்ட அரசாக அரசு புரிந்து கப்பம் கட்டுகிறேன்னு என்று சொல்லியே பின்னால் அவரை எதிர்த்து புறப்பட்டார். இது போக குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தை ஆண்ட "பகதூர் ஷா" வேறு தொல்லைகளை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார். இதற்கிடையில் போதை பழக்கம் குடி என்று எப்போதும் மிதந்ததால் அரசை இவரால் கவனிக்க முடியவில்லை.
ஹுமாயூன் ஷேர் கானுடன் நட்புறவு கொண்டு முகமது லோடியை தோற்கடித்தார். பின்னர் பகதூர் ஷாவை வென்று குஜராத் மற்றும் மாளவம் (மத்திய பிரதேசம்) பகுதிகளை கைப்பற்றினார். பகதூர் ஷா சில நாட்களில் இப்பகுதிகளை மீட்டுக் கொண்டார். முதலில் ஷேர் கானை நம்பி பின்னர் ஷேர் கானின் நடவடிக்கைகளில் சுதாரித்து அவரை தாக்கி "சூனார்" கோட்டையை வெற்றிக்கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். பின்னர் மறுபடியும் பழையபடி போதை மது என்ற பழக்கத்தில் மூழ்கி போக ஷேர் கான் ஹீமாயூன் மீது படையெடுத்து பீஹார், காசி மற்றும் "சூனார்" பகுதிகளை வெற்றிகொண்டார். கி.பி.1539 ஜீன் மாதத்தில் கங்கை சமவெளியில் புக்ஸர் என்னுமிடத்திற்கு அருகிலுள்ள "செளஸா" போர்களத்தில் ஹீமாயூனை தோற்கடித்தார். தோல்வி என்று சொல்லமுடியாது. போர்களத்தில் எந்தவித முறையான காவல் இல்லாமலும் குடித்தும் கும்மாளமிட்டு கொண்டிருந்த இவரின் படைகளை ஷேர் கான் திடீரென்று தாக்கி நிலைகுலைய வைத்தார். இந்த நேரத்தில் கங்கையாற்றில் மிதவையை பயன்படுத்தி நீந்தி கரையேறி ஹீமாயூன் உயிர்பிழைத்தது ஆக்ராவுக்கு ஓடினார். இதில் ஹீமாயூன் வங்காளம் மற்றும் பீஹார் பகுதிகளை ஷேர் கானிடம் இழந்தார்.
பின்னர் ஆக்ரா வந்த பின் ஹீமாயூன் மற்றும் அவரின் சகோதரர்களான காம்ரான் மிர்ஸா, அஸ்காரி மிர்ஸா மற்றும் ஹிண்டல் மிர்ஸா அனைவரும் சேர்ந்து ஷேர்கானை எதிர்த்து போரிட முடிவு செய்தனர். இராணுவத்தை காம்ரானின் கையில் ஒப்படைத்தால் தனது அதிகாரத்தை விட்டு நீங்கி விடுவார் என்ற சந்தேகத்தினால் காம்ரானின் பொறுப்பில் இராணுவத்தை ஒப்படைக்க ஹீமாயூன் மறுத்தார். இதனால் காம்ரான் மிர்ஸா பின்வாங்கி லாகூருக்கு சென்றுவிட்டார். அஸ்காரி மற்றும் ஹிண்டலுடன் ஹீமாயூன் ஆக்ராவிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள கன்னோசி போர்களத்தில் ஷேர் கானால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டார். பின்னர் இவர் ஆக்ரா திரும்ப ஷேர் கானும் ஆக்ராவிற்கு வர இவர் டெல்லியை நோக்கி ஓடினார். ஷேர் கான் டெல்லிக்கு விரைய ஹீமாயூன் அங்கிருந்து லாகூருக்கு தப்பி ஓடினார். டெல்லியில் அமர்ந்த ஷேர் கான் ஷெர்ஷா சூரி என்ற பெயருடன் சூரி வம்ச அரசை ஏற்படுத்தினார்.
கி.பி.1541ல் நான்கு சகோதரர்களும் லாகூரில் சந்தித்தனர். அந்த நேரத்தில் ஷெர்ஷா ஹீமாயூனை விரட்டியடிக்க லாகூரை நோக்கி வந்தார். "சிர்ஹிந்த்"என்னுமிடத்தில் ஷெர்ஷாவுக்கு ஹீமாயூன் தூதுவரை அனுப்பி தான் டெல்லி ஆக்ரா மற்றும் பஞ்சாப்பை விட்டு விலகி விட்டேன். சிர்ஹிந்த்தை எல்லையாக வைத்துக்கொள்வோம். லாகூரை எனக்கு விட்டுவிடு என்று கூற ஷெர்ஷா உங்களுக்காக காபூலை விட்டு தருகிறேன். அங்கேயே போய்விடுங்கள் என்று கூற காபூல் தனது சகோதரன் காம்ரானுக்கு தான் கொடுத்த அரசை எவ்வாறு கேட்க என்று மறுத்தார். இதற்கிடையில் காம்ரான் ஷெர்ஷாவுக்கு தூதுதனுப்பி பஞ்சாப்பை ஷெர்ஷாவுக்கு தருவதாகவும் அதற்கு பதில் தனக்கு போட்டியாக வரும் சகோதரனை தன்னிடம் ஒப்படைக்கணும் என்று கேட்டதை ஷெர்ஷா ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையில் லாகூரில் இருந்த சமயத்தில் ஹீமாயூன் அவரது தந்தையின் இன்னொரு மனைவியான "தில்தார் பேகம்" அளித்த விருந்தில் ஹமீதா பானு பேகத்தை கண்டதும் அவரிடம் காதல் கொண்டார். அந்த நேரத்தில் ஹீமாயூனுக்கு வயது 33. ஹமீதா பானு பேகத்திற்கு வயது 14. ஹமீதா சூபி ஞானியான "காலித் பெக்" என்பவரின் மகள். இவர் ஹீமாயூனின் சகோதரனான "காம்ரான் மிர்ஸா"வுக்கு குருவாக இருந்தவர். முதலில் ஹீமாயூனை மணக்க ஹமீதா பானு சம்மதிக்கவில்லை. நாட்டை இழந்த அரசனாக இருந்தாலும் மெல்ல மெல்ல அவரை சம்மதிக்க வைத்து அவரை லாகூரில் திருமணம் செய்துகொண்டார். இந்த ஹமீதா பானு பேகம் தான் பேரரசர் அக்பரின் தாயார். லாகூரிலிருந்து ஹீமாயூன் சிந்து பகுதிக்கு செல்ல எட்டுமாத கர்ப்பிணி மனைவியையும் சுமந்து கொண்டு தார் பாலைவனத்தை கடந்து சென்றார். இந்த நேரத்தில் இராஜபுத்ர "ராவ் மால்தோ ரத்தோர்" ஷெர்ஷாவுடன் சேர்ந்து கொண்டு ஹீமாயூனை விரட்டியடித்தார். இந்த நேரத்தில் பாலைவனத்தில் ஹமீதா பானு பேகத்தின் குதிரை இறந்து விடவே அவரை தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு 6 கி.மீ பயணித்து சிந்து பகுதியை அடைந்தார். தனது வாழ்க்கையில் சந்தித்த கொடுமையான நிகழ்வு இது தான் என்று பின்னாளில் கூறுகிறார். இந்த நேரத்தில் ஹிண்டல் மிர்ஸா ஹீமாயூனுக்கு உதவுவதற்காக கந்தஹாரிலிருந்து படைகளையும் அஸ்காரி,காம்ரான் ஆகியவர்களின் காபூல் படைகளை அனுப்ப சொன்னதற்கு காம்ரான் மற்றும் அஸ்காரி தங்களது காபூல் அரசுக்கு அதனால் பிரச்சினை ஏற்படும் என்று ஒதுங்கி கொண்டனர். சிந்துவுக்கு வந்த ஹீமாயூன்னை "ஹீசைன் உம்ரானி" என்ற அமீர் வரவேற்று உபசரித்தார். பின்னர் ஹீமாயூன் சிந்து பிரதேசத்திலுள்ள "அமர்கோட்"பகுதியை ஆண்ட இந்து அரசரிடம் புகலிடம் கேட்க அவரின் இடத்தின் பல மாதங்கள் ஹீமாயூன் படைகளும் புகலிடம் பெற்றது. இந்த நேரத்தில் கி.பி.1542ல் அக்டோபர் 15ம் நாள் ஹமீதா பானு பேகம் குழந்தை அக்பரை பெற்றெடுத்தார். குழந்தையின் ஜனன நேரத்தை கணித்த ஹீமாயூன் இவன் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற மன்னனாவான் என்ற குறித்தார். இந்துக்களை போல நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசியம் பார்க்கும் கலையில் ஹீமாயூன் தேர்ச்சி பெற்றிருந்ததே காரணம். பின்னர் 7 மாத குழந்தை அக்பருடன் சிந்து மற்றும் பலூசிஸ்தான் பழங்குடியினரையும் சேர்த்து கொண்டு கந்தஹாரையும் பின்பு காபூலை நோக்கியும் விரைந்தார். இதற்கிடையில் தானே தைமூரின் வம்சாவளியான பாபரின் உண்மையான வாரிசு என்று அறிவித்து கந்தஹார் மற்றும் காபூலில் உள்ள சகோதரர்களின் உதவியுடன் சூரி வம்ச ஆட்சியை முறியடிக்க கி.பி.1543 ஜீலை மாதத்தில் சிந்து நதிக்கரையை கடந்தார்.
இதற்கிடையில் ஹிண்டல் மிர்ஸாவை காம்ரான் மற்றும் அஸ்காரி மிர்ஸா காபூலில் வீட்டுசிறையில் வைத்தனர். கந்தஹாரை நோக்கி வந்த ஹீமாயூனை எதிர்கொண்ட அஸ்காரி மிர்ஸா கந்தஹாருக்கு அருகில் ஹிந்துகுஷ் மலைத்தொடரில் டிசம்பர் மாதத்தில் பெரும்படையுடன் பிடிக்க வந்தார். இதனால் 14 மாத குழந்தையாக இருந்த குழந்தை அக்பரை ஹீமாயூன் தனது வேலையாள் ஜவஹர் என்பவரின் பொறுப்பில் ஒப்படைத்து பாரசீகத்தை நோக்கி அங்குள்ள மன்னரிடம் தஞ்சமடைந்தார். கூடாரத்தை கைப்பற்றிய அஸ்காரி மிர்ஸா ஜவஹர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை அக்பரை ஒன்றும் செய்யாமல் அவர் காம்ரான் மிர்ஸாவின் மனைவியான சுல்தான் பேகத்திடம் குழந்தை அக்பரை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சுல்தான் பேகத்திடம் ஒப்படைத்த நிகழ்வு அக்பர் சொல்ல சொல்ல அபுல் பாஸல் எழுதிய "அக்பர் நாமா" வில் குளிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் காபூல் செல்லாமல் ஹீமாயூன் ஈரான் சென்றார். அங்கு பெர்ஷியாவை ஆண்ட ஷா வம்சத்து மன்னரான "ஷா தமஸ்ப்" சிறப்பான வரவேற்பு அளித்து அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். அங்கிருந்த நாட்களில் அவருக்கு இரண்டு அரசவை ஓவியர்களின் அறிமுகம் கிடைத்தது. பெர்ஷியா மன்னரின் அரண்மனையில் ஓவியங்கள் விருந்துகள் என்று காலம் கழித்து வந்தார். பின்னர் பாரசீக மன்னரின் உதவியால் ஹீமாயூன் கந்தஹாரை கைப்பற்றினார். சகோதரனான அஸ்காரி மிர்ஸா மன்னிக்கப்பட்டான். பின்னர் காபூல் நோக்கி விரைந்த ஹீமாயூன் செல்வதற்குள் காம்ரான் மிர்ஸா காபூலை விட்டு ஒடிவிட்டார். கி.பி.1545ல் காபூல் அரண்மனையில் அரசராக பதவியேற்றார். பின்னர் பாரசீகத்திலிருந்து "மிர்சையத் அலி" மற்றும் "அப்துஸ்சமத்" என்ற இரு புகழ்பெற்ற ஓவியர்களை காபூலை வரவழைத்து தன் அரசவை ஓவியர்களாக ஆக்கிக்கொண்டார். பின்னாளில் டெல்லியை கைப்பற்றியதும் இவர்களே அங்கும் தன் பணிகளை தொடர்ந்தனர். இவர்களிடம் காபூலில் இருக்கும் சமயத்தில் ஹீமாயூனும் குழந்தையான அக்பரும் பாரசீக ஓவிய முறையில் பயிற்சி எடுத்துக்கொண்டனர். காபூலின் அரசராக ஆனாலும் டெல்லி ஆக்ரா அரியணையை இழந்தது அவருக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. கி.பி.1551ல் ஹீமாயூனின் படைகளுக்கு எதிராக காம்ரான் மிர்ஹா நடத்திய போரில் ஹீமாயூனின் கடைசி தம்பியான ஹிண்டல் மிர்ஸா இறந்துபோனது ஹீமாயூனுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தம்பிகளுள் அவர் ஒருவர் தான் கடைசி வரை ஹீமாயூனுக்கு ஆதரவாக இருந்தார். இதற்கிடையில் ஷெர்ஷா கி.பி.1545ல் கலிஞ்சார் கோட்டையின் முற்றுகையின் போது அவர் வைத்த வெடிவிபத்தில் சிக்கி இறந்தார். அவருக்கு பின் அவரது மகன் 10 ஆண்டுகள் ஆள அதற்கு பின் ஒவ்வொருவரும் பதவிக்காக ஒருவரையொருவர் வீழ்த்த பதவிபோட்டிகள் இருந்த நேரத்தில் கி.பி.1555ல் பிப்ரவரி மாதம் 22 ம்தேதி மீண்டும் லாகூரை பிடித்தார். பின்னர் வரிசையாக ஒவ்வொரு நகரமாக பிடித்து டெல்லி ஆக்ரா என்று பிடித்து சூரி வம்சத்தின் கடைசி அரசனான சிக்கந்தரை வீழ்த்தி மீண்டும் மொகலாயர் ஆட்சியை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில் ஆங்காங்கே எழுந்த எதிர்ப்புகளை வீழ்த்தி கொண்டிருந்த ஹீமாயூன் கி.பி.1556 பிப்ரவரி மாதம் 6ம் நாள் இறந்து போனார். வழக்கம்போல மாடியில் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை மாலை நேர தொழுகைக்கான மணி ஒலிக்க புத்தகத்தை படித்து கொண்டே படியில் இறங்கிய ஹீமாயூன் தவறி விழுந்து இறந்து போனார். இவரும் தனது தந்தை பாபரை போலவே தனது 48 வயதில் இறந்து போனது தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை. ஹீமாயூன் இறந்த விஷயம் வெளியே தெரியாமல் மறைத்தார் பைராம் கான் (இவரே குழந்தை அக்பரின் பாதுகாவலர்) . அந்த நேரத்தில் அக்பர் பஞ்சாப்பிலிருந்த கலனூர் பகுதியில் கலகத்திலிருந்த ஆப்கானியர்களை அடக்க சென்றிருந்தார். அக்பருக்கு தகவல் அனுப்பிவிட்டு அவர் வரும்வரை ஹீமாயூன் இறப்பு செய்தியை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார். கி.பி.1556 பிப்ரவரி மாதம் 14ம் தேதி அக்பர் தனது 13 வயது 4 மாதத்தில் அரசராக பதவியேற்றார்.
ஹீமாயூன் டெல்லியில் ஒரு புதிய நகரத்தை கட்டி அதற்கு "தின்பனா" என்று பெயரிட்டார். அந்த சமயத்தில் ஆஜ்மீர் மற்றும் கிழக்கு இராஜஸ்தானை வென்ற பகதூர் ஷாவால் ஆக்ராவிற்கு ஆபத்து வந்தால் இந்த புதிய நகரம் இரண்டாவது தலைநகரமாக செயல்படலாம் என்ற எண்ணத்தில் இந்த நகரை கட்டினார். ஹீமாயூனை மிரட்டிப் கொண்டிருந்த பகதூர் ஷா போர்த்துகீசியர்களின் நட்புறவுக்காக கப்பலில் செல்லும்போது கடல் கொந்தளிப்பில் தவறி விழந்து சுறாக்களுக்கு பலியானார் என்றும் அங்கு நடுக்கடலில் நடந்த கைகலப்பில் இவர் கொல்லப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.
ஹீமாயூன் மறைந்தவுடன் அவரது உடல் டெல்லியில் "புராணா கிலா" பகுதியில் புதைக்கப்பட்டார். அவரது மனைவியான ஹமீதா பானு பேகம் கி.பி.1562ல் பாரசீக கட்டிடக்கலைஞரான "மிராக் மிர்ஸா கியாத்" வடிவமைப்பில் சிவப்பு வண்ணத்தில் பளிங்கு கற்களால் ஆன ஹீமாயூன் கல்லறையை கட்டி முடிக்க 8 ஆண்டுகள் ஆனது.
இந்த ஹீமாயூன் சமாதி யூனெஸ்கோவால் பராம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மாதிரியாக வைத்து தான் பின்னாளில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆன "தாஜ்மஹால்" கட்டப்பட்டது. இந்த ஹீமாயூன் சமாதி வளாகத்தில் தான் சுமார் 150 சமாதிகளுக்கு மேல் உள்ளது. இங்கு ஹீமாயூன்
மற்றும் அவரின் மனைவியான ஹமீதா பானு பேகம், ஹாஜஹானின் மகனான தாராஷிக்கோ, ஒளரங்கசீப்பிற்கு பின்னால் வந்த ஃப்ரூக்ஷியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்தெளலா, இரண்டாம் ஆலம்கீர் சமாதிகளும் உள்ளது. இங்கே யாரென்று தெரியாத "ப்பூ ஹலிமா"என்பவரின் சமாதியும் உள்ளது. துருக்கியரான இப்பெண்மணி பாபரின் பணிப்பெண் மட்டுமல்லாது அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். மேலும் இவரே ஹீமாயூனின் செவிலித்தாயாக இருந்தவர் என்று தெரியவருகிறது.
உதவிய நூல்கள்:
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் - முகில்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
எனது இந்தியா - எஸ்.இராமகிருஷ்ணன்
பாபர் - ஸ்டான்லி லேன் ஃபூல்
அக்பர் - லாரன்ஸ் பின்யான்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
படங்கள் உதவி :
கூகுள் புகைப்படங்கள் & திருமுத்து குமரன்



Comments
Post a Comment