71) மொகலாய பேரரசு - ஜஹாங்கீர்
ஜஹாங்கீர் (1569-1627)
ஆட்சி : (1605 - 1627)
ஜஹாங்கீர் என்ற பெயரை கேட்டவுடன் சலீம்-அனார்கலி நினைவுக்கு வந்தால் நீங்க சரித்திர பிரியர் தான். ஏனெனில் சரித்திரத்தில் அக்பரால் உயிரோடு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட கட்டுகதையான அனார்கலியின் காதலன் தான் இந்த சலீம் என்ற ஜஹாங்கீர். குழந்தைப்பேறு இல்லாமல் வருந்திய அக்பருக்கு ஆண்குழந்தைகள் பிறந்து இறந்தது. பெண் குழந்தைகள் பிறந்து இறந்தது. குழந்தைகளின் ஆயுள் நிலைக்கவில்லை என்று வருந்திய அக்பர் ஆக்ராவுக்கு அருகிலுள்ள சிக்ரி கிராமத்தில் (இன்றைய பதேஃபூர் சிக்ரி) இருந்த அந்நாளைய சூஃபி துறவியான ஷேக் சலீம் சிஷ்டியிடம் தன் மனக்குறையை வெளியிட உனக்கு மூன்று மகன்கள் பிறப்பார்கள் கவலைப்படாதே எந்த ராணி கருவுற்றாலும் அவர்கள் கருவுற்றது தெரிந்தவுடன் குழந்தைபேறு காலம் வரை சிக்ரியில் குழந்தைபேறுகாலம் வரை தங்கியிருக்க சொல் என்ற அறிவுரையுடன் அனுப்ப முதன்முதலில் கருவுற்ற ஹிராபாய் குன்வாரி (இவர் தான் ஜோதாபாய் அக்பர் என்று குறிப்பிடப்படுகிறார்) சிக்ரியில் தங்கி ஆகஸ்ட் 31,1569ல் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அக்பர் குழந்தைக்கு துறவியின் பெயரான சலீம்முடன் "நூரூதீன் முஹம்மத் சலீம்" என்று பெயர் வைக்கிறார். நூரூதீன் என்ற சொல்லுக்கு "நம்பிக்கையின் ஒளி" என்று பொருள். அக்பர் இவரை குழந்தை பருவத்தில் செல்லமாக "சேக்கு பாபா" என்ற பட்டப்பெயர் சொல்லி தான் அழைப்பாராம். பின்னாளில் அக்பருக்கு பின் ஜஹாங்கீர் (உலகத்தின் வெற்றியாளர்) என்ற பெயருடன் அரியணை ஏறினார்.
ஜஹாங்கீர் மது மற்றும் தீவிரமான அபின் பழக்கத்தையும் உடையவர். அழகான பெண்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். 30 மனைவிகள் மற்றும் ஏராளமான ஆசைநாயகிகளும் உண்டு என்று கூறப்பட்டாலும் எல்லோரும் அவரின் நெகட்டிவ் பக்கங்களை மட்டுமே கவனிக்கின்றனர். அவரது பாஸிட்டிவ் பக்கங்களான தீவிர கலைரசனை கொண்டவர். சிறந்த ஓவியர். ஒவியர்களை நிரம்ப ஆதரித்தவர். இந்தியாவில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பற்றி நுணுக்கமாக தன்னுடைய சுயசரிதையான "ஜஹாங்கீர் நாமா"வில் குறிப்பிட்டுள்ளதையும் மறந்து விடுகின்றனர். இவரது காலத்தில் தான் கட்டிடக்கலை சிறப்பாக வளர ஆரம்பித்தது. ஆக்ரா கோட்டையிலுள்ள ஜஹாங்கீர் மாளிகையை பார்த்தாலே அதன் சிறப்பு புரியும்.
கி.பி.1616ல் லண்டனிலிருந்து வந்த சர் தாமஸ் ரே கொடுத்த ஓவியத்தை அடுத்த சில நிமிடங்களில் இவரின் ஓவியர்கள் வரைய கொண்டு வந்த ஆங்கிலேயருக்கே எது அசல் எது நகல் என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு இவரின் ஆட்சியில் ஓவியர்கள் உன்னதம் பெற்றிருந்தனர். இத்தனை சிறப்புகள் இருந்தாலும் தீவிர போதைப் பழக்கம் அவரது உடல்நலனை கெடுத்தது. இருபதாவது மனைவியான மெஹருன்னிஸ்ஸா (நூர்ஜஹான்) தான் கி.பி.1612 முதல் ஆட்சியை தொடர்ந்தார். கண்ணசைவில் ஆட்சியை நடத்த அவருக்கு அவரின் தந்தையான கியாஸ்தீன் பெக், அவரது சகோதரர் அஸப் கான் மற்றும் இளவரசர் குர்ரம் (ஷாஜஹான்) ஆகியோரின் உதவி இருந்தது. நூர்ஜஹானின் முதல் கணவருக்கு பிறந்த மகளான லட்லியை ஜஹாங்கீரின் மகனான ஷாரியருக்கு மணம் முடித்து வைத்தார். குர்ரம் (ஷாஜஹான்) லட்லியை மணக்க நூர்ஜஹானின் அண்ணன் மகளான அர்ஜீமன்ட் பானு பேகம் (மும்தாஜ் மஹால்) இணக்கம் தெரிவிக்காததாலும் குஷ்ரூ மிர்ஷாவும் மணக்க சம்மதிக்காததால் ஷாரியாருக்கு மணம் முடித்து வைத்தார். இதன் பிறகு ஜஹாங்கீருக்கு பின்னர் தன் மருமகனான ஷாரியருக்கு பக்கபலமாக இருந்ததால் குர்ரம்க்கு (ஷாஜஹான்) கடைசி காலங்களில் நூர்ஜஹானுக்கும் இவருக்கும் புரிதல் இல்லாமல் போயிற்று.
ஜஹாங்கீருக்கு மொத்தம் 30 மனைவிகள். அதில் பெரும்பாலும் (17 மனைவிகள்) இராஜபுத்திர பெண்கள். காரணம் இதெல்லாம் இராஜ்ய விரிவாக்கம் மற்றும் உறவு காரணங்களுக்காக நடத்தப்பட்ட திருமணங்கள். அக்பர் வரை துருக்கிய இரத்தம் தான் மொகலாயர்களில் ஒடியது. ஜஹாங்கீர் முதல் தான் இந்திய கலப்பு ஏற்பட்டது ஏனெனில் ஜஹாங்கீரின் தாய்யே இராஜபுத்திர வம்சத்தினர் தான். அதுவரை மொகலாயர்களை அன்னிய படையெடுப்பாளர்களாக பார்த்த நிலை இந்த திருமணங்கள் மற்றும் உறவுகளினால் தான் மாறியது என்று சொல்லலாம். அந்த வகையில் ஜஹாங்கீரில் இருந்து தான் இந்திய மொகலாயர்கள் வம்சம் ஆரம்பிக்கிறது. ஜஹாங்கீரிலிருந்து தான் மொகலாயர்களை இந்திய மன்னர்களுள் ஒருவராக நினைக்க ஆரம்பித்தனர்.
1) ராஜ்குமாரி மன் பாய்:
இவர் அக்பரின் அவையில் முதலில் சேர்ந்த இராஜபுத்ரான அம்பர் இராஜாவான பகவான் தாஸ் என்பவரின் மகள். இவர் மூத்த மகள் சுல்தான் அல் நிஷா பானு பேகம் மற்றும் மூத்த மகன் குஷ்ரூ மிர்ஸா ஆகியோரின் தாய். இவர்களுக்கு கி.பி.1585 பிப்ரவரி 13ம் தேதி திருமணம் நடந்தது. கி.பி.1605 பிப்ரவரி 23ல் அலகாபாத்தில் இருக்கும்போது இவர் தற்கொலை செய்துக்கொண்டார். மனநிலை பிறழ்வில் அதிக அளவில் ஓபியம் எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு மூத்தமகன் குஷ்ரூ மிர்ஸா தந்தைக்கு எதிராக நடந்து கொண்டது தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். லாகூரில் உள்ள அனார்கலி கல்லறை என்று சொல்லப்படுவது உண்மையில் இவரது கல்லறை தான். அதனை ஜஹாங்கிர் கட்டியதால் தான் சலீம்-அனார்கலி என்று தவறான புரிதல் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அலகாபாத்தில் இறந்த இவருக்கு கல்லறை அங்கேயே "குஷ்ரூ பாக்" என்ற பெயரில் உள்ளது. அங்கே தான் இவர், அவரது மகன் குஷ்ரூ மிர்ஸா மற்றும் மகள் ஆகியோரின் கல்லறை உள்ளது.
2) ராஜ்குமாரி ரதன் பாய்( ஃபுல் பேகம் சாஹிபா):
நர்பூரின் ராஜாவான தாமேரி ராஜா பாசு என்பவரின் மகளான இவரை கி.பி.1586 மே 28ம் தேதி மணந்தார். இவர்களது திருமணத்திற்காக இரண்டரை லட்சம் வெள்ளிக்காசுகள் வரதட்சணையாக வழங்கப்பட்டது.
3) ராஜ்குமாரி ஜோதா பாய்:(ஜகத் கோஸின் பீபீ சாஹிபா)
மார்வாரின் மோட்டா ராஜா உதய்சிங் என்பவரின் மகளான இவரை கி.பி.1586 ஜனவரி 11ம் தேதி மணந்தார். இவருக்கு பிறந்த மகனே பின்னாளில் ஹாஜஹான் என்ற பெயரில் அரியணை ஏறிய குர்ரம். இவர் பிற்காலத்தில் சமண மதத்திற்கு மாறியபின் இவரது பெயர் ஜகத் கோஸைன் என்றாகியது. இவருடன் ஜஹாங்கீரும் தீக்ஷா பெற்று சமண மதத்திற்கு மாறினார் என்பது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இவர் கி.பி.1619 ஏப்ரல் 18ம்தேதி ஆக்ராவில் மறைந்தார்.
4) ராஜ்குமாரி மனவதி பெய்ஜி லால் சாஹிபா ( பில்கிஸ் மக்கானி):
இவர் குவாலியர் மன்னரான ராஜா அஸ்காராம் பீம்ரஜோத் என்பவரின் மகள். இவரை லாகூரில் கி.பி.1586 ஜீலை 7ம் தேதி மணந்தார்.
5) ராஜா ராய் சிங் மகள் : (பெயர் தெரியவில்லை)
பிகானீயர் ராஜாவான ராஜா ராய் சிங் என்பவரின் மகளான இவரை கி.பி.1586 ஜீலை 7ம் தேதி மணந்தார்.
6) மலிக்கா ஷிகர் பேகம்:
காஷ் நகர் சால்தானான அபு சையித் கான் ஜகதாய் என்பவரின் மகளான இவரை கி.பி.1586 ஜீலையில் மணந்தார்.
7) ஷாஹிப் ஜமால்:
இவர் ஹீரத்தின் க்வாஜா ஹஸன் என்பவரின் மகள். இவரை கி.பி.1587ல் மணந்தார். இவர் ஜஹாங்கீரின் இரண்டாவது மகனான பர்வேஸ் மிர்ஸா என்பவரின் தாய். இவர் அந்தஸ்து குறைந்தவர் என்பதால் அக்பருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இவர் ஜீன் 1599ல் லாகூரில் மறைந்தார்.
8) மலிக்கா இ ஜஹான் பேகம்:
ஜெய்சால்மர் மன்னரான பீம் சிங் என்பவரின் மகளான இவர் கி.பி.1587ல் மணந்தார். இவருக்கு பிறந்தவரே ஜகந்தார் என்பவர்.
9) ராஜா தார்ய மால்பாஸ் என்பவரின் மகள்: (பெயர் தெரியவில்லை)
இவரை கி.பி.1588ல் மணந்தார்.
10) ஸோரா பேகம்:
மொகலாய பிரபு மிர்ஸா சஞ்ஞார் ஹஸாரா என்பவரின் மகளான இவரை கி.பி.1590 அக்டோபர் மாதத்தில் மணந்தார்.
11) ராஜ்குமாரி கர்மாஸி:
மெர்ட்டாவின் ராஜாவான ராஜா ராவ் கேஸோதாஸ் ரத்தோர் என்பவரின் மகளான இவரை கி.பி.1591ல் மணந்தார். ஜஹாங்கீரின் பிரியத்திற்குள்ளான மகளான பஹார் பானு பேகத்தின் தாய். இந்த பஹார் பானு பேகம் மற்றும் மூத்த மகளான அல்-நிஷா பானு பேகத்தின் வேணடுதலால் தான் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த மகனான குஷ்ரூவை தண்டிக்காமல் அவரது கண்ணை குருடாக்கிய பின்னர் ஆக்ராவிற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து பார்வையை மீட்டு கொடுத்தார்.
12) தோஸ்த் முஹம்மது கவாஜா இ-காபூலி மகள்: (பெயர் தெரியவில்லை)
இவரை கி.பி.1591ல் திருமணம் செய்தார்.
13) ராஜ்குமாரி கன்வல் ராணி:
அலி ஷெர் கான் (அலி ராய்) என்பவரின் இளைய மகளான இவரை கி.பி.1592 ஜனவரி 11ல் திருமணம் செய்தார்.
14) ராவல் பீம் மகள்:(பெயர் தெரியவில்லை)
ஜெய்சால்மர் மன்னரான ராஜா ராய் கல்யாண் மால் என்பவரின் சகோதரரான ராவல் பீம் என்பவரின் மகள்.
15) சையத் முபாரக் கான் மகள்: (பெயர் தெரியவில்லை)
காஷ்மீரின் சையத் முபாரக் கானின் மகளான இவரை கி.பி.1592 அக்டோபரில் மணந்தார்.
16) காஷ்மீரின் ஹீசைன் சாக் என்பவரின் மகள்: (பெயர் தெரியவில்லை)
17) நூருன்னிஸ்ஸா பேகம்:
இவர் இப்ராஹிம் ஹீசைன் மிர்ஸா மற்றும் குல்ராக் பேகம் என்பவருக்கும் பிறந்த மகள். இந்த குல்ராக் பேகம் பாபரின் மகனான ஹீமாயூனின் சகோதரரான காம்ரான் மிர்ஸா என்பவரின் மகள். இவரை கி.பி.1593 மார்ச் மாதத்தில் மணந்தார். இவர் கி.பி.1641ல் மறைந்தார்.
18) கந்தேஷ் மன்னர் ராஜா ஃப்ரூக்கி மகள் :(பெயர் தெரியவில்லை)
இவரை செப்டம்பர் 1593 ல் மணந்தார்.
19) பலுசிஸ்தான் அப்துல்லா கான் மகள்: (பெயர் தெரியவில்லை)
20) காஷ் மஹால் சாஹிபா:
லாகூரின் சுபேதாரரான சையின் கான் கோகா என்பவரின் மகளான இவரை கி.பி.1596 ஜீன் 28ம்தேதி மணந்தார்.
21) தாகூர் மான் சந்த் மகள்: (பெயர் தெரியவில்லை)
ராஜா மமோன் முராத் ( கோதஹா ராஜாவான தாகூர் மான் சந்த் இவர் முஸ்லீம் மதத்திற்கு மாறினார்)
22) ஷாஹிலா பேகம்:
மொகலாய மரபில் வந்த காஸிம் கான் என்பவரின் மகளான இவரை கி.பி.1608ல் மணந்தார். இவர் கி.பி.1620ல் மறைந்தார்.
23) கோகா குமாரி சாஹிபா:
அம்பரின் மான் சிங்கின் பேத்தி இவர். அம்பரின் ஜகத் சிங்கின் மகளான இவர் ஒரு விதவை. இவரது கி.பி.1608 ஜீன் 17ல் மணந்துகொண்டார். இவருக்காக 80000 ரூபாய் வரதட்சணையாக அவரது தந்தை ஜகத் சிங்கிற்கு ஜஹாங்கிர் கொடுத்தார்.
24) ஒச்சா மற்றும் சந்தேரியின் ராம் சந்திர புண்டேலா மகள்: (பெயர் தெரியவில்லை)
இவரை கி.பி.1609ல் திருமணம் செய்தார்.
25) ஓச்சாவின் மதுகர் தியோ புண்டேலா மகள்: (பெயர் தெரியவில்லை)
26) மெஹருன்னிஸ்ஸா என்ற நூர்ஜஹான் :
இவரை கி.பி.1611ல் மே.25ல் மணந்தார். சரித்திரத்தில் இவர் இருபதாவது மனைவியாக குறிப்பிடப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் மற்ற சில மனைவிகள் இறந்திருக்கலாம் என்பதால் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. இவர் இதமதுல்லா என்ற பட்டப்பெயருள்ள கியாஸ்தீன் பெக் என்பவரின் மகள். அலி குலி பெக் என்ற வங்காளத்தின் ஆப்கான் தளபதியின் விதவை மனைவி. இவர் கி.பி.1645 நவம்பர் 18ம்தேதி லாகூரில் மறைந்தார்
27) ராஜா புருஷோத்தமன் தாஸ் மகள்: (பெயர் தெரியவில்லை)
ஜகந்தாதபூரியின் மன்னரான ராஜா புருஷோத்தமன் தாஸ் என்பவரின் மகளை கி.பி.1611ல் மணந்தார்.
28) லைலா பேகம் சாஹிபா:
29) உல்ஃபாத் பேகம் சாஹிபா:
இவர் கி.பி.1659ல் லாகூரில் இறந்தார்.
30) ராணி ரூப் மஞ்சரி:
பிகானீயர் ராஜாவான மஹாராஜ் ஶ்ரீதால்பத் சிங்ஜி பகதூர் என்பவரின் இளைய மகளான இவரை கி.பி.1614ல் மணந்தார்.
பெரும்பாலான திருமணங்கள் அன்றைய சூழலில் மொகலாயர்களுக்கு எதிரிகளாக இருந்த இராஜபுத்ரர்களின் வம்சத்தில் இருந்து இராஜ்ஜிய காரணங்களுக்காக நடத்தப்பட்டது தான். மொத்தத்தில் 17 இராஜபுத்திர இனப்பெண்களை மணந்தார். அரசை நிலைநிறுத்தவும் உறவிலும் பெண் எடுககப்பட்டது.
ஜஹாங்கீரின் மகன்-மகள்களின் விவரம்
1) குஷ்ரூ மிர்ஸா :
ஜஹாங்கீர் முதலில் திருமணம் முடித்த பகவான் தாஸ் மகளான மன் பாய்க்கு பிறந்தவர். பேரரசர் அக்பரின் பிரியமான பேரன். ஜஹாங்கீரின் போதை பழக்கங்களால் அக்பர் தனது பேரனான இவரையே அடுத்த அரசராக அறிவிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருந்தவர். ஜஹாங்கீர் அரசரானதும் இவர் கிளர்ச்சி பண்ண இவரை அடக்கிய பின்னர் இவரது கண்களை குருடாக்கினார். பின்னர் மகள்களின் வேண்டுகோளினால் சிகிச்சை அளித்து கண்களில் பார்வை வந்தது. பின்னர் இவர் அஸப் கான் மேற்பார்வையில் இருந்தார். இந்த அஸப்கான் பாதுகாப்பிலிருந்து குர்ரம் பாதுகாப்பில் கி.பி.1620ல் வந்த இவர் பெர்ஹாம்பூரில் கி.பி.1622 ஜனவரி 26ல் இறந்தார். கொன்றது வேறு யாருமல்ல அவரின் சகோதரரான குர்ரம் என்ற ஷாஜஹான் தான். குஷ்ரூ மிர்ஸாவின் வாரிசுகள் விவரம்:
i) சுல்தான்ஹசன் ஜஹாங்கிர் அக்பர்:
கி.பி.1603ல் பிறந்த இவர் கி.பி.1623-27களில் குஜராத்தின் சுபேதாராக இருந்தார். இவரின் தாத்தா ஜஹாங்கீர் மறைவின் போது அஸம்கானுக்கு எதிராக கிளர்ச்சியில் கி.பி.1627 நவம்பர் 12ம்தேதி கைது செய்யப்பட்டு கி.பி. 1628 பிப்ரவரி 2ல் ஷாஜஹானின் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டார்.
ii) சுல்தான் புலந்த் அக்தர்:
கி.பி.1609 மார்ச் 11ம் தேதி ஆக்ராவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே மரணமடைந்தார்.
iii) சுல்தான் குர்ஷாப் மிர்ஸா:
கி.பி.1612ல் பிறந்த இவர் கி.பி.1628 பிப்ரவரி 2ம்தேதி லாகூரில் ஷாஜஹானின் உத்தரவுப்படி கொல்லப்பட்டார்.
iv) சுல்தான் ரஷ்டேகர் (ரஸ்டிரியார்):
கி.பி.1616 ஏப்ரலில் பிறந்தார். இவரது இறப்பு விவரம் தெரியவில்லை
v) ஷாஸாதி ஹோஸ்மண்ட் பானு பேகம் சாஹிபா:
குஷ்ரூ மிர்ஸாவுக்கு கி.பி.1605ல் பிறந்த ஒரே மகளான இவருக்கு ஹீசாங் மிர்ஸாவுடன் கி.பி.1626ல் திருமணம் நடந்தது. இவரது கணவர் பிப்ரவரி 2, 1628ல் ஷாஜஹானின் உத்தரவுப்படி கொல்லப்பட்டார்.
2) பர்வேஷ் மிர்ஸா
இவர் இரண்டாவது மகன். ஜஹாங்கீர்-ஷாஹிப் ஜமால்க்கு கி.பி.1590ல் அக்டோபர் 12மதேதி காபூலில் பிறந்த மகன் இவர். இவர் கி.பி.1626 அக்டோபர் 28ம் தேதி பெர்ஹாம்பூரில் மறைந்தார். இவருக்கு 4 மகன்கள் மற்றும் 1 மகள்கள் விவரம்:
i) துரந்தீஷ் மிர்ஸா:
பெர்ஹாம்பூரில் பிப்ரவரி 1615ல் பிறந்த இவர் கி.பி.1619 டிசம்பர் 7ல் ஆக்ராவில் சிறுவயதிலேயே இறந்தார். ஜஹான் பானுவின் மகன்
ii) அஸாம் மிர்ஸா:
கி.பி.1618 ஜீலையில் பிறந்த இவர் கி.பி.1629ல் இறந்தார். ஜஹான் பானுவின் மகன்.
iii) கேஷ்வர் கோஷா மிர்ஸா:
iv) ஸாஸதா சுலைமான் நிக்கோல்:
v)நாதிரா பானு பேகம் :
இவர் தான் பின்னாளில் ஹாஜஹானின் மூத்த மகனான தாரா ஷிக்கோவை கி.பி.1633 பிப்ரவரி 11ல் மணந்தார். கி.பி.1615 மார்ச் 30ல் அஜ்மீருக்கு அருகில் பிறந்தார். கி.பி.1659 ஜீன் 16ல் பயணத்தின் போது பலூஸிஸ்தானிலுள்ள தாதர் என்னுமிடத்தில் மரணமடைந்தார். இவர் உடல் லாகூரில் அடக்கம் செய்யப்பட்டது
3) குர்ரம் (ஷாஜஹான்)
ஜஹாங்கீர்-ஜோதா பாய்க்கு பிறந்த மகன். பின்னாளில் இவரே ஜஹாங்கீருக்கு பின்னர் அரியணை ஏறினார். இவர்களின் வாரிசுகள் அடுத்த பகுதியில் இவரின் பக்கத்தில் வரும்.
4) ஜகந்தர் மிர்ஸா
ஜெய்சால்மர் மன்னர் பீம்சிங்கின் மகளான மலிக்கா இ-ஜஹான்னுககும் ஜஹாங்கீருக்கும் கி.பி.1596ல் பிறந்த மகன் இவர். கி.பி.1626 செப்டம்பர் 22ல் மரணமடைந்தார்.
5) ஷாரியார் மிர்ஸா
ஜஹாங்கீரின் மனைவியான ஜகத் கோஸின்க்கு கி.பி.1596ல் பிறந்தவர். இவர் நூர்ஜஹானின் மகளான லட்லி பேகத்தை ( மிகர்-உன்-நிஸா பேகம்) மணந்தவர். ஜஹாங்கீர் இறந்தவுடன் அரசராக முயன்று தோற்கடிக்கப்பட்டு கி.பி.1627 அக்டோபரில் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் கி.பி.1628 பிப்ரவரி 2ல் ஷாஜஹான் உத்தரவுப்படி லாகூரில் கொல்லப்பட்டார். அதன் பின் அவரின் மனைவியான லட்லி பேகம் அவரின் அம்மாவான நூர்ஜஹானுடன் லாகூர் அரணமனையிலையே வசித்தார்.
i) ஸாஸாதி அரஸானி பேகம் சாஹிபா:
நூர்ஜஹானின் மகளான லட்லி பேகத்திற்கு கி.பி.1623 செப்டம்பர் 23மதேதி அஜ்மீரில் பிறந்த மகள்.
6) ஷாஸதா குர்ஷாப் மிர்ஸா:
இவர் சாலிஹா பானு பேகம் சாஹிபாவின் மகன்.
7) பெயர் தெரியவில்லை:
இவரும் சாலிஹா பானு பேகம் சாஹிபாவின் மகன்
8)ஷாஸாதி பேகம் சுல்தான்:
இவர் லாகூரில் கி.பி.1590 செப்டம்பர் 14ம்தேதி இவரது இன்னொரு தாய்க்கு பிறந்த பஹர் பானு பேகம் பிறந்த அதே நாளிலையே இவரும் பிறந்தார். இவரின் தாய் பில்குஸ் மக்கானி பேகம் ஷாஹிபா என்பவர். இவர் ஒரு வருடத்திற்குள்ளே கி.பி.1590ல் இறந்தார்.
9) நிதார் பேகம்
குஷ்ரூ மிர்ஸாவின் சகோதரி. ராஜ்குமாரி மன்பாவதி பாய்க்கு பிறந்த மகள் இவர். கடைசியில் தன் சகோதரன் குஷ்ரூ மிர்ஸா மற்றும் தாய் மன்பாவதி பாய் இருவரும் அடக்கம் செய்யப்பட்ட அலகாபாத்தில் உள்ள "குஷ்ரூ பாக்" கில் அடக்கம் செய்யப்பட்டார்.
10) பஹர் பானு பேகம்:
ஜஹாங்கீரின் பிரியத்திற்குள்ளான மகள் இவர். ராஜ்குமாரி கர்மாஸியின் மகள். கி.பி.1590 செப்டம்பர் 14ல் லாகூரில் பிறந்த இவர் கி.பி.1653 செப்டம்பர் 8ல் ஆக்ராவில் மறைந்தார்.
11)இப்பாத் பானு பேகம்
ஜகத் கோஸினுக்கும் ஜஹாங்கீருக்கும் கி.பி.1589 ஏப்ரல் 16ல் லாகூரில் பிறந்த மகள். 3 வயதிலையே கி.பி.1592ல் இறந்து போனார்.
12)தெளலத்-உன்-நிஷா பேகம்
டிசம்பர் 1589ல் லாகூரில் பிறந்த இவர் கி.பி.1590ல் ஒரு வயதை தொடுவதற்கு முன்பே மரணமடைந்தார்.
13) சுல்தான் உன்-நிஷா பேகம்
இவர் குஷ்ரூ மிர்ஸாவின் சகோதரி. ஜஹாங்கீரின் மூத்த மகள். கி.பி.1586ல் பிறந்த இவர் கி.பி.1646ல் தனது 60வது வயதில் இறந்தார். அக்பரின் கல்லறையருகில் புதைக்கப்பட்டார்.
14) பெயர் தெரியவில்லை:
ஸோக்ரா பேகம் ஷாஹிபாவின் மகள். கி.பி.1591ல் பிறந்தவுடன் இறந்தார்.
15)பெயர் தெரியவில்லை:
ஸோக்ரா பேகம் ஷாஹிபாவின் மகள். கி.பி.1592ல் பிறந்து சிறுவயதிலையே இறந்தார்.
16)பெயர் தெரியவில்லை:
ஸோக்ரா பேகம் ஷாஹிபாவின் மகள். கி.பி.1593ல் பிறந்து சிறுவயதிலையே இறந்தார்.
17) பெயர் தெரியவில்லை:
அபியா காஷ்மீரி என்பவரின் சகோதரி மகள். கி.பி.1592 ல் பிறந்த இவர் சிறுவயதிலேயே இறந்தார்.
18) பெயர் தெரியவில்லை:
ஷாஹிப் இ-ஜமால் பேகம் ஷாஹிபாவின் மகள். லாகூரில் கி.பி.1594ல் பிறந்தார்
19) பெயர் தெரியவில்லை:
அப்துல்லா பலூச்சி என்பவரின் மகளுக்கு பிறந்தவர். லாகூரில் கி.பி.1595ல் பிறந்தார்.
20) பெயர் தெரியவில்லை:
நூர் உன்-நிஸா பேகம் சாஹிபாவின் மகள். ஆகஸ்ட் 1595ல் பிறந்த இவர் கி.பி.1596ல் இறந்து போனார்.
21) ஷாஸாதி இஸ்ஸத் உன்-நிஸா பேகம் சாஹிபா:
கி.பி.1596 செப்டம்பரில் பில்குஸ் மக்கானி பேகம் சாஹிபாவுக்கு மகளாக பிறந்த இவர் சிறு வயதிலையே கி.பி.1602ல் இறந்து போனார்.
கி.பி.1569ல் பதேபூர் சிக்ரியில் பிறந்த ஜஹாங்கீருககு ஷேக் சலீம் சிஷ்டியின் மகளே வளர்ப்பு தாயானார். அவரின் மகனான குதுப்பூதின் கான் ஜஹாங்கீரின் அந்தரங்க செயலாளராக இருந்து பின்னர் அலி குலி பெக் (நூர்ஜஹானின் முதல் கணவர்) மறைவுக்கு பின்னர் வங்காளத்தின் தளபதியானார்.தளபதியான அலி குலி பெக்கை ஆளுநரான குதுப்பூதின் கான் விசாரிக்க சென்ற நேரத்தில் அரசரின் கட்டளைக்கு கீழ்படியாமல் இவரை தாக்க முயற்சித்ததால் அலிகுலி பெக் கொல்லப்பட்டார் (கி.பி.1607). இந்த நிகழ்வுக்கு பின் மெஹருன்னிஸ்ஸா அவர் குழந்தை லட்லி பேகத்துடன் ஆக்ராவுக்கு அழைத்து வரப்பட்டார். 4 ஆண்டுகள் கழித்து ஜஹாங்கீரை திருமணம் முடித்தார். இந்த நிகழ்வை தான் எல்லோரும் நூர்ஜஹானை மணக்கவே அவர் கணவனை ஜஹாங்கீர் கொன்றார் என்று கதை கட்டி விடுகின்றனர். உண்மையில் அலிகுலி பெக் ஜஹாங்கீரின் விசுவாசமான பணியாள். ஜஹாங்கீரின் ஆட்சியில் தான் பாதுகாவலராக இருந்த அவருக்கு வங்காளத்தின் படைகளுக்கு தளபதி பொறுப்பு கிடைத்தது. அப்போதே நூர்ஜஹான் மீது ஆசைப்பட்டிருந்தால் அப்போதே கொன்று இருக்கலாமே. கி.பி.1595-1605 வரை ஜஹாங்கீரின் பாதுகாவலராக தான் இருந்தார். கி.பி.1599ல் அக்பருக்கு எதிராக சலீம் ஏற்படுத்திய கிளர்ச்சிகள் மற்றும் 1602 கிளர்ச்சிகளின் சமயத்தில் அலிகுலி பெக் உறுதுணையாக இருந்ததற்காக தான் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை வங்காளத்தின் தளபதியாக்கினார். (அதே போல் சலீம்மின் உத்தரவுபடி அபுல் பாஸலை கொன்ற கொள்ளைக்காரன் வீர்தேவ்சிங் புண்டோலாவுக்கும் தளபதி பதவி அளித்தார்) அப்போதே அவரை கொன்று நூர்ஜஹானை மணம்முடித்திருக்கலாமே? உண்மையில் அதுவரை ஜஹாங்கீர் நூர்ஜஹானை சந்திக்கவேயில்லை. அலிகுலி பெக் கொல்லப்பட்டவுடன் கியாஸ்தீன் பெக் (அக்பரின் அவையில் அமைச்சராக இருந்தார்) மகளாக இருப்பதால் பாதுகாப்பாக தந்தையிடம் சேர்க்கவே மெஹருன்னிஸ்ஸாவை ஆக்ராவுக்கு அழைத்து வரச்சொன்னார். வந்த 4 வருடங்களில் அரண்மனையில் சந்தித்த வேளைகளில் அவரின் மனதை கவரவே திருமணம் செய்துக்கொண்டார். கி.பி. 1605ல் பட்டத்து அரசியாக வாய்ப்பிலிருந்த குஷ்ரூ மிர்ஸாவின் தாயாரின் மறைவுக்கு பின் இரண்டாவது பட்டத்தரசியாக இருந்தவரும் இவரின் திருமணம் முடிந்த சில மாதங்களில் மரணமடையவே "நூர்மஹால் (அரண்மனையின் ஒளி)" என்ற பெயருடன் மனைவியான இவர் பட்டத்தரசியாக அடுத்த வருடமே கி.பி.1612ல் "நூர்ஜஹான் (உலகின் ஒளி)" என்ற பெயருடன் அரியணையில் அமர்ந்தார். பின்னர் அதுவே அவருக்கு பெயராகிற்று.
அக்பர் மரணமடைந்ததும் பட்டத்துக்கு வந்த ஜஹாங்கீர் தன் மகன் குஸ்ரூ மிர்ஸாவின் ஆதரவாளரான மான் சிங்கை வங்காளத்திற்கு அனுப்பினார். தன்னை எதிர்த்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்வும் பரிசுகளும் கொடுத்து தன்வயப்படுத்தினார். அபுல் பாஸலை கொன்ற வீர்தேவ்சிங் புண்டோலேவுக்கும் தளபதி பதவி கொடுத்தார். அபுல் பாஸலின் மகனான அப்துல் ரஹ்மானுக்கும் முக்கிய தளபதி கிடைத்தது. தன் மகன் குஷ்ரூ மிர்ஸாவை வீட்டுக்காவலில் வைக்க அவர் அங்கிருந்து தப்பித்து பஞ்சாப் சென்று படை திரட்டி வந்தார். அந்த நேரத்தில் சீக்கியர்களின் ஜந்தாம் குரு அர்ஜீன்சிங்கை சந்தித்து உதவி கேட்க அக்பரின் பேரனுக்கு தன்னால் முடிந்த குறைந்த தொகையை கொடுத்தார். அதுவே பின்னாளில் அர்ஜீன்சிங்கை ஜஹாங்கீர் விசாரித்து இரண்டு இலட்சம் அபராதம் விதிக்க அர்ஜீன்சிங் தவறு செய்தால் தானே அபராதம் கட்டணும் என்று மென்மையாக வாதிட ஜஹாங்கீர் அவரை கொடுமைப்படுத்தி மரணமடைய செய்வதற்கு காரணமாயிற்று. முதல்நாள் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதை கொதிக்க வைத்துப் வெந்நீரிலும் உட்காரவைத்தும் அடுத்த நாள் தகிக்கும் இரும்பு தகட்டில் உட்கார வைத்தும் அடுத்த நாள் சுடுமணலை தலையில் கொட்டியும் காயங்களை ஏற்படுத்தியும் 6 நாட்கள் விடாமல் கொடுமைப்படுத்தி பின்னர் 6வது நாள் குளிர்ந்த யமுனை ஆற்றில் இறங்கி குளிக்க சொல்ல வேதனையினால் தண்ணீருக்குள் போனவர் வெளியேவே வரலை. இந்த நிகழ்வுக்கு பின்னர் தான் அமைதியையும் அன்பையும் சமாதானத்தையும் போதித்த சீக்கியர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தி தங்களை காத்துக்கொள்ள ஆரம்பித்தனர். ஜலந்தரில் குஷ்ரூ மிர்ஸாவின் படைகளுடன் மோதிய ஜஹாங்கீர் படைகள் சுக்குநூறாக உடைக்க குஷ்ரூ மிர்ஸா காபூலுக்கு தப்பி ஓட ஜீனாப் ஆற்றங்கரையில் படகுகாரனை தாக்கிவிட்டு படகை திருடிக்கொண்டு ஓடும்போது படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்க நண்பர்கள் இருவருடன் அவருடன் மொகலாயப் படைகளிடம் மாட்டிக்கொண்டார். குஷ்ரூவின் இரு நண்பர்களையும் உயிரோடு மாட்டுதோலில் வைத்து தைத்து வெயிலில் சுற்றிவிட்டு மூச்சு முட்டி சாகடித்தார். பின்னர் அவரின் படைவீரர்களை கூர்மையான முனையில் ஏத்தி (கழுவேற்றம்) சாகடித்த நிகழ்வின் சமயத்தில் யானையின் மீது குஷ்ரூவை பவனி வரச்செய்து கண்டு வரச்செய்தார். அடங்கி கிடந்த குஷ்ரூ வேட்டைக்கு செல்லும்போது ஜஹாங்கீரை கொல்ல முயன்ற சதியில் குஷ்ரூவுக்கு ஆதரவான அமைச்சர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் கூண்டோடு கழுவில் ஏற்றி கொலை செய்தார். குஷ்ரூவின் கண்களின் பார்வையையும் பறிக்க உத்தரவிட ஒரு கண்ணில் அரைகுறை பார்வையுடன் தப்பித்தார். பின்னர் ஜஹாங்கீரின் மகள்களின் வேண்டுகோளால் பிரபல பாரசீக வைத்தியரான ஹகீம் ஸாத்ராவை சிகிச்சைக்கு உத்தரவிட்டு ஒரு கண்ணில் பார்வை வந்தது என்று கேள்வி. இதன்பிறகு அவரின் மகன் கடைசிவரை தந்தைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடாமல் அடங்கியே இருந்தார். கடைசியில் கி.பி.1622ல் பெர்ஹாம்பூரில் குர்ரமின் பாதுகாப்பில் இருந்த போது அவர் குர்ரமின் (ஷாஜஹான்) உத்தரவுப்படி கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வை ஷாஜஹான் வயிற்றுவலியால் குஷ்ரூ மிர்ஸா இறந்ததாக ஜஹாங்கீரிடம் தகவல் அனுப்பினார்.இந்த மூத்த மகன் குஷ்ரூ மிர்ஸா மென்மையானவர். மிகச்சிறந்த படிப்பாளி. அது மட்டுமில்லை மொகாலய வாரிசுகளிலையே இவர் ஒருத்தர் தான் ஒரு மனைவியோடு வாழ்ந்தவர் என்று "வந்தார்கள் வென்றார்கள்" நூலில் மதன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தாலும் இவரும் சில பெண்களை மணந்தவர் தான். மற்றவர்களை போல் கணக்கில் அடங்காத அளவுக்கு இல்லை. விரல் விட்டு எண்ணும் அளவிலையே இருந்தது.
கி.பி.1614ல் மேவாருடனான போரில் மஹ்பத்கான் தோல்வியை தழுவ அதன் பின்னர் சென்ற இளவரசன் பர்வேஸும் மேவாரின் புவியியல் அமைப்பு தெரியாமல் திடிரென்று தாக்கும் கொரில்லா தாக்குதல்களினால் தோல்வியுற்று திரும்பினார். பின்னர் தக்காணத்தில் இருந்த இளவரசர் குர்ரமை அழைத்து மேவாரை வெற்றி கொள்ள பணிக்க அவரும் வந்தவுடன் தாக்குதலில் இறங்காமல் முற்றுகையிட்டு கோட்டைக்கு செல்லும் வழிகளை எல்லாம் அடைக்க ஓரு கட்டத்தில் ராணா பிரதாப் சிங்கின் மகனான அமர்சிங் சமாதான தூது அனுப்பினார். தூதராக தன் மகன் கரண் சிங்கை முகலாய அரசவைக்கு அனுப்ப ஜஹாங்கீர் மகிழ்ந்து நம் இணைந்து செயல்படுவோம் பூசல்கள் வேண்டாம் என்று கரண்சிங்கிடம் இரண்டு லட்சம் ரூபாய்கள் மதிப்புக்கு பரிசுகள் கொடுத்து அனுப்பினார். அரியணையில் தமக்கு பக்கத்தில் ஒரு நாற்காலி கொண்டு வந்து குர்ரமை தமக்கு சமமாக நடத்தினார்.
கி.பி.1617ல் தக்காண பிரதேசத்தில் நிஜாம் ஷாஜி வம்சத்தை சேர்ந்த மாலிக் அம்பர் (இவர் வீரர்களை வாடகைக்கு கொடுத்து போர்களத்தில் பங்கு பெற்று பின்னர் அப்படியே உயர்ந்து அஹ்மத் நகரை கைப்பற்றி அங்கு அரசு புரிந்தார்) மராட்டியர்களுடன் (ஷாகாஜி போன்ஸ்லே) சேர்ந்து மொகலாயர்களை எதிர்க்க மஹ்பத்கானினால் சமாளிக்க முடியாமல் குர்ரம் மேவார் வழிமுறையை கடைபிடித்து முற்றுகையிட்டே மாலிக் அம்பரை பணியவைத்தார். இந்த நிகழ்வினால் ஆக்ரா திரும்பிய குர்ரம்மை தங்க வைர நகைகளினால் அபிஷேகம் செய்து ஷாஜஹான் (உலகை ஆள்பவர்) என்ற பட்டப்பெயரை சூட்டினார்.
இந்த நேரத்தில் கி.பி.1616ல் ஆங்கிலேயர்கள் " சர் தாமஸ் ரே " என்பவரை அனுப்பி இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த ஆரம்பித்தனர். ஜஹாங்கீர் தாமஸ் ரே வுடன் நல்ல நட்பு கொண்டிருந்தாலும் சூரத் மற்றும் காம்பே பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க முதலில் இடம் கொடுக்கவில்லை. பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் கி.பி.1618ல் அனுமதித்தார். இந்த சர் தாமஸ் ரே குறிப்புகளில் நிறைய ஜஹாங்கீர்ரை பற்றிய குறிப்புகள் உள்ளது. ஜஹாங்கீருக்காக நிறைய மதுப்பானங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்து கொடுத்திருக்கிறார். அப்போது ஓரு நாளுக்கு 20 கிளாஸ் அளவுக்கு ஜஹாங்கீர் மதுப்பானங்கள் அருந்தியதாக குறிப்பிட்டுள்ளார். இது போக அபின் மற்றும் ஓபியம் வேறு. போர்களத்துக்கு போகும்போது அபின்னை மறந்து ஆளனுப்பி எடுத்து வந்த கதையையும் விவரித்துள்ளார்.
கி.பி.1620ல் ஷாஜஹான் லாகூரில் இருந்த நேரங்களில் ஜஹாங்கீர் உடல்நலம் சரியில்லா நேரத்தில் மாலிக் அம்பர் திரும்பவும் அகமது நகரை கைப்பற்றினார். பின்னர் பெர்ஹாம்பூர் மற்றும் மாண்டூ ஆகிய பகுதிகளை கைப்பற்ற ஷாஜஹான் திரும்ப வந்து அடக்கி ஆண்டுக்கு 50 லட்சம் கப்பம் கட்டவைத்தார்.
கி.பி. 1622ல் பாரசீக மன்னர் ஷா அப்பாஸ் கந்தஹாரை தாக்கி கைப்பற்றிக் கொண்டார். அதை கெளரவ பிரச்சினையாக கொண்ட ஜஹாங்கீர் பெர்ஹாம்பூரிலிருந்த ஷாஜஹானை கந்தஹாரை கைப்பற்ற பணித்தார். இந்த நேரத்தில் நூர்ஜஹான் தனது மருமகனான ஷாரியாரை ( நூர்ஜஹான்-அலி குலி பெக்கின் மகளான லட்லி பேகத்தை மணந்தவர். இவர் இளமையிலையே சிற்றின்ப பிரியராக இருந்து பெரு நோய் தாக்கி உடலெல்லாம் வெள்ளை தழும்புகள் தலையில் முடி கொட்டி வயதான தோற்றத்தில் இருப்பவர். இப்படிக்கும் இவர் ஷாஜஹானை விட 8 வயது இளையவர்) அடுத்த அரசராக ஆக்குவதற்கு முயன்றதால் ஷாஜஹான் வெறுப்புற்று இந்த கட்டளைக்கு கீழ்படியாமல் பெர்ஹான்பூரிலிருந்து கிளம்பியவர் மாண்டுவை அடைந்து அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டார். இதனால் கந்தஹாரை பாரசீக மன்னர் வசம் மொகலாயர்கள் இழந்தனர். ஜஹாங்கீருக்கு கடிதம் அனுப்பி மழைக்காலம் முடிந்தபின் கந்தஹாருக்கு செல்கிறேன். எனக்கு பஞ்சாப் கவர்னர் பதவி தரப்படவேண்டும். எனது குடும்பத்தினர் பயமில்லாமல் வாழ ரன்தாம்போர் கோட்டையை தரவேண்டும் என்று கோரிக்கை விட நூர்ஜஹான் வேறு தெளல்பூரில் ஷாரியாருக்குள்ள சொத்துகளை கைப்பற்றியிருக்கிறார் என்று சொல்ல ஜஹாங்கீர் தனது தளபதி மஹபத்கானை அனுப்பினார். ஆக்ராவை நோக்கி வந்த ஷாஜஹானை மதுராவுக்கு அருகில் மஹபத்கான் துரத்தியடிக்க மாண்டுவுக்கு ஓடினார். அங்கேயும் மஹபத்கான் விரட்டி வர குஜராத் ஓடியும் ஆதரவு கிடைக்காமல் தக்காணத்தை அடைந்தார். அங்கிருந்து ஒரிஸாவை நோக்கி ஓடினார். அங்கிருந்த முகலாய கவர்னர் ஷாஜஹானிடம் சரணடைய ஒரிஸா வசமாயிற்று. பின்னர் பீஹார், வங்காளம், அலகாபாத் மற்றும் வாரணாசி ஆகியவற்றை பிடித்தார். மஹபத்கான் திரும்ப விரட்டி வர தக்காணத்துக்கு ஓட மாலிக் அம்பர் இவருக்கு ஆதரவு கொடுத்தார். ஆனாலும் படைகள் குறைவு என்பதால் சமாதான தூது அனுப்ப ஜஹாங்கீரின் ஆணைப்படி முதலில் மூன்றாவது மகன் ஓளரங்கசீப் மற்றும் பின்னர் முதல் மகன் தாரா ஷிக்கோ இருவரையும் ஜஹாங்கீரிடம் அனுப்ப அவர்கள் இருவரும் தாத்தாவின் அரவணைப்பில் ஆக்ராவில் வாழ்ந்தனர்.
கி.பி.1626ல் குஜராத்தை நிர்வகிக்க பர்ஷேஸ்ஸையும் வங்காளத்தை நிர்வகிக்க மஹபத்கானையும் உத்தரவிட இருவரையும் ஒன்று சேராமல் பிரிக்க நூர்ஜஹான் எண்ணியதாக மஹபத்கான் நினைக்க அந்த நேரத்தில் மஹபத்கானின் மகளுக்கு பார்த்த மணமகன் முறைப்படி பேரரசின் அனுமதி பெறாமல் திருமணத்திற்கு முயன்றதாக அவரை சங்கிலியால் பிணைத்து வீதிவிதியாக கொண்டு சென்று சிறையில் அடைத்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்தது மஹபத்கானை கோபப்படுத்தியது. அதனால் அவர் படைகளுடன் லாகூர் செல்ல ஜஹாங்கீர் அந்த நேரத்தில் காபூலுக்கான வழியில் ஜீலம் நதிக்கரையில் முகாமிட்டு இருந்தார். அங்கே வந்த முஹபத்கான் ஜஹாங்கீரை சிறைபடுத்த நூர்ஜஹான் பேரரசரை கவனிக்க தான் வேண்டும் என்று கூறி வலிய போய் ஜஹாங்கீரிடம் சேர்ந்து கொண்டாள். பயணம் காபூலுக்கு தொடர நூர்ஜஹானின் ரகசிய கட்டளைப்படி மொகலாய படைப்பிரிவினர் தாக்குதல் நடத்தி மஹபத்கானை விரட்டியடித்தனர். மஹபத்கான் நேராக தக்காணத்திற்கு ஒடி ஹாஜஹானை சரணடைந்தார்.
கி.பி.1627 கோடைக்காலத்தில் காஷ்மீரில் தங்கினார். குளிர்காலம் ஆரம்பிக்க பனி மூச்சுத்திணறல் காரணமாக காஷ்மீரை விட்டு லாகூருக்கு கிளம்பினார். வழியில் கி.பி.1627 நவம்பர் 8ல் அவர் உயிர் பிரிந்தது.
ஜஹாங்கீருக்கு இரண்டு கல்லறைகள் இருப்பது உண்மையா?
காஷ்மீரில் இருந்து லாகூர் செல்லும் வழியில் ஜம்முவை அடுத்த செனாப் நதியை தாண்டி அக்னூர் கோட்டையை நெருங்கும்போது ஜஹாங்கீர் உயிர் பிரிந்தது. நூர்ஜஹான் ஒருவரும் அரசர் இறந்தது தெரியாமல் அக்னூர் கோட்டையிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சுந்தர் பென் பாஸர் கோட்டைக்கு கொண்டு வந்தார். பின்னர் கோட்டையில் நெருக்கமானவர்களுடன் ஆலோசனையின் பேரில் மன்னரின் குடலை அப்புறப்படுத்தி அதை கோட்டையினுள் புதைத்தனர். பின்னர் அவரது வயிற்றை சுற்றி கட்டுக்கள் போட்டு யாரும் அறியாமல் யானை மீது ஏற்றி எப்போதும் போதையில் இருப்பது மாதிரி செய்து கொண்டு தவி, பஸந்தர், சுக்வால், தர்ணா, உகநல்லா, காலிபாடி என பல நதிகளை கடந்து பதான் கோட்டையை அடைந்தது. ஆக்ரா அதிக தூரம் இருப்பதாலும் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு மேல் ஆகியதாலும் லாகூருக்கு திருப்பி போனார். அங்கே மன்னரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதனால் லாகூரில் ஒரு சமாதியும் உறுப்புகள் அடக்கம் செய்யப்பட்ட பாஸர் கோட்டையில் ஒரு சமாதியும் அமைக்கப்பட்டது. இரண்டு சமாதியும் 250 மைல்கள் தூரத்தில் உள்ளது. இது உண்மையா என்றும் தெரியவில்லை.
லாகூரில் அமைக்கப்பட்ட ஜஹாங்கீரின் சமாதி(10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது) அருகில் தனக்கும் சிறிய சமாதி அமைத்துக் கொண்டார்.
காலம் இருவரையும் பிரித்தது மட்டுமின்றி இருவரின் கல்லறைகளுக்கும் இடையில் இன்றும் பிரித்தபடி இடையே ரயில் பாதை உள்ளது.
உதவிய நூல்கள்:
மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
மொகலாயர்கள் - முகில்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
நூர்ஜஹான் - சர்தார் ஜோகிந்தர் சிங்
அக்பர் - லாரன்ஸ் பின்யான்
இருபதாம் இல்லத்தரசி - இந்து சுந்தரேசன்
நிழல் இளவரசி - இந்து சுந்தரேசன்
இதய ரோஜா - இந்து சுந்தரேஷன்
சீக்கியர்கள் - எஸ்.கிருஷ்ணன்
விக்கிபீடியா தகவல்கள்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
படங்கள் :
கூகுள் மற்றும் திருமுத்துகுமரன்





Comments
Post a Comment