73) மொகலாய பேரரசு - ஷாஜஹான்
ஷாஜஹான் (கி.பி.1592-1666)
ஆட்சி (கி.பி.1628-1658)
ஷாஜஹான் என்று சொல்லும்போதே மும்தாஜ் மற்றும் தாஜ்மஹால் தான் நம்முடைய ஞாபகத்துக்கு வரும். ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தன் அருமை மனைவி மும்தாஜ் மறைவினால் அவளுக்காக நினைவு சின்னமாக கட்டிய மன்னர். மெர்ட்டா ராஜகுமாரி ஜோதா பாய் (ஜகத் கோஸின்) - ஜஹாங்கீருக்கு மூன்றாவது மகனாக கி.பி.1592 ஜனவரி 6ம் தேதி லாகூரில் பிறந்தவர். அக்பருக்கு எதிராக ஜஹாங்கீரும், ஜஹாங்கீருக்கு எதிராக ஷாஜஹானும் கிளர்ச்சி செய்து தோற்றாலும் ஷாஜஹானுக்கு எதிராக அவரின் மூன்றாவது மகன் ஓளரங்கசீப்பின் கிளர்ச்சி இவரை ஆட்சியை விட்டே துரத்தியதுடன் வீட்டுச்சிறையிலும் இருத்தியது. ஜஹாங்கீர் நவம்பர் 8,1627ல் மறைந்தவுடன் முதலில் தனது சகோதரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கொன்று குவித்து விட்டு (பெரும்பாலான மரணங்கள் கி.பி.1628 பிப்ரவரி 2ல் லாகூர் கோட்டையில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது) இவர் பிப்ரவரி 14, 1628ல் ஆக்ரா கோட்டையில் அடுத்த பேரரசராக பதவியேற்றார். கி.பி.1657 செப்டம்பரில் உடல் நலமுற்று இருக்கும்போது அடுத்த அரசர் யார் என்ற போட்டியில் இவரது மூன்றாவது மகன் ஓளரங்கசீப் ஜீலை 1658ல் இவரை ஆக்ராவில் தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார். மேலும் உடல்நலமுற்று இருந்த இவரை வீட்டுக்காவலில் வைத்திருந்தார். வீட்டுக்காவலில் 8 ஆண்டுகள் இருந்த ஷாஜஹான் தனது மாளிகையில் இருந்தே தாஜ்மஹாலை பார்த்தே ஜனவரி 31, 1666ல் தனது 74வது வயதில் இறந்து போனார். இவரே இன்றைய பழைய டெல்லியை (ஷாஜஹனாபாத்) உருவாக்கியவர்.
இவரது மனைவிகளின் விவரங்கள். மொத்தம் 11 மனைவிகள்.
1) அக்பராபாதி மஹால்: (இஷ்த்-உன்-நிஸா பேகம் ஷாஹிபா)
இவரை தான் முதலில் மணந்தார். ஆக்ராவில் (அக்பராபாத்) பிறந்தவர் என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். இவர் கி.பி.1677, பிப்ரவரி 7ல் மறைந்தார்.ஆக்ராவிலுள்ள அக்பராபாதி மசூதியில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
2) கந்தஹாரி மஹால்:
கி.பி.1594ல் கந்தஹாரில் பிறந்த இவரை கி.பி.1609ல் மணந்தார். இவருக்கு பிறந்த மகள் சிறுவயதிலையே இறந்துவிட்டார்.இந்த மனைவி மறைந்தவுடன் ஆக்ராவிலுள்ள "கந்தஹாரி பாக்"கில் அடக்கம் செய்யப்பட்டார்.
3) மும்தாஜ் மஹால்: (அர்ஜீமன்ட் பானு பேகம்)
கி.பி.1593ல் பிறந்த இவரை கி.பி.1612, மே 10ல் மணந்தார். இவரை கி.பி.1607லிலையே நிச்சயம் செய்திருந்தாலும் அந்த நேரத்தில் ஷாஜஹான் நிறைய போர்களில் வெளியூர்களிலையே கழித்தால் தான் 5 வருட தாமதம் ஏற்பட்டதாக சொல்லுவார்கள். கி.பி.1631ல் மறைந்த இவர் நினைவாக தான் தாஜ்மஹால் கடட்டப்பட்டது. இவர் நூர்ஜஹானின் சகோதரர் அஸப்கானின் மகள். ஷாஜஹானுக்கும் இவருக்கும் மொத்தம் 14 குழந்தைகள். அதில் 7 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டனர். கி.பி.1631ல் தனது 14வது குழந்தையான "கெளஹாரா பேகம்" பிரசவத்தின் போது தான் ஜன்னி கண்டு இறந்து போனார்.
4)ஹசினா பேகம் ஷாஹிபா:
கி.பி.1617 செப்டம்பர் 3ல் பெர்ஹாம்பூரில் மணந்தார். இவர் நவாப் ஷா நவாஸ் கான் பகதூர் என்பவரின் மகளும் முன்னாள் குஜராத்தின் சுபேதாராக இருந்த அப்துர் ரஹீம் கானின் பேத்தியும் ஆவார்.
5) மூட்தி பேகம் ஷாஹிபா:
6) குத்ஷியா பேகம் ஷாஹிபா:
7) பஃதேபூரி மஹால் ஷாஹிபா:
இவர் கி.பி.1666க்கு பிறகு மறைந்தார்.
8) சர்ஹிந்த் பேகம் ஷாஹிபா:
இவர் கி.பி.1650ல் மறைந்தார்.
9) ஶ்ரீமதி மன்பாவதி பாய்ஜிலால் ஷாஹிபா:
இவர் விதவையான ஷாஜஹானின் மூத்த சகோதரர் சுல்தான் முஹமது பர்வேஸ் மிர்ஸாவின் மனைவி. இவர் ஜோத்பூர் அரசர் சூரஜ்மால் என்பவரின் மகள். இவரை பர்வேஸ் மிர்ஸா மறைவுக்கு பின் கி.பி.1626ல் திருமணம் செய்தார்.
10) குமாரி லைலாவதி பாய்ஜி லால் ஷாஹிபா:
கார்வாரின் ராவ் ஶ்ரீசாகேத் சிங் என்பவரின் மகளான இவரை கி.பி.1627ல் மணந்தார்.
11) மன்சப்தார் ஜமால் கான் என்பவரின் முன்னாள் மனைவி:
இவரது குழந்தைகள்:
1) ஜகன்னாரா பேகம்:
இவரே மும்தாஜ்-ஷாஜஹான் தம்பதியின் மூத்த மகள். இவர் தனது தாயை போலவே உருவ அமைப்பை கொண்டிருந்ததால் ஷாஜஹான் இவரிடம் மிகுந்த பிரியத்தில் இருந்தார். இவரும் இவரது தந்தையான ஷாஜஹானுக்கும் தகாத உறவு இருந்ததாக அந்த நாட்களில் வதந்தி உலாவியது. அதை நிக்காலோ மனுச்சி மறுத்து அது அவரின் சகோதரன் ஒளரங்கசீப்பின் வேலையாக இருக்கலாம் என்று கூறுகிறார். மும்தாஜ் மறைந்தவுடனும் வீட்டுசிறையில் இருந்த காலகட்டங்களில் இவரே ஷாஜஹானுக்கு பணிவிடை செய்தவர். தாயின் 14வது பிரசவத்தில் உதவியாக இவரும் உடனிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொகலாய இளவரசிகளில் இவரே மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இவர் திருமணம் முடிக்காவிட்டாலும் இவருக்கும் ஷாஜஹானின் அவையில் இருந்த பிரபு ஒருவருக்கும் காதல் இருந்ததாகவும் அவர்களுக்கு இடையே ஒரு மகன் பிறந்ததாகவும் அந்த சமயத்தில் இவர் யாருக்கும் தெரியாமல் புனித யாத்திரை செல்வதாக கூறிவிட்டு லாகூரில் குழந்தையை பெற்றெடுத்து மகனை அவர் தந்தையிடம் வளர்க்க கொடுத்ததாகவும் அந்த மகன் பின்னாளில் ஓளரங்கசீப்பின் அவையில் பணியாற்றியதாகவும் கூறுவார்கள். கி.பி.1614 ஏப்ரல் 2ல் பிறந்த இவர் கி.பி.1681ல் செப்டம்பர் 6ல் தனது 67வயதில் இறந்தார். இவரது தாயார் மும்தாஜ் மஹால் இறந்தவுடன் கி.பி.1631 முதல் கி.பி.1658 வரை "பாட்ஷா பேகம் - அரண்மனையின் மூத்த ராணி" என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஓளரங்கசீப் ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் இவரது தங்கையான ரோஸனாரா பேகம் கி.பி.1658-1668 வரையும் பின்னர் இவரே கி.பி.1668-1681 வரை அதாவது இவர் இறக்கும்வரை முதன்மை பெண்மணியாக இருந்தார். கி.பி.1644ல் அரண்மனையில் தீ விபத்தில் சிக்கிய இவர் உயிர் பிழைக்க ஷாஜஹான் தான தர்மங்கள் செய்ததாகவும் தெரிகிறது. இந்த விபத்தில் அரீஃப் என்ற அடிமை பச்சிலை மருந்துகளால் செய்த களிம்புகளால் செய்த மருத்துவத்தால் எட்டு மாதங்களுக்கு பிறகு இவர் உடல்நலம் தேறினார் என்றும் ஆங்கிலேய மருத்துவரின் சிகிச்சையில் உடல்நலம் தேறினார் என்றும் இரு வேறு தகவல்கள் உள்ளது. ஓரு முறை 12 கஜம் டாக்கா மஸ்ஸீன் ஆடைகளை அணிந்த இவரை உடலை அப்பட்டமாக காட்டுவதாக ஷாஜஹான் கடிந்து கொண்டு வேறு ஆடை அணிந்துவர சொன்னதாகவும் தெரிகிறது. இவரின் மேற்பார்வையில் தான் டெல்லியின் "சாந்தினி செக்" உருவாகியது. சூரத் நகரின் வரிவசூல் இவருக்கு தான் வந்தது. அந்த காலத்தில் இவருடைய ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய். இவருக்கு மொத்தம் 14 கப்பல்கள் சொந்தமாக இருந்தது. அதன் மூலம் மெக்கா வரைக்கும் வணிக தொடர்புகளை வைத்திருந்தார்.
2) தாரா ஷீகோ:
இவர் மூத்த மகன். ஜகன்னாரா பேகத்திற்கு பின் பிறந்தவர். தாரா என்ற பெயருக்கு அரசன் என்று பொருள். ஷாஜஹானின் பிரியமான மகன் இவர். வாரிசுரிமை போட்டியில் ஜகன்னாரா பேகம் தனது மூத்த சகோதரரான இவருக்கே ஆதரவு அளித்தார். ஓளரங்கசீப் ஆக்ராவை கைப்பற்றி அரசரானவுடன் இவரை கொன்று தலையை ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்ததாகவும் அதை பார்த்த ஷாஜஹான் மயக்கத்தில் விழுந்ததாகவும் கூறுவார்கள். மார்ச் 30,1615 ல் பிறந்த இவர் கொல்லப்பட்டது தனது 44வது வயதில் செப்டம்பர் 8,1659ல். இவர் லாகூரிலுள்ள மியான் மிர் என்ற சூபி வழி ஞானியை தன் குருவாக கொண்டவர். மிகச்சிறந்த படிப்பாளி. சமஸ்கிருதத்திலுள்ள உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர் இவர். இவரது "மஜ்மா உல் பஹ்ரைன் (இரு பெருங்கடல்களின் சங்கமம்) நூலில் சூபியிஸம் மற்றும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை வகைப்படுத்தி யுள்ளார். சிறு வயதில் தாத்தா ஜஹாங்கீரால் ஆக்ராவில் வளர்க்கப்பட்டார். ஷாஜஹான் காலத்தில் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டு அடுத்த அரசர் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர். இவர் அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தார். ஏசு சபையின் அருட்தந்தை பூஜி என்பவரின் சமய கருத்துகளையும் ஏற்றுக்கொண்டவர்.
ஷாஜஹானின் ஒன்று விட்ட சகோதரர் பர்வேஷ் மிர்ஸாவின் மகளான நாதிரா பானு பேகத்தை கி.பி.1633ல் மணந்தார். மொகலாய இளவரசர்களிலையே இவர் மட்டுமே ஒரு மனைவியோடு வாழ்ந்த ஏகபத்தினி விரதன். இவருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் பிறந்தாலும் அதில் 2 ஆண் குழந்தைகள் 2 பெண் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டன. மீதி 4 குழந்தைகளே பிழைத்தது. அதிலும் ஒரு ஆண் குழந்தை 4 வயதில் இறந்துவிட்டது.
i) சுலைமான் ஷீகோ
மார்ச் 15,1635ல் பிறந்த இவர் மே1662ல் குவாலியர் சிறையில் இறந்தார்.
ii) மும்தாஜ் ஷீகோ
ஆகஸ்ட் 16,1643ல் பிறந்த இவர் டிசம்பர் 6,1647ல் தனது 4 வயதிலையே இறந்தார்.
iii) ஸிஃபிர் ஷீகோ
அக்டோபர் 13,1644ல் பிறந்த இவர் ஜீலை 3,1708ல் இறந்தார். தாராவுடன் சிறையில் இருந்த இவர் பின்னால் விடுவிக்கப்பட்டு ஓளரங்கசீப்பின் மகள் ஜூப்தாத் உன்னிஸா பேகத்தை மணந்து கொண்டு ஓளரங்கசீப்பின் மருமகனானார்.
iv) ஜஹான்சீப் பானு பேகம்:
இவர் கி.பி.1705ல் மறைந்தார். ஓளரங்கசீப்பிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவரின் மூத்தமகன் முஹம்மத் அஸம்ஷாவை திருமணம் செய்தவர். ஜனி பேகம் என்று அழைக்கப்பட்டவர் இவர்.
3) ஷா சுஜோ:
இவர் மும்தாஜ்- ஷாஜஹானின் இரண்டாவது மகன். சுஜோ என்ற சொல்லுக்கு துணிவுள்ளவன் என்று அர்த்தம். வாரிசுரிமை போரில் இவரும் அகற்றப்பட்டார். மார்ச் 22, 1616ல் பிறந்த இவர் இறந்தது பிப்ரவரி 7,1661ல். இவர் வங்காளத்தில் ஆளுநராக இருந்தார்.
இவருக்கு மூன்று மனைவிகள்
a) பில்கிஸ் பானு பேகம்
b) பியாரி பானு பேகம்
c) பெயர் தெரியவில்லை
மொத்தம் 7 குழந்தைகள்
i) ஜையின்-உத்-தீன் மிர்ஸா
ii) ஜையின்-வுல்-அபிதீன் மிர்ஸா
iii) புலன்ந் அக்தர் மிர்ஸா
iv) தில்பஸீர் பானு பேகம்
v) குல்ராக் பானு பேகம்
vi) ரோஸன் அரா பேகம்
vii) அமீனா பானு பேகம்
4) ரோஸனாரா பேகம்:
இவர் மும்தாஜ்-ஷாஜஹானின் இரண்டாவது மகள். தனது இளைய சகோதரன் ஓளரங்கசீப்பிற்கு இவர் வாரிசுரிமை போட்டியில் ஆதரவு அளித்தார். இவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இவருக்கு நிறைய காதலர்கள் இருந்ததாகவும் கூறுவார்கள். செப்டம்பர் 3,1617ல் பிறந்த இவர் தனது 54வது வயதில் கி.பி.1671ல் மறைந்தார். ஓளரங்கசீப்பிற்கு ஆதரவு கரம் நீட்டிய இவர் அவர் ஆட்சிக்கு வந்த புதிதில் கி.பி.1658-1668 வரையில் அரண்மனை முதன்மை பெண்மணியாக (பாத்ஷா பேகம்) இருந்தார். திருமணம் முடிக்காமல் அதை தாண்டிய கள்ள உறவுகளினால் இவர் பெயர் கெட்டது. அதனால் இவரை அந்த பதவியிலிருந்து நீக்கி ஜகன்னாரா பேகத்தை பழையபடி பாத்ஷா பேகமாக நியமித்தார். அப்படியும் திருந்தாத இவருக்கு கட்டுக்காவல்கள் போடப்பட்டது. ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு இவரை மாற்றியும் இவர் தனது கள்ள உறவுகளை நிறுத்தவில்லை. கள்ள உறவின் போது பிடிக்கப்பட்ட இவருக்கு கொடுமையான விஷத்தின் மூலம் மரணதண்டனை வழங்கப்பட்டது. இவரது மரணத்திற்கு பிறகு டெல்லியில் "ரோஸனனாரா பாக்" என்ற சமாதியை ஓளரங்கசீப் அமைத்தார்.
5) ஓளரங்கசீப்:
மும்தாஜ்-ஷாஜஹானின் மூன்றாவது மகன் இவர். ஓளரங்கசீப் என்ற பெயருக்கு அரியணையின் ஆபரணம் என்று பொருள். கி.பி.1658ல் தந்தையை வீட்டுசிறையில் வைத்துவிட்டு ஆட்சியை கைப்பற்றியவர். ஷா ஆலம் கீர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.49 ஆண்டுகள் ஆண்ட பெருமைக்குரியவர். 15 வயதில் இருக்கும்போது மதம்பிடித்த யானையை கண்டு பயப்படாமல் எதிர்கொண்டு வேல் வீசிக்கொன்றதால் தந்தையால் "பகதூர்ஷா" என்ற பட்டத்தை பெற்றவர். இவர் கி.பி.1618 அக்டோபர் மாதம் 24 ம்தேதி மாள்வா எல்லையிலுள்ள "தூத்" பகுதியில் பிறந்தார். வாழ்நாளில் குடிப்பழக்கமே இல்லாத தூயவராக இருந்த அசல் பக்கீரி போல் வாழ்க்கையை நடத்தினாலும் ஆட்சியை பிடித்த விதத்திலும் ஆட்சியை காப்பாற்றிய விதத்திலும் கொடுமையானவராகவே பார்க்கப்படுகிறார்.
6) முராத் பஃக்ஷ்:
இவர் மும்தாஜ்-ஷாஜஹானின் நான்காவது மகன். முராட் பக்ஃஷ் என்ற பெயருக்கு விரும்பியதை அடைபவன் என்று பொருள்.வாரிசுரிமை போரில் ஓளரங்கசீப்புடன் இணைந்து செயல்பட்டவர். அடுத்த அரசர் என்று ஆசைப்பட்டு கொண்டு இருந்த இவரை அகற்றிவிட்டு பின்னர் ஓளரங்கசீப் ஆட்சியை கைப்பற்றினார். கி.பி.1624, செப்டம்பர் 8ம்தேதி பிறந்த இவர் டிசம்பர் 14,1661ல் தனது 37வயதில் மறைந்தார். சிறந்த வீரராக இருந்தாலும் அரசியலில் முட்டாளாக இருந்தார். பாபரின் வழியில் வந்த இவர் நல்ல குடி வெறியர்.
இவருக்கு 2 மனைவிகள் 5 குழந்தைகள்
a) சகீனா பானு பேகம்
b) பெயர் தெரியவில்லை
i) முஹம்மதியார் மிர்ஸா
ii) இஸாத் பக்ஃஷ் மிர்ஸா
iii) தோஸ்தார் பானு பேகம்
iv) அஸீஸ் பானு பேகம்
v) ஹம்ராஸ் பானு பேகம்
7) கெளஹாரா பேகம்:
இவர் மும்தாஜ்-ஷாஜஹானின் மூன்றாவது மகள். பதினாலாவது குழந்தையான இவரின் பிறப்பின் போது தான் (ஜீன் 17,கி.பி.1631) தான் மும்தாஜ் மஹால் இறந்தார். அதனால் ஷாஜஹானின் வெறுப்பிற்கு உள்ளான மகள். இவரை மூத்த சகோதரியான ஜகன்னாரா பேகம் தான் வளர்த்தார். இவர் கி.பி.1706ல் தனது 75வயதில் மரணமடைந்தார்.
ஜஹாங்கீர் மரணமடைந்தவுடன் நூர்ஜஹான் தனது மருமகனான ஷாரியாரை அரசராக்க திட்டமிட்டார். அந்த நேரத்தில் ஷாஜஹான் தக்காண பகுதிகளில் இருந்ததால் அவரது மாமனாரும் நூர்ஜஹானின் அண்ணனுமான அஸப்கான் இறந்து போன குஷ்ரூ மிர்ஸாவின் மகனான தாவர்பக்ஃஷ்யை ஆக்ராவில் தற்காலிக அரசராக்கினார். சித்தப்பா ஷாஜஹானின் மீது பிரியம் கொண்டிருந்த இவரும் அதன்படியே நடந்தார். இந்த நேரத்தில் ஷாரியார் லாகூரை படையெடுத்து சென்று கொள்ளையடித்தார். அஸப்கான் மற்றும் தாவர்பக்ஃஷ் கூட்டணி படைகள் லாகூரை கைப்பற்றி ஷாரியார் முதலானவர்களை கைது செய்தது. பின்னர் அனைத்து வாரிசுகளுக்கும் பிப்ரவரி 2ம் தேதி லாகூரில் முடிவு கட்டிட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஷாஜஹான் லாகூர் வந்து சேர்ந்து பிப்ரவரி 14, 1628ல் லாகூரில் பேரரசராக பதவியேற்றுக் கொண்டார். தாவர்பக்ஃஷ்யை மட்டும் பெர்ஷியா (ஈரான்)க்கு அனுப்பிவிட்டார். நூர்ஜஹானும் அவர் மகள் லட்லி பேகம் மற்றும் பேத்தியுடன் லாகூர் அரண்மனையிலையே பொதுவாழ்க்கையிலிருந்து விலகி ஜஹாங்கீருக்கு நினைவிடம் கட்டினார். இவருக்கு வருடத்துக்கு 2 லட்சம் ரூபாய் மானியம் ஷாஜஹானால் வழங்கப்பட்டது. கி.பி.1645 நவம்பர் 18ல் தனது 68வயதில் லாகூரில் இறந்த அவருக்கு ஜஹாங்கீர் நினைவிடத்திற்கருகிலே நினைவிடம் கட்டப்பட்டது. என்ன கி.பி.1622ல் இறந்த தனது தந்தையான இதமத்துல்லா (கியாஸ்தீன் பெக்) நினைவிடத்தை தன் செலவில் கட்ட உத்தரவிட்ட நூர்ஜஹான் அதை கடைசி வரை பார்க்காமலையே லாகூரில் வீட்டுசிறையில் இருந்து மாண்டு போனார்.
ஜஹாங்கீர் மறைவுக்கு பின்னால் அபுல் பாஸலை கொன்ற வீர்தேவ்சிங் புண்டோலாவின் மகனான ஜூஹர்சிங் ஆர்ச்சாவிலிருந்து சவால் விட மஹபத்கானை அனுப்பி அடக்கினார். கலகத்துக்கு அபராதமாக 15 லட்சம் ரூபாயும் 40 போர் யானைகளையும் மொகலாயர்களுக்கு கொடுத்தும் பின்னர் கி.பி.1635ல் ஓளரங்கசீப்பை அனுப்பி ஆர்ச்சாவை கைப்பற்றினார். தப்பித்து ஓடி காட்டில் அடைக்கலம் ஜூஹர்சிங் அங்குள்ள கோண்ட் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். ஜூஹர்சிங்கின் இரண்டு மகன்கள் இஸ்ஸாம்க்கு மதம் மாறியதால் கொல்லப்படாமல் விட ஒரு மகன் மறுத்ததால் கொல்லப்பட்டார்.
மாள்வாவின் கவர்னராக இருந்த கான் ஜஹான் லோதி ஷாஜஹானின் கவனிப்பில் இருந்து தப்பி சென்று அகமது நகரில் அடைக்கலம் தேட தக்காணத்தின் மீது ஏற்கனவே கண் வைத்திருந்த ஷாஜஹானுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கி.பி.1629 டிசம்பரில் ஆரம்பித்த முற்றுகை கி.பி.1630ல் ஆரம்பித்த தக்காண பஞ்சத்தால் மொகலாயர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க திணறி கான் ஜஹான் லோதியை தப்பித்து போக செய்தார் அகமது நகர் சுல்தான். தப்பித்து போனவர் பஞ்சாப் செல்லும் வழியில் அவர் மகன்களுடன் கொல்லப்பட்டார். ஆனாலும் போரை தொடர்ந்தார். அகமது நகர் சுல்தானுக்கு பிஜப்பூர் படையினர் உதவிக்கு வந்து மொகலாயரை விரட்டி செய்தி பெர்ஹாம்பூரில் இருந்த ஷாஜஹானுக்கு கிடைத்த நேரத்தில் அவரின் காதல் மனைவி மும்தாஜ் உயிருக்கு ஊசலாடிய செய்தியும் கிடைக்க போர்பாசறையில் இருந்து பெர்ஹாம்பூர் அரண்மனைக்கு திரும்பினார். பெர்ஹாம்பூருக்கு சென்ற நேரத்திலும் நிறைமாத கர்ப்பிணி மும்தாஜ்ஜை உடன் அழைத்து சென்றிருந்தார். கி.பி.1631 ஜீன் 17ல் தனது 38 வயதில் ஷாஜஹானின் மடியில் மும்தாஜ் உயிர் பிரிந்தது. போர்களத்திலும் ஜஹாங்கீருக்கு எதிரான கிளர்ச்சி செய்த காலத்திலும் மும்தாஜ்ஜை பிரியாமல் கூடவே அழைத்து சென்ற ஷாஜஹானை விட்டு மும்தாஜ் நிரந்தரமாக பிரிந்தார். பெர்ஹாம்பூரில் முதலில் அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ் பின்னர் 6 மாதம் கழித்து ஆக்ராவுக்கு எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் அடக்கம் செய்யப்பட்டார். மகத்தான காதலின் நினைவாக நினைவுச்சின்னம் எழும்ப ஆரம்பித்தது. ஆக்ராவில் யமுனா நதிக்கரையின் அருகில் ஜெய்ப்பூர் மஹாராஜா ஜெய்சிங்கின் மாளிகையை விலை கொடுத்து வாங்கி முற்றிலும் வெள்ளை சலவைக் கற்களால் ஆன "தாஜ்மஹால்" வடிவமைக்கப்பட்டது. இந்த கல்லறையை கட்டும் பொறுப்பு மிர் அப்துல் கரீம் மற்றும் மகர்மத் கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆக்ராவில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மும்தாஜ் சவப்பெட்டி எடுக்கப்பட்டு தாஜ்மஹாலில் மீண்டும் புதைக்கப்பட்டது. இதற்கு முதலில் "ரவுஸா இ முனவ்வரா" என்று பெயரிடப்பட்டு பின்னரே தாஜ்மஹால் என்று அழைக்கப்பட்டது. வடமாநில ஆராய்ச்சியாளர் பி.என். ஓக் என்பவர் ஆதியில் தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவாலயம் இருந்ததாகவும் ஜெய்சிங் மன்னருக்கு ஆணையிட்டு கொடுத்த ஆவணங்களின் படி அந்த மாளிகை விலைக்கு பதிலாக நான்கு மாளிகையை கொடுத்து அந்த இடத்தை பெற்றதாகவும் கூறுகிறார். அதன்படி பார்த்தால் அங்கு மாளிகை இருந்தது தெளிவாக தெரிகிறது. மாளிகைக்குள் சிவன் கோயில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதே உண்மையாக இருக்கும். ஆரம்பத்தில் "தேஜாமஹாலயா" என்று தாஜ்மஹால் அழைக்கப்பட்டதாகவும் பின்னர் தான் அவரின் பெயரான மும்தாஜ் மஹால் என்பதிலிருந்து "தாஜ் மஹால்"என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். ஆதியில் சிவன் கோயிலாக இருந்ததாகவும் அங்கு தலையில்லாத சிவன் சிலையும் பூஜைக்குரிய பொருட்களும் தாஜ்மஹாலின் உள்ளே பூட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்கிறது என்று "தாஜ்மஹால் உண்மையான வரலாறு" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ போகட்டும் தாஜ்மஹால் நம்மை பொறுத்தவரை தற்கால உலக அதிசயங்களில் ஒன்று. ஷாஜஹான்-மும்தாஜின் காதற் சின்னமான தாஜ்மஹால் அந்த காலத்தில் 20000 பணியாட்களுடன் 21 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டது. கி.பி.1632ல் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் நாடெங்கும் பஞ்சம் பரவியிருந்தது. மனிதரை மனிதர் கொன்ற கொடூரங்கள் எல்லாம் அந்த பஞ்சத்தில் நடந்தது. அரிசிக்காகவும் துண்டு ரொட்டிகளுக்காகவும் மக்கள் ஆலாய் பறந்த கொடுமையும் நிகழ்ந்தது. பஞ்சத்தின் தீவிரம் ஆண்டின் இறுதியில் குறைய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் தாஜ்மஹால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கி.பி.1643 ல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் 5 ஆண்டுகளில் வெளிப்புறமுள்ள தோட்டங்கள் வளர்க்க ஆரம்பிக்கப்பட்டு கி.பி.1648ல் முழுமைபெற்றது. சிலர் கி.பி.1653ல் முழுமை பெற்றது என்றும் கூறுகிறார்கள். கி.பி. 1631ல் மும்தாஜ் மறைந்தவுடன் பெர்ஹாம்பூரில் சமாதி அமைக்கப்பட்டது. பின்னர் தாஜ்மஹால் வேலைகள் ஆரம்பித்தவுடன் தாஜ்மஹாலுக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் அவர் உடல் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டது. பின்னர் தாஜ்மஹாலின் தரைத் தளம் எழுந்தவுடன் கி.பி.1633ல் மே.26ல் மூன்றாவது முறையாக இன்றைய தாஜ்மஹாலில் அடக்கம் செய்யப்பட்டார். இன்றைய தாஜ்மஹாலில் நிலவறையில் மும்தாஜ்ஜின் சமாதி உள்ளது. அதன் அருகில் ஷாஜஹானின் சமாதி சற்று உயரமாக அமைந்துள்ளது. மேலே உள்ளது அடையாள சமாதி மட்டுமே.
அக்பர்,ஜஹாங்கீர் போல் அல்லாமல் ஷாஜஹான் தீவிர மத கட்டுப்பாடுகளுடன் ஷரியத் சட்டங்களின் படி ஆட்சியை நடத்தினார். கி.பி.1633ல் புதிதாக இந்து கோவில்கள் கட்டப்படக்கூடாது. பழைய கோவில்கள் பராமரிக்க செய்ய நிதி வழங்கப்படாது என்று கட்டளையிட்டார். இதனால் அந்த சமயத்தில் கட்டப்பட்ட கட்டி முடிக்கப்பட்ட கோயில்களும் இடிக்கப்பட்டது. வாரணாசியில் மட்டும் 76 கோவில்கள் இடிக்கப்பட்டது. சில சர்ச்சுகளும் இதில் தப்பவில்லை. முஸ்லீம்கள் அணியும் பாணியில் இந்துக்கள் உடை அணியக்கூடாது. பொதுவிடங்களில் மது அருந்தக்கூடாது. இந்துக்கள் முஸ்லீம்களை பணியாட்களாக வைத்துக் கொள்ளக்கூடாது போன்ற சட்டங்களை இந்த நேரத்தில் போட்டார்.
அக்பரின் காலத்திலையே பிடரர் சுல்தான்கள் வீழ்ந்தனர். கி.பி.1633ல் அகமது நகரை வீழ்த்த மஹபத்கானை அனுப்பினார். ஷாஜஹானுக்கு அடைக்கலம் கொடுத்த அம்பர் மாலிக்கின் மகன் ஃபத் கானின் உதவியினால் தெளலாபாத்தை (அகமது நகர் தலைநகர்) கைப்பற்றி அதன் இளவயது சுல்தான் ஹீசைன் ஷா குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்து கி.பி.1634ல் மஹபத்கான் மறையவே தானே கி.பி.1636ல் ஜனவரியில் கோல்கொண்டாவின் சுல்தான் அப்துல்லா குத்ப் ஷா தானே வந்து பணியே அடுத்து பிஜப்பூரின் மீது பார்வை திரும்பியது.பிஜப்பூர் மீது நான்கு மாத முற்றுகைக்கு பின் அதன் சுல்தான் அடில் ஷா சமாதானம் செய்துக்கொண்டார். அகமது நகரை இருவரும் பிரித்துக் கொண்டனர். பிஜப்பூர் மொகலாயருக்கு அடங்கிய இராஜ்ஜியமாயிற்று. இதனால் தக்காணம் முழுவதையும் கைப்பற்றி அதன் பகுதிகளுக்கு ஓளரங்கசீப்பை கவர்னராக்கினார்.
கி.பி.1638ல் காபுலின் கவர்னரிடம் கந்தஹாரை கைப்பற்றும் பொறுப்பை ஒப்படைக்க கந்தஹாரின் கவர்னர் மர்தான் கானுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி கந்தஹார் கைப்பற்றப்பட்டது.
கி.பி.1639ல் தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவெடுத்து இன்றைய பழைய டெல்லியில் ஷாஜஹனாபாத் என்ற நகரை உருவாக்க ஆரம்பித்த வேலைகள் கி.பி.1648வரை தொடர்ந்தது. டெல்லி செங்கோட்டையில் அமைத்த மயிலானத்தில் கி.பி.1648 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி அமர்ந்து டெல்லியை தலைநகராக அறிவித்தார். நகரின் பிரமாண்டமான கடை வீதியான "சாந்தினி செளக்" உருவாக்கத்தில் ஜகன்னாரா பேகத்தின் பங்கு முக்கியமானது.
கி.பி.1646ல் பால்க்கை முராட் பக்ஃஷ் கைப்பற்றினார். சாமர்கண்ட்டை கைப்பற்றாமல் லாகூருக்கு திரும்பி வந்த சில நாட்களிலையே பால்க்கை உஸ்பெக்குகள் திரும்ப கைப்பற்றினர். இதனால் ஷாஜஹான் கோபமடைந்து அவரின் தகுதியை குறைத்தார்.
கி.பி.1644ல் ஆக்ரா மாளிகையில் நடந்த நாட்டிய நிகழ்வில் ஏற்பட்ட தீவிபத்தில் நாட்டியகாரியை காப்பாற்றிய மூத்த மகள் ஜகன்னாரா பேகத்திற்கு பெரிய தீக்காயம் ஏற்பட்டது. அது சரியாகவே பலமாதங்கள் பிடித்தது. மகளுக்காக ஆங்கிலேய பெர்சிய மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்த்தார். மகள் உடல்நலம் பெற எளிய மக்களுக்கு தாராளமாக நிதியளித்தார் தான தர்மங்கள் அளித்தார். இந்த நிகழ்வில் தகவல் தாமதமாக கிடைத்ததால் ஒரு மாதம் கழித்து வந்த ஓளரங்கசீப்பை பற்றி மூத்த மகன் தாரா ஷாஜஹானிடம் தவறாக கூறவும் பின்னர் தாராவின் மாளிகையின் திறப்புவிழா நிகழ்வின் பேரில் நடந்த நிகழ்வும் தாராவால் கோள்மூட்டப்பட்டு ஓளரங்கசீப்பை தன்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது மகள் ரோஸனாரா பேகம் தலையிட்டு தந்தையின் மனதை மாற்றியதால் ஓளரங்கசீப்பை குஜராத் கவர்னராக்கினார்.பின்னர் கி.பி.1647ல் பால்க் மீது படையெடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டு அதை கைப்பற்றினார். முன்னேறி சென்று கைப்பற்றுவதற்குள் குளிர்காலம் வந்தது. எனினும் போரை தொடர்ந்து நடத்தினார். பின்னர் உஸ்பெக்குகளின் தலைவருக்கு "பால்க்கை மொகலாயருக்கு அடங்கிய அரசாக நீங்கள் நிர்வகிக்கலாம்" என்று நிபந்தனை விதிக்க அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
கி.பி.1648ன் இறுதியில் பெர்ஷியாவின் புதிய அரசர் இரண்டாம் ஷா அப்பாஸ் கந்தஹாரை முற்றுகையிட்டு கி.பி.1649ல் பிப்ரவரியில் கைப்பற்றினார். ஓளரங்கசீப்பை அனுப்பி முற்றுகையிட 100 நாட்களுக்கு மேல் குளிராக இருந்ததால் காபூலுக்கு திரும்பினார். கோட்டைக்கு வெளியே பாரசீகர்களை தோற்கடித்தாலும் ஓளரங்கசீப்பால் கோட்டையை கைப்பற்ற முடியவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து கி.பி.1652ல் மீண்டும் ஓளரங்கசீப் தலைமையில் கந்தஹாரை மீட்கும் முயற்சி தோல்வியில் முடியவே மூத்த மகன் தாராவின் தலைமையில் கி.பி.1653ல் திரும்பவும் கூடுதல் பீரங்கி மற்றும் படை வீரர்களுடன் வந்தும் கந்தஹாரை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கி.பி.1657ன் இறுதியில் டெல்லியில் நோய்வாய்பப்ட்ட ஷாஜஹான் இறந்ததாக கருதி மற்ற மூன்று சகோதரர்களும் (ஷா சுஜா - வங்காள கவர்னர், முராட் பக்ஃஷ் - குஜராத் & ஓளரங்கசீப் - தக்காணப்) அடுத்த கட்ட முஸ்தீப்புகளை செயல்படுத்த ஆயுத்தமாயினர். தாரா தந்தையின் இறப்பை மறைத்து தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்ற எண்ணமே மற்றவர்களுக்கு இருந்தது. இந்த நேரத்தில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு படகின் மூலம் ஷாஜஹான் கொண்டு வரப்பட்டார். வாரிசு பிரச்சினையை தவிர்க்க தனது மூத்த மகன் தாராவையே அடுத்த அரசராக முன்மொழிந்தார். 40000 ஜாட் மன்சப்தாராக இருந்த அவரை 60000 ஜாட் மன்சப்தராக மாற்றி உத்தரவிட்டார். தனக்கு அடுத்ததாக புதியதாக ஒரு தங்க நாற்காலி செய்து அதில் தாராவை அமர்த்தி தனக்குரிய மரியாதைகளையும் செலுத்த வைத்தார். தாரா ஷாஜஹானின் ஆணை மூலம் முராட்டுக்கு பேரர் செல்ல ஆணையிட அவர் அதை மீறி தன்னை குஜராத்தின் அரசராக முடிசூட்டிக் கொண்டார். ஷா சுஜாவும் தன்னை வங்காளத்தின் அரசராக முடிசூட்டிக் கொண்டார். அந்த நேரத்தில் ஓளரங்கசீப் அவரின் பிஜப்பூர் நண்பரான மீர் ஜூம்லாவின் ஆதரவுடன் வளமாக தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தார். ஆக்ராவுக்கு மீர் ஜூம்லாவை அழைத்து அவரை ஷாஜஹான் கைது செய்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் தனது தந்தையை காண ஆக்ராவுக்கு வருகிறேன். தாராவின் பிடியிலிருந்து தந்தையை மீட்பதே எனது நோக்கம் என்று அறிவித்து விட்டு ஓளரங்கபாத் (கட்கி நகர் பின்னர் பஃதே நகர் என்று மாறி பின்னர் ஓளரங்கபாத் ஆயிற்று) நகரிலிருந்து படைகளுடன் கிளம்பினார்.
கி.பி.1658 ஜனவரி 24ல் ஷா சுஜா ஆக்ராவை நோக்கி வரும் வழியில் வாரணாசி அருகில் அவரை எதிர்க்க தாராவின் மூத்த மகன் சுலைமான் சுகோ மற்றும் ராஜா ஜெய்சிங்கும் படைகளுடன் வந்து விரட்டியடித்து வங்காளம், ஒரிஸ்ஸா, கிழக்கு பீஹார் வரை 3 மாதங்கள் விரட்டி சென்றது. இந்த இடைவெளியில் தான் தாரா ஆக்ரா திரும்பினார். வரும் வழியில் தான் பயணியான "பெர்னியர்" அவருடன் சேர்ந்து கொண்டார். ஷா சுஜோவை துரத்திய காலதாமதம் முராத் பக்ஃஷ்-ஓளரங்கசீப் கூட்டணிக்கு சாதகமாயிற்று. மாள்வாவை நெருங்கி வந்த கூட்டணி படைகள் ராஜா ஜஸ்வந்த் சிங் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தியும் அவரின் படைகளை உஜ்ஜையினியில் தோற்கடித்து ஆக்ராவை நோக்கி புறப்பட்டது. ஷா சுஜோவை துரத்திய படைகள் திரும்பாததால் தாராவே ஆக்ராவுக்கு சற்று தொலைவிலுள்ள "சாமுகர்" என்னுமிடத்தில் நடந்த போரில் தாராவை வீழ்த்த தாரா ஆக்ராவுக்கு ஓடிவந்து அரண்மனைக்குள் ஓளிந்துக்கொண்டார். பின்னர் அடுத்த நாள் காலையிலையே யாருக்கும் தெரியாமல் ஆக்ராவை விட்டு ஓடிப்போனார். யமுனை ஆற்றிலிருந்து வந்த நீர் விநியோகத்தை ஓளரங்கசீப் முற்றுகையின் போது நிறுத்தி வைக்க வேறு வழியில்லாமல் ஷாஜஹான் கோட்டை கதவுகளை திறந்து விட்டு சரண் அடைய ஆக்ரா முழுவதும் ஓளரங்கசீப் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஜீன் 20 அரியணையில் அமர்ந்து அவையை நடத்தினாலும் பேரரசராக முடிசூட்டிக் கொள்ளவில்லை. டெல்லிக்கு செல்லாமல் சுலைமான் ஷீகோ அலகாபாத் சென்று கார்வால் ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். முராட் பக்ஃஷ்க்கு ஷாஜஹான் கடிதம் எழுத அது ஓளரங்கசீப் கைகளுக்கு சென்றது. விருந்துக்கு அழைத்து மதுமயக்கத்தில் இருந்தவரை கட்டி கைது செய்து குவாலியர் சிறையில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அலி நாகி என்ற வருவாய் துறை அமைச்சரை கொன்ற குற்றத்தில் முராத் பக்ஃஷ்க்கு கி.பி.1661 டிசம்பர் 4ம்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கி.பி.1658 ஜீலை 31ம் தேதி டெல்லி சாலிமர் தோட்டத்தில் அரியணை ஏறினார். அந்த நேரத்தில் தாராவை விரட்டி செல்ல முடிவெடுத்து அதை தன் தளபதிகளிடம் ஓப்படைத்தார். ஷா சுஜோ ஆக்ராவை நோக்கி திரும்ப வாரணாசியில் இருந்தார். அவரை கோராவின் அருகே கஜ்வா கிராமத்தில் நடந்த போரில் தோற்கடித்து விரட்ட அவர் கிழக்கு வங்காளம் நோக்கி ஓடினார். ஓளரங்கசீப்பின் தளபதி மீர் ஜூம்லா விரட்ட மெக் பழங்குடியினரால் சுஜா கொல்லப்பட்டார்.
பின்னர் தாரா பெர்ஷியாவுக்கு ஓட வழியில் அஹமதாபாத் கவர்னரான ஷா நவாஸ் கான் (ஓளரங்கசீப்பின் முதல் மனைவி தில்ராஸ் பானு பேகத்தின் தந்தை) உதவினார். மார்வாரின் ராஜா ஜஸ்வந்த்சிங் மற்றும் அம்பரின் ராஜா ஜெய்சிங் இருவரும் ஓளரங்கசீப்புடன் இணைந்து அஜ்மீருக்கு அருகில் தியோராய் என்னுமிடத்தில் நடந்த போரில் திரும்பவும் தாரா தோற்றோடி சிந்து நதியை கடந்தார். போலன் கணவாய் பகுதியில் வயிற்றுப் போக்கினால் தாராவின் மனைவி நாதிரா பானு பேகம் இறந்தார். (விஷமருந்தி தற்கொலை செய்தார் என்று மருத்துவரான நிக்காலோ மனுச்சி கூறுகின்றார்). லாகூரில் நாதிராவின் இறுதி சடங்கை நிகழ்த்தினார். முன்பு ஷாஜஹானிடம் மாலிக் ஜூவான் என்ற ஆப்கானிய பழங்குடி தலைவனுக்காக பரிந்து பேசி அவருக்கு உதவி பண்ணியதால் அவர் உதவுவார் என்று நினைக்க அவர் தாராவை பிடித்து வைத்து ஓளரங்கசீப்பிற்கு தகவல் அனுப்பினார். கிழிந்த உடைகளுடன் டெல்லிக்கு இழுத்து வரப்பட்ட தாரா ஷீகோவின் பரிதாபமான நிலை கண்டு மக்கள் கதறினர். இதை உடனிருந்த "பெர்னியர்" பதிவின் மூலம் அறியமுடிகிறது. இதனால் உடனடியாக மதநம்பிக்கை துரோகம் என்று காரணம் காட்டி உடனடியாக மரண தண்டனை விதித்து கி.பி.1659 ஆகஸ்ட் 30ல் தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவரின் மகன் சுலைமான் ஷீகோவும் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்பட்டு கி.பி.1662 மே மாதத்தில் இறந்தார்.
எல்லா சகோதரர்களையும் பிரச்சினைக்குரிய வாரிசுகளையும் அழித்துவிட்டு பிரச்சினை இல்லாமல் அரியணையில் அமர்ந்த ஓளரங்கசீப் கி.பி.1652 முதலே தனது தந்தையை அவரின் இறுதிவரை சந்திக்கவேயில்லை. ஷாஜஹான் வீட்டு சிறையில் ஓய்வாக கேளிக்கைகள் மது என்று ஓரளவுக்கு விடுதலை உணர்வில் இருந்தாலும் தாஜ்மஹாலுக்கு செல்ல அனுமதிக்கப்படவேயில்லை. அவரை அவரின் இரு மனைவிகள் மற்றும் மகள் ஜகன்னாரா பேகம் நன்கு கவனித்துக் கொண்டனர். ஆயில் மசாஜ் செய்து சுகமாக இருந்த நிலையில் ஒரு வாரம் கழித்து காய்ச்சல் ஜன்னி கண்டு கி.பி.1666 பிப்ரவரி 1, அதிகாலை 3 மணிக்கு (ஜனவரி 22, 31என்று கூட சொல்லுகிறார்கள்) தனது 74வது வயதில் மரணமடைந்தார். தான் மறைந்தவுடன் தனக்காக ஒரு "கறுப்பு தாஜ்மஹால்" அமைக்க எண்ணியிருந்தது பேரரசின் நிதிநிலைமையை காரணம் காட்டி ஓளரங்கசீப்பால் நிராகரிக்கப்பட்டது. அதனால் தாஜ்மஹாலின் உள்ளேயே அவரின் அருமை மனைவி மும்தாஜ் சமாதி அருகிலையே புதைக்கப்பட்டார்.
உதவிய நூல்கள்:
மொகலாய பேரரசில் எனது பயண குறிப்புகள் - நிக்காலோ மனுச்சி
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர்கள் - முகில்
மொகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
நூர்ஜஹான் - சர்தார் ஜோகிந்தர் சிங்
இருபதாம் இல்லத்தரசி - இந்து சுந்தரேசன்
நிழல் இளவரசி - இந்து சுந்தரேஷன்
இதய ரோஜா - இந்து சுந்தரேசன்
மொகலாய பேரரசில் பெர்னியரின் பயணங்கள் - பெர்னியர்
ஓளரங்கசீப் - ஸ்டேன்லி லேன் ஃபூல்
விக்கிபீடியா தகவல்கள்
இந்து இணையத்தளம்
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்
படங்கள் :
கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்









Comments
Post a Comment