74) மொகலாய பேரரசு - ஓளரங்கசீப்
முகையூதின் முஹம்மத் ஓளரங்கசீப்
(கி.பி.1618-1707)
ஆட்சி (கி.பி.1658-1707)
யார் இவர்? அரசனா? ஆண்டியா? மதவாதியா? மதவெறியரா? இரக்கமற்றவரா? கருணைமிக்கவரா? கொடுங்கோலனா? மன்னித்தருளபவரா? என்ற கேள்விகளுக்கு ஒரே வரியில் விடை சொல்ல முடியாத அளவுக்கு எல்லாம் கலந்து கட்டிய ஒரு மனிதர் தான் இந்த முகையூதின் முஹம்மத் ஓளரங்கசீப் என்ற மொகலாய பேரரசர். கி.பி.1658ல் தன் தந்தை ஷாஜஹானை கிளர்ச்சியால் அரியணையிலிருந்து அகற்றி ஆக்ராவை கைப்பற்றி டெல்லியின் மயிலாசனத்தில் அமர்ந்து 49 ஆண்டுகள் பரந்துபட்ட பேரரசை ஆண்டவர். மொகலாய பேரரசர்களில் இவர் ஒரு அடிப்படைவாதி. இவரது மூத்த சகோதரரான தாரா ஷீகோ தந்தையார் ஷாஜஹான் உடல்நலம் இல்லாதபோது தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றார். மற்ற சகோதரர்கள் முராட்டும் சுஜோவும் நேரிடையாக தாக்கும் முரட்டு சுபாவத்தை பெற்றனர். சகோதரர்களால் யார் அரசனாக வந்தாலும் தனக்கு மரணம் நிச்சயம் என்பதை அறிந்த இவர் தற்காப்பிற்காக அரசுரிமை கோருவது என்ற முடிவுக்கு வந்தார். எதையும் சுற்றி வளைத்தே செய்பவராக இருந்தார். இவரது மதிநுட்பம் இராஜதந்திர கலையை சார்ந்ததாக இருந்தது. நெளிவு சுளிவுகளுடன் குள்ளநரி தந்திரத்தை ஒத்த இராஜதந்திரத்தில் சகோதரர் முராட்டுடன் ஒப்பந்தம் செய்து தாராவை வீழ்த்தி ஆக்ராவை கைப்பற்றி பின்னர் டெல்லியின் சிம்மாசனத்தையும் கைப்பற்றினார். பின்னர் முரட்டை போதையில் கைது செய்து குவாலியர் சிறையில் அடைத்து கொலைக்குற்றம் சுமத்தி மரணதண்டனை அளித்தார். தாராவை லாகூரில் கைதுசெய்து டெல்லியில் மரணதண்டனை அளித்தார். சுஜோ இவரிடம் தோல்வியை தழுவி கிழக்கு வங்கானத்திற்கு ஓடி அங்குள்ள மெக் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். அரியணைக்காக இவர் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் உறவுகள் உட்பட 32 பேரை கொன்று குவித்தும் தந்தையை வீட்டுச் சிறையில் அடைத்து அரியணை ஏறினார். தனக்கு எதிராக நடந்த மூத்தமகன் சுல்தான் முகமதுவை கொன்று குவித்தார்.
இவருக்கு அதிகாரபூர்வமாக 4 மனைவிகளும் அது போக 9 மனைவிகளும் இருந்தனர்
1) நவாப் பாய் ரஹ்மத்துன்னிஸ்ஸா:
முதலாம் பகதூர்ஷாவின் தாயார் இவர்
2) தில்ராஸ் பானு பேகம் (ரபியா-வுல்-துரானி):
இவருக்காக இவரின் மகன் அசம்ஷா ஓளரங்கபாத்தில் இவருக்காக நினைவிடம் அமைத்தார்." பீவி கா மக்பரா" என்றழைக்கப்படும் இது தாஜ்மகாலை போன்று அமைந்திருப்பதால் "டெக்கான் தாஜ்" என்றழைக்கப்படுகிறது. அஸம்ஷா, முஹம்மத் அக்பர் ஆகிய 2 மகன்களும், ஜெப்ரூன்னிஸ்ஸா பேகம் என்ற மகளும் இவருக்கு பிறந்தவர்கள். கி.பி.1622ல் பிறந்த இவர் அக்டோபர் 8, 1657ல் ஓளரங்கபாத்தில் மறைந்தார்.
3) உதய்ப்பூரி மஹால்:
ஹிஜ்ஜத்-உன்னிஸ்ஸா இவருக்கு பிறந்த மகள். காஷ்மீரை சேர்ந்த இந்து பெண்ணான இவர் முதலில் தாரா ஷீகோவின் அரண்மனையில் இறந்தார். தாரா கொல்லப்பட்ட பின் இவரை தனது அரண்மனைக்கு கொண்டு வந்து பின் மனைவியாக்கி கொண்டார்.
4) ஜெயினாபாதி மஹால்:
இவர் கி.பி.1654ல் இறந்தார்.
5) ஓளரங்கபாதி மஹால்:
மிஹர்-உன்னிஸ்ஸா பேகம் இவருக்கு பிறந்த மகள். கி.பி.1688ல் இறந்தார்.
6) தெளலதாபாதி மஹால்:
7) அனுராதா பாய்:
கி.பி.1620ல் பிறந்த இவர் கி.பி.1691ல் மறைந்தார். சுல்தான் முஹம்மத் மிர்ஸா மற்றும் முதலாம் பகதூர் ஷா, ஷா ஆலம் ஆகியோர் இவருக்கு பிறந்தவர்கள்
8) திலாராம்:
இவர் கி.பி.1702ல் மறைந்தார்.
9) சதருன்னிஸ்ஸா பேகம்:
10) சாட்டர் பாய்:
11) நவாப் பாய் பேகம் ஷாஹிபா:
ஜரால் ராஜ்புத் ராஜாவான ராஜௌரியின் மகள் இவர். முஹம்மத் காம்ஃபக்ஷ், முஹம்மத் அஸம்ஷா, முஹம்மத் சுல்தான் மற்றும் ஃபதர் உன்னிஸ்ஸா பேகம் ஆகியோர் இவருக்கு பிறந்தனர்.
12) ஹிரா பாய்:
இவர் அடிமைப் பெண்ணாக இருந்து ராணியாக ஆனவர். இந்து பெண்ணான இவரை மிகவும் காதலித்து மணம் புரிந்த போது ஒளரங்கசீப்புக்கு வயது 35. ஆனால் இவரை காதலித்து மணம் புரிந்த ஓரிரு வருடங்களிலையே இவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
இவரது மகன்,மகளின் விவரம்
1) முதலாம் பகதூர் ஷா:
அக்டோபர் 14,1643 இல் பிறந்த பிப்ரவரி 27,1712ல் லாகூரில் மறைந்தார். இவர் நவாப் பாய்க்கு பிறந்தவர். முவாஸ்ஸாம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஓளரங்கசீப்புக்குப் பின் அஸம்ஷா அவருக்குப் பின் இவர் முதலாம் பகதூர் ஷா என்ற பெயரில் அரியணை ஏறினார். இவர் எட்டாவது மொகலாய அரசராக பதவியேற்றார். ஓளரங்கசீப் காலத்தில் இவர் ஆக்ரா, காபூல் மற்றும் லாகூருக்கு கவர்னராக இருந்தார். பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களுடன் இரகசிய உடன்படிக்கை மற்றும் கஜானா பணத்தில் மோசடி செய்ததற்காக எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தந்தைக்கு அஞ்சி நடுங்கும் இளவரசராக இறந்தார்.டெல்லி மோதி மஸ்ஜித்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
2) ஜெபரூன்னிஸ்ஸா பேகம்:
இவர் ஒளரங்கசீப்பின் மூத்த மகள். கி.பி.1638 பிப்ரவரி 15ம் தேதி தில்ராஸ் பானு பேகத்திற்கு பிறந்தவர். மிகச்சிறந்த சூஃபி கவிஞர். இவரது எழுத்துக்கள் கவிதைகள் "திவான்-இ-மக்ஃபி" என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. இவர் ஒளரங்கசீப்பால் டெல்லியில் உள்ள சலீம்கார்க் கோட்டையில் தனது கடைசி 20 ஆண்டுகளை சிறையில் கழித்தார். ஜெபரூன்னிஸ்ஸா என்ற பெயருக்கு "பெண்ணின் ஆபரணம் போன்றவள்" என்று அர்த்தம். இவர் தத்துவியல், கணிதம், வானவியல், இலக்கியம் மற்றுமின்றி பெர்ஷியன், அரபி மற்றும் உருதுவும் அறிந்தவர். காலிகிராபி கலையில் சிறந்தவர். குர்ஆனை சிறுவயதிலையே மனப்பாடம் செய்து ஹாபிஸா என்ற பட்டம் பெற்றவர். பெண்கள் அணியும் குர்தியை வடிவமைத்தவர் இவரே. இவரது எழுத்துக்கள் கவிதைகள் இஸ்ஸாமுக்கு எதிரானவை என்று இவரது தந்தை ஓளரங்கசீப்பால் கி.பி.1681ல் வீட்டுசிறையில் டெல்லியில் உள்ள சலீம்கார்க் கோட்டையில் வைக்கப்பட்டார். 20 ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தே கி.பி.1702 மே 26ல் இறந்து போனார். மொகலாய இளவரசிகளில் இவர் ஒரு தனி பெர்சனலிட்டி.
3) முஹம்மது அஸம்ஷா:
குஃப்த்உதீன் முஹம்மத் அஸம் என்ற இயற்பெயருடைய இவர் தில்ராஸ் பானு பேகத்தின் மூத்த மகனாக கி.பி.1653 ஜீன் 28ல் பெர்ஹாம்பூரில் பிறந்தார். ஒளரங்கசீப் மறைவிற்கு பின்னர் அசம்ஷா என்ற பெயரில் 3 மாதங்கள் ஆண்டவர். கி.பி.1707ல் ஜீன் 8ல் ஆக்ராவில் மறைந்த இவர் குல்தாபாத்தில் (ஓளரங்கசீப் சமாதி அருகில்) அடக்கம் செய்யப்பட்டார்.
இவருக்கு 3 மனைவிகள். ஓளரங்கசீப்பின் மாமனாரான ஸைஸ்டாகானின் மகளான பாரி பீபீயின் அஸம்ஷாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் பாரி பீபீ கி.பி.1665ல் திடிரென்று டாக்காவில் மரணமடைந்ததால் அந்த திருமணம் நடைபெறவில்லை.
i) ரஹ்மத் பானு பேகம் - அஸ்ஸாமின் அஹோம் அரச இளவரசி
ரமானி கப்ஹாரு என்பது இவரின் இயற்பெயர். கி.பி.1656ல் பிறந்த இவர் மொகலாயருடன் ஒப்பந்தத்தால் 7 வயதில் மொகலாய அரண்மனைக்கு வந்து பின் முஸ்லீமாக மாறி 5 வருடங்கள் கழித்து கி.பி.1668ல் அஸம்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.
ii) ஷஹர் பானு பேகம் :
பிஜப்பூரின் அடில் ஷா பரம்பரையில் வந்த இளவரசி இவர். இவரின் திருமணத்திற்கு இவரின் தந்தை 5லட்ச ரூபாய் அளவுக்கு வரதட்சணை கொடுத்தார். மேலும் ஓளரங்கசீப்பிற்கும் 2லட்சம் பெறுமானமுள்ள வெகுமதிகளையும் யானைகளையும் கொடுத்தார்.
iii) ஜஹன்ஸீப் பானு பேகம்:
ஓளரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷீக்கோ-நாதிரா பானு பேகத்தின் மகளான இவரை கி.பி.1669ல் மணந்தார். இவர் ஒளரங்கசீப்பின் பிரியத்துக்குள்ளான மருமகளாவார். இவருக்கு பிறந்த மகனான "பிடர் பஃக்த்" ஓளரங்கசீப்பின் செல்ல பேரனாக திகழ்ந்தார்.
4) முஹம்மது அக்பர் மிர்ஸா:
இவர் தில்ராஸ் பானு பேக்திற்கு கி.பி.1657 செப்டம்பர் 11ல் ஓளரங்கபாத்தில் பிறந்தார். இவருக்கும் சலீமா பானு பேகம் (இவர் தாரா ஷீக்கோவின் மூத்த மகள் சுலைமான் ஷீக்கோவின் மகள்) என்ற மனைவிக்கும் பிறந்த நுஃக்ஷியார் என்ற மகன் கி.பி.1719ல் சில மாதங்களில் அரசராக இறந்தார். இவர் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது இவரின் தாய் இறந்ததால் இவரது மூத்த சகோதரி ஜெபுன்னிஸ்ஸாவால் வளர்க்கப்பட்டார். இவர் இராஜபுத்திரர்களின் உதவியால் (இவர் ஆட்சியை கைப்பற்றினால் இந்துக்களின் மீது சுமத்தப்பட்ட ஜிசியா வரியை நீக்குவதாக ஒப்புக்கொண்டார். அதனால் இராஜபுத்திரர்கள் இவருக்கு உதவினர்) கி.பி.1681 ஜனவரி 1 ஆம் தேதி அஜ்மீர் கோட்டையை கைப்பற்றி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் உதவியை பெற்று தோல்வியில் முடிந்தது. 1687ல் பெர்ஷியாக்கு (இன்றைய ஈரான்) ஓடிப்போனார். அங்கிருந்து தன் தந்தை இறந்தவுடன் ஆட்சியை கைப்பற்றலாம் என்று காத்திருந்தவர் தந்தைக்கு ஒரு வருடத்துக்கு முன்பே கி.பி.1706 மார்ச் 31ல் இறந்து போனார். இவருக்காக இவரது சகோதரி ஜெபுன்னிஸ்ஸா தந்தையிடம் வாதாடியதால் தான் அவரையும் 20 ஆண்டுகள் சாகும் வரையில் சலீம் கார்க் கோட்டையில் வீட்டு சிறையில் அடைத்ததாகவும் சொல்லுவார்கள். மொகலாய அரியணையில் அமரும் ஆசை கடைசியில் இவரது மகனான நுஃக்ஷியாருக்கே கி.பி.1719ல் சில மாதங்கள் மட்டுமே கிடைத்தது.
5) ஹிஜ்ஜத் உன்னிஸஸ்ஸா பேகம்:
உதய்ப்பூரி மஹாலுக்கு பிறந்த மகள் இவர். சிறு வயதிலையே காலமானார்.
6) மிஹர்-உன்னிஸஸா பேகம்:
இவரது பெயருக்கு "பெண்களில் சூரியனை போன்றவள்" என்பதன் அர்த்தம். இவர் ஓளரங்கபாதி மஹால் என்பவருக்கு மகளாக கி.பி.1661 செப்டம்பர் 28ல் பிறந்தவர். இவர் ஓளரங்கசீப்பின் சகோதரரான முராட் பக்ஃஷ்ன் மகன் இஸ்ஸாத் பக்ஃஷ் மிர்ஸாவை கி.பி.1672 டிசம்பர் 7ம்தேதி தனது 11வது வயதில் திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் அதுவரை குவாலியர் சிறையிலிருந்தார். பின்னர் விடுவிக்கப்பட்டு ஓளரங்கசீப் தனது மகளான இவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர் கி.பி.1706ல் ஏப்ரல் 2ம்தேதி இறந்தார். இவருக்கு தாவர் பக்ஃஷ் மிர்ஸா, தாதர் பக்ஃஷ் மிர்ஸா என்ற இரு மகன்கள் உண்டு.
7) சுல்தான் முஹம்மத் மிர்ஸா:
இவர் ஒளரங்கசீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நவாப் பாய் (காஷ்மீர் இளவரசி)க்கு மூத்த மகனாகப் பிறந்தவர். கி.பி.1639 டிசம்பர் 30ல் மதுராவில் பிறந்தவர். இவருக்கு படிஷா பீபீ (கோல்கொண்டா சுல்தான் அப்துல்லா குஃப்த் ஷாவின் மகள்), தோஸ்தார் பானு பேகம் (இவர் ஒளரங்கசீப்பின் சகோதரர் முராத் பக்ஷ்ஷின் மகள்) , பாய் பூப் தேவி (கிஸ்துவார் ராஜாவின் மகள்) மற்றும் குல்ரூக் பானு பேகம் (இவர் ஓளரங்கசீப்பின் சகோதரர் ஷா சுஜோவின் மனைவி பேரழகு மகள்) என. ஷாஸதா மசூத் பக்ஃஷ் என்ற மகனும் உண்டு. இவர் ஓளரங்கசீப்பால் திருமணம் செய்து வைக்கப்பட்ட கோல்கொண்டா சுல்தான் அப்துல்லா குஃப்த் ஷாவின் மகளை மணந்து கொண்டு ஹைதராபாத்தின் சுல்தானாக கி.பி.1656 ஏப்ரலில் ஆனவர். இவர் குல்ரூக் பானு பேகத்தை திருமணம் செய்து கொண்டு தனது மாமனார் ஷா சுஜாவின் ஆதரவாக அவரின் படைகளுக்கு தளபதியாக இருந்தார். இவர் டெல்லியிலுள்ள சலீம்கார்க் கோட்டையில் மே 1660ல் சிறைவைக்கப்பட்டு ஜனவரி 1661ல் குவாலியர் கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு டிசம்பர் 1672 வரை அங்கேயிருந்து டிசம்பர் 14, 1676ல் ஓளரங்கசீப்பின் ஆணையின் டெல்லி சலீம்கார்க் கோட்டையில் கொல்லப்பட்டார். இவருக்கும் பாய் பூப் தேவிக்கும் பிறந்த மகனான மசூத் பக்ஃஷ் மிர்ஸா 10 மாதத்திலையே இறந்து போனார்.
8) ஃபதர் உன்னிஸ்ஸா பேகம்:
இவர் பெயருக்கு "பெண்களில் முழுநிலவை போன்றவள்" என்பதன் அர்த்தம். இவர் ஓளரங்கசீப்-நவாப் பாய் (காஷ்மீர் இளவரசி) என்பவருக்கு ஓரே மகளாக கி.பி.1647ல் நவம்பர் 17ஆம் தேதி பிறந்தவர். இவர் குரானை மனப்பாடமாக பாடுவதில் திறமைமிக்கவர். இவர் இரக்ககுணம் கொண்டவர். ஓளரங்கசீப்பின் சமயகொள்கையில் மிகுந்த பற்றுக் கொண்டவர். இவர் கி.பி.1670 ஏப்ரல் 9ம்தேதி தனது 22 வயதில் திருமணம் ஆகாமலையே இறந்தார்.
9) முஹம்மத் காம்ஃபக்ஷ்:
இவர் பணிப்பெண்ணாக இருந்து அரசியான உதய்ப்பூரி மஹால் என்பவருக்கு மகனாக கி.பி.1667 மார்ச் 7ல் டெல்லியில் பிறந்தார். சிவாஜியின் மகன் ராஜாராமை வழிக்குக் கொண்டுவர செஞ்சி வந்த இவர் அவருடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட காரணத்தால் ஓளரங்கசீப்பால் சிறைவாசம் அனுபவித்து பின்னர் விடுதலை அடைந்தவர். இவர் பிஜப்பூர் அரசராக கி.பி.1709 ஜனவரி 14ல் ஹைதராபாத்தில் இறந்தார். இவரது உடல் டெல்லியிலுள்ள ஹீமாயூன் கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது
i) பஹ்ஹர் ஜஹான் காணம் - மன்சப்தாரான பார்குர்தார் பெக் என்பவரின் மகளான இவரை கி.பி.1681 பிப்ரவரி 2ல் மணந்தார்.
ii) ஜமாலித் உன்னிஸ்ஸா பேகம்-
மனோகர்பூரின் அமர்சந்த் என்பவரின் மகளான இவரை கி.பி.1681 ஆகஸ்ட் 9ல் மணந்தார்.
iii) அசரம் பானு பேகம்-
முவாஸ்ஸம் சையது கான் என்பவரின் மகளான இவரை கி.பி.1683 மார்ச் 14ல் மணந்தார். இவருக்கு உமைத் பக்ஃஷ் மிர்ஸா, முஹம்மத் முகி-உஸ்-சுன்னத் மிர்ஸா, முஹம்மத் ப்ரூஸ்மன்ட் மிர்ஸா என்ற மகன்களும் ஒரு மகளும் உண்டு. இவர் கி.பி.1745ல் பிப்ரவரி 13ல் டெல்லியில் இறந்தார்.
10) ஜீனத் உன்னிஸ்ஸா பேகம்:
இவர் தில்ராஸ் பானு பேகத்திற்கு பிறந்த இரண்டாவது மகள். இவர் 1681-1721 வரை பாத்ஷா பேகம் (அரண்மனையின் மூத்த பெண்மணி) என்ற பதவியில் இருந்தார். கி.பி.1643 அக்டோபர் 5ல் ஓளரங்காபாத்தில் பிறந்த இவர் தனது 77வது வயதில் கி.பி.1721 மே7ல் டெல்லியில் இறந்தார். கடைசி நாட்களில் ஒளரங்கசீப்பிற்கு உதவியாக இருந்த மகள் இவரே.
11) ஜூப்தாத் உன்னிஸ்ஸா பேகம்:
இவர் தில்ராஸ் பானு பேகத்தின் மூன்றாவது மகள். கி.பி.1651 செப்டம்பர் 2ல் முல்தானில் பிறந்தவர். இவரை ஓளரங்கசீப் தனது சகோதரன் தாரா ஷிக்கோவின் மகனான சிஃபிர் ஷிக்கோவுக்கு கி.பி.1673 ஜனவரி 30 அன்று திருமணம் செய்து வைத்தார். இவருக்கு ஷாஸதா அலி தபார் என்ற மகன் பிறந்து 6 மாதத்தில் இறந்து போனார். இவர் தனது 55 வயதில் கி.பி.1707 பிப்ரவரி 17 ஆம் தேதி டெல்லியில் இறந்தார்.
தந்தை ஷாஜஹான் ஆக்ராவில் அடைபட்டு இருந்ததால் அவரை சந்திக்க நேரிடும் என்பதால் டெல்லியில் இருந்தே அரசு புரிந்தார். ஷாஜஹான் கி.பி.1666ல் இறந்தவுடன் தான் திரும்ப ஆக்ராவுக்கு வந்தார். கி.பி.1652லிருந்தே தந்தை ஷாஜஹானை பார்க்கவேயில்லை. ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அவரை பார்க்க விரும்புவதே காரணம். ஓளரங்கசீப் பதவியேற்றதும் தனது இக்கட்டான நேரங்களில் துணை நின்ற நண்பர்/ஆலோசகரான பிஜப்பூரின் மீர்ஜூம்லாவை வங்காளத்தின் கவர்னராக்கினார். இந்த நேரத்தில் அஸ்ஸாமில் அஹோம்கள் முகலாயர்களை தாக்க மீர்ஜூம்லாவை படைகளுடன் அனுப்பினார். அவரும் கூச்பிகாரையும் அஸ்ஸாமின் சில பகுதிகளையும் கைப்பற்றினார். அஹோம்களின் இளவரசியான ரமானி கப்ஹாரு (அப்போது அவருக்கு 7 வயது. பின்னர் இவர் முஸ்லீமாக மாறிய பின்னர் ரஹ்மத் பானு பேகம் என்றானது. மொகலாயர்கள் அரண்மனையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1668ல் வளர்ந்த ஓளரங்கசீப்பின் மகன் முஹம்மது அஸம்ஷாவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்) ஒப்பந்தத்தின் படி டெல்லியில் பிறந்தார். இந்த நேரத்தில் மீர்ஜூம்லா அஸ்ஸாமின் பருவநிலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கேயே மரணமடைந்தார். இவருக்கு பின் வங்காளத்தின் கவர்னராக ஸைஸ்டாகான் நியமிக்கப்பட்டார். இவரது மகள் முஹம்மது அஸம்ஷாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் இவர் மகள் டாக்காவில் மரணமடைந்தார். சிட்டஹாங்க் கடற்கொள்ளையர்களை வீழ்த்தி ஸைஸ்டாகான் சிட்டஹாங்கை மொகலாயர் வசம் கொண்டு வந்தார். ஆனாலும் ரஹ்மத் பானு பேகத்தின் உறவினரான லட்சித் போர்புகான் ஒப்பந்தத்தை மீறி கெளஹாத்தியை கைப்பற்றினார். இதனால் கோபமுற்ற இளவரசி தனது மாமாவான லாலுக்சோலா போர்புகானுக்கு எழுதிய கடிதத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. வெற்றி அஹோமிற்கு என்றாலும் மொகலாய தளபதியான ராம்சிங் ரங்கமதியை கைப்பற்றினார். மெல்ல கி.பி.1682ல் அஹோம்களின் தளபதியான "திஹிங்கிய அலூன் போர்பரூவா" என்பவர் இட்டகுளி போர்களத்தில் மொகலாயப் படைகளை வென்று காமரூபத்தை (அஸ்ஸாம்) மீட்டுக் கொண்டார்.
கி.பி.1666ல் பிப்ரவரி 1ம்தேதி அதிகாலை ஷாஜஹான் இரண்டு வாரங்களாக நீடித்த காய்ச்சலில் இறந்துபோனார். 25 நாட்கள் கழித்து ஓளரங்கசீப் டெல்லியிலிருந்து ஆக்ரா வந்து தாய் தந்தை இருவரின் சமாதிகளை வணங்கினார். தலைநகர் ஆக்ராவுக்கு திரும்பவும் மாற்றப்பட்டது. ரோஸனாரா பேகத்தின் முறையற்ற உறவுச் செய்திகளால் மனம் நொந்து மூத்த சகோதரியான ஜகன்னாரா பேகத்திடம் அரண்மனையை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைத்தார். ரோசனாரா பேகத்தை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு வெளியே ஒரு மாளிகையில் கண்காணிப்பில் வைத்தார். அப்போதும் அவரின் முறையற்ற உறவு தொடர அவரையும் அவரின் கள்ளக்காதலனையும் கி.பி.1671ல் விஷம் கொடுத்து மரணதண்டனை விதித்தார். மூத்த சகோதரி ஜகன்னாராவும் கி.பி.1681ல் தனது 67 வயதில் இறந்துபோனார். ஓளரங்கசீப் ஆட்சியில் இசை பாடல் நடனம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய நெறிகளை பின்பற்றியே இத்தடை விதிக்கப்பட்டாலும் ஓளரங்கசீப் இளமை காலத்தில் வீணை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததாக தெரிகிறது. வாழ்நாளில் மதுவையே அருந்தாத இவர் மதுப்பழக்கத்தை தனது ஆட்சியில் தடை செய்தார். கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தடை செய்தார். ஆடம்பர விழாக்கள் நவ்ரோசா பண்டிகை கொண்டாட்டங்களையும் தடை செய்தார். ஜிஸியா வரியை விதித்தார். உடன்கட்டை(சதி)யை தடை செய்தார்.
மார்வார்(இன்றைய ஜோத்பூர்) ராஜா ஜஸ்வந்த்சிங் கி.பி.1678ல் கைபர் கண்வாய் பகுதிகளில் நிர்வாகத்தில் இருந்த போது இறந்து போனார். அவருக்கு வாரிசுகள் இல்லை. அவர் இறக்கும் போது இரண்டு ராணிகள் கர்ப்பமாக இருந்தனர். ஒரு ராணியின் ஆண்குழந்தை இறந்து பிறந்தது. இன்னொரு ராணியின் குழந்தையான அஜித் சிங் ரதோரை டெல்லிக்கு அழைத்து வர கட்டளையிட்டார். துர்காதாஸ் மற்றும் ராணிகள் குழந்தையுடன் சென்றபோது பலத்த காவல் போடப்பட்டது. முஸ்ஸீமாக மாறினால் குழந்தையை மன்னராக ஏற்றுக்கொள்வதாகக் கூற ஒளரங்கசீப்பின் கண்களை ஏமாற்றிவிட்டு மார்வார் அமைச்சர் துர்கா தாஸ் குழந்தையையும் ராணியையும் மார்வாருக்குத் தப்பிச் சென்றார். இந்த நேரத்தில் மார்வாரின் பரம எதிரியான மேவார் (சித்தூர் கார்க்,உதய்ப்பூர் இராஜ்ஜியம்) மன்னர் ராஜ்சிங் படை திரட்டி மார்வாருடன் இணைய உதய்ப்பூரில் அவர்களை தோற்கடித்து உதய்ப்பூரில் சுமார் 173 கோயில்களும் சித்தூரில் 63 கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன. ஓளரங்கசீப் தன் மகன் அக்பரை உதய்ப்பூரில் நிறுத்திவிட்டு ஆஜ்மீர் திரும்பினார். இந்த நேரத்தில் துர்கா தாஸ் குழுவினர் சமாதானம் பேச வந்திருப்பது மாதிரி பேசி ஓளரங்கசீப்பிற்கு எதிராக அவரை கொம்பு சீவிவிட அவரும் தந்தையை எதிர்த்து ஆஜ்மீர் சென்று அங்குள்ள ஓளரங்கசீப்பின் சூழ்ச்சியால் படைபலம் இழந்து தக்காணத்துக்கு தப்பியோடினார். சிவாஜியின் மகன் சாம்பாஜியின் ஆதரவில் 6 வருடங்கள் தப்பியோடி கி.பி.1687ல் ஈராக்கிற்கு தப்பியோடிய இலவுகாத்த கிளியாய் 19 வருடங்கள் தந்தையின் மரணத்திற்கு காத்திருந்து தந்தைக்கு முன்பே கி.பி.1706ல் இறந்து போனார். அமர்சிங் மேர்வார் இளவரசியை மணந்துக்கொண்டார். இதன்பிறகு ஒளரங்கசீப் அவரை ஜஸ்வந்த்சிங் வாரிசாக அங்கீகரித்தார். பின்னர் துர்க்காதாஸ் மற்றும் அஜித் சிங் இடையே உரசல்கள் ஏற்ப்பட்டு பின்னர் இணைந்தனர். ஓளரங்கசீப்பின் மறைவுக்கு பின் கி.பி.1707ல் மார்வாரிலுள்ள மொகலாயப் படைகளை விரட்டியடித்து அஜித் சிங் மார்வார் ஆட்சியை கைப்பற்றினார்.
கி.பி.1679 இல் தீபாவளிக்கு விளக்கேற்றினால் இருந்த வரியை ரத்து செய்தார்.கங்கையில் இந்துக்கள் நீராட இருந்த வரியை ரத்து செய்தார். இறந்தவர்களின் அஸ்தியை கரைப்பதற்கு இருந்த வரியையும் ரத்து செய்தார். நதியில் மீன்பிடிக்க வரி, பால் கறந்து விற்க வரி, பாத்திரம் தயாரித்து விற்க வரி, காய்கறி விற்க வரி இப்படிபட்ட வரிகளையெல்லாம் நீக்கினார். விதவை பெண்களை திருமணம் செய்வதற்கு இருந்த வரியையும் நீக்கினார். ஆனால் அதே நேரத்தில் இந்துக்களின் மீது ஜிஸியா என்ற வரியை திரும்பவும் நடைமுறைக்கு கொண்டு வந்தார். ஆனால் இந்த ஜிஸியா வரியை கொண்டு வந்ததால் மட்டுமே வரலாற்றில் கொடுங்கோலராக சித்தரிக்கப்பட்டு உள்ளார். ஜிஸியா வரியை கட்ட மறுத்த வசூலிக்க மறுத்த இந்து அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கிவிட்டு முஸ்லீம்களை அந்த இடத்தில் பணியமர்த்தினார். ஓளரங்கசீப்பின் ஆணைப்படி புராதன கோயில்கள் எதனையும் அழிக்கக்கூடாது. புது கோவில்கள் எதையும் கட்டக்கூடாது என்ற சட்டம் போடப்பட்டது. ஓளரங்கசீப்பின் காலத்தில் வட இந்தியாவில் சைவத்தை பரப்பிய குமரகுருபரர் காசியில் சைவ மடங்களை அமைக்க ஓளரங்கசீப் நிலங்களை வழங்கியுள்ளார் என்று கூறப்பட்டாலும் அது உண்மையில்லை. அவரது சகோதரர் தாராஷூக்கோ தான் குமரகுருபரருக்கு உதவி செய்தார். கி.பி.1669ல் காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க சொல்லி உத்தரவிட்டு அந்த இடத்தில் "கியான்வாபி" மசூதி கட்டப்பட்டது என்பது உண்மை. இதை ஓளரங்கசீப்பின் பரிவாரங்களுடன் வந்த இந்து மன்னர்களின் மனைவிகள் காசியில் கங்கையில் குளித்து விஸ்வநாதரை தரிசிக்க சென்றபோது கோயில் நிலவறையில் கட்ச் ராணியை பூசாரி மானபங்கப்படுத்தியதால் கோபமுற்று கோயில் இடிக்கப்பட்டதாக செ.திவான் அவர்கள் "வரலாற்றின் வெளிச்சத்தில் ஓளரங்கசீப்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நிகழ்வை பற்றி ஒளரங்கசீப்பின் அவைகுறிப்பில் குறிப்பிடப்படவில்லை ஆனால் கோயில் இடிக்கப்பட்டதை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இடிக்கப்பட்ட கோயில் திரும்பவும் இந்தூரின் அரசியான அஹில்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது.) வாரணாசியின் பெயரை முஹம்மதாபாத் என்று மாற்றி ஆணையிட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது தீவிர மத சார்பான நடவடிக்கைகள் ஆட்சிக்கு ஸ்திரமேற்றினாலும் முகமதியர்களின் புனித மெக்கா ஹஜ் பயணத்தை இவரால் நடத்தமுடியவில்லை. காரணம் அந்த நேரத்தில் யாராவது இவரது ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ என்ற பயமே காரணம். இவரது ஆட்சிக்கு பிறகு மொகலாய பேரரசு சுக்குநூறாக உடைய ஆரம்பித்ததற்கு இவரது மத கட்டுப்பாடுகளும் ஒரு காரணம். இடிக்கப்பட்ட இந்து கோயில்களில் இருந்த சிலைகள் ஆக்ரா கொண்டு வரப்பட்டு அங்கிருந்த மசூதிகளில் படிக்கட்டுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டது. இதனால் மசூதிக்கு செல்லும் நல்ல முஸ்லீம்கள் இந்துக்களின் தெய்வங்களை தன் காலால் மிதித்து செல்லும் போது நிறைவை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த நிகழ்வுகளெல்லாம் இவரின் சகிப்புதன்மைக்கு வேட்டு வைத்தது. இவரது ஆட்சியில் ஜாட் பிரிவினர்கள் மற்றும் ஹரியானாவில் சத்னாமிகள் கலவரத்தில் சேர்ந்தனர். ஓளரங்கசீப்பின் ஆட்சியில் லஞ்சம் அடக்குமுறைகளுக்கு மிகப்பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டது. என்ன குற்றங்கள் செய்திருந்தாலும் நீதியின் முன்னே நிறுத்தி பெயரளவுக்காவது நீதிபதிகள் விசாரித்து தண்டனை வழங்கினர். விசாரணை இன்றி தண்டனை வழங்குவதற்கு தடை இருந்தது.
இராஜபுத்ரர்களை போலவே மராத்தியர்களும் இவருக்கு தொல்லையாகவே இருந்தனர். மலை எலி (சிவாஜி) மொகலாயர்களிடம் இருந்த கோட்டைகளை கொரில்லா தாக்குதல் நடத்தி கைப்பற்றி பெருந்தொல்லையாக மாறினார். சிவாஜியை பிடிக்க அப்சல்கான் என்ற தளபதியை அனுப்ப சூழ்ச்சி நாடகமாடி சிவாஜியை கொல்ல முயன்றவரை புலிநகம் மாதிரியான இரும்பு கையுறையினால் குத்தி கிழித்து கொன்றார். இந்த நிகழ்வில் பெரும்பாலானோர் சிவாஜி தான் அப்சல்கானை தந்திரமாக வரவழைத்து கொன்றார் என்று குறிப்பிடுகின்றனர். எது எப்படியோ நிகழ்வு உண்மை. சிவாஜி கி.பி.1663ல் பூனேவில் ஷாயிஸ்டா கான் தங்கியிருந்த சமயத்தில் உள்ளே புகுந்து அவரது மகனை வெட்டிப் போட்டு முகலாயரை துரத்தியடித்து அவர்களின் பொருட்களை கொள்ளையடித்து சென்றார். பின்னர் சூரத் துறைமுகத்தை கொள்ளையடித்தார். கொங்கன் பகுதியில் பல கோட்டைகளை கைப்பற்றியிருந்தார். மொத்தம் பிஜப்பூர் சுல்தான் மொகலாயர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து மொத்தம் 60 கோட்டைகளை கைப்பற்றி மராத்தியர்களின் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். கி.பி.1665ல் சிவாஜி கோரிய மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ஓளரங்கசீப் ஆக்ராவிற்கு வரும்படி அழைத்தார். ஆக்ரா சென்ற அவருக்கு கி.பி.1666ல் சரியான வரவேற்பு இல்லாததால் கோபப்பட்ட சிவாஜியை சிறையில் அடைத்தார் ஒளரங்கசீப். சிறையில் பழக்கூடையிலிருந்து தப்பினார். பின்னர் ஓளரங்கசீப்புக்கு என் உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயத்தில் தான் தப்பினேன் என்று கடிதம் எழுத அவர் சிவாஜிக்கு "ராஜா" பட்டத்தை வழங்கினார். பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1670ல் மொகலாயர்களிடம் இருந்த கோட்டைகளை கைப்பற்றினார். சிங்கார், புரந்தர் கோட்டைகளை கைப்பற்றி சூரத்தில் திரும்ப நிரம்ப கொள்ளையடித்தார். பின்னர் கி.பி.1673ல் பிஜப்பூர் வசமிருந்த பன்ஹாலா மற்றும் சத்தாரா கோட்டைகளையும் கைப்பற்றினார். பின்னர் கி.பி.1674 ஜீன் 16ம் தேதி ராய்கரில் சிவாஜி முடிசூட்டிக் கொண்டார். பின்னர் தெற்கு நோக்கியே அரசை விரிவுபடுத்தினார். தக்காண பீடபூமியில் இஸ்ஸாமிய சுல்தான்களின் ஆட்சியை ஒழித்துக்கட்ட கி.பி.1676ல் தென்னிந்தியா மீது படையெடுத்து வந்தார். பிஜப்பூர் சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்த செஞ்சியை கைப்பற்றினார். சித்தூர்,வேலூர் முதலிய பாளையம் படைகளை வீழ்த்தி வேலூர் கோட்டையை கைப்பற்றினார்.கி.பி. 1680ல் ஏப்ரல் 2ல் வயிற்றுப்போக்கினால் மரணமடைந்தார். பின்னர் பிஜப்பூர் கோல்கொண்டா பகுதிகளை வென்று ஒளரங்கசீப் அந்த பகுதிகளை தனது ஆட்சியில் இணைத்துக்கொண்ட பின் கி.பி.1694ல் ஆற்காட்டை தலைநகராக கொண்டு கர்நாடக நவாப்பாக தனது படைத்தளபதி சுல்பிகர்கானை நியமித்தார். கி.பி.1697ல் சுல்பிகர்கான் தெற்கு நோக்கி வந்தபோது மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாளும் தஞ்சை ஆண்ட மராட்டிய ஷாஜியும் அவருக்கு அடங்கி மொகலாய பேரரசின் கீழ் வந்தனர். இவ்வாறு மொகலாயர்கள் ஆட்சி தமிழகம் வரை பரவியது. சிவாஜிக்கு பிறகு அவரது மகன் சாம்பாஜி ஓளரங்கசீப்புக்கு எதிராக அவரது மகன் முகமது அக்பரை கொம்பு சீவி விட்டும் அவரால் தந்தையை தாக்க முடியாமல் கி.பி.1687ல் ஈரானுக்கு ஓடிப்போனார். கி.பி.1689ல் சிவாஜியின் மகன் சாம்பாஜியும் அவரது அமைச்சர் கவிகைலாஷ்ம் ரத்தினகிரியில் சங்கமேஷ்வர் என்ற ஊரில் இருந்தபோது மொகலாயப் படைகளால் கைது செய்யப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்டு கண்கள் ஊனப்படுத்தப்பட்டு கொடூரமாக ஓலரங்கசீப்பினால் கொல்லப்பட்டனர்.
தாராவுக்கும் ஓளரங்கசீப்புக்குமான வாரிசுரிமை போரில் சீக்கியர்களின் 7வது குருவான ஹர் ராய் தாராவுக்கு உதவியதால் அவரை டெல்லிக்கு வந்து சந்தித்தார். தனது கொள்ளு பாட்டான் அர்ஜீன் தேவ்க்கு நடந்த கதி தனக்கும் நடக்கலாம் என்று அறிந்து தன் மகன் ராம் ராய்யை அனுப்பினார். அவரிடம் இஸ்ஸாமை குறை கூறுகின்ற கிரந்த் சாஹிப்பை வாசிக்க அவர் அந்த வரிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு மன்னிப்பு அளித்தார். இதனால் அவரை 8வது குருவாக நியமிக்க மறுத்து அடுத்த மகன் ஹர் கிருஷ்ணனை அவர் 8 வயதையே இறக்க 9வது குருவாக குரு ஹர் கோவிந்த் சிங்கின் இளைய மகனான தேஜ் பகதூர் 9வது குருவாக ஆனார். கோயில்களை இடிக்கும் ஓளரங்கசீப்பை எதிர்த்து மசூதிகளை இடிக்க ஆரம்பிக்க ஓளரங்கசீப் கோபம் கொண்டு இவரை பிடித்து வந்து கொடூரமாக கொல்லப்பட்டார். பின்னர் 10வது குருவான குரு கோவிந்த் சிங் சீக்கியர்கள் தங்களை காத்துக்கொள்ள 5 முக்கியமான உடைமைகளை அறிவித்தார். இவரை பிடிக்க ஒளரங்கசீப் வாசீர்கானை அனுப்பிய குரு கோவிந்த் சிங் அனந்தபூரை விட்டு வெளியேறினால் அவரது மகன்களை சிறைபிடித்து கொடூரமாக கொன்றார். இதனால் ஓளரங்கசீப்புக்கு "ஓளரங்கசீப் (சிம்மாசனத்தின் பெருமை) என்ற பெயர் உங்களுக்கு பொருந்தாது. இராஜதந்திரம் என்ற பெயரில் மோசமான வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். இந்த வழி எனது மனதுக்கு பிடித்தமானது அல்ல. எனது மனசாட்சி இதற்கு இடமளிக்காது" என்ற கடிதம் அனுப்பப்பட்டது. குருவின் சிஷ்யர்கள் முந்தைய நிகழ்வுகளை சொல்லி சந்திக்க வேண்டும் என்று சொல்லிய போதும் துணிவுடன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க டெல்லி கிளம்பினார். ஆனால் இராஜஸ்தானை அடைந்த நேரத்தில் ஓளரங்கசீப் மரணமடைந்த செய்தி கிடைத்து சந்திக்காமல் திரும்பினார்.
டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் தான் பிரார்த்தனை பண்ணும்போது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் டெல்லி செங்கோட்டையில் முத்து மசூதியை ஓளரங்கசீப் ஏற்படுத்தினார். இவரது ஆட்சியில் இவரது மகனால் இவரது மனைவி தில்ராஸ் பானு பேகத்தின் நினைவாக ஒளரங்கபாத்தில் தாஜ்மஹாலை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பீபீ கா மக்பரா (டெக்கான் தாஜ்) கட்டப்பட்டது.
கி.பி.1707 பிப்ரவரி மாதம் தேவ்பூர் கோட்டையில் இருந்த சமயம் திடிரென்று காய்ச்சலால் அவதிப்பட்டு அகமது நகருக்கு வரப்படுகிறார். அகமது நகரில் கி.பி.1707ல் பிப்ரவரி 20ஆம் தேதி மரணமடைந்தார். இவரது உடல் அங்கிருந்து இவரின் குருவான சையது ஜைனாவூதின் சிரோஹியின் சமாதி அருகே ஓளரங்கசீப்பின் ஆசைப்படி அடக்கம் செய்யப்பட்டது. எனது சமாதி வானத்தை பார்க்கவேண்டும். மண்ணால் மூடப்பட்டிருக்கவேண்டும். எந்த அலங்காரங்களும் கூடாது. வெறுங்கையுடனே இவ்வுலகுக்கு வந்தேன். வெறுங்கையுடனோ இவ்வுவகிலிருந்து செல்கிறேன் என்று உலகிற்கு தெரியட்டும் என்பதால் அவ்விடம் சொன்னார். இவரது சேமிப்பு பணம் ஏழைகளுக்கு தானம் அளிக்கவும் உத்தரவிட்டார். இவ்வாறு ஓளரங்கபாத் அருகிலுள்ள தெளலாபாத் அருகிலுள்ள குல்தாபாத்தில் இவரது குருவின் சமாதி அடக்கம் செய்யப்பட்டது.
பின்னால் ஆங்கிலேய கர்சன் பிரபு இவரது சமாதியை பளிங்கு கற்களால் அலங்கரித்தார் என்ற குறிப்பு உள்ளது. தொல்பொருள் துறையினரின் கூற்றுப்படி கி.பி.1707ல் மார்ச் 23 ஆம் தேதி இறந்ததாக குறிப்பு உள்ளது. அகண்ட இந்தியாவை தனது அதிகாரத்தினால் சுமார் 49 ஆண்டுகள் ஆண்ட ஒளரங்கசீப் தனது 89 வயதில் காலமான பிறகு இவரது வாரிசுகளுக்கு இடையே சண்டை ஆரம்பமாகி பின்னால் அகன்ற மொகலாயப் பேரரசு கடைசியில் டெல்லி அரண்மனை அளவில் எந்த அதிகாரத்தோடு நின்று கடைசியில் அதுவும் சிப்பாய் கலகத்தோடு முடிந்து போனது தனி வரலாறு. ஓளரங்கசீப் தனது மதவாதத்தாலும் அடக்குமுறையாலும் 49 ஆண்டுகள் ஆண்டாலும் அதன் பிறகு மொகலாய பேரரசு சிதற ஆரம்பித்தது. மதவாதம் என்று சொன்னாலும் ஓளரங்கசீப் தனது ஆட்சியில் இந்துக்களுக்கு நிறைய வரிகளை ரத்து செய்திருக்கிறார். நிறைய கோயில்களுக்கு உதவியிருக்கிறார். ஆனாலும் இஸ்ஸாமை பரப்பவும் தனது எதிரிகளை பிடித்து இஸ்ஸாமை பின்பற்ற மறுத்தால் கொன்றுவிடவும் செய்திருக்கிறார். கி.பி.1682ல் 1000 பேர்களை நியமித்து தன் ஆட்சிக்குட்பட்ட இந்து கோயில்களை சிதைக்க ஏற்பாடு செய்தார். அவ்வாறு சிதைக்கப்பட்ட கோயில்கள் தான் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் ஆலயம் மற்றும் அஜந்தா , ஒளரங்கபாத் குகைகோயில்கள். எல்லோராவிலுள்ள கைலாசநாதர் ஆலயத்தை சிதைக்க முடியாமல் அந்த உருவங்களை மட்டும் அவர்களால் சிதைக்க முடிந்தது. அற்புதமான கலைப்படைப்புகள் இவரது மாற்றுமத கொள்கையினால் இடிக்கப்பட்டது. இவர் இந்துவான சிவாஜியின் மகனான சாம்பாஜி, குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்கள் இராஜபுத்திர அமர் சிங் என்று மனமாற்றம் செய்ய முயன்ற பட்டியல்களும் உள்ளன. இதில் இராஜபுத்திர அமர்சிங் தப்பித்து போனது தனிக்கதை. மற்றவர்கள் இவர்களால் கொல்லப்பட்டதும் நடந்தது. கடைசி காலங்களில் இவரது மகளான ஜீனத் உன்னிஸ்ஸா பேகம் தான் இவரை கவனித்துக் கொண்டார். பேச்சு துணைக்கு இவரது மனைவியான உதய்ப்பூரி மஹால் மட்டுமே இவரது அறையில் அனுமதிக்கப்பட்டார். தான் ஷாஜஹானை சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றியது மாதிரி தன் மகன்கள் தன்னை கொலையோ அல்லது சிறைத்தண்டனை செய்து விடுவார்களோ என்ற பயத்திலையே மகன்கள் யாரையும் தனது தனியறையில் அனுமதிக்கவே பயந்தார். மகன்களும் தந்தையின் மேல் பயத்துடனே வாழ்ந்தனர். மொகலாய மன்னர்களிலையே யாராலும் புரிந்து கொள்ள முடியாத தனி ரகம் தான் இந்த ஆலம்கீர் என்றழைக்கப்பட்ட முஹம்மத் முகையூதீன் ஓளரங்கசீப்.
இவர் டெல்லியில் அரசராக அமர்ந்த போது இவரின் ஆசிரியர் இவரிடம் வெகுமதி பெறலாம் என்று வந்து வாங்கி கட்டிக்கொண்டு போன கதை சுவாரஸ்யமானது. "பூமியில் உள்ள அனைத்து நாடுகளையும் பற்றிய அவர்களின் வலிமை பழக்க வழக்கங்கள் போர் முறைகள் சமயம் வழிபாட்டு முறைகளையும் புரட்சிகளின் காரணங்களையும் வீழ்ச்சியடைந்த வரலாறுகளையும் கற்று கொடுக்கவில்லை. நல்லவேளை இதையெல்லாம் நன்கு படித்தவர்களிடம் கற்று அறிந்துகொண்டேன். வெறும் 3 வருடங்கள் குரானை மட்டுமே கற்று கொடுத்தீர்கள். ஆட்சியமைக்க தேவையான இராஜதந்திரங்களையும் நிர்வாக திறமைகளையும் கற்று கொடுக்கவில்லை. பிறகு எந்த முகத்துடன் என்னை சந்திக்க வந்தீர்கள்?" என்று அவரை துரத்தியடித்தார்.
உதவி நூல்கள்:
மொகலாயர்கள் - முகில்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்
மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா
மொகலாயர் ஆட்சியில் பெர்னியரின் பயணங்கள் - பெர்னியர்
ஓளரங்கசீப் - ஸ்டேன்லி லென் ஃபூல்
மொகலாய இந்தியாவில் எனது பயணக்குறிப்புகள்-நிக்கோலா மனுச்சி
எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்
சீக்கியர்கள் - எஸ்.கிருஷ்ணன்
சிவாஜி - கு.ப.ராஜகோபாலன்
வரலாற்றின் வெளிச்சத்தில் ஓளரங்கசீப் - செ.திவான்
தமிழகபாளையங்களின் வரலாறு - மு.கோபி சரபோஜி
படங்கள்:
கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்



Comments
Post a Comment