75) மொகலாய பேரரசு - ஓளரங்கசீப்பிற்கு பின்னர் 1

ஓளரங்கசீப்பிற்கு பிறகு (கி.பி.1707 - 1857)

ஓளரங்கசீப் தனக்கு பிறகு தன் மகன்கள் சண்டையிட்டு கொள்ளக்கூடாது என்று நாட்டை பிரித்து ஆளவேண்டும் என்று உயில் எழுதினார். ஆனாலும் அவருக்கு பின் அவரது வாரிசுகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு மொகலாய பேரரசை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தனர். என்ன இருந்தாலும் அரசுக்காக தனது சகோதரர்களை கொன்று குவித்த ஓளரங்கசீப்பின் இரத்தம் அல்லவா அவர்களும். ஒளரங்கசீப் மறைந்ததும் வாரிசு சண்டை ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் படை திரட்ட ஆரம்பித்தனர்.

முஹம்மத் அஸம் ஷா :

காலம் : (கி.பி.1653-1707)

ஆட்சி : (கி.பி.1707-1707)


குஃப்த்யூதீன் முஹம்மத் ஆஸம் என்ற பெயருடைய இவர் கி.பி.1653 ஜீன் 28ல் ஓளரங்கசீப்-தில்ராஸ் பானு பேகத்தின் மூத்த மகனாக பெர்ஹாம்பூரில் பிறந்தார். ஓளரங்கசீப் மறைந்தவுடன் கி.பி.1707 மார்ச் மாதத்தில் இவர் தக்காண பகுதிகளில் இருந்தார். முவாஸ்ஸம் என்ற முதலாம் பகதூர் ஷா காபூலில் இருந்தார். காம்பக்ஷ் குஜராத்தில் இருந்தார். முவாஸ்ஸம் (முதலாம் பகதூர் ஷா) வங்காளத்தில் இருந்த தன் மகன் அஸிம் மிர்ஸாவுக்கு செய்தி அனுப்பி ஆக்ரா சென்று கஜானாவை கொள்ளையடிக்க உத்தரவு அனுப்பினார். அவரும் அவ்வாறே செய்து ஆக்ராவின் கஜானாவின் பெரும்பான்மை பணத்தை கொள்ளையடித்தார். அரியணைக்கு அருகில் இருந்த அஸம்ஷாவுக்கு முக்கிய அமைச்சரான அஸத்கானின் ஆதரவு இருந்தது. ஆட்சி பொறுப்பை அகமது நகரிலிருந்து ஏற்றுக்கொண்ட இவர் அதே ஆண்டு ஆக்ராவுக்கு அருகில் ஜாஜவ் என்னுமிடத்தில்  சகோதரர் முதலாம் பகதூர் ஷாவுடன் நடந்த போரில் மரணமடைந்தார். இந்த போரில் முவாஸ்ஸம் என்ற முதலாம் பகதூர் ஷாவுக்கு ஆதரவாக குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை களத்தில் இறக்கியிருந்தார். கி.பி.1707ல் ஜீன் 8ல் ஆக்ராவில் மறைந்த இவர் குல்தாபாத்தில் (ஓளரங்கசீப் சமாதி அருகில்) அடக்கம் செய்யப்பட்டார்.

இவருக்கு 3 மனைவிகள். ஸையிஸ்டாகானின் மகளான பாரி பீபீக்கும் அஸம்ஷாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் பாரி பீபீ கி.பி.1665ல் திடிரென்று டாக்காவில் மரணமடைந்ததால் அந்த திருமணம் நடைபெறவில்லை.

i) ரஹ்மத் பானு பேகம் - அஸ்ஸாமின் அஹோம் அரச இளவரசி . ரமானி கப்ஹாரு என்பது இவரின் இயற்பெயர். கி.பி.1656ல் பிறந்த இவர் மொகலாயர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் 7 வயதில் மொகலாய அரண்மனைக்கு வந்து பின்னர் முஸ்லீமாக மாறி 5 வருடங்கள் கழித்து கி.பி.1668ல் அஸம்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.

ii) ஷாஹர் பானு பேகம் :

பிஜப்பூரின் அடில் ஷா பரம்பரையில் வந்த இளவரசி இவர். இவரின் திருமணத்திற்கு இவரின் தந்தை 5லட்ச ரூபாய் அளவுக்கு வரதட்சணை கொடுத்தார். மேலும் ஓளரங்கசீப்பிற்கும் 2லட்சம் பெறுமானமுள்ள வெகுமதிகளையும் யானைகளையும் கொடுத்தார்.

iii) ஜஹன்ஸீப் பானு பேகம்:

ஓளரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷீக்கோ-நாதிரா பானு பேகத்தின் மகளான இவரை கி.பி.1669ல் மணந்தார். இவர் ஓளரங்கசீப்பின் பிரியத்துக்குள்ளான மருமகளாவார்.

a)பிடர் பஃக்ஷ்:

அஸம் ஷா - ஜஹன்ஸீப் பானு பேகத்தின் மகன்இவர். இவர் ஓளரங்கசீப்பின் செல்ல பேரனாக திகழ்ந்தார். இந்த செல்ல மகனான "பிடர் பஃக்ஷ்" தந்தையுடன் ஆக்ராவுக்கு அருகிலுள்ள ஜாஜவ் போர்களத்தில் மரணமடைந்தார்.

இவர் போக ஜவான் பஃக்த், சிக்கந்தர் ஷான், வாலா ஷான், அலி தபார், வாலா ஜா, ஸீக் ஜா என்று 7 மகன்களும் கித்தி ஆரா பேகம், இஃப்பத் அரா பேகம், நஜீப் உன்னிஸ்ஸா பேகம் என்ற 3 மகள்களும் உண்டு.

முதலாம் பகதூர் ஷா :

காலம் : (கி.பி.1643-1712)

ஆட்சி : (கி.பி.1707-1712)


சகோதரரான முஹம்மத் அஸம்ஷாவை வென்று கி.பி.1707 ஜீன் 8ம்தேதி அரியணையில் ஏறினார். அரியணை ஏறும் போதே அவருக்கு தாத்தா வயது தான். அப்போதே வயது 64ஐ கடந்திருந்தது. 4 1/2 ஆண்டுகள் ஆண்ட இவர் கி.பி.1712ம் ஆண்டு பிப்ரவரி 27ல் லாகூரில் இறந்தார். இவரது ஆட்சியில் இராஜபுத்ரர்கள், சீக்கியர்கள் மற்றும் மராத்தியர்கள் மொகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டனர். மராத்தியர்களுடன்  சுமூக உடன்பாடு கொண்டார். மார்வார் இராணாவான இராஜபுத்ரரான அமர்சிங்கின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். பஞ்சாப்பில் சீக்கியர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.  ஓளரங்கசீப் ஆட்சியின் போது பலமுறை சிறையில் வாடிய அனுபவமும் உள்ளவர். இவர் கி.பி.1643 அக்டோபர் 14ல் பெர்ஹாம்பூரில் ஓளரங்கசீப்- நவாப் பாய்க்கு மகனாக பிறந்தார்.

இவரது மனைவிகள்:

i) நூர் உன்னிஸ்ஸா பேகம்:

பெண்களில் ஒளி போன்றவள் என்பதே இவரது பெயரின் அர்த்தம். இவரது அம்மா ஜீனத்-இ-ஆலம் ஷாஜஹானின் மனைவியான மும்தாஜ் மஹாலின் உறவினர். இவர் ஈரானிலுள்ள குரசான் பகுதியில் பிறந்தவர். கி.பி.1659 டிசம்பர் 30ல் முதலாம் பகதூர் ஷாவை டெல்லியில் திருமணம் செய்தார். இவருக்கு கி.பி.1671ல் ரஃபி-அஷ்-ஷான் என்ற மகன் பிறந்தார். கி.பி.1701 பிப்ரவரியில் காபூலில் மறைந்தார்.

ii) நிஸாம் பாய் (கி.பி.1643-1692)

இவரது தந்தையான பஃதேயார் ஷா தக்காண சுல்தான்களுக்கு எதிரான போரில் ஓளரங்கசீப்பிற்க்காக போரிட்டார். அவரது சேவையை பாராட்டி இத்திருமணம் நடந்திருக்கலாம். கி.பி.1660 மார்ச் 12 இவருக்கு முதலாம் பகதூர் ஷாவுடன் திருமணம் நடைபெற்றது. பின்னாளில் அரியணை ஏறிய ஜகந்தர் ஷா என்ற மகன் இவருக்கு பிறந்தவரே‌. கி.பி.1643ல் ஹைதராபாத்தில் பிறந்த இவர் கி.பி.1692ல் டெல்லியில் மறைந்தார்.

iii) மிஹர் பர்வார் பேகம்

iv) அமத்-உல் ஹபீப் பேகம்

v) ராணி சத்தர் பாய்

vi) தில்ரூபா 

இவரது மகன் மகள்களின் விவரம்

a) ஜகந்தர் ஷா :

முதலாம் பகதூர் ஷாவுக்கு பிறகு தம்பியை போரில் கொன்றுவிட்டு  அரியணை ஏறினார். இவரை இவரது தம்பியின் மகனான ஃப்ரூக் ஷியார் அரியணை ஏறிய 11 மாதங்களிலையே கொலை செய்துவிட்டு அரியணையை பிடித்தார்.

b)அஸிம்-அஷ்-ஷான் மிர்ஸா :

கி.பி.1664 டிசம்பர் 15ல் ஆக்ராவில் முதலாம் பகதூர் ஷா- அம்ரிதா பாய்க்கும் பிறந்த மகன். கி.பி.1697ல் ஓளரஙகசீப்பால் பெங்கால், பீஹார் மற்றும் ஓரிஸாவுக்கு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.  இவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கட்டுவதற்கு அனுமதியளித்தார். பின்னர் பெங்காலுக்கு திவானாக நியமிக்கப்பட்ட முர்ஸித் குலி கானுடன் ஏற்பட்ட பிணக்குகளால் ஓளரங்கசீப் இவரை பீஹாருக்கு அனுப்பினார். கி.பி.1703ல் தலைநகரை முதலில் ராஜ்மஹாலுக்கும் பின்னர் பாடலிபுத்திராவுக்கும் (இன்றைய பாட்னா) மாற்றினார். பாடலிபுத்திராவுக்கு அஸிம்மாபாத் என்று தன் பெயரை சூட்டினார். தந்தை முதலாம் பகதூர் ஷா மறைந்தவுடன் அரியணை போட்டியில் சகோதரர் ஜகந்தர் ஷாவால் ராவி ஆற்றங்கரையில் நடந்த போரில் கி.பி.1712 மார்ச் 17ம் தேதி கொல்லப்பட்டார்.

c) இஃப்தீன் மிர்ஸா :

d) தெளலத் அப்ஸா மிர்ஸா :

e) ரஃபி அஷ்-ஷான் மிர்ஸா :

கி.பி.1671ல் டெல்லியில் முதலாம் பகதூர் ஷாவுக்கும் நூர் உன்னிஸ்ஸா பேகத்திற்கும் பிறந்த மகன் இவர். வாரிசுரிமை போரில் இவரது மூத்த சகோதரர் ஜகந்தர் ஷா வால் கி.பி.1712 மார்ச் 29ம் தேதி கொல்லப்பட்டார். இவருக்கு ரஸியத் உன்னிஸ்ஸா பேகம் என்ற மனைவியும் உண்டு. இவரது மகன்களான ரஃபி உத்-தராஜ் மற்றும் இரண்டாம் ஷாஜஹான் ஆகியோர் 3 மாதங்கள் மொகலாய அரியணையில் அமர்ந்து உயிரை விட்டனர். மூன்றாவது மகனான முஹம்மது இப்ராஹிம் கி.பி.1720ல் முஹம்மத் ஷா வால் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே மறைந்தார்.

f) ஜஹான் ஷா மிர்ஸா :

கி.பி.1673 அக்டோபர் 4ல் முதலாம் பகதூர் ஷா- தில்ரூபாவுக்கு மகனாக பிறந்தார். வாரிசுரிமை போரில் ஜகந்தர் ஷாவுக்கு ஆதரவாக இருந்தார். மற்ற சகோதரர்களை தீர்த்து கட்டியவுடன் ஜகந்தர் ஷா இவரையும் இவரது மூத்த மகனான ஃபர்குந்தா அக்தரையும் கி.பி.1712 மார்ச் 30ல் தீர்த்து கட்டினார். இவரது இளைய மகனான முஹம்மது ஷா என்பவர் 28 ஆண்டுகள் பின்னாளில் மொகலாய பேரரசை ஆண்டார்.

g) முஹம்மத் ஹீமாயூன் மிர்ஸா:

h) ரஃபி அஷ்-காதிர்

i) தஹர் அப்ரூஷ் பானு பேகம்

ஜகந்தர்ஷா :

காலம் : (கி.பி.1661-1713)

ஆட்சி : (கி.பி.1712-1713)


மிர்ஸா முஹம்மத் ம்யூஸ்த்தீன் ஜகந்தர் ஷா பகதூர் என்பதே இயற்பெயர். முதலாம் பகதூர் ஷா - நிஸாம் பாய் தம்பதியருக்கு மகனாக கி.பி.1661 மே 9ம் தேதி தக்காணத்தில் பிறந்தவர் இவர். இவரது தந்தை முதலாம் பகதூர் ஷா லாகூரில் மறைந்த பின்னர் இவரும் இவரது சகோதரரான அஸிம்-அஷ்-ஷான்னும் தங்களை அடுத்த அரசராக அறிவித்துக் கொண்டு பதவி போட்டியில் இறங்கினர். இதில் அவரது சகோதரரை கி.பி.1712 மார்ச் 17ம் தேதி கொன்று பின்னர் இவர் கி.பி.1712 மார்ச் 29ல் மொகலாய அரசராக லாகூரில் பதவியேற்றார். 11 மாதங்கள் தான் ஆட்சியில் இருந்தார். இவரது சகோதரர் மகனான ஃபரூக் ஷியார் இவரை கி.பி.1713 ஜனவரியில் 10ல் ஆக்ரா போரில் முறியடித்து டெல்லிக்கு தப்பித்து ஓடிய இவரையும் இவரது பட்டத்து ராணி இம்தியாஸ் மஹால் என்ற லால் குன்வாரையும் பிடித்து சிறையில் அடைத்து பின்னர் ஒரு மாதம் கழித்து கொன்று இவருக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்தார். அரண்மனையில் ஆரணங்குகளுடன் ஆட்டம் போட்ட ஜகந்தர் ஷாவை சிறை காவலாளி ஷீ காலால் மிதித்தே கொன்றார். உடல் டெல்ஷியிலுள்ள ஹீமாயூன் சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது மனைவிகள் விவரம்:

i)பெயர் தெரியவில்லை:(மிர்ஸா முகாரம் கான் சஃபாபியின் மகள்)

இவரை கி.பி.1676 அக்டோபர் 13ம் தேதி ஜகந்தர் ஷா மணந்தார். குறுகிய காலத்திலையே இவர் இறந்ததால் இவரது உறவினரான சயீத் உன்னிஸ்ஸா பேகத்தை திருமணம் செய்தார்.

ii) சயீத் உன்னிஸ்ஸா பேகம்:

முதல் மனைவியின் உறவினர் இவர். மிர்ஸா ரூஷ்டம் என்பவரின் மகளான இவரை கி.பி.1680 ஆகஸ்ட் 30ல் ஜகந்தர் ஷா மணந்தார். பின்னர் ஓளரங்கசீப் மற்றும் பகதூர் ஷா முன்னிலையில் நடந்த திருமண வரவேற்ப்பை ஓளரங்கசீப்பின் மகளான ஜீனத் உன்னிஸ்ஸா பேகம்  நடத்தினார். இதில் இவருக்கு நகைகள் ஆபரணங்கள் பரிசளிக்கப்பட்டது.

iii) அனூப் பாய்:

இவர் ஜகந்தர் ஷாவின் மூன்றாவது மனைவி. இவருக்கு பிறந்த மகனான முஹம்மத் அஷ்-ஷீதீன் மிர்ஸா என்பவர் பின்னாளில் "இரண்டாம் ஆலம்கீர்" என்ற பெயரில் ஆட்சியில் அமர்ந்தார். இவர் தனது மகன் அரசனாவதற்கு 19 ஆண்டுகளுக்கு முன்பே கி.பி.1735 ஏப்ரல் 17ல் டெல்லியில் மறைந்தார்

iv) லால் குன்வார்:

இவர் அரண்மனையில் நடனமாடும் பாட்டு பாடும் பெண்ணாக இருந்து ஜகந்தர் ஷாவின் மனதை கவர்ந்து அவருடைய மனைவியாக ஆகி பின்னர் "இம்தியாஸ் மஹால்"என்ற பெயரில் மகாராணியாக ஆனவர். ஜகந்தர் ஷா ஆக்ராவில் நடந்த போரில் ஃப்ரூக் ஷியாரிடம் தோற்றோடும்போது அவருடன் சேர்ந்து பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர் கொல்லப்பட்டார்.

இவரது மகன்,மகள்கள் விவரம்:

a) இஷ்ஷீயூதீன் மிர்ஸா

b) அஷ்ஷீயூதீன் மிர்ஸா:

கி.பி.1691பிறந்த இவர் டெல்லியில் கி.பி.1744 டிசம்பர் 12ல் மறைந்தார்.

கி.பி.1707ல் பகதூர் ஷா - அஸம் ஷாவுக்கு இடையே நடந்த வாரிசுரிமை போட்டியில் தனது தந்தை ஜகந்தர் ஷாவுடன் தாத்தாவான முதலாம் பகதூர் ஷாவுக்கு ஆதரவாக போரிட்டார். கி.பி.1713 ஜனவரியில் ஜகந்தர் ஷாவுடன் ஃப்ரூக் ஷியார் மோதிய ஆக்ரா யுத்தத்தில் பிடுபட்டு ஃப்ரூக் ஷியார் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனக்கு பின்னால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதை அறிந்த ஃப்ரூக் ஷியார் கி.பி.1714 ஜனவரி 21ல் இவரது கண்களை குருடாக்கினார். சிறையில் வாடிய இவர் பின்னால் எப்போது விடுதலை ஆனார் என்ற விவரங்கள் இல்லை. ஆனால் டெல்லியில் கி.பி.1744ல் மறைந்த விவரம் மட்டுமே உள்ளது.

c) இரண்டாம் ஆலம்கீர்

ஜகந்தர் ஷா - அனூப் பாய்க்கு கி.பி.1699 ஜீன் 6ல் பிறந்தவர். பின்னாளில் கி.பி.1754-59 வரை இரண்டாம் ஆலம்கீர் என்ற பெயரில் அரியணை ஏறினார்.

d) இஃப்பத் ஆரா பேகம்

e) ரபி பேகம்

ஃபரூக்ஷியார் :

காலம் : (கி.பி.1685-1719)

ஆட்சி : (கி.பி.1713-1719)


கி.பி.1685 ஆகஸ்ட் 20ம் தேதி ஓளரங்கபாத்தில் முதலாம் பகதூர் ஷாவின் இரண்டாவது மகனான அஸீம் அஷ்-ஷான்னுக்கும் ஷாஹிபா நிஸ்வான் என்பவருக்கும் மகனாக பிறந்தவர்.  கி.பி.1707ல் ஓளரங்கசீப் தனது பேரனான இவரது தந்தையான அஸீம் அஷ்-ஷான்னை பெங்காலின் பொறுப்பிலிருந்து விடுவித்து தனது கொள்ளு பேரனான இவரை அந்த பொறுப்பில் நியமித்தார். பின்னர் தாத்தாவான முதலாம் பகதூர் ஷா மறைந்த பின்னர் அரியணை போட்டியின் போது ஜகந்தர் ஷா இவரை தந்தையை போரில் கொன்று ஆட்சியை பிடித்தார். மனமுடைந்த இவர் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு இவரது நண்பர்களால் நிறுத்தப்பட்டது. இவரது தாயான ஷாஹிபா நிஸ்வான் அறிவுரையின் பேரில் படை திரட்டி சையீத் சகோதரர்களின் உதவியால் கி.பி.1713 ஜனவரி 10ல் ஆக்ராவுக்கு அருகில் நடந்த போரில் ஜகந்தர் ஷாவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார். தோற்று ஓடிய ஜகந்தர் ஷா டெல்லியில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இவரின் உத்தரவின் பேரில் காவலாளியால் களத்தை நெறித்தும் உயிர் போகாமல் ஷீ காலால் மிதித்து கொல்லப்பட்டார். அரியணையில் அமர்ந்ததும் இவரும் ஆட்டம் அதிகமாகவே சைய்யீத் சகோதரர்களால் கி.பி.1719 ஏப்ரல் 19ல் கொல்லப்பட்டார். ஃப்ரூக்ஷியார் தனது பெயரில் இன்றைய குர்க‌ஹான் மாவட்டத்தில் பரூக் நகர் என்ற ஊரை ஏற்படுத்தினார். இவரின் காலத்தில் அந்த ஊரில் அரண்மனையும் (Sheesh Mahal) மற்றும் ஜாமா மஸ்ஜித்தும் கட்டப்பட்டது. உத்திரப்பிரதேசத்தில் பரூக்காபாத் என்ற ஓரு நகருக்கு இவரின் காலத்திற்கு பிறகு பெயர் வைக்கப்பட்டது. இவரின் காலத்தில் கி.பி.1717ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு வங்காளத்தில் வரியில்லா வாணிகம் நடத்த அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி தங்களது அதிகாரத்தை வலுப்படுத்த உதவியாயிற்று.

பத்தாவது சீக்கிய குரு கோவிந்த் சிங் முதலாம் பகதூர் ஷா ஆட்சியில் கொல்லப்பட்டார். அவரிடம் தளபதியாக பணியாற்றிய பண்டா பகதூர் அதன்பின் மொகலாயர்களுக்கு தொந்தரவாக மாறினார். கி.பி.1715ல் பண்டா பகதூரின் வசமிருந்த காஷ்மீரின் குர்தாஸ்பூர் மொகலாயர்கள் வசம் வந்தது. பண்டா பகதூர் தப்பித்து போய் அருகிலுள்ள கோட்டையில் ஒளிந்து கொண்டார். அங்கேயும் முற்றுகையிட்ட மொகலாயப்படை உள்ளே உணவுப்பொருட்கள் தீர்ந்ததால் வெளியே வந்த சீக்கியர்களை வெட்டி போட்டது . பண்டா பகதூர் மற்றும் சில ஆயிரம் சீக்கியர்களை கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றது. கி.பி.1716, ஜீன் 9ல் டெல்லியில் பண்டா பகதூருக்கு இரண்டு வாய்ப்புக்களை கொடுத்தார் ஃப்ரூக்ஸியார். ஒன்று இஸ்ஸாதத்துக்கு மாறு இல்லையேல் மரணத்தை தழுவு என்று. பண்டா பகதூர் மதம் மாறுவதை விட உயிர் துறப்பேன் நன்று என்று முடிவெடுக்க பண்டா பகதூரின் 4 வயது மகனை அவர் முன்னிலையிலையே வெட்டி கொன்று அவரின் கண்களை குருடாக்கிய பின்னர் உடலை தனித்தனியாக வெட்டி கொன்றனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் சீக்கியர்கள் தங்களது தாடி டர்பன் அடையாளங்களை மறைத்து வாழ்ந்தாலும் சீக்கியர்கள் மத்தியில் எழுச்சி உண்டானது இதற்கு பிறகு தான்.

இவரது மனைவியர் விவரம்:

i) கெளஹர் உன்னிஸ்ஸா பேகம்:

ஃபக்ஹர் உன்னிஸ்ஸா பேகம் என்ற கெளஹர் உன்னிஸ்ஸா என்பதே இவரின் பெயர். இவர் மிர் முஹம்மத் தாகீ என்பவரின் மகள். இவரது தாயார் பெர்சிய அரச பரம்பரையில் வந்தவர்.

ii) இந்திரா கன்வார்:

இவர் மார்வார் மன்னரான அஜீத் சிங்கின் மகள். இவரை ஃப்ரூக்ஷியார் கி.பி.1715 செப்டம்பர் 27ல் திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களில் இவரது குழந்தை இல்லை. கி.பி.1719ல் ஃப்ரூக்ஷியார் மரணமடைந்ததும் தனது தந்தையின் இருப்பிடமான ஜோத்பூர்க்கு வந்து சேர்ந்து கடைசி காலம் வரை அங்கேயே இருந்தார்.

iii) பாய் பூப் தேவி:

கிஸ்துவார் ராஜாவான ஜெயா சிங்கின் (இவர் இஸ்ஸாம்முக்கு மாறிய பின்னர் தன் பெயரை பக்தியார் கான் என்று மாற்றிக்கொண்டார்) மகளான இவரை கி.பி.1717 ஜீலை 3 ம் தேதி ஃப்ரூக்ஷியார் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரே ஒரு மகளான பாத்ஷா பேகம் மட்டுமே குழந்தை.

பாத்ஷா பேகம் (கி.பி.1703-1789)

இவர் ஃப்ரூக் ஷியார் - கெளஹர் உன்னிஸ்ஸா பேகத்திற்கு பிறந்த மகள். இவர் பின்னாளில் முஹம்மத் ஷாவை மணந்துக்கொண்டு பட்டத்து அரசியாக ஆனவர்.

ரபி உத்-தராஜத்  :

காலம் : (கி.பி.1699-1719)

ஆட்சி : (கி.பி.1719-1719)

இவர் கி.பி.1699 டிசம்பர் 1ல் முதலாம் பகதூர் ஷாவின் மகனான ரஃபி அஷ்-ஷானுக்கும் ரஸியத் உன்னிஸ்ஸா பேகத்திற்கும் மகனாக பிறந்தவர். இவர் ஃப்ரூக்ஷியார் மறைவுக்கு பின்னர் 11வது மொகலாய பேரரசராக கி.பி.1719 பிப்ரவரி 28ல் பொறுப்பேற்றார். இவருக்கு பின்னாலிருந்து சைய்யீத் சகோதரர்கள் அரசை நடத்தினார்கள். பதவியில் அமர்ந்த 3 மாதத்திலையே காசநோயால் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சைய்யீத் சகோதரர்களால் (சைய்யீத் ஹஸன் அலி கான் & சைய்யீத் ஹீசைன் அலி கான்) கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூட சொல்லுபவர்கள் உண்டு. ரஃபி உத்-தராஜ்க்கு வாரிசு என்றும் யாருமில்லை. இனாயத் பானு பேகம் என்ற ஒரு மனைவி மட்டுமே உண்டு. ரஃபி உத்-தராஜ்ஜின் ஆட்சியின் போது கி.பி.1719ல் ஆக்ராவின் கவர்னரான பீர்பால் (இவர் அக்பரின் மந்திரி பீர்பால் என்று குழம்பி கொள்ளவேண்டாம்) என்பவர் சிறையில் இருந்த முகம்மது அக்பரின் (ஓளரங்கசீப்பின் நாலாவது மகன். அவருக்கு எதிராக கலகம் செய்து ஈரானிலையே இறந்தவர்) மகனான நேகுஷியார் என்பவரை பதவியில் அமர்த்தினார். மூன்று மாதங்களுக்குள் கி.பி.1719 ஆகஸ்ட் 13ல் சைய்யீத் சகோதரர்களால் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட நேகுஷியார் சிறையிலையே கி.பி.1723 ஏப்ரல் 12ல் தனது 43வயதில் இறந்தார். ரஃபி உத்-தராஜ் தனது மரண படுக்கையின் போது தனது சகோதரரான ரஃபி உத்-தெளலாவை ஆட்சியில் அமர்த்த ஆணையிட்டார். இதையடுத்து அவரின் சகோதரர் ரஃபி-உத்-தெளலா இரண்டாம் ஷாஜஹான் என்ற பெயரில் ஜீன் 8ல் அரியணை ஏற ரஃபி உத்-தராஜட் ஜீன் 13ல் இயற்கை எய்தினார்.

இரண்டாம் ஷாஜஹான் :

காலம் : (கி.பி.1696-1719)

ஆட்சி : (கி.பி.1719-1719)

கி.பி.1696 ஜீன் மாதம் முதலாம் பகதூர் ஷாவின் மகனான ரஃபி அஷ்-ஷான்னுககும் நூர் உன்னிஸ்ஸா பேகத்திற்கும் பிறந்த மகனான இவர் தனது சிற்றன்னையின் மகனான ரஃபி உத்-தராஜ்க்கு பின்னர் 12வது மொகலாய பேரரசராக ஜீன் 8ம்தேதி டெல்லி செங்கோட்டையில் பதவியேற்றார். ரஃபி உத்-தெளலா என்ற இயற்பெயரை கொண்டிருந்த இவர் இரண்டாம் ஷாஜஹான் என்று அழைக்கப்பட்டார். தனது சகோதரனை போலவே இவரும் 3 1/2 மாதங்களிலையே காசநோயால் இவரும் மரணமடைந்தார். இவரும் டெல்லியிலுள்ள குத்ஃபூதின் பக்தியார் காகி தர்காவில் இவரது சகோதரர் அருகிலையே அடக்கம் செய்யப்பட்டார்.

முஹம்மத் ஷா :

காலம் : (கி.பி.1702-1748)

ஆட்சி : (கி.பி.1719-1748)


முதலாம் பகதூர் ஷாவின் நாலாவது மகனான ஜஹான் ஷா - ஃபக்ஹர் உன்னிஸ்ஸா பேகத்திற்கு கி.பி.1702 ஆகஸ்ட் 7ல் இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காஷ்னா என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ரோஸன் அக்தர் என்பதாகும். இவர் 13வது மொகலாய அரசராக  "நஸ்ரூத்தீன் முஹம்மத் ஷா" என்ற பெயரில் பட்டமேறினார். மொத்தத்தில் அமைதியான குணபாவம் கொண்ட இவரின் ஆட்சியில் தான் பாரசீக மன்னன் நாதிர்ஷா படையெடுப்பில் டெல்லி சிக்கி சின்னபின்னமாகிற்று. சைய்யீத் சகோதரர்களின் உதவியால் ஆட்சிக்கு வந்த இவர் பின்னால் முந்தைய அரசர்கள் போல நமக்கும் இவர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து நிதியமைச்சராக மற்றும் வஸீராக இருந்த ஆசிப் ஜா உதவியுடன் அவர்களை விரட்டியடித்தார். இவர் பதவியேற்றவுடன் சைய்யீத் சகோதரர்கள் ஜிஸியா வரியை நீக்கினார்கள். பசுவதை தடை செய்யப்பட்டது. முக்கிய பதவிகளில் இராஜபுத்ரர்கள், ஜாட்கள் நியமிக்கப்பட்டார்கள். மராத்தியர்களுடன் நல்லுறவு பேணப்பட்டது. முகமது ஷாவின் நடவடிக்கைகளை தங்களது கட்டுக்குள்ளே சைய்யீத் சகோதரர்கள் வைத்திருந்தனர். மனு கொடுப்பது போல் சென்று சைய்யீத் ஹீசைன் அலிகான் கி.பி.1720 அக்டோபர் 8ல் பதேஃபூர் சிக்ரியில் கொலை செய்யப்பட்டார். இதனால் கோபமடைந்த அவரது சகோதரர் முகமது ஷாவை பதவியிலிருந்து நீக்கி ரஃபி உத்-தராஜட்டின் இன்னொரு சகோதரரான முஹம்மது இப்ராஹிம்மை பதவியில் அமர்த்தினார். இதனால் முஹம்மது ஷா நிஜாம்-உல்-முல்க்குடன் கூட்டணி சேர்ந்து கி.பி.1720 நவம்பர் மாதத்தில் சைய்யீத் ஹசன் அலிகானை ஹசன்பூரில் தோற்கடித்து சிறைபிடித்தார். பின்னர் சைய்யீத் ஹசன் அலிகான் கி.பி.1722 அக்டோபர் 21ல் விஷம் வைத்து கொல்லப்பட்டார். பொம்மை அரசராக இருந்த முஹம்மது இப்ராஹிம் ஒரு மாதம் கூட ஆட்சி புரியாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு கி.பி.1746ல் இறந்தார். இதன் பிறகு சைய்யீத் சகோதரர்களின் தொல்லையில்லாமல் அரசை நடத்தலாம் என்று ஆரம்பித்தார். இவர் கலை,இலக்கியத்தில் நல்ல திறமை கொண்டவர். இவரது புனைப்பெயர் சதா ரங்கீலா என்பதாகும். பின்னர் ஆசிப் ஜா (நிஜாம்-உல்-முல்க்) மொகலாய அரசவையிலிருந்து விலகி கி.பி.1725ல் ஹைதராபாத் நிஜாம்கள் என்ற வம்சத்தை தோற்றுவித்தார். இவரது ஆட்சி காலத்தில் கி.பி.1737ல் மராத்தியர்களின் எழுச்சி ஆரம்பித்திருந்தது. மராத்தியர்கள் முதலாம் பாஜி ராவ் தலைமையில் குஜராத், மால்வா (மத்திய பிரதேசம்), பண்டல்காண்ட் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் டெல்லியின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து திரும்பினர்.

கி.பி.1739ல் மிகப்பெரிய ஆபத்து பாரசீக அரசர் நாதிர்ஷா உருவில் வந்தது. கி.பி.1736ல் பாரசீக மன்னர் தாம்ஸ்அப் மறைந்தவுடன் ஏற்பட்ட குழப்பநிலையை பயன்படுத்தி அவரின் தளபதியாக இருந்த நாதிர்ஷா ஆட்சியை கைப்பற்றினார். தன்னை அங்கீகாரம் செய்யவில்லை என்று நாதிர்ஷாவுக்கு முஹம்மது ஷாவின் மீது கோபம் இருந்தது. காபிர்களான மராத்தியர்களை அழிக்க வருகிறேன் என்று கடிதம் அனுப்பியும் பதில் அளிக்காததால் கோபமடைந்து டெல்லியை நோக்கி விரைந்து வந்தார். பானிபட்டுக்கு இருபது மைல் வடக்கில் கர்னால் என்ற இடத்தில் நாதிர்ஷா மொகலாயப் படைகளை (மொகலாயப் படைகளுடன், நிஜாம்-உல்-முல்க் மற்றும் அவுத் (அயோத்தி ராஜ்யம்)தின் நவாப் சாதத் கான்) தோற்கடித்தார். நிஜாம்-உல்-முல்க்ன் சமாதானத்தின் பேரில் 50 லட்சம் நஷ்ட ஈடாக நாதிர்ஷாவுக்கு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சாதத் கான் நாதிர்ஷாவிடம் டெல்லி சென்றால் 20 கோடி வரை கிடைக்கும் என்று கூற மார்ச்20,1739ல் டெல்லியை அடைந்தார் நாதிர்ஷா. குத்பா நடத்தப்பட்டு நாதிர்ஷா இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். நாதிர்ஷாவை கொன்று விட்டார்கள் என்று இரண்டாம் நாளே வந்த வதந்தியால் பாரசீக வீரர்களை மொகலாய வீரர்கள் தாக்கினார்கள். சுமார் 700 பாரசீக வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கோபமடைந்த நாதிர்ஷா ஒட்டுமொத்த டெல்லியையும் கொன்று குவிக்க ஆணையிட்டார். டெல்லியில் கி.பி.1398ல் தைமூரின் நடத்திய வெறிச்செயல் இந்த முறை தைமூர் வம்சாவளியில் வந்த அரசுக்கு நடந்தது. கிட்டத்தட்ட 1 இலட்சம் பேரை கொன்று குவித்தார். முஹம்மது ஷா நாதிர்ஷாவிடம் வேண்டிக்கொண்டு வன்முறையை தடுத்து நிறுத்தினார். நாதிர்ஷா கொள்ளையடித்த பணம் மட்டுமே 30 கோடி. இது தவிர நகைகள், பொக்கிஷங்கள், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் அடிமைகள் ஆகியவையும் பாரசீகத்துக்கு கொண்டு போகப்பட்டது. ஷாஜஹான் பார்த்து பார்த்து செதுக்கிய மயிலாசனமும் கொள்ளையடிக்கப்பட்டது. கோஹினூர் வைரத்தை தன் தலைப்பாகையில் முஹம்மது ஷா மறைத்து வைத்திருந்ததை அறிந்த நாதிர்ஷா தலைப்பாகையை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றிக் கொண்டார். நாதிர்ஷா தன் மகனுக்கு மொகலாய இளவரசியை (நஸிர் மிர்ஸா) திருமணம் செய்து வைத்தார்.பின்னர் தனது நாட்டிற்கு திரும்பினார். திரும்பவும் முஹம்மத் ஷா அரசராக அறிவிக்கப்பட்டார். கி.பி.1747 ஜீன் மாதத்தில் சதி ஒன்றினால் துருக்கிய வீரர்களால் நாதிர்ஷா கொல்லப்பட்டார். அவரின் தளபதியான அஹ்மத் கான் அப்தாலி கந்தஹாருக்கு வந்து புதிய மன்னராக பதவியேற்றார். இவர் ஏற்கனவே நாதிர்ஷாவின் டெல்லி படையெடுப்பில் கலந்து கொண்டவர் என்பதால் மொகலாயர்களை தாக்கினால் செல்வம் கிடைக்கும் என்று கி.பி.1748ல் லாகூரை கைப்பற்றினார். டெல்லிக்கு வரும் வழியில் சர்ஹிந்த் என்னுமிடத்தில் முஹம்மது ஷாவின் படையுடன் (இளவரசர் அஹ்மத் ஷா, அவாத்தின் நவாப் மற்றும் கூட்டணி படைகள்) மார்ச் 3ல் நடந்த போரில் அப்தாலி தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். போர் முகாமில் இருந்த முஹம்மத் ஷாவின் நெருங்கிய நண்பரான கமாலுதீன் கொல்லப்பட முஹம்மது ஷா ஆத்ம நண்பரை பிரிந்து வாடினார். ரொம்ப நாள் முஹம்மது ஷாவும் வாழவில்லை. அதே ஆண்டு கி.பி.1748 ஏப்ரல் 26ல் முஹம்மத் ஷாவும் மறைந்தார்.

இவரது மனைவியர்கள் விவரம்:

i) பாத்ஷா பேகம்:

இவர் ஃப்ரூக்ஷியார்-கெளஹர் உன்னிஸ்ஸா பேகத்தின் மகள். கி.பி.1703ல் பிறந்த இவர் மறைந்தது கி.பி.1789. இவர் முஹம்மத் ஷாவை திருமணம் செய்து கொண்டது கி.பி.1721 டிசம்பர் 8ம் தேதி. இவருக்கு பிறந்த மகனான ஷரியார் ஷா பகதூர் என்பவர் குழந்தைப்பருவ வயதில் கி.பி.1726ல் மரணமடைந்த பிறகு வேறு எந்த குழந்தையும் இல்லை.

ii) ஷாஹிபா மஹால்:

இவரின் மகளான ஹஸ்ராத் பேகம் கி.பி.1757ல் கட்டாயத்தின் பேரில் ஆப்கானிய அரசர் அஹ்மத் ஷா அப்தாலிக்கும் திருமணம் செய்து கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார். கி.பி.1748ல் முஹம்மது ஷா மறைந்த பிறகு துன்பங்களை மட்டுமே அனுபவித்த இவர் கி.பி.1793ல் மறைந்தார்.

iii) குத்ஃஷியா மஹால் :

உத்தம் பாய் என்ற இயற்பெயருடைய இவர் அரண்மனையில் நடன பெண்மணியாக வந்து ராணியாக ஆனவர். இவரை கி.பி.1725 டிசம்பர் 23ல் மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த மகனான அஹ்மத் ஷா பகதூர் பின்னாளில் முஹம்மது ஷாவுக்கு பின்னர் அரியணை ஏறினார். அஹ்மத் ஷா பகதூரை குழந்தையில் இருந்து மூத்த மனைவியான பாத்ஷா பேகம் தான் வளர்த்தார். அவரின் முயற்சிகளால் தான் முஹம்மது ஷா மறைந்தவுடன் அஹ்மத் ஷா பகதூர் அடுத்த மன்னராக முடிந்தது.

iv) ஸஃபியா சுல்தான் பேகம்:

இவரை நான்காவது மனைவியாக முஹம்மது ஷா மணந்தார்.

இவரது மகன்,மகள்கள் விவரம்:

a) ஷரியார் ஷா பகதூர்:

இவர் முதல் மனைவி பாத்ஷா பேகத்திற்கு பிறந்த மகன். குழந்தை பருவத்திலையே கி.பி.1726ல் இறந்து போனார்.

b) அஹ்மத் ஷா பகதூர்

உத்தம் பாய் என்ற குத்ஃஷியா பேகம்மிற்கு பிறந்த மகன். குழந்தையில் இருந்து மூத்த மஹாராணி பாத்ஷா பேகத்தின் வளர்ப்பில் வளர்ந்தவர். முஹம்மது ஷாவின் மறைவுக்கு பின்னர் கி.பி.1748ல் ஆட்சியேறியவர் இவரே.

c) தாஜ் முஹம்மத்:

d) பாத்ஷா பேகம்

e) ஜஹான் அஃப்ரூஸ் பானு பேகம்

f) ஹஸ்ராத் பேகம் :

இவர் கி.பி.1741 நவம்பர் 4ல் முஹம்மத் ஷாவுக்கும் ஷாஹிபா மஹால்க்கும் மகளாக டெல்லியில் பிறந்தார். கி.பி.1756ல் அறுபது வயதான் இரண்டாம் ஆலம்கீர் 15 வயதான இவரை திருமணம் செய்துக்கொள்ள இவரது தாய் ஷாஹிபா மஹால்க்கும் முஹம்மது ஷாவின் பட்டத்தரசியாக இருந்த பாத்ஷா பேகத்திற்கும் நெருக்கடி கொடுத்து மணக்க முயன்றார். இதனால் இவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். அதன் பின்னர் இரண்டாம் ஆலம்கீர் இவரை மணக்கவில்லை. பின்னர் டெல்லியை கைப்பற்றிய ஆப்கானிய துரானி வம்சத்து முதல் அரசனான அஹ்மத் ஷா அப்தாலி இவரை மணக்க ஆசைப்பட்டார். அவரின் வயதும் 35 என்பதால் இவரின் தாயார்கள் ஏற்கவில்லை. ஆப்கானிய அரசர் கட்டாயத்தின் பேரில் இவரை மணந்துகொண்டு தனது நாட்டுக்கு அழைத்து சென்றார்.  ஆப்கானிஸ்தானிலையே தனது 32வது வயதில் கி.பி.1774ல் மறைந்தார்.

அஹ்மத் ஷா பகதூர் :

காலம் : (கி.பி.1725-1775)

ஆட்சி : (கி.பி.1748-1754)

மிர்ஸா அஹ்மத் ஷா என்று அறியப்பட்ட இவரின் இயற்பெயர் முகையூதீன் அஹ்மத் காஸி என்பதாகும். கி.பி.1748ல் அப்தாலியின் முதல் படையெடுப்பை வெற்றிகரமாக இளவரசனாக இருந்து தடுத்த இவர் அடுத்த 2 மாதங்களில் தந்தை முஹம்மது ஷா மறைவுக்கு பின்னர் அரியணை ஏறினார். முஹம்மது ஷாவுக்கும் குத்ஃஷியா பேகத்திற்கும் கி.பி.1725  டிசம்பர் 23ல் டெல்லியில் பிறந்த மகன் இவர். இவரது ஆட்சியில் மாநிலங்கள் பிரிந்து தனித்தனியாக மொகலாயர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டனர். இவரது வஸீராக இருந்த மூன்றாம் ஃபெரோஸ் ஜங் இவரை ஆட்சியிலிருந்து நீக்கி கண்களை குருடாக்கி இவரையும் இவரது தாயையும் கி.பி.1754 ஜீன் 2ம் தேதி சிறையில் அடைத்தார். சிறையிலையே தனது 49வது வயதில் கி.பி.1775 ஜனவரி 1ல் மரணமடைந்தார்.

இவரது ஆட்சியில் கி.பி.1749ல் அப்தாலி இரண்டாவது முறையாக படையெடுத்து வந்து பஞ்சாப்பில் 4 மாவட்டங்களை கைப்பற்றினார். முதலில் வீரமாக போரிட்ட பஞ்சாப்பின் மொகலாய கவர்னரான மியூன்-உல்-முல்க் பின்னர் அப்தாலியின் நிபந்தனைகளை ஏற்று சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்.

கி.பி.1752ல் மூன்றாவது முறையாக அப்தாலி லாகூருக்கு படையெடுத்து வந்தார். இந்த முறையும் மியூன்-உல்-முல்க் ஆவேசமாக அப்தாலியின் படைகளை எதிர்த்து போர் புரிந்தார். அவருடைய தளபதியான ராஜா கோர்மால் போரில் கொல்லப்பட்டார். கவர்னரான மியூன்-உல்-முல்க் பிடிபட்டார். அவரின் வீரத்தை மெச்சிய அப்தாலி அவரையே அந்த பகுதிகளுக்கு கவர்னராக்கினார். டெல்லியை நோக்கி படையெடுத்த அப்தாலியை அகமது ஷா பகதூர் சமாதான கொடி பிடித்து வரவேற்று பஞ்சாப் மற்றும் முல்தான் பகுதிகளை அவருக்கு வழங்கி பிரச்சினையை முடித்து வைத்தார். இந்த ஆலோசனையில் அந்தப்புரத்தில் தலைமை காவலாளியாக இருந்த ஜாவித் கானுக்கு பங்கு இருந்தது. இந்த ஜாவித் கானுக்கும் அகமது ஷாவின் தாய்யான உத்தம் பாய் (என்ற) குத்ஃஷியா பேகத்திற்கும் முறையற்ற நெருக்கமுண்டு. இந்த ஜாவித் கானுக்கும் அவாத் (அயோத்தி) கவர்னரான சஃப்தர்ஜங்குககும் ஏழாம் பொருத்தம். டெல்லி வந்த சஃப்தர்ஜங் ஜாவித் கானை கொன்று அகமது ஷாவை தன் பிடியில் வைத்துக்கொண்டார். பின்னர் தனக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதை உணர்ந்து அலகாபாத்தின் கவர்னர் பொறுப்புக்கு மாறினார்.

கி.பி.1753 மே மாதத்தில் இறந்து போன வஸீரான  ஹைதராபாத்தில் முதல் நிஜாமான உல்-முல்க்கின் பேரனான காஸியூத்தீன் மூன்றாம் ஃபெரோஸ் ஜங் என்பவரை அஹ்மத் ஷா பகதூர் வஸீராக நியமித்தார். அவாத் நவாப்பான சஃப்தர்ஜங்கின் செல்வாக்கை குறைப்பதற்காக இவரது ஏற்பாடு பின்னர் இவருக்கே வினையாயிற்று. சஃப்தர்ஜங் அலகாபாத் கவர்னரான பின்னர் ஃபெரோஸ் ஜங் ரீஜென்டாக (வஸீராக) பதவி வகித்தார். இவரின் செல்வாக்கு அதிகமாகவே அஹ்மத் ஷா பகதூர் சற்று கலங்கிய நிலையில் காணப்பட்டார். இவர் வரி வசூல் செய்து பணபட்டுவாடா செய்யாமல் வைத்திருந்தது இவரின் மேல் கோபத்தை உண்டாக்கியது. இதனால் சஃப்தர்ஜங்கை திரும்பவும் வஸீராக நியமித்தார். மூன்றாம் ஃபெரோஸ் ஜங்கை பதவியில் இருந்து நீக்கிய பின் அவர் மராத்தியரான பேஷ்வா முதலாம் நானாசாகிப்பின் சகோதரரான சதாசிவராவ்வின் உதவியுடன் சிக்கந்தராபாத் என்னுமிடத்தில் மொகலாய படைகளை தோற்கடித்தார். தோற்றோடிய அஹ்மத் ஷா பகதூரை டெல்லியில் அவருடன் அவரது தாயாரையும் சிறையில் அடைத்தார். ஜாட்டுகளின் தலைவரான சூரஜ் மால் டெல்லி வந்து அஹ்மத் ஷா பகதூரின் கண்களை குருடாக்கினார். இதை கேள்விப்பட்ட சஃப்தர்ஜங் மனமுடைந்து இறந்து போனார்.

இவருக்கு கெளஹர் அப்ரூஸ் பானு பேகம் என்ற ஒரு மனைவியும் பல மனைவிகளும் உண்டு. அவர்களின் விவரம் தெரியவில்லை. தந்தை இருந்த வரை தனது காம களியாட்டங்களை கட்டுக்குள் வைத்திருந்த இவர் ஆட்சிக்கு வந்ததும் கட்டுப்படாத அளவுக்கு சிற்றின்ப வெறியராக மாறியதே இவரது ஆட்சிக்கு உலையாய் முடிந்தது. 

இவரது மகன்,மகள்கள் விவரம்:

a) ஹமீத் ஷா பகதூர்

b) பிடர் பஃக்த் மஹ்மூத் ஷா பகதூர்:

c) தாலா சையத் ஷா பகதூர்

d) முஹம்மத் ஜாமியத் ஷா பகதூர்

e) முஹம்மத் திலவார் ஷா பகதூர்

f) மிர்ஸா ரூஜ்பீ

g) மிர்ஸா முஹ்லு

h) முஹ்தாரம் உன்னிஸ்ஸா பேகம்

i) தில் அஃப்ரூஸ் பானு பேகம்

இரண்டாம் ஆலம்கீர் :

காலம் : (கி.பி.1699-1759)

ஆட்சி : (கி.பி.1754-1759)


அஷ்-ஷீததீன் என்ற இயற்பெயருடைய இவர் ஜகந்தர் ஷா- அனூப் பாய் தம்பதிகளுக்கு பெர்ஹாம்பூரில் கி.பி.1699 ஜீன் 6ல் பிறந்தார். முந்தைய ஆட்சியாளராக இருந்த அஹ்மத் ஷா பகதூரை ரீஜெண்ட்டாக (பாதுகாவலராக) இருந்த மூன்றாம் ஃபெரோஸ் ஜங் (இமாத் உல்-முல்க்) சிறையில் அடைத்த பிறகு இவரை கி.பி.1759 ஜீன் 3ம் தேதி 15வது மொகலாயப் பேரரசராக பதவியில் அமர்த்தினார். இவருக்கு நிர்வாகத்தில் எந்த வித அனுபவமும் இல்லை. வாழ்நாளில் பெரும்பான்மையான நாட்களை சிறையிலையே கழித்தவர். ஏதோ இமாத் உல்-முல்க் புண்ணியத்தால் சிறையிலிருந்து வெளியே வந்து அரசராக பதவியேற்கும் போது இவருக்கு வயது 55. தான் ஆட்சி ஏறியவுடன் ஓளரங்கசீப்பை பின்பற்ற வேண்டும் என்பதால் தன்னை இரண்டாம் ஆலம்கீர் என்று அழைத்துக்கொண்டாலும் இவர் ஓரு பலவீனமான அரசரே. இவரை பின்னால் இருந்து வஸீராக இருந்த இமாத் உல்-முல்க்கே இயக்கினார். வயது ஏறினாலும் சிற்றின்ப ஆசையை இவரும் விடாத அரசர். தனது 57 வயதிலும் 15 வயதான முஹம்மத் ஷாவின் மகளான ஹஸ்ராத் பேகத்தை மணக்க அவரது தாயை தொல்லை படுத்தினார். இவரது முதிய வயதால் ஹஸ்ராத் பேகம் இவரை மணக்க விருப்பப்படாமல் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார். கி.பி. 1756ல் ஐந்தாவது முறையாக அஹ்மத் ஷா அப்தாலி டெல்லியின் மீது படையெடுத்து கைப்பற்றினார். பின்னர் மதுராவையும் ஆக்ராவையும் சூறையாடி கொள்ளையடித்தார். அப்தாலி முந்தைய வஸீராக இருந்த இமாத் உல்-முல்க்கை "சமய நம்பிக்கையில் இருந்து விலகியவர்" என்று அறிவித்து அவரை தேட தொடங்கினார். கி.பி.1757ல் அஹ்மத் ஷா அப்தாலியின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களினால் அஹ்மத் ஷாவின் மகளான ஹஸ்ராத் பேகத்தை கட்டாயமாக திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் முகமது ஷாவின் மகள்களில் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். தன் மகன் தைமூர் ஷாவுக்கு இரண்டாம் ஆலம்கீரில் மகள்களில் ஒருவரையும் திருமணம் செய்து வைத்தார். இந்த போரின் விளைவாக பஞ்சாப், காஷ்மீர், சிந்து மாகாணங்கள் மற்றும் சிர்ஹிந்த் வரையிலான பகுதிகளை தனது ஆப்கானிய அரசுடன் அப்தாலி இணைத்துக்கொண்டார்.  ஆப்கானியர்களின் மேற்பார்வையில்  நஜீப் உல்-தெளலா என்பவரை வஸீராக நியமித்து விட்டு அப்தாலி தன் நாடு திரும்பினார். இரண்டாம் ஆலம்கீருக்கு இமாத் உல்-முல்க்கின் பிடியிலிருந்து விடுபட்டது மிக்க சந்தோஷமாயிற்று. இமாத் உல்-முல்க் மராத்தியர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்ததால் அவர்களின் உதவியால் மீண்டும் ஆப்கானிய படைகளை விரட்டியெடுத்து மீண்டும் வஸீராக பதவியில் அமர்ந்தார். இரண்டாம் ஆலம்கீருக்கும் அவருக்கும் உரசல்கள் ஏற்பட்டது. இரண்டாம் ஆலம்கீர் மீண்டும் அஹ்மத் ஷா அப்தாலியை அழைக்க ஆசைப்பட்டது தெரிந்து இரண்டாம் ஆலம்கீரையும் அவர் குடும்பத்தையும் கொன்று குவித்தார். இந்த நேரத்தில் இரண்டாம் ஆலம்கீரின் மகன்களில் ஒருவரான அலி கெளவுர் என்பவர் டெல்லியிலிருந்து தப்பி ஓடினார். இமாத் உல்-முல்க் "மூன்றாம் ஷாஜஹான்" என்ற பெயரில் ஓளரங்கசீப்பின் கடைசி மகனான முஹம்மது காம்பக்ஷ்ன் மூத்த மகனான இவரை அடுத்த அரசராக பதவியில் அமர்த்தினார். தம்பி ஓடிய அலி கெளவுர் பின்னர் ஒரு வருடத்தில் ஆட்சியை பிடித்து "இரண்டாம் ஷா ஆலம்" என்ற பெயரில் ஆட்சியில் அமர்ந்தது தனிக்கதை.

இரண்டாம் ஆலம்கீரின் மனைவிகள் விவரம்:

1) ஜீனத் மஹால்

2) ஃபெய்ஸ் பக்ஃத் பேகம்

3) அஸிஸ்ஸாபாதி மஹால்

4) லத்தீஃபா பேகம்

5) ஜீனத் அபஃரூஸ் பேகம்

6) ஓளரங்கபாதி மஹால்

மகன்,மகள்களின் விவரம்:

a) இரண்டாம் ஷா ஆலம் (அலி கெளவுர்)

b) மிர்ஸா முஹம்மத் அலி அஷ்கார் பகதூர்

c) மிர்ஸா முஹம்மத் ஹரூண் ஹிதாயத்

d) பக்ஃஷ் பகதூர்

e) மிர்ஸா தலி முராத் ஷா பகதூர்

f) மிர்ஸா ஜாமியத் ஷா பகதூர்

g) மிர்ஸா முஹம்மத் ஹிம்மத் ஷா பகதூர்

h) மிர்ஸா அஷ்ஷான்-உத்-தீன் முஹம்மத் பகதூர்

i) மிர்ஸா முபாரக் ஷா பகதூர்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு