76) மொகலாய பேரரசு - ஒளரங்கசீப்பிற்கு பின்னர் 2

 மூன்றாம் ஷாஜஹான் : 

காலம் : (கி.பி.1711-1772)

ஆட்சி : (கி.பி.1759-1760)


முஹியூல் மில்லத் என்ற இயற்பெயருடைய இவர் ஓளரங்கசீப்பின் கடைசி மகனான முஹம்மத் காம்பக்ஃஷ்ஷின் பேரனாக கி.பி.1711ல் பிறந்தவர். பிறந்த வருடம் மிகவும் குழப்பமாக உள்ளது. ஏனெனில் சரித்திரத்தில் இவர் பிறந்ததாக  குறிப்பிடப்பட்ட வருடத்தில் இவரது தந்தையான முஹம்மது காம்பக்ஃஷ்ஷின் முத்த மகனான முஹி-அஷ்-சுன்னத் முதலாம் பகதூர் ஷாவினால் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இவரது தாயார் பெயர் ரூஷ்குமி பேகம். சிறையிலையே பிறந்து வளர்ந்த இவரை வஸீராக இருந்த இமாத்-உல்-முல்க் இரண்டாம் ஆலம்கீர் மற்றும் அவர் குடும்பத்தினரை கொன்று (மூத்த மகன் இரண்டாம் ஷா ஆலம் தப்பியது தனிக்கதை) இவரை சிறையில் இருந்து விடுவித்து 16வது மொகலாய அரசர் ஆக்கினார். மூன்றாம் பானிபட் போரான நடந்த யுத்தத்தில் ஆப்கானிய அஹ்மத் ஷா அப்தாலிக்கு எதிராக டெல்லியின் சார்பாக மராத்திய படைகள் பஞ்சாப்பிலும் பின்னர் தானேஷ்வரிலும் தோற்று திரும்பியது. அப்தாலி டெல்லிக்கு நுழைந்தவுடன் இமாத்-உல்-முல்க் தப்பித்து ஓடி ஜாட்டுகளிடம் சரணடைந்தார். சதாசிவராவ் டெல்லியை கைப்பற்றியதும் மூன்றாம் ஷாஜஹான் பதவியிலிருந்து இறக்கப்பட்டு இரண்டாம் ஆலம்கீரின் மகனான இரண்டாம் ஷா ஆலம் (அலி கெளவுர்)ரை அரசரானார்.

மூன்றாம் ஷாஜஹானின் மனைவியர் விவரம்:

1)சதாத் பேகம் என்ற ஒரே மனைவி தான் இவருக்கு.

இவரின் மகன்கள் விவரம்:

a) மிர்ஸா சாதாத் பக்ஃத் பகதூர்

b) மிர்ஸா இக்ரம் பகதூர்

இரண்டாம் ஷா ஆலம் : 

காலம் : (கி.பி.1728-1806)

ஆட்சி : (கி.பி.1760-1788) 

இரண்டாவது முறை : (கி.பி.1788-1806)


17வது மொகலாய மன்னரான இவர் மன்னர் என்ற அளவிலிருந்து மராத்தியர்களுக்கு அடங்கிய சிற்றரசராகவே இருந்தார். இரண்டாம் ஆலம்கீர் - ஜீனத் மஹால்க்கு கி.பி.1728 ஜீன் 25ம் தேதி ஷாஜஹனாபாத்தில் (இன்றைய பழைய டெல்லி) பிறந்தார்.

கி.பி.1760 அக்டோபர் 29 டெல்லியிலிருந்த மராத்திய படைகள் பானிபட்டில் முகாமிட்டது. அப்தாலி நவம்பர் 1ல் அங்கே வந்தார். இருபடைகளுக்கும் அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் மட்டுமே. உணவு பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக போர் ஆரம்பிக்க தாமதமாயிற்று. ஏதும் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற யோசனையிலையே இரண்டு மாதங்கள் கடந்த பிறகு கி.பி.1761 ஜனவரி 14ல் மூன்றாம் பானிபட் போர் நடந்தது. 2 1/2 மாதம் நீடித்த போரில் மராத்தியர்கள் தோல்வியை தழுவியதுடன் சதாசிவராவ் மற்றும் முக்கிய மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டார்கள். மூன்றாம் பானிபட் யுத்தம் ஆப்கானிய அப்தாலிக்கு சாதகமாகவே முடிந்தது. போரை முடித்து டெல்லி திரும்பிய அப்தாலி இரண்டாம் ஷா ஆலமையே மொகலாய அரசராகவும் அவர் மகனான சிறுவன் "மிர்ஸா ஜவான் பக்ஃத்"யே பட்டத்து இளவரசராகவும் அங்கீரித்தார். மூன்றாம் பானிபட் முடிந்ததும் இமாத்-உல்-முல்க் எல்லா பக்கமும் ஆதரவு தேடி கிடைக்காமல் கடைசியில் கி‌பி‌1800ல் பண்டல்காட்டில் மறைந்தார்.

கி.பி.1761 நவம்பரில் சீக்கியர்கள் லாகூர் ஆப்கானிய கவர்னரான குவாஜா அபித் கானை துரத்திவிட்டு லாகூரை கைப்பற்றினார்கள். இதனால் கோபமடைந்து கி.பி.1762 பிப்ரவரியில் அப்தாலி 6வது முறையாக இந்தியா மீது படையெடுத்து மேலர்கோட்லாவில் நடந்த போரில் சீக்கியர்களை கொன்று குவித்து திரும்பும் வழியில் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைந்து பொற்கோவிலை சேதப்படுத்தி விட்டு சென்றார்.

கி.பி.1764-65ல் "சீக்கியர்களுக்கு எதிரான ஜிகாத்" என்று அறிவித்து 7வது முறையாக இந்தியா மீது படையெடுத்து வந்த அப்தாலி சிர்ஹிந்த்க்கு அருகில் சீக்கியர்களிடம் தோற்று திரும்பினார். சீக்கியர்கள் லாகூரை பலப்படுத்தினார்கள்.

கி.பி.1766 டிசம்பரில் டெல்லியின் ஆப்கானிய பிரதிநிதியான நஜிப்-உத்-தெளலா சீக்கியர்களின் தொல்லை தாங்காமல் அப்தாலியை அழைக்க 8வது முறையாக இந்தியா மீது படையெடுத்து வந்த அப்தாலியை சீக்கியர்கள் முழுவதுமாக தோற்கடித்தனர். பஞ்சாப்பை முழுவதும் சீக்கியர்களிடம் அப்தாலி இழந்தார்.

கி.பி.1768 டிசம்பரில் 9வது முறையாகவும் கி.பி.1769 டிசம்பரில் 10வது முறையாகவும் படையெடுத்து வந்த அப்தாலியால் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திரும்பினார்.

கி.பி.1756ல் வங்காளத்தின் நவாப்பாக இருந்த அலிவர்தி கான் மறைந்ததை அடுத்து அவரது பேரன் சிராஜ்-உத்-தெளலா பதவிக்கு வந்தார். இவரது பெரியம்மா தன் மகனை நவாப்பாக ஆக்க பிரிட்டிஷாரின் உதவியை நாடினார். சிராஜ்க்கு பிரெஞ்சுக்காரர்கள் உதவியிருந்தது. கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டு பிரிட்டிஷ் ஆண் பெண்களை ஓரே அறையில் அடைத்து வைத்திருந்ததில் 146 பேரில் 23 பேர் மட்டுமே அடுத்தநாள் காலையில் உயிரோடு இருந்தார்கள். Black Hole என்றழைக்கப்பட்ட இந்நிகழ்வினால் ராபர்ட் கிளைவ் சென்னையிலிருந்து படையெடுத்து வந்து சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடித்து கொன்றார். இந்த போரில் கிளைவ் மீர்ஜாபார் முதலிய தளபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து தன் பக்கம் இழுத்தார். இந்த பிளாசி போரின் முடிவில் (கி.பி.1757 ஜுன் 23) பிரிட்டிஷார் வென்று மீர்ஜாபரை புதிய நவாப்பாக நியமித்தனர். 

கி.பி.1759ல் இளவரசாக இருந்த இரண்டாம் ஷா ஆலம் (கி.பி.1760ல் தான் அரசராக ஆனார்) பிரிட்டிஷாரிடம் இருந்து பீகாரை கைப்பற்ற முயன்றதை மீர்ஜாபர் உதவியுடன் கிளைவ் முறியடித்தார். பின்னர் டச்சுகாரர்களுடன் மீர்ஜாபார் நெருக்கமாக இருக்க அவரை தூக்கியெறிந்து விட்டு அவரின் மருமகனான மிர்காஸிம் அலிகானை புதிய நவாப்பாக நியமித்தனர். இவர் சுதந்திரமாக செயல்பட கம்பெனியர் எதிர்க்க மிர்காஸிம் அலிகான் அவுத்(அயோத்தி)ல் அடைக்கலம் புகுந்தார். மிர்காஸிம், அவுத்தின் நவாப் சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் இணைந்து கி.பி.1764ல் அக்டோபர் நவம்பர் மாதவாக்கில் பீஹாரில் கங்கை நதிக்கரையோரம் பக்ஸார் என்னுமிடத்தில் மோதின. மாலையிலையே பிரிட்டிஷ்ஷார் வென்று அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போருக்கு பின்னர் இரண்டாம் ஷா கம்பெனியின் மாதம் 41/2 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுபவராக மாறினார். வங்காளம்,பீஹார்,ஓரிஸ்ஸாவின் வரிவசூல் உரிமையை கிழக்கிந்திய கம்பெனியினர் பெற்றனர்.பக்ஸார் யுத்தம் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி நிலைபெற உதவியது. டெல்லியில் நுழைய முடியாமல் இருந்த இரண்டாம் ஷா ஆலம்மை மராத்தியர்கள் அழைத்து வந்து கி.பி.1772ல் டெல்லி செங்கோட்டையில் முடிசூட்டினார்கள். மராத்தியர்கள் ஆதரவுடன் இரண்டாம் ஷா ஆலம்மின் மொகலாய ஆட்சி தொடர்ந்தது.

கி.பி.1778ல் நஜிப்-உத்-தெளலாவின் மகனான ஸபிதா கான் சீக்கியர்களுடன் இணைந்து டெல்லிக்கு வந்து கொள்ளையடித்து சென்றார். கி.பி.1779ல் ஸபிதாகான்-சீக்கியர்கள் கூட்டுப்படையை மொகலாய தளபதி நஜஃப்கான் தோற்கடித்தார். கி.பி.1788ல் இரண்டாம் ஷா ஆலம்மின் காவலுக்கு பொறுப்பில் இருந்த மராத்திய தளபதி மஹாத்ஜி சிந்தியா டெல்லியில் இல்லாத நேரத்தில் ஸபிதா கானின் மகனான குலாம் காதிர் டெல்லி செங்கோட்டையை கைப்பற்றி இரண்டாம் ஷா ஆலத்தின் கண்களை குருடாக்கி இளவரசர் இரண்டாம் அக்பர் ஷாவை அலங்கோல நடனம் ஆட வைத்தது மட்டுமின்றி அரண்மனை பெண்களையெல்லாம் நிர்வாண நடனம் ஆட வைத்து ரசித்தார். இதனால் மனமுடைந்த பெண்கள் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இரண்டாம் ஷா ஆலத்திற்கு பதிலாக முன்னாள் பேரரசர் அகமது ஷாவின் மகனான நான்காம் ஜஹான் ஷாவை அரசராக்க மராத்திய படைகளுடன் மஹாத்ஜி சிந்தியா விரைந்து வந்து இரண்டாம் ஷா ஆலம்மை மீட்டார். பதுங்கியிருந்த குலாம் காதிர் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். நான்காம் ஜஹான் ஷா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். மராத்தியர்களின் பாதுகாப்புடன் இரண்டாம் ஷா ஆலம் குருடராக ஆட்சியை தொடர்ந்தார்.மஹாத்ஜி சிந்தியா மறைவுக்கு பின்னர் மராத்தியர்களுக்குள் அரியணை சண்டை நடக்க ஒருவர் பிரிட்டிஷார் உதவியை நாட கி.பி.1803 ல் குவாலியர் மஹாராஜா தெளலத் ராவ் சிந்தியாவை தோற்கடிக்கவே அதுவரை மராத்தியர்களின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டாம் ஷா ஆலம் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஆண்டுக்கு 12 லட்சம் ஓய்வூதியம் பெற்றார். கி.பி.1806 நவம்பர் 19ல் இரண்டாம் ஷா ஆலம் மறையவே பிரிட்டிஷார் அவரது இரண்டாவது மகனான (முதல் மகன் கி.பி.1788ல் மரணமடைந்து விட்டார்) இரண்டாம் அக்பர் ஷாவை வாரிசாக அறிவித்து 19வது மொகலாய அரசராக அங்கீகரித்தனர்.

இவரது மனைவிகள் விபரம்:

1) பியாரி பேகம்

2) நவாப் தாஜ்மஹால் பேகம் ஷாஹிபா

3) ஜமில் உன்னிஸ்ஸா பேகம்

4) முபாரக் மஹால்

5) முராத் பக்ஃத் பேகம்

இவருக்கு மொத்தம் 16 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உண்டு.

a) இரண்டாம் அக்பர் ஷா:

இவர் இரண்டாம் ஷா ஆலத்திற்கு பின் அரியணை ஏறிய அவரது இரண்டாவது மகன்.

b) மிர்ஸா ஜவான் பக்ஃத் :

இவர் கி.பி.1749ல் இரண்டாம் ஷா ஆலம் - நவாப் தாஜ்மஹால் பேகம் ஷாஹிபாவுக்கு மகனாக டெல்லி செங்கோட்டையில் பிறந்தவர். இவரே பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டவர். இவர் கி.பி.1788 மே31ல் ரோஹில்லாவின் குலாம் காதிர் படையெடுப்பில் இறந்தவர்.

நான்காம் ஜஹான்ஷா :

காலம் : (கி.பி.1749-1790)

ஆட்சி : (கி.பி.1788-1788) 63 நாட்கள்

அஹ்மத் ஷா பகதூருக்கு மகனாக கி.பி.1749ல் டெல்லி செங்கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை அஹ்மத் ஷா பகதூரை பதவிறக்கம் செய்து சமயத்தில் இவரை கைது செய்து டெல்லி சலீம்கார்க் கோட்டையில் சிறை வைத்தனர். கி.பி.1788 ஆப்கானிய பழங்குடியினரான ரோஹில்லாகளின் (இவர் இன்றைய உத்திரப்பிரதேசத்தில் வடபகுதியை பிடித்து ஆண்டவர்கள்) தளபதியான குலாம் காதிர் இரண்டாம் ஷா ஆலத்தை டெல்லி படையெடுப்பில் வென்று அவரை குருடாக்கி சிறை வைத்த பின்னர் இவரை நான்காம் ஜஹான் ஷா என்ற பெயரில் பொம்மை அரசராக வைத்து ஆள ஆரம்பித்தார்.பின்னர் மராத்திய மஹாத்ஜி ஷிண்டே தலைமையிலான படைகள் குலாம் காதிரை கொன்று ரோஹில்லாக்களை விரட்டி இரண்டாம் ஷா ஆலத்தை மறுபடியும் பதவியில் அமர்த்தினார். இரண்டாம் ஷா இவரை பிடித்து மீண்டும் சலீம் கார்க் சிறையில் வைத்து கி.பி.1790ல் கொன்றார்.

இவரது மனைவியர் விவரம் தெரியவில்லை. இரு மகள்கள் விவரம் மட்டுமே தெரிகிறது

a) நவாப் நஜபத் அப்ஃரூஸ் பானு பேகம் ஷாஹிபா

b) நவாப் முஹம்மதி பேகம் ஷாஹிபா

இரண்டாம் அக்பர் ஷா : 

காலம் : (கி.பி.1760-1837)

ஆட்சி : (கி.பி.1806-1837)

அக்பர் ஷா மிர்ஸா என்ற இயற்பெயருடைய இவர் கி.பி.1760 ஏப்ரல் 22ல் முந்தைய அரசர் இரண்டாம் ஷா ஆலம் - குத்ஃஷியா பேகம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். இவரது தந்தையான இரண்டாம் ஷா ஆலம்க்கு கி.பி.1806 நவம்பர் 19ல் மொகலாய பேரரசின் 19வது அரசராக பதவியேற்றார். பேரரசு என்பது பெயருக்கு தான் அவரது அதிகாரம் எல்லாம் டெல்லிக்குள் மட்டுமே. கி.பி.1788ல் ரோஹில்லாக்களின் குலாம் காதிர் டெல்லியை கைப்பற்றி அப்போது அரசராக இருந்த இவரது தந்தையான இரண்டாம் ஷா ஆலம்மின் கண்களை குருடாக்கினார். நான்காம் ஜஹான் ஷாவை அரசராக்கினார். இளவரசனாக இருந்த இரண்டாம் அக்பர் ஷாவை அலங்கோலமாக நடனம் ஆட வைத்தார். அரச குல பெண்கள் இளவரசிகள் மற்ற இளவரசர் மனைவிகளையும் அதே போல்  கேவலமாக நடனம் ஆடவைத்து இந்த இரண்டு மாத காலத்தில் ரொம்ப கொடுமைப்படுத்தினான். குலாம் காதிரின் தொல்லை தாங்கமுடியாமல் அரச குல பெண்கள் யமுனையில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்கள். பின்னர் மராத்தியரான மஹாத்ஜி ஷிண்டே படையெடுத்து வந்து ரோஹில்லாக்களை விரட்டி குலாம் காதிரை கொன்று இரண்டாம் ஷா ஆலத்தை மீண்டும் மன்னராக்கினார்.  இவரின் தந்தையின் மறைவு சமயத்தில் வெளியே ஒட்டு மொத்த இந்தியாவுமே பெரும்பான்மையாக இந்தியாவின் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னருக்கும் மாதந்திர பென்ஷன் தொகையிலையே அவரின் ராஜ்ய பரிபாலனை அரண்மனைக்குள் நடந்தது. இவரது ஆட்சிகாலத்தில் ராஜா ராம் மோகன் ராய்யை ராஜா பட்டம் கொடுத்து பிரிட்டனுக்கு தூதுவராக அனுப்பினார். அங்கு சென்று சதி ஒழிப்புக்கு சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பேசினார். ஒரு இவரது ஆட்சியில் "Phool Walon ki Sair" என்ற பண்டிக்கை இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்டது. இவருக்கு பிறகு அடுத்த மொகலாய மன்னர் தன் பெயரில் நாணயங்களை வெளியிட கிழக்கிந்திய கம்பெனி அனுமதிக்கவில்லை. அவர்கள் இவருக்கு கி.பி.1835ல் நாணயங்கள் வெளியிட தடை விதித்து இங்கிலாந்து மன்னர்  ஜார்ஜ் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.

இவரது மனைவியர் விவரம்:

1) லால் பாய்

2) ஷீல்லா உன்னிஸ்ஸா :

மிர்ஸா ஜஹான் ஷாவின் தாய்.

3) குமானி காணும் :

இவர் மிர்ஸா நஸீம்ஷாவின் தாய்.

4) மும்தாஜ் மஹால் :

இவர் மிர்ஸா ஜஹாங்கீரின் தாய்

இவருக்கு மொத்தம் 14 மகன்கள் மற்றும் 8 மகள்கள்

a) மிர்ஸா ஃபெரூஸ் பக்ஃத் :

இவரே மூத்த மகன் இவர்.

b) இரண்டாம் பகதூர்ஷா :

இரண்டாம் அக்பர் ஷாவின் இரண்டாவது மகன் இவர். அவருக்கு பின்னர் இவரே ஆட்சிக்கு வந்தார். 20வது மற்றும் கடைசி மொகலாய அரசர் இவரே.

c) மிர்ஸா புலந்த் பக்ஃத் :

d) மிர்ஸா ஜஹாங்கீர் :

இரண்டாம் அக்பர் ஷா- மும்தாஜ் மஹால் ஆகியோருக்கு கி.பி.1776ல் டெல்லி செங்கோட்டையில் பிறந்தார். நீண்ட தலைமுடியை கொண்டவர் இவர். மொடாக்குடியர். இவரது சகோதரரான இரண்டாம் பகதூர் ஷா வால் இரண்டு முறை விஷமிட்டு கொல்ல முயன்றதிலிருந்து தப்பித்தவர். கி.பி.1821 ஜீலை 18ல் இறந்தார். இறந்த காரணம் தெரியவில்லை.

e) மிர்ஸா ஜஹான் ஷா :

கி.பி. 1779ல் இரண்டாம் அக்பர் ஷாவுக்கும் ஷீல்லா உன்னிஸ்ஸா பேகத்திற்கும் டெல்லி செங்கோட்டையில் பிறந்தார். இவர் தந்தையின் காலத்தில் அஸ்ஸாம் பகுதிகளை ஆண்டவர். இவரின் காலத்திலையே அஸ்ஸாமில் மொகலாயர் ஆட்சி முடிந்தது. கிழக்கிந்திய கம்பெனியரால் அஸ்ஸாமில் வீட்டு சிறையிலையே வைக்கப்பட்ட இவர் கி.பி.1846ல் மறைந்தார். இவருக்கு மொத்தம் ஆறு மனைவிகளும் 5 மகன்களும் 5 மகள்களும் உண்டு.

f) மிர்ஸா நலி :

இவர் கி.பி.1784ல் பிறந்தார். பகதூர் ஷாவுக்கு முன்பு மசூடம் சூட்டிய இளவரசனாக இருந்தார். இவர் தனது 75 வயதில் கி.பி.1860ல் இறந்தார். இவரது வாரிசுகள் இன்றும் அலகாபாத் மற்றும் பங்களாதேஷ்ஷில் வாழ்கின்றனர்.

g) மிர்ஸா பாபர் :

மிர்ஸா முஹம்மத் பாபர் பகதூர் என்றழைக்கப்பட்ட இவர் கி.பி.1796ல் பிறந்தவர். கி.பி.1835 பிப்ரவரி 13ல் இறந்தார்.

h) மிர்ஸா சலீம் :

இவர் இரண்டாம் அக்பர் ஷாவுக்கும் மும்தாஜ் உன்னிஸ்ஸா பேகத்திற்கும் மகனாக கி.பி.1799ல் டெல்லி செங்கோட்டையில் பிறந்தவர். இவர் தனது மூத்த அண்ணனான இரண்டாம் பகதூர் ஷாவுக்கு ஆதரவாக இருந்தவர். கி.பி.1836 செப்டம்பர் 8ல் இவர் மறைந்தார். இவருக்கு இரு மனைவிகள் இருந்தனர். அவர்கள் மூலம் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.

i) மிர்ஸா நஸீம்ஷா :

இவர் கி.பி.1820ல் இரண்டாம் அக்பர் ஷாவுக்கும் குமானி காணும் பேகத்திற்கும் மகனாக பிறந்தவர். கி.பி.1857ல் சிப்பாய்புரட்சி தோல்விக்கு பின்னர் இரண்டாம் பகதூர் ஷாவுடன் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்ட இவர் கி.பி.1902 ஆகஸ்ட் 30ல் ரங்கூன் சிறையிலையே மரணமடைந்தார்.

j) மிர்ஸா ஜஹான் குஸ்ரூ :

இவர் இரண்டாம் அக்பர் ஷாவுக்கு பிறந்த மகன். கி.பி.1857ல் சிப்பாய் புரட்சி தோல்வியுறும் தருணத்தில் தனது மகனான ஆலம் குஷ்ரூ பகதூருடன் டெல்லியில் இருந்து தப்பித்து பாகிஸ்தானிலுள்ள சாக்வால் என்னுமிடத்திற்கு தப்பித்து ஓடிவிட்டார். இன்றும் இவரது வம்சாவளியினர் பாகிஸ்தானில் வறுமை நிலையிலையே வாழ்கின்றனர்.

இரண்டாம் பகதூர் ஷா : 

காலம் : (கி.பி.1775-1862)

ஆட்சி : (கி.பி.1837-1857)

பகதூர் ஷா ஸாஃபர் என்ற இயற்பெருடைய இவர் இரண்டாம் அக்பர் ஷா - லீலா பானு பேகம் ஆகியோருக்கு மகனாக ஷாஜஹனாபாத் (இன்றைய பழைய டெல்லி) யில் கி.பி.1775 அக்டோபர் 24ல் பிறந்தார். தந்தையின் இரண்டாவது மகனான இவர் தந்தைக்கு பிறகு மொகலாய பேரரசின் 20வது மற்றும் கடைசி அரசராக அரியணை ஏறினார். பழைய டெல்லி மட்டுமே இவரின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இவருக்கும் கிழக்கிந்திய கம்பெனி சார்பாக  மாதாந்திர பென்ஷன் வழங்கப்பட்டது. அரண்மனையில் பாதுகாப்புக்காக படையை வைத்துக்கொண்டது தவிர வேறு எந்த வேலையும் இல்லை. இதனால் கலைகளின் பக்கம் தன் நாட்டத்தை திருப்பினார். மிர்ஸா காலிப் என்ற உருது கவிஞரிடம் கவிதை எழுத கற்று கொண்டார். இவர் ஸாஃபர் என்ற புனைபெயரில் உருது கவிதைகள் எழுதினார்.சூஃபிக்களோடு தத்துவங்கள் பேசி பொழுதை போக்கினார். ஓவியம் வரைவதிலும் சித்திர எழுத்துக்கள் (காலிகிராபி) வரைவதிலும் தேர்ந்தவர். இந்துக்களின் தசரா மற்றும் ஹோலி பண்டிக்கைகளையும் கொண்டாடினார். அதனுடன் ஏகப்பட்ட திருமணங்கள் செய்தும் ஏகப்பட்ட குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார். சிப்பாய் கலகத்தின் போது இவரை இந்தியாவின் அரசராக அறிவித்து நடந்த கலகத்தில் விளைவாக இவர் கி.பி.1858 மார்ச்  29ல் டெல்லியிலுள்ள ஹீமாயூன் கல்லறையில் குடும்பத்துடன் ஒளிந்திருந்த இரண்டாம் பகதூர் ஷா கைது செய்யப்பட்டு இன்றைய மியான்மரிலுள்ள (அன்றைய பர்மா) ரங்கூன் சிறைக்கு அனுப்பப்பட்டார். இங்கே சிறையில் வைத்திருந்தால் அவரின் காரணமாக மீண்டும் புரட்சி வெடிக்கலாம் என்ற காரணத்தால் அவரையும் அவர் மகன்களில் இளையவர்களையும் ரங்கூன் சிறைக்கு அனுப்பினர். மற்ற மகன்களை பிடித்தவுடன் சுட்டு கொன்றனர். இரண்டாம் பகதூர் ஷா ரங்கூன் சிறையிலையே கி.பி.1862 நவம்பர் 7ல் மரணமடைந்தார். இவருக்கு மட்டுமே உள்ள சிறப்பு என்னவென்றால் கேமராவால் புகைப்படம் எடுக்கப்பட்ட ஒரே மொகலாய அரசர் என்பதே.

இவரது மனைவியர்கள் விவரம் :

1) அஷ்ரஃப் மஹால் :

2) அக்தர் மஹால் :

3) ஜுனத் மஹால் :

இவர் மிர்ஸா ஜவான் பக்ஃத் ன் தாயார். இரண்டாம் பகதூர் ஷாவின் மூத்த மகன் மிர்ஸா தாரா பக்ஃத் மரணத்தில் இவருக்கும் பங்குண்டு.

4) தாஜ் மஹால் :

5) ரஹீம் பக்ஃஷ் பாய் பேகம்:

இவர் மிர்ஸா பக்ரூ மற்றும் மிர்ஸா கிஸிர் சுல்தானின் தாயார்.

6) ஷஃரீப் உல்-மஹால் சைய்யிதினி:

இவர் மிர்ஸா மொகலின் தாயார்.

7) முபாரக் உன்னிஸ்ஸா காணும் பேகம் :

இவர் கடைசி மகன் மிர்ஸா ஷா அப்பாஸ்ஸின் தாய்.

8) ரஜுன் கவாஸ் :

இவர் மிர்ஸா அபுபககரின் தாய்

இவருக்கு மொத்தம் 23 குழந்தைகள் :

a) மிர்ஸா தாரா பக்ஃத் :

இவரே இரண்டாம் பகதூர் ஷாவின் மூத்த மகன். பட்டத்து இளவரசனாக கி.பி.1837-1849வரை இருந்தவர். கி.பி.1790ல் டெல்லி செங்கோட்டையில் பிறந்த இவர் மறைந்தது கி.பி.1849 பிப்ரவரி 8ல். பதவி அதிகார போட்டியில் இவரது சகோதரர்களான மிர்ஸா பதுல்-முல்க் பகதூர் மற்றும் மிர்ஸா ஜவான் பக்ஃத் ஆகியோரால் கொல்லப்பட்டார். 

b) மிர்ஸா மொகல் :

இவர் கி.பி.1817ல் இரண்டாம் பகதூர்ஷா-ஷஃரீப் உல்-மஹால் சைய்யிதினிக்கு மகனாக டெல்லி செங்கோட்டையில் பிறந்தார். சிப்பாய் புரட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட இவர் போராட்டம் தோல்வியில் முடிந்ததை அடுத்து கி.பி.1857 செப்டம்பர் 23ல் பழைய டெல்லி கோட்டை வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனால் அந்த வாசல் " Khooni Darwaza" (கொலை வாசல் or இரத்த வாசல்) என்ற பெயரில் பின்னாட்களில் அழைக்கப்படுகிறது.

c) மிர்ஸா பதுல்-முல்க் பகதூர் :

மிர்ஸா பக்ரூ என்றழைக்கப்பட்ட இவர் கி.பி.1816ல் இரண்டாம் பகதூர்ஷா-ரஹீம் பக்ஃஷ் பாய் பேகத்திற்கு மகனாக டெல்லி செங்கோட்டையில் பிறந்தவர். இவரே கடைசி பட்டத்து இளவரசனாக இருந்தவர். கி.பி.1856 ஜீலை 10ல் இவர் காலரா நோயால் மறைந்தார்.

d) மிர்ஸா கிஸிர் சுல்தான் :

கி.பி. 1834ல் இரண்டாம் பகதூர்ஷா-ரஹீம் பக்ஃஷ் பாய்க்கு மகனாக டெல்லி செங்கோட்டையில் பிறந்தவர்.  கி.பி.1857ல் நடந்த சிப்பாய் புரட்சியில் இவரும் முக்கிய பங்கு வகித்ததால் புரட்சி தோல்வி அடைந்தவுடன் தனது சகோதரர்களுடன் டெல்லி கோட்டை வாசலில் செப்டம்பர் 21ல் இவரும் சுட்டு கொல்லப்பட்டார்.

e) மிர்ஸா ஜவான் பக்ஃத் :

இவர் கி.பி.1841ல் இரண்டாம் பகதூர்ஷா-ஜீனத் மஹால்க்கு மகனாக டெல்லி செங்கோட்டையில் பிறந்தார். இவருக்கு ஆதரவாக இவரது தாய் மூத்த மகனை விஷமிட்டு கொன்றார். கி.பி.1857ல் சிப்பாய் புரட்சி தோல்வியில் முடிந்தவுடன் இரண்டாம் பகதூர் ஷாவை பர்மாவின் (இன்றைய பெயர் மியான்மர்) ரங்கூன் சிறைக்கு அவருடன் இவரும் இளைய சகோதரர் மிர்ஸா ஷா அப்பாஸ் தீம் கொண்டு செல்லப்பட்டார்கள். இவர் கி.பி.1884 செப்டம்பர் 18ல் ரங்கூன் சிறையிலையே மரணமடைந்தார்

f) மிர்ஸா ஷா அப்பாஸ் :

கி.பி.1845ல் இரண்டாம் பகதூர்ஷா-முபாரக் உன்னிஸ்ஸா காணும் பேகத்திற்கு மகனாக டெல்லி செங்கோட்டையில் பிறந்தவர். இவரும் தந்தை மற்றும் சகோதரர் மிர்ஸா ஜவான் பக்ஃத் ஆகியோருடன் ரங்கூன் சிறைக்கு கி.பி.1857ல் அனுப்பப்பட்டார். ரங்கூன் சிறையிலையே 53 வருடங்கள் இருந்து தனது 65 வயதில் கி.பி.1910 டிசம்பர் 25ல் மரணமடைந்தார்.

g) மிர்ஸா அபுபக்கர் :

கி.பி.1837ல் இரண்டாம் பகதூர்ஷா-ரஜூன் கவாஸ்க்கு டெல்லி செங்கோட்டையில் மகனாக பிறந்தவர். கி.பி.1857 அக்டோபர் 13ல் இவரும் புரட்சி தோல்வியில் முடிந்த பிறகு கொல்லப்பட்டார்.

மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணங்கள்:

சகோதர மற்றும் குடும்ப சண்டைகளை முதல் காரணமாக சொல்லலாம். ஏனெனில் அது பாபருக்கும் இருந்தது. ஹீமாயூன் தம்பிக்களை அரவணைத்து சென்றாலும் அவர்கள் சுயநலம் மிக்கவர்களாக தங்களை மட்டும் காத்து கொள்பவர்களாக இருந்தனர். அக்பர் காலம் முதல் தந்தைக்கு எதிராக மகனே கொடி பிடிப்பது தொடங்கியது. அந்த நேரத்தில் அக்பருக்கு ஜஹாங்கீரை தவிர வேறு மகன்கள் உருப்படி இல்லாததால் அவரை நாலு அடிகளோடு தண்டித்து மன்னித்து விட்டார். ஷாஜஹானும் தந்தைக்கு எதிராக இதே மாதிரி முயற்சிக்க நல்லவேளை அவரையும் ஜஹாங்கீர் மன்னித்தார். ஷாஜஹான் அரியணை ஏற சகோதரர்கள் அனைவரையும் ஒழித்து அரியணை ஏறினார். ஷாஜஹானுக்கு எதிராக அவரது மகனான ஓளரங்கசீப் புரட்சி செய்து அவரை அரியணையிலிருந்து அகற்றி வீட்டுசிறையில் வைத்தார். இதெல்லாம் விட உச்சம் என்னவென்றால் அரியணை ஏறுவதற்கு முன்பே ஓளரங்கசீப் தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் 32 பேரை கொன்றே அரியணை ஏறினார். தன் ஆட்சிக்கு எதிராக புரட்சி பண்ணிய மூத்தமகன் முஹம்மதுவை சிறையில் அடைத்து கொன்றான். இளைய மகன் முகமது அக்பர் புரட்சி பண்ண அவனை விரட்டியடித்தார். மற்ற மகன்களான அஸம்ஷா மற்றும் முவாஸ்ஸம் (முதலாம் பகதூர் ஷா) ஆகியோரையும் நம்பாமல் பலமுறை சிறையில் அடைத்திருக்கிறார். தான் தந்தை ஷாஜஹானை சிறையில் அடைத்தது போல தன்னையும் தன் மகன்கள் செய்திருவார்களோ என்ற பயத்தில் தன் மகன்களை தன்னுடைய அறைக்குள் வர அனுமதிப்பதில்லை. அந்தளவுக்கு பயந்து பயந்து ஆட்சியை நடத்தினார். ஓளரங்கசீப்புக்கு பின்னர் அவரின் மகனான அஸம்ஷாவை போரில் கொன்று இன்னொரு மகனான முதலாம் பகதூர் ஷா ஆட்சியை பிடித்தார். அதன் பிறகு ஜகந்தர்ஷா தனது சகோதரர்களை கொன்று குவித்து ஆட்சியை பிடித்தார். அவரை அவரின் சகோதரர் மகனான ஃப்ரூக்ஸியார் போரில் கொன்று ஆட்சியை பிடித்தார். அதன் பிறகும் சகோதரர்கள் மற்றும் அவருடைய குழந்தைகளை சிறையில் அடைத்து வைத்தே ஒவ்வொருவரும் ஆட்சியை பிடித்தனர். ஒவ்வொருவரின் கண்களிலும் போராசை பதவியாசை.

சுபபோகம் என்பதை அடுத்த காரணமாக கூறலாம். பாபர் இப்ராஹிம் லோடியை வென்று டெல்லியை கைப்பற்றி தனது ஊரான காபூல் மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் வெள்ளிக்காசுகளை பரிசளித்தார். அக்பரின் காலத்தில் மொகலாய கஜானாவின் மதிப்பு இன்றைய மதிப்பில் பல இலட்சம் கோடியை தொட்டது. இந்த பணத்தையெல்லாம் என்ன செய்வது. அதனால் சுபபோகங்களில் இறங்கினர். நினைத்த இடத்தில் எல்லாம் மாளிகைகள் மற்றும் மசூதிகள் கல்லறைகளை மிகப் பிரமாண்டமாக கட்டினார்கள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு அரசரும் ஏன் இளவரசனும் பல மனைவிகள் கணக்கில் அடங்காத அளவுக்கு ஆசைநாயகிகள் அதை விட ஒவ்வொருவருக்கும் பல மகன், மகள்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் அரியணை மீது ஆசை. ஏனெனில் அதன் சுகம் அதன் செல்வம். அதனால் ஒருவரையொருவர் விஷமிட்டோ அல்லது சதிகளின் வழியே கொல்வதோ சிறை வைப்பதோ வழக்கமாயிற்று. அவர்களுக்கு சுயநலம் என்ற ஒன்றே தவிர வேறு எதுவும் இல்லை. சொந்த சகோதரர்களை தந்தையை வீழ்த்த எதிரிகளுடன் கூட்டு சேர்ந்தது கூட காரணம்.

மத துவேஷம் என்பது இன்னொரு காரணம். பாபர் ஆட்சியிலும் கோயில்கள் இடிக்கப்பட்டு இருந்தாலும் அவரின் சுயசரிதையில் ஹீமாயூனுக்கு அனைத்து மதத்தினரிடத்தும் ஒரே மாதிரி நடந்து கொள் என்று அறிவுறுத்தியதும் இருந்தது. இந்த விஷயத்தில் அக்பர் தான் கிரேட். பரந்துபட்ட அனைத்து மத மக்கள் நிறைந்த இந்தியாவை ஆள வேண்டுமானால் மத சகிப்பு தன்மை வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அன்பால் அனைவரையும் வளைத்தவர். ராஜபுத்ரர்களுடன் மணவினை தொடர்பு கொண்டும் நட்புறவு கொண்டும் ஆண்டார். ஓளரங்கசீப் மத துவேஷம் இல்லாவிட்டாலும் மற்ற மததலைவர்களை மதம் மாற்றும் செய்யும் வேலைகளில் இறங்கினார். ஜஹாங்கீர் காலத்தில் சீக்கிய குரு அர்ஜீன்தேவ் படுகொலையும், ஓளரங்கசீப் காலத்தில் குரு தேஜ் பகதூர் படுகொலையும் பகதூர் ஷா காலத்தில் குரு கோபிந்த் சிங் படுகொலையும் ஃபரூக்ஸியார் காலத்தில் பண்டாபகதூர் கொலையும் மத நல்லிணக்கத்துக்கு வேட்டு வைத்தது. அது மட்டுமல்ல சிவாஜியை முதற்கொண்டு மதம் மாற்ற முயன்றது. அவரின் மகன் சாம்பாஜியை மதம் மாறினால் விட்டுவிடுவதாகவும் மிரட்டியது மத நல்லிணக்கத்தை விட நம் மதத்தின் மீது வெறி கொண்டிருந்தது தான் காரணம்.

எதிரிகளிடமே தனது சுயநலத்திற்காக அடங்கி போய் இருந்ததும் கூட காரணம். அஹ்மத் ஷா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆப்கானியரிடத்திலும் பின்னர் இரண்டாம் ஷா ஆலம் ஆங்கிலேயர் மற்றும் மராத்தியர்களிடமும் பதவியை தக்கவைக்க அடிமை சேவகம் செய்தனர். பலவீனமுற்ற இருந்த இரண்டாம் அக்பர் ஷா மற்றும் இரண்டாம் பகதூர் ஷாவின் நிலை ரொம்ப மோசம். ஆட்சியே கைவிட்டு போயிருந்தது அந்த நேரங்களில். இப்படியாக 331 வருடங்களாக ஆண்ட மொகலாய பேரரசு வீழ்ந்தது.

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு