77) மராத்திய பேரரசு

மராத்தியர்கள் அரசு (கி.பி.1674-1818) :


மராத்தியர்கள் மொகலாயப் பேரரசுக்கு தொல்லையாகவே இருந்து வந்துள்ளனர். மராத்தியர்களின் அரசை சிவாஜி மகாராஜ் கி.பி.1674ல் பூனேவில் பதவியேற்று துவக்கி வைத்தார். "மலை எலி" என்று மொகலாயர்களால் அழைக்கப்பட்ட சிவாஜி மொகலாயர்கள் வசமிருந்த தக்காண பகுதிகளிலுள்ள கோட்டைகளை பிடித்து அவர்களுக்கு எதிராக இந்து சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தார். ஆனாலும் இவரது படைத்தளபதிகளில் 13 முஸ்லீம் இருந்தனர். இவரது படையில் முஸ்லீம்களின் 10000 வீரர்கள் படைப்பிரிவும் இருந்தது என்பதும் சிவாஜியை பிடிக்க ஓளரங்கசீப் அனுப்பியது ஜெய்சிங் என்ற இந்து இராஜபுத்ர மன்னர் என்பதிலிருந்து மத வேறுபாடு காரணமில்லை என்பதும் மொகலாயர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர அரசை தோற்றுவிப்பதே நோக்கமாக இருந்தததும் தெரிய வருகிறது. அதே நேரத்தில் சிவாஜி ஆக்ராவில் சிறைப்பட்ட சமயத்தில் அவரை மதம் மாறினால் ஏற்றுக்கொள்வதாக ஓளரங்கசீப் சொன்னதும் சிவாஜியின் மகன் சாம்பாஜியை முஹாரப் கானால் சங்கமேஸ்வரில் சிறைப்பட்ட போதும் மதம் மாற்ற முயற்சித்ததால் ஓளரங்கசீப்பை கேவலமாக திட்டியதாலும் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த இடத்தில் ஓளரங்கசீப்பை மத வெறியர் என்று சொன்னாலும் அவரை இராஜ்யவெறியர் என்று தான் சொல்லவேண்டும் ஏனெனில் தன்னை கவிழ்க்க முயன்ற ஒரு மகனை கொன்றும் இன்னொரு மகனை விரட்ட அவர் ஈரானில் தஞ்சமடைந்ததும் நடந்தது. தண்டிப்பதில் இந்து முஸ்லீம் என்ற வேறுபாடே இல்லாமல் தண்டித்திருக்கிறார். சிவாஜியின் படையில் இருந்த முஸ்லீம் தளபதிகளின் விவரம் வருமாறு:

1) சித்தி ஹிலால் : (இவர் கேலோஜி போனஸ்லேவின் வளர்ப்பு மகன். பிறப்பில் முஸ்ஸீம்மாக அடிமையாக வாங்கியவர். அந்த காலத்தில் மதமாற்றம் இந்துக்களில் ஏற்கபடவில்லை என்பதால் இவரை முஸ்ஸீமாக கருத முடியாது)

2) தெளலத் கான் : (இவர் கடற்படையில் பணிபுரிந்தார்)

3) இப்ராஹீம் கான்

4) காஸி ஹைதர்

5) சித்தி இப்ராஹீம் : (இவர் தான் அப்சல்கானை கொல்லும் நிகழ்வில் சிவாஜிக்கு மெய்காப்பாளராக இருந்தார். இவரும் சித்தி ஹிலால் மாதிரி இந்து குடும்பத்தின் வளர்ப்பில் வந்த பிறப்பில் முஸ்லீம்)

6) சித்தி வாஹ்-வாஹ் :

7) நூர்கான் பெக் :

8) சாமா கான் :

9) ஹூசைன் கான் மியானி :

10) சித்தி மிஸ்த்ரி

11) சுல்தான் கான்

12) தாவூத் கான்

13) மாதாரி மெஹிதார்

சத்ரபதி சிவாஜி : (கி.பி.1627-1680)

ஆட்சி : (கி.பி.1674-1680)

கி.பி.1627 பிப்ரவரி 19ல் ஷாகாஜி (என்ற) ஷாஜி ஜுஜாபாய்க்கும் மகனாக அஹ்மத் நகரிலுள்ள சிவ்நேரி கோட்டையில் பிறந்தார். இவரது தந்தையான ஷாஜி பிஜப்பூர் மற்றும் அஹ்மத் நகர் சுல்தான்களிடம் தளபதியாக பணியாற்றியவர். இதனால் சிவாஜியும் கோல்கொண்டா சுல்தான்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான்களிடமும் மொகலாயர்களிடமும் கூட்டணியும் சிலநேரங்களில் எதிர்ப்பும் காட்டி மராத்திய ராணுவத்தை வளர்த்து மராத்திய அரசை தோற்றுவித்தார். சிவாஜியின் தாத்தாவான மாலோஜி (கி.பி.1552-1597) அஹ்மத் நகர் சுல்தானிடம் தளபதியாக பணியாற்றினார். இதனால் இவருக்கு "தேஷ்முகி" உரிமையாக இராணுவ செலவுகளுக்கு  பூனே, சூபே, சாகன் மற்றும் இந்தாபூர்களை பெற்றார். அவரது குடும்பத்தினர் தங்குவதற்கு பூனே மாவட்டத்திலுள்ள ஜூன்னார் அருகிலுள்ள சிவ்நேரி கோட்டையை அஹ்மத் நகர் சுல்தான் வழங்கினார். இந்த கோட்டையில் தான் சத்ரபதி சிவாஜி பின்னாளில் பிறந்தார். சிவாஜியின் தந்தையான ஷாகாஜி போன்ஸ்லே மராத்திய தளபதியாக தக்காண சுல்தான்களிடம் பணியாற்றினார். சிவாஜி பிறந்த நேரத்தில் தக்காணம் பிஜப்பூர், அஹ்மத் நகர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களால் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. இதனால் ஷாகாஜி அஹ்மத் நகர் மற்றும் பிஜப்பூர் மற்றும் மொகலாயர்களிடம் மாற்றி மாற்றி வேலை பார்க்க வேண்டியதாகிற்று. இந்த நேரத்தில் சிவாஜி பூனேவில் தனக்குரிய ஜாகிர்களை வைத்து சிறிய படைகளை தயார் செய்தார். சிவாஜி இளமையில் தன் தாயாரான ஜுஜாபாய்யினால் இராமாயணம் மஹாபாரதம் கதைகள் கூறி வளர்க்கப்பட்டதால் இந்து துறவிகளின் மேலும் இந்து மதத்தின் மேலும் மிகுந்த பிரியமுடையவராக இருந்தார். இந்த நேரத்தில் இவரது தந்தையான ஷாகாஜி மோஹிதே குடும்பத்தை சேர்ந்த துஹா பாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். மொகலாயர்களிடம் சமாதானம் செய்து அவர்களிடம் 6 கோட்டைகளை விட்டுக் கொடுத்தார். இந்த நேரத்தில் அவர் பிஜப்பூர் சுல்தானிடம் பணியில் சேர்ந்தார். சிவாஜியையும் அவர் தாயாரான ஜுஜாபாய்யையும் சிவ்நேரி கோட்டையிலிருந்து பூனேவுக்கு தனது ஜாகிரின் பாதுகாவலராக இருந்த "தாதாஜி கொண்டே தேவ்" என்ற பிராமணரிடம் அனுப்பி அவரின் பாதுகாப்பில் சிவாஜியை கல்வி கற்க ஏற்பாடு செய்தார். இளமையில் சயாத்ரி மலைதொடர்களில் உள்ள காடுகள் மற்றும் மலைகளில் அலைந்து திரிந்தார். இந்த அனுபவமே பின்னாளில் மொகலாயர்களை எதிர்த்து கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டு தனது அரசை ஸ்தாபிக்க உதவியாயிற்று. கி.பி.1639ல் விஜயநகர பேரரசு வீழ்ச்சிக்கு பின்னர் ஷாகாஜி பெங்களூரில் குடிபுகுந்தார். அந்த நேரத்தில் சிவாஜி அவரின் மூத்த அண்ணன் சாம்பாஜி மற்றும் அவரின் இன்னொரு தாயின் வழி சகோதரரான முதலாம் ஏகாஜி ஆகியோர் அங்கே பயிற்றுவிக்கப்ட்டு அங்கே நிர்வாகத்தை கவனிக்க அறிவுறுத்தப்பட்டனர். இந்த நேரத்தில் கி.பி.1640 ல் சாய்பாய் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. சிவாஜிக்கு மொத்தம் 8 மனைவியர் .

1) சாய் பாய் போன்ஸ்லே : (கி.பி.1633-1659)

இவருக்கு சாம்பாஜி என்ற மகனும் சக்குபாய், ரனுபாய் மற்றும் அம்பிகா பாய் என்ற 3 மகள்களும் உண்டு. இவரது மகன் சாம்பாஜி பிரசவத்திற்கு பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதனால் இரண்டு ஆண்டுகள் கழித்து கி.பி.1659 செப்டம்பர் 5ல் ராய்கத் கோட்டையில் மரணமடைந்தார்.

2) சோய்ரா பாய் மோஹிதே : (மறைவு:கி.பி.1681)

இவர் சிவாஜியை கி.பி.1660ல் மணந்தார். இவருக்கு பிறந்த மகனான முதலாம் இராஜாராம்மை சிவாஜிக்கு பிறகு அரியணையில் அமர்த்த முயன்று தோல்வியுற்று சாம்பாஜியை கொல்ல முற்பட்டு பிடிபட்டு தண்டிக்கப்பட்டார்.

3) புத்தலபாய் பால்கர் : (மறைவு: 1680)

இவர் பால்கர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கி.பி.1653ல் சிவாஜியை மணந்தார். இவருக்கு குழந்தையில்லை. சிவாஜி மறைந்தவுடன் அவருடன் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.

4) சாக்வர்பாய் கெய்க்வாட் : (மறைவு:கி.பி.1681)

இவர் நந்தாஜி ராவ் கெய்க்வாட்டின் மகள். சிவாஜியை கி.பி.1656ல் மணந்தார். இவருக்கு கமலா பாய் என்ற மகள் பிறந்தார். சிவாஜி மறைந்தவுடன் பாத்தலாபாய்யுடன் இணைந்து உடன்கட்டை ஏற முயற்சித்தார். இவருக்கு குழந்தை இருந்ததால் உடன்கட்டை ஏற அனுமதிக்கப்படவில்லை.  சிவாஜி மறைந்தவுடன் ராய்கத் கோட்டையை பிடித்த மொகலாயர்கள் எல்லோருடன் இவரையும் ஓளரங்கசீப் சிறையில் அடைக்க இவர் சிறையிலையே மரணமடைந்தார். 

5) சகுனாபாய் ஷிர்கே :

6) காசிபாய் ஜாதவ்:

7) லக்ஷ்மி பாய் விகாரேய்:

8) குன்வந்தபாய் இங்க்ளே:

கி.பி.1645ல் அவருக்கு 15 வயதாக இருக்கும் போது பிஜப்பூர் தளபதி இனாயத் கானிடம் லஞ்சம் கொடுத்து தோர்னா கோட்டையை கைப்பற்ற பிஜப்பூர் அரசர் முஹம்மது அடில்வாவால் அவரின் தந்தை ஷாகாஜி கி.பி.1648ல் கைது செய்யப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு ஷாகாஜி வேலையிலிருந்து விலகவே சிவாஜி  தனது நிலையை உயர்த்திக் கொள்ள நிறைய கோட்டைகளை தாக்கி கொள்ளையடித்து படைபலத்தை பெருக்க ஆரம்பித்தார். கி.பி.1656ல் பிஜப்பூர் அரசின் மராத்திய பொறுப்பாளரான சந்திரா ராவ் மோரே என்பவரை மோதலில் கொன்று இன்றைய மஹாபலேஸ்வர் அருகிலுள்ள ஜவேலி பகுதியை கொள்ளையடித்தார்.

பிஜப்பூர் சுல்தானிடம் இருந்த  கோட்டைகளை கொரில்லா தாக்குதல் நடத்தி கைப்பற்றி பெருந்தொல்லையாக மாறினார். கி.பி.1657ல் பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை பிடிக்க அப்சல்கான் என்ற தளபதியை அனுப்பினார். பிஜப்பூர் படைகள் சிவாஜியின் குடும்பத்தினர் வழிபடும் துல்ஜா பவானி கோயிலையும் பந்தர்பூரிலுள்ள விதோபா கோயிலையும் இழிவுபடுத்தி ராய்கத் கோட்டையை முற்றுகையிட்டனர்.  பிஜப்பூர் படைகளை விரட்டியடிக்க மேலும் படைகளுடன் வர சிவாஜியை சுற்றியுள்ளவர்கள் சரணடைய சொல்ல அந்த நேரத்தில் அப்சல்கான் சிவாஜியை சந்தித்து சமாதான ஒப்பந்தம் செய்யலாம் என்று அழைக்க சூழ்ச்சி நாடகமாடி சிவாஜியை கொல்ல முயன்றவரை புலிநகம் மாதிரியான இரும்பு கையுறையினால் குத்தி கிழித்து கொன்றார். இந்த நிகழ்வை பெரும்பாலானோர் சிவாஜி தான் அப்ஸல்கானை தந்திரமாக வரவழைத்து கொன்றார் என்று குறிப்பிடுகின்றனர். எது எப்படியோ நிகழ்வு உண்மை. இந்த நிகழ்வு கி.பி.1659 நவம்பர் மாதத்தில் நடந்தது. இந்த நிகழ்வு நேரத்திற்கு 2 மாதம் முன்பு தான் சிவாஜியின் முதல் மனைவியான சாய்பாய் போன்ஸ்லே ராய்கத் கோட்டையில் மரணமடைந்தார். பிறகு அந்த ஆண்டு இறுதியில் பிஜப்பூர் சுல்தான் ரூஷ்டம் ஜமான் என்பவர் தலைமையில் பிஜப்பூர் படைகளை அனுப்ப அவரை தோற்கடித்து அனுப்பினார். பின்னர் கி.பி.1660ல் பிஜப்பூர் சுல்தான் சித்தி ஜவ்ஹோர் என்ற தளபதி தலைமையில் பனோலா கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்ற முனைய சிவாஜி அவரிடம் கோட்டையை ஒப்படைத்து விசால்கத்துக்கு சென்று விட்டார். சிவாஜி கி.பி.1663ல் பூனேவில் ஷாயிஸ்டா கான் தங்கியிருந்த சமயத்தில் உள்ளே புகுந்து அவரது மகனை வெட்டிப் போட்டு முகலாயர்களை துரத்தியடித்து அவர்களின் பொருட்களை கொள்ளையடித்து சென்றார். பின்னர் சூரத் துறைமுகத்தை கொள்ளையடித்தார். கொங்கன் பகுதியில் பல கோட்டைகளை கைப்பற்றியிருந்தார்.

கி.பி.1665ல் ஓளரங்கசீப் ஷாயிஸ்டா கான் மற்றும் சூரத் கொள்ளையினால் கோபமடைந்து சிவாஜியை பிடிக்க அம்பரின் முதலாம் ஜெய்சிங்கை அனுப்பினார்.  மொகலாயப் படைகள் சிவாஜியை தோற்கடிக்க இருதரப்பும் "புரந்தர் சமாதானம் ஒப்பந்தம்" செய்துகொள்ளவே சிவாஜி தன் வசமிருந்த 23 கோட்டைகளை மொகலாயர்களிடம் ஒப்படைத்ததுடன் 4 லட்சம் தங்கத்தையும் திறையாக செலுத்தினார். கி.பி.1665ல் சிவாஜி கோரிய மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ஓளரங்கசீப் அவரது மகனான சாம்பாஜியை மொகலாய அவைக்கு அனுப்ப அவரை 5000 குதிரைப்படை கொண்ட படைக்கு மன்சப்தாராக நியமித்தார். சிவாஜியையும் ஆக்ராவிற்கு வரும்படி அழைத்தார். ஆக்ரா சென்ற அவருக்கு கி.பி.1666ல் சரியான வரவேற்பு இல்லாததால் கோபப்பட்ட சிவாஜியை அவையிலுள்ளவர்கள் அவையை அவமதித்ததால் அவரை தண்டிக்க வலியுறுத்தவே சிவாஜியை சிறையில் அடைத்தார் ஓளரங்கசீப். ஓளரங்கசீப்பிடம் தன்னை விடுவித்தால் இந்து சாமியாராக மாறப்போவதாக கூற அவர் முஸ்லீம் துறவியாக மாறி இங்கேயே சமய பணிகளை செய்யலாமே என்று பதிலுரைத்தார். அங்கே இருந்த நேரத்தில் வயிற்றுவலி பிரச்சினை ஏற்பட்டு குணம் அடைந்தார். தனது உடல்நிலை தேறியதால் தினமும் துர்க்கைக்கு பூஜை செய்த பழங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்க ஓளரங்கசீப் அவ்வாறே அனுமதித்தார். தினமும் இந்த நிகழ்வு நடந்ததால் காவலாளிகள் சோதனை செய்யாமல் அனுப்பியதை கவனித்து  சிறையில் பழக்கூடையில் அமர்ந்து சிவாஜியும் அவர் மகன் சாம்பாஜியும் தப்பினார்.  நேரிடையாக சென்றால் பிடித்து விடுவார்கள் என்று மகன் சாம்பாஜியை மதுராவில் உள்ள மராத்திய பேஷ்வா மோரேபந்த் பிங்க்ளேவின் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டு சாமியார் வேடத்தில் ஊர்ஊராக அலைந்து திரிந்து சதாரா வந்து சேர்ந்தார்‌.பின்னர் ஓளரங்கசீப்புக்கு என் உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயத்தில் தான் தப்பினேன் என்று கடிதம் எழுத அவர் சிவாஜியை மன்னித்து கி.பி.1666-68களில் ஓளரங்கசீப் சிவாஜிக்கு ராஜா பட்டம் அளித்தார். மேலும் சாம்பாஜிக்கு 5000 குதிரைகள் சொந்தமாக கொண்ட குதிரைப்படைக்கு மொகலாய மன்சப்தார் பதவியை திரும்ப கொடுத்தார். இதனால் சிவாஜி சாம்பாஜியை தளபதி பிரதாப்ராவ் குஜ்ஜார் உடன் மொகலாய இளவரசர் முவாஸ்ஸம் (முதலாம் பகதூர் ஷா) தலைமையின் கீழ் பணிபுரிய ஓளரங்கபாத்துக்கு அனுப்பினார். சாம்பாஜி பேரர் பிரதேசத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றார். இந்த நேரத்தில் சிவாஜி மற்றும் சாம்பாஜியும் மொகலாயர்களுக்கு ஆதரவாக பிஜப்பூர் சுல்தான்களுக்கு எதிராக போரிட்டனர். 3 ஆண்டுகளுக்கு பின்னர் கி.பி‌.1670ல் ஓளரங்கசீப் முவாஸ்ஸம் (முதலாம் பகதூர் ஷா) சிவாஜியுடன் இணைந்து தன்னை கவிழ்க்க முயற்சிப்பதாக சந்தேகப்பட்டார். அதற்கேற்ப சிவாஜியும் முவாஸ்ஸம்க்கு பரிசுப்பொருட்கள் அடிக்கடி அனுப்பவே அந்த நேரத்தில் ஆப்கானியர்களுடன் ஓளரங்கசீப் போரிட்டதால் முவாஸ்ஸம் தன்னை கவிழ்த்து ஆட்சியை கைப்பறற்றிடுவார் என்ற பயத்தில் தக்காணத்தில் படைகளை குறைக்க அந்த படைவீரர்கள் சிவாஜியின் படையில் சேரவே சிவாஜியின் படைபலம் அதிகமாகிற்று. இந்த நிலையில் பேரர் பிரதேசத்தின் ஜாகீரை சிவாஜிடம் இருந்து பறிக்கவே  மொகலாயர்களுக்கு எதிர்வினை எடுத்து அவர்கள் வசம் இருந்த கோட்டைகளை திரும்ப கைப்பற்றினார். சிங்கார் புரந்தர் கோட்டைகளை கைப்பற்றி மீண்டும் இரண்டாவது முறையாக சூரத்தில் திரும்ப நிரம்ப கொளளையடித்தார். தனக்கு போர் ஆயுதங்கள் வழங்காத ஆங்கிலேயர் தங்கியிருந்த பாம்பேவை தாக்கினார். பின்னர் கி.பி.1673ல்  பிஜப்பூர் வசமிருந்த பன்ஹாலா மற்றும் சத்தாரா கோட்டைகளையும் கைப்பற்றினார். பின்னர் கி.பி.1674 ஜீன் 16ம் தேதி ராய்கரில் சிவாஜி முடிசூட்டிக் கொண்டார். தாயின் உடல்நிலை சரியில்லாததால் அவர் முன்னே முடிசூட்டிக் கொண்டார். முடிசூட்டிய 2வது நாள் அவரது தாயாரான ஜுஜாபாய் கி.பி.1674 ஜூன் 18ல் இறந்தார். பின்னர் நாள் நட்சத்திரம் பார்த்து கி.பி.1674 செப்டம்பர் 24ல் இரண்டாவது முறையாக முடிசூட்டிக் கொண்டார். பின்னர் அந்த ஆண்டு அக்டோபரில் கந்தேஷ் பிரதேசத்தை தாக்கி கொள்ளையடித்தார். கி.பி.1675 ஏப்ரலில் பிஜப்பூரின் போன்டா பின்னர் கார்வார் அதன்பின்னர் ஜீலையில் கோலாப்பூர் பிரதேசங்களை தாக்கினார். கி.பி.1675 நவம்பரில் அபிசீனியா சித்திகளின் ஜான்ஜுரா தீவுக்கோட்டையை தாக்கிய முயற்சி வெற்றி பெறவில்லை. பின்னர் தெற்கு நோக்கியே அரசை விரிவுபடுத்தினார். தக்காண பீடபூமியில் இஸ்ஸாமிய சுல்தான்களின் ஆட்சியை ஒழித்துக்கட்ட கி.பி.1676ல் தென்னிந்தியா மீது படையெடுத்து வந்தார். பிஜப்பூர் ஆப்கானியர்கள் இடையே நடந்த ஒப்பந்ததால் பிஜப்பூரின் அத்தானியை தாக்கி கொள்ளையடித்தார். பின்னர் கி.பி.1677ல் கர்நாடகாவின் மீது படையெடுத்து வந்தார். பிஜப்பூர் சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்த செஞ்சியை கைப்பற்றினார். சித்தூர்,வேலூர் முதலிய பாளையம் படைகளை வீழ்த்தி வேலூர் கோட்டையை கைப்பற்றினார்.  இதற்கிடையில் கி.பி.1678ல் மூத்த மகன் சாம்பாஜியின் தவறான பழக்கங்களால் அவரை பன்ஹாலா கோட்டையிலையே வீட்டுசிறையில் வைக்க அவர் அங்கிருந்து தப்பினார். ஆனால் தக்காண கவர்னர் அவரை சிறைசெய்து ஓளரங்கசீப்பிடம் ஒப்படைக்கும் சதி அவருக்கு தெரிய வந்ததால் பன்ஹாலா கோட்டைக்கு திரும்பினார். கி.பி. 1680ல் ஏப்ரல் 3-5 இடைப்பட்ட நாட்களில் காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கினால் மரணமடைந்தார். அந்த நேரத்தில் ஹனுமன் ஜெயந்தி திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிவாஜியுடன் அவரது மனைவியான புத்தல பாய் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தார். மற்றொரு மனைவியான சக்வர் பாய்யும் உடன்கட்டை ஏற முயற்சிக்க அவருக்கு பெண் குழந்தை இருந்ததால் அவரை மற்றவர்கள் உடன்கட்டை ஏற அனுமதிக்கவில்லை. ஆனால் சிவாஜியின் மனைவியான சோர்யா பாய் அவருக்கு விஷமிட்டு கொன்றுவிட்டு தனது 10 வயது மகனான இராஜாராம்மை அரியணை ஏற்ற முயற்சித்தார் என்றும் வதந்திகள் பரவியது. அதற்கேற்ப அவரும் தனது மகனான இராஜாராம்மை பதவியேற்றினார். 

சத்ரபதி சாம்பாஜி : (கி.பி.1657-1689)

ஆட்சி : (கி.பி.1681-1689)


இவர் கி.பி.1657 மே 14 அன்று பூனேவுக்கு அருகிலுள்ள புரந்தர் கோட்டையில் சிவாஜி மற்றும் அவரின் முதல் மனைவியான சாய்பாய் போஸ்லேவுக்கு மகனாக பிறந்தார். சிவாஜிக்கு அடுத்ததாக இரண்டாவது மராட்டிய சத்ரபதியாக ஆனவர்.இவர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன். இவரது பிறப்பினால் இவரது தாயார் உடல்நலம் கெட்டு இவரது இரண்டு வயதில் இறந்தார். அந்த நேரத்தில் சிவாஜி அப்சல்கானை பிரதாப்கத்தில் 


சந்திக்க ஆயுத்தமாக இருந்த நேரத்தில் பூனேவுக்கு அருகிலுள்ள ராஜ்கத் கோட்டையில் கி.பி.1659 செப்டம்பர் 5ல் இறந்தார். இதனால் சாம்பாஜி அவரின் பாட்டியான ஜுஜாபாய்யிடம் வளர்ந்தார். புரந்தர் ஒப்பந்தத்தின் காரணமாக இவருக்கு 9 வயதாக இருக்கும்போது சாம்பாஜி அம்பரின் ராஜாவான முதலாம் ஜெய்சிங்கிடம் அரசியல் கைதியாக வளர்ந்தார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இவர் மொகலாய மன்சப்தார்களில் ஒருவரானார். இவரும் இவரது தந்தையான சத்ரபதி சிவாஜியும் கி.பி.1666 மே 12ல் மொகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் ஆக்ரா அரசவையில் தனக்கு மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் கோபப்பட்ட சிவாஜியை வீட்டுச் சிறையில் ஓளரங்கசீப் வைத்தார். பழக்கூடையின் வழியாக கி.பி.1666 ஜூலை 22ல் சிவாஜியும் இவரும் தப்பினார்கள். கி.பி.1666-68களில் ஓளரங்கசீப் சிவாஜிக்கு ராஜா பட்டம் அளித்தார். மேலும் சாம்பாஜிக்கு 5000 குதிரைகள் சொந்தமாக கொண்ட படைக்கு மொகலாய மன்சப்தார் பதவியை திரும்ப கொடுத்தார். இதனால் சிவாஜி சாம்பாஜியை தளபதி பிரதாப்ராவ் குஜ்ஜார் உடன் மொகலாய இளவரசர் முவாஸ்ஸம் (முதலாம் பகதூர் ஷா) தலைமையின் கீழ் பணிபுரிய ஓளரங்கபாத்துக்கு அனுப்பினார். சாம்பாஜிக்கு பேரர் பிரதேசத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றார். இந்த நேரத்தில் சிவாஜி மற்றும் சாம்பாஜியும் மொகலாயர்களுக்கு ஆதரவாக பிஜப்பூர் சுல்தான்களுக்கு எதிராக போரிட்டனர்.

சாம்பாஜி ஜிவூபாய் (யெஸூபாய்) என்பவரை மணந்தார். இவர் பிலாஜிராவ் ஷிர்கே என்பவரின் மகள். இந்த திருமணத்தின் மூலம் கொங்கன் கடற்கரை பிரதேசங்களில் சிவாஜியின் ஆதிக்கம் வலுவாயிற்று. இந்த திருமணத்தின் மூலம் சாம்பாஜிக்கு பவானி பாய் என்ற மகளும் சாஹூ (இவர் 5வது மராத்திய அரசர்) என்ற மகனும் பிறந்தனர். சாம்பாஜிக்கு சிவாஜியின் ஒழுக்கங்கள் இல்லை. இவர் சிற்றின்ப பிரியர் மட்டுமின்றி போதை பழக்கமும் உண்டு. இதனால் சிவாஜி இவரை கி.பி.1678ல் பன்ஹாலா கோட்டையில் வீட்டுச் சிறையில் வைத்தார். அங்கிருந்த தப்பித்த இவர் பின்னால் தக்காணத்தின் மொகலாய வைஸ்ராய் திலிர்கான் தன்னை சிறைப்படுத்தி டெல்லிக்கு அனுப்ப முயற்சித்ததை தெரிந்து கொண்டு மீண்டும் பன்ஹாலா கோட்டைக்கு திரும்பினார்.

கி.பி.1680 ஏப்ரல் முதல் வாரத்தில் சிவாஜி மறைந்தவுடன் சிவாஜியின் 8 மனைவிகளில் ஒருவரான சோய்ரா பாய் தன் ஆதரவாளர்கள் மூலம் சாம்பாஜியை அரியணை ஏறவிடாமல் தனது 10வயது மகனான ராஜாராம்மை கி.பி.1680 ஏப்ரல் 21ல் அரியணை ஏற்றினார். இந்த நிலையில் சாம்பாஜி விஷயமறிந்து தன்னை தடுத்த பன்ஹாலா கோட்டை தளபதியை கொன்று விட்டு கோட்டையிலிருந்து தப்பித்து தக்காணத்திலுள்ள மஹாத் அருகிலுள்ள ராய்கத் கோட்டையை கைப்பற்றி கி.பி.1680ல் ஜீலை 20ல் அரியணை ஏறினார். பின்னர் சோர்யா பாய், சகோதரர் ராஜாராம் மற்றும் அவரது மனைவியான ஜானகி பாய்யை சிறைபிடித்தார். இந்த நிலையில் சாம்பாஜிக்கு சோர்யாபாய் தனது ஆதரவாளர்கள் மூலம் விஷமிட்டு கொல்ல முயன்றார். இந்த கொலை முயற்சியில் தப்பித்த சம்பாஜி சோர்யா பாய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டினார். ஓளரங்கசீப்பின் மகனான இளவரசர் அக்பர் தந்தையை வீழ்த்த முயன்று தோற்று தக்காணத்தில் சாம்பாஜியிடம் அடைக்கலம் புகுந்தார். 5 ஆண்டுகள் சாம்பாஜியின் அடைக்கலத்திலிருந்து பின்னர் பெர்ஷியாவுக்கு சென்று உதவி பெற்று ஓளரங்கசீப்பை வீழ்த்த முயன்று அங்கும் உதவி கிடைக்காமல் ஈரானிலையே மறைந்தது தனிக்கதை.

பெர்ஹாம்பூரில் இந்துக்களிடம் மொகலாயர்கள் வசூலித்த ஜிஸியா வரிப்பணம் இருந்தது. கி.பி‌.1680ல் சாம்பாஜி 20000 வீரர்களுடன் அந்த பணத்தை கொள்ளையிட்டு திரும்பினார். கி.பி.1682ல் ராம்சேஜ் கோட்டையை 5 மாதங்கள் மொகலாயர்கள் முற்றுகையிட்டும் கோட்டையை கைப்பற்ற முடியாமல் திரும்பினார்கள். ஓளரங்கசீப் எல்லா பக்கங்களிலும் இருந்தும் மராத்திய அரசை வீழ்த்த முயற்சி பண்ணினார். மராத்திய சாம்ராஜ்யத்தின் மீது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்றார். ஆனால் சாம்பாஜி எல்லா வழிகளிலும் அவரின் படைகளை கொரில்லா தாக்குதல் மூலம்  சிறுசிறு மோதல்கள் மூலம் அதை முறியடித்தார். கி.பி.1682ல் கொங்கன் பிரதேசத்தில் ஜான்ஜீரா தீவுக்கோட்டை அபீசீனிய முஸ்ஸீம்களான சித்திகள் வசமிருந்தது. அவர்கள் அங்கிருந்து கடற்கொள்ளை செய்து வந்தனர். இவர்கள் மொகலாயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதனால் சிவாஜியால் கூட கைப்பற்ற முடியாத ஜான்ஜீரா தீவுக்கோட்டையை 30 நாட்கள் முற்றுகையிட்டு  பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார். பின்னர் கி.பி.1682ல் போர்த்துகீசியர்கள் முகாமிட்ட கோவாவின் ஒரு பகுதியான அஞ்சதீப் கோட்டையை தாக்கி கைப்பற்றினார். பின்னர் அவர்களுடன் உடன்பாடு கொண்டு கோட்டையை விட்டு கொடுத்தார். கி.பி. 1684ல் கொங்கன் பிரதேசத்திலுள்ள ராய்கத் கோட்டையை மொகலாயர்கள் கைப்பற்ற முயற்சி செய்ததில் மராத்தியர்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டனர். கி.பி.1684ல் பாம்பேயில் ஆங்கிலேயர்களுடன் உடன்பாடு கொண்டு மொகலாயர்களை எதிர்க்க தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பெற்றுக்கொண்டார். கி.பி.1681 மற்றும் 1686களில் மைசூரின் மீது படையெடுத்து தாக்கி கொள்ளையடித்தார். கி.பி.1687ல் wai போர்களத்தில் மராத்திய படைகள் தோல்வியை தழுவியது. சாம்பாஜியின் நடவடிக்கைகள் அவர் போகும் இடங்கள் எல்லாம் மொகலாயர்களுக்கு அவரின் உறவுகளே தகவல் தெரிவித்தனர். சாம்பாஜி மற்றும் அவரின் நண்பரான கவி கைலாஷ் மற்றும் 25 பாதுகாவலர்களுடன் பொழுதுபோக்காக இருந்த சமயத்தில் தக்காண மொகலாய வைஸ்ராய் முஹாரப் கானால் கி.பி.1689 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு ஓளரங்கசீப் வசம் பாகதூர்கத்தில் ஒப்படைக்கப்பட்டார்.  ஓளரங்கசீப் அவரிடம் மராத்தியர்கள் வசமிருந்த கோட்டைகள் மற்றும் செல்வங்களை ஒப்படைத்து விட்டு சாம்பாஜியையும் அவர் நண்பரான கவி கைலாஷ்ஷையும் முஸ்லீம் மதத்திற்கு மாற சொன்னார். கவி கைலாஷ் மற்றும் சாம்பாஜி ஓளரங்கசீப் மற்றும் அவரின் பரம்பரையை கேவலமாக பேசவே கோபப்பட்டு இருவரையும் கண்கள் மற்றும் நாக்குகளை பிடுங்கி கை கால் விரல்களிலிருந்த நகங்களை பிடுங்கி தோலை உரித்து சித்திரவதை செய்து கி.பி.1689 மார்ச் 21ல் கொன்றனர். மொகலாயர்களிடம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் மராத்தியர்களிடம் தனது தவறான பழக்கங்களால்  கெட்ட பெயர் பெற்றிருந்த சாம்பாஜியின் கெட்ட செயல்கள் மறைந்து அவர் தியாகி,மாவீரன் என்ற அளவுக்கு மராத்தியர்களிடம் அவர் பெயர் பெற்றார்.  

முதலாம் ராஜாராம் : (கி.பி.1670-1700)

ஆட்சி : (கி.பி.1689-1700)

கி.பி.1670 பிப்ரவரி 14ல் ராய்கத் கோட்டையில் சிவாஜி - சோர்யா பாய்க்கு மகனாக பிறந்தார்.கி.பி.1680ல் சோர்யாபாய் சிவாஜி மறைந்தவுடன் இவரை அடுத்த அரசராக அறிவித்தார். ஆனால் சாம்பாஜி ராய்கத் கோட்டையை கைப்பற்றி சோர்யா பாய் மற்றும் ராஜாராம் மற்றும் அவரின் மனைவியான ஜானகி பாய் ஆகியோரை வீட்டு சிறையில் வைத்தார். பின்னர் சாம்பாஜியை கொலை செய்ய முயன்ற வழக்கில் இவரின் தாயார் சோர்யா பாய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும் சாம்பாஜி சகோதரரான இவரை தண்டிக்கவில்லை. சாம்பாஜியின் மரணத்திற்கு பின்னர் கி.பி.1689 மார்ச் 12ல் இவர் மூன்றாவது சத்ரபதியாக பதவியேற்றார்.

 இவருக்கு மொத்தம் 3 மனைவிகள். 

1) ஜானகி பாய் :

10 வயதாக இருக்கும் போது 5 வயதான இவரை மணந்தார். இவர் சிவாஜியின் படைதளபதியான பிரதாப் ராவ் குஜ்ஜாரின் மகள். ராஜாராம் கி.பி.1700ல் நுரையீரல் நோயால் மறைந்த போது இவரும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.

2) தாரா பாய் :

இவர் சிவாஜியின் படைதளபதியான பிரதாப் ராவ் குஜ்ஜாருக்கு பின்னர் படைதளபதியாக பணியாற்றிய ஹம்பிராவ் மோஹிதேவின் மகள். இவருக்கு பிறந்த மகன் தான் இரண்டாம் சிவாஜி.

3) ரஜாஸ் பாய் :

இவர் செல்வாக்கான காட்ஜி குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு பிறந்த மகன் தான் இரண்டாம் சாம்பாஜி என்பவர். 

முதலாம் இராஜாராம்க்கு மொத்தம் இரண்டு மகன்கள்

a) இரண்டாம் சிவாஜி :

இவர் தாராபாய்க்கு பிறந்தவர்.

b) இரண்டாம் சாம்பாஜி :

இவர் ரஜாஸ் பாய்க்கு பிறந்தவர்.

சாம்பாஜி இறந்தவுடன் இராஜாராம் பதவியேற்ற 10 நாட்களுக்குள் மொகலாயர்கள் ராய்கத் கோட்டையை முற்றுகையிட்டு தாக்க ஆரம்பித்தனர். சாம்பாஜியின் விதவை மனைவியான மஹாராணி யெஸூபாய் மற்றும் அவரின் மந்திரியான ராமச்சந்திரா ஃபண்ட் அமாத்யா இருவரும் அரசர் இராஜாராம்மை வலிமையான பிரதாப்கத் கோட்டைக்கு அனுப்ப காவ்ல்யாகத் வழியாக அனுப்ப முயற்சித்தனர்.  மராத்திய படைகள் அரசர் இராஜாராம்மை தமிழ்நாட்டிலுள்ள செஞ்சிக்கு பிரதாப்கத் மற்றும் விசால்கத் கோட்டை வழியாக அனுப்ப முயற்சித்தனர். மொகலாய படைகளிடம் தப்பி கேலடி (கர்நாடகத்திலுள்ள இன்றைய பெயர் சாகர்) பகுதிக்கு வந்து அங்குள்ள ராணி கேலடி சென்னம்மாவிடம் அடைக்கலம் புகுந்தார். கேலடி சென்னம்மா மொகலாயர்களிடம் கடுமையாக போரிட்டு இவரை செஞ்சிக்கு தப்புவதற்கு உதவி புரிந்தார். காட்டிலிருந்து இராணி சென்னம்மாவின் கொரில்லா தாக்குதலை சமாளிக்க முடியாமல் மொகலாயப் படைகள் சென்னம்மாவிடம் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். பின்னர் ஓளரங்கசீப் காஸித்தீன் ஃபெரோஸ் ஜங் என்பவரை  செஞ்சியை கைப்பற்ற அனுப்பினார். கி.பி.1690 செப்டம்பர் முதற்கொண்டு மூன்று முறை தோல்வியை தழுவி அவர் 7 ஆண்டுகள் முற்றுகைக்கு பின்னர் கி.பி.1698 ஜனவரி 8ல் செஞ்சியை கைப்பற்றினார். இராஜாராம் வேலூர் வழியாக தப்பித்து பின்னர் விசால்கத் கோட்டைக்கு தப்பித்து சென்று விட்டார். இந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே சதாராவில் மராத்திய அரசை ஏற்படுத்தியிருந்தார் இராஜாராம். அவரின் தளபதிகளான சாந்தாஜி மற்றும் தானாஜி ஆகியோர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மொகலாய படைகளை தோற்கடித்து மொகலாயர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தை துண்டித்து இருந்தனர். கி.பி.1700ல் நுரையீரல் நோயினால் இராஜாராம் தனது 30வது வயதிலையே பூனேவுக்கு அருகிலுள்ள சின்ஹாகத் கோட்டையில் மரணமடைந்தார். அவருடன் அவரது முதல் மனைவியான ஜானகி பாய் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தார்.  இன்னொரு மனைவியான தாரா பாய் தனது மகனான இரண்டாம் சிவாஜிக்கு பாதுகாவலராக இருந்து கோலாப்பூரில் இருந்து அரசு புரிய ஆரம்பித்தார். இன்னொரு மனைவியான ரஜாஸ் பாய் தாராபாய்யை வீழ்த்தி தனது மகனான இரண்டாம் சாம்பாஜியை மொகலாய அரசராக்கினார்.

இரண்டாம் சிவாஜி : (கி.பி.1696-1726)

ஆட்சி : (கி.பி.1700-1707 & 1710-1714)

இவர் முதலாம் இராஜாராம் -தாராபாய்க்கு கி.பி.1696 ஜூன் 9ல் தமிழ்நாட்டிலுள்ள செஞ்சி கோட்டையில் பிறந்தார். கி.பி.1700ல் முதலாம் இராஜாராம் மறைந்தவுடன் தாரா பாய் 4 வயதான இவரை 4வது மராத்திய சத்ரபதியாக்கி இவருக்கு பாதுகாவலராக ஆட்சி புரிய ஆரம்பித்தார். கி.பி.1707ல் ஓளரங்கசீப் மறைந்தவுடன் ஆட்சிக்கு வந்த அஸம்ஷா அவருக்கான வாரிசுரிமை போட்டியில் மராத்தியர்களின் தயவு தேவைப்படும் என்று நினைத்து ஓளரங்கசீப்பால் சிறைப்படுத்தப்பட்டிருந்த சாம்பாஜியின் விதவை மனைவி யெஸூபாய் மற்றும் அவரது மகனான முதலாம் சாஹூவை விடுவித்தார். முதலாம் சாஹூ தனது அத்தையான தாராபாய்யை கி.பி.1708ல் தோற்கடித்து மராத்திய அரியணையை கைப்பற்றினார்.  தாரா பாய் உடனே கோலாப்பூரில் போட்டி அரசை கி.பி.1710-1714 வரை நடத்தினார். பின்னர் இராஜாராம்மின் இன்னொரு மனைவியான ரஜாஸ் பாய் கி.பி.1714ல் தாராபாய்யை தோற்கடித்து இரண்டாம் சிவாஜியை பதவியிலிருந்து இறக்கி தனது மகனான இரண்டாம் சாம்பாஜியை கோலாப்பூர் அரியணையில் அமர்த்தினார். இதற்கிடையில் கி.பி.1726 மார்ச் 14ல் சின்னம்மை நோயினால் இரண்டாம் சிவாஜி மரணமடைந்தார். இவரை வீழ்த்திய சதாராவை கைப்பற்றி 5வது சத்ரபதியாக வந்த சாம்பாஜியின் மகனான சத்ரபதி சாஹூவுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தாரா பாய் இரண்டாம் சிவாஜியின் மகனான அவரின் பேரனுமான இரண்டாம் இராஜாராம்மை சாஹூக்கு வாரிசாக தத்து கொடுத்தார்.

சத்ரபதி சாஹூ : (கி.பி.1682-1749)

ஆட்சி : (கி.பி.1708-1749) 

கி.பி.1682 மே 18ல் சாம்பாஜி - யெஸூபாய்க்கு கங்கவல்லி கோட்டையில் பிறந்தார்.கி.பி.1689ல் சாம்பாஜி மறைநதவுடன் மொகலாயர்கள் தாக்குதல்கள் ஆரம்பித்த ராய்கத் கோட்டையிலிருந்து மொகலாய சர்தார் சுல்பிஹர் கான் நுஸ்ரத் ஜங் என்பவர் சாம்பாஜியின் விதவை மனைவியான யெஸூபாய் மற்றும் 7வயதான அவரின் மகனான முதலாம் சாஹூவையும் கைதியாக ஓளரங்கசீப்பிடம் ஒப்படைக்க அவர் தாயையும் மகனையும் ஆக்ரா சிறையில்அடைத்தார். 18 ஆண்டுகளுக்கு பின்னர் கி.பி.1707ல் ஓளரங்கசீப் மறைந்தவுடன் ஆட்சிக்கு வந்த அஸம்ஷா அவருக்கான வாரிசுரிமை போட்டியில் மராத்தியர்களின் தயவு தேவைப்படும் என்று நினைத்து ஓளரங்கசீப்பால் சிறைப்படுத்தப்பட்டிருந்த சாம்பாஜியின் விதவை மனைவி யெஸூபாய் மற்றும் அவரது மகனான முதலாம் சாஹூவை விடுவித்தார். முதலாம் சாஹூ தனது அத்தையான தாராபாய்யை கி.பி.1708ல் தோற்கடித்து மராத்திய அரியணையை கைப்பற்றினார்.  இவரது ஆட்சியில் மராத்தியர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால் இவரது மரணத்திற்கு பின்னர் சத்ரபதியிடம் (அரசர்) இருந்த அதிகாரம் மெல்ல பிரதம மந்திரிகள் (பேஷவாக்கள்) மற்றும் தளபதிகளிடம் செல்ல ஆரம்பிக்க அவர்கள் தனியாட்சியாக நாக்பூர் போன்ஸ்லேக்கள், பரோடா கெய்க்வாட்டுகள், குவாலியர் சிந்தியாக்கள் மற்றும் இந்தூரின் ஹோல்கர்கள் என்று தனியரசுகளை ஆரம்பித்தனர். இவர் கி.பி.1713ல் பாலாஜி விஸ்வநாத்தை தனது பேஷ்வா வாக நியமித்தார். அவர் கி.பி.1720ல் மறையவே அவரது மகனான முதலாம் பாஜி ராவ்வை அடுத்த பேஷ்வா வாக நியமித்தார். அவரும் கி.பி.1740ல் மறையவே அவரது மகனான பாலாஜி பாஜி ராவ்வை அடுத்த பேஷ்வா வாக நியமித்தார். தாத்தா, மகன் மற்றும் பேரன் ஆகிய பேஷ்வாக்களின் 50 ஆண்டுகால வாழ்வில் மராத்தியர்கள் இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

இவருக்கு மொத்தம் 4 மனைவிகள்:

1) சாவித்திரி பாய்

2) அம்பிகா பாய்

3) சக்வர் பாய்

4) சாகுனா பாய்

இவருக்கு 3 மகள்கள்

a) சாம்பாஜி ராஜி

b) கஜ்ரா பாய்

c) ரஜாஸ் பாய்

ஆண் வாரிசு இல்லாததால் தாரா பாய்யின் பேரனான இரண்டாம் இராஜாராம்மையும் முதலாம் பஃதே சிங் என்ற மகன்களையும் பார்வதி பாய் என்ற மகளையும் தத்து எடுத்தார்.

கி.பி.1749 டிசம்பர் 15ல் இவர் தனது 67வயதில் சதாராவில் உள்ள ரங்மஹால் மாளிகையில் மரணமடைந்தார். இவருக்கு பின்னர் இரண்டாம் இராஜாராம் பதவியில் அமர்ந்தாலும் உண்மையான அதிகாரம் அவரது பாட்டியான தாராபாய்யிடமும் அதன் பிறகு பேஷ்வாவான பாலாஜி பாஜி ராவ் வசமும் இருந்தது.

இரண்டாம் ராஜாராம் : (கி.பி.1726-1777) 

ஆட்சி : (கி.பி.1749-1777)

இரண்டாம் சிவாஜியின் மகனான இவரை பாட்டி தாராபாய் முதலாம் சாஹூ மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாததால் தத்து கொடுத்தார். இவர் கி.பி.1726 ஜூன் மாதத்தில் கோலாப்பூரில் பிறந்தார். முதலாம் சாஹூ மன்னருக்கு பின்னர் கி.பி.1749ல் 6வது மராத்திய மன்னராக பதவியேற்றார். இவர்  பெயரளவுக்கு மன்னராக இருந்தார். ஆட்சியை முதல் மந்திரியாக (பேஷ்வா) இருந்த பாலாஜி பாஜி ராவ் ஆட்சியை நடத்தினார். பேஷ்வா பாலாஜி பாஜிராவ் மொகலாயர்களுடன் இணக்கமாக இருக்கவே அவரை தாராபாய் அந்த பதவியிலிருந்து இறக்கி கி.பி.1750 நவம்பர் 24ல் சதாராவில் சிறையில் அடைத்தார். பின்னர் 2 வருடங்களில் பேஷ்வா பாலாஜி பாஜி ராவ்வுக்கும் இடையே ஜூஜோரி என்னுமிடத்தில் உள்ள கண்டோபா கோயிலில் இருவரும் அமைதி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சமயத்தில் இரண்டாம் இராஜாராம் தனது உண்மையான பேரன் அல்ல என்றும் தத்து எடுக்கப்பட்டவர் என்றும் தாராபாய் உண்மையை ஒத்துக்கொண்டு பேஷ்வா பாலாஜி பாஜி ராவ்க்கு (நானா சாகேப்) மீண்டும் பழைய அதிகாரத்தை கொடுத்தார். இரண்டாம் இராஜாராம்மின் ஆட்சியில் மீண்டும் பூனேவின் பட் குடும்பத்தில் இருந்து வந்த மராத்திய தளபதிகளான ஹோல்கர், கெய்க்வாட், சிந்தியா மற்றும் போன்ஸ்லேக்கள் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இவர்கள் ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலியுடன் நடந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். கி.பி.1777 டிசம்பரில் இவர் மறைந்தவுடன் இன்னொரு தத்து பிள்ளையான இரண்டாம் சாஹூ சத்தாரா அரியணையில் அடுத்த சத்ரபதியாக அமர்ந்தார்.

இரண்டாம் சாஹூ : (கி.பி.1763-1808)

ஆட்சி : (கி.பி.1777-1808)

இரண்டாம் இராஜாராம் மறைவிற்கு பின்னர் அவரது தத்து மகனான இவர் கி.பி.1777ல் அடுத்த 7வது மராத்திய சத்ரபதியாக சதாராவில் பதவியேற்றார். இவரது ஆட்சியின் போது மராத்தியர்கள் முதல்ல ஆங்கிலேய-மராத்தியர்கள் போரில் வெற்றி பெற்றனர். ஆனால் இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியர்கள் போரில் தோல்வியை தழுவினார்கள். இவரது ஆட்சிக்கு உறுதுணையாக மகாத்ஜி ஷிண்டே மற்றும் பேஷ்வாக்கள் இருந்தனர். இவருக்கு பின்னர் இவரது மகனான பிரதாப் சிங் ஆட்சிக்கு வந்தார்.

பிரதாப் சிங் : (கி.பி.1793-1847)

ஆட்சி : (கி.பி.1808-1839)

கி.பி.1793ல் இரண்டாம் சாஹூ - கிர்ஜாபாய் போஸ்லேவின் மகனான கி.பி.1793 ஜனவரி 18ல் சதாராவிலுள்ள அஜின்க்யாதாரா கோட்டையில் பிறந்த இவர் இவரது தந்தையான இரண்டாம் சாஹூ மறைந்தவுடன் 8வது மராத்திய சத்ரபதியாக கி.பி.1808ல் பதவியேற்றார். ஆனாலும் இவரது அதிகாரங்கள் பேஷ்வாக்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கி.பி.1839ல் பிரிட்டிஷார் இவரது ஆட்சி அதிகாரத்தை பறித்ததுடன் பெயரளவுக்கு இருந்த ஆட்சியும் பறிபோயிற்று. கி.பி.1839ல் பனாரஸ்ஸில் (இன்றைய வாரணாசி) பிரிட்டிஷ்ஷாரால் மாதாந்திர பென்ஷன் கொடுக்கப்பட்டு அங்கேயே கி.பி.1847ல் மறைந்தார்.

கோலாப்பூர் அரியணை:

இரண்டாம் சாம்பாஜி : (கி.பி.1698-1760)

ஆட்சி : (கி.பி.1714-1760)

இவர் கி.பி.1698ல் சிவாஜியின் கடைசி மகனான முதலாம் இராஜாராம் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான ரஜாஸ்பாய்க்கும் மகனாகப் பிறந்தார். கி.பி.1708ல் முதலாம் சாஹூவால் இராஜாராம்மின் இன்னொரு மனைவியான தாராபாய்யின் மகனான இரண்டாம் சிவாஜி சதாராவில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாராபாய் மற்றும் அவர் மகனான இரண்டாம் சிவாஜி இருவரும் கோலாப்பூரில் போன்ஸ்லே வம்சத்து ஆட்சியை கி.பி.1710ல் ஆரம்பித்தார். பின்னர் கி.பி.1714ல் கோலாப்பூரில் இரண்டாம் சாம்பாஜியும் அவர் தாயான ரஜாஸ்பாய் இணைந்து இரண்டாம் சிவாஜியை தூக்கியெறிந்து கோலாப்பூரின் ஆட்சியை கைப்பற்றினார்கள். ஆட்சியை முதாலம் சாஹூவிடம் இருந்து  தக்கவைக்க ஹைதராபாத்தின் நிஜாம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். கி.பி.1728ல் ஹைதராபாத்தின் நிஜாம்மை முதலாம் பாஜி ராவ் பால்கத் யுத்தத்தில் வென்றார். இந்த யுத்தத்திற்கு பிறகு கி.பி.1731ல் இரு தரப்புக்கும் இடையே நடந்த வார்னா ஒப்பந்தின்படி இருவரும் ஒருவரையொருவர் அங்கீகரித்து தங்கள் எல்லைகளை பிரித்துக் கொண்டனர். கிருஷ்ணா நதி முதல் துங்கப்பத்திரை பகுதிகள் முதலாம் சாஹூவுக்கும் மீதி பகுதிகள் இரண்டாம் சாம்பாஜிக்கும் அரசின் எல்லைகளாக பிரிக்கப்பட்டது. இவர் கி.பி.1760ல் இவர் மறைந்தவுடன் இவரது மனைவியான ஜுஜிபாய் தனது மகனான மூன்றாம் சிவாஜியின் அரியணையில் அமர்த்தி அவரின் சார்ப்பாக ஆட்சியை நடத்தினார். இவருக்கு ஜிஜிபாய், குஸாபாய் என்ற இரு மனைவிகளும் இவரின் மரணத்திற்கு பின்னர் பிறந்த ஒரு மகளும் இருந்தனர். மூன்றாம் சிவாஜியை இவர்  மகனாக தத்தெடுத்தார். 

மூன்றாம் சிவாஜி :

ஆட்சி : (கி.பி.1760-1812)

இவர் இரண்டாம் சாம்பாஜியின் வளர்ப்பு மகன். கி.பி. 1756ல் பிறந்த இவர் கி.பி.1762ல் ஆட்சியில் அமர்ந்த இவரை இரண்டாம் சாம்பாஜியின் மனைவியான ஜுஜிபாய் இவர் சார்ப்பாக நாட்டை ஆள ஆரம்பித்தார். அவர் மறைந்தவுடன் இவர் தனியாக ஆள ஆரம்பித்தார். கி.பி. 1813 ஏப்ரல் 24ல் மறைந்தார்.

மூன்றாம் சாம்பாஜி : (கி.பி.1801-1821)

ஆட்சி : (கி.பி.1813-1821)

மூன்றாம் சிவாஜிக்கு பின்னர் கோலாப்பூரின் அரியணையில் ஆட்சியேறிய இவர் கி.பி.1821ல் மறைந்தார்.

நான்காம் சிவாஜி : (கி.பி.1816-1822)

ஆட்சி : (கி.பி.1821-1822)

மூன்றாம் சாம்பாஜிக்கு பின்னர் 5 வயதில் ஆட்சியேறிய இவர் 6 மாதத்தில் இவரது பொறுப்பாளராக இருந்த கோலாப்பூரின் ஷாகாஜியால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

ஷாகாஜி : (கி.பி.1802-1838)

ஆட்சி : (கி.பி.1822-1838)

நான்காம் சிவாஜியின் பாதுகாவலராக இருந்த இவர் 6 மாதத்தில் அவர் ஆட்சியிலிருந்து அகற்றி கி.பி.1822ல் ஆட்சியை பிடித்த இவர் கி.பி.1838 நவம்பர் 29ல் மறைந்தார்.

ஜந்தாம் சிவாஜி : (கி.பி.1830-1866)

ஆட்சி : (கி.பி.1838-1866)

ஷாகாஜிக்கு பின்னர் இவர் தனது 8 வயதில் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சியில் பதவியேற்பு/வரவேற்புகளின் பல 17 குண்டுகள் முழங்க இருந்த அவரவேற்பு 19 குண்டுகள் முழங்க என்ற அளவில் உயர்த்தப்பட்டது.

இரண்டாம் ராஜாராம் : (கி.பி.1850-1870)

ஆட்சி : (கி.பி.1866-1870)

இவரே வெளிநாட்டுக்கு பயணம் செய்த முதல் மராத்திய மன்னர். இவர் இத்தாலியில் ப்ளாரன்ஸ் நகரில் பயணம் செய்த போது கி.பி.1870ல் தனது 20வது வயதில் மரணமடைந்தார்.

ஆறாம் சிவாஜி : (கி.பி.1863-1883)

ஆட்சி : (கி.பி.1871-1883)

இரண்டாம் ராஜாராம் மறைவுக்குப் பின்னர் அவரது விதவை மனைவி தத்தெடுக்கப்பட்ட இவர் அடுத்த அரசராக கோலாப்பூர் அரியணையில் தனது எட்டு வயதில் அமர்ந்தார். கி.பி.1875ல் பிரிட்டிஷ் அரசர் ஏழாம் எட்வர்ட்டால் வீரவாளை பரிசாக பெற்றுக்கொண்டார். கி.பி.1877ல் "நைட் (Knight)" பட்டத்தை தனது 13வது வயதில் பெற்றுக்கொண்ட இளைய மன்னர் இவரே. கி.பி.1883ல் இளைய வயதில் இறந்ததுடன் கோலாப்பூர் அரியணையில் போன்ஸ்லே வம்சத்து ஆட்சி முடிந்தது. இவருக்கு நேரிடை வாரிசு இல்லாததால் பிரிட்டிஷார் இவருக்கு பின்னர் ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு