78) மராத்திய பேஷ்வாக்கள் & பிரபலங்கள்

மராத்தியர்கள் (பேஷ்வா) : (கி.பி.1674-1818)

மராத்தியர்களுள் பேஷ்வாக்கள் முக்கியமானவர்கள். முதல் மந்திரிகளான பேஷ்வாக்கள் ஆரம்பத்தில் 5 பேஷ்வாக்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் பாலாஜி விஸ்வநாத் (6வது பேஷ்வா) முதல் பூனாவிலுள்ள பட் குடும்பத்திற்கு வழிவழியாக நியமிக்கப்பட்டனர். மராத்திய சத்ரபதிகள் அவர்களுக்குள் உட்பூசல்களில் இருந்த போது பேஷ்வாக்கள் தான் ஆட்சியை நடத்தி மராத்தியர்களின் அரசை விரிவுபடுத்தினார்கள்.

1) மோரோபண்ட் திரிம்பக் பிங்க்ளே : (கி.பி.1674-1683)

இவர் சத்ரபதி சிவாஜி மற்றும் அவரின் மகனான சாம்பாஜி அரசிலும் பேஷ்வாவாக பதவி வகித்த முதல் பேஷ்வா. சிவாஜியின் அஷ்டபிரதான் மந்திரிகளின் தலைமை மந்திரியாக (பேஷ்வா) பணியாற்றியவர். கி.பி.1620ல் பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் சிவாஜி மராத்திய சாம்ராஜ்யம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கி.பி.1647ல் அவருடன் சேர்ந்தவர். இவர் கி.பி.1659ல் பிஜப்பூர் அரசுடன் சிவாஜி மோதிய யுத்தத்தில் பங்கு கொண்டவர். திரிஹம்பேஸ்வர் யுத்தத்திலும் டின்டோரி யுத்தத்திலும் மொகலாயர்களுக்கு எதிராக பங்கு கொண்டார். கி.பி.1664ல் சிவாஜியின் சூரத் கொள்ளையிலும் உடனிருந்தார். கி.பி.1666ல் ஓளரங்கசீப்பின் ஆக்ரா சிறையில் இருந்து தப்பிக்கும் போது சிவாஜியின் மகன் சாம்பாஜியை மதுராவில் உள்ள இவரது உறவினர்களின் வீட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சிவாஜி ராய்கத் திரும்பினார். இவர் சிவாஜியின் அரசில் நிதி நிர்வாகத்தையும் கோட்டை பாதுகாப்பு மற்றும் அதன் மேற்பார்வையையும் கவனித்தார். சிவாஜிக்கு பின்னர் சாம்பாஜியின் அரசிலும் பணியாற்றினார். அவருடன் கி.பி.1681ல் நடந்த பெர்ஹாம்பூர் யுத்தத்திலும் பங்குகொண்டார். கி.பி.1683ல் இவர் மறைந்தவுடன் இவரது மகனான நீல்கந்த் மோரேஸ்வர் பிங்க்ளே அடுத்த பேஷ்வாவாக பதவியேற்றார்.

2) நீலகந்த் மோரேஸ்வர் பிங்க்ளே : (கி.பி.1683-1689)

மோரேபண்ட் திரிம்பக் பிங்க்ளேவுக்கு பின்னர் பேஷ்வாவாக பதவியேற்ற அவரின் மூத்த மகன் இவர். 4வது பேஷ்வாக பதவியேற்ற பாஹிரோஜி பிங்க்ளேவின் மூத்த சகோதரர். சிவாஜியின் மகனான சாம்பாஜியின் அரசில் பேஷ்வாவாக பதவியேற்ற இவர் கி.பி.1689ல் சங்கமேஸ்வரில் சாம்பாஜியுடன் தக்காணத்தின் மொகலாய கவர்னரால் பிடிக்கப்பட்டு ஓளரங்கசீப்பினால் கொல்லப்பட்டார். சாம்பாஜி, பேஷ்வா மற்றும் கவி கைலாஷ் ஆகியோர் ஓளரங்கசீப்பினால் கொல்லப்பட்டனர்.

3) இராமச்சந்திர பண்ட் அமாத்யா : (கி.பி.1689-1708)

இவர் சிவாஜியின் அஷ்ட பிரதான் அமைச்சரவையில் நிதி மந்திரியாக கி.பி.1674-1680 வரையில் பணியாற்றிவர். பின்னர் சாம்பாஜி,இராஜாராம்,இரண்டாம் சிவாஜி மற்றும் இரண்டாம் சாம்பாஜி ஆகியவர்களுக்கு பாதுகாப்பாக ஆட்சி புரிந்தார்‌. கி.பி.1650ல் நிலோ சாண்டோ என்பவரின் இளைய மகனாக பிறந்தார். இவரது தந்தை சிவாஜியின் அரசில் வரிவசூல் செய்யும் மந்திரியாக இருந்தார். கி.பி.1672க்கு முன்னர் சிவாஜியின் அரசில் பலதரப்பட்ட அலுவலர் வேலைகளை பார்த்தவரை ரெவின்யூ மந்திரியாக (மஜீம்தார்) பதவி உயர்த்தினார். அந்த மஜூம்தார் பதவி "அமாத்யா" என்ற பெயர் மாறவே இராமசந்திர பண்ட் என்ற பெயர் இராமச்சந்திர பண்ட் அமாத்யா என்றானது.

4) பாஹிரோஜி பிங்க்ளே : (கி.பி.1708-1711)

இவர் முதல் பேஷ்வாவாக இருந்த மோரேபண்ட் திரிம்பக் பிங்க்ளேவின் மகனும் இரண்டாவது பேஷ்வாவாக நீல்கந்த் மோரேஸ்வர் பிங்க்ளேவின் இளைய சகோதரரும் ஆவார். கி.பி.1711ல் கனோஜி ஆங்க்ரே சதாராவை கைப்பற்றி இவரை சிறையில் வைத்தார். உடனே முதலாம் சாஹூ பாலாஜி விஸ்வநாத்திடம் உடனே இவரை விடுவிக்கும்படி ஆணையிட்டார்.

5) பரஸ்ராம் திரிம்பக் குல்கர்னி : (கி.பி.1711-1713)

இவர் சிவாஜியின் "அஷ்ட பிரதான்" அவையில் பணியாற்றினார். இவர் கி.பி.1660ல் கன்ஹாய் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையான திரிம்பக் கிருஷ்ணா கிராம அலுவலராக பணியாற்றினார். இவர் ஆரம்பத்தில் அலுவலராக பணியாற்றினார். ராஜாராம் மற்றும் தாரா பாய் காலத்தில் அஷ்டபிரதிநிதியாக பணியாற்றினார். சதாரா மற்றும் பன்ஹாலா கோட்டைகளை திரும்ப கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். ராஜாராம்மின் மரணத்திற்கு பிறகும் அவரின் மனைவியான தாராபாய்யின் காலத்திலும் அஷ்டபிரதிநிதியாக பணியாற்றினார். இவர் தான் மஹாராஷ்டிராவில் விஸால்கத் மற்றும் அவுந்த் மாவட்டங்களை தோற்றுவித்தவர். கி.பி.1718ல் சதாரா அருகிலுள்ள மஹூலியில் மரணமடைந்தார்.

6) பாலாஜி விஸ்வநாத் பட் : (கி.பி.1713-1720) 

கி.பி.1662 ஜனவரி 1ல் கொங்கண் பிரதேசத்திலுள்ள ஸ்ரீவர்தனில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் ஜான்ஜூரா சித்திகளின் கீழ் தேஷ்முக்காக பணியாற்றினர். இவர் சத்ரபதி முதலாம் சாஹூ காலத்தில் மராத்திய நிர்வாகத்தில் வேலைக்கு வந்தார். பூனேவின் தலைமை தளபதியான தானாஜி ஜாதவ்வின் கணக்கராக பணியாற்றியவர். அவரின் மரணத்திற்கு பின்னர் அவரது மகனால் சத்ரபதி சாஹூவிடம் இவரது நிர்வாக பண்புகளால் குறிப்பிடப்பட்டு அவரின் உதவியாளராக கி.பி.1708ல் நியமிக்கப்பட்டார். கி.பி.1713ல் கனோஜி ஆங்க்ரேவை அடக்க பேஷ்வா பாஹிரோஜி பிங்க்ளேவை அனுப்ப ஆங்க்ரே அவரை பூனா யுத்தத்தில் தோற்கடித்து சிறைப்படுத்தினார். பின்னர் சத்ரபதி சாஹூ பாலாஜி விஸ்வநாத்தை படைகளுடன் அனுப்ப அவர் கனோஜி ஆங்க்ரேவை சமாதானமாக செல்லுமாறு அறிவுறுத்தினார். இருவரும் லோனாவாலாவில் சந்தித்து சமாதானம் பேச கனோஜி ஆங்க்ரே தன் படைகளுடன் சத்ரபதியின் சேனைகளில் இணைந்தார். இருவரும் இணைந்து ஜான்ஜூரா சித்திகளை தாக்கி கொங்கன் பிரதேசத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளை மராத்தியர்களின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் சத்ரபதி சாஹூ கி.பி.1713 நவம்பர் 16ல் பேஷ்வாவாக நியமித்தார். பின்னர் கி.பி.1713ல் ஃப்ரூக்ஷியார் மொகலாய பேரரசராக சைய்யித் சகோதரர்களின் உதவியால் ஆட்சியை பிடித்தவுடன் தக்காணத்திலுள்ள மராத்தியர்களை அடக்க ஹூசைன் சைய்யித் அலி கானை அடக்க படைகளை அனுப்பினார். ஆனாலும் மராத்தியர்களை மொகலாயர்களால் அடக்க முடியாமல் கி.பி.1718ல் மொகலாய - மராத்திய ஒப்பந்தம் ஹூசைன் சைய்யித் அலி கான் மற்றும் பாலாஜி விஸ்வநாத் இடையே கையொழுத்தானது. அதன்படி தக்காணத்தின் மொகலாய வருமானத்தில் 1/4ஐ மராத்தியர்களுக்கும் கூடுதல் வரிகளில் 10% த்தையும் கொடுக்க வேண்டுமென்றும் மொகலாயர்களின் ஆதிக்கத்தை ஏற்று கொள்வதாகவும் மொகலாயர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் 15000 வீரர்கள் கொண்ட படைகளை அனுப்புவதாகவும் ஒப்பந்தம் கையொழத்தானது. இந்த ஒப்பந்தத்தை ஃப்ரூக்ஷியார் ஏற்றுக்கொள்ளாமல் சைய்யித் சகோதரர்களை கொல்ல முயற்சிக்க பாலாஜி விஸ்வநாத் பார்ஸோஜி போன்ஸ்லே என்ற தளபதியின் கீழ் 16000 குதிரைப்படை வீரர்களுடன் ஹூசைன் சைய்யித் அலி கான் டெல்லி வர மொகலாயப் படைகள் ஓட்டம் பிடித்தது. டெல்லியை கைப்பற்றி ஃப்ரூக்ஷியாரை சிறைப்படுத்தி அவரது கண்களை குருடாக்கி ரபி-உல்-தராஜ் என்ற பொம்மை அரசரை அடுத்த மொகலாய அரசராக பதவியில் அமர்த்தினார். பின்னர் அவரும் மூன்று மாதங்களில் காசநோயால் இறக்க ரபி-உத்-தெளலா என்ற அவரது தம்பியை அடுத்த பொம்மை அரசராக ஆக்கினார்கள். மொகலாய அரசர்கள் இந்த நேரத்தில் மராத்தியர்களின் கீழ் ஆளும் நிலைக்கும் அவர்களின் வருமானத்தில் 1/4ஐ மராத்தியர்களுக்கு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி.1714ல் முதலாம் சாஹூ கோலாப்பூரின் தெற்கு பகுதி தனது ஆட்சிக்குள் வர ஆசைப்பட்டார். அந்த நேரத்தில் கோலாப்பூரில் இரண்டாம் சிவாஜி மறைந்து அவர் மகன் இரண்டாம் சாம்பாஜி ஆட்சிக்கு வந்தார். அவர் பேஷ்வா இராமச்சந்திரா பண்ட் அமாத்யா கி.பி.1716ல் மறைந்தவுடன் தனது தளபதிகளான உதாஜி சவான் மற்றும் சேனாகாஸ்கேல் யஷ்வந்த்ராவ்வுடன் இணைந்து முதலாம் சாஹூவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். மொகலாயர்களுடன் கி.பி.1718ல் ஒப்பந்தம் நிறைவேறியவுடன் பாலாஜி விஸ்வநாத் அஸ்தா, யெல்வி முதலிய வெரோனா சமவெளியில் யஷ்வந்த்ராவ்வின் ஜாகீர்களை பிடித்துக்கொண்டு பன்ஹாலா கோட்டையை பிடிக்க விரைந்து வர அப்தி கிராமத்திற்கு அருகில் இரு படைகளும் மோதியதில் யஷ்வந்த்ராவ் போரில் தோற்று மரணமடைந்தார். பின்னர் மொகலாய அரசிலும் ஆதிக்கத்தை செலுத்திய பின்னர் கி.பி.1719 அக்டோபரில் சாஹூவின் சேவையிலிருந்து ஓய்வு பெற்று பூனே அருகிலுள்ள சாஸ்வாத் கிராமத்தில் தங்கி அங்கேயே கி.பி.1720 ஏப்ரல் 12ல் மரணமடைந்தார்.

7) முதலாம் பாஜி ராவ் : (கி.பி.1720-1740)

சரித்திரத்தில் புகழ்பெற்ற பாஜிராவ்-மஸ்தானி காதல் கதையின் நாயகன் இவரே. கி.பி.1700 ஆகஸ்ட் 18ல் 6வது பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்-இராதாபாய் பார்வே தம்பதியருக்கு மூத்த மகனான இன்றைய நாஸிக் மாவட்டத்திலுள்ள சின்னார் என்னும் ஊரில் பிறந்தார். இளமையில் தனது தந்தையினால் போர் பயிற்சி அளிக்கப்பட்டும் சமஸ்கிருதத்தில் எழுத படிக்க பேசவும் கற்றுக்கொண்டார். தந்தையுடன் கி.பி.1719ல் மொகலாயப் போரிலும் அதை தொடர்ந்த மராத்திய அரசின் எல்லை விரிவாக்க போர்களிலும் கலந்து கொண்டார். தந்தைக்கு பிறகு அடுத்த மராத்திய பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். இவர் போரிட்ட 41 போர்களிலும் தோல்வியை தழுவியதேயில்லை.

கி.பி.1721ல் மொகலாய அரசர் முஹம்மது ஷாவால் நியமிக்கப்பட்ட தக்காண வஸீரான முதலாம் நிஜாம்-உல்-முல்க் ஆஸப் ஜாவை சந்தித்தார். இவர் பின்னாளில் வளர்ந்து வருவதை கண்ட மொகலாய பேரரசர் இவரை தக்காணத்திலிருந்து ஆவாத்க்கு (அயோத்தி) மாற்ற இவர் புரட்சி செய்யவே மொகலாயப் படைகளை சாக்ஹர்-கேடா போர்களத்தில் மராத்திய படைகளின் உதவியால் தோற்கடித்தார். கி.பி.1725ல் நிஜாம் கர்நாடக பகுதிகளிலுள்ள மராத்திய வரிவசூல் செய்பவர்களை வெளியேற்றினார். பின்னால் யார் மராத்திய அரசர் கோலாப்பூரா அல்லது சதாராவா? என்று குழப்பம் இருப்பதாக கூறி மராத்தியர்களுக்கு கொடுக்க வேண்டிய வரிவசூலின் பங்கை கொடுக்காமலும் லோனி, பர்கெளன், படாஸ், சூபா மற்றும் பாராமதி பகுதிகளை தாக்கி கைப்பற்ற பாஜிராவ் நிஜாம்க்கு எதிராக கொரில்லா தாக்குதல் நடத்தி பேரர், மஹூர், மங்க்ருல்பிர் மற்றும் வாசிம் பகுதிகளை கைப்பற்றினார். பின்னர் கிழக்கு குஜராத் சென்று அதை தாக்கினார். பின்னர் பெர்ஹாம்பூர் நோக்கி சென்று அதையும் கைப்பற்ற நிஜாம் இவரை சந்திக்க எண்ணி ஓளரங்கபாத் அருகில் பால்கெட் என்னுமிடத்தில் சந்திக்க பேஷ்வாவின் படைகளால் நிஜாம் தோற்கடிக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். தோல்விக்கு பின்னர் முதலாம் சாஹூவை மராத்திய மன்னராக ஏற்றுக்கொண்டு அவருக்கு தக்காணத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை கொடுத்தார். மால்வா பிரதேசத்தை கைப்பற்றி அங்கும் வரி வசூலில் பங்கை பெற்றனர். பண்டல்கண்ட்டில் சத்ராசல் மன்னர் மொகலாயர்களுக்கு எதிராக தனி ராஜ்யம் நடத்தினார். கி.பி.1728 டிசம்பரில் மொகலாயப் படைகள் அவரை தாக்க அவர் பாஜிராவ்வின் உதவியை நாடினார். கி.பி.1729 மார்ச்சில் 25000 வீரர்களை அனுப்பி மொகலாயப் படைகளை தோற்கடித்து சத்ராசலை திரும்பவும் பண்டல்கண்ட்டில் மன்னராக்கினார். இதனால் அவர் பாஜிராவ்க்கு ஜாகிர்களையும் கொடுத்து தன் மகள் பேரழகி மஸ்தானியையும் திருமணம் செய்து வைத்தார். பின்னர் குஜராத் மற்றும் டெல்லியின் மீது படையெடுத்து தாக்கி கொள்ளையடித்தார். தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக உடல்நலம் குறைந்தார். ராவர்கேடி என்னுமிடத்தில் இராணுவ முகாம் முகாமிட்டு இருந்த சமயத்தில் விஷக்காய்ச்சலால் கி.பி.1740 ஏப்ரல் 28ல் மறைந்தார். ரனோஜி ஷிண்டேவிடம் தான் மறைந்த இடத்தில் நினைவிடம் கட்டவேண்டும் என்று கூற அவ்வாறே கட்டப்பட்டது. 

முதலாம் பாஜி ராவ்க்கு இரு மனைவிகள் 

1) காசிபாய் :

இவர் மகாத்ஜி கிருஷ்ண ஜோஸியின் மகள். இவருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். பாலாஜி பாஜி ராவ் (நானாசகேப்), ரகுநாத் ராவ் (ரகோபா) மற்றும் ஜனார்த்தன் ராவ் ஆகியோர். 

2) மஸ்தானி :

இவர் பண்டல்கண்ட்டின் இராஜபுத்ர மன்னரான சத்ராசல் மற்றும் அவரது பணிப்பெண்ணாக இருந்து மனைவியான முஸ்லீம் பெண்ணுக்கு பிறந்த மகள். மொகலாயர்களை எதிர்த்து நின்ற சத்ராஸல்க்கு உதவிபுரிந்ததால் தன் மகளை இவருக்கு மணம்புரிந்து கொடுத்தார். இவர்களுக்கு ஷாம்ஷெர் பகதூர் என்ற மகன் கி.பி.1834ல் பிறந்தார். இவர் முஸ்லிம் பெண்ணுக்கு பிறந்தவர் என்பதால் உபநாயனா சடங்குகளை நடத்த மறுத்தனர். கி.பி.1840ல் பாஜி ராவ் நோயினால் இறந்த குறைந்த காலத்தில் இவரும் மறைந்தார். சிலர் இவரை பாஜிராவ்வின் குடும்பத்தினர் விஷமிட்டு கொன்றனர் என்றும் சிலர் பாஜிராவ்வின் மரணத்தின் அதிர்ச்சியினால் இவர் மறைந்தார் என்று கூறுகின்றனர். இவரின் மரணத்தின்போது 6 வயது சிறுவனான இவரது மகனான ஷாம்ஷேர் பகதூரை பாஜிராவ்வின் மூத்த மனைவியான காசிபாய் தன் மகனை போல வளர்த்து அவருக்குரிய சொத்துகளை கொடுத்தார். இந்த மகன் கி.பி.1761ல் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களுக்கு ஆதரவாக போரிட்டு காயம்பட்டு சில நாட்களில் மறைந்தார். பாஜி ராவ்-மஸ்தானி காதல் கதையை பற்றி கி.பி.1925ல் பேசாபடம் ஒன்று எடுக்கப்பட்டது. அது முதல் தற்போது வரை நிறைய படங்களும் டிவி சீரியல்களும் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல இந்தி பட டைரக்டர் சஞ்சய் லீலாபன்சாலி அவர்களால் கி.பி‌.2015ல் ரன்வீர் சிங் நடிப்பில் பாஜிராவ் மஸ்தானி என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

8) பாலாஜி பாஜி ராவ் : (கி.பி.1740-1761)

கி.பி.1720 டிசம்பர் 8ல் பாஜிராவ்-காசிபாய் தம்பதியின் மூத்த மகனாக பூனாவில் பிறந்தார். இவர் நானா சாகிப் என்னும் குறிப்பிடப்படுகிறார். கி.பி.1857ல் இந்திய சுதந்திர போரில் கொல்லப்பட்ட நானா சாகிப் என்பவர் இரண்டாம் நானா சாகிப் என்பதும் இரண்டாம் பாஜி ராவ்வின் வளர்ப்பு மகன் என்பதும் வேறு. இவரின் காலத்தில் தான் மராத்தியர்களின் ஆதிக்கம் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பரவலாக பரவிற்று. ஆனாலும் இவர் தந்தையை போல இராணுவ தளபதியாக இல்லை. இவரின் ஆட்சியில் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் ஆப்கானியர்களிடம் தோல்வியை தழுவினார்கள். இவருக்கு கோபிகா பாய் என்ற மனைவியும் விஸ்வாஸ்ராவ், முதலாம் மாதவ் ராவ் மற்றும் நாராயண் ராவ் என்ற 3 மகன்களும் உண்டு. கி.பி.1758ல் அட்டோக் நகரையும் பெஷாவர் நகரையும் கைப்பற்றினார். இவரது காலத்தில் தான் மராத்திய அரசு சிறு சிறு ராஜ்யங்களாக ஹோல்கர்கள்,‌‌ சிந்தியாக்கள், போன்ஸ்லேக்கள் என்று பிரிந்து ஆட்சியை நடத்தினார்கள். பாலாஜி ராவ்வின் கடைசி காலத்தில் பேஷ்வாவை விட இராணுவ தளபதிகள் செல்வாக்கு பெற ஆரம்பித்தனர். இவர் காலத்தில் பூனேவில் பார்வதி கோயில் கட்டப்பட்டது.  காட்ரேஜ்க்கு அருகில் இவரால் கட்டப்பட்ட அணையினால் இன்றும் பூனேவுக்கு நல்ல குடிநீர் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.  மூன்றாம் பானிபட் யுத்தத்தில் இவரது மூத்த மகனான விஸ்வாஸ் ராவ் மறைந்தார். மேலும் இவரது சித்தப்பாவான சிமோஜி அப்பா அவர்களின் மகனான இவரது உற்ற நண்பனும் சகோதரருமான சதாசிவராவ் பாஹூ மறைவு செய்தி அறிந்தும் துக்கத்தில் கி.பி.1761 ஜூன் 23ல் மறைந்தார்.

9) முதலாம் மாதவ் ராவ் : (கி.பி.1661-1672)

பாலாஜி பாஜிராவ்க்கு பின்னர் அவரது மகனான இவர் 9வது பேஷ்வாவாக ஆனார். இவர் கி.பி.1745 பிப்ரவரி 15ல் சாவ்னூர் என்னுமிடத்தில் பாலாஜி பாஜிராவ்-கோபிகா பாய்க்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது அண்ணனான விஸ்வாஸ் ராவ் மூன்றாம் பானிபட் யுத்தத்தில் மரணமடைந்தார். கி.பி.1858 டிசம்பர் 9ல் பூனேவில் ரமாபாய் என்பவரை மணந்தார். மூன்றாம் பானிபட் யுத்தத்திற்கு பிறகு இவரின் தந்தை மறையவே இவர் 16வயதில் பேஷ்வாக பதவியேற்றார். இவரது தந்தையின் சகோதரரான ரகுநாதராவ் இவருக்கு பாதுகாவலராக ஆனார். பின்னர் பிப்ரவரி 1762ல் இருவரும் இணைந்து கர்நாடக நிஜாம் மீது படையெடுக்க ரகுநாதராவ் இவருடன் கொண்ட பிணக்குகளால் பாதி வழியிலிருந்து பூனே திரும்பினார். மாதவராவ் கர்நாடக நவாப்புடன் போரிட்டு பின்னர் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தி திரும்பினார். இந்த பிணக்குகளுக்கு பிறகு ரகுநாதராவ் வாட்கெளல் மாவல் பகுதிக்கு சென்று தனி இராணுவத்தை ஆரம்பித்தார். அக்கம்பக்கமுள்ள கிராமங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார். இதனால் கோபப்பட்ட மாதவ் ராவ் மராத்திய படைகளுடன் வர ரகுநாதராவ் மாதவ்ராவ்வை தோற்கடித்து கைது செய்தார். பின்னர் அவர்களுக்கிடையே ஒப்பந்தம் நிறைவேறியது. கி.பி.1763ல் நிஜாம் மீது போர் தொடுத்து ஓளரங்காபாத் சென்று நிஜாம்மை தோற்கடித்து திரும்பினார். பின்னர் கி.பி.1764ல் கர்நாடக ஹைதர் அலி மீது படையெடுக்க போர் ஒரு வருடங்களுக்கு மேல் நீடிக்க மாதவ் ராவ் ரகுநாதராவ்வை உதவிக்கு அழைக்க அவர் ஹைதர் அலியுடன் செய்த ஒப்பந்ததால் வர மறுக்கவே வெற்றியில்லாமல் திரும்ப வேண்டியதாயிற்று. கி.பி.1767ல் மூன்றாவது முறையாக ஹைதர் அலியின் மீது போர் தொடுக்க சிரா மற்றும் மதுகிரி கோட்டைகளை வென்றார். மதுகிரி கோட்டையில் ஹைதர் அலியால் சிறை வைக்கப்பட்ட கேளடி நாயக்கர்களின் கடைசி ராணியான ராணி விரும்மாஜி மற்றும் அவர் மகனை மீட்டு பத்திரமாக பூனேவுக்கு அனுப்பி பாதுகாத்தார்.

கி.பி‌1767 டிசம்பரில் பிரிட்டிஷ் ஆபிஷர் மாஸ்தின் என்பவர் பூனேவுக்கு வந்து இவரை சந்தித்து தங்களது இராணுவத்தை அமைக்க இடம் கேட்க இவர் மறுத்துவிட்டார். ஹைதர் அலியை சமாளிக்க உதவுவதற்கு இந்த இராணுவத்தை உபயோகப்படுத்தலாம் என்று கூறவும் பிரிட்டிஷாரின் நோக்கத்தை புரிந்து கொண்ட மாதவ் ராவ் பிரிட்டிஷாரின் கோரிக்கையை நிராகரித்தார். கி.பி.1768ல் ரகுநாதராவ் வடக்கில் அரசை விரிவுபடுத்த முயற்சியில் இறங்கி அதில் தோல்வியுற்று திரும்பினார். திரும்பி வந்தவுடன் மாதவ்ராவ்வின் மீது போர் தொடுக்க முயற்சிக்க ஜூன் 1768ல் ரகுநாதராவ்வை போரில் சிறைப்பிடித்து பூனேவில் உள்ள சனிவார் வாடா வீட்டுச் சிறையில் அவரது தளபதியுடன் வைத்தார். கி.பி.1769 செப்டம்பரில் பார்வதி கோயிலில் தரிசனம் முடித்து விட்டு திரும்பும்போது இவரது தளபதியான ராம்சிங் என்பவரால் வாளால் தாக்கப்பட்டார். மயிரிழையில் தோள்பட்டையில் இறங்கிய வாள்வீச்சில் தப்பிய இவர்  ராம்சிங்கை கைதுசெய்து சிறையில் அடைத்தார்‌. ஜூன் 1770ல் ஹைதர் அலி மீது படையெடுக்க முயற்சி செய்த சமயத்தில் நுரையீரல் நோயினால் (டியூபர்குளோஸிஸ்) அவதிப்பட்டார். ஆங்கில மருத்துவம் பார்த்தும் இவரது உடல்நிலை மோசம் அடைந்து கி.பி.1772 நவம்பர் 8ல் தேயூர் சிந்தாமணி கணேஷா கோயிலில் மரணமடைந்தார். இவருடன் இவர் மனைவியான ரமாபாய் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தார்.

10) நாராயண் ராவ் : (கி.பி.1772-1773)

முதலாம் மாதவ் ராவ்க்கு பின்னர் அவரது தம்பியான நாராயண் ராவ் 10வது பேஷ்வாவாக பதவியேற்றார். 17 வயதில் பதவிக்கு இவர் வந்த புதிதில் வீட்டுசிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரகுநாதராவ் இவருக்கு பாதுகாவலராக பணியாற்றினார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. கி.பி.1773 ஆகஸ்ட் 30ல் ரகுநாதராவ்வின் மனைவியான ஆனந்தி பாய் மற்றும் துலாஜி பாவர் ஏற்பாட்டின்படி சுமர்சிங் கார்டி என்பவர் சனிவார் வாடாவில் புகுந்து நாராயண்ராவ்வை கொல்ல முயல அவர் மாமாவான ரகுநாதராவ்விடம் ஒடி தப்ப முயல பின்னர் கொல்லப்பட்டார். 

11) ரகுநாத் ராவ் : (கி.பி.1773-1774)


10 வது பேஷ்வாவான நாராயண்ராவ்வை படுகொலை செய்து பேஷ்வா பதவியை பிடித்த இவர் முதலாம் பாஜிராவ்வின் இளைய மகன். தனது சகோதரர் பாலாஜி பாஜிராவ்வின் மூத்த மகனான முதலாம் மாதவ்ராவ்க்கு தொல்லைகள் கொடுத்து வந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் வந்த அவரின் தம்பியான தனது சகோதரரின் கடைசி மகனான நாராயண்ராவ்வை இவரது மனைவியான ஆனந்தி பாய்யின் உதவியால் படுகொலை செய்து பதவியை பிடித்தார். பதவியை பிடித்த குறைந்த காலத்திலையே நானா பட்னாவிஸ் மற்றும் 11 நிர்வாகத்தாரால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். நாராயண்ராவ் படுகொலைக்கு காரணமான இவருக்கு நீதிபதி ராம் சாஸ்திரியால் இவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. கி.பி.1774ல் 11 நிர்வாகத்தாருடன் ஏற்பட்ட போரில் தோற்று குஜராத்தின் "காம்பத்" நகரிலிருந்து ஆங்கிலேயரிடம் உதவி தேடி ஓடினார். ஆங்கிலேயரிடம் சூரத்தில் ஒப்பந்தம் செய்து தானே, வாசை மற்றும் சாஸ்டி பகுதிகளை அவர்களுக்கு கொடுத்தார். ஆனாலும் ஆங்கிலேயர் 11 நிர்வாகத்தாருடன் மோதாமல் அவர்களுடன் "புரந்தர் ஒப்பந்தம்" செய்து கொண்டனர். இதனால் ரகுநாத்ராவ் போர்த்துகீசியர்களின் உதவியை நாடி பாம்பே வந்தார். இந்த போரில் கிழக்கிந்திய கம்பெனி படையினர் தோற்கடிக்கப்பட்டாலும் ரகுநாத்ராவ்வால் பேஷ்வா பதவியை திரும்ப பெறமுடியவில்லை. அப்படியே கி.பி.1783 டிசம்பரில் தனது நம்பிக்கைக்குரிய சர்தாரின் பாதுகாப்பில் இருக்கும்போது மரணமடைந்தார். இவரது மரணத்துக்கு பின்னர் இவரது மனைவியான ஆனந்திபாய் மற்றும் இவரது மகன்களான இரண்டாம் பாஜிராவ் மற்றும் இரண்டாம் சிமாஜிராவ் மற்றும் வளர்ப்பு மகனான அம்ரித் ராவ் ஆகியோர் பேஷ்வாவின் மந்திரியான நானா பட்னாவிஸ்ன் பாதுகாப்பில் வளர்ந்தனர்.

12) இரண்டாம் மாதவ் ராவ் : (கி.பி.1774-1796)

இவர் 10வது பேஷ்வாவான நாராயண்ராவ்வின் மகன். அவர் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அவர் மனைவி கங்காபாய்யின் கர்ப்பத்தில் இருந்தவர். தந்தையின் மரணத்திற்கு பிறகு பிறந்தவர். ரகுநாத்ராவ்வை பேஷ்வா பதவியிலிருந்து விரட்டப்பட்ட பின்னர் புதியதாக பிறந்த இவரை பேஷ்வாவாக நானா பட்னாவிஸ் அவர்களால் மான்மொழியப்பட்டு 40 நாள் குழந்தையாக இருந்தபோது பேஷ்வாவாக அறிவிக்கப்பட்டார். கி.பி.1775-82 வரை நடந்த முதலாம் ஆங்கிலேய-மராத்திய போருக்கு பின்னர் நடந்த "சால்பாய் ஒப்பந்தத்தின்" படி ஆங்கிலேயர்கள் போரில் தோல்விக்கு பின்னர் மகாத்ஜி ஷிண்டே மாதவ்ராவ்வை முறைப்படி பேஷ்வாவாக அறிவிக்க ஆங்கிலேயரும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் அதை அதிகாரங்களும் நானா பட்னாவிஸ் மற்றும் மகாத்ஜி ஷிண்டே கைகளில் இருந்தது. கி.பி.1788ல் பண்டல்கண்ட்டின் ஆப்கானிய ரோஹில்லா வம்சத்தை சேர்ந்த "குலாம் காதிர்" டெல்லியை தாக்கி இரண்டாம் ஷா ஆலத்தை பதவியிலிருந்து இறக்கி ஃபிடர் பக்த்தை ஆட்சியில் அமர்த்தி மொகலாய அரச குடும்பத்தை படாத பாடு படுத்தினான். மகாத்ஜி ஷிண்டே திரும்ப டெல்லியின் மீது படையெடுத்து "குலாம் காதிர்"ரை விரட்டி கொன்று சிறைப்பட்டிருந்த கண்கள் குருடாக்கப்பட்டிருந்த மொகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலத்தை மீண்டும் மன்னராக்கினார்.


கி.பி.1790ல் ராஜபுத்திரர்களை "பதான்" போர்களத்தில் மராத்தியர்கள் வென்றனர். மாதவ்ராவ் பூனேவில் தனி விலங்கியல் பூங்கா அமைத்தார். அதில் சிங்கங்களும் காண்டாமிருகங்களும் வளர்க்கப்பட்டன. நடமானமாடும் மானையும் அங்கு வளர்த்தார். மாதவ்ராவ் தனது அதிகாரத்தில் நானா பட்னாவிஸ்ஸின் தலையீடு அதிகமாக இருந்ததாலும் பூனேவிலுள்ள பேஷ்வாவின் மாளிகையான சனிவார் வாடாவின் மாடியிலிருந்து குதித்து தனது 21வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

13) இரண்டாம் பாஜி ராவ் : (கி.பி.1796-1802) & (கி.பி.1803-1818)


ரகுநாத் ராவ் - ஆனந்தி பாய் தம்பதிக்கு  மகனான கி.பி.1775ல் பிறந்த இவர் ரகுநாத்ராவ்வின் மரணத்திற்கு பின்பு நானா பட்னாவிஸ்ஸின் பாதுகாப்பில் இருந்த இவர் இரண்டாம் மாதவ்ராவ்வின் தற்கொலைக்கு பின்னர் அவருக்கு வாரிசு இல்லாததால் பட்னாவிஸ் இவரை சிறையிலிருந்து விடுவித்து இரண்டாம் பாஜிராவ்வான இவரை அடுத்த பொம்மை பேஷ்வாவாக நியமித்தார். கி.பி.1800ல் நானா பட்னாவிஸ் மறைவுக்கு பின்னர் தெளலத் ராவ் சிந்தியா பேஷ்வாவின் அதிகாரங்களை எடுத்துக்கொண்டார். சிந்தியா தனது அரசியல் எதிரிகளை விலக்க ஆரம்பிக்க பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தனது பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ் கர்னல் வில்லியம் பால்மர் உதவியை நாடினார். சிந்தியாவின் போட்டியான யஷ்வந்த் ராவ் ஹோல்கர் சிந்தியாவின் அதிகாரத்தை விளக்குவதற்காக பூனா மீது படையெடுத்து வர ஏற்கனவே ஹோல்கரின் தம்பியான விதோஜிராவ் ஹோல்கர் பேஷ்வாவின் ஆணையினால் கொல்லப்பட்டதால் பேஷ்வா அந்த நேரத்தில் பூனாவில் இல்லாத சிந்தியாவை அழைக்க பேஷ்வா-சிந்தியா கூட்டுப்படைகளை ஹோல்கரின் படைகள் கி.பி.1802 அக்டோபர் 25ல் தோற்கடித்து விரட்டியது. இரண்டாம் பாஜி ராவ் பாம்பாய்க்கு ஒடி ஆங்கிலேயரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். இரண்டாவது ஆங்கிலேய-மராத்திய போரில் கி.பி.1803ல் ஆங்கிலேயர் வெற்றி பெற்று திரும்பவும் இரண்டாம் பாஜிராவ்வை பேஷ்வாவாக திரும்பவும் நியமித்தனர். பிண்டாரிகளின் கொள்ளைகளை தடுத்து நிறுத்தாததாலும் அவர்களுக்கு மறைமுக ஆதரவு இருந்ததாலும் ஆங்கிலேயர்கள் கி.பி.1817-18ல் மூன்றாவது ஆங்கிலேய-மராத்திய போரில் குதித்தனர். இந்த போரில் மராத்திய படைகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு கிழக்கிந்திய கம்பெனி இரண்டாம் பாஜிராவ்வை ஒப்பந்தம் செய்ய கட்டாயப்படுத்தி பூனா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் பிரிட்டிஷ்ஷாரை தாக்க முயற்சிக்க அவர்களால் விரட்டியடிக்கப்பட்டு 5 மாதங்கள் உதவிகள் தேடி ஓடி கடைசியில் பிரிட்டிஷ் கர்னலிடம் சரணடைய கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்க்ஸ்ஸால் மன்னிக்கப்பட்டு வருடாந்திர பென்ஷன் பெற்றுக்கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 33 ஆண்டுகள் பெயரளவுக்கு பேஷ்வாவாக இருந்து பிதுர் என்னும் ஊரில் கி.பி.1851ல் தனது 76வது வயதில் மரணமடைந்தார்.

14) அம்ரூத் ராவ் : (கி.பி.1802-1803)

இந்தூரின் ஆட்சியாளரான யஷ்வந்தராவ் ஹோல்கரால் இரண்டாம் பாஜி ராவ் கி.பி.1802ல் பூனா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் உதவிக்கு தப்பி சென்றார். இந்த நேரத்தில் இந்தூரின் ஹோல்கரால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டவர் தான் அம்ரூத் ராவ். இவர் 11வது பேஷ்வாவாக இருந்த ரகுநாத் ராவ்வின் வளர்ப்பு மகன். அம்ரூத் ராவ்வின் மகனான விநாயக் ராவ்வை 12வது பேஷ்வாவான இரண்டாம் மாதவ் ராவ்வின் விதவை மனைவி தன் மகனாக தத்து எடுத்திருந்தததால் ஆட்சிக்கு உதவியாக அவரையும் ய்ஷ்வந்த்ராவ் ஹோல்கர் நியமித்தார். கி.பி.1803ல் இரண்டாம் பாஜி ராவ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளின் உதவிகொண்டு வர அம்ரூத் ராவ் மற்றும் அவர் மகனான விநாயக் ராவ் பூனேவுக்கு தப்பி ஓடினர். பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மூலம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு மாதாந்திர பென்ஷனை பெற்றுக்கொண்டு பண்டல்கண்டில் உள்ள எஸ்டேட்டில் காலம் கழித்து கி.பி.1824ல் மறைந்தார்.

15) இரண்டாம் நானா சாகிப் : (கி.பி.1851-1857)


இவர் 13வது மராத்திய பேஷ்வாவான இரண்டாம் பாஜி ராவ்வின் வளர்ப்பு மகன்.  கி.பி.1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் (இந்திய சுதந்திர போர்) பங்கு பெற்று மராத்திய அரசுரிமையை மீட்க முயற்சி செய்து தோல்வியுற்று நோபாளத்திற்கு தப்பி ஓடி அங்கையே மரணமடைந்தார். கி.பி.1824ல் பிறந்தார்.  இவரின் தந்தை பெயரளவுக்கு பேஷ்வாவாக இருந்த இரண்டாம் பாஜிராவ்வுக்கு இவரையும் இவரது மூத்த சகோதரரையும் தத்து மகன்களாக கி.பி.1827ல் கொடுத்தார். டல்ஹெளஸியின் வாரிசில்லா கொள்கையின் விளைவாக இராஜ்யங்களை பதவிகளை இழந்தவர்கள் எல்லாம் இணைந்து ஆங்கிலேயரை நாட்டை விட்டு விரட்ட முனைந்து கான்பூர்ரை கைப்பற்றினார்கள். பின்னர் கான்பூர்ரை மீண்டும் ஆங்கிலேய படை கைப்பற்றியது. இந்த சமயத்தில் இரண்டாம் நானா சாகிப் மலேரியா காய்ச்சலினால் அவதிப்பட்டதாகவும் பின்னர் கான்பூரை மீண்டும் கைப்பற்ற அவரின் தளபதியான தாந்தியா தோபே முயற்சித்தும் தோல்வியை தழுவினார்கள. கி.பி.1858 ஜூன் மாதத்தில் தாந்தியா தோபே இவர் பேஷ்வாவாக அங்கீகரித்து போராட்டத்தை தொடர்ந்தார்.ஆனாலும் போரின் தோல்விக்கு பின்னர் நானா சாகிப் எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. கி.பி.1859ல் தன் குடும்பத்துடன் நோபாளம் சென்றதாகவும் அங்கு காட்டு புலியினால் அவர் கொல்லப்பட்டதாகவும் பிரிட்டிஷ் செய்திகள் தெரிவித்தாலும் கி.பி.1861ல் அவரை நேபாளில் சந்தித்ததாகவும் அவரின் இருப்பு 1888 வரை அங்கேயே இருந்ததாகவும் கிருஷ்ணாராம் என்பவர் தெரிவிக்கிறார். ஆனால் நானா சாகிப்பின் ஆசிரியர் அவர் குஜராத்தில் சினார் என்னுமிடத்தில் யோகேந்திர தயானந்த் மஹாராஜ் என்ற பெயரில் கி.பி.1903 வரை வாழ்ந்து மறைந்தததாக கூறுகிறார். எது எப்படியோ இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இரண்டாம் நானா சாகிப்பை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அங்கீகரித்து கான்பூரில் நானா பார்க் அமைத்து அவரையும் அவர் சகோதரர் பாலாராவ்வையும் அரசு கெளரவப்படுத்தியது.

இவர்களை எல்லாம் குறிப்பிட்டு விட்டு மகாத்ஜி ஷிண்டேவை மற்றும் பல முக்கியமான மராட்டிய மாவீரர்களை குறிப்பிடாமல் விட்டால் மராத்திய சரித்திரம் முழுமை பெறாது. 

அன்னாஜி தத்தோ சச்சிவ் :

இவர் சத்ரபதி சிவாஜியின் அஷ்ட பிரதான் சபையில் தலைமை வகித்தவர். சிவாஜியின் தலைமையின் கீழ் கி.பி.1660ல் இணைந்தார். அதற்கு முன்பு கிராமத்து கணக்குகள் மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் குல்கர்னி பதவியில் சங்கமேஸ்வரில் இருந்தார். இவரின் ஆலோசனையின் பேரில் தான் சிவாஜியின் மராத்திய ராஜ்யம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு மூன்று மந்திரிகளால் ஆளப்பட்டு வந்தது.  இவர் கொங்கன் பகுதிக்கு பொறுப்பான சர்கார்குன்னாக ஆண்டு வந்தார். கி.பி.1667ல் சிவாஜி இவரை நிலச்சீர்திருத்தங்கள் செய்வதற்கு பொறுப்பாக நியமித்தார். இவரின் நிர்வாகத்தில் நில அளவை, தரிசல் நிவங்களை விளை நிலங்களாக மாற்றல், விவசாயிகளுக்கு போதிய உற்பத்தி அறிவை ஊட்டுதல் போன்ற சீரத்திருங்கள் செய்யப்பட்டது. இவர் கி.பி.1659ல் பன்ஹாலா மற்றும் பாவன்காத் கோட்டையை கைப்பற்றினார். சிவாஜியின் மகனான சாம்பாஜியின் தவறான பழக்கத்தினால் சிவாஜி அவரை பன்ஹாலா கோட்டையில் வீட்டுச் சிறையில் இவரின் பாதுகாப்பில் தான் வைத்தார். சிவாஜியின் மரணத்திற்கு பிறகு அவரின் மனைவியான சோர்யா பாய் தன் 10 வயது மகனான இராஜாராம்மை அடுத்த சத்ரபதியாக்க முனைந்து அன்னாஜி மற்றும் பேஷ்வா மோரேபண்ட் பிங்க்ளே ஆகியோர் உதவியை நாடவும் அவர்களும் இராஜாராம்மை அடுத்த சத்ரபதியாக்க மராத்திய படைகளின் உதவியுடன் இராஜாராம் பன்ஹாலா கோட்டையை கைப்பற்றி ராய்கத்தை அடைந்து இராஜாராம்மின் படைகளை தோற்கடித்து அடுத்த சத்ரபதியாக ஆனார். இராஜாராம்க்கு உதவிய அன்னாஜி மற்றும் மற்ற அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஒரு வருடத்திற்குள் சாம்பாஜி இவரை சிறையிலிருந்து விடுவித்தார். மொகலாய இளவரசனான இரண்டாம் அக்பர் தன் தந்தை ஓளரங்கசீப்பை எதிர்த்த கலகம் செய்து போது சாம்பாஜியின் உதவியை நாடி வந்தார். அவரிடம் அன்னாஜி மற்றும் மற்ற அமைச்சர்கள் இராஜாராம்காக தக்காணத்தில் சிறிய அரசை ஏற்படுத்தி தர உதவுமாறு கேட்க இவர் இந்த விஷயத்தை சாம்பாஜியிடம் தெரிவிக்க அவர் அன்னாஜி மற்றும் இதர அமைச்சர்கள் அனைவரையும் தூக்கிலிட்டார்.

பாலாஜி குன்ஜர் :

இவர் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்வின் கீழ் சர்தார் மற்றும் மந்திரியாக இருந்தார். பேஷ்வா மாதவ்ராவ் மறைவுக்கு பின்னர் இரண்டாம் பாஜி ராவ் மற்றும் நானா பட்னாவிஸ் இடையே நல்ல நட்புறவை வளர்ப்பதிலும் இரண்டாம் பாஜி ராவ்வை அடுத்த பேஷ்வாவாக நானா பட்னாவிஸ் நியமித்ததில் இவரின் பங்கு தான் நிறைய. பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் மற்றும் நானா பட்னாவிஸ் புரந்தர் கோட்டையை சுற்றியுள்ள 14 கிராமங்களை இவருக்கு ஜாகிராக கொடுத்தனர். வித்தோஜிராவ் ஹோல்கர் அம்ரூத்ராவ்வுக்கு வேலை பார்ப்பதாக உறுதி எடுத்தவுடன் இரண்டாம் பாஜிராவ்வின் ஆணைப்படி அவரை கைது செய்து பூனாவுக்கு கொண்டு போகப்பட்டு யானையின் காலால் மிதித்து கொல்லப்பட ஆணையிட்டு அவ்வாறே கொல்லப்பட்டார். இதனால் கோபமுற்ற அவரின் சகோதரர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர் கி.பி.1802 அக்டோபரில் பூனா யுத்தத்தில் பேஷ்வா இரண்டாம் பாஜிராவவை தோற்கடிக்க அவர் பம்பாய் சென்று கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை நாடினார். ஒப்பந்தம் கையெழத்தானவுடன் பாலாஜி குஞ்ஞாரிடம் படைகளை திரட்ட பணம் கொடுத்து படை திரட்டி அம்ரூத் ராவ்வை பேஷ்வா பதவியிலிருந்து விரட்டி இரண்டாம் பாஜிராவ்வை மீண்டும் பேஷ்வாவாக ஆக்கினார். பிரிட்டிஷ்ஷாருக்கு எதிராக திரிம்பக்ஜி டெங்கிள் மற்றும் பிண்டாரிகளுடன் இணைந்து மராத்தியர்களின் அந்திம காலத்தில் போராடினார். கடைசியில் கி.பி.1816ல் புந்தார்பூரில் மரணமடைந்தார். 

பாபு கோகலே :

இவர் மூன்றாம் ஆங்கிலேய-மராத்திய போரில் சேனாதிபதியாக பதவி வகித்தார். கி.பி.1818ல் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்வால் மூன்றாம் ஆங்கிலேய-மராத்திய போரில் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். கி.பி.1818 பிப்ரவரி 19ல் அஷ்தி போர்களத்தில் (இன்றைய சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது) கையில் வாளுடன் இருந்தாவாறே மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள் மூத்த மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இரண்டாம் மனைவிக்கு குழந்தையில்லை. முதல் மகன் இளமையிலையே மரணமடைந்தார். இரண்டாவது மகனும் அஷ்தி போர்களத்தில் கொல்லப்பட்டார்.

கோவிந்த் பண்ட் புண்டேலா :

இவர் மராத்திய படைகளின் தளபதியாக கி.பி.1733-1760 வரை இருந்தார். புண்டல்கண்ட்டின் ராஜாவான சத்ராசல் முதலாம் பாஜிராவ்வுக்கு தன் மகள் மஸ்தானிக்கு சீதனமாக 1/3 ராஜ்யத்தை கொடுத்தார். அந்த ராஜ்யத்திற்கு இவரை தான் பொறுப்பாளராக முதலாம் பாஜி ராவ் நியமித்தார். ஆரம்பத்தில் இவர் மராத்திய தளபதிகளான மால்ஹர்ராவ் ஹோல்கரின் கீழ் கொரில்லா போர் மற்றும் நிர்வாகத்தில் நல்ல திறமைகளை பெற்றார். அந்தாஜி மங்கேஷ்கர் காந்தேவின் சிபாரிசின் பேரில் பாஜி ராவ் சில வேலைகளை இவரிடம் கொடுக்க இவர் அதை சிறப்பாக முடிக்கவே பாஜிராவ்வின் பிரியமான தளபதிகளுள் ஒருவரானார். சத்ராஸல் கொடுத்த இராஜ்யத்திற்கு இவரை பொறுப்பாளராக நியமித்தார். மராத்திய அரசுக்கு தேவைப்படும் நேரத்தில் வேண்டிய நிதியை திரட்டி தருபவராக  இருந்தார். கி.பி. 1760 டிசம்பர் 17ல் மூன்றாம் பானிபட் யுத்தத்தில் சதாசிவராவ் பாஹூவின் கீழ் திறம்பட போரிட்டார். ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலியை துணிச்சலுடன் எதிர்த்து நின்று போரிட்டு அவரை உதவி இல்லாமல் ஆக்கிய நேரத்தில் ஆப்கானிய அப்தாலியின் தளபதியான அடாய்கானால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இப்ராஹீம் கான் கர்டி :

இவர் மராத்திய பேஷ்வாவின் கீழ் தளபதியாக பணிபுரிவதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம்மிடம் பணிபுரிந்தவர். மராத்திய அரசில் தளபதியாக இருந்த இவரின் கீழ் 10000 வீரர்கள் கொண்ட காலாட்படை மற்றும் பீரங்கிபடை இருந்தது. இவர் கி.பி.1761ல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானிய வீரர்களால் பிடிபட்டு கொல்லப்பட்டார்.

மகாதாஜி ஷிண்டே :

இவர் குவாலியர்களின் சிந்தியா பரம்பரையை தோற்றுவித்த ரனோஜிராவ் ஷிண்டேவின் 5வது மகனாக கி.பி.1730ல் பிறந்தார். கி.பி.1761ல் மூன்றாம் பானிபட் போரின் தோல்விக்கு பின்னர் வட இந்திய பகுதிகளில் மராத்தியர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதில் இவரின் பங்கு முக்கியமானது. இவரின் ஆட்சியில் குவாலியர் மராத்தியர்களின் அரசில் முக்கியமான மாநிலமாக இருந்தது. மொகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம்முடன் கி.பி.1771ல் டெல்லியில் ஒப்பந்தம் செய்து அவரின் பாதுகாவலராக இருந்தார். கி.பி.1772-73ல் ரோஹில்கண்ட்டின் ரோஹில்லாக்களை தோற்கடித்து அவர்களை தங்களுக்கு அடங்கியவர்களாக ஆக்கியதில் இவரின் பங்கு முக்கியமானது. முதலாம் ஆங்கிலேய-மராத்திய போரில் வாட்கெளன் போரில் ஆங்கிலேய படைகள் தோற்கடித்து அவர்களை கி.பி.1782ல் ஒப்பந்தம் செய்ய வைத்தார். கி.பி.1782ல் ஆப்கானிய துரானிய வம்சத்தின் ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலியின் மகனான தைமூர் ஷா துரானி சீக்கியர்களை வென்று லாகூரை கைப்பற்றிய சமயத்தில் ஆப்கானியர்களை விரட்டி அவர்களை விரட்டியடித்தார். லாகூரில் கொள்ளையடித்த பணம் கொண்டு சோம்நாத் கோயிலுக்கு மூன்று வெள்ளி கதவுகளை செய்து கொடுக்க அக்கோயிலில் உள்ள துறவிகள் அதை மறுக்க அதை மத்திய பிரதேசத்திலுள்ள மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலுக்கும் உஜ்ஜையினியின் கோபால் மந்திருக்கும் கொடுத்தார். கி.பி.1790ல் இராஜபுத்திர அரசுகளான ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூரை பதான் மற்றும் மெர்ட்டா போர்களில் வென்றார். கி.பி.1784ல் மொகலாயர்கள் இவருக்கு நைப்-வகில்-உல்-முத்லக் பட்டத்தையும் அமீர்-உல்-உமரா பட்டத்தையும் கொடுத்தனர். கி.பி.1788ல் ரோஹில்லாக்களின் "குலாம் காதிர் கான்" டெல்லியை கைப்பற்றி இரண்டாம் ஷா ஆலம்மை சிறைப்படுத்தி கண்களை குருடாக்கி கொடுமைப்படுத்தினார். இளவரசர் இரண்டாம் அக்பரையும் அலங்கோல நடனம் ஆட வைத்தார். அரண்மனை பெண்டிர்கள் குலாம் காதிர் கானின் கொடுமையை தாங்காமல் யமுனை ஆற்றில் விழந்து தற்கொலை செய்து கொண்டனர். பொம்மை அரசராக என்பவரை நியமிக்க விஷயமறிந்த மகாதாஜி ஷிண்டே படைகளுடன் வந்து பொம்மை அரசனையும் வீழ்த்தி சிறையில் வைத்து "குலாம் காதிர் கான்"னை கொன்று இரண்டாம் ஷா ஆலம்மை மீண்டும் மொகலாய பேரரசர் பதவியில் அமர்த்தினார்.பூனே அருகிலுள்ள வானவ்டி அருகில் முகாமிட்டு இருந்த சமயத்தில் கி.பி.1794 பிப்ரவரி 12ல் இறந்தார். இவருக்கு 9மனைவிகளும் 2 மகள்களும் இருந்தாலும் நேரிடை ஆண்வாரிசு இல்லாததால் இவரின் பேரனான தெளலத் ராவ் சிந்தியா அடுத்த குவாலியர் அரசராக பதவிக்கு வந்தார்.

மால்ஹர் ராவ் ஹோல்கர் :

இவர் மராத்திய அரசின் புகழ்பெற்ற சுபேதார்களில் ஒருவர். ஆரம்பகாலத்தில் ரனோத்ஜி சிந்தியாவுடன் இணைந்து மராத்திய அரசை வட இந்தியாவில் பரப்பியவர். மராத்திய சதரபதியான முதலாம் சாஹூவின் காலத்தில் பேஷ்வாவால் இந்தூர் பகுதிகளை ஆள நியமிக்கப்பட்டார். இவரின் ஆரம்பகாலத்தில் இவரது மாமாவால் வளர்க்கப்பட்டார். அவர் மராத்திய சேனையில் குதிரைப்படையில் முக்கிய பங்கு வகித்தார். அவரின் வளர்ப்பில் இவர் குதிரைப்படையில் இணைந்து திறம்பட பணியாற்றினார். இவர் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் டெல்லி விஜயத்தில் (கி.பி.1719ல் மொகலாய பேரரசர் ஃப்ரூக்ஷியாரை டெல்லியில் வீழ்த்தி அவரை பதவியில் இருந்து அகற்றிய நிகழ்வு) இவரும் பங்கு வகித்தார். கி.பி.1720ல் நிஜாமுக்கு எதிரான போரில் பங்கு கொண்டார். கி.பி.1721ல் பேஷ்வா பாஜிராவ்வின் படையில் இணைந்து அவருக்கு நெருக்கமானார். கி.பி.1728ல் பால்கர் போரிலும் மால்வா போர்களிலும் முக்கிய பங்கு வகித்தார். கி.பி.1737ல் மொகலாயர்களுக்கு எதிரான டெல்லி போரிலும் போரத்துகீசியர்களுக்கு எதிரான கி.பி.1739ல் வாசைய் போரிலும் ரோஹில்லாகக்ளுக்கு எதிரான கி.பி.1748ல் நடந்த போர்களிலும் பங்கு கொண்டார். கி.பி.1754ல் கும்ஹெர் கோட்டை யுத்தத்தில் இவரது மகனான கன்தர்ராவ் ஹோல்கர் மரணமடைந்தார். இந்த நிலையில் இவரது மருமகளான அஹில்யாபாய் ஹோல்கர் உடன்கட்டை ஏறி உயிர் துறக்க இருந்ததை இவர் தடுத்து விட்டார்.  அவாதத்தின் மொகலாய ஆளுநரான சப்தர்ஜங்கின் உதவியாக ஆப்கானிய அஹ்மத் அலி அபதாலியை எதிர்த்து கி.பி.1754களில் போரிட்டார். கி.பி.1757ல் சுபேதாராக உயர்ந்தார். கி.பி.1760ல் சிகந்தராபாத்தில் நடந்த இரண்டாவது போரில் ஆப்கானிய தளபதி ஜஹான் கானால் மோசமாக தோற்கடிக்கப்பட்டார். மல்ஹர்ராவ் ஹோல்கர் கி.பி.1766ல் மறைந்தார். இவருக்கு பின்னர் இவரது இளவயது பேரன் இந்தூரின் அரசனாக ஆனார். ஆனாலும் அடுத்த வருடத்திலையே அவரும் மறையவே இவரது மருமகளான ஏற்கனவே உடன்கட்டை ஏறுவதை தடுத்த அஹில்யா பாய் ஹோல்கரே அடுத்து இந்தூரின் அரசராக பொறுப்பேற்றார். அஹில்யாபாய்யின் முயற்சியால் தான் காசி விஸ்வநாதர் கோயில் கி.பி.1780ல் திரும்ப கட்டப்பட்டது. ஓளரங்கசீப்பின் ஆணையால் கி.பி.1696ல் கியான்வாபி மசூதியாக மாற்றி கட்டப்பட்டதை திரும்ப விஸ்வநாதர் கோயிலாக மாற்றி கட்டினார்.

நானா பட்னாவிஸ் :

"மராத்திய மாக்கியவெல்லி" என்று அழைக்கப்படும் அளவுக்கு மராத்தியர்களின் அரசை விரிவுபடுத்திய பெருமைக்குரிய அமைச்சர் தான் இவர். இவரது இயற்பெயர் பாலாஜி ஜனார்தன் பானு என்ற இயற்பெயரில் கி.பி.1742ல் சதாராவில் பிறந்தார். இவரது தாத்தா பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் சேவையில் இருந்தததால் பேஷ்வாவின் குடும்பத்துடன் இவரது குடும்பத்திற்கு நல்ல நட்புறவு இருந்தது. இவரது தாத்தா ஒருமுறை மொகலாயர்களின் திடீர் தாக்குதலில் இருந்து பேஷ்வாவை காப்பாற்றியதால் இவருக்கு முதலாம் சாஹூ மகராஜ் இவரது தாத்தாவுக்கு பட்னாவிஸ் என்ற அஷ்டபிரதான் பதவியை அளித்தார். பின்னர் நானா பதவியேற்கும் போது நிதி மற்றும் நிர்வாக அமைச்சர் பொறுப்பை ஏற்றார். கி.பி.1761ல் மூன்றாம் பானிபட் யுத்தத்திற்கு பிறகு மராத்திய அரசை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஹைதராபாத் நிஜாம், மைசூரின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்கள், கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றுடன் பல போர்களில் வெற்றி பெற்றுள்ளார். கி.பி.1773ல் பேஷ்வா நாராயண் ராவ் படுகொலைக்கு பின்னர் 12 பேர் கொண்ட பாராபாய் கவுன்சிலில் நிர்வாக பொறுப்பை கவனித்தார். இவர் தான் நாராயண்ராவ்வின் மரணத்திற்கு பிறகு பிறந்த அவரின் மகனான முதலாம் மாதவ் ராவ்வை கவனமுடன் பாதுகாத்து அடுத்த பேஷ்வாவாக பதவியேற்க வைத்தார். கி.பி.1798ல் தெளலத் ராவ் சிந்தியாவின் முகாம்மை பார்வையிட சென்ற இவர் திடிரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் திடீர் காய்ச்சலினால் கி.பி.1800 மார்ச் 13ல் இவர் மறைந்தார். இவரது மறைவுக்கு பின்னர் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் நடத்திய இரண்டாம் ஆங்கிலேய-மராத்திய போரில் தோல்வியுற்று மராத்திய அரசின் வலிமை குன்றி போயிற்று.

நிரஞ்சன் மாதவ் பரஸ்னிஸ் :

கி.பி.1703ல் சதாராவில் பிறந்த இவர் முதலாம் பாஜி ராவ்வின் கீழ் இராஜதந்திரியாகவும் கவியாகவும் இருந்தார். இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கு முதலாம் பாஜி ராவ் மற்றும் பாலாஜி பாஜி ராவ் காலங்களில் அனுப்பப்பட்டார். கி.பி.1735ல் முதலாம் பாஜிராவ்வினால் பரஸ்னிஸ் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் இயற்றிய சுயம்வர் காவ்யா என்பது அர்ஜீனன் மற்றும் சுபத்திரையின் திருமணத்தை பற்றி எழுதப்பட்டதாகும். கி.பி.1760ல் எழுதிய நானேஸ்வர் விஜய் என்பது  துறவி நானேஸ்வரின் வாழ்க்கையை பற்றி எழுதப்பட்டதாகும். கி.பி.1790ல் மறைந்தார்.

பரஸ்ராம் பண்ட் பிரதிநித்தி :

இவர் இயற்பெயர் பரஸ்ராம் திரிம்பக் குல்கர்னி. இவர் மந்திரி மற்றும் சர்தாராக சத்ரபதி ராஜாராம் மற்றும் தாரா பாய் ஆட்சியில் பதவி வகித்தார். இவரால் தான் விசால்கத் மற்றும் அவுந்த் மாநிலங்கள் மஹாராஷ்டிராவில் மராத்திய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. இவர் அவுந்த்தின் ஆளுநராக பணியாற்றினார். இவர் சத்ரபதி சிவாஜியின் அவையிலையே பணியாற்றியவர். கி.பி.1698ல் சத்ரபதி இராஜாராம்மால் இவருக்கு பிரதிநிதி (அமைச்சர்) பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் நிர்வாக அலுவலராக தான் பணியில் சேர்ந்தார்.  இவரது திறமையினால் மெல்ல உயர்ந்தார். மஹாராஷ்டிராவில் மொகலாய படையெடுப்புகளை தடுத்து நிறுத்தி எதிர்த்தாக்குதல் நடத்தினார். சதாரா மற்றும் பன்ஹாலா கோட்டைகளை திரும்ப கைப்பற்றி மராத்திய அரசு வலுப்பெற உதவினார்.  இராஜாராம்மின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவியான தாராபாய்யின் அவையிலும் பிரதிநிதியாக இருந்தார். இவர் கி.பி.1718ல் சதாரா அருகிலுள்ள மாஹூலி என்னுமிடத்தில் மறைந்தார். இவருக்கு பின்னர் இவரது முதல் மகன் கிருஷ்ணாஜிராவ் பண்ட் பிரதிநிதி விசால்கத் மாநிலத்தின் பிரதிநிதியாகவும் மூன்றாவது மகன் ஸ்ரீபத்ராவ் பிரதிநிதி அவுந்த் மாநிலத்தின் பிரதிநிதியாகவும் பணியாற்றினர்.

பில்லாஜி ராவ் கெய்க்வாட் :

இவர் மராத்திய படையில் தளபதியாக இருந்தார். பரேடாவின் கெய்க்வாட் பரம்பரையை ஆரம்பித்து வைத்தவர் இவர் தான். போரில் இவர் காட்டிய வீரத்திற்காக சத்ரபதி முதலாம் சாஹூவால் கெளரவிக்கப்பட்டவர்.  இவர் குஜராத்தில் இருந்த மராத்திய தாப்ஹேடே வம்சத்தில் தளபதியாக இருந்து வந்தவர். இவர் திரிம்பக் ராவ் தாப்ஹேடாவுக்கு உதவி தளபதியாக இருந்தார். அவர் கி.பி.1731ல் மராத்திய பேஷ்வாவால் சுயாட்சி கொள்கையை ஆரம்பித்ததால் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் அவரது மைனர் மகன் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் குஜராத்தில் வரிவசூலில் பாதியை மராத்திய அரசுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு பில்லாஜியின் பொறுப்பில் விடப்பட்டதால் பில்லாஜி வரிவசூலை குஜராத்தில் கவனித்தார். பில்லாஜி குஜராத்தின் மொகலாய கவர்னரான அப்ஹய்சிங்கினால் கி.பி. 1732 மே 14ல் கொல்லப்பட்டார். இவருக்கு பின்னர் இவரது மகனான தாமாஜி ராவ் கெய்க்வாட் தாப்ஹேடா வம்சத்தினர் பேஷ்வா பாலாஜி பாஜிராவ்வுக்கு எதிராக நடத்திய புரட்சியில் இவரும் உதவியாக இருந்தார். ஆனால் புரட்சி தோற்கடிக்கப்பட்டவுடன் பேஷ்வா தாப்ஹேடா வம்சத்தினரை பதவியில் இருந்து இறக்கி தாமாஜிராவ் கெய்க்வாடடை குஜராத்தின் மராத்திய தளபதியாக ஆள பணித்தனர். இவ்வாறு குஜராத்தில் (பரேடாவில்) கெய்க்வாட் வம்சத்து ஆட்சி துவங்கியது.

ரனோஜி சிந்தியா :

இவர் தான் குவாலியரின் சிந்தியா பரம்பரையை ஆரம்பித்து வைத்தார். இவர் மராத்திய பேஷ்வா முதலாம் பாஜிராவ்வின் கீழ் பணியாற்றியவர். இவர் மால்ஹர் ராவ் ஹோல்கருடன் வட இந்தியா பகுதிகளில் மராத்திய அரசை விரிவுபடுத்தினார். இதனால் உஜ்ஜையினி பகுதிகளை முதலாம் சாஹூ மகராஜ் காலத்தில் பேஷ்வாக்களால் ஆள பணிக்கப்பட்டார். இவர் ஜன்கோஹிராவ் ஷிண்டேவின் மகனாக கி.பி.1700 சதாரா அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். இவரின் முன்னோர்கள் பாமினி சுல்தான்களின் குதிரைப்படையில் பணியாற்றியவர்கள். இவரது மாமாவால் நன்கு பழக்கப்பட்டு பாலாஜி விஸ்வநாத் அவர்களின் சேவையில் அமர்த்தப்பட்டார். பின்னாளில் இவர் சுபேதாராக உயர்ந்தார். பாலாஜி விஸ்வநாத்தின் மகனான முதலாம் பாஜிராவ்வின் விளையாட்டு தோழனாக இருந்த இவர் பின்னாளில் அவரது மெய்காப்பாளராக ஆனார். ஹைதராபாத் நிஜாம்மின் படைகளை எதிர்த்து நடந்த சாக்கர்கேடா போர்களத்தில் திறம்பட பணியாற்றதால் பேஷ்வாவின் இராணுவத்தில் தன் நிலையை உயர்த்திக் கொண்டார். கி.பி.1724ல் மால்வாவின் மீது போர்தொடுத்ததில் ஒரு பகுதி படைகளுக்கு தளபதியாக பணியாற்றினார். இதனால் தெற்கு மால்வாவின் வரிகளுள் ஒருபங்கு பேஷ்வாவால் இவருக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் இவருக்கு கி.பி.1735ல் உஜ்ஜையினி பகுதிகளை ஆள கொடுக்கப்பட்டது. அதுவே கி.பி.1810 வரை சிந்தியாக்களின் தலைநகராக இருந்தது. இவர் மராத்திய போர்களில் எல்லாவற்றிலும் பங்கு கொண்டு மராத்திய அரசை விரிவுபடுத்தினார். டெல்லியின் மீது படையெடுத்த மராத்தியர்களின் கி.பி.1736-37 போரில் பெரும்பங்கு ஆற்றினார். இவருக்கு மொத்தம் 5 மகன்கள். அவர்களில் இளையவரான மகாத்ஜி ஷிண்டே பின்னாளில் புகழ்பெற்ற மராத்திய தளபதியாக இருந்தவர். 

சதாசிவராவ் பாஹூ : (கி.பி.1730-1761)

இவர் பேஷ்வாவான முதலாம் பாஜி ராவ்வின் இளைய சகோதரரான சிமாஜி அப்பா என்பவரின் மகன். இவர் சத்ரபதி இரண்டாம் ராஜாராம் காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர். இவர் ஒருமாத குழந்தையாக இருந்த நேரத்தில் இவரின் தாயார் ரக்மாபாய் மறைந்து விட்டார். இவரது தந்தை இவரின் 10 வயதில் இறந்து விட்டார்.  இவர் இளமையில் சதாராவில் வளர்ந்தார். கி.பி.1747ல் அஜ்ரா போரில் (தெற்கு கோலாப்பூர்) முதல் வெற்றி பெற்றார். ஹைதராபாத் நிஜாம்களுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றினார். மூன்றாம் பானிபட் போரில் தலைமை தளபதியாக பணியாற்றினார். போரில் பாலாஜி பாஜி ராவ்வின் மூத்த மகனான விஸ்வாஸ் ராவ் கொல்லப்பட்டால் கோபம் கொண்டு யானையில் இருந்து குதிரையில் குதித்து போரிட்ட இவரின் தலையில்லாத உடல் 3 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தலையை வைத்திருந்த ஆப்கன் வீரரிடம் இருந்து கைப்பற்றி இவரது உடல் எரியூட்டப்பட்டது.

சாந்தாஜி கோர்பேடே :

இவர் இராஜாராம்மின் காலத்தில் தலைமை தளபதியாக பணியாற்றினார். கி.பி.1689-1696 வரையிலான மொகலாயர்களுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டார். கொரில்லா போர்முறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இவர் மாலோஜி கோர்பேடேவின் மூத்த மகன். இவரது தந்தை சாம்பாஜி மஹாராஜாவின் படைகளில் சேனாதிபதியாக பணியாற்றினார். இவரது தாத்தாவான பாஜி கோர்பேடேவை அப்சல்கானுடன் சிவாஜி கொன்றார். சில தகவல்கள் அடில்ஷாவின் அவையில் இருந்த சமயத்தில் சிவாஜியின் தந்தையான ஷாகாஜி ராஜ் போன்ஸ்லேவின் கைதுக்கு காரணமாக இருந்ததால் கொன்றார் என்கிறார்கள். பின்னாளில் இவரின் தந்தையிடம் சிவாஜி கொலைக்கான காரணத்தை விளக்கி கூறியதாலும் சாந்தாஜியை தன் படையில் சர்தாராக இணைத்துக்கொண்டார். கி.பி.1679ல் ஜால்னா போரில் இவரின் தாமதத்தினால் மராத்தியர்களின் பின்னடைவிற்காக சிவாஜி இவரை கடிந்து கொண்டார். பின்னாளில் சாம்பாஜியின் ஆட்சியில் இவர் முக்கியமான சர்தாராக ஆனார். சங்கமேஸ்வரில் கி.பி.1689ல் சாம்பாஜி மொகலாய படைகளிடம் பிடிபட்ட சமயத்தில் இவரை தப்பித்து சென்று மராத்திய அரசை காப்பாற்ற சொல்லி இவரின் தந்தையான மாலோஜி கோர்பேடே வீரப்போர் புரிந்து உயிர்துறந்தார். பின்னர் 1689-96களில் மொகலாயப்படைகளை எதிர்த்து பல இடங்களில் மோதினார். கியாஸூதின் ஃபெரோஸ் ஜங் படைகளால் இவர் கொல்லப்பட்டு இவரின் தலை ஒளரங்கசீப்புக்கு அனுப்பப்பட்டது.

சம்ஷெர் பகதூர் :

இவர் கிபி 1734 ஜனவரி 28-ல் பேஷ்வா பாஜிராவ் மஸ்தானி ஆகியோருக்கு பூனாவில் பிறந்த மகன். இவர் பண்டா மற்றும் கல்பி பகுதிகளுக்கு ஜாகீர்தாராக இருந்தார். ஜான்ஸி பகுதிகளுக்கு சுபேதாராக இருந்தார். இவரின் தாயாரான மஸ்தானி பெர்ஷிய முஸ்லிம் பெண்மணிக்கும் பண்டல்கண்ட்டின் இராஜபுத்ர அரசருக்கும் பிறந்தவர். பாஜிராவ்வின் இரண்டாவது மனைவியான மஸ்தானிக்கு பிறந்தவர் என்பதால் இவருக்கு உபாநாயான சடங்குகளை செய்ய அந்தணர்கள் மறுத்தனர். இவரின் தந்தையான முதலாம் பாஜிராவ்வுக்கும் அதற்கடுத்து சில நாட்களில் இவரின் தாயாரான மஸ்தானியும் இவரது 6வது வயதில் மறைந்தனர். இதனால் இவரை பாஜிராவ்வின் முதல் மனைவியான காசிபாய் தன் சொந்த மகனை போல வளர்த்தார். இவர் லால் கன்வாரை கி.பி.1749ல் மணந்தார். கி.பி.1753ல் அவர் மறைந்தவுடன் மெஹ்ரான்பாய் என்பவரை இரண்டாவது மனைவியாக மணந்தார். இவர் ரகுநாத்ராவ், மால்ஹர் ராவ் ஹோல்கர், தட்டாஜி ஷிண்டே மற்றும் ஜன்கோஜி ஷிண்டே ஆகியோருடன் இணைந்து கி.பி.1757-58ல் பஞ்சாப்பில் ஆப்கானிய அஹ்மத் அலி அபதாலியை எதிர்த்து போர் புரிந்தார். கி.பி.1761ல் ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலியுடன் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களுடன் இணைந்து போரிட்டதில் காயம்பட்டு சில நாட்கள் கழித்து இறந்தார்.

விஸாஜி கிருஷ்ணா பினிவாலே :

இவர் பேஷ்வாவின் படைகளில் தளபதியாக கி.பி.1759-72களில் பணிபுரிந்தார். பேஷ்வா முதலாம் மாதவ்ராவ் கி.பி.1761ல் மூன்றாம் பானிபட் போரின் தோல்விக்கு பின்னர் வட இந்தியாவில் மராத்திய பேரரசை நிலை நிறுத்தியவர்களில் இவரும் ஒருவர். அக்டோபர் 1759ல் அஹ்மத் நகரில் நிஜாம்மின் படைகளை தோற்கடித்தார். இவர் கி.பி.1760-61ல் சதாசிவ்ராவ் பாஹ்ஹூன் தலைமையின் கீழ் மூன்றாம் பானிபட் யுத்தத்தில் பங்கு கொண்டார். கி.பி.1769ல் உதய்ப்பூரின் ராஜபுத்ரர்கள் இவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மராத்தியர்களுக்கு திறைப்பணம் செலுத்தினார்கள். கி.பி.1770ல் அரியானாவின் ஜாட் இராஜபுத்ரர்களை தோற்கடித்தார். கி.பி.1771ல் மராத்தியர்களின் வடஇந்திய பகுதிகளுக்கான படைகளுக்கு பொறுப்பாளராக இவரை பேஷ்வா முதலாம் மாதவ்ராவ் நியமித்தார். கி.பி.1772ல் ரோஹில்லாக்களுடன் நடந்த போரில் மகாத்ஜி ஷிண்டேவுடன் இணைந்து நஜூப்கானின் கல்லறையை கொள்ளையடித்தார். அவர்களை வென்று தங்களுக்கு அடங்கியவர்களாக ஆக்கினார்கள். வட இந்தியாவிலிருந்து திரும்பும் சமயத்தில் நகைகள் பணம் எல்லாம் சேர்த்துவிட்டு பூனா வந்தார். அந்த சமயத்தில் பேஷ்வா முதலாம் மாதவ்ராவ் மறைந்து பேஷ்வா நாராயண்ராவ் கொல்லப்பட்டு ரகுநாத் ராவ் பேஷ்வாவாக இருந்தார். அந்த நேரத்தில் அந்த கொலையில் ரகுநாத் ராவ்வுக்கு தொடர்பு இருந்ததால் இவர் நானா பட்னாவிஸ்ஸீடன் இணைந்து இரண்டாம் மாதவ்ராவ்வை பேஷ்வா பொறுப்பில் அமர்த்தினார்.

கன்ஹோஜி ஆங்க்ரே :

கி.பி.1669 ஆகஸ்டில் ரத்னகிரியில் பிறந்த இவர் மராத்திய கடற்படையில் அட்மிரலாக பணியாற்றினார்.  இவர் ஐரோப்பிய வணிக கப்பல்களான பிரிட்டிஷ்,டச்சு மற்றும் போர்த்துகீசிய கப்பல்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கன்ஜோஹி தன் வாழ்க்கையை வெர்சோவா தீவில் பணியாளராக தான் தொடங்கினார். ஆங்க்ரேவின் தாய்வழி தாத்தா சிவாஜியின் படையில் கமாண்டராக பணியாற்றினார். சிறுவயதில் சுவர்ணதுர்க் கோட்டையில் பணியாற்றிய இவர் பின்னாளில் அந்த கோட்டையின் கவர்னராக ஆனார். இவர் கி.பி.1698ல் சதாராவின் தளபதியால் சார்கேல் பட்டம் அளிக்கப்பட்டது. இதனால் பம்பாய் முதல் வென்குர்லா வரையிலான மேற்கு கடல்பகுதிகளுக்கு இவர் பொறுப்பாக இருந்தார். கி.பி.1707ல் கிழக்கிந்திய கம்பெனி கப்பல்களை தாக்கி கொள்ளையடித்தார். மராத்தியர்களின் சத்ரபதியாக முதலாம் சாஹூ பதவியில் அமர்ந்த சமயத்தில் பேஷ்வாவான (பின்னாளில் தான் பேஷ்வாவாக ஆனார்) பாலாஜி விஸ்வநாத் இவரை சந்தித்து மராத்திய சேனைகளுள் சத்ரபதியின் சாஹூவின் சேவைகளில் பணியாற்ற சம்மதிக்க வைத்தார். இந்த ஓப்பந்தினால் கனோஹி ஆங்க்ரே மராத்திய கடற்படையின் தலைவராக ஆனார். மராத்திய அரசு பலமிழந்த கி.பி.1713ல் ஆங்கரே தனியாளாக அரசுக்கு கட்டுப்படாதவராக மாற பேஷ்வா பாஹிரோஜி பிங்க்ளே இவரை அடக்க வர கனோஜி ஆங்கரே அவரை போரில் தோற்கடித்து சிறை பிடித்தார். பின்னர் ஆங்க்ரே சத்ரபதி சாஹூவை சந்திக்க சதாரா விரைந்து இருவருக்குமிடையேயான ஒப்பந்தத்தின் விளைவாக மராத்திய படைகளின் சார்கேலாக நியமிக்கப்பட்டார். இவர் அரேபிக்கடலின் ராஜாவாக சூரத் முதல் தெற்கு கொங்கன் பிரதேசம் வரை இருந்தார். இவர் கி.பி.1729 ஜீலை 4ல் மறைந்தார்.

உதவிய நூல்கள்:

மொகலாயர்கள் - முகில்

மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

சிவாஜி -  கு.ப.இராஜகோபாலன்

விக்கிபீடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு