80) மராத்திய அரசு -கெய்க்வாட் வம்ச ஆட்சி (பரோடா)

கெய்க்வாட் (பரோடா) : (கி.பி.1721-1947)


பரோடாவை ஆண்ட கெய்க்வாட் பரம்பரையினர் அடிப்படையில் மராத்திய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் தான். அடிப்படையில் மராத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் மராத்திய அரசு வீழ்ச்சியுற்ற நேரத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆங்கில ரெஸிடென்ட் மேற்பார்வையில் நடந்த ஆட்சி பின்னர் கம்பெனி ஆட்சியிலிருந்து பிரிட்டிஷ் அரசின் ஆட்சிக்கு கீழ் வந்தது. பின்னர் கி.பி.1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவுடன் இணைந்தது. தற்போது குஜராத் மாநிலத்தில் பரோடா என்ற பெயர் மாறி வதோதரா என்றாகிய இந்த நகரை மொகலாயர்கள் ஆதிக்கத்திலிருந்து கி.பி.1721ல் கைப்பற்றிய மராத்திய வம்ச ஆட்சி இந்திய சுதந்திரம் வரை தொடர்ந்தது.

பில்லாஜி ராவ் கெய்க்வாட் :

ஆட்சி : (கி.பி.1721-1732)


இவர் ஜிங்கோஜிராவ் கெய்க்வாட்டின் மூத்த மகன். இவர் தனது மாமாவான முதலாம் தமாஜி ராவ் கெய்க்வாட்டால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர். இவர் திரிம்பக் ராவ் தாப்ஹேடாவின் கீழ் தளபதியாக இருந்தார். அவர் மராத்திய பேஷ்வாவுக்கு எதிரான போரில் கி.பி.1731ல் கொல்லப்பட்ட பின் அவருடைய மகனான சிறுவன் யஷ்வந்த்ராவ் தாப்ஹேடா சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.  பேஷ்வா யஷ்வந்த்ராவ்வை குஜராத் பொறுப்புகளை பார்த்து கொள்ளவும் பாதி வருமானத்தை மராத்திய சத்ரபதிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். ய்ஷ்வந்த்ராவ் சிறுவனாக இருந்ததால் பில்லாஜி ராவ் கெய்க்வாட்டே வரிவசூலுக்கு பொறுப்பாக இருந்தார். இதற்கிடையில் கி.பி.1734 மே 14ம் தேதி டாகார் என்னுமிடத்தில் குஜராத்தின் மொகலாய ஆளுநரால் கொல்லப்பட்டார். இவர் சாவ்லி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு பின் இவரது 3வது மகன் இரண்டாம் தாமாஜி ராவ் கெய்க்வாட் அதே பதவிக்கு வந்தார்.

இரண்டாம் தமாஜி ராவ் கெய்க்வாட் :

ஆட்சி : (கி.பி.1732-1768)

தந்தை பில்லாஜி மறைவுக்கு பின்னர் தமாஜி ராவ் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்வை எதிர்க்க ஆரம்பிக்க பேஷ்வா இவரை எதிர்த்து போரிட்டு தோற்கடித்து கைது செய்தார்.  பின்னர் இவரை விடுதலை செய்து ஆல்கஹால் ஓபியம் ஆகியவற்றின் பிடியிலிருந்த இளவயது யஷ்வந்த்ராவ் தாப்ஹேடாவை பதவியிலிருந்து இறக்கி இவரை குஜராத்தின் மராத்திய பொறுப்பாளராக நியமித்தார்.  இதிலிருந்து தான் கெய்க்வாட் பரம்பரை ஆட்சி ஆரம்பிக்கிறது.

கி.பி.1751ல் தமாஜி மற்றும் உறவினர்களை பேஷ்வா கைது செய்து பூனேவுக்கு கொண்டு வந்தார். அவரிடம்  பாதி வரிவசூலை ஒப்படைக்க சொல்லியும் தமாஜி ராவ் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்து மஹாராஷ்டிராவிலுள்ள "லோககத் கோட்டை (இரும்பு சிறை)"க்கு அனுப்பினார். பின்னர் தனது அமைச்சர்களை விட்டு குஜராத்தில் வரிவசூல் செய்ய அனுப்ப சூரத் பகுதிகளில் வரிவசூல் செய்தாலும் வடபகுதியில் வரிவசூல் செய்ய முடியவில்லை. இதற்கிடையில் கி.பி.1752 மார்ச்சில் தமாஜி ராவ் பேஷ்வாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தமாஜி ராவ்வை குஜராத்திலிருந்து மொகலாயர்களை முழுமையாக விரட்ட குஜராத்திற்கான மராத்திய படைகளின் தளபதியாக நியமித்தார். தமாஜி ராவ் ஆண்டிற்கு 5.25 லட்சம் பணம் தருவதாகவும் ஒப்புக்கொண்டு 20000 குதிரை படைகளை பேஷ்வாவின் சேவைகளுக்கு தயார் படுத்தவும் செய்தார். கி.பி.1752 டிசம்பரில் பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் தளபதி ரகுநாத் ராவ் தலைமையில் ஒரு படையை பூனாவிலிருந்து குஜராத்திற்கு அனுப்ப அந்த படையுடன் தமாஜி ராவ் படைகள் இணைந்து அஹமதாபாத்தை கைப்பற்ற சென்று அதன் மொகலாய ஆளுநர் ஜவான் முர்த் கான் பாபியின் கடும் எதிர்ப்பால் 3 மாதத்திற்கு பிறகே கைப்பற்ற முடிந்தது. பேஷ்வா ஸ்ரீபத் ராவ் பாபுஜியை அஹமதாபாத்தின் கவர்னராக நியமித்து அந்நகரின் சில பகுதிகளை தமாஜி ராவ்விற்கும் கொடுத்தார். கி.பி.1756ல் காம்பே (தற்போதைய பெயர் காம்பத்) நவாப்பான மோமின் கான் மொகலாய படைகளின் துணையோடு அஹமதாபாத் மீது படையெடுக்க அந்த நேரத்தில் ஸ்ரீபத் ராவ் பூனாவில் இருந்ததால் பேஷ்வா சதாசிவ் சென்வி என்பவரின் தலைமையில் அனுப்பிய படைகளுடன் தமாஜி ராவ் படைகளும் இணைந்து அஹமதாபாத்தை படையெடுப்பிலிருந்து காப்பாற்றின. இதன் பிறகு முதலாம் ஆங்கிலேய-மராத்திய போர் வரும்வரை மராத்தியர்களின் கையில் இருந்த அஹமதாபாத் ஆங்கிலேயர் கைகளுக்கு சென்றாலும் போரின் முடிவில் ஒப்பந்தம் காரணமாக தமாஜி ராவ்வின் மகனான பஃதேசிங் ராவ் கெய்க்வாட் வசம் கி.பி.1782ல் ஒப்படைக்கப்பட்டது.  கி.பி.1768 பதான் நகரில் தமாஜி ராவ் மறைந்தார்.

முதலாம் சாயாஜி ராவ் கெய்க்வாட் : ( ??? - கி.பி.1792)

ஆட்சி : (கி.பி.1768-1778)

இவர் தமாஜி ராவ் கெய்க்வாட்டின் மூத்த மகன். இவர் பிறந்த வருடம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி.1750க்கு முன்பு பிறந்திருக்கலாம் என தெரிகிறது. தமாஜி ராவ் கெய்க்வாட் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சியிலிருந்து இறங்கிய காரணம் தெரியவில்லை. முதலாம் ஆங்கிலேய-மராத்திய போர் இவரின் காலத்தில் தான் ஆரம்பித்தது. போரின் நடுவிலையே கி.பி.1778ல் தனது சகோதரன் முதலாம் பஃதேசிங் கெய்க்வாட்டிற்கு ஆட்சியை விட்டு கொடுத்து பதவியிலிருந்து இறங்கினார்.

முதலாம் பஃதே சிங் கெய்க்வாட் : (கி.பி.1761-1789)

ஆட்சி : (கி.பி.1778-1789)

இவர் தமாஜி ராவ் கெய்க்வாட்டின் மூன்றாவது மகன். அண்ணன் சாயாஜி ராவ் கெய்க்வாட்டிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது காலத்தில் தான் கி.பி.1782ல் முதலாம் ஆங்கிலேய-மராத்திய போர் (கி.பி.1775-1782) முடிவுக்கு வந்து போரின் முடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டு அஹமதாபாத்தை இவர் வசம் ஒப்படைத்தனர். இவர் அண்ணனுக்கு முன்பே கி.பி.1789ல் மறைந்து விட்டார்.

மனாஜி ராவ் கெய்க்வாட் : (கி.பி.1751-1793)

ஆட்சி : (கி.பி.1789-1793)

இவர் தமாஜி ராவ் கெய்க்வாட்டின் 5வது மகன். அண்ணன் பஃதேசிங் கெய்க்வாட் மறைவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பரேடா நகரின் பொறுப்பாளராக இருந்தார். ஆட்சியேறிய 4 வருடங்களிலையே மறைந்து விட்டார்.

கோவிந்த் ராவ் கெய்க்வாட் : ( ??? - கி.பி.1800)

ஆட்சி : (கி.பி.1793-1800)

இவர் தமாஜி ராவ் கெய்க்வாட்டின் 4வது மகன். தம்பி மனாஜி ராவ் கெய்க்வாட் மறைவிற்கு பின்னர் கி.பி.1793ல் ஆட்சியேறிய இவர் கி.பி.1800ல் மறைந்தார்.

ஆனந்த் ராவ் கெய்க்வாட் : ( ??? - கி.பி.1819)

ஆட்சி : (கி.பி.1800-1819)

தந்தை கோவிந்த் ராவ் கெய்க்வாட் மறைவிற்கு பின்னர் மூத்த மகனான இவர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இரண்டாம் பஃதே சிங் மற்றும் இரண்டாம் சாயாஜி ராவ் கெய்க்வாட் ஆகியோர் பிரதிநிதிகளாக பணியாற்றினார்கள். கி.பி.1802ல் ஆங்கிலேயர்களுடன் இவர் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக மராத்திய அரசிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார். ஆங்கிலேயர்களின் ஆளுமையை ஏற்றுக்கொண்டார்.

இரண்டாம் சாயாஜி ராவ் கெய்க்வாட் : ( ??? - 1847)

ஆட்சி : (கி.பி.1819-1847)

இவர் கோவிந்த் ராவ் கெய்க்வாட்டின் 3வது மகன். தந்தையின் மரணத்திற்கு பிறகு அரியணை ஏறினார். கி.பி.1847ல் மரணமடைந்தார்.

கண்பத் ராவ் கெய்க்வாட் : (கி.பி.1816-1856)

ஆட்சி : (கி.பி.1847-1856)

தந்தை இரண்டாம் சாயாஜி ராவ் கெய்க்வாட்டிற்கு பின்னர் அவரது மகனான இவர் ஆட்சிக்கு வந்தார்.

காந்தர்ராவ் கெய்க்வாட்  (கி.பி.1828-1870) :

ஆட்சி : (கி.பி.1856-1870)

சகோதரன் கண்பத் ராவ் கெய்க்வாட் மறைவிற்கு பின்னர் அவரது தம்பியும் இரண்டாம் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் இன்னொரு மகனுமான இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1861ல் விக்டோரியா மஹாராணியால் "Knight Grand Commander" விருது பெற்றார். இந்த விருது சிப்பாய் புரட்சியின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்ததால் கொடுக்கப்பட்டு இருக்கலாம். கி.பி.1865ல் இவர் மெதினாவிலுள்ள முகமது நபியின் சமாதிக்கு முத்துவிலான விரிப்பை பரிசாக வழங்குவதற்கு  செய்தார். ஆனால் அதற்குள் இவர் மரணமடைந்து விட அந்த விரிப்பு பரோடாவிலையே தங்கிற்று. கி.பி.1862ல் இவரது ஆட்சியில் தான் பரேடாவில் ரயில்பாதை அமைக்கப்பட்டது.கி.பி.1870ல் இவரது சகோதரனான மால்ஹர்ராவ் கெய்க்வாட் இவரை சிறைவைத்து கொன்றார்.

மால்ஹர் ராவ் கெய்க்வாட் : (கி.பி.1831-1882)

ஆட்சி : (கி.பி.1870-1875)

இவர் இரண்டாம் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் இன்னொரு மகன். சகோதரன் காந்தர்ராவ் கெய்க்வாட்டை சிறையில் வைத்து அவரை கொலை செய்தார். அந்த நேரத்தில் அவரது மனைவியான ஜம்னாபாய் கெய்க்வாட் கர்ப்பமாக இருந்தார். கி.பி.1871ல் பிறந்த அந்த குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. அதனால் இவர் அரசுக்கு தொந்தரவு இல்லை என்று நினைத்து ஆடம்பரமாக அரசின் கஜானாவை காலிசெய்யுமளவுக்கு ஆள தொடங்கிய இவரை  காந்தர்ராவ்வின் விதவை மனைவியான ஜம்னாபாய் கெய்க்வாட் ஆங்கிலேயர்களிடம் முறையிட்டு கி.பி.1875ல் ஆட்சியை விட்டு இறக்கினார். ஜம்னாபாய் கெய்க்வாட் தத்தெடுத்த மகனான மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டை அந்த பதவியில் அமர்த்தினார்கள். கி.பி.1875ல் சென்னையில் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டு கி.பி.1882ல் மறைந்தார்.

மூன்றாம் சாயாஜி ராவ் கெய்க்வாட் : (கி.பி.1863-1939)

ஆட்சி : (கி.பி.1875-1939)


இவர் காஸிராவ் கெய்க்வாட்டின் இரண்டாவது மகன். பரோடாவின் கெய்க்வாட் பரம்பரையிலையே அதிக ஆண்டுகள் (64 ஆண்டுகள்) ஆண்டவர் இவரே.  காந்தர்ராவ் கெய்க்வாட்டின் விதவை மனைவியான ஜம்னாபாய் கெய்க்வாட்  மால்ஹர் ராவ் கெய்க்வாட்டை ஆங்கிலேயர் உதவியுடன் பதவியிலிருந்து இறக்கியவுடன் அடுத்த வாரிசாக காஸிராவ் கெய்க்வாட்டின் மூன்று மகன்களான ஆனந்த ராவ், கோபால் ராவ் மற்றும் சம்பத் ராவ் இவர்களுள் யாரை தேர்வு செய்ய என்ற குழப்பம் நிலவிய போது ஆங்கிலேயர்கள் இரண்டாவது மகனான கோபால் ராவ்வை அடுத்த மஹாராஜாவாக தேர்ந்தெடுத்தனர். ஜம்னாபாய் கெய்க்வாட் இவரை மகனான தத்தெடுத்து மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் என்ற பெயரில் அரியணையில் அமர்த்தினார். அந்த நேரத்தில் இவர் 12 வயது பாலகனாக இருந்ததால் ஆங்கிலேயர் மேற்பார்வையில் ராஜ்யம் நடந்தது. இவரும் தஞ்சாவூர் மாதவ் ராவ் என்பவரிடம் நிர்வாகத்தை கற்று தேர்ந்தார். பின்னர் கி.பி.1881ல் இவருக்கு 18 வயதான பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை இவரிடம் ஒப்படைத்தனர்.

இவர் பரேடாவின் நவீனத்துவத்திற்கு காரணமாவார். பருத்தி நிறைய விளைச்சல் இருந்ததால் பரோடா துணி உற்பத்தி ஆலைகளை ஊக்குவித்தார். அது மட்டுமல்லாது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தனது ஆட்சியில் குழந்தை திருமணம், விவாகரத்து சட்டம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பாடுபட்டார்‌. கி.பி.1908ல் பாங்க் ஆஃப் பரோடா என்ற வங்கியை ஆரம்பித்து வைத்தார். இது இன்று வரைக்கும் நாடெங்கும் பல ஆயிரம் கிளைகளை பரப்பி வளர்ந்து கொண்டிருக்கிறது. கி.பி.1906ல் தனது ஆட்சியில் இந்தியாவிலையே முதன்முதலாக ஆரம்பக்கல்வி இலவசமாக வழங்க சட்டம் கொண்டு வந்தார். கி.பி.1911 டெல்லி வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வரவேற்பில் கலந்து கொண்டவர் அங்கு நடந்த பிரச்சினையில் மன்னர் வரும் நேரத்தில் அங்கு இல்லாமல் போகவே ஆங்கில அரசு இவர் மீது ஆத்திரம் கொண்டது. இந்த நேரத்தில் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகளை ஆதரித்தது கூட காரணமாக அதை அதிகப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஆங்கிலேய அரசிடம் பின்னர் கி.பி.1919ல் மன்னிப்பு கேட்டது வேறு கதை. இவர் ஆட்சியில் ரயில் பாதை தபோய் வரை நீடட்இக்கபப்ட்டது. அஜ்வா அணையை கி.பி.1892ல் கட்டினார். பரோடா நகரில் "சாயாஜி பாக்" என்னும் பூங்கா ஆரம்பித்தார். வருடாவருடம் இங்கிலாந்து செல்லும்போது ஸ்ரீ அரபிந்தோவை சந்தித்து பரோடா கல்லூரியில் பணியாற்ற அழைத்தார். S.P.Talpade என்பவர் கி.பி.1895ல் விமானம் அமைத்த நிகழ்வில் இவரும் காரணகர்த்தா. ஆனால் இதற்கு பிறகு 8 ஆண்டு கழித்து ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானமே முதல் விமானமாக அங்கீகரிக்கப்பட்டது. 

இவர் தஞ்சாவூரை சேர்ந்த சிம்னாபாய் என்பவரை கி.பி.1880ல் மணந்தார். அவருக்கு ஒரு மகனும் (பஃதேசிங் ராவ் கெய்க்வாட் - இவர் கி.பி.1883ல் பிறந்து கி.பி.1908ல் மறைந்தார். இவரது மகனான பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட் என்பவரே  மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டிற்கு பின்னர் அரியணை ஏறினார்) இரண்டு மகள்களும் உண்டு.  முதல் மனைவி சிம்னாபாய் கி.பி.1884 ஜனவரியில் காசநோயால் இறந்தார். பின்னர் கி.பி.1885 டிசம்பரில் லக்ஷ்மிபாய் மோஹிதே என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டாம் சிம்னாபாய் என்ற பெயர் சூட்டப்பட்டது.  இவர்களின் 53 ஆண்டுகள் நீடித்த திருமண வாழ்க்கையில் நிறைய மகன்களும் ஒரு மகளும் உண்டு. 63 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்த தனது 76வது வயதில் இவர் மறைந்தார்.

பிரதாப் சிங் கெய்க்வாட் : (கி.பி.1908-1968)

ஆட்சி : (கி.பி.1939-1947)

மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த இவர் அவரின் பேரனாவார். கி.பி.1939 முதல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பதவியில் இருந்தார். பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் கி.பி.1951 வரை மஹாராஜா பட்டம் இருந்து. இவர்  தனது இரண்டாவது மனைவியுடன் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்ததில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு செலவு ஏற்பட்டது. இந்த பணத்தை பரோடா மாநிலத்தின் வருமானத்தில் இருந்து எடுத்து செலவு செய்ததும் தன் வருமானத்தில் கடனாக பெற்றதும் மத்திய அரசுக்கு தெரியவர இந்த முறைகேட்டினால் இவரது பதவியிலிருந்து நீக்கினார்கள். இதனால் மொனாக்கோ நாட்டில் நிரந்தரமாக தங்கினார். அதன் பின்னர் அரசு இவரது மூத்த மகனான பஃதேசிங்ராவ் கெய்க்வாட்டை பெயரளவுக்கு மன்னராக அறிவித்தது.இவர் கி.பி.1949ல் மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் ஆரம்பித்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சாந்தா தேவியை கி.பி.1929ல் மணந்தார். இதன் மூலம் இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் 5 மகன்கள் உண்டு. கி.பி.1940ல் இவர் ஏற்கனவே திருமணமாகியிருந்த பித்தாபுரம் மஹாராஜாவின் மகளான சீத்தா தேவியிடம் காதல் வயப்பட்டு அவர் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றபின் கி.பி.1943ல் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். கி.பி.1968ல் தனது 60வது வயதில் இவர் மறைந்தார்.

பஃதேசிங் ராவ் பிரதாப்ராவ் கெய்க்வாட்  (கி.பி.1930-1988) :


இவர் அரசியல்வாதி, கிரிக்கெட் வீரர் என்று பல அவதாரம் எடுத்தவர். பெயரளவுக்கு கி.பி.1951 முதல் இருந்த ராஜா என்ற பட்டமும் கி.பி.1971ல் மன்னர் மான்ய ஒழிப்பு சட்டத்தில் பறிபோனது. இவர் கி.பி.1957-67,1971-80வரை பரோடா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இடைப்பட்ட கி.பி.1967-71ல் குஜராத் மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக சாயாஜிகஞ்ச் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் கி.பி.1946-58 வரை குஜராத் மாநிலத்தின் ரஞ்சி டிராபி அணியில் இருந்தார். இவர் கி.பி.1959-60,1962-63 காலத்தில் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட்டின் உதவி தலைவராகவும் பின்னர் கி.பி.1963-66 வரை தலைவராகவும் பணியாற்றினார். பரேடா கிரிக்கெட் அஸோஸியேஷன் மேலாளராகவும் கி.பி.1960 முதல் இருந்தார். இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட்டின் இளைய வயதில் தலைவராக இருந்த சாதனையும் இவருக்கு உண்டு. கி.பி.1988ல் பம்பாயில் தனது 58 வயதில் மரணமடைந்தார்.

ரஞ்சித்சிங் ராவ் கெய்க்வாட் : (கி.பி.1938-2012)

இவர் பிரதாப் சிங் கெய்க்வாட்டின் மகனும் பஃதேசிங் ராவ் கெய்க்வாட்டின் சகோதரனுமாவார். கி.பி.1980-89 வரை இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் இவர் ஒரு ஓவியர். சகோதரர் பஃதேசிங் கெய்க்வாட் மறைவிற்கு பின்னர் பெயரளவுக்கு மன்னராக இருந்தார். கி.பி.2012ல் தனது 74வயதில் இவர் மரணமடைந்தார்.

இன்று பரோடா என்ற பெயர் வதோதரா என்று மாறியுள்ளது. அரண்மனையாக இருந்த லட்சுமிவிலாஸ் மாளிகை



இன்று மியூஸியமாக மாற்றப்பட்டு பார்வையாளர்கள் அதனை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்றைய குஜராத் மாநிலத்தில் வதோதரா முக்கியமான நகரமாக உள்ளது.

உதவிய நூல்கள் :

மொகலாயர்கள் - முகில்
விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு