81) மராத்திய அரசு - ஹோல்கர் வம்ச அரசு (இந்தூர்)
ஹோல்கர்கள் (இந்தூர்) : (கி.பி.1731-1948)
இந்தூரை ஆண்ட ஹோல்கர்கள் பூர்விகமாக மராத்தியர்கள். முதலாம் பாஜி ராவ் தலைமையின் கீழ் பணியாற்றியவர்கள். அவரின் கீழ் பணியாற்றிய மால்ஹர் ராவ் ஹோல்கரில் ஆரம்பித்து இரண்டாம் யஷ்வந்த்ராவ் ஹோல்கர் வரை 15 அரசர்கள் ஆண்டுள்ளனர். இதில் சிறப்பு வாய்ந்த ராணியான அஹில்யா பாய் ஹோல்கரும் அடங்குவார்.
முதலாம் மால்ஹர் ராவ் ஹோல்கர்
(கி.பி.1693-1766) :
ஆட்சி : (கி.பக.1731-1766)
இவர் பூனேவுக்கு அருகில் உள்ள ஜீஜோரி என்னுமிடத்தில் பிறந்தார். இவரின் மூன்று வயதாக இருக்கும் போது தந்தை மறைந்து விட்டார். பின்னர் தனது மாமாவான சர்தார் போஜ்ராஜ் ராவ் பார்கல்லின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார். அவர் இவரை மராத்திய சர்தார் கடம் பாண்டேவின் குதிரைப்படையில் சேர்த்து விட்டார். பின்னர் மாமா தனது படைகளில் இணைத்து கொண்டார். பின்னர் கி.பி.1717ல் தனது மாமா போஜ்ராஜ் ராவ்வின் மகளான கெளதமா பாய் பார்கல்லை மணந்தார். பின்னர் பனா பாய் சாஹிப் ஹோல்கர், துவாரகா பாய் ஹோல்கர், ஹர்க்கு பாய் ஹோல்கர் மற்றும் கண்டா இளவரசியை மணந்தார். இவர் பின்னர் பாலாஜி விஸ்வநாத் கி.பி.1719ல் டெல்லி மீது படையெடுத்து மொகலாய அரசர் ப்ரூஃக்ஷியாரை பதவியிலிருந்து இறக்கிய நிகழ்வில் பங்குகொண்டார். பின்னர் கி.பி.1720ல் ஹைதராபாத் நிஜாம்களுக்கு எதிரான பாலப்பூர் யுத்தத்தில் பங்குகொண்டார். பின்னர் கி.பி.1721ல் மராத்திய பேஷ்வா முதலாம் பாஜிராவ்வின் படையில் இணைந்து அவருக்கு நெருக்கமானவராக மாறினார். பின்னர் மால்வா மற்றும் வடக்கு பகுதிகளில் ரனோஜி சிந்தியாவுடன் (இவர் தான் குவாலியரில் சிந்தியா வம்சத்தை தோற்றுவித்தவர்) இணைந்து மராத்திய அரசை விரிவுபடுத்தினார். இதனால் பேஷ்வா இவருக்கு இந்தூர் உள்ளிட்ட 9 பெர்கானாக்களை இவர் பொறுப்பில் விட்டார். கி.பி.1737ல் டெல்லி மீதான படையெடுப்பில் இவரது பங்கு அதிகம். பம்பாயின் வாசை (Vasai) பகுதியை கி.பி.1739ல் போர்த்துகீசியர்களிடமிருந்து மீட்டரில் இவரின் பங்கும் உண்டு. கி.பி.1748க்கு பிறகு மால்வா பகுதிகளில் இவரின் ஆதிக்கம் அதிகமாயிற்று. கி.பி.1754ல் பரத்பூர் மாநிலத்தை ஆண்ட ஜாட் அரசரான சூரஜ் மாலின் கும்ஹர் நகர படையெடுப்பின் போது இவரின் ஒரே மகனான கண்டர்ராவ் ஹோல்கர்மாலே ராவ் ஹோல்கர் : (கி.பி.1745-1767)
ஆட்சி : (கி.பி.1766-1767)
மால்ஹர் ராவ் ஹோல்கருக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரது மகனான கண்டர்ராவ் ஹோல்கரின் மகன். இவருக்கு பாதுகாவலராக இவரது தாயான அஹில்யா பாய் ஆட்சியில் உறுதுணையாக இருந்தார். ஆட்சியேறிய சில மாதங்களிலையே இவர் இறக்க வேறு வாரிசில்லாததால் இவரின் தாயான அஹில்யா பாய் ஹோல்கர் அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
அஹில்யா பாய் ஹோல்கர் : (கி.பி.1725-1795)
ஆட்சி : (கி.பி.1767-1795)
இளம் வயதிலையே (29 வயதில்) கணவரை இழந்த இவர் உடன்கட்டை ஏறுவதை தடுத்த இவர் மாமனார் மால்ஹர் ராவ் ஹோல்கர் பொறுப்பில் இவரது மூத்த மகளும் இவரது மகனான மாலே ராவ் ஹோல்கரும் இருந்தனர். மாமனார் மறைந்த பிறகு மகன் மாலே ராவ் ஹோல்கர் பதவியேற்றார். அவரும் சில மாதங்களிலையே இறக்க அடுத்ததாக இவர் பதவியேற்க வேண்டியதாகிட்டது. ஹோல்கரின் பரம்பரையில் மிக குறிப்பிடத்தக்க வகையில் அரசாண்ட ஒரே ராணி இவரே. இவரது ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களும் வழிபாட்டு தலங்களும் கட்டப்பட்டது. காஷ்மீர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள கோயில்களுக்கு கங்கை நீரை வழிபாட்டிற்கு அனுப்பி உதவி புரிந்தார். வாரணாசியில் (காசி) உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து ஒளரங்கசீப் கி.பி.1696ல் "கியான்வாபி மசூதி"யை கட்டினார். இவரது ஆட்சியில் இவரது முயற்சியால் தான் கி.பி.1780ல் காசி விஸ்வநாதர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டது.
இவர் கி.பி.1725ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத் நகர் மாவட்டத்தில் சாவுண்டி என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு இவரது தந்தையே எழுத படிக்க கற்று கொடுத்தார். இவர் 8 வயதாக இருக்கும் போது பூனேவுக்கு போகும் வழியில் இவரது கிராமத்தின் வழியே பயணப்பட்ட மால்ஹர் ராவ் ஹோல்கர் இவரது நடத்தையும் பக்தியையும் கண்டு வியந்து இவரை தன் மகன் கண்டர்ராவ் ஹோல்கருக்கு திருமணம் செய்து வைத்தார். இவருக்கு கி.பி.1735ல் திருமணம் நடந்தது. கி.பி.1745ல் மூத்த மகனான மாலே ராவ் ஹோல்கரும் கி.பி.1748ல் மகளான முக்தாபாய்யும் பிறந்தனர். கி.பி.1754ல் கும்ஹர் கோட்டையின் முற்றுகையில் இவரது கணவரான கண்டர்ராவ் ஹோல்கர் மரடமடைந்தவுடன் உடன்கட்டை ஏற துணிந்த இவரை இவரது மாமனாரான மாலஹர் ராவ் ஹோல்கர் தடுத்து நிறுத்தினார். கி.பி.1765ல் ஆப்கானிய அஹ்மத் அலி டெல்லியின் மீது படையெடுத்த போது மால்ஹர் ராவ் அவரை எதிர்க்க சென்றிருந்த சமயத்தில் இவர் குவாலியர் அருகிலுள்ள கோஹாத் கோட்டையை கைப்பற்றினார். அப்போது இவரது மாமனார் இவரை சிறிய வடிவத்திலான வெடி மருந்து உருண்டைகளை தயாரிக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் 12 ஆண்டுகளில் கழித்து கி.பி.1766ல் மாமனார் மறைந்தவுடன் மகனான சிறிது மூளை வளர்ச்சியற்ற உடல்நலம் குன்றிய மாலே ராவ் ஹோல்கர் அரியணை ஏறி சில மாதங்களில் மரணமடைய இவரே கி.பி.1767ல் இந்தூரின் அரியணையில் அமர்ந்தார். இவருக்கு உதவியாக மால்ஹர் ராவ் வின் வளர்ப்பு மகனான துகோஜிராவ் ஹோல்கர் படைகளை கவனிக்க பேஷ்வாவால் அறிவுறுத்தப்பட்டார். இவரது ஆட்சியில் தான் சிறிய கிராமம் என்ற அளவில் இருந்த இந்தூர் பெரிய நகரமாக வளர்ந்தது. இவர் நர்மதை ஆற்றங்கரையில் மஹேஷ்வர் என்ற நகரை அமைத்து தன் தலைநகராக ஆக்கினார்.
இவர் இலக்கியம்,இசை தொடர்பான கவிஞர்களை ஆதரித்தார். அவர்களுள் மோராபந்த்,ஷாகிர், மஹாராஷ்டிராவின் அனந்தபண்டி, குஷாலி ராம் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இவரால் இந்தியாவில் பல இடங்களில் எண்ணற்ற கோயில்கள் கணக்கு வழக்கில்லாமல் நூற்றுக்கணக்கான கோயில்கள் புதிதாகவும் சில பழுது பார்த்து திரும்ப கட்டப்பட்டுள்ளது. அவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.
1)ஆலம்பூர் (மத்திய பிரதேசம்) :
ஹரிஹரேஷ்வர், ராம் அனுமான் கோயில், மாருதி கோயில், லக்ஷ்மி நாராயணன் கோயில், கண்டர்ராவ் மார்தந்த் கோயில், மால்ஹரிமார்தந்த்
2) அவுந்த நாக்நாத் (மஹாராஷ்டிரா) கோயில் ஓளரங்கசீப்பின் படையெடுப்பில் இடிக்கப்பட்டதை திரும்ப கட்டினார்.
3) அயோத்தி (உத்திரபிரதேசம்) :
ஸ்ரீ ராம் கோயில், ஸ்ரீ பைரவா கோயில், நாகேஷ்வர் கோயில், சரயூ காத்,
4) பத்ரிநாத் (உத்திரகாண்ட்) :
ஸ்ரீ கேதேஸ்வரர் கோயில், ஹரி கோயில் மற்றும் சில தர்மஸ்தலங்களையும் கட்டினார்.
5) பேளூர் (கர்நாடகா) :
கணபதி, பாண்டுரங்கா,ஜாலேஷ்வர் மற்றும் நெருப்பு கோயில்களை கட்டினார்.
6) பீமா சங்கர் (மஹாராஷ்டிரா) :
இந்த கோயிலில் ஏழைகளுக்கு உணவு வழங்குதலை தன் செலவில் நடத்தினார்.
7) பெர்ஹாம்பூர் (மத்திய பிரதேசம்) :
இங்கு ராஜ் காத், ராம் காத் ஆகியவற்றை கட்டினார்.
8) சந்த்வாத் (மஹாராஷ்டிரா) :
இங்கு விஷ்ணு கோயில் மற்றும் ரேணுகாதேவி கோயில் கட்டினார்.
9) துவாரகா (குஜராத்) :
இங்கு பூஜை மண்டபம் கட்டினார். மேலும் துவாரகீஷ் கோயில் குருக்களுக்கு சில கிராமங்களை தானமாக வழங்கினார்.
10) எல்லோரா (மஹாராஷ்டிரா) :
எல்லோரா குகையிலுள்ள கைலாசநாதர் கோயிலுக்கு பூச்சுமான மற்றும் அலங்கார செலவுகளை செய்தார்.
11) கஙகோத்ரி (உத்திரகாண்ட்) :
இங்கு விஸ்வநாத், கேதர்நாத்,அண்ணபூர்ணா மற்றும் பைரவர் கோயில்களையும் நிறைய தர்மசத்திரங்களையும் கட்டினார்.
12) கயா (பீஹார்) :
இங்கு விஷ்ணுபாத் கோயிலை கட்டினார்.
13) கோகர்ணா :
ரேவலேஷ்வர் மஹாதேவ் கோயில், ஹோல்கர் வாடா மற்றும் எளியவர்களுக்கு உணவுகூடங்களை கட்டினார்.
14) கிரினேஷ்வர் (மஹாராஷ்டிரா) :
இங்கு கிரினேஷ்வர் ஆலயம் மற்றும் சிவாலயா தீர்த்தமும் இவரால் கட்டப்பட்டது.
15) ஹரித்துவார் (உத்திரகாண்ட்) :
கங்கை நதியில் குஷவர்த்தா காத் கட்டினார். தர்மசத்திரங்களை கட்டினார்.
16) ஜால்கெளன் ராமர் கோயில்
17) நாதத்வாரா (இராஜஸ்தான்) :
இங்கு அஹில்யா குண்ட், கோயில் கிணறு மற்றும் தர்மசத்திரங்கள் இவரால் கட்டப்பட்டது.
18) ஒம்கரேஷ்வர் (மத்தியப்பிரதேசம்)
சிவனின் ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான இந்த கோயிலில் சிவனுக்கு வெள்ளி முகமும் குளங்களையும் செய்து கொடுத்தார்.
19) அது மட்டுமில்லாமல் மாமலேஷ்வர் மஹாதேவ் கோயில், அமலேஷ்வர் கோயில் மற்றும் திரிஹம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம் (நாஸிக்கில் உள்ள கோயில் ஓளரங்கசீப்பால் இடிக்கப்பட்டது) ஆகியவற்றை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தார்.
20) பூரி (ஒரிஸ்ஸா) :
ஸ்ரீ ராமச்சந்திரா கோயில், தோட்டங்கள் மற்றும் தர்மசத்திரங்கள் கட்டினார்.
21) இராமேஸ்வரம் (தமிழ்நாடு) :
இங்கு ஹனுமான் கோயில், ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோயில் மற்றும் ஒரு தர்மசத்திரம் இவரால் கட்டப்பட்டது.
22) ரிஷிகேஷ் (உத்திரகாண்ட்) :
ஸ்ரீநாத்ஜி மற்றும் கோவர்த்தனன் கோயில்களை கட்டினார்.
23) சோம்நாத் (குஜராத்) :
கி.பி.1665ல் ஒளரங்கசீப் ஆணையினால் இடிக்கப்பட்ட சோம்நாத் ஆலயம் கி.பி.1785ல் இவரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
24) உஜ்ஜையினி (மத்தியப்பிரதேசம்)
இங்கு சிந்தாமணி கணபதி, ஜனார்தனா,பாலாஜி திலக்கேஷ்வர் கோயில்களை கட்டினார்.
25) வாரணாசி (உத்திரபிரதேசம்) :
இங்கு ஓளரங்கசீப்பால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலையும் திரும்ப கட்டினார். மேலும் 9 கோயிலகளையும் வாரணாசி நகரில் கட்டினார்.
இது மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சிறு சிறு கோயில்களையும் தர்ம சத்திரங்களையும் குளம் மற்றும் கிணறுகளையும் வெட்டினார். அது போக நாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமாக அவர்களின் கைத்தொழில்கள் மேம்பாட்டிற்கும் அவர்களின் சுய வேலை வாய்ப்புக்களையும் அதிகரித்தார். அதனால் தான் இன்றும் அவர் தெய்வத்தாய் என்று போற்றப்படுகிறார். இவர் கி.பி.1795ல் தனது 70வயதில் 28 வருட ஆட்சிக்கு பின்னர் மரணமடைந்தார். இவரின் சேவைகளை பாராட்டி இன்று இந்தூர் விமானநிலையத்திற்கு "தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமானநிலையம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு பல்கலைகழகங்களுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு கி.பி.1996ல் இவர் பெயரிலான தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது.
முதலாம் துகோஜி ராவ் ஹோல்கர் :
(கி.பி.1723-1797)
ஆட்சி : (கி.பி.1795-1797)
அன்னை அஹில்யா பாய் ஹோல்கருக்கு பின்னர் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை கவனித்து வந்த மால்ஹர் ராவ் ஹோல்கரின் வளர்ப்பு மகனான இவர் பட்டத்திற்கு வந்தார். இவருக்கு 2 மனைவிகளும் 4 மகன்களும் உண்டு. அதில் இவருக்கு பின்னர் காசிராவ் ஹோல்கர் மற்றும் யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரியணை ஏறினார்கள். இரண்டாம் மால்ஹர் ராவ் ஹோல்கர் கி.பி.1797ல் சிந்தியாவால் கொல்லப்பட்டார். அதில் தப்பித்த பிழைத்த இன்னொரு மகன் விதோஜிராவ்க்கு அரியணை கிடைக்காமல் அவரது மகனான ஹரிராவ் ஹோல்கருக்கு அரியணை கி.பி.1834ல் கிடைத்தது. துகோஜி ராவ் ஹோல்கர் அஹில்யா பாய்யின் ஆட்சியில் சிறந்த போர்வீரராகவும் நாட்டை காத்து வந்தார்.இவர் லாகூர் போர், அட்டோக் மற்றும் பெஷாவர் யுத்தங்களில் சிறப்பாக பணியாற்றி மராத்திய அரசை விரிவுபடுத்தினார். கி.பி.1795ல் அஹில்யா பாய் ஹோல்கர் மறைவுக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அடுத்த 2 ஆண்டுகளில் மரணமடைந்தார்.
காசி ராவ் ஹோல்கர் : (கி.பி.1776-1808)
ஆட்சி : (கி.பி.1797-1799)
துகோஜி ராவ்வுக்கு 4 மகன்கள் இருந்தாலும் கடைசி காலத்தில் காசி ராவ் ஹோல்கர் தன் வாரிசு என்று அறிவித்து பூனேவில் இருந்தார். ஆனால் காசி ராவ் உடல்ஊனமுற்றவராகவும் இளமை செருக்கிலும் திரிந்தவராக இருந்ததால் மக்களும் வீரர்களும் இவரை விரும்பவில்லை. இவருக்கு மாற்றாக இரண்டாம் மால்ஹர் ராவ் ஹோல்கர் பதவிக்கு வர விரும்பினர். மற்ற சகோதரர்களும் மால்ஹர் ராவ் ஹோல்கர் தான் அடுத்து பட்டத்திற்கு வர பிரியப்பட்டனர். தந்தையின் காலத்தில் இவர் மஹேஷ்வர் நிர்வாகத்தை கவனித்து வந்தார். மால்ஹர் ராவ் ஹோல்கர் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். தந்தை மறைந்தவுடன் தலைமை பொறுப்புக்கு பிரச்சினை வர காசி ராவ் குவாலியரின் சிந்தியா உதவியை பெற்று ஆட்சியில் அமர்ந்தார். தெளலத் ராவ் சிந்தியா இரண்டாம் மால்ஹர் ராவ் ஹோல்கருடன் நடந்த போரில் அவரை கொன்றார். இன்னொரு சகோதரர் விதோஜி ராவ் ஹோல்கர் தப்பித்து ஓடி கோலாப்பூரிலும் யஷ்வந்த் ராவ் ஹோல்கர் நாக்பூரிலும் ஒளிந்து கொண்டனர். நாக்பூரின் இரண்டாம் ரகோஜி போன்ஸ்லேவிடம் யஷ்வந்த் ராவ்வை கைது செய்ய சிந்தியா உத்தரவிட அவ்வாறே நடக்க யஷ்வந்த் ராவ் அங்கிருந்து தப்பித்து வந்தார். பொதுமக்கள் ஆதரவு யஷ்வந்த் ராவ் ஹோல்கருக்கு அதிகரிக்க நிறைய பேர் அவரின் படையில் சேர்ந்தனர். பின்னர் கி.பி.1799ல் ஜனவரியில் ய்ஷ்வந்த்ராவ் ஹோல்கர் மஹேஷ்வரை கைப்பற்றி அரசரனார். காசி ராவ் ஹோல்கர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். கி.பி.1808ல் இவர் மறைந்தார்.
யஷ்வந்த் ராவ் ஹோல்கர் : (கி.பி.1776-1811)
ஆட்சி : (கி.பி.1799-1811)
சகோதரர் காசி ராவ் ஹோல்கரை பதவியிலிருந்து இறக்கி கி.பி.1799 ஜனவரி 6ல் 6வது அரசராக பதவியேற்றார். அதே ஆண்டு மே மாதத்தில் உஜ்ஜையினியை கைப்பற்றினார். மொகலாய பேரரசரும் பிரிட்டிஷ்ஷாரும் இவரை தனி அரசராக அங்கீகரித்தனர். அதன்பின் தனது எல்லைகளை விரிவுபடுத்த முனைந்தார். மராத்திய பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவ்க்கு கட்டுப்படாமல் இருந்தார். ஆனாலும் சதாராவின் மராத்திய அரசருக்கு கட்டுப்பட்டு அவருக்குரிய வரிப்பணத்தை செலுத்தி வந்தார். கி.பி.1802ல் இவர் பூனா மீது படையெடுத்து வந்தார். இவரை பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மற்றும் குவாலியரின் தெளலத் ராவ் சிந்தியாவின் கூட்டுப்படைகள் பூனாவுக்கு அருகில் சந்தித்தன. இந்தப் போரில் கூட்டு படைகளை விரட்டியடித்து வெற்றி பெற்றார். மராத்திய பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பம்பாய்க்கு ஓடிச்சென்று ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் இந்தியாவில் பரவுவதை உணர்ந்து அனைத்து மன்னர்களுக்கும் ஒன்றிணைத்து அவர்களை விரட்டலாம் என்று கடிதம் எழுதினார். ஆனால் அனைவரும் ஆங்கிலேயர்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டதால் இவர் மட்டுமே தனியே எதிர்க்க முடிவு செய்து கி.பி.1803 ஜூனில் பிரிட்டிஷ் படைகளை பந்தல்கண்ட்லில் தோற்கடித்தார். பின்னர் கி.பி.1804ல் மொகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்மை ஆங்கிலேயர் பிடியில் இருந்து விடுவிக்க டெல்லி மீது தொடுத்த தாக்குதல் வெற்றி அடையவில்லை. பின்னர் கி.பி.1805ல் ஆங்கிலேயர்கள் இவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதனால் மற்ற அரசர்கள் எல்லாம் இவருடன் சேர முற்பட அவர்களை கொண்டு மராத்திய சாம்ராஜ்யத்தை அமைக்க முற்படுவதை பற்றி குவாலியரின் தெளலத் ராவ் சிந்தியா ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதி தகவல் தெரிவித்தார். பின்னர் இவரும் சிந்தியாவும் ஆங்கிலேயர்களுடன் கி.பி.1807 நவம்பரில் உடன்படிக்கை செய்து கொண்டனர். உடன்படிக்கை காரணமாக பீரங்கிகளை தயார் செய்து வந்தார். 1 லட்சம் வீரர்களை தயார்படுத்தி கல்கத்தாவை தாக்குவதற்கு முயன்றார். அதற்குள் கி.பி.1811 அக்டோபர் 27ல் மறைந்ததால் இவரின் முயற்சி கைகூடவில்லை.
மூன்றாம் மால்ஹர் ராவ் ஹோல்கர் : (கி.பி.1806-1833)
ஆட்சி : (கி.பி.1811-1833)
யஷ்வந்த் ராவ் ஹோல்கருக்கு பின்னர் அரியணை ஏறிய அவரது ஒரே மகன் இவர். 5 வயதில் அரியணை ஏறியதால் இவரது தாய்யான கிருஷ்ணா பாய் ஹோல்கர் இவருக்கு துணையாக அரசு புரிந்தார்.
மார்தண்ட் ராவ் ஹோல்கர் : (கி.பி.1830-1849)
ஆட்சி : (கி.பி.1833-1834)
மூன்றாம் மால்ஹர் ராவ் ஹோல்கர் மறைவுக்கு பின்னர் அவரது மனைவியான கெளதமா பாய் ஹோல்கர் மற்றும் அவரது தாய்யான கிருஷ்ணா பாய் ஹோல்கர் ஆகியோர் இவரை தத்தெடுத்து அடுத்த மஹாராஜாவாக ஆக்கினார்கள். இவர் சர்தார் பாபு சாகிப் ஹோல்கர் என்பவரின் மூத்த மகன். இவரது நியமனத்தை மக்களும் மற்றவர்களும் ஏற்கவில்லை. முதலாம் துகோஜி ராவ் ஹோல்கரின் பேரனும் வித்தோஜி ராவ் ஹோல்கரின் மகனுமான ஹரி ராவ் ஹோல்கர் மக்களின் ஆதரவோடு மார்த்தாண்ட் ராவ் ஹோல்கரை தக்காண பீடபூமிக்கு விரட்டியடித்து அடுத்த அரசராக பதவியில் அமர்ந்தார்.
ஹரி ராவ் ஹோல்கர் : (கி.பி.1796-1843)
ஆட்சி : (கி.பி.1834-1843)
இவர் முதலாம் துகோஜி ராவ் ஹோல்கரின் பேரனும் வித்தோஜி ராவ் ஹோல்கரின் மகனுமாவார். கி.பி.1819ல் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட அதிகார போட்டியில் இவர் மஹேஷ்வரில் சிறை வைக்கப்பட்டார். கி.பி.1834ல் மார்த்தாண்ட் ராவ் ஹோல்கர் பதவியேற்றதும் இவரது ஆதரவாளர்களால் விடுவிக்கப்பட்டு மக்கள் புரட்சியின் மூலம் கிருஷ்ணா பாய் ஹோல்கரால் அரியணையில் உட்கார வைக்கப்பட்டிருந்த சிறுவனான மார்த்தாண்ட் ராவ் ஹோல்கரை பதவியிலிருந்து விலக்கி அரியணை ஏறினார். ஆங்கிலேயர் இந்த அரியணை விவகாரங்களில் தலையிடாமல் வேடிக்கை பார்த்தனர். பின்னர் நாளடைவில் ஹரி ராவ் ஹோல்கர் உடல்நிலை சீர்கெட ஆரம்பித்தவுடன் ஆங்கிலேய ரெஸிடென்ட் அவருக்கு வாரிசு நியமிக்க சொன்னார். அதன்படி ஜமீன்தார் பாபுஜி ராவ் ஹோல்கர் என்பவரின் 11 வயது மகனான கண்டே ராவ் ஹோல்கரை வளர்ப்பு மகனாக தததெடுத்தார். பின்னர் இவர் பொது வாழ்விலிருந்து விலக கவர்னர் ஜெனரல் எலன்போரோ அரசுக்கு தக்க அமைச்சர்களை நியமித்து வழிநடத்தினார்.
இரண்டாம் கண்டே ராவ் ஹோல்கர் : (கி.பி.1828-1844)
ஆட்சி : (கி.பி.1843-1844)
ஹரி ராவ் ஹோல்கரால் வளர்ப்பு மகனாக தத்து எடுக்கப்பட்ட இவரை ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தனர். 15 வயதில் பதவியேற்றாலும் இவரது ஆட்சியை பாட்டியான மஹாராணி கிருஷ்ணா பாய் ஹோல்கர் மற்றும் மந்திரி தயவினால் ஆட்சி புரிந்தார். இயற்கையில் மெலிந்த உடல்நலம் கொண்டிருந்த இவர் அடுத்த வாரிசு எதுவுமில்லாமல் கி.பி.1844ல் இறந்தார்.
இரண்டாம் துகோஜி ராவ் ஹோல்கர் : (கி.பி.1835-1886)
ஆட்சி : (கி.பி.1844-1866)
கண்டே ராவ் ஹோல்கர் மறைவுக்குப் பின்னர் மார்த்தாண்ட் ராவ் ஹோல்கர் அரசுரிமையை வலியுறுத்தி கேட்டும் பிரபுக்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் கிருஷ்ணா பாய் ஹோல்கர் பாவோ சாந்தாஜி ஹோல்கர் (இவர் மார்த்தாண்ட் ராவ் ஹோல்கரின் மாமா) என்பவரின் இளைய மகனான 12 வயது ஜஸ்வந்த் ஹோல்கரை தத்து எடுத்து இரண்டாம் துகோஜி ராவ் ஹோல்கர் என்ற பெயரில் அரியணை ஏற்றினார். அரசு ஏற்றாலும் அதிகாரங்கள் ரிஜென்ஸி சபையினால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. கி.பி.1846ல் இவர் ருக்மா பாய் என்பவரை மணந்தார். ஆனால் கி.பி.1848ல் அவர் காலராவால் மறைந்தார். அதன்பின் இவர் பாகிரதீ பாய் , ராதா பாய், பார்வதி பாய் என்ற மூவரை மணந்துகொண்டார். கி.பி. 1849ல் ராஜமாதாவான மஹாராணி கிருஷ்ணா பாய் ஹோல்கர் மறைந்தார். கி.பி.1852ல் இவருக்கு 20 வயது ஆனவுடன் ஆங்கிலேயர்கள் முழு அதிகாரத்துடன் ஆள்வதற்கு அனுமதி கொடுத்தனர். கி.பி.1857ல் இந்திய சுதந்திர போராட்டமான சிப்பாய் புரட்சியில் இந்தூர் ராஜ்யம் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவே இருந்தது. இவர் கி.பி.1886ல் ஜூன் மாதத்தில் மஹேஷ்வரில் மறைந்தார்.
சிவாஜி ராவ் ஹோல்கர் : (கி.பி.1859-1908)
ஆட்சி : (கி.பி.1886-1903)
இரண்டாம் துகோஜி ராவ் ஹோல்கருக்கு முதல் இரண்டு மகன்கள் கி.பி.1854 & 1857ல் இறந்தனர். கடைசி மகனான இவர் கி.பி.1859ல் பார்வதி பாய்க்கு பிறந்தவர். தந்தை இறக்கும் தருவாயில் இவர் மட்டுமே வாரிசாக எஞ்சி இருந்தவர். கி.பி.1887ல் பிரிட்டிஷ் ராணி மற்றும் இளவரசருக்கு நடந்த ராயல் திருமணத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றார். கி.பி.1852 ல் ரெஸிடென்ட் என்ற பதவி நீக்கப்பட்டது பின்பு கி.பி.1899ல் புதியதாக ரெஸிடென்ட் என்பவரை கொண்டு வந்து நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் கவனித்தனர். கி.பி.1902 முதல் இந்தூர் கரன்ஸி நிறுத்தப்பட்டு பிரிட்டிஷ் இந்தியாவின் கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி.1803ல் அரியணையில் இருந்து இறங்கி தன் மகனான மூன்றாம் துகோஜி ராவ் ஹோல்கரை அரசராக்கினார். கி.பி.1908ல் மஹேஷ்வரில் மறைந்தார்.
மூன்றாம் துகோஜி ராவ் ஹோல்கர் : (கி.பி.1890-1978)
ஆட்சி : (கி.பி.1903-1926)
இவர் சிவாஜி ராவ் ஹோல்கர் - சீதா பாய் ஹோல்கர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு 13 வயதில் தந்தை இவருக்கு அரச பதவியை விட்டு தொடுத்து ஒய்வு எடுத்தார். இவர் ஆரம்பத்தில் ரெஸிடென்ட் ஆட்சியில் தான் இருந்தார். கி.பி.1911 தனியாக ஆள அனுமதி கொடுத்தனர். அதே வருடத்தில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் பதவியேற்புக்கு லண்டன் சென்றார். கி.பி.1895ல் சந்திராவதி பாய் என்பவரையும் பின்னர் கி.பி.1913ல் இந்திரா பாய் என்பவரையும் மணந்தார். கி.பி.1928ல் அமெரிக்க பெண்ணான நான்ஸி அன்னி மில்லர் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு முன்பு நான்ஸி இந்து மதத்திற்கு மாறி தன் பெயரை சர்மிஸ்டா தேவி ஹோல்கர் என்று மாற்றிக்கொண்டார். இத்திருமணத்தை இவரது குடும்ப டாக்டரும் நண்பருமான சீனிவாச கோசாவி ஆதி சங்கராச்சாரியார் உதவியோடு நடத்தினார். இத்திருமணத்தை நடத்தியதால் டாக்டருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் கூட வந்தது. ஆதி சங்கராச்சாரியார் முன்னின்று இத்திருமணத்தை நடத்தினார். மூன்றாம் துக்கோஜி ராவ் ஹோல்கர் கி.பி.1926ல் தன் மகனான இரண்டாம் யஷ்வந்த் ராவ் ஹோல்கரிடம் ஆட்சிப்பொறுப்பை விட்டு கொடுத்து ராஜா பதவியிலிருந்து விலகினார். இவருக்கு 1 மகனும் 6 மகள்களும் உண்டு. கி.பி.1978ல் பிரான்ஸ்ஸில் உள்ள பாரீஸ் நகரில் தனது 87வயதில் மரணமடைந்தார்.
யஷ்வந்த் ராவ் ஹோல்கர் : (கி.பி.1908-1961)
ஆட்சி : (கி.பி.1926-1948)
தந்தை ஆட்சிப் பொறுப்பை இவரிடம் கொடுத்து விட்டு விலகியதால் கி.பி.1926ல் இந்தூரின் கடைசி அரசராக பொறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பை ஏற்றார் ரீஜென்ஸி கவுன்சில் தான் ஆட்சியை கவனித்தது. கி.பி.1930ல் இவருக்கு 21 வயது முடிந்தவுடன் முழு அதிகாரத்துடன் ஆளுவதற்கு அங்கீகாரம் கிடைத்தது. கி.பி.1947 ஆகஸ்ட் 11ல் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்து இணைப்பில் கையெழுத்திட்டார். பின்னர் கி.பி.1948 மே 28ல் இந்தூர் ராஜ்யம் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைத்து வைக்கப்பட்டது. இவர் கி.பி.1948-1956 வரை ராஜ்பிரமுக் (ஆளுநருக்கு இணையான பதவி) பதவியில் இருந்தார். பின்னர் ஜக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் சார்பாக பணிபுரிந்தார். கி.பி.1961ல் மும்பையில் காலமானார்.கி.பி.1930ல் இந்தூரில் மாணிக் பாக் (நகை தோட்டம்) என்ற மாளிகையை ஜெர்மானிய வடிவமைப்பாளர் உதவியுடன் உருவாக்கினார். கட்டிடக்கலையில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட இந்த மாளிகையில் அலுமினியத்திலான படுக்கையும் கட்டப்பட்டது. பின்னர் இந்த மாளிகை சுதந்திரத்திற்கு பிறகு தற்போது சுங்க இலாகா மற்றும் தீர்வை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
இவர் கி.பி.1924ல் சன்யோகிதா பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் இருவரும் இங்கிலாந்தில் தங்கள் படிப்பை முடித்தனர். கி.பி.1937ல் முதல் மனைவி சன்யோகிதா பாய் ஒரு அறுவை சிகிச்சையில் மரணமடைந்த பின்னர் மார்க்கெரட் லொவுலர் என்பவரை மணந்தும் அவரை விவாகரத்து செய்த பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த யூபீமியா வாட் என்பவரை மணந்தார். இவருக்கு முதல் மனைவி மூலம் உஷா தேவி ஹோல்கர் என்ற மகளும் சிவாஜி ராவ் ரிச்சர்ட் ஹோல்கர் என்ற மகனும் உண்டு.
மொகலாயர்களை எதிர்த்து வளர்ந்த மராத்திய சாம்ராஜ்யங்களுள் ஒன்றான இந்தூர் பின்னர் ஆங்கிலேயர் தலையெடுத்த பின்னர் மொகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்மை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க போராடியதும் பின்னர் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு உடன்படிக்கை செய்து கொண்டு அமைதியாக இருந்ததும் நடந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவுடன் இணைந்து இன்று மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்குள் அடங்கிய மாநகராட்சியாய் மாநிலத்தின் முக்கியமான நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அரசை தோற்றுவித்த முதலாம் மால்ஹர் ராவ் ஹோல்கர் மற்றும் எண்ணற்ற கோயில்கள் தர்மசத்திரங்கள் கட்டிய ஆன்மீக மற்றும் மக்கள் பணி செய்த மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கரும் ஆண்ட இந்தூர் ராஜ்யம் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
உதவிய நூல்கள் :
மொகலாயர்கள் - முகில்
விக்கிபீடியா தகவல்கள்










Comments
Post a Comment