82) மராத்திய அரசு - சிந்தியா வம்ச அரசு (குவாலியர்)

சிந்தியாக்கள் (குவாலியர்) (கி.பி. 1731-1971) :


மராத்திய பேஷ்வா முதலாம் பாஜிராவ் தலைமையின் கீழ் மால்வா மற்றும் வட இந்திய பகுதிகளில் போரிட்டு மராத்திய அரசின் கீழ் அவற்றை கொண்டு வந்த ரனோஜி ராவ் ஷிண்டே கி.பி.1731ல் உஜ்ஜையினி குவாலியர் பகுதிகளை ஆண்டு சிந்தியாக்கள் என்ற வம்சாவளி அரசை உருவாக்கினார். ஆரம்பத்தில் சிந்தியாக்கள் பாமினி சுல்தான்களின் குதிரைப்படையில் பணியாற்றியவர்கள். பின்னர் மராத்திய பேஷ்வாவின் சேவையில் இணைந்து மராத்திய அரசை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்று தங்களது அரசாக குவாலியரை மராத்திய அரசின் கீழ் ஆள ஆரம்பித்தனர். பின்னர் ஆங்கிலேயர்களுடன் கி.பி.1818ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக உஜ்ஜையினியை விட்டு குவாலியரை தங்கள் தலைநகரமாக கொண்டு அவர்களிடம் ஓய்வூதியம் பெற்று ஆள துவங்கியவர்கள் கி.பி.1947ல் இந்திய சுதந்திரத்தின் போது தங்களது அரசை இந்திய ஒன்றியத்துடன் இணைத்து கி.பி.1948-1956 வரை ராஜ்பிரமுக் (ஆளுநர்) பதவியை பெற்று ஆண்டனர். பின்னர் மத்திய பிரதேசம் என்ற மாநிலம் கி.பி.1956ல் உதயமாயிற்று. பின்னர் கி.பி.1971ல் மன்னர் மான்ய ஒழிப்பில் மஹாராஜா என்ற பதவியும் போயிற்று. கடைசி மன்னராக இருந்த மாதவ்ராவ் சிந்தியா அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். இவர்களின் பெயர்கள் ஷிண்டே என்றும் சிந்தியா என்றும் குறிப்பிடப்படுகிறது.

ரனோஜிராவ் ஷிண்டே : (கி.பி.1700-1745)

ஆட்சி : (கி.பி.1731-1745)


கி.பி.1700ல் ஜன்கோஜிராவ் சிந்தியா என்பவருக்கு மகனாக சதாரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். இவரின் முன்னோர்கள் பாமினி சுல்தான்களின் குதிரை படையில் பணியாற்றியவர்கள். இவரது தந்தையின் மரணத்திற்கு பின் அவர் வகித்த பாட்டீல் (கிராமத்தலைவர்) பதவி இவருக்கு வந்தது. இவரது தாயின் சகோதரனான மாமாவால் இவர் போர்கலைகளில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் படைகளில் இணைந்தார். பின்னர் தனது திறமையினால் 10000 பேர் கொண்ட தனிப்படைக்கு தளபதி என்ற நிலைக்கு உயர்ந்தார். முதலில் முதலாம் பாஜி ராவ்வின் தோழனாக அறிமுகமாகி சத்ரபதி ஷாகு மஹாராஜாவின் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் சேவையில் இணைந்த இவர் பின்னர் அவருக்கு பின்னர் அவரது மகன் முதலாம் பாஜிராவ்வின் சேவையின் கீழ் மால்வா படையெடுப்புகளில் முக்கியமான தளபதிகளுள் ஒருவரானார். கி.பி.1727ல் மால்வாவை வெற்றி கொண்ட பின்னர் அந்த பகுதிகளை கி.பி.1731 முதல் உஜ்ஜையினியை தலைமையாக கொண்டு வருமானத்தில் பாதியை மராத்திய அரசருக்கு அளிக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஆள அனுமதிக்கப்பட்டார். உஜ்ஜையினியை தனது இருப்பிடமாக கி.பி.1735முதல் ஆக்கி கொண்டார். இவர் கி.பி.1736-37 மற்றும் கி.பி.1739களில் மராத்தியர்களின் டெல்லி மீதான படையெடுப்புகளில் தனது பங்களிப்பை அளித்தார். கி.பி.1745ல் இன்றைய மத்திய பிரதேசத்திலுள்ள சுஜல்ப்பூர் என்னுமிடத்தில் மறைந்தார்.

ஜயப்பாஜி ராவ் சிந்தியா : (கி.பி.1720-1755)

ஆட்சி : (கி.பி.1745-1755)

ரனோஜிராவ் சிந்தியாவின் மகனான இவர் அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். கி.பி.1755ல் இராஜஸ்தானிலுள்ள நாகோர் என்னுமிடத்தில் ஜோத்பூர் மஹாராஜா விஜய் சிங்கின் இரு ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார். இவருக்கு மொத்தம் 1 மகன் மற்றும் 4 மகள்கள். ஒரு மகளை நிம்பல்கர் பரம்பரையிலும் இரு மகள்களை கோர்படே பரய்பரையிலும் ஒரு மகளை போன்ஸ்லே பரமபரையிலும் திருமணம் செய்து கொடுத்தார். இவருக்கு பின்னர் இவரது மகனான ஜன்கோஜி ராவ் சிந்தியா தனது 10 வயதில் அரியணை ஏறினார்.

ஜன்கோஜி ராவ் சிந்தியா : (கி.பி.1745-1761)

ஆட்சி : (கி.பி.1755-1761)

தந்தை மறைந்த சமயத்தில் 10 வயதான இவர் தனது தந்தையின் சகோதரரான தட்டாஜிராவ் சிந்தியாவின் மேற்பார்வையில் ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1761ல் ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலிக்கு எதிரான மூன்றாம் பானிபட் யுத்தத்தில் தனது 7000 படைகளுடன் கலந்து கொண்டார். போரில் முதலாம் ஷாம்ஷெர் பகதூருடன் (இவர் முதலாம் பாஜிராவ்-மஸ்தானி தம்பதியருக்கு பிறந்த மகன்) இணைந்து போரிட்ட சமயத்தில் போரில் காயம்பட்டு ஆப்கானிய தளபதியான பார்குர்தர் கானிடம் பிடிபட்டார்‌. இவரது விடுதலைக்கு 7 லட்சம் ரூபாய் விலையாக பேசப்பட்ட நிகழ்வு அஹ்மத் அலி அப்தாலிக்கு தெரியவர தளபதி பார்குர்தர் கான் தனது குட்டு வெளிப்பட்டு விடக்கூடாது என்று இவரை கொன்று எரித்து விட்டார்.

கதார்ஜி ராவ் சிந்தியா :

ஆட்சி : (கி.பி.1763-1764)

கி.பி.1761ல் மூன்றாவது ராஜாவான ஜன்கோஜி ராவ் சிந்தியா மூன்றாம் பானிபட் யுத்தத்தில் மறைந்த பிறகு அடுத்த இரு வருடங்களுக்கு (கி.பி.1761-63) எந்த அரசரும் இல்லாமல் இருந்தது. ரனோஜி ராவ் சிந்தியாவின் மகன்களில் ஒருவரான துக்கோஜி ராவ் சிந்தியாவின் மகனான இவரை மராத்திய பேஷ்வா அடுத்த ஆட்சியாளராக நியமித்தார். ஆனால் இவருக்கு ஆட்சியாளராக வருவதற்கு விருப்பமில்லாமல் இருந்தார். பேஷ்வாவின் கட்டாயத்தின் பேரில் பதவியை ஏற்ற இவர் அடுத்த வருடத்திலையே பதவியில் விருப்பமில்லாமல் அரசை விட்டு விலகினார்.

மனாஜி ராவ் சிந்தியா : ( ? -கி.பி.1800)

ஆட்சி : (கி.பி.1764-1768)

கதார்ஜி சிந்தியாவின் விலகலுக்கு பின்னர் பேஷ்வா கி.பி.1764ல் சபாஜி சிந்தியாவின் பேரனான இவரை அரியணையில் அமர்த்தினார். 4 வருடங்கள் மட்டுமே ஆட்சி புரிந்த இவர் பின்னர் மகாத்ஜி ஷிண்டேவுக்கு வழிவிட்டு விலகினார்.

மகாத்ஜி ஷிண்டே : (கி.பி.1730-1794)

ஆட்சி : (கி.பி.1768-1794)


சிந்தியா வம்சத்தை தோற்றுவித்த ரனோஜிராவ் சிந்தியாவின் இளைய மகன் இவர். இவருக்கு மொத்தம் 9 மனைவிகள். சிந்தியா வம்சத்தின் தலைசிறந்த ஆட்சியாளர் இவரே. சிந்தியா வம்சத்து ஆட்சியை முன்னெடுத்து சென்றது இவரே. இவரது காலத்தில் கி.பி.1788ல் மொகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் இவரது பாதுகாப்பில் இருந்தார். இவர் மாள்வாவுக்கு வந்திருந்த சமயத்தில் ரோஹில்கண்ட் பகுதியை சேர்ந்த ரோஹில்லா வம்சத்தை சேர்ந்த குலாம் காதிர் கான் டெல்லியை கைப்பற்றி இரண்டாம் ஷா ஆலம்மின் கண்களை குருடாக்கி அரச குடும்பத்து பெண்களை எல்லாம் சொல்லெண்ணாத சித்திரவதை செய்தார். இளவரசர் அக்பர் ஷாவை அரைகுறை உடையுடன் அரசவையில் நடனமாட வைத்து கேவலப்படுத்தினான். இந்த நிகழ்வை அறிந்தவுடன் மகாத்ஜி சிந்தியா டெல்லி மீது படையெடுத்து வந்து ரோஹில்லாக்களை விரட்டி அடுத்து டெல்லிக்கு வெளியே கல்லறையில் மறைந்திருந்த குலாம் காதிர் கானை பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி வீழ்த்தி மீண்டும் இரண்டாம் ஷா ஆல்ம்மை டெல்லியில் மொகலாய அரசராக பதவியில் அமர்த்தினார்.

கி.பி.1761ல் மூன்றாம் பானிபட் யுத்தத்தின் தோல்விக்கு பிறகு வீழ்ந்து கிடந்த மராத்திய அரசை பேஷ்வா முதலாம் மாதவ் ராவ் மற்றும் நானா பட்னாவிஸ் ஆகியோருடன் இணைந்து தூக்கி நிறுத்தினார். மதுராவின் ஜாட் ஆட்சியாளர்களை வீழ்த்தினார். பின்னர் ரோஹில்ஹிண்ட்டின் ரோஹில்லாக்களை வீழ்த்தி அவர்களின் நஜீபாபாத்தை கைப்பற்றினார். முதலாம் ஆங்கிலேய-மராத்திய போரில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி அவர்களை வாட்கெளவுன் ஒப்பந்தத்தில் கையொழுத்திட வைத்தார். ஆனாலும் பின்னர் பேஷ்வா ஆங்கிலேயரிடம் வீழ்ந்தால் இவர் தலையிட்டதால் கி.பி.1782ல் சால்பாய் ஒப்பந்தம் மராத்திய சத்ரபதி மற்றும் ஆங்கிலேயருக்கு இடையே ஏற்பட்டது.


அதன்படி மேற்கு யமுனை நதிக்கரையில் இருந்த இவரின் படைகள் அந்த இடத்தை விட்டு விலகி  உஜ்ஜையினிக்கு வரும்படி ஆயிற்று. கி.பி.1782ல் சீக்கியர்களிடமிருந்து லாகூரை கைப்பற்றிய ஆப்கானிய துரானி வம்சத்து அஹ்மத் அலி அப்தாலியின் மகனான தைமூர் ஷா அப்தாலியை விரட்டி லாகூரை கைப்பற்றினார். ஏற்கனவே சோம்நாத் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கபப்ட்டு லாகூரில் இருந்த மூன்று வெள்ளி கதவுகளை திரும்பவும் சோம்நாத் கோயிலில் ஒப்படைக்க அங்கிருந்த பூஜாரிகள் அதை ஏற்காமல் திருப்பி அனுப்ப அதை உஜ்ஜையினியில் உள்ள மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கா மற்றும் கோபால் மந்திர் ஆகியவற்றிற்கு கொடுத்து விட்டார். கி.பி.1787ல் இராஜபுத்ரர்கள் மீது படையெடுத்தாலும் அவர்கள் இவரின் எதிர்ப்பை சமாளித்தனர். கி.பி.1790ல் ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் அரசுகளை தோற்கடித்தார். கி.பி‌.1794ல் பூனே அருகிலுள்ள வாணவாடி என்னுமிடத்தில் போர் முகாம் இட்டிருந்த சமயத்தில் இவர் இறந்து போனார்.

தெளலத் ராவ் சிந்தியா : (கி.பி.1779-1827)

ஆட்சி : (கி.பி.1794-1827)


 மகாத்ஜி சிந்தியா மறைவுக்கு பின்னர் அவருக்கு நேரிடை வாரிசு இல்லாததால் அவரது மூத்த சகோதரரான துகோஜிராவ் சிந்தியாவின் பேரனான இவர் தனது 15 வயதில் அரியணை ஏறினார். இவரை மராத்திய சத்ரபதியும் பேஷ்வாவும் தேர்ந்தெடுத்து அரியணை ஏற்றினர். இந்த நேரத்தில் பேஷ்வா இரண்டாம் மாதவ்ராவ் கி.பி.1795ல் மறையவே அதே நேரத்தில் இந்தூரில் துகோஜிராவ் ஹோல்கர் மறைந்து யஷ்வந்த்ராவ் ஹோல்கர் ஆட்சிக்கு வரவும் நானா பட்னாவிஸ் மற்றும் பேஷ்வா ஆகியோருடன் உரசல்கள் வர ஆரம்பித்தது. கி.பி.1802ல் தீபாவளி அன்று இந்தூரின் யஷ்வந்தராவ் ஹோல்கர் பூனாவுக்கு அருகில் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் மற்றும் தெளலத்ராவ் சிந்தியாவின் படைகளை தோற்கடித்து விரட்டினார். பின்னர் தெளலத்ராவ் சிந்தியா கி.பி.1802 டிசம்பரில் கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பந்தம் (பேஸின் ஒப்பந்தம்) செய்து கொண்டார். பின்னர் அடுத்த வருடமும் ஆங்கிலேயரிடம் தோற்று யமுனை நதிக்கரை பகுதிகளையும் பரூச் மாவட்டம் (குஜராத்) இழந்தார். பின்னர் கி.பி.1811ல் பகக்த்து ராஜ்யமான சந்தேரியை கைப்பற்றினார். கி.பி.1816ல் ஆங்கிலேயர்கள் பிண்டாரி கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக இவரை அழைக்க இவரும் அழைப்பை ஏற்று ஆனால் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை. பின்னர் அஸிர்கார்க் மற்றும் அஜ்மீர் ஆகியவற்றை ஆங்கிலேயரிடம் ஒப்பந்தத்தின் மூலம் இழந்தார். இவருடைய ஆட்சியில் தான்  மராத்திய அரசு (சிந்தியாக்கள்) ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். அது முதல் சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் தான் இருந்தனர். இவருடைய காலத்தில் தான் உஜ்ஜையினியை விட்டு குவாலியரை தலைநகரமாக கொண்டு ஆள ஆரம்பித்தனர். 33 ஆண்டுகள் ஆண்ட இவர் வாரிசில்லாமல் கி.பி.1827ல் மறைந்தார்.

இரண்டாம் ஜன்கோஜி ராவ் சிந்தியா : (கி.பி.1805-1843)

ஆட்சி : (கி.பி.1827-1843)


முந்தைய அரசர் தெளலத் ராவ் சிந்தியாவுககு பிறந்த ஒரே மகனும் அவருக்கு முன்பே பிறந்து 8 மாதத்திலையே இறந்து போனதால் அவர் இறக்கும்போது வாரிசில்லாமல் போனது.  அவர் மறைந்தவுடன் அவரது மனைவியான பாய்ஸா பாய் இவரை தத்தெடுத்து எடுத்ததால் இவருக்கு அடுத்த அரசர் யோகம் கிட்டியது. ஆட்சியேறும்போதே  இவருக்கு உரிய வயது இருந்தாலும் மஹாராணி பாய்ஸா பாய் கண்காணிப்பிலையே கி.பி‌.1827-33 வரை இருந்தவர் பின்னே சுயமாக ஆட்சி புரிய ஆரம்பித்தார். இவர் தனது 38 வயதில் கி.பி.1843ல் குவாலியரில் மறைந்தார்.

ஜயாஜி ராவ் சிந்தியா : (கி.பி.1835-1886)

ஆட்சி : (கி.பி.1843-1886)


முந்தைய அரசனான இரண்டாம் ஜன்கோஜிராவ் சிந்தியா ஆண் வாரிசில்லாமல் மறைந்ததால் அவரது மனைவியான தாரா பாய் கி.பி.1835ல் ஹன்வந்த் ராவ் என்பவருக்கு மகனாக பாகீரத் ஷிண்டே என்ற இயற்பெயருடைய இவரை தத்தெடுத்து அடுத்த அரசராக ஜயாஜிராவ் சிந்தியா என்ற பெயரில் முடிசூட்டினார்.

கி.பி.1857ல் முதல் இந்திய சுதந்திர போராட்டங்கள் ஆரம்பித்த சமயத்தில் இவரது சமஸ்தானத்து மக்கள் புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொள்ள துடித்தாலும் இவர் ஆங்கிலேயருக்கு எதிராக நடக்க பயந்தார். கி.பி.1858 ஜூன் மாதத்தில் தாந்தியா தோபே மற்றும் ராணி லட்சுமிபாய் படைகளை எதிர்த்து மோரார் என்னுமிடத்தில் 7000 காலாட்படை மற்றும் 4000 குதிரைப்படையுடன் காத்திருக்க இவரது படையில் இவரது மெய்காவலர் படையை தவிர மற்றவர்கள் அனைவரும் புரட்சிப்படையில் இணைய தனது பாதுகாவலர்களுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடி வந்தார்.

கி.பி.1872ல் ஆக்ரா-குவாலியர் ரயில்பாதை அமைக்க 75 லட்சம் பணம் கொடுத்தார். கி.பி.1873ல் இந்தூர்-நீமூச் ரயில்பாதை அமைக்கவும் குறைந்த அளவில் நிதியுதவி அளித்துள்ளார். இவர் காலத்தில் மோதி மஹால், ஜெய் விலாஸ் மஹால், விக்டோரியா கட்டிடம் முதலிய நிறைய கட்டிடங்களும் கோட்டீஸ்வர் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்து கொடுத்தும் தனது ராஜ்யம் முழுவதிலும் 69 சிவன் கோயில்களை கட்டி கொடுத்துள்ளார். குவாலியர் கோட்டையின் பாதுகாப்பு வாயிலை 15 லட்சம் செலவில் புதுப்பித்தார்.

இவர் கி.பி.1843ல் சிம்னாபாய் கடம் என்பவரையும் கி.பி.1852ல் லக்ஷ்மி பாய் குர்ஜார் என்பவரையும் கி.பி.1873ல் பாபூய்பாய் சாவந்த் மற்றும் சக்யாபாய் என்பவரையும் மணந்தார். இவருக்கு மாதோராவ் என்ற மகனும் ஸ்ரீமந்த் கண்பத் ராவ் என்ற மகனும் இருந்தனர். இந்த ஸ்ரீமந்த் கண்பத் ராவ்  ஹார்மோனியம் வாசிப்பதில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக இருந்தார். இவரிடம் தான் இந்தி நடிகை நர்கீஸ் என்பவரின் தாயான ஜத்தன்பாய் இசை பயின்றார். ஜத்தீன் பாய் நடிகை  நர்கீஸ்ன் தாயும்  நடிகர் சஞ்சய் தத்தின் பாட்டியும் ஆவார். ஜயாஜிராவ் சிந்தியா கி.பி.1886 ஜூனில் குவாலியரில் உள்ள ஜெய் விலாஸ் மஹாலில் மறைந்தார்.

மாதோ ராவ் சிந்தியா : (கி.பி.1876-1925)

ஆட்சி : (கி.பி.1886-1925)


தந்தை ஜயாஜிராவ் சிந்தியாவின் மறைவுக்கு பின்னர் தனது 9வது வயதில் ஆட்சியேறினார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும் இரண்டாவது மனைவி மூலமாக தான் ஒரு மகனும் மகளும் பிறந்தனர். கி.பி.1913ல் பிறந்த மகள் திருமணம் முடிந்து கி.பி.1934ல் வாரிசில்லாமல் மடிந்தார். கி.பி.1916ல் பிறந்த மகன் இவருக்கு பின்னர் தந்தையை போலவே அவரது மரணத்திற்குப் பின்னர் அதே 9 வயதில் அரியணை ஏறினார். கி.பி.1901ல் சீனாவில் நடந்த பாக்ஸர் யுத்தத்தில் ஆங்கில படைகளுக்கு உதவி புரிந்ததால் இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட்டால் கெளரவிக்கப்பட்டார். இவர் அயர்லாந்தில் மொசைக் கற்களால் ஆன சர்ச் கட்டுவதற்கு நிதியுதவி புரிந்துள்ளார். தனது 48வது வயதில் பிரான்ஸிலுள்ள பாரீஸ் நகரில் மரணமடைந்தார்.

ஜிவாஜி ராவ் சிந்தியா : (கி.பி.1916-1961)

ஆட்சி : (கி.பி.1925-1947)


தந்தைக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் கி.பி.1941ல் நேபாள ரானா மன்னர் பரம்பரையை சேர்ந்த லேகா திவ்யேஸ்வரி தேவியை மணந்து கொண்டார். இவர் தான் பின்னாளில் மஹாராணி விஜயராஜே சிந்தியா என்றழைக்கப்பட்டவர். இத்தம்பதிகளுக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உண்டு. மஹாராணி இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த மகனான மாதவ் ராவ் சிந்தியா மத்திய அரசில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இன்னொரு மகளான வசுந்தரா ராஜே ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இன்னொரு மகளான யசோதரா ராஜே மத்தியப்பிரதேச அரசில் அமைச்சராக இருந்துள்ளார். மற்ற இரு மகள்களும் மன்னர் பரம்பரையில் திருமணம் செய்து கொண்டனர். இந்திய சுதந்திரம் அடையும் தருவாயில் இரண்டு நாடுகளில் (இந்தியா பாகிஸ்தான்) இணையவும் வாய்ப்பு இருந்தும் இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்தார். கி.பி.1948 முதல் 1956 வரை "மத்திய பாரத்" ராஜ்யத்தின் ராஜ்பிரமுக் (ஆளுநர் பதவி போன்றது) பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் "மத்திய பாரத்" கி.பி.1956ல் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இவர் கி.பி.1961ல் மறைந்தார். இவரது மறைவுக்கு பின்னரே இவரது குடும்பத்தினர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தனர். இவரது மனைவியான விஜயராஜே சிந்தியா மக்களவை உறுப்பினராக குவாலியர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மகனான மாதவ் ராவ் சிந்தியா அடுத்த மஹாராஜாவாக நியமிக்கப்பட்டார்.

மாதவ் ராவ் சிந்தியா (கி.பி.1945-2001) :


தந்தை ஜிவாஜிராவ் சிந்தியா மறைவுக்கு பின்னர் அடுத்த மஹாராஜாவாக நியமிக்கப்பட்ட இவர் ஆரம்பத்தில் குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியில் படித்தும் பின்னர் இங்கிலாந்தில் உள்ள வின்செஸ்டர் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்ட் நீயூ கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியவுடன் தாயாரின் வழியில் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். கி.பி.1971ல் மத்திய அரசு மன்னர் மான்ய ஒழிப்பில் மஹாராஜா பதவி பறிபோயிற்று. அந்த ஆண்டில் மத்திய பிரதேச "குணா" மக்களவை தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடைந்த வரலாறே இல்லை. ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கி.பி.2001ல் உத்திரபிரதேச மாநிலத்தில் விமான விபத்தில் மரணமடைந்தார்.

ஜோதிராத்யா சிந்தியா : (கி.பி.1971- தற்போது)

தந்தைக்கு பின்னர் குணா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் மன்மோகன் சிங் அரசில் 2012-2014 வரை மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். கி.பி.2019 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கி.பி.2020ல் விலகிய இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார்.

உதவிய நூல்கள் :

மொகலாயர்கள் - முகில்

விக்கிபீடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு