83) மராத்திய அரசு - போன்ஸ்லே வம்ச அரசு (நாக்பூர்)
போன்ஸ்லே (நாக்பூர்) (கி.பி.1739-1853) :
போர்க்குணம் கொண்ட மராத்திய குலங்களில் ஒன்றான இதில் தான் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பிறந்தார். இவர்கள் ஆரம்பத்தில் சதாராவை தலைநகராக கொண்டு சிவாஜி மராட்டிய பேரரசை ஏற்படுத்தினார். அவருக்கு பின் மெல்ல முதலாம் ஷாகுஜி போன்ஸ்லேவின் காலத்தில் மராட்டிய அரசு வலுவிழந்து மராட்டிய பேஷ்வா (முதலமைச்சர்களின்) கட்டுப்பாட்டில் சென்றது. அந்த நேரத்தில் உருவான மராட்டிய கூட்டமைப்பில் நாக்பூர் போன்ஸ்லே, குவாலியர் சிந்தியா, இந்தூர் ஹோல்கர், பரோடா கெய்க்வாட், ஜான்ஸி நெவால்கர் ஆகியவை அடங்கும். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இராஜ்யங்களின் வரிவசூலை திறம்பட வசூலித்து அதில் 50% பங்கை மராட்டிய அரசுக்கு ஒப்படைத்தும் போர் காலங்களில் மராட்டிய அரசுக்கு போர்படைகளையும் தளவாடங்களையும் உணவு பொருட்களையும் அனுப்பி உதவி புரிந்தனர். இவர்களுள் நாக்பூர் போன்ஸ்லே வம்சத்தை ஆரம்பித்த முதலாம் ரகோஜி போன்ஸ்லேவும் அடங்குவார். ரகோஜியின் தாத்தாவும் அவரது இரு சகோதரர்களும் சத்ரபதி சிவாஜியின் படைகளில் இணைந்து போரிட்டவர்கள். அதனால் அவர்களுக்கு இன்றைய கர்நாடகாவிலுள்ள பேரர் பகுதியின் வரிவசூல் பொறுப்பு வழங்கப்பட்டது. மெல்ல முதலாம் ரகோஹி போன்ஸ்லேவின் ஆட்சியில் தனியரசாக ஆரம்பித்து பின்னர் மூன்றாம் மராத்திய-ஆங்கிலேய போருக்கு பின்னர் கி.பி.1818 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கி.பி.1853ல் மூன்றாம் ரகோஜி போன்ஸ்லே வாரிசு இல்லாமல் மறையவே டல்ஹெளசி பிரபுவின் அவகாசியிலி கொள்கையின் படி கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைந்தது.
முதலாம் ரகோஜி போன்ஸ்லே : (கி.பி.1695-1755)
ஆட்சி : (கி.பி.1739-1755)
நாக்பூர் கோண்டுவானா அரசின் தலைநகராக இருந்தது. அதை ஆண்டு வந்த அரசர் கி.பி.1739ல் இறக்கவே கிளர்ச்சியாளர் ஒருவர் அரசை கைப்பற்றினார். அரசரின் விதவை ராணி அந்த நேரத்தில் பேரர் நகருக்கு பொறுப்பாக இருந்த ரகோஜி போன்ஸ்லேவின் உதவியை நாட அவரும் மராத்திய படைகளுடன் சென்று அரசை மீட்டு ராணியின் இரு மகன்களிடம் ஒப்படைத்து நல்ல வருமானததுடன் திரும்பினார். பின்னர் இரு சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலால் மூத்த சகோதரர் இவரை அழைக்க அவரது போட்டியான சகோதரரை விரட்டியடித்து அரசை மூத்தவரிடம் ஒப்படைக்காமல் தானே ஆள ஆரம்பித்தார். அதன் பின்னர் அந்த கோண்டு அரசர் புர்ஹான் ஷான் இவரிடம் மாதாந்திர பென்ஷன் பணம் பெற்றுக்கொண்டு வாழும் நிலையை அடைந்தார்.
கி.பி.1740ல் கர்நாடக நவாப்பான தோஸ்த் அலிகான் தனது மருமகனான சந்தாசாகிப்பை திருசிவபுரம் மன்னரை அடக்க உத்தரவிட அவர் ரகோஜி போன்ஸ்லேவின் உதவியை நாடினார். 50000 பேர் படைகளுடன் சென்று மொகலாயப் பேரரசின் கர்நாடக நவாப்பான தோஸ்த் அலிகான்னை தமால்செரி என்னுமிடத்தில் நடந்த போரில் வீழ்த்தினார். போரில் தோஸ்த் அலிகான் மற்றும் அவரது இரு மகன்களும் கொல்லப்பட அடுத்த மூன்று வருடங்களுக்கு கர்நாடகா பகுதிகள் மராத்திய அரசின் கீழ் இருந்தது. பின்னர் இவர் மொகலாய பேரரசின் கீழ் இருந்த ஒரிஸ்ஸா பகுதிகள் மீது படையெடுதது வென்றார். அதனால் வங்காள ஆளுநர் சுவர்ணரேகா நதி வரையிலான பகுதிகளில் மராத்தியர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வங்காளம் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளுக்கு 20 லட்சமும் பீஹார் பகுதிகளுக்கு 12 லட்சமும் கப்பம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டு மராத்தியர்களின் ஆளுமையை ஏற்றுக்கொண்டார். வங்காள படையெடுப்பினால் கட்டாக், சந்தா, சத்தீஸ்கர் மற்றும் சம்பல்பூர் பகுதிகள் மராத்திய அரசின் கீழ் வந்தது. கி.பி.1755ல் இவர் மறையவே இவருக்கு பின்னர் இவரது மகனான ஜனோஜி போன்ஸ்லே ஆட்சிக்கு வந்தார்.
ஜனோஜி போன்ஸ்லே :
ஆட்சி : (கி.பி.1755-1772)
தந்தையின் மறைவுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்தார். இவர் ஆரம்பகாலங்களில் மராத்திய பேஷ்வா மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோருக்கு இடையே நடந்த போர்களில் பேஷ்வாவுக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் மூன்றாம் மராத்திய-ஆப்கான் போரின் தோல்வியால் மராத்திய பேஷ்வா கொஞ்சம் பலவீனப்பட்டு இருந்த நேரத்தில் பேஷ்வாவின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் நடக்கவே பேஷ்வா மற்றும் ஹைதராபாத் நிஜாம் இருவருமே (முன்பு சண்டையிட்ட இருவருமே இணைந்து) இவர் மீது தாக்குதல் நடத்தி கி.பி.1765ல் நாக்பூரை தீக்கிரையாக்கினார்கள். பின்னர் கி.பி.1769ல் சிலசில உரசல்களுககு பின்னர் பூனாவிலிருந்த மராட்டிய பேஷ்வாவுக்கு கட்டளைக்கு கீழ்படிந்து ஆட்சி நடத்தி வந்தார். இவர் கி.பி.1772ல் மறையவே இவரின் சகோதரர்களுக்குள் அடுத்த அரசர் யார் என்ற தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். அதில் முதோஜி போன்ஸ்லே தனது இளையவரை "பான்ஞ்கெளன்" என்னுமிடத்தில் (நாக்பூருக்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது) தோற்கடித்து விரட்டி தனது மகனான இரண்டாம் ரகோஜி போன்ஸலேவின் சார்பாக (குழந்தையாக இருந்தவரை தான் ஜனோஜி போன்ஸ்லே அடுத்த வாரிசாக அறிவித்து இருந்தார். அப்போது அவர் குழந்தை பருவத்தில் இருந்தார்) தானே அடுத்த அரசராக பதவியில் அமர்ந்தார்.
முதோஜி போன்ஸ்லே :
ஆட்சி : (கி.பி.1772-1788)
ஜனோஜி போன்ஸ்லேவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவரின் காலத்தில் பேஷ்வாவிடம் இருந்து மாண்ட்லா மற்றும் மேல் நர்மதா பள்ளத்தாக்கு பகுதிகளை வாங்கி தன்னுடைய அரசுடன் சேர்த்துக்கொண்டார். இவர் ஆட்சியில் ஆங்கிலேயர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருந்தார். 16 ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் உடல்நலமுற்று கி.பி.1788ல் மரணமடைந்தார்.
இரண்டாம் ரகோஜி போன்ஸ்லே :
ஆட்சி : (கி.பி.1788-1816)
இவர் ஜனோஜி போன்ஸலேவால் அடுத்த அரசராக தத்து எடுக்கப்பட்ட வளர்ப்பு மகன். அவரது மறைவுக்கு பின்னர் அவரது சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் இவரது தந்தையான முதோஜி போன்ஸ்லே வெற்றி பெற்று அரசராக ஆனார். தந்தைக்கு பின்னர் இவர் அரசராக பொறுப்பேற்றார். இவர் ஹோசன்காபாத் பகுதியையும் கீழ் நர்மதா பள்ளத்தாக்கு பகுதிகளையும் தன்னுடைய அரசுடன் இணைத்து கொண்டார். தன்னுடைய தந்தையை போல ஆங்கிலேயர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தாலும் கி.பி.1803ல் குவாலியரின் தெளலத்ராவ் சிந்தியாவுடன் இணைந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இரண்டாம் ஆங்கிலேய-மராத்திய போரை நடத்தி தோற்று போனார். போரின் முடிவில் டியோகெளன் ஒப்பந்தத்தின் விளைவாக கட்டாக், தெற்கு பேரர், சம்பல்பூர் பிரதேசங்களின் வரிவசூலிக்கும் உரிமையை விட்டு கொடுத்தார். இதனால் தனது இராஜ்ஜியத்தின் 1/3 பங்கையும் வருமானத்தையும் இழந்தார். இதனால் புதுப்புது வரியை செயல்படுத்தியும் ஏற்கனவே இருந்த அதிகப்படுத்த மக்கள் வரியை செலுத்த மறுத்தும் அரசுக்கு எதிராகவும் நடக்கவும் முற்பட்டனர். இதற்கிடையில் கி.பி.1811ல் பிண்டாரி கொள்ளையர்கள் நாக்பூரை தாக்கி கொள்ளையிட்டு அதன் புறநகர் பகுதிகளை தீயிலிட்டு கொளுத்தினார்கள். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் கோட்டைகள் கட்டி கொள்ளையர்களிடமிருந்து தங்களை தாங்களே பாதுகாக்க முற்பட்டனர். கி.பி.1816ல் இரண்டாம் ரகோஜி போன்ஸ்லே மறைந்தவுடன் அவர் மகனான பர்ஸோஜி ஆட்சிக்கு வந்தார்.
பர்ஸோஜி போன்ஸ்லே : (கி.பி.1778-1817)
ஆட்சி : (கி.பி.1816-1817)
இரண்டாம் ரகோஜி போன்ஸ்லே மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவரின் மகனான இவர் இரண்டாம் முதோஜி போன்ஸ்லேவால் (இவர் இரண்டாம் ரகோஜி போன்ஸலேவின் சகோதரரான வியான்கோஜி போனஸ்லேவின் மகன்) விஷமிட்டு கொல்லப்பட்டார்.
இரண்டாம் முதோஜி போன்ஸ்லே : (கி.பி.1796-1840)
ஆட்சி : (கி.பி.1817-1818)
இவர் "அப்பா சாகிப்" என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் இரண்டாம் ரகோஜி போன்ஸ்லேவின் மகனான பர்ஸோஜி போன்ஸ்லேவை விஷமிட்டு கொன்று ஆட்சியை பிடித்தார். ஆட்சியை பிடித்தவுடன் ஏற்கனவே இரண்டாம் ரகோஜி போன்ஸ்லேவின் காலத்திலிருந்து நட்பிலிருந்த ஆங்கிலேயர்களின் நட்பை உதறி மராத்திய பேஷ்வாவுடன் இணைந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். சித்தல்பாடியில் நடந்த மோதலில் இவரின் படைகளை ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். இந்த போரின் தோல்வியினால் ஏற்கனவே தெற்கு பேரர் பகுதியை இழந்தவர்கள் மீதியுள்ள அனைத்து பேரர் பகுதிகளையும் நர்மதா பள்ளத்தாக்கு பகுதிகளின் பகுதிகளையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர். அப்பாஜி போன்ஸ்லே அலகாபாத்தை கைப்பற்றி அங்கேயே தங்கிவிட்டார். ஆங்கிலேயர் மைனராக இருந்த மூன்றாம் ரகோஜி போன்ஸ்லேவை நாக்பூர் அரியணையில் அமர்த்தினர். பின்னர் ஆங்கில ரெஸிடென்ட் அங்கே வர அப்பாஜி போன்ஸ்லே மகாதியோ மலைகளுக்கு ஓடிப்போய் பின்னர் பஞ்சாப்புக்கு ஒடிப்போனார். பின்னர் ஜோத்பூர் அரசர் ராஜா மான்சிங் அடைக்கலம் கொடுக்க சம்மதிக்க ஜோத்பூரின் மன்மந்திர் மாளிகையில் அடைக்கலம் புகுந்தார். ஆங்கிலேயர்கள் மான்சிங்க்கு எதிராக படைகளை அனுப்பினாலும் அவர் அப்பாஜி சாகிப்புக்கு ஆதரவாக போரிட்டு தோற்றார். பின்னர் ஆங்கிலேயர் அப்பாஜி சாகிப்பை ஜோத்பூர் சிறையில் வைத்தனர். அங்கேயே கி.பி.1840ல் தனது 44வது வயதில் மரணமடைந்தார்.
மூன்றாம் ரகோஜி போன்ஸ்லே : (கி.பி.1808-1853)
ஆட்சி : (கி.பி.1818-1853)
அப்பாஜி சாகிப் ஆங்கிலேய ரெஸிடென்ட் டான ஜென்கின்ஸ்ஸால் ஜோத்பூரில் சிறைப்பட்ட பின்னர் அவர் இரண்டாம் ரகோஜி போன்ஸ்லேவின் மகளான பானுபாய்யின் மகனான பாஜிபாவை அடுத்த அரசராக தேர்ந்தெடுத்து ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் "மூன்றாம் ரகோஜி போன்ஸ்லே"என்ற பெயரில் ஆட்சி புரிந்தார். இவர் சிறுவயது பாலகனாக 10 வயதில் அரியணை ஏறியதால் ரெஸிடென்ட்டே எல்லா பொறுப்புகளையும் ஏற்று கவனித்தார். இவருக்கு கல்வி கற்க ஆர்வமில்லாமல் இருந்தாலும் பெர்சிய, மராத்தி மொழிகளை பேச கற்றுக்கொண்டார். ஆரம்ப காலத்தில் நிர்வாக விவகாரங்களில் ஆர்வமாக இருந்த இவர் பின்னால் அதை பற்றி கவலைப்படாதவராக மாறி போனார். இவர் இசை, நடனம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டு நிர்வாகத்தை கவனிக்க மறந்தார். தனது கடைசி காலத்தில் மிகவும் மொடாக்குடியராக மாறிப்போனார். இந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல நிர்வாக திறமை கொண்டவராகவே இருந்தார். பல பிரதேசங்களை இணைத்து மராத்திய மேலாண்மையின் கீழ் கொண்டு வந்தார். கி.பி.1838ல் காசி, கயா மற்றும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசித்து விட்டு திரும்பினார். இவருக்கு 8 மனைவிகள் இருந்தாலும் ஆண் வாரிசாக அரசு ஏற்க இல்லை. பிறந்த ஒரே ஒரு மகனும் குழந்தை பருவத்திலையே மரணமடைந்து விட்டது. ஆனாலும் இவர் அடுத்த வாரிசுக்கு கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இவருக்கு ரெஸிடென்ட் மான்ஷல் உடன் நல்ல நட்பு இல்லாததால் இவரது தத்தெடுப்புகளுக்கு அவர் சம்மதிக்கவில்லை. கி.பி.1853ல் டிசம்பரில் 25 நாட்கள் தொடர் காய்ச்சலினால் தனது 47வது வயதில் மறைந்தார். இவர் மறைந்தவுடன் இவரது உறவினர் நானா அகிரராவ் தனது மகன் யஷ்வந்த்ராவ்வை அடுத்த வாரிசாக முனைய ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளாமல் நாக்பூர் அரசை கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைத்துக் கொண்டனர்.
முதலாம் ரகோஜி போன்ஸ்லேவால் ஏற்படுத்தப்பட்டு மூன்றாம் ரகோஜி போன்ஸ்லே மறைவுக்கு பின்னர் ஆங்கிலேயர்களின் அரசுடன் இணைக்கப்பட்டது. ஏன் அவர்களால் தங்களது அரசை தக்கவைக்க முடியவில்லை? முதல் 4 அரசர்கள் படையெடுப்பு வீரர்களாகவும் போரை தலைமையேற்று நடத்திய செயல் வீரர்களாகவும் இருந்தனர். பின்னால் வந்தவர்கள் அரச பதவியின் சுகங்களை மட்டுமே அனுபவித்தனர். இராஜ்யத்தை காக்கும் கடமையிலிருந்து சற்று விலகியதும் ஆங்கிலேயர்கள் நவீன ஆயுதங்களால் வெற்றிகளை குவித்து உடன்படிக்கை கொண்டு அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ள வைத்து தங்களுக்கு கட்டுப்பட்ட அரசராகவே மாற்றி வைத்துக் கொண்டனர். கடைசியில் டல்ஹெளசியில் அவகாசியிலி கொள்கையின் படி வாரிசற்ற ராஜ்யமாக கிழக்கிந்திய கம்பெனி அரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் கி.பி.1857-58 சிப்பாய் புரட்சிக்கு பின்னர் ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டு கி.பி.1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய யூனியனில் இணைந்தது.





Comments
Post a Comment