84) மராத்திய அரசு - நெவால்கர் வம்ச ஆட்சி (ஜான்சி)

ஜான்சி நெவால்கர்கள் (கி.பி.1769-1858)‌‌‌‌ : 


மராத்திய பேஷ்வா முதலாம் மாதவ்ராவ்வின் கீழ் அவருடைய சுபேதாராக இருந்த ரகுநாத் ஹரி நெவால்கர் அவருடைய அனுமதியினால் ஜான்ஸியில் நெவால்கர் என்ற பரம்பரையை உருவாக்க பின்னர் ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை கொள்ள அதன்படி மெல்ல மெல்ல கங்காதர் ராவ்வுக்கு வாரிசில்லாமல் போகவே மெல்ல மெல்ல தங்களுடன் இணைத்து கொள்ள முயல கங்காதரின் இரண்டாவது மனைவியான ராணி லக்ஷ்மி பாய் வீறிட்டு எழுந்து போர் முரசு கொட்ட மற்ற இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு மடிந்ததுடன் நெவால்கர் பரம்பரை ஆட்சி ஜான்ஸியில் முடிந்தது. அடிப்படையில் பிராமணர்களான இவர்கள் மஹாலெட்சுமியை தங்களது இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தவர்கள்.

ரகுநாத் ராவ் (அ) ரகுநாத் ஹரி நெவால்கர் : 

ஆட்சி : (கி.பி.1769-1796)

இவர் இன்றைய மஹாராஷ்டிராவின் ரத்தினகிரி மாவட்டத்திலிருந்து வந்தவர். பின்னர் இவர் கந்தேஷ் பகுதிக்கு இடம்பெயர்ந்ததார். பேஷ்வா ஆட்சி ஏற்பட்டவுடன் அவருடைய படைகளிலும் பின்னர் ஹோல்கர்களின் படைகளிலும் பணியாற்றி சுபேதாராக உயர்ந்தார். ஜான்ஸியில் உள்ள மஹாலெக்ஷ்மி கோயில் மற்றும் ரகுநாத் கோயிலை இவர் கட்டினார். இவர் பந்தல்கண்ட் பகுதியில் மராத்தியர்களின் ஆளுமையை வலிமையை ஏற்படுத்தினார். பின்னர் இவருக்கு வயதாகவே தனது இளைய சகோதரனான சிவ் ஹரி ராவ்விடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

சிவ் ஹரி ராவ் :

ஆட்சி : (கி.பி.1796-1811)

இவர் ரகுநாத் ராவ் நெவால்கரின் தம்பி. அண்ணனுக்கு பின்னர் ஆட்சி ஏறினார். இவரது காலத்தில் தான் கி.பி.1803ல்  ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவரது மரணத்திற்கு பின்னர் இவரது பேரனின் மகனான முதலாம் கிருஷ்ணா ராவ்வின் மகனான ராமசந்திர ராவ் தனது 5 வயதில் பட்டத்திற்கு வந்தார்.

ராமசந்திர ராவ் : (கி.பி.1806-1835)

ஆட்சி : (கி.பி.1811-1835)

இவர் குழந்தையாக இருந்ததால் இவரது தாயாரும் முதலாம் கிருஷ்ணா ராவ்வின் மனைவியுமான ராணி சக்குபாய் இவரது ஆட்சிக்கு பாதுகாவலராக இருந்தார்.

மூன்றாம் ரகுநாத் ராவ் : 

ஆட்சி : (கி.பி.1835-1838)

இவருக்கு ஜானகி பாய் மற்றும் லட்சோபாய் என்ற இரு மனைவியர் உண்டு. இவர் முதலாம் கிருஷ்ணா ராவ் மற்றும் கங்காதர் ராவ்வின் சகோதரர். சகோதரர் ராமசந்திர ராவ்வின் மறைவுக்கு பின்னர் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

இரண்டாம் கிருஷ்ணா ராவ் :

ஆட்சி : (கி.பி.1838-1843)

இவரது ஆட்சிக்கு இவரது தாயார் சக்குபாய் பாதுகாவலராக இருந்தார். இவர் ராமசந்திர ராவ்-சக்குபாய் தம்பதிகளால் தத்து எடுக்கப்பட்ட மகன். இவர் வேறு யாருமல்ல அவர்களது மகள் கங்கா பாய்யின் மகனான பேரனையே தத்து எடுத்தனர்.

கங்காதர் ராவ் : (கி.பி.1797-1853)

ஆட்சி : (கி.பி.1843-1853)


இவருக்கு ரமா பாய் மற்றும் லக்ஷ்மி பாய் (மணிகர்ணிகா) என்ற இரு மனைவியர் உண்டு. இவரே புகழ்பெற்ற ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்யின் கணவர். இவர் கி.பி.1797ல் பிறந்தார். இவர் நெவால்கர் பரம்பரையை ஸ்தாபித்த ரகுநாத் ஹரி நெவால்கரின் இளைய தம்பியான சிவ் ஹரிராவ் பாவ்வின் மூன்றாவது மகன். தனது சகோதரர்கள் முதலாம் கிருஷ்ணா ராவ் மற்றும் மூன்றாம் ரகுநாத் ராவ் ஆகியோர்களின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறினார். இன்றைய ஜான்ஸி நகரை விரிவாக்கியதில் இவரின் பங்கு முக்கியமானது. ஜான்ஸியின் வருமானத்தையும் பெருக்கினார்.  இவர் முதலில் ரமாபாய் என்பவரை மணந்தார். அவர் இவர் அரசராவதற்கு முன்பே இறந்ததால் கி.பி.1842ல் 14 வயதான மணிகர்ணிகா தாம்பே (தம்பதிகள் இருவருக்கும் 31 வயது வித்தியாசம்) என்பவரை மணந்தார். தங்களது குல தெய்வமான மஹாலெக்ஷ்மியின் பெயர்களில் ஒன்றான லெக்ஷ்மி பாய் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. தம்பதிகள் இருவருக்கும் கி.பி.1851ல் ஒரு மகன் (தாமோதர் ராவ்) பிறந்த சந்தோஷம் 4 மாதம் கூட நீடிக்காமல் இறந்து போகவே தனது உறவின் வழி சகோதரரான வாசுதேவ் நெவால்கர் என்பவரின் மகனான ஆனந்த் ராவ் என்ற சிறுவனை தத்தெடுத்து அவருக்கு "தாமோதர் ராவ்" என்ற பெயரையே சூட்டினார். இந்த தத்தெடுத்தல் நிகழ்வு இவர் இறப்பதற்கு முன்பு நடந்தது. பிரிட்டிஷ் ரெஸிடென்ட் தத்தெடுத்ததை பற்றி கம்பெனிக்கு கடிதம் எழுத கம்பெனியினர் டல்ஹெளஸி பிரபுவின் "வாரிசில்லா கொள்கை" யின் படி ஜான்ஸியை கி.பி.1854 மார்ச் 10ல் தங்களது அரசுடன் இணைத்து கொண்டனர்.

ராணி லக்ஷ்மி பாய் : (கி.பி.1828-1858)

ஆட்சி : (கி.பி.1853-1858)


இவர் இன்றைய வாரணாசியில் மராத்திய கார்டே பிராமண குடும்பத்தில் கி.பி.1828 நவம்பர் 19ல் பிறந்தார். தந்தை மோரோபந்த் தாம்பே தாய் பாகீரதி பாய்  ஆகியோருக்கு மகளாக பிறந்த இவருக்கு இட்ட பெயர் மணிகர்ணிகா தாம்பே. மனு என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர்களது பெற்றோர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். இவரது அன்னை இவருக்கு நான்கு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். இவரது தந்தை பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் கீழ் கல்யாண்பிரந்த் யுத்தத்தில் தளபதியாக பணியாற்றினார். இவர் வீட்டிலேயே கல்வி பயின்றார். இளமையிலேயே துப்பாக்கி சுடுதல்,குதிரையேற்றம் ஆகிய கலைகளைக் இளமைக்கால நண்பர்களான நானா சாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோருடன் கற்றுத் தேர்ந்தார். காலை உணவுக்கு முன்னர் பளு தூக்குதல், மல்யுத்தம் மற்றும் குதிரை பந்தயம் ஆகிய பயிற்சிகளை ராணி செய்வது வழக்கம்.

கி.பி.1842ல் 14 வயதான மணிகர்ணிகா தாம்பே கங்காதர் ராவ் (தம்பதிகள் இருவருக்கும் 31 வயது வித்தியாசம்) என்பவரை மணந்தார். கணவரின் குல தெய்வமான மஹாலெக்ஷ்மியின் பெயர்களில் ஒன்றான லெக்ஷ்மி பாய் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. தம்பதிகள் இருவருக்கும் கி.பி.1851ல் ஒரு மகன் (தாமோதர் ராவ்) பிறந்தார். பிறந்த சந்தோஷம் 4 மாதம் கூட நீடிக்காமல் அந்த குழந்தை இறந்து போனது. பின்னர் கணவரது உறவின் வழி சகோதரரான வாசுதேவ் நெவால்கர் என்பவரின் மகனான ஆனந்த் ராவ் என்ற சிறுவனை தத்தெடுத்து அவருக்கு "தாமோதர் ராவ்" என்ற பெயரையே சூட்டினார். இந்த தத்தெடுத்தல் நிகழ்வு இவர் கணவர் கங்காதர் இறப்பதற்கு முன்பு நடந்தது. பிரிட்டிஷ் ரெஸிடென்ட் தத்தெடுத்தை பற்றி கம்பெனிக்கு கடிதம் எழுத கம்பெனியினர் டல்ஹெளஸி பிரபுவின் "அவகாசியிலி கொள்கை (வாரிசில்லா கொள்கை)" யின் படி ஜான்ஸியை கி.பி.1854 மார்ச் 10ல் தங்களது அரசுடன் இணைத்து கொண்டனர். ராணி லட்சுமி பாய்க்கு வருடம் 60000 ரூபாய் பென்ஷன் பணத்தை பெற்றுக்கொண்டு மாளிகையையும் கோட்டையையும் காலி செய்ய சொன்னார்கள். அங்கிருந்து வெளியேறி ஜான்ஸியிலுள்ள "ராணி மஹால்" என்ற மாளிகையில் தங்கினார். இந்த மாளிகை தற்போது மியூஸியமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது வளர்ப்பு மகனுக்காக ஜான்ஸி நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தினார்.


தன்னார்வ இராணுவத்தை உருவாக்கி பெண்களுக்கும் இராணுவ பயிற்சி கொடுத்தார். அவரது படையில் குடா பக்ஷ், லாலா பாவ்பக்ஷி, மோதி பாய், தோஸ்த் கான், குலாம் கவுஸ் கான், திவான் ரகுநாத் சிங் மற்றும் திவான் ஜவஹர் சிங் ஆகிய வீரர்களும் இணைந்தனர். 

இந்த நேரத்தில் கிபி 1857 மே 10ல் மீரட்டில் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் அடங்கிய துப்பாக்கி குண்டுகளை உபயோகப்படுத்த மறுத்த இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் பிரிட்டிஷ் ஆபிஷர்களை தாக்கி கொலை செய்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் புரட்சியை அடக்க கவனம் செலுத்தினார்கள். இதற்கிடையில் ஒர்ச்சா பகுதியினர் ஜான்ஸியை தாக்கி அங்குள்ள புதையலை கைப்பற்ற துடித்து போர் புரிந்த சமயத்தில் ஆங்கிலேயரை துணைக்கு அழைக்க அவர்கள் வர தாமதமாக இவரே போரிட்டு வென்று அவர்களை விரட்டியடித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் தனது இராணுவ பலத்தை பெருக்கவே ஆங்கிலேயர்களுக்கு ஜான்ஸி ராணியின் மீது பயம் கொள்ள கி.பி.1858 மார்ச்சில் ஜான்ஸியின் மீது போர் தொடுத்து ஒரு வாரத்திற்கு மேலான முற்றுகையிற்கு பிறகு கைப்பற்றினார்கள். ராணி ஆண் வேடம் இட்டு தன் மகனுடன் கல்பியில் போய் தாந்தியா தோபேவிடம் தஞ்சமடைந்தார். பின்னர் இவர்கள் தாந்தியா தோபே படைகளுடன் புரட்சி வீரர்களுடன் இணைந்து குவாலியர் சென்று குவாலியரின் மஹாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படைகளை தோற்கடித்து குவாலியரை கைப்பற்றினார்கள்.  இதனால் ஆங்கிலேயர்கள் கி.பி.1858 ஜூன் மாதத்தில் குவாலியரை தாக்க ஆண் வேடமிட்டு தொடர்ந்து சண்டையிட்டு போராடி ஜூன் 18ம் தேதி வீர மரணமடைந்தார். ஆண் உடையில் இருந்ததால் இவரை ஆங்கிலேயர்களுக்கு தெரியவில்லை. இதனால் பிராமணர் ஒருவர் படுகாயமடைந்த ராணியின் விருப்பப்படி அவரை போர்களத்திலிருந்து கொண்டு வந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றுவதற்குள் குவாலியர் ஊர் மக்களால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதன் பிறகு மூன்று நாட்களில் ஆங்கிலேயர்கள் குவாலியரை கைப்பற்றினார்கள்.

தாமோதர் ராவ் :

ஆட்சி : (கி.பி.1853-1858)

இவரின் தாயான ராணி லக்ஷ்மி பாய் இவருடைய பாதுகாவலராக இருந்து ஆட்சியை நடத்தினார். போரின் போது இவரை இடுப்பில் கட்டிக்கொண்டு வீரப்போர் புரிந்த ஜான்சி ராணியின் மறைவுக்கு பின்னர் பெரும்பாலனார் இவரும் போரில் இறந்து விட்டதாகவே கருதினார்கள். ஆனால் இவரை பாதுகாவலர்கள் காப்பாற்றவே காட்டுக்குள் சென்று வாழ ஆரம்பித்து பின்னர் இந்தூர் சென்று ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். இவருக்கு வருடாந்திர பென்ஷனாக 10000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தூரை தனது இருப்பிடமாக கொண்டு வாழ ஆரம்பித்து இவரின் முதல் மனைவி வெகு விரைவில் இறக்கவே இரண்டாவது மனைவியை ஷிவ்ரே குடும்பத்திலிருந்து திருமணம் செய்தார். பின்னர் கி.பி.1906 மே 28ல் மறைந்தார்.

ஜான்ஸி ராணி லெட்சுமி பாய்யின் மரணத்திற்கு பின்னர் ஆங்கிலேயர் ஜான்ஸி நகரம் மற்றும் கோட்டையை கி.பி.1861ல் குவாலியர் மஹாராஜாவான ஜியாஜிராவ் சிந்தியா வசம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஜான்ஸி குவாலியர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பின்னர் கி.பி.1886ல் ஆங்கிலேயர்கள் ஜான்ஸியை குவாலியரிலிருந்து பிரித்து தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். பின்னர் சுதந்திரத்திற்கு பின்னர் உத்திரபிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஜான்ஸி ராணியின் வாரிசான கங்காதர் ராவ் இந்தூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது மகனான லட்சுமணன் ராவ் வம்சாவளியினரை கி.பி.2015ல் ஜான்ஸி நகரம் கெளரவித்தது. சரித்திரத்தில் ஜான்ஸி என்றாலே அதன் வீரப்பெண்மணி ராணி லட்சுமி பாய் தான் நினைவுக்கு வருமளவு சரித்திரத்தில் தனது பெயரையும் ஊர் பெயரையும் புகழோடு விட்டு சென்றிருக்கிறார்.

உதவிய நூல்கள் :

மொகலாயர்கள் - முகில்

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை மு. ராமசுவாமி

இந்தியா உருவான கதை - 

விக்கிபீடியா தகவல்கள்



Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு