86) சீக்கிய குருக்களுக்கு பின்னர் சீக்கியர்கள்

சீக்கியர்கள் 10 குருவுக்கு பின்னர் (கி.பி. 1708 - 1849) :

குரு கோபிந்த் சிங்கை சந்திக்க வந்த இரு மகான்கள் வேடத்தில் வந்தவர்கள் (வஸீர்கான் மற்றும் ஜூபர்தஸ்த்கான் அனுப்பியவர்கள்) அவரை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த ஒருவரை தன் வாளால் குரு கோபிந்த் சிங் வெட்டிக் கொன்றார். சத்தம் கேட்டு வந்த பாதுகாவலர்களால் மற்றொரு பதான் வெட்டிக் கொல்லப்பட்டார். பின்னர் படுகாயமடைந்த குருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஷயமறிந்த முகலாய மன்னர் முதலாம் பகதூர் ஷா தனது ஐரோப்பிய மருத்துவர் "கோலே"வை (Coley) அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தார். சிகிச்சையின் போது உடற்பயிற்சி செய்ய அதனால் கட்டுகளிலிருந்து ரத்தப்போக்கு அதிகமாகி குரு கோபிந்த் சிங் மறைந்தார். அவரின் முடிவு அறிந்தவுடன் தன்னுடனே மானுடர்களில் குரு வம்ச முடிந்தது என்றும் பத்து குருக்களின் போதனைகள் மற்றும் பாடல்கள் அடங்கிய ஆதிகிரந்தம் இனி சீக்கியர்களை வழிநடத்தும் என்றும் தனக்குப் பிறகு பண்டா பகதூர் இங்கே சீக்கியர்களை காக்கும் கல்சாவை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் கூறினார் .அனைவரும் பண்டா பகதூரின் தலைமையில் ஒன்றுபட வேண்டும் என்று அறிவித்து விட்டு மரணமடைந்தார்.

பண்டா பகதூர் (கி.பி.1670 -1716)  :    

கல்சா பொறுப்பு (கி.பி.1706-1716) :


இவர் இயற்பெயர் லக்ஷ்மண் தேவ். லட்சுமன்பூர் விவசாயியான ராம்தேவ் மற்றும் லட்சுமிதேவி தம்பதியருக்கு மகனாக காஷ்மீரில் உள்ள ரஜோரி என்னுமிடத்தில் கிபி  1670 அக்டோபர் 27 இல் பிறந்தார். 15 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி தக்காணத்தில் உள்ள நந்தோத் (இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது) என்னும் இடத்தில் பைராகி என்னும் பெயரில் துறவியாக வாழ்ந்து வந்த இவருக்கு சுகில் கௌரி என்ற  மனைவியும் அஜய் சிங் என்ற மகனும் உண்டு. கி.பி.1707 நந்தோத் வந்த குரு கோபிந்த் சிங் அமைப்பினருடன் இவரது சீடர்களுக்கும் மோதல் நடந்தது. இதில் குரு கோபிந்த் சிங்கின் கல்சா அமைப்பினர் வெற்றி பெற்றனர். சீக்கிய குரு கோபிந்த் சிங் போதனைகளால் ஒரு லட்சம் பேர் சீக்கிய மதத்தில் இணைந்தனர். இதனால் நந்தோத் குருத்வாரா சீக்கியர்களின் முக்கிய கேந்திரமாக மாறியது. பின்னர் செப்டம்பர் மாதத்தில் குரு கோபிந்த் சிங் போதனைகளால் ஈர்க்கப்பட்ட பைராகி குரு கோபிந்து சிங்கிடம் சரணாகதி அடைந்து சீக்கிய மதத்தை தழுவினார். சீக்கிய மதத்தை தழுவிய பின்னர் குரு கோபிந்த் சிங் அவருக்கு பண்டா சிங் என்ற பெயர் சூட்டி தன் மரணத்திற்குப் பின்னால் பண்டா சிங்கின் பின்னால் அனைவரும் ஒன்று கூடுமாறு லிகிதம் அனுப்பினார். மொகலாயர்களை வெற்றி மேல் வெற்றி கொண்டவுடன் இவரை அனைவரும் பண்டா பகதூர் சிங் என்று அழைக்க அதுவே இவரின் அடையாளம் ஆயிற்று. குருவின் மரணத்திற்கு பிறகு அவருடைய 'பஞ்ச் பியாரே' தளபதிகளுடன் இணைந்து கல்சா அமைப்புகளை ஒன்றிணைத்து பஞ்சாப் நோக்கி விரைய அங்கிருந்த சீக்கியர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க மொகலாயர்களை அழிக்காவிட்டால் சிக்கியர்களை அழித்து விடுவார்கள் என்று கூறி சமணா (பாட்டியாலாவில் இருந்து தென்மேற்கில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) என்ற முகலாயர்களின் பஞ்சாப் மையத்தை தாக்கி 10000 மொகலாயர்களை கொன்று குவித்தார். பின்னர் குலாம் முஸ்தபா (இன்றைய பெயர் சரஸ்வதி நகர்- அரியானா) இடங்களில் முகலாயர்களின் ஆசாத் நகர் மாவட்டத்தில் உள்ள சாதுரா என்ற இடத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்திய மொகலாயர்களை கொன்று குவித்தார். இப்படி பஞ்சாப் முழுவதையும் கைப்பற்றி கல்சா ஆட்சி ஏற்படுத்தினார். ஜமீன்தாரி முறையை ஒழித்து நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுத்தார்.

முகலாயர்களின் சகோதர வாரிசுமை பிரச்சனையினால் முதலில் இவரின் வளர்ச்சியை கவனிக்காத முதலாம் பகதூர் ஷா பின்னர் சுதாரித்து சிர்ஹிந்தின் ஆளுநரான வஸீர்கானை அனுப்ப கி‌.பி 1710 மே 12 இல் இன்றைய மொஹாலிக்கு அருகில் உள்ள "சாப்பர் சிரி" என்ற போர்க்களத்தில் வஸீர்கானை கொன்று குரு கோபிந்த் சிங் ஆசையை நிறைவேற்றி வைத்தார். சிர்ஹிந்தையும் சீக்கியர்கள் கைப்பற்றினார்கள். பண்டாபகதூர் முக்லிகார்க் (லோகார்க் என்று பின்னால் பெயர் மாறியது. (இது இன்றைய ஹரியானா மாநிலத்தில் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த முக்லிகார்க் கோட்டை ஷாஜஹானால் கட்டப்பட்டது) கோட்டையைக் கைப்பற்றி அதை சீக்கியர்களின் தலைநகராக ஆண்டுவந்தார். அங்கிருந்து குருநானக் மற்றும் குரு கோபிந்த் பெயர்களில் நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் அங்கிருந்து பஞ்சாப் முழுவதும் கைப்பற்றிய பின்னர் அருகில் உள்ள இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சஹரன்பூர் (யமுனா நகர் அருகில் உள்ளது) ஜாலலாபாத், முஸாஃபர் நகர் மற்றும் அருகில் உள்ள இடங்களை எல்லாம் கைப்பற்றினார்.

சாதரா எனுமிடத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் ஆள்பவர்கள் கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவிக்க கி.பி 1710ல் சாதராவை ஆண்ட சைய்யித் மற்றும் ஷேக்குகளின் தலைவரான உஸ்மான் கானை தோற்கடித்து சாதராவை மீட்டார். இந்நிலையில் முதலாம் பகதூர் ஷா தன் மூத்த மகன் ஜஹாங்கீர் ஷா தலைமையில் படையை அனுப்பினார். நிறைய இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தாலும் சீக்கியர்களை வீழ்த்த முடியாமல் போகவே பகதூர் ஷாவே நேரடியாக முக்ஸிப்பூர் கோட்டையை முற்றுகையிட குறைவான சீக்கியர்கள் வீரத்துடன் போரிட்டு மொகலாய படைகளைத் தடுத்து பண்டா பகதூரை தப்பிக்க விட்டனர். தப்பித்த பண்டா பகதூர் நாடு முழுவதும் கல்சாக்களை திரட்டி மீண்டும் மலை அரசர்களை வீழ்த்த கிளம்ப அவர்கள் இவருடன் ஒப்பந்தம் செய்தனர். பின்னர் மொகலாயர்கள் வசமிருந்த குர்தாஸ்பூர் ராய்ப்பூர் பர்ஹாம்பூர் ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்.‌ இதற்கிடையில் முதலாம் பகதூர் ஷா மறைந்தார். அடுத்த பதினொரு மாதங்களில் அவரது மகன் ஜகந்தர் ஷாவை அவரது மருமகன் ப்ரூஃக்ஷியார்  கொன்று ஆட்சியை பிடித்தார். திடீரென கி.பி 1712 மொகலாய தளபதி ஜக்காரியா கான் பகதூர் போரிட்டு வந்து சீக்கியர்களை ஜம்மு போரில் வென்றார். இதில் பிடிபட்ட சீக்கிய தளபதியான பாஹ் சிங் கொல்லப்பட்டார்.

பின்னர் கி.பி 1715 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை நடந்த குர்தாஸ்பூர் போரில் சீக்கியர்கள் பண்டா பகதூர், பாஜ் சிங், பினோத் சிங் மற்றும் ஹக்கீம் நந்த்  தலைமையில் போரிட முகலாய தரப்பில் அப்துல் சமது கான், ஜக்காரியா கான் பகதூர் மற்றும் குமாரூதீன் தலைமையில் போரிட்டனர். முடிவில் சீக்கியர்கள் போரில் தோற்றுப் பின்வாங்கவும் விரட்டி சென்று பிடித்தனர். 200 சீக்கியர்களை அந்த இடத்திலேயே கொன்று தலைகளை மட்டும் எடுத்துக் கொண்டனர். பண்டா பகதூர் சிங்கை ஒரு இரும்புக் கூண்டில் சிறைபிடித்து டெல்லிக்கு மொகலாய மன்னர் ப்ரூஃக்ஷியார் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழியில் தென்பட்ட அனைத்து சீக்கியர்களின் தலைகளையும் வெட்டி எடுத்துச் சென்றனர். பண்டா பகதூரின் கையில் வாளைக் கொடுத்து அவர் மகனை வெட்ட சொன்னார்கள். அவர்  மறுக்கவே அவர் முன்னே அவர் மகனை வாளால் பல துண்டுகளாக பொதுமக்கள் முன்னிலையில் கொன்று மகனின் ஈரலை பண்டா பகதூரின் வாயில் திணித்தனர். பண்டாபகதூரின் கண்களைக் குருடாக்கினர். உடலின் மேல் தோல் உரிக்கப்பட்டு உப்பு மிளகாய்த் தூளும் தடவி கொடுமைப்படுத்தி பின்னர் முடிவில் கி.பி 1716 ஜீன் 9ல் தலையை வெட்டிக் கொன்றனர். அதை டெல்லியின் வாயிலில் வைத்தனர். இந்த நிகழ்விற்குப் பிறகு சீக்கியர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து மறைந்து வாழ்ந்தனர். இதுவே அவர்களை பின்னாளில் வலிமையாக அடுத்த 20 வருடங்களில் எழுந்து நிற்கவும் உறுதியைக் கொடுத்தது.

கல்சா ராணுவம்:

கி.பி.1699ல் கல்சா ராணுவம் ஆரம்பித்தாலும் அதன் செயல்பாடுகள் குருகோபிந்த் சிங்கின் திட்டப்படியே நடந்தது. கிபி 1705 இல் பினோத் சிங் என்பவரை முதல் கல்சா ராணுவத்தின் தலைவராக முதல்  ஜடிதாராக குரு கோபிந்த் சிங் நியமித்தார்.

முதல் ஜடிதார் :

பாபா பினோத் சிங் (கி.பி.1705-1716) :

குரு கோபிந்த் சிங்கின் மறைவிற்குப் பின்னர் பண்டாபகதூருடன்  இணைந்து பஞ்சாப்புக்கு வந்து பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. கி.பி 1710 மே மாதத்தில் மொஹாலிககு அருகில் உள்ள "சாப்பர் சிரி" போரில் சீக்கியர்களின் ஒரு பிரிவுக்கு தலைமை ஏற்று வெற்றி பெற வைத்தார். அந்த போரில் தான் குரு கோபிந்த் சிங்கின் பரம வைரியான வஸீர்கானை கொன்று குருவின் சபதத்தை இவரும் பண்டா பகதூரும் நிறைவேற்றினார்கள். அதன் பிறகு அதே வருடத்தில் மட்டுமே நான்கு இடங்களில் போர்களில் கலந்துகொண்டு சீக்கியர்களுக்கு வெற்றி தேடி தந்தார். பண்டாபகதூரின் சில செயல்கள் இவருக்கு பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் மாதா சுந்தரி (குரு கோபிந்த் சிங்கின் மனைவி)யின் உத்தரவு காரணமாக மற்ற சீக்கியர்கள் உடன் இணைந்து கொண்டு "தட் கல்சா" என்ற அமைப்பை ஆரம்பிக்க பண்டா பகதூர் " பண்டாய் கல்சா" என்ற அமைப்பை ஆரம்பித்தார். இவர்களது பிரிவே  குர்தாஸ்பூர் போரில் சீக்கியர்கள் தோல்வியைத் தழுவி பண்டா பகதூர் பிடிபட்டு மரணத்தைத் தழுவ காரணமாயிற்று. பினோத் சிங் பண்டா பகதூரை விட்டு வந்தவுடன் கோயிந்த்வாலுக்கு வந்தார். ஆனால் முகமது ஹக்கீம் (காஃபி கான்) இவரும் குர்தாஸ்பூர் போர்க்களத்தில் மடிந்து இருக்கலாம் என்று கூறுகிறார்.

இரண்டாவது ஜடிதார் :

பாபா தர்பரா சிங் (கி.பி.1716-1734) :

இவர் கி.பி 1644ல் தால் என்னும் கிராமத்தில் நானு சிங் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் குரு கோபிந்த் சிங்கிற்கு உதவியாளராக 16 ஆண்டுகள் இருந்தார். இவர் தனது 90 ஆவது வயதில் இயற்கை மரணம் எய்தினார்

மூன்றாவது ஜடிதார் :

பாய் மணி சிங் (கி.பி.1734-1737) :

மணி ராம் என்ற இயற்பெயருடைய இவர் மாய் தாஸ் என்பவரின் 12 மகன்களில் ஒருவர். குரு ஹர்கோவிந்த் சிங்கின் படைகளில் இவரது தாத்தா ஒரு புகழ்பெற்ற வீரராக இருந்தார். இவரது சகோதரர் தயாலா என்பவர் குரு தேஜ்பகதூருடன் இஸ்லாமுக்கு மாற மறுத்ததால் ஓளரங்கசீப்பால் கொல்லப்பட்டார். கி.பி 1796ல் குரு கோபிந்த் சிங்கால் ஹர்மந்திர் சாஹிப் (பொற்கோயில்) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவருக்கு சீத்தோ பாய் மற்றும் கீமீ பாய் என்ற இரு மனைவிகளும் 10 மகன்களும் உண்டு.

நான்காவது ஜடிதார் (முதல் நவாப்) :

நவாப் கபூர் சிங் :(கி.பி.1737-1753) :

இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஷேக்குபுரா மாவட்டத்தில் கலோரி எனும் ஊரில் கி.பி. 1697ல் பிறந்தார். இந்த நகரம் மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம். இவர் தலைமை ஏற்ற பின்னர் தான் மொகலாயர்களால் வீழ்த்தப்பட்ட சீக்கியர்கள் தலைநிமிர ஆரம்பித்தனர். இவர் அமிர்தசரஸ் அருகில் உள்ள "பைய்சுல்லாபூர்" என்ற கிராமத்தை ஆக்கிரமித்து அதற்கு "சிங்புரா" என்று பெயரிட்டு தனது தலைநகரமாக ஆக்கினார். இவர் தனது தந்தையான தலீப் சிங் மட்டும் சகோதரர் டான் சிங்குடன் கி.பி 1721 பைராகி திருவிழாவின் போது பாய் மணி சிங் தலைமையில் மக்கள் திரண்டதை கண்டு இவரும் கல்சா அமைப்பில் இணைந்தார். கி.பி. 1726 இல் லாகூரில் மொகலாய கவர்னராக இருந்த சர்க்காரியா கான் பகதூர்  சீக்கியர்களுக்கு எதிராக நடக்க ஆரம்பித்தார். சீக்கியர்களின் தலையை வெட்டி தருபவர்களுக்கு ரூபாய் 50/- என்று பரிசு அறிவிக்க சீக்கியர்கள் காட்டிற்குள் மறைந்து வாழ ஆரம்பித்தனர். கபூர் சிங் தலைமையிலும் அவ்வாறு ஒரு சிறு குழு மறைந்து வாழ்ந்தது. உணவுக்காக மட்டும் போரிட தேவைகளுக்காக அரசாங்க பணத்தை கொரில்லா முறையில் கொள்ளையிட்டு மொகலாய அரசுக்கு தொல்லையாக விளங்கினர். இதனால் சர்க்காரியா அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். கி.பி.1733ல் சர்க்காரியா கான் சீக்கியர்களின் தலைவர்களுக்கு நவாப் பட்டத்தையும் ஜாகீர்களும் 3 ரெவின்யூ‌ மாவட்டங்களான தீபால்பூர், கங்காவால் மற்றும் ஜாபால் ஆகியவற்றை கொடுத்தார். சீக்கியர்களின் ஒட்டுமொத்த கல்சா அமைப்பிடம் அனுமதி பெற்ற பிறகு கபூர் சிங் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். முதல் நவாப் பட்டத்தையும் ஏற்றுக்கொண்டார். 

கி.பி.1735 அறுவடைக்கு முன்னால் சக்காரியா கான் படைகளை அனுப்பி ஜாகீர்களை திரும்பப் பெற்றுக்கொண்டார். சீக்கியர்களை அமிர்தசரஸ் நகரை விட்டு அவரின் தளபதியான தீவான் லக்பத் ராய் இந்திய மத்திய பிரதேசத்திற்கு (மாள்வா) விரட்டியடித்தார். அங்கு மாள்வாவின் "புல்கியான் மிஸ்ல்" சேர்ந்த சர்தார் அலா சிங்கால் வரவேற்கப்பட்டார்கள். பின்னர் இருவரும் இணைந்து சுனாம் பகுதிகளைக் கைப்பற்றி அலா சிங் வசம் ஒப்படைத்தார். பின்னர் மொகலாய கவர்னரை தோற்கடித்து சிர்ஹிந்த்தை கைப்பற்றினார்கள். பின்னர் தீபாவளியை அமிர்தசரஸில் கொண்டாட முற்பட்டு சீக்கியர்கள் மத்திய பஞ்சாப் பகுதிகளுக்கு வர திவான் லக்பத் ராய் அவரை எதிர்த்து படைகளுடன் வர அமிர்தசரஸ் அருகில் இரு படைகளும் மோத இதில் மொகலாயப் படை தோல்வியைத் தழுவி லாகூருக்கு  ஓடியது.

கி.பி 1739 டெல்லியில் கொள்ளையடித்து பாரசீகம் திரும்பும் வழியில் அக்ஹ்னூர்  (ஜம்மு மாவட்டம்) என்னுமிடத்தில் சீக்கியர்கள் நாதிர்ஷா கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பகுதியை அவரிடமிருந்து கொள்ளையடித்தனர். அவரால் கைப்பற்றப்பட்ட பெண்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களுடன் சேர்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாதிர்ஷா போகும் வழியில் லாகூரில் சக்காரியா கானிடம் சீக்கியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி சென்றார். கி.பி. 1753 தனது வயோதிகத்தால் ஓய்வு வேண்டி தனக்கு பிறகு "ஜஸ்ஸா சிங் அஹ்லுவாலியா"வை கல்சா அமைப்பின் தலைமை தளபதியாக அறிவித்தார். கபூர் சிங் கி.பி.1753 அக்டோபர் 9ல் மறைந்தார்.

ஜந்தாவது ஜடிதார் (கி.பி.1753-1783) :

ஜஸ்ஸா சிங் அஹ்லுவாலியா :

இவர் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் அருகில் அஹ்லு என்னும் ஊரில் சர்தார் பாதர் சிங் என்பவருக்கு மகனாக கிபி 17 18 மே 3ல் பிறந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும் மூன்று குழந்தைகளும் உண்டு.

இவரது முதல் தாக்குதலே நாதிர்ஷாவுடன் தான். டெல்லியை கொள்ளையடித்து திரும்பிய நாதிர்ஷாவிடம் இருந்து ஒரு பகுதியை கொள்ளையடித்த நிகழ்வில் இவரது பங்கும் உண்டு. அமிர்தசரஸ்ஸை மொகலாயர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்ததில்  இவருக்கு நிரம்ப பங்கு உண்டு. மொகலாய அரசில் பைஜீதாரராக சக்காரியா கானால் நியமிக்கப்பட்ட ஜஸ்பத் ராய்யை கி.பி 1746 தற்கொலைத் தாக்குதல் இவர் தலைமையில் நடத்திக் கொன்றார்கள். கி.பி 1761 இல் ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலியின் வசமிருந்த லாகூரை கைப்பற்றி சீக்கியர்களின் ஆதிக்கத்திற்கு கொண்டுவந்தார். கி.பி 1762ல் ஹர்னால்கார்க் (சிர்ஹிந்த்க்கு 30 மைல்கள் தொலைவில் உள்ளது) என்னுமிடத்தில் அஹ்மத் ஷா அப்தாலியை தோற்கடித்து விரட்டினார். கி.பி 1764 அஹ்மத் ஷா அப்தாலியின் படைகளை அவர் மகன் தைமூர் ஷா அப்தாலி வழி நடத்திய சிர்ஹாந்த் போரில் ஆப்கானியர்களை விரட்டி சிர்ஹிந்த்தை கைப்பற்றினார். கபூர்தாலா என்ற மாநிலத்தை கி.பி. 1772ல் உருவாக்கியவர் இவரே. அது 910 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்தது. அதில் இரண்டு பெரிய நகரங்களும் 167 கிராமங்கள் அடங்கியிருந்தது.

சீக்கியர்கள் கி.பி.1764ல் பாஹேல்சிங் தலைமையில் டெல்லி மீதான தாக்குதல் தோல்வியில் முடிந்தது. பின்னர் பாஹேல் சிங்,  ஜஸ்ஸா சிங் அஹ்லுவாலியா மற்றும் ஜஸ்ஸா சிங் ராம்கார்ஹியா இணைந்த படை கி.பி. 1783ல் மொகலாய படைகளை தோற்கடித்து டெல்லி செங்கோட்டையை கைப்பற்றியது.

ஆறாவது ஜடிதார் (கி.பி.1783-1800) :

அகாலி நைய்னா சிங் :

இவர் கி.பி 1736 பர்னாலா மாவட்டத்திலுள்ள கூடி குர்ட் என்னும் ஊரில் பிறந்தார். இவர் புத்தா தல் அமைப்பில் தனது இருபதாவது வயதில் இணைந்தார். இவர் பாபா தீப்சிங்கிடம் குர்பானி மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுத் தேர்ந்தார். அடுத்த ஏழாவது ஜடிதாரான அகாலி புலா சிங்கின் பாதுகாவலராக இருந்தார்.இவர்தான் நிஹாங் அமைப்பினர் அணியும் உயரமான பிரமிடு வடிவ டர்பனை (தலைப்பாகை) அறிமுகப்படுத்தினார்.

ஏழாவது ஜடிதார் (கி.பி.1800-1823) :

அகாலி புலா சிங் :

இவர் கி.பி 1761ஜனவரி 1ல் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் சங்ருர் மாவட்டத்திலுள்ள ஸீஹான் என்னும் ஊரில் இஷ்ஹர் சிங் என்பவரின் மகனாகப் பிறந்தார். இவரின் இளமைப் பருவத்திலேயே இவரின் தந்தை மறைந்து விட்டதால் இவரது தாயாரின் விருப்பப்படி இவர் முந்தைய 6வது ஜடிதாரான அகாலி பாபா நைய்னா சிங்கின் பாதுகாப்பில் ஷாகிதீன் மிஸ்ல் அமைப்பில் இணைந்தார். இவர் இளம் வயதிலேயே நிட்செம் எனப்படும் குருக்களின் எழுத்துக்களை தினமும் மனப்பாடம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கிபி 1800ல் அகாலி நைய்னா சிங்கின் மறைவிற்குப் பின்னர் 7வது ஜடிதாராக அறிவிக்கப்பட்டார். கி.பி 1801 ல் அமிர்தசரஸ்ஸை ஆண்ட குடும்பத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் லாகூரை ஆண்ட ரஞ்சித் சிங் இவரின் உதவியினால் அமிர்தசரஸ்ஸை கைப்பற்றினார் இவருக்கு பிரிட்டிஷாருடன் ரஞ்சித்சிங் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் விருப்பமில்லை.

இவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் மீது அவர் பேரனின் திருமணத்தில் அழகிகளின் நடனத்தை நடத்தியதால் கல்சா பந்த் அறிவித்தார். ரஞ்சித்சிங் அமிர்தசரஸ் வந்து தினமும் குரு கிரந்த சாகிப்பை கேட்கும் போது அவரிடம் யாரும் பேசுவதில்லை. மகாராஜா ரஞ்சித் சிங் அகாலி புலா சிங் அவர்களிடம் தன்னை மன்னிக்க வேண்டினார். அவ்விதமே அவர் தவறை உணர்ந்ததால் மன்னிப்பு வழங்கப்பட்டது. கி.பி 1823 இன்றைய பாகிஸ்தானிலுள்ள அட்டாக் அருகிலுள்ள பிர் சபாக் அருகில் கொல்லப்பட்டார். அங்கேயே இவரது சமாதி அமைக்கப்பட்டது.

எட்டாவது ஜடிதார் (கி.பி.1823-1845) :

பாபா ஹனுமான் சிங் :

கிபி 1755 நவம்பர் மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெஃராஸ்பூரில் கர்ஜா சிங் - ஹர்னாம் கவுர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர்தான் பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முதலில் போரிட்ட சீக்கியர். கிபி 1845 இல் பிரிட்டிஷ் மற்றும் பாட்டியாலா ஆட்சியாளர்களின் கூட்டணி படைகளை எதிர்த்துப் போரிட்டு தோல்வியை தழுவினார். தோல்வியை தழுவியதும் அனைத்து நிஹாங் பிரிவினரையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார். ஆனால் மாள்வா மட்டும் பாட்டியாலா ஆட்சியாளர்கள் பிரிட்டிஷாருடன் ஏற்கனவே கூட்டணி வைத்திருந்தனர். நிஹாங்களை கண்டதும் சுட்டுத்தள்ள பிரிட்டிஷார் உத்தரவிட பாட்டியாலாவுக்கு வந்த ஹனுமான் சிங் மற்றும் நிஹாங்களின் மேல் பாட்டியாலா அரசர் ராஜா கரம் சிங் தாக்குதலை நடத்த நிறைய போர் வீரர்கள் கொல்லப்பட்ட மீதியுள்ளவர்கள் காட்டில் ஒளிந்தனர். பாபா  ஹனுமான் சிங் மோசமாக காயம்பட்டு இன்றைய மொஹாலிக்கு அருகிலுள்ள "சோகானா" என்னும் இடத்தில் மரணமடைந்தார்.

ஒன்பதாவது ஜடிதார் (கி.பி.1846-1865) :

பாபா பிரஹ்லாத் சிங் :

பாபா ஹனுமான் சிங்கிற்கு பிறகு இவர் ஒன்பதாவது ஜடிதாராக பதவிக்கு வந்தார். பாட்டியாலா மட்டும் பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் நிஹாங்குகள் மற்றும் சிங்குகள் பஞ்சாபிலிருந்து தக்காணத்திற்கு நகர்ந்தனர். அந்த நேரத்தில் அலா சிங் என்ற துறவி இவரது படைகளுடன் போரிட்டார். முடிவில் அலா சிங் கொல்லப்பட்டார். கிபி 1865 வரை நந்தேத் ஹசூர் சாகிப்பில் வாழ்ந்து வந்த இவர் கிபி 1865 இல் அங்கேயே மறைந்தார்.

பத்தாவது ஜடிதார் (கி.பி.1865-1926)‌‌ :  

அரூர் சிங் நுவ்ஸேரா :

இவர் அகாலி தளத்தில் இருந்து வந்தவர்.

பதினொன்றாவது ஜடிதார் :

தேஜா சிங் புச்சார் (கி.பி.1926-??? )‌‌ : 

சீக்கிய மாவீரர்களின் வரிசை :

பாபா தீப் சிங் : (கி.பி.1682-1757)

கிபி 1682 ஜனவரி 26 ல் பஹூவிந்த் (அமிர்தசரஸ் மாவட்டம்) என்ற கிராமத்தில் பிறந்தவர். ஷாஹிதான் மிஸ்ல் முதல் தலைவராக நவாப் கபூர் சிங்கால் நியமிக்கப்பட்டார். டாம்டமி தக்ஷல் அமைப்பின் முதல் தலைவரும் இவரே. கிபி 1757 இல் ஆப்கானிய அஹ்மத் அலி அப்தாலியுடன் நடைபெற்ற அமிர்தசரஸ் போரில் வெற்றிபெற்று அமிர்தசரஸ்ஸை ஆப்கானியர்கள் பிடியிலிருந்து விடுவித்து போர்க்களத்தில் காயம்பட்டு கி.பி 1757 நவம்பர் 13 ல் தனது 75வது வயதில் வெற்றியுடன் பொற்கோயிலில் அதை மீட்ட திருப்தியுடன் உயிர் துறந்தார்.

பாபா புத்தா (கி.பி.1506-1631) :

இவர் ஆரம்பகால சீக்கியர்களுள் ஒருவர். குருநானக் முதல் குரு ஹர்கோபிந்த் வரை குருவின் அடிகளை பின்பற்றிய சீடர். ஆறாவது குருவான குரு அர்ஜுன் தேவ்க்கு  மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலையை பயிற்றுவித்த ஆசான் இவர் தான். கி.பி.1506 அக்டோபர் 6 இல் பிறந்த இவர் 125 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி. 1631 செப்டம்பர் 8 இல் மறைந்தார்.

ராணி சதா கவுர் :

இவர் இவர் கிபி 1762ல் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரூகி கலன் என்னும் ஊரில் சர்தார் தாஸ்வந்த் சிங் தலிவால் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் தனது ஏழாவது வயதில் கான்ஹையா மிஸ்ல் பிரிவின் தலைவரான ஜெய்சிங் கான்ஹையா என்பவரின் மகனான குருபக்ஃஷ் சிங் என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிறந்த ஒரே மகளான மெஹ்தாப் கவுர் பின்னாளில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கை திருமணம் செய்துக்கொண்டார். இவரது கணவரான குருபக்ஃஷ் சிங் கி.பி.1785ல் பாட்டாலா போரில் மரணமடைந்தார். பின்னர் போரில் தோற்றதால் கி.பி. 1786ல் சுகர்சக்கியா மிஸ்ல் தலைவரின் மகனாகிய ரஞ்சித் சிங்கிற்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் கி.பி.1789ல் மாமனார் ஜெய்சிங் மறைவுக்குப் பின்னர் கான்ஹையா மிஸ்ல்ன் தலைமைப்பொறுப்பை ஏற்றார். கி.பி. 1792ல் ரஞ்சித் சிங்கின் தந்தையார் மறைந்த போது அவரின் அத்தையான இவரே அவருக்கு பொறுப்பாளராக இருந்தார். இரண்டு இயக்கங்களும் இவரின் முன்னெடுப்பில் வந்ததால் ரஞ்சித் சிங்கை மேலும் பெரிய தலைவராக முன்னெடுக்க முயற்சித்தார்.

அந்த நேரத்தில் லாகூரை ஆண்ட பாங்கி மிஸ்ல் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியால் மக்கள் ரஞ்சித் சிங்கை போர் தொடுத்து வரச்சொல்ல கிபி 1799 ஜூலை 7ல் 25000 படைவீரர்களுடன் சதா கவுர் மற்றும் ரஞ்சித்சிங் லாகூர் மீது படையெடுத்தனர். லாகூர் மக்கள் கோட்டைக் கதவுகளைத் திறந்து இவர்களை வரவேற்றனர். ரஞ்சித்சிங் லாகூரி கேட் வழியாகவும் சதா கவுர் டெல்லி கேட் வழியாகவும் லாகூருக்குள் நுழைந்தனர். ரஞ்சித்சிங்கை கி.பி.1801ல் லாகூரில் மன்னர் ஆக்கினார். இவர் ரஞ்சித் சிங்குடன் சேர்ந்து அமிர்தசரஸ், சினியோட், காவலூர், அட்டாக் மற்றும் ஹஸாரா போர்களில் பங்கு கொண்டார். இவரது விருப்பத்தை மீறி ரஞ்சித் சிங் இன்னொரு திருமணம் செய்து கொண்டதால் ரஞ்சித்சிங்குடன் உறவுகளை முடித்துக் கொள்ள முற்பட்டாலும் அரசியல் ஆதாயங்களுக்காக அவ்வாறு செய்யவில்லை. பின்னர் இவரது மகளும் ரஞ்சித் சிங்கின் முதல் மனைவியுமான மெஹ்தாப் கவுர் கி‌.பி.1813ல் மறைந்த பிறகு ரஞ்சித் சிங்கின் இன்னொரு மனைவியின் மகனான காரக் சிங்கிற்கு நிறைய சலுகைகளை அளித்து அவரையே வாரிசாக அறிவித்ததால் இவர் ரஞ்சித் சிங்கின் உடனான உறவுகளை முறித்துக் கொண்டார். பின்னர் தனது ராஜ்யத்தை ஆளத் தொடங்கினார். இவரிடமிருந்து நிறைய பகுதிகளை ரஞ்சித் சிங் கைப்பற்றினாலும் ரஞ்சித் சிங்கையும் மீறி கி.பி. 1820 தனது ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகளை மீட்டெடுத்தார். கி.பி. 1832ல் லாகூரில் இவர் மறைந்தார்.

சுஹா சிங் & மெஹ்தாப் சிங் :

சுஹா சிங் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் அருகில் உள்ள காம்போகி என்னும் இடத்தில் பிறந்தார். கி.பி 1720-1740களில் லாகூரின் மொகலாய கவர்னரான சக்காரியா கான் பகதூர் வசம் அமிர்தசரஸ் இருந்தது. கி.பி 1740 இல் லாகூரில் கவர்னர் மாஸ்ஸா ரங்கோர் ( முஸாலுல் கான்) என்பவர் பொறுப்பில் அமிர்தசரஸ் ஹர்மந்திர் சாகிப்பை (பொற்கோயில்) கொடுத்தார். மாஸ்ஸா ரங்கோர் சீக்கியர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. குளத்தினுள் இருந்த புனித நீரையும் கூட தொட அனுமதிக்கவில்லை. பக்கத்தில் உள்ள இந்து கடைகளில் எல்லாம் மாமூல் வாங்கினான். பொற்கோயிலுக்குள் நடன பெண்களுடன் மது அருந்தி ஆடிப்பாடி புகை பிடித்து கோவிலின் புனிதத்தை கேவலப்படுத்தினான். இது தெரிந்து பிகானீயர் கல்சா அமைப்பின் சார்பில் சுஹா சிங் மட்டும் மெஹ்தாப் சிங் இருவரும் நிலப்பிரபுக்கள் மாறி வேடமிட்டு நிலவரியை செலுத்துவது மாதிரி அமிர்தசரஸ் சென்றனர். குதிரையை அங்கே கட்டிவிட்டு பொற்கோயிலுக்குள் சென்றனர். அங்கே மாஸ்ஸா குடியும் குடித்தனமுமாக இருந்தான். கையில் வைத்திருந்த பையை கீழே வீச அதை மாஸ்ஸா பிரித்துப் பார்த்த நேரத்தில் மெஹ்தாப் சிங் கையில் உள்ள வாளால் அவன் தலையை வெட்டினார். சுஹா சிங் மாஸ்ஸாவின் பாதுகாவலர்களை வெட்டி போட்டு இருவரும் மாஸ்ஸாவின் தலையுடன் அடுத்த நாள்  பிகானீயர் கல்சாவில் அவன் தலையை ஒப்படைத்தனர். சீக்கியர்களின் புனிதத்தைக் அடுத்தவனுக்கு கல்சா கொடுத்த தண்டனையை இருவரும் இணைந்து நிறைவேற்றினர்.

போட்டா சிங் & கர்ஜா சிங் :

கி.பி.1720-1740களில் மொகலாயர்களால் சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டதால் காட்டிலும் மலைகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அந்த நேரத்தில் போட்டா சிங் தரன் தரன் நகருக்கு அருகிலுள்ள நூர்தீன் டி சாரா என்னுமிடத்தில் உள்ள சுங்கசாவடியை கைப்பற்றி வியாபாரிகள், யாத்திரிகர், தொழில் முனைவோர் ஆகியோரிடம் கட்டாய கல்சா ராயல் வரியை வசூலித்தார். இந்த நேரத்தில் பாய் மோட்டா சிங் (பாய் கர்ஜா சிங்) இவருடன் சேர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சீக்கியர்கள் வெளியே தலைதெரியாமல் மறைவாக இருந்த நேரத்தில் இவர்கள் வரி வசூலிப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வரிவசூல் மொகலாயர்களுக்கு தெரிந்தது. அவர்கள் படைகளை அனுப்ப அந்த படைகளை நிறுத்தி வரியை கேட்டனர். மொகலாய தளபதி போட்டா சிங் எங்களுடன் லாகூருக்கு வந்துவிடு உன் உயிரை சக்காரியா கான் காப்பாற்றுவார் என்று கூற எப்போது எங்கள் உயிரை நாங்கள் காப்பாற்றினோம்? சண்டைக்கு வா. நாங்கள் சாவதற்கும் தயாராக இருக்கிறோம். நீங்கள் எந்த ஆயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு கையிலுள்ள மூங்கில் கம்புகளே போதும் என்று கூறி போரிட துவங்கினர். மொகலாயர்களின் குதிரைகளை அடித்து விரட்ட மொகலாயர்கள் அவர்கள் மீதும் அம்புகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பாய்த்தனர். காயம்பட்டாலும் வீழ்ந்து விடாமல் போராடினார்கள். மொகலாயர் அம்புகளை வீசினாலும் அதை உடைத்தெறிந்தனர். அம்புகள் காட்டிலும் மலையிலும் அலைந்த திரிந்து உரமாகி போய் இருந்த அவர்களது உடலுக்கு புகவே மறுத்தது. பின்னர் இருவரும் மொகலாய வீரர்களை தாக்கி அவர்களின் கை கால்களை உடைத்து போட்டனர். மொகலாயர்கள் துப்பாக்கியால் அவர்களின் கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் சுட்டு அவர்களை முடமாக்கி இஸ்ஸாமை தழுவினால் உங்களை உயிரோடு பாதுகாப்போம் என்று கூற இவர்கள் இருவரும் மறுத்து மொகலாயர்களை கழுத்தை ஒடித்து கொன்றனர். ஒரு பெரிய படையையே இருவரும் துச்சாதனமாக மிதித்து எறிய மொகலாயர்கள் துப்பாக்கி மற்றும் வாட்களால் இருவரையும் வெட்டி சாய்த்தனர். இந்த நிகழ்வு கி.பி.1739ல் நடந்தது. இந்த நிகழ்வே சீக்கியர்கள் அதிசூரர்களாக இன்னும் இருக்கிறார்கள். கல்சா அமைப்பு ஒடி ஒளிந்து விடவில்லை என்று மொகலாயர்களுக்கு உணர்த்தியது. கல்சாவின் புதிய எழுச்சி இங்கிருந்தே மீண்டும் ஆரம்பித்தது.

பாஹெல் சிங் கரோரா சிங்ஹியா :

இவர் அமிர்தசரஸ் அருகில் உள்ள ஜபால் கலான் என்னும் கிராமத்தில் கி.பி.1730ல் பிறந்தார். இவர் 84 கிராமங்களுக்கு சீக்கிய தலைவராக இருந்த பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தாத்தா மாய் பாஹோவால் குரு அர்ஜுன் தேவ் காலத்தில் சீக்கிய மதத்துக்கு மாறியவர். சட்லெஜ் மற்றும் யமுனை நதிக்களுக்கு இடையேயான பகுதிகளில் இவர் ராணுவ பலத்தைப் பெருக்கினர். இவர் சர்தார் கரோரா சிங்கால் வழிநடத்தப்பட்ட கரோர் சிங்ஹியா மிஸ்ல்லில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரின் மறைவுக்குப் பின்னர் கி.பி. 1765 இல் இதுவரை அந்த அமைப்புக்கு தலைவராக ஆனார். கி.பி. 1776 இவரின் படைகள் முசாஃபர் நகர் அருகில் மொகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்மால் தோற்கடிக்கப்பட்டது. கி.பி. 1778ல் சிர்ஹிந்த்தின் மொகலாயப் பைஜூதாரை தோற்கடித்து மொகலாய படைகளை விரட்டி அடித்தார். கி.பி. 1783 இல் சீக்கியப் படைகளுக்கு தலைமை தாங்கி டெல்லி செங்கோட்டையை கைப்பற்றினார். மொகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலம் இவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி சீக்கியர்கள் அவர்களின் இடங்களில் குருத்வாரா அமைக்கலாம் என்றும் 12.5% வணிக வரியையும் சீக்கியர்களுக்கு தருவதாகவும் மற்ற வரிகளில் ஆறில் ஒரு பங்கு வரியை தருவதாகவும் ஒப்புக் கொண்டார். டெல்லியில் ஏழு இடங்களில் குருத்வாராக்கள் அமைக்க உத்தரவிட்டார். இவர் கி.பி. 1802ல் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹோஸியார்பூர் அருகில் மரணமடைந்தார்.

சர்தார் பாஜ் சிங் பண்டாய் :

அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள மிர்பூர் பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் சீக்கிய தளபதியாக இருந்தவர். கி.பி.1710 இல் பண்டா பகதூர் படையில் "சாப்பர் சிரி" யுத்தத்தில் வலதுபக்க படைகளுக்கும் தளபதியாக இருந்தார். இந்தப் போருக்குப் பின்னர் சர்தார் பாஜ் சிங் கல்சா ராஜ்ஜின் முதல் கவர்னர் ஆனார். குர்தாஸ்பூர் போரில் இவரும் இவரது 7 சகோதரர்களும் பண்டா பகதூருடன் சேர்த்து பிடிக்கப்பட்டனர். டெல்லியில் மொகலாய அரசர் ப்ரூஃக்ஷியார்  கை கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இவரைப் பார்த்து நீங்கள் பெரிய வீரர் என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு நான் பாஜ் சிங் என் கை அல்லது கால் விலங்கை மட்டும் அகற்றிவிட்டு பார் வீரம் தெரியும் என்று சவால்விட அவ்வாறே கால் விலங்கு மட்டும் அகற்றப்பட்டது. கால்விலங்கு அகற்றப்பட்டவுடன் அருகிலிருந்த மொகலாய வீரனின் வாளை கைப்பற்றி தன் கால்களால் வாளை சுழற்றி 16 மொகலாய வீரர்களை ப்ரூஃக்ஷியார் முன்னிலையில் கொன்று குவித்தார். இதைக்கண்ட ப்ரூஃக்ஷியார் தன்னை காத்துக்கொள்ள அரசவையில் இருந்த ஓடி மறைந்தார். இவரும் இவரது ஏழு சகோதரர்களும் கி.பி. 1716 ஜூன் 9 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அதே நாளில்தான் பண்டா பகதூர் சிங்கும் கொல்லப்பட்டார்.

ஷாம் சிங் அட்டாரி :

கிபி 1790 இல் இன்றைய பாகிஸ்தான் -  இந்தியா எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள அட்டாரி என்னும் கிராமத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் ஒரு குர்முகி மற்றும் பெர்சிய மொழிகளைக் கற்றுக் கொண்டார். ரஞ்சித் சிங் சீக்கிய அரசை தோற்றுவித்த சமயத்தில் அவருடன் இணைந்து கொண்டார். மகாராஜா ரஞ்சித் சிங் இவரது திறமையை கண்டு வியந்து 5000 குதிரைப் படைகளுக்கு தலைமை ஏற்க வைத்தார். இவர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் ராணுவத்தில் கி.பி. 1817ல் இணைந்தார். அந்த நேரங்களில் நடந்த சிக்கிய-ஆப்கானிய போர்களில் பங்கு கொண்டார். அட்டோக் போர், முல்தான் போர், பெஷாவர் போர், 1819ல் காஷ்மீர் விரிவாக்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவரது மகளை ரஞ்சித் பேரனும் காரக் சிங் மகனுமான மூன்றாவது மஹாராஜாவான நெள நிஹால் சிங் மணந்தார். மகாராஜா துலீப் சிங்கின் பாதுகாவலராகவும் இருந்தார். கி.பி. 1846ல் பிப்ரவரி 10ல் இவர் மரணமடைந்தவுடன் இவரது மனைவியான மாய் தஸி திருமணக்கோலத்தில் உடன்கட்டை ஏறி உயிர்விட்டார்.

மாய் பாஹோ :

இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாபால் என்னும் கிராமத்தில் பாய் மாலோ என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தையான பாய் மாலோ குரு ஹர்கோவிந்த் சிங்கின் ராணுவத்தில் இருந்தவர்  என்பதால்  தந்தையை போல இவரும் ஆயுதங்கள் ஏந்தி போராடும் திறமையை கொண்டிருந்தார். சீக்கிய பெண்மணிகளில் முதன் முதலில் போரில் குதித்தவர் இவரே. போராளியாக இருந்தவர் முற்றிலும் மாறி சீக்கிய துறவியாகி பின்னாளில் காலத்தைக் கழித்தது தான் ஆச்சரியமான நிகழ்வு இவர் பாய் நிதான் சிங் என்பவரை மணந்தார்.

குரு கோவிந்த் சிங்கை பிடிக்க சிர்ஹிந்த்தின் ஆளுநரான வஸீர்கானை ஓளரங்கசீப் அனுப்பினார். அவர் லாகூர் மட்டும் காஷ்மீர் படைகளுடன் வந்து அனந்த்பூர் சாகிப்பை முற்றுகையிட்டார். குருவை தந்திரமாக பிடித்த நினைத்த வஸீர்கானால் அவரை பிடிக்க முடியாமல் போகவே அவரது இரு மகன்களையும் உயிரோடு பிடித்து சமாதியாக்கினார். இந்நிலையில் குரு கிர்த்ரானா என்ற கிராமத்தை அடைந்தார். அங்கேயும் அவர்கள் வர மாய் பாஹோ  மற்றும் 40 சீக்கியர்கள் மஹான் சிங் தலைமையில் மொகலாயர்களை எதிர்த்துப் போரிட்டனர். போர்க்களத்திற்கு குரு கோபிந்த் சிங் வருகையில் 40 சீக்கியர்களும் வீரமரணம் அடைந்திருந்தனர். மஹான் சிங் குற்றுயிராக உயிர் போகும் தருவாயில் குரு கோபிந்த் சிங்கின் கரங்களில் தன் உயிரை விட்டார். மாய் பாஹோ  காயம் பட்டிருந்தார். 40 சீக்கியர்களுக்கும் மாய் பாஹோ மற்றும் அவரின் உறவினர்களும் சகோதரர்களும் இணைந்து நல்லடக்கம் செய்தனர். அதில் மாய் பாஹோவின் குழந்தைகளும் அடங்குவர் என்று கூறுகின்றனர். இதன் பிறகு குருவின் பாதுகாப்பில் சிகிச்சையில் உடல் நலம் பெற்றார். குருவுடன் தால்வண்டி சாகிப்பில் அவரது பாதுகாவலராக ஆயுதம் தாங்கிய ஆணுக்குரிய கம்பீரத்துடன் இருந்தார். கி.பி. 1705ல் குரு கோபிந்த் சிங் மறைவுக்குப் பின்னர் அவர் இன்றைய கர்நாடகாவில் பிடர் அருகில் உள்ள ஜான்வாடா என்னும் ஊருக்கு வந்து அங்கேயே தியானம் செய்து குருவின் வழிமுறைகளை பரப்பினார். இப்போது அவர் இருந்த இடம் குருத்வாராவாக மாற்றப்பட்டு வழிபாட்டுத் தலமாக உள்ளது.

ஹரி சிங் நல்வா :

இன்றைய பாகிஸ்தானிலுள்ள குஜ்ரன்வாலா கி.பி. 1791ல் பிறந்தவர்.  சீக்கிய அரசில் இவர் காஷ்மீர், பெஷாவர் மற்றும் ஹஸாராவின் ஆளுநராக இருந்தார். காஷ்மீர் மட்டும் பெஷாவரில் வரி வசூலிப்பதற்காக புது நாணயங்களை வெளியிட்டார். இவரது தந்தை மறைந்தவுடன் 12 வயதிலேயே கல்சா அமைப்பில் இணைந்தார். கி.பி. 1804 ல் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் சொத்து வழக்குக்காக போனவரை நன்கு கவனித்து தனக்கு உதவியாளராக அமர்த்தினார். கி.பி. 1804ல் வேட்டைக்குச் செல்லும்போது புலி இவரது குதிரையை தாக்கி கொன்று விட்டது. இவரையும் தாக்க முற்பட்டபோது மற்ற வேட்டைக்காரர்கள் இவரை காப்பாற்ற முற்பட்டனர். இவர் அவர்களை தள்ளி இருக்கச் செய்து வெறும் கைகளால் புலியின் தாடையை உடைத்து புலியை கொன்றார். இதனால் இவரை "பாஹ்மார் (டைகர் கில்லர்)" என்று அழைத்தனர். 20 முக்கியமான போர்களில் இவர் கலந்து கொண்டுள்ளார்.  இவர் கி.பி. 1837ல் ஆப்கானிஸ்தானின் பதான் பழங்குடியின தலைவனான தோஸ்த் முஹம்மத் கானுடன் நடந்த போரில் இறந்தார். இவரது உடல்  ஜம்ரூத் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

மறக்க முடியாத சீக்கியர்கள் வரிசை :

பாய் மர்தானா (கி.பி.1464-1518)‌‌‌‌‌ :  

இவர் தான் சீக்கிய குருவான குருநானக் தேவ்வின் பால்ய நண்பர். குரு நானக் தேவின் எல்லா பயணங்களிலும் அவருடன் பயணித்தவர். கிர்டன் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் திறமை கொண்டவர்.

பீபீ நானகி (கி.பி.1464-1518) :

குரு நானக் தேவ்வை பின்பற்றிய முதல் சீக்கியர் இவரே‌. இவர் குரு நானக் தேவின் மூத்த சகோதரி. இவர் தனது தம்பியான குரு நானக் தேவ்வின் ஆன்மீக ஞானத்தை புரிந்துகொண்டு அவரை ஆன்மீக வழியில் செல்ல ஊக்கப்படுத்தியவர்.

ஸ்ரீ சந்த் (கி.பி.1494-1629) :

இவர் குருநானக்கின் மூத்தமகன். குருநானக்கின் மறைவிற்கு பின்னர் பற்றற்ற துறவியாக மாறினார். இன்றைய பஞ்சாபிலுள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தோரா பாபா நானக் என்னும் இடத்தில் உள்ள குரு நானக் கோயிலில் தஞ்சமடைந்து அந்த கோயிலை இவரது மேற்பார்வையில் சிறப்பாக கவனித்தார். இவர் "உலாவி"முறை என்பதை ஆரம்பித்து நாடு முழுவதிலும் எல்லா இடங்களிலும் பயணித்து குருநானக்கின் போதனைகளைப் பரப்பினார்.

மாதா கிவி (கி.பி.1506-1582) :

"குரு கிரந்த சாகிப்"என்ற சீக்கியர்களின் புனித நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பெண்மணி இவரே. இவர் இரண்டாம் சீக்கிய குரு அங்கத் தேவ்வின் மனைவி. இவர்தான் "லங்கார்" எனப்படும் அனைவருக்கும் சமமான சமையலறையை அறிமுகப்படுத்தினார். இங்கு உண்பவர்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக தரையில் அமர்ந்து உண்டனர். இவர் குரு அங்கத் தேவ்வுடன் இணைந்து சீக்கிய மத பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

பாய் குர்தாஸ் (கி.பி.1551-1637) :

சீக்கிய வரலாற்றில் மிகச் சிறந்த பாடலாசிரியர் மற்றும் புலவராக அறியப்படுபவர். இவரை இவர் ஆதி கிரந்தம் பாடல்களை மனப்பாடமாக பாடும் வல்லமை கொண்டவர். இவர் இறையியலில் மட்டுமல்ல போரிடும் கலையையும் அறிந்தவர்.

மாதா குர்ஜி (கி.பி.1624-1705)‌ : 

இவர் ஓளரங்கசீப்பால் கொல்லப்பட்ட சீக்கியர்களின் 9வது குருவான குரு தேஜ்பகதூரின் மனைவி. இவர் தன் கணவர் தேஜ்பகதூருடன் அவர் குருவாக ஆவதற்கு முன்னால் பகலே கிராமத்தில் தியான முறைகளைக் கற்றுக் கொடுத்தார். இவர் 10வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் தாயார். இவரது பாதுகாப்பிலிருந்த குரு கோபிந்த் சிங்கின்  மகன்களான பாபா பஃதே சிங் மற்றும் பாபா ஸோராவர் சிங்  இருவரும் மொகலாய தளபதி வஸீர்கானால் துடிதுடிக்க உயிரோடு சமாதி எழுப்பிய நிலை கண்டு அங்கேயே மனமுடைந்து மரணமடைந்தார்.

உதவிய நூல்கள் :

மொகலாயர்கள் - முகில்

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

மொகலாயர் எழுச்சியும் வீழ்ச்சியும் - டி.கே.ரவீந்திரன்

மத்தியகால இந்திய வரலாறு - சதீஷ் சந்திரா

சீக்கியர்கள் - எஸ்.கிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு