87) சீக்கிய அரசு

சீக்கிய அரசு (1801-1849) :

பஞ்சாப் சிங்கம் என்று சொன்னால் தான் புரியும் யாரை சொல்லுகிறார்கள் என்று. சீக்கிய அரசின் முதல் மஹாராஜாவான ரஞ்சித் சிங்கை தான் அவ்வாறு சொல்லுவார்கள். அங்கங்கே சிதறி கிடந்த சீக்கியர்களை ஒன்றிணைத்து வலுவான ஒரு அரசாக மாற்றி பிரிட்டிஷாரையே ஆட்டம் காண வைத்தவர் அவர். கி.பி.15-16ம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்த சீக்கியம் மதமாக தான் ஆரம்பித்ததில் இருந்து இருந்தது. ஜஹாங்கீர், ஓளரங்கசீப், முதலாம் பகதூர் ஷா மற்றும் ப்ரூஃக்ஷியார் ஆகிய மொகலாய மன்னர்கள் அவர்களது குருக்களை கொல்லவே தங்களை தற்காத்து கொள்ள ஆயுதங்களை எடுத்தார்கள். அமைப்பாக இருந்து போர் கொடுத்தார்கள். ஓவ்வொரு அமைப்பும் தனித்தனி பகுதிகளில் தங்கள் செல்வாக்கை தக்க வைத்திருந்தனர். இவ்வாறு 12 மிஸ்ல்கள் பல்வேறு பகுதிகளை ஆண்டனர். இவர்கள் ஒன்றிணைந்து உருவானது தான் தல் கால்ஸா அமைப்பாகும்.சீக்கியர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது எல்லோரும் ஒன்று சேர்வார்கள். இப்படியாக குருக்களின் காலத்திற்கு பிறகு கல்சாக்களின் காலம் நகர்ந்து சென்றது. இப்படி உருவான மிஸ்ல்களுள் 5 மிஸ்ல்கள் முக்கியமானவை. பஞ்சாப்பின் முக்கிய நகரங்களான லாகூர் மற்றும் அமிர்தசரஸ் பகுதிகளை பாங்கிகள் ஆண்டனர். இமயமலை அடிவார பகுதிகளை கன்ஹையாக்களும், பாட்டியாலா மற்றும் சிர்ஹிந்த் பகுதிகளை ஆண்ட புல்கியாக்களும், ராவி பியாஸ் ஆற்றங்கரை பகுதிகளை ஆண்ட அஹ்லுவாலிகளும் குஜ்ரன்வாலாவை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சுகேர்சாகியாக்களும் முக்கியமான 5 மிஸ்ல்களாவர்.12 அமைப்புகளுள் ஒரு அமைப்பான"சுகேர்சாகியா மிஸ்ல்" என்ற அமைப்பிலிருந்து வந்த ரஞ்சித் சிங் மற்றொரு அமைப்பான கன்ஹையா அமைப்பின் தலைவியான ராணி சதா கவுர் மகளான மெஹ்தாப் கவுரை மணந்து கொண்டபின் இரு அமைப்புகளும்  ராணி சதா கவுர் தலைமையில் ஒன்றிணைந்து வலுவான சீக்கிய அரசை ரஞ்சித் சிங் தலைமையில் அமைத்தது. 6 வயதில் ரஞ்சித் சிங் 4 வயது மெஹ்தாப் கவுரை மணந்த பின்னர் அடுத்த 4 வருடங்களில் ரஞ்சித் சிங்கின் தந்தையார் மறைந்தவுடன் இவரது அத்தையான ராணி சதா கவுர் இவருக்கும் இவரது இராஜ்ஜியத்துக்கும் பொறுப்பாளராக இருந்தார். அப்போது தான் லாகூரை ஆண்ட பாங்கிகள் மேல் அதிருப்தி கொண்ட மக்கள் இவரை அழைக்க கி.பி.1799ல் லாகூரை அடைய மக்களே கதவுகளை திறந்து விட்டு இவர்களை வரவேற்றனர். லாகூர் மற்றும் பின்னர் ஒவ்வொரு பகுதிகளாக கைப்பற்றி கி.பி.1801ல் சீக்கிய மஹாராஜாவாக அரியணையில் ரஞ்சித் சிங் அமர்ந்தார்.

ரஞ்சித் சிங் : (கி.பி.1780-1839)

ஆட்சி : (கி.பி.1801-1839)


இன்றைய பாகிஸ்தானிலுள்ள குஜ்ரன்வாலாவில் கி.பி.1780 நவம்பர் 17ல் மஹாசிங் சுகர்சகியா - ராஜ் கவுர் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையான மஹாசிங் ஜம்முவை கைப்பற்றினார். அதை விரும்பாத கன்ஹைய்யா பிரிவை சேர்ந்த குர்பக்ஃஷ் சிங் அவரை எதிர்க்க போரில் குர்பக்ஃஷ் சிங் கொல்லப்பட்டார். போருக்கு பின் அவரின் மனைவியான ராணி சதா கவுர் தன் மகளான மெஹ்தாப் கவுரை ரஞ்சித் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தார். இவர் பிறந்த பத்து வருடத்தில் இவரது தந்தையான மஹாசிங் மறைந்து விடவே அப்பிரிவுக்கு ரஞ்சித் சிங் தலைவரானார். முறையான கல்வி கற்கவில்லை. ஆனால் குதிரையேற்றம், வாள்பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடுதலிலும் தேர்ச்சி பெற்றார். இந்த சமயத்தில் அம்மை நோயினால் ஒரு கண் பார்வை இழந்தாலும் அவரின் திறமை அதை மறக்கடித்தது.

ரஞ்சித் சிங்கின் மனைவியர் விவரம்:

1) மஹாராணி மெஹ்தாப் கவுர்:

(கி.பி.1782-1813)

இவர் கன்ஹையா பிரிவின் தலைவரான குர்பக்ஃஷ் சிங் மற்றும் சீக்கியர்களில் வீராங்கனையாக அறியப்படும் சதா கவுர் மகளாக பிறந்தவர். கி.பி.1785லையே குழந்தையாக இருக்கும்போதே ரஞ்சித் சிங்கை மணந்தார். இவருக்கு இஷ்ஷார் சிங், மஹாராஜா ஷெர்சிங் மற்றும் தாரா சிங் என்ற மூன்று மகன்கள் உண்டு. ரஞ்சித் சிங் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மனைவிக்கே முக்கியத்துவம் அளித்ததால் அவரை விட்டு தாய் வீட்டிற்கு வந்த இவர் கி.பி.1813ல் அமிர்தசரஸ்ஸில் உடல்நலமில்லாமல் மறைந்தார்.

2) மஹாராணி டாடார் கவுர் :

(கி.பி.1783-1838)

இவரது இயற்பெயர் ராஜ் கவுர். நக்கை பிரிவை சேர்ந்தவர். இவருக்கு 1 வயதில் கி.பி.1784ல ரஞ்சித் சிங்குடன் திருமணம் நிச்சயமாயிற்று. இருவரும் குழந்தை பருவத்தில் இருந்ததால் கி.பி.1798ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் ராஜ் கவுர் என்ற பெயரை ரஞ்சித் சிங்கின் தாயார் பெயரும் ராஜ் கவுர் என்று இருந்ததால் தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவர் ரஞ்சித் சிங்கின் பிரியத்திற்கு உரித்தான மனைவி.  இவருக்கு பிறந்த மகனான காரக் சிங் ரஞ்சித் சிங்கிற்கு பின்னர் அரியணை ஏறினார். இவரது பேரனான நெள நிஹால் சிங் அவருக்கு பின்னர் அரியணை ஏறினார். இவர் கி.பி.1838 ஜீன் 20ல் மறைந்தார். இவரின் சமாதி இன்று லாகூரிலுள்ள இஸ்லாமியா கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் உள்ளது.

3)மஹாராணி ஜிந்த் கவுர் :

(கி.பி.1817-1863)


இவர் கி.பி.1817ல் இன்றைய குஜ்ரன்வாலா அருகிலுள்ள ஸாஸார் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் அழகான தோற்றத்தால் கவரப்பட்டு கி.பி.1835ல் ரஞ்சித் சிங் மணந்தார். இவருக்கு கி.பி.1838ல் துலீப் சிங் என்ற மகன் பிறந்தார். கி.பி.1843ல் தனது 5 வயதில் துலீப்சிங்கிற்கு பாதுகாவலராக இவரே ஆட்சி புரிந்தார். கி.பி.1846ல் முதலாம் ஆங்கிலேய-சீக்கிய யுத்தத்தில் தோல்வியுற்ற பின்னர் இவர் சிறைபிடிக்கப்பட்டு லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். இவரது மகனான துலீப் சிங் ஆங்கிலேயர் பாதுகாப்புடன் ஆட்சியில் இருந்தார். துலீப் சிங்கின் விருப்பப்படி கி.பி.1861ல் இவர் தன் மகனை பார்த்துக்கொள்ள ஆங்கிலேயர் அனுமதித்தனர். கி.பி.1863ல் ஆகஸ்ட் 1ல் இவர் இங்கிலாந்திலுள்ள கென்ஸிங்க்டன் என்னும் ஊரிலையே மறைந்தார்.

ரஞ்சித் சிங்கின் மகன்கள் விவரம்:

a) மஹாராஜா காரக் சிங் : (கி.பி.1801-1840)

இவர் ரஞ்சித்சிங் மகாராஜாவின் மூத்த மகன். அவருக்கும் அவரது இரண்டாவது மனைவி டாடார் சிங்கிற்கும்  கி.பி.1801 பிப்ரவரி 22ல் லாகூரில் பிறந்த மகன். ரஞ்சித் சிங்க்கு பிறகு அரியணை ஏறியவர். மூன்று மாதங்களில் அரியணையை விட்டு இறக்கப்பட்டார். பின்னர் ஒரு வருடத்திற்குள் மெதுவாக உயிரை கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு  கொல்லப்பட்டார்.

b) இஷ்ஷார் சிங் : ( கி.பி.1802-1837)

இவர் ரஞ்சித்சிங் மகாராஜாவுக்கும்  அவரது முதல் மனைவியான மெஹ்தாப் கவுருக்கும் கி.பி 1802  ஜனவரி 31ல் பிறந்த இரண்டாவது மகன். இவர் கி.பி.1837ல் மறைந்தார்.

c) மஹாராஜா ஷெர்சிங் : (கி.பி.1807-1843)

இவர் மகாராஜா ரஞ்சித் சிங் அவரது மூத்த மனைவியான மெஹ்தாப் கவுருக்கும் பிறந்த மகன். இவர் இவரது சகோதரர் காரக் சிங்கின் மனைவியான சந்த் கவுருக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டு ஆட்சியை பிடித்தார். இரண்டரை வருட ஆட்சிக்குப் பிறகு இவர் அஜித் சிங் சந்த்வாலியா என்பவரால் கொல்லப்பட்டார்.

d) தாரா சிங் : ( கி.பி.1807-1859)

இவ ரஞ்சித் சிங்கின் நான்காவது மகன். இவரது தாய் மகாராணி மெஹ்தாப் கவுர் என்று சொல்லப்பட்டாலும் இவர் உண்மையில் அடிமை முஸ்லிம் பெண்ணான மன்கி என்பவருக்கு மகனாக பிறந்தார் . ஆங்கிலேய -சீக்கிய போரில் கிபி 1859ல் இவர் இறந்தார்.

e) காஷ்மீரா சிங் : (கி.பி.1821-1844)

இவர் கி.பி  1827 ராணி தயா கவுர் என்பவரின் பணிப்பெண்ணுக்கு மகனாக பிறந்தவர் . ராணி தயா கவுர் இவரை ரஞ்சித் சிங்கிடம்  கொடுக்க அவர் தத்து மகனாக ஏற்றுக்கொண்டார். இவர் ராணி லட்சுமணன் கவுர் என்பவரை மணந்தார். இவருக்கு சர்தார் சிங் என்ற மகன் உண்டு. பிரிவினையின்போது இவர் பாரொச் மற்றும் அவுத் பகுதிகளை ஜாகிராக பெற்றுக்கொண்டார் .இவர் சிந்தன்வாலியாக்களுக்கு எதிரான போரில் கி.பி 1844 மே 7ல்  கொல்லப்பட்டார்.

f) பெஷ்ஷாரா சிங் : (கி.பி.1821-1845)

ராணி தயா கவுர் அவர்களின் அடிமை பெண்ணிற்கு பிறந்தவர். இவரை ராணி தயா கவுர் ரஞ்சித் சிங்கிடம் கொடுக்க அவரும் இவரை தனது மகனாக ஏற்றுக் கொண்டார். மகாராஜா ஷெர் சிங்கிற்கு பிறகு இவர் சீக்கியர்களின் அரியணைக்கான போட்டியில் ஈடுபட்டார். இவர் பிரிட்டிஷாருக்கு  எதிராக போராட்டங்களை கி.பி.1844-45களில் நடத்தினார். இவர் கடைசியில் மாலிக் பஃதே கான் திவானா மற்றும் சர்தார் சட்டர் சிங் அட்டரிவாலாவால் கி.பி.1845 செப்டம்பர் 11ல் கொல்லப்பட்டார். இவருக்கு சர்தார் ஜக்ஜோத் சிங் என்ற மகனும் உண்டு.

g) முல்தானா சிங் : (கி.பி.1819-1846)

இவர் ரஞ்சித் சிங்கின் இரண்டாவது மனைவியான டாடார் கவுரிடம் இருந்த முஸ்லீம் அடிமைப் பெண்ணுக்கு மகனாக பிறந்தார். இவரை ராணி ரத்தன் கவுர் ரஞ்சித் சிங்கிடம் வளர்க்க கொடுக்க அவரும் இவரை தன் தத்து மகனாக ஏற்றுக் கொண்டார். இவர் கி.பி.1846 இல் மரணமடைந்தார்.

h) துலீப் சிங் : (கி.பி.1838-1893)

இவர் ரஞ்சித் சிங் மற்றும் ராணி ஜிந்து கவுர் மகனாக கி.பி.1838 செப்டம்பர் 4ல் லாகூரில் பிறந்தவர். இவர் கி.பி 1843ல் மகராஜா ஷெர்சிங்கிற்கு பிறகு தனது 5வது வயதில் அரியணை ஏறினார். இவருக்கு பதிலாக இவரது தாயான ஜிந்த் கவுர் ஆட்சியை நடத்தினார். கி.பி 1846ல் முதல் ஆங்கிலேய-சீக்கியப் போருக்கு பின்னர் இவரது தாயாரான ஜிந்த் கவுரை பிரிட்டிஷார் நாடு கடத்தினார்கள். ஆனாலும் இவரை  மகாராஜாவாக ஏற்று கொண்டார்கள்.இவர் 1893 வரை ஆட்சியில்  இருந்து மறைந்தார்.

தந்தையை கொன்ற குடும்பத்தினர் என்பதால் மெஹ்தாப் கவுர் ரஞ்சித் சிங்குடனான திருமணத்தில் விருப்பமில்லை. ஆப்கானியர்களின் தொல்லைகள் குறைந்ததால் சீக்கியர்கள் ஒற்றுமையை வலியுறுத்த அனைவரையும் ஒன்று சேர்க்க ஆரம்பித்தார். நக்கை பிரிவின் தலைவரின் தங்கையான "ராஜ் கவுர்" என்பவரை இரண்டாம் திருமணம் செய்யவும் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்க முதல் மனைவி மெஹ்தாப் கவுர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தாய் வீட்டிலையே இருந்து கி.பி.1813ல் மறைந்தார்.

கி.பி.1800ல் பாங்கிகள் மற்ற மிஸ்ல்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு அமிர்தசரஸ்ஸிலிந்து  லாகூர் நோக்கி வந்தனர். அதில் கஸீர் நவாப் நிஜாமுத்தீன் கான், ஜஸ்ஸா சிங் என்ற இன்னோரு மிஸ்ல்ன் தலைவர் இடம்பெற்றிருந்த படையை தோற்கடித்து விரட்டினார். பின்னர் பஞ்சாப்பில் குஜராத் நகரை ஆண்ட சாஹிப் சிங் பாக்கி குஜ்ரன்வாலா மீது போர்தொடுக்க முயற்சி செய்தபோது அவரை சந்திக்க குஜராத் விரைய முன்பு சீக்கியர்களை ஒன்றிணைந்த சாஹிப் சிங் பேடி (இவர் குரு நானக்கின் வம்சாவளியில் வந்தவர்) தலையிட்டு உள்நாட்டு போரை நிறுத்தி அனைவரும் ரஞ்சித் சிங்கின் பின்னால் திரளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஆப்கானியர்கள் இவரின் நட்பு நாடி வந்த போது பிரிட்டிஷார் விரும்பவில்லை. காரணங்களை விளக்கி கூறி அவர்களை சம்மதிக்க வைத்து சமயத்தில் பெர்ஷியாவில் எழுந்த உள்நாட்டு போரும் ஆப்கானியர்கள் அங்கே படையெடுத்து சென்ற நிகழ்வும் தெரியவர இனி பஞ்சாப்புக்கு ஆப்கானியரால் தொல்லை இல்லை என்று கி.பி.1801 பைசாகி திருவிழா நேரத்தில் முதலாவது சீக்கிய மகாராஜாவாக முடிசூட்டி கொண்டாலும் சிம்மாசனத்தில் அமரவில்லை. தன் பெயரில் நாணயங்கள் வெளியிடாமல் குரு நானக்கின் பெயரில் நாணயங்கள் வெளியிட்டார். ஆட்சியில் அமர்ந்த பின்னர் கஸீர் நகரை ஆண்டு கொண்டிருந்த பதான்களின் மேல் அவரது பார்வை திரும்பியது. அவர்களை வெல்ல பஃதே சிங் காலியன்வாலா தலைமையில் படையை அனுப்ப தீரமாக போரிட்ட கஸீரின் நிஜாமுத்தினை தோற்கடிக்க பின்னர் அவர் ரஞ்சித்சிங்கின் ஆளுமையை ஏற்றுக்கொண்டார். 

கி.பி. 1803ல் மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சியில் வலுவான உடன் அவருக்கு எதிராக இருந்த பாட்டியாலாக்கள் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஆங்கிலேயர்களிடம் மனு அளித்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் இருவருக்கும் சட்லஜ் நதிக்கரையில் பொதுவான பகுதி அதைத்தாண்டி வரக்கூடாது என்று அறிவித்தனர். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக சட்லஜ் நதி கரையை கடந்து மெல்ல மெல்ல அனைத்து போதிலும் பிடிக்க ஆரம்பித்தார். கி.பி  1806 இல் மராட்டியர்கள் தளபதியான ஹோல்கருக்கும்  ஆங்கிலேயர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் மராத்தியர்களின் விரட்டி வர அவர்கள் அமிர்தசரஸ் நகருக்குள் அடைக்கலம் புகுந்தனர். இந்த நேரத்தில் ரஞ்சித்தின் மகாராஜ் என்ன செய்வது என்று கல்சா அமைப்பிடம் முடிவு எடுக்க சொன்னார். கடைசியில் ஆங்கிலேயர்களுடன் சமாதானமாக போகுமாறு சீட்டு வரவே மராத்தியர்கள் இடம் சமாதானமாக செல்லுமாறு அறிவுறுத்தினார். கடைசியில் சீக்கியர்கள்-ஆங்கிலேயர் ஒப்பந்தம் 1806 கையெழுத்தானது.

கி.பி.1808ல் மாள்வாக்கள் தங்களுக்கு ரஞ்சித் சிங்கினால் தொல்லைகள் ஏற்படும் என்று ஆங்கிலேயரிடம் பாதுகாப்புக் கோரினார்கள். ஆங்கிலேயர்கள் இதைப்பற்றி ரஞ்சித் சிங்கிற்கு தெரிவிக்க இருவருக்குமிடையே கிபி 1809ல் ஒப்பந்தம் ஆனது. பின்னர் காங்கிராவை  ஆண்ட ராஜபுத்ரர்களின் அரசரான சன்ஸார் சந்த் கூர்க்காக்களை விரட்ட உதவி கேட்டார். அங்கு கூர்க்காக்கள் அவருக்கு தொந்தரவாக இருந்தனர் அதனால் பஞ்சாப்பை விட்டுத்தான் வர முடியாது என்றும் காங்கிராவை தன் அரசுடன் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டால் தான் உதவிக்கு வரமுடியும் என்ற பிரிட்டிஷ் ஒப்பந்தப்படி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி அவரும் காங்கிராவை இணைக்க செய்யவே கூர்க்காக்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை விரட்டினார். இந்த படையெடுப்புகளுக்கு பிறகு ஜலந்தர், ஜம்மு, மாண்டி, சுகேத்  இடங்களை வென்று தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

இந்தநேரத்தில் ஆப்கானில் ரஞ்சித் சிங்குக்கு தொந்தரவாக இருந்த ஷா ஸமான் சகோதரர் முஹம்மது அவரை விரட்டி ஆட்சியை பிடித்தார். அவரது கண்களை குருடாக்கி அனுப்பினார். பின்னர் இன்னொரு சகோதரர் ஷா ஷூஜா அவரை விரட்டி ஆட்சியை பிடித்தாலும் திரும்பவும் முகம்மது ஆட்சியை பிடிக்க ஷா ஸமான் மற்றும் ஷா ஷூஜா  தம் மனைவியருடன் ரஞ்சித் சிங்கிடம் அடைக்கலம் புகுந்தனர். இந்த நேரத்தில் முகம்மது ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் அனுப்பி அவர்களை தன்னிடம் ஒப்படைத்தால் 9 லட்சம் பணம் தருவதாக கூறினார். அவர்களிடம் ஒப்படைத்தால் கொல்லாமல் விட மாட்டார்கள் என்று ஷா ஷூஜாவின் மனைவி தன்னிடமிருந்த  நாதிர்ஷா இந்தியாவிலிருந்து  கொள்ளையடித்துச் சென்ற கோகினூர் வைரத்தை ரஞ்சித் சிங்கிடம் ஒப்படைத்து பாதுகாப்பு கோரினார். பின்னர் முல்தான் பெஷாவர் ஆகிய இடங்களை தாக்கி தன்னோடு இணைத்துக் கொண்டார். காஷ்மீரின் அமைச்சரான தார் ரஞ்சித்திடம் சரணடைந்தார். பின்னர் காஷ்மீர் சென்ற ரஞ்சித் அந்த நாட்டையும் கைப்பற்றி தன் அரசோடு இணைத்துக்கொண்டார். இந்த நேரத்தில் இரண்டாவது மனைவியின் மகனான காரக் சிங்கிற்கே இவர் முக்கியத்துவம் அளித்ததாக இவரது முதல் மனைவி மெஹ்தாப் கவுர் தனது தாயான சதா கவுர் இல்லத்திற்கே சென்று விட்டார். இதனால் குடும்பத்தில் பூசல் உண்டாயிற்று. கி.பி.1813ல் மெஹ்தாப் கவுர் மறைவுக்கு கூட செல்லாததால் இவரது அத்தையான சதா கவுருக்கும் இவருக்கும் மோதல் உண்டாயிற்று. அதனால் சதா கவுர் பிரிட்டிஷாரிடம் நட்புக்கரம் நீட்டினார்.

இதற்கிடையில் சிந்த் பகுதிகளில் ரஞ்சித் சிங்கின் வளர்ச்சியை தடுக்க பிரிட்டிஷார் அமீர்கள் மற்றும் ஆப்கானியர்களுடன் ஒப்பந்தம் செய்தனர். இதனால் ரஞ்சித் சிங் பிரிட்டிஷாருடன் மோதுவது அபாயம் என்று உணர்ந்து மெல்ல சமாதான போக்கையே கடைப்பிடித்தார். இந்த நேரத்தில் கி.பி.1835ல் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மதுவுடன் ஒபியம் மற்றும் பலவிதமான போதை பொருட்களையும் கலந்து குடித்ததே இவரது உடல் சீர்கேட்டிற்கு காரணமாயிற்று. தனது முடிவு நெருங்குவதை உணர்ந்த அவர் தனது மகனான காரக் சிங்கே அடுத்த பட்டத்திற்கு உரியவர் என்றும் மந்திரியான ராஜா தியான் சிங்கே அவருக்கு உதவி புரிய வேண்டும் என்று கூறினார். சொத்துக்களை தானமாகவும் அனைவருக்கும் பிரித்து கொடுத்தார். கோஹினூர் வைரத்தை பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு தானமாக கொடுக்க சொன்னதை அவையினர் ஒப்புக்கொள்ளவில்லை. கி.பி.1839 ஜீன் 27ல் அந்த பஞ்சாப் சிங்கம் மறைந்தது.

காரக் சிங் : (கி.பி.1802-1840)

ஆட்சி : (கி.பி.1839 - 3 மாதங்கள்)


இவர் மஹாராஜா ரஞ்சித் சிங் மற்றும் அவரது இரண்டாவது ஆசை மனைவியான டாடார் கவுர் (மாய் நிக்கான்)க்கும் கி.பி.1802 பிப்ரவரி 22ல் லாகூரில் பிறந்தார். இவர் தந்தையின் மறைவுக்கு பின்னர் ஜீன் 27ல் 1839ல் அரியணை ஏறியவர். அக்டோபர் 8, 1839ல் மூன்று மாதத்தில் அரியணையை விட்டு இறக்கப்பட்டார். ரஞ்சித் சிங்கிடம் இருந்த ஒழக்கம் இவரிடம் இல்லை. குடி மற்றும் அளவுகடந்த போதை பொருட்கள் உபயோகம் வேறு இவரது உடல்நலத்தை கெடுத்தது. இவர் ரஞ்சித் சிங்கின் யோசனையை மீறி ராஜா தியான் சிங்கை பதவியில் இருந்து இறக்கி சேத் சிங் என்பவரை மந்திரியாக்கினார். இதனால் கோபமுற்ற ராஜா தியான் சிங் சேத் சிங்கை கொன்று காரக் சிங்கை பதவியில் இருந்து இறக்கி இவரது மகனான நெள நிஹால் சிங்கை அடுத்த பொம்மை மஹாராஜாவாக அறிவித்தார். ராஜா தியான் சிங்கினால் மெல்ல மெல்ல உணவில் கந்தகமும்,பாதரசமும் சேர்க்கப்பட்டு பதவியில் இருந்து இறங்கிய 6 மாதத்தில் படுத்த படுககையானார். அடுத்த 6 மாதத்தில் இறந்து போனார். ராஜா தியான் சிங் இவருடன் இவரை மனைவியரில் ஒருவரை உயிரோடு எரித்து விட்டார்.

இவரது மனைவியர் விவரம் :

1) சந்த் கவுர் கன்ஹையா : (கி.பி.1802-1842)

கி.பி. 1802 ல் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பஃதேகார்க் சுரியன் என்னும் ஊரில் பிறந்தவர். கி.பி. 1812 ஆண்டு மஹாராஜா காரக் சிங்கை மணந்தார். அவரின் பதவியிறக்கத்திற்கு பிறகு தன் மகனான நெள நிஹால் சிங்கை பதவியில் அமர்த்தி தன் பாதுகாப்பில் ஆட்சியில் அமர்த்தினார். அவரும் காரக் சிங் மறைந்த தினத்தில் மறையவே மருமகளின் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் சார்பாக இவரே ஆட்சியில் அமர்ந்தார். ஒரு வருடத்தில் ரஞ்சித் சிங்கின் இன்னோரு மகனான ஷெர்சிங்கினால் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். பின்னர் ஒரு வருடத்தின் ஷெர் சிங்கின் ஏற்பாட்டின்படி இவரது வேலையாட்களால்  கொல்லப்பட்டார்.

2) பீபீ கீம் கவுர் தில்லான் : 

இவரை கி.பி.1816ல் மணந்தார். இவர் ஜாட் சீக்கிய வம்சத்தை சேர்ந்த சாகிப் சிங் தில்லானின் பேத்தியும் ஜோத் சிங் கலால்வாலாவின் மகளுமாவார். கி.பி.1849ல் இரண்டாவது ஆங்கிலேய-சீக்கிய போரில் இவர் ஆங்கிலேயருக்கு எதிராக இருந்தார். அப்போரில் தோல்விக்கு பின்னர் இவரின் ஜாகீர்கள் பிரிட்டிஷ் ராஜ் சட்டப்படி குறைக்கப்பட்டது.

இவரது மகன்கள் விவரம்:

a) நெள நிஹால் சிங் :

இவர் காரக் சிங் - சந்த் கவுர் க்கும் பிறந்த மகன். கி.பி.1821ல் பிறந்த இவர் காரக் சிங் பதவியிறக்கத்திற்கு  பின் பிரதம மந்திரி ராஜா தியான் சிங்கினால் அடுத்த மஹாராஜாவாக அறிவிக்கப்பட்டார். இவரின் தாயான சந்த் கவுரே இவரின் சார்பாக ஆட்சியை நடத்தினார். தந்தை காரக் சிங்கின் இறுதி சடங்கினை முடித்து திரும்பும் வழியில் சதியினால் இவரும் கொல்லப்பட்டார்.

நெள நிஹால் சிங் : (கி.பி.1821-1840)

ஆட்சி : (கி.பி.1839-1840)


இவர் இரண்டாம் சீக்கிய மஹாராஜாவான காரக் சிங் - சந்த் கவுர் தம்பதிகளுக்கு மகனாக கி.பி.1821 மார்ச் 9ல் லாகூரில் பிறந்தார். இவரது தந்தையான காரக் சிங் பிரதம மந்திரி ராஜா தியான் சிங்கினால் பதவியிலிருந்து இறக்கப்பட்டவுடன் இவரை கி.பி.1839 அக்டோபர் 8ல் பதவியில் அமர்த்தினார். அந்த நேரங்களில் இவரது தந்தை இவரை பார்க்க பிரியப்பட்டாலும் எப்போதாவது தான் சென்று சந்திப்பாராம். இவரது தந்தை காரக் சிங் மந்திரி ராஜா தியான் சிங்கினால் உணவில் பாதரசமும் காரீயமும் செலுத்தப்பட்டு முடமாகி படுத்த படுக்கையாகி இறந்தவுடன் அவருக்கு இறுதி சடங்கு லாகூரில் ராவி ஆற்றங்கரையில் முடித்து விட்டு இவரது நண்பரான உத்தம் சிங்குடன் திரும்பும் வழியில்  ஹஸூரி பாக் என்ற நுழைவாயிலில் பாறாங்கல் இவர்களது மேல் விழுந்தது. இவரது நண்பரான உத்தம் சிங் அந்த இடத்திலையே மரணமடைந்தார். இவர் ராஜா தியான் சிங்கினால் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கையில் மரணமடைந்தார். விஷயம் கேள்விப்பட்ட இவரின் தாயார் சந்த் கவுர் வருவதற்குள் இவர் மரணமடைந்து விட்டார். நவம்பர் 5ல் மறைந்த இவர் நவம்பர் 6ல் இறுதி சடங்குகள் செய்யப்பட்டவுடனே அடுத்த மஹாராஜா சண்டைகள் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இவரது இரண்டு மனைவியரில் ஒருவர் கர்ப்பமாக இருந்ததால் அடுத்த வாரிசு வரும்வரை தானே பதவியில் இருப்பேன் என்று இவரது தாயார் சந்த் கவுர் அடுத்ததாக அரியணையில் அமர்ந்தார்.

இவரது மனைவியர் விவரம்:

1) மஹாராணி சாகிப் கவுர் :

இவரை கி.பி.1837ல் மணந்தார். இவர் அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள அட்டாரி கிராமத்தை சேர்ந்த சாஹித் சர்தார் ஷாம் சிங் அட்டாரிவாலாவின் மகள்.

2) மஹாராணி நானகி கவுர் :

இவரது குழந்தைகள் விவரம் :

a) ஸாஸதா ஜவஹர் சிங் :

b) ஜஸ்விந்தர் சிங் :

இவர் இவரது 3 வயதில் தத்து எடுக்கப்பட்ட மகன்.

சந்த் கெளவுர் : (கி.பி.1802-1842)

ஆட்சி : (கி.பி.1840-1841)


கி.பி. 1802 ல் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பஃதேகார்க் சுரியன் என்னும் ஊரில் பிறந்தவர். கி.பி. 1812 ஆண்டு மஹாராஜா காரக் சிங்கை மணந்தார். அவரின் பதவியிறக்கத்திற்கு பிறகு தன் மகனான நெள நிஹால் சிங்கை பதவியில் அமர்த்தி தன் பாதுகாப்பில் ஆட்சியில் அமர்த்தினார். அவரும் காரக் சிங் மறைந்த தினத்தில் மறையவே மருமகளின் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் சார்பாக இவரே ஆட்சியில் அமர்ந்தார். அவரது மகனுக்கு அவரின் இறப்புக்கு பின்னர் 6 மாதத்தில் குழந்தை பிறந்தது. அதற்கடுத்த 6 மாதத்தில் ஷெர் சிங் கிட்டத்தட்ட 70000 படை வீரர்களுடன் லாகூரை முற்றுகையிட்டு இவரை பதவியில் இருந்து இறக்கினார். இவர் பதவி ஏற்றதிலிருந்து இவரது பிரதம மந்திரியான ராஜா தியான் சிங்கிற்கும் (இவர் தான் ராணி சந்த் கவுர்ன் கணவரான காரக் சிங்கை பதவியில் இருந்து இறக்கி மகனை ஆட்சியில் அமர்த்தியவர். காரக் சிங்கின் உணவில் விஷம் கலந்து மெல்ல மெல்ல கொன்றார்) இவருக்கும் நல்ல உடன்பாடில்லை. அவர் ரஞ்சித் சிங்கின் இன்னோரு மகனான ஷெர் சிங்கை அடுத்த மகாராஜாவாக ஆக்க வேண்டும் கூறியதற்கு எதிராக ராணி சந்த் கவுர் அரியணையில் அமர்ந்தது பிடிக்கவில்லை. அதனால் அவர் ஷெர் சிங்குடன் உடன்பாடு கொண்டார். சந்த் கவுர் அரியணை ஏறிய ஒரு வருடத்தில் ரஞ்சித் சிங்கின் இன்னொரு மகனான ஷெர்சிங்கினால் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். லாகூர் அரண்மனையில் வீட்டுக்காவலில் இருந்த இவர் பின்னர் ஒரு வருடத்தின் ஷெர்சிங்கின் ஏற்பாட்டின்படி அவரது பிரதம மந்திரியான ராஜா தியான் சிங் கட்டளைப்படி இவரது வேலையாட்களால் கொடூரமாக தலையில் கல்லை போட்டு கி.பி.1842 ஜீன் 11ல் கொல்லப்பட்டார். சிலர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்றும் கூறுகிறார்கள்.

மஹாராஜா ஷெர் சிங் : (கி.பி.1807-1843)

ஆட்சி : (கி.பி.1841-1843)


இவர் மஹாராஜா ரஞ்சித் சிங் - அவரது முதல் மனைவி மெஹ்தாப் கவுருக்கும் கி.பி.1807ல் இன்றைய குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பட்டாலா என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு கி.பி.1820ல் அரண்மனை தர்பாரில் ரஞ்சித் சிங் மஹாராஜ் இடம் கொடுத்தார். கி.பி.1831-1834 வரை காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். இவர் தலைமையில் தான் சீக்கியர்கள் கி.பி.1834ல் பெஷாவரை ஆப்கானியர்களை தாக்கி அவர்களிடம் இருந்து கைப்பற்றினார்கள்.

இவரது சகோதரர் காரக் சிங்கின் மகனான நைள நிஹார் சிங்கின் மறைவுக்கு பின்னால் பிறக்காத அவரின் மகனின் சார்பாக அவரது தாய் சந்த் கவுர் ஆட்சியை நடத்தினார். பிரதம மந்திரியான ராஜா தியான் சிங் தில்லானுககும் அவருக்கும் உரசல்கள் இருந்தது. அதனால் ஷெர் சிங்கை லாகூரை கைப்பற்ற அழைத்தார். முற்றுகைக்கு பின்னர் லாகூரை கைப்பற்றி ராணி சந்த் கவுரை வீட்டுசிறையில் வைத்து கி.பி.1841 ஜனவரி 27ல் 4வது சீக்கிய மஹாராஜாவாக பதவியில் அமர்ந்தார். பின்னர் பிற்காலத்தில் ராணி சந்த் கவுரால் தொல்லைகள் ஏற்படலாம் என்று அவரையும் அவரது வேலையாட்களால் கொடூரமாக கொல்ல உத்தரவிட்டார். அதன்படியே ராணியின் உயிரும் பறிக்கப்பட்டது. கி.பி.1843 செப்டம்பர் 15ல் அஜித் சிங் சந்த்வாலியா என்பவரால் மஹாராஜா ஷெர்சிங்கும் பிரதம மந்திரி ராஜா தியான் சிங் தில்லானும்  கைத்துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஷெர்சிங்கின் மனைவியர் விவரம்:

1) தேஸா கவுர் நக்கை :

இவரை கி.பி.1819ல் மணந்தார். ஆனால் கி.பி.1821ல் இவர் மறைந்தார். இவருக்கு குழந்தைகள் எதுவுமில்லை.

2) பிரேம் கவுர் :

இவரை கி.பி.1822ல் மணந்தார். இவருக்கு கி.பி.1831ல் பிறந்த கன்வார் பிரதாப் சிங் என்ற மகனையம் 12 வயதில் ஷெர் சிங் கொல்லப்பட்ட சமயத்தில் இவருடன் சேர்த்து அஜித் சிங் சந்த்வாலியாவால் கொல்லப்பட்டார்.

3)பிரதாப் கவுர் ஜெகத் சிங் பிரார் :

இவரை கி.பி.1825ல் மணந்தார். ஷெர் சிங் கொல்லப்பட்ட கி.பி.1843ல் இவரும் கொல்லப்பட்டார்

4) தக்னோ கவுர் மாய் சாகிபா :

இவரை கி.பி.1842ல் மணந்துக்கொண்டார். கி.பி.1843ல் இவரும் கொல்லப்பட்டார்.

ஷெர் சிங்கின் மகன்கள் விவரம் :

a) கன்வார் பிரதாப் சிங் பகதூர் :

கி.பி.1831ல் ஷெர்சிங் - பிரேம் கவுருக்கு மகனாக லாகூரில் பிறந்தார். கி.பி.1843ல் அஜித் சிங் சந்த்வாலியாவால் துடிதுடிக்க கொல்லப்பட்டார்.

b) கன்வார் தேவா சிங் பகதூர் :

இவர் ஷெர் சிங் - மஹாராணி பிரதாப் கவுருக்கு பிறந்த மகன். இவரும் கி.பி.1843ல் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

c) ஷாதியோ சிங் பகதூர் :

இவர் ஷெர்சிங் - தக்னோ கவுர் மாய் சாகிபா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த சில மாதங்களிலையே தாய் தந்தையருடன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் இவரது தாயை ஷெர் சிங் மணந்து கொண்டதே கி.பி.1842ல் தான். அடுத்த வருடத்தில் தந்தை ஷெர் சிங் மற்றும் இவரின் தாய் தக்னோ கவுரும் கொல்லப்பட்டதால் இவரும் குழந்தையிலையே கொல்லப்பட்டிருக்கலாம்.

மஹாராஜா துலீப் சிங் : (கி.பி.1838-1893)

ஆட்சி : (கி.பி.1843-1849)


இவர் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் கடைசி மகன். அவரது இளைய மனைவியான ஜிந்த் கவுருக்கு கி.பி.1838 செப்டம்பர் 4ல் லாகூரில் பிறந்தார். ஒரு வயதிலையே தந்தையை இழந்தார். இவரது தந்தையான மஹாராஜா ரஞ்சித் சிங் இறந்தவுடன் இவரும் இவரது தாயாரும் ஜம்மு-காஷ்மீரில் ராஜா தியான் சிங் பொறுப்பில் வாழ்ந்து வந்தனர். கி.பி.1843 ல்  ஷெர்சிங் கொல்லப்பட்டபின் இவர் 5வது சீக்கிய மற்றும் கடைசி மகாராஜாவாக தனது ஐந்தாவது வயதில் அரியணை ஏறினார். இவரின் சார்பாக இவரது தாயாரான ஜிந்த் கவுர் ஆட்சியை நடத்தினார். கி.பி.1845 டிசம்பர் 13ல் ஆரம்பித்த முதல் ஆங்கிலேய - சீக்கிய போருக்கு பின்னர் ஆங்கிலேய கவுன்ஸில் துலீப் சிங்கை பெயரளவுக்கு மன்னராக ஏற்றுக்கொண்டாலும் இவரது தாயாரான ஜிந்த் கவுரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தியது. கி.பி.1849 ல் நடந்த இரண்டாம் ஆங்கிலேய - சீக்கிய போருக்கு பின்னர் இவரது அதிகாரங்களை பறித்து மாளிகைக்குள்ளேயே யாரையும் சந்திக்க விடாமல் செய்தது. 13 வருடங்களுக்கு பிறகே நாடு கடத்தப்பட்ட தாயாரையும் பார்க்க முடிந்தது. கிறிஸ்துவ போதனை புத்தகங்களால் இவர் டல்ஹெளஸி பிரபுவினால் கி.பி.1854 ல் இவர் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொண்டு விக்டோரியா மஹாராணியை சந்தித்தார். பின்னர் ஒரு வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பவேண்டும் என்ற ஆவலால் இந்தியாவுக்கு வந்தார். பிரிட்டிஷார் இவருக்கு ஆண்டுக்கு 25000 பவுண்டுகள் ஓய்வூதியம் அளித்தனர். கி.பி.1860ல் தாயாருடன் இருப்பதற்காக இங்கிலாந்தில் குடியேறினார். கி.பி.1861ல் 17000 ஏக்கர் பரப்பளவுள்ள எல்விடென் எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார். பின்னர் கி.பி.1886ல் மீண்டும் சீக்கிய மதத்திற்கு மாறினார். கி.பி.1893 அக்டோபர் 22ல் தனது 55வது வயதில் பாரீஸில் மரணமடைந்தார். தனது 15 வயதுக்கு பிறகு இவர் இந்தியாவுக்கே வரவில்லை. 

துலீப் சிங்கின் மனைவியர் விவரம் :

1) பம்பா முல்லர் : (கி.பி.1848-1887)

இவர் எகிப்த்தை சேர்ந்தவர். இவர் கிறிஸ்தவ மிஷனரிகளால் மஹாராஜா துலீப் சிங்கிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் ஜெர்மன் தந்தைக்கும் எத்தியோப்பிய தாய்க்கும் பிறந்தவர். இவருக்கு 3 மகன்களும் 3 மகள்களும் பிறந்தனர். கி.பி.1887ல் துலீப் சிங் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போது அவரை உடனிருந்து கவனித்து கொண்டதால் இவருக்கும் தோய்தொற்றி கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார்.

2) அடா டக்ளஸ் வெதரில் :

முதல் மனைவி இறந்த பின்னர் இவரை கி.பி.1889ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள் மட்டுமே பிறந்தனர்.

மஹாராஜா துலீப் சிங்கின் மகன், மகள்கள் விவரம் :

a) விக்டர் துலீப் சிங் :


இவர் மஹாராஜா துலீப் சிங் - பம்பா முல்லர் தம்பதிக்கு மூத்த மகன். கி.பி.1866 ஜீலை 10ல் பிறந்தார். துலீப் சிங் மறைவிற்கு பின்னர் இவர் அடுத்த மஹாராஜாவாக அறிவிக்கப்பட்டார். கி.பி.1918 ஜீன் 7ல் மறைந்தார்.

b) பெர்ட்ரிக் துலீப் சிங் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - பம்பா முல்லர் தம்பதிக்கு இரண்டாவது மகன். இவர் அண்ணன் விக்டர் துலீப் சிங் மறைவுக்கு பின்னர் அடுத்த மஹாராஜாவாக கி.பி.1918 ஜீலை 7ல் அறிவிக்கப்பட்டார். கி.பி 1926 ஆகஸ்ட் 15ல் இவர் மறைந்தார். இவருக்கு பின்னர் ஆங்கிலேயர்கள் யாரையும் அடுத்த மஹாராஜாவாக பெயரளவுக்கு கூட அறிவிக்கவில்லை.

c) ஆல்பர்ட் எட்வர்ட் அலெக்ஸாண்டர் துலீப் சிங் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - பம்பா முல்லர் தம்பதிக்கு கடைசி மகன். இவரை பற்றிய விவரங்கள் அறியமுடியவில்லை.

d) பாம்பா சுத்தர்லேண்ட் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - பம்பா முல்லர் தம்பதிக்கு பிறந்த மூத்த மகள். கி.பி.1869 செப்டம்பர் 29ல் லண்டனில் பிறந்த இவர் தன் இளமைக்காலத்தில் தந்தையின் லாகூருக்கு வந்து அங்கேயே வாழ்ந்து கி.பி.1957ல் மறைந்தார். தந்தையின் இருப்பிடத்தில் அயல்கிரகத்தானை போல வாழ்ந்தேன் என்று தன்னை பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் டாக்டர் கலோனியல் சுத்தர்லேண்ட் என்பவரை மணந்துகொண்டார். அவர் லாகூரிலுள்ள கிங் எட்வர்ட் மெடிக்கல் காலேஜ்ஜின் பிரின்ஸிபாலாக பணிபுரிந்தார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.

e) கேத்தரீன் ஹில்டா துலீப் சிங் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - பம்பா முல்லர் தம்பதிக்கு பிறந்த 2வது மகள் இவர். கி.பி.1871 அக்டோபர் 27ல் எல்விடென் எஸ்டேட்டில் பிறந்தார். இவர் லினா ஸ்ஸாபர் என்பவரை கி.பி.1904ல் மணந்து கொண்டு அவருடன் கி.பி.1937 (கணவர் மறைவு) வரை ஜெர்மனியில் வாழ்ந்து வந்தார். அந்த நேரத்தில் நிறைய யூதர்களை ஜெர்மனியிலிருந்து தப்பிக்க இவரும் இவரது கணவரும் உதவினர். கணவர் மறைவிற்கு பின்னர் இங்கிலாந்திலுள்ள பக்கிம்ஹாம்ஸயரில் குடியேறி அங்கேயே கி.பி.1942ல் மறைந்தார்.

f) சோபியா துலீப் சிங் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - பம்பா முல்லர் தம்பதிக்கு பிறந்த 3வது மகள் இவர். கி.பி.1876 ஆகஸ்ட் 8ல் எல்விடென் எஸ்டேட்டில் பிறந்தார். பெண்களின் உரிமைக்கான போராட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் இயக்கங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டுள்ளார். கி.பி.1948 ஆகஸ்ட் 22ல் பக்கிம்ஹாங்ஸயரில் மரணமடைந்தார்.

g) பவுலின் அலெக்ஸாண்ட்ரா துலீப் சிங் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - அடா வெதரில் தம்பதிக்கு பிறந்த மூத்த மகள்

h) அடா இரின் பெரில் துலீப் சிங் :

இவர் மஹாராஜா துலீப் சிங் - அடா வெதரில் தம்பதிக்கு பிறந்த கடைசி மகள்.

சீக்கியர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணங்கள் என்று பார்த்தால் ரஞ்சித் சிங் எதையும் பொறுமையாக ஆறப்போட்டு சிந்தித்து சமயத்திற்கு தகுந்தபடி முடிவு எடுத்தார். கல்சா அமைப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். முக்கியமான சிக்கலான தீர்வுகளை அமைப்பிடம் விவாதித்து முடிவு எடுத்தார். அவருக்கு பின் வந்தவர்களுக்கு அந்த திறமையில்லை. உணர்ச்சி பூர்வமாக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வலுவாக நிலைப்பெற்றிருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தோல்வியை தழுவி ஆட்சியை இழந்தனர். மேலும் குடும்பத்தினருக்குள் ஒருவரையொருவர் கொன்று ஆட்சியை பிடிக்க முயன்ற நிகழ்வும் தந்தையை மந்திரி உதவியுடன் வீழ்த்தி மகன் ஆட்சியை பிடித்ததும் மாற்றந்தாய் மகனுக்கு வழிவிடாமல் பிறக்காத பேரனின் சார்பாக ஆட்சியை வழிநடத்தியதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட நிகழ்வுகளும் சீக்கிய பிரிவுகளுக்குள்ளே யார் பெரியவர் என்று எழுந்த போட்டி மனப்பான்மையினாலும் ரஞ்சித் சிங் கட்டியெழுப்பிய சீக்கிய சாம்ராஜ்யம் அவர் மறைந்த அடுத்த 7 வருடங்களிலையே சாய்ந்தது.

உதவிய நூல்கள் :

சீக்கியர்கள் - எஸ்.கிருஷ்ணன்

மொகலாயர்கள் - முகில்

விக்கிபீடியா தகவல்கள்


Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு