88) திருவாங்கூர் அரசு
திருவாங்கூர் சமஸ்தானம் (கி.பி.1729-1949) :
முன்பு வேணாடு என்ற பெயரில் இருந்த நாடு கி.பி.1729-1758 வரை ஆண்ட அதன் மன்னர் அனிலம் திருநாள் முதலாம் மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த சமயத்தில் மருமக்கள் வழியில் செல்வாக்கு பெற்றிருந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியால் தேர்வு பெற்ற மன்னர் அரியணை ஏறிய பின் வேணாடு என்ற பெயர் திருவாங்கூர் என்று பெயர் மாறியது. பின்னர் அதன் தலைநகர் கி.பி.1795முதல் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு நடந்த காலத்தில் திப்பு சுல்தானின் படையெடுப்புகளும் அதை தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவும் அதன் தளவாய்யான வேலுதம்பியின் புரட்சியும் பின்னர் தோள் சீலை போராட்டமும் முலைவரி போராட்டமும் தீண்டாமை ஒழிப்பு வைக்கம் போராட்டமும் நடந்தது எல்லாம் சரித்திரத்தில் மறக்கமுடியாத நிகழ்வுகளாகும். இந்த போராட்டங்களில் தோள்சீலைக்காக அய்யா வைகுண்டரும் தீண்டாமைக்காக போராடிய பெரியார் "வைக்கம் வீரர்" என்ற பெயரை பெற்றார். மேலும் முலை வரியை எதிர்க்க தன் இரு மார்பகங்களையும் அரிந்து எறிந்து உயிர்விட்ட நாங்கிலி என்ற பெண்ணும் சரித்திரத்தில் முக்கிய இடத்தை பிடிக்கிறார்கள். திருவாங்கூர் சமஸ்தானம் என்றவுடன் அதன் சாதி கொடுமைகளும் நினைவுக்கு வரும். 5 வர்ணத்தவர்கள் என்றும் அவர்களுக்குள் இடைவெளிகளையும் வைத்து தீண்டாமை கொடுமையில் உச்சத்தில் நின்றதும் இந்த சமஸ்தானமே. தீண்டத்தகாதவர்களுக்கு இறை வழிபாடு மறுக்கப்பட்டது. கோயில் தெருக்களில் நடக்க தடை. செருப்பு அணிந்து நடக்க தடை. அணியும் ஆடையும் ஆபரகணங்களுக்கும் தடை. ஏன் வீட்டிற்கு மேற்கூரையாக ஒடு வேய்வதற்கும் தடை. கீழ்சாதி பெண்கள் ஆண்கள் இடுப்புக்கு மேல் ஆடை உடுத்த தடை. வெயிலுக்கு குடை பிடித்து போவதும் தடை, பாலுக்காக பசுமாடுகள் வளர்ப்பதும் தடை. இப்படி எல்லா விதத்திலும் இருந்த தடைகளை முதலில் விரட்டி அடித்து விரட்டியதும் இந்த சமஸ்தானமே.
அனிழம் திருநாள் முதலாம் மார்த்தாண்ட வர்மா : (கி.பி.1729-1758)
கி.பி.1706ல் அட்டிங்கலில் பிறந்த இவர் கி.பி.1729ல் ஆட்சியேறினார். இவர் நாயர் திருமண முறையின் அடிப்படையில் சட்டபூர்வமான வாரிசாக இருந்தார். ஆனால் முந்தைய ஆட்சியாளரான ராமவர்மாவின் மகன்கள் தமிழ் ராணுவத்தின் உதவியால் கிளர்ச்சி செய்தது. அதை அடக்கியவர் எட்டு வீட்டு பிள்ளைமார், நாயர்களின் அதிகாரத்தை குறைத்தார். பின்னர் கேரளாவில் டச்சுக்களின் வலிமையானது அவர்களது மசாலா வாணிகத்தில் தான் என்பதை உணர்ந்து கொச்சிக்கு மசாலாக்களை வழங்கும் பகுதிகளை கைப்பற்ற முனைந்தார். கொல்லம் (குயிலான்), காயம்குளம், தெக்கும்கூர், வடக்கும்கூர் மற்றும் புறக்காடு பகுதிகளை கைப்பற்றினார். கி.பி.1753ல் டச்சுகாரர்களை போரில் வென்ற பிறகு மசாலா உற்பத்தி நிலங்கள் நேரடியாக அரச கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இவரது காலத்தில் திருவனந்தபுரம் கேரளாவில் முக்கியமான நகரமாக விளங்குகியது. இவர் கூத்து, பரதம், கதகளி, துள்ளல், கூடியாட்டம் போன்ற கலைகளுக்கு ஆதரவளித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் மீண்டும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. போன ஆட்சியில் தீ விபத்தில் பெரும்பாலும் அழிந்து போன விஷ்ணு சிலை கட்டப்பட்டது. கோவில் கோபுரத்தின் 7 தளங்களில் 5 தளங்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. கி.பி.1758ல் இவர் மறைந்தவுடன் இவரது மருமகனான ராம வர்மா (தர்மராஜா) பதவிக்கு வந்தார்.
கார்த்திகை திருநாள் ராம வர்மா (தர்மராஜா) : (கி.பி.1758-1798)
கி.பி.1724ல் அட்டிங்கல்லில் பிறந்த இவர் முந்தைய அரசனான தனது மாமா மார்த்தாண்ட வர்மாவின் ராணுவ வெற்றிகளில் உடனிருந்தவர். கொச்சி முதல் வேணாடு வரையிலான ராஜ்ஜியத்தை இணைத்து நவீன திருவாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்க உதவினார். தனது மாமாவான மன்னர் மறைந்தவுடன் ஆட்சிக்கு வந்த இவர் கொச்சி ராஜாவை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கோழிக்கோடு ராஜ்ஜியத்தின் பிடியில் இருந்து கொச்சியை விடுவிக்க படைகளை அனுப்பினார். பின்னர் கி.பி.1763ல் கோழிக்கோடு ஜாமோரின் (சமுத்திரன்) மன்னர் வேணாட்டின் தலைநகரான பத்மநாபபுரத்திற்கு சென்று நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாரூர் மற்றும் ஆலங்காடு ராஜ்ஜியங்கள் திருவாங்கூருடன் இணைக்கப்பட்டது. கி.பி.1788ல் திப்புசுல்தான் கிளர்ச்சிகள் காரணமாக சொல்லி மலபார் மற்றும் கூர்க் பகுதிகளுக்கு நுழைந்தார். இதனால் மலபாரின் அரச குடும்பங்கள் மற்றும் ஏராளமான இந்து மற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் திருவாங்கூருக்கு தப்பி சென்றனர். திப்பு பாரூர் மற்றும் ஆலங்காடு மீது உரிமை கோரினார். திப்புவை சமாளிக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை ராமவர்மா நாடினார். நெடுங்கோட்டா கோட்டையை தாக்கிய திப்புவின் படைகளை கி.பி.1789 டிசம்பரில் ஒட ஒட விரட்டி அடித்தனர். திருவாங்கூருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு துணைக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. கம்பெனியின் துணைப் படை ஒன்று திருவாங்கூரில் நிறுத்தப்பட்டது. கி.பி.1795ல் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தானின் கட்டாய மதமாற்றத்திலிருந்து தப்பிக்க மலபாரிலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு புகலிடம் அளித்த காரணத்தால் அவர் "தர்ம ராஜா" என்றும் அழைக்கப்பட்டார்.
அவிட்டம் திருநாள் முதலாம் பலராம வர்மா : (கி.பி.1798-1810)
மாமா தர்மராஜாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் தான் திவானாக வீரன் வேலுத்தம்பி இருந்தார். ஆரம்பத்தில் படையில் இருந்த பிரச்சினைகளை கிழக்கிந்திய கம்பெனி உதவியுடன் சமாளித்த வேலுத்தம்பி அரசுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் சுமூக உறவு ஏற்படுத்தினார். பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் சுயரூபத்தை புரிந்து கொண்டு மக்கள் புரட்சியை ஏற்படுத்தியதும் கம்பெனி பலராம வர்மா மகாராஜாவின் மூலம் அவரை திவான் பதவியில் இருந்து அஸ்கற்றியதும் பின்னர் அவர் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டு மடிந்ததும் இவரது ஆட்சியில் தான் நடந்தது.
திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த சேர்த்தாலா என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தவர் நாங்கிலி என்ற 30 வயது ஈழவ இனத்து பெண்மணி. ஒரு கட்டத்தில் இவர் வெறுப்படைந்து மார்பக வரி (முலை வரி) கட்டுவதில்லை என்று உறுதி கொண்டார். அந்த காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மார்பகங்களின் அளவுக்கு ஏற்ப வரி விதிப்பு இருந்தது. அதற்கு முலைவரி அல்லது முலைக்கர்ணம் என்று பெயர். பெரிய மார்பகங்கள் என்றால் அதற்கேற்ப வரி. வரி கட்ட முடியாதவர்களின் மார்புகள் அறுத்தெறியப்படும். மார்பு வரியை கட்டுவதை பெரிய அவமானமாக கருதிய நாங்கிலி அதை கட்டாயத்தால் முலைக்கர்ணம் பார்வத்தியார் (முலைக்கர்ணம் வசூலிப்பவர்) அவரிடம் வரிவசூல் செய்ய போக கொஞ்சம் பொறுங்கள் என்று கூறி உள்ளே போய் வாழையிலையை வெட்டி விளக்கொன்றை வைத்து தனது இரு மார்பகங்களையும் அறுத்து தந்து அப்படியே உதிரப்பெருக்கு தாங்காமல் உயிர் விட்டார். இந்த நிகழ்வு கி.பி.1803ல் நடந்தது. மனைவியின் மீது பேரன்பு கொண்ட கணவர் சிறுகண்டனும் அவளது சிதையில் விழுந்து மாண்டது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவள் வாழ்ந்த இடமே "முலைச்சிபரம்பு (மார்பக பெண் வாழ்ந்த இடம்)" என்று வழங்கப்பட்டது. தற்போது அதை வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைத்து விட விரும்பி "மனோரமா காவலா" என்று மாற்றினார்கள். பின்னாளில் கி.பி.1924ல் இச்சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஆயில்யம் திருநாள் கெளரி லட்சுமி பாய் : (கி.பி.1810-1815)
இவர் பலராம வர்மாவின் வளர்ப்பு சகோதரி. கி.பி.1791ல் திருவாங்கூரில் பிறந்தார்.தன் சகோதரன் மறைந்தவுடன் தன் மகன் சுவாதி திருநாள் இரண்டாம் ராம வர்மாவுக்காக கி.பி.1810-13 வரையில் மகாராணியாகவும் பின்னர் 1813-15 வரை ரீஜன்ட் ராணியாகவும் இருந்தார்.இவரது ஆட்சியில் திருவாங்கூரில் காவல்துறை மறுசீரமைக்கப்பட்டது. பண்டிக்கையின் மீதான வரிகள், சொத்தின் வாரிசு மீதான வரிகள் ரத்து செய்யப்பட்டன. திருவாங்கூரின் 300க்கும் மேற்பட்ட கோயில்கள் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது. கி.பி.1812 டிசம்பரில் அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றி அனைவருக்கும் சுதந்திரம் வழங்கினார். தங்கம் வெள்ளி ஆபரணங்கள் அணிய சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. கி.பி.1813ல் தடுப்பூசி துறை தொடங்கப்பட்டு தடுப்பூசியை தன் குடும்பத்தினருக்கு போட்டு மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். இரண்டாவது மகனான உத்திரம் திருநாள் இரண்டாம் மார்த்தாண்ட வர்மா பிறந்த பிறகிலிருந்து உடல்நலம் இழந்த அவர் அடுத்த வருடம் கி.பி.1815ல் மறைந்தார்.
உத்திரட்டாதி திருநாள் கெளரி பார்வதி பாய் : (கி.பி.1815-1829)
இவர் கி.பி.1802ல் அட்டிங்கல் அரச குடும்பத்தில் (திருவாங்கூர் மகாராணிகள் அட்டிங்கலின் ராணிகள் என்று அழைக்கப்பட்டனர்) பிறந்த இவர் முந்தைய மகாராணி கெளரி லட்சுமி பாய்யின் சகோதரி. தன் சகோதரியின் மகனான இரண்டாம் ராம வர்மா சிறுவனாக இருந்ததால் அவனது சார்பாக ரீஜென்ட் ராணியாக பணியாற்றினார். தங்கம் வெள்ளி ஆபரணங்கள் அணிவது தொடர்பான கட்டுப்பாடு திருவாங்கூரின் சில தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது விதிக்கப்பட்டது நீக்கப்பட்டது. தனது இராஜ்ஜியத்தில் அனைவரும் தங்களின் வீடுகளின் கூரைகளுக்கு ஓடுகளை போட அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். சில வகையான வீடுகளை பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. பல்லக்குகளிலும் யானைகளின் மீதும் வண்டிகளிலும் பயணிக்கும் உரிமை வசதி படைத்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. முதன்முறையாக காபி சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. மகாராணி திருவாங்கூரில் கிறிஸ்தவ மிஷனரி நிறுவனத்தை அனுமதித்தார். மேலும் அவர்களுக்கு மாநிலத்தில் தேவாலயங்கள் கட்ட இடங்களை நன்கொடையாக அளித்தார். கி.பி.1818ல் யாழ்ப்பாண புகையிலை தொடர்பாக இலங்கையுடன் வர்த்தக உடன்பாடு கொண்டார். கி.பி.1817ல் அரசு உதவியுடன் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி கல்வியை முன்னேற்ற ஏற்பட செய்தார். இவர் முதல் கணவர் ராகவ வர்மா மறைந்தவுடன் அவரது சகோதரரை இரண்டாவது திருமணம் செய்தார். அவர் கி.பி.1824ல் மறைந்ததும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். தனது சகோதரியின் குழந்தைகளை அவர் தான் வளர்த்தார். சகோதரியின் மூத்த மகன் சுவாதி திருநாள் இரண்டாம் ராம வர்மா 16 வயது வந்தவுடன் அவரிடம் அரச உரிமையை கொடுத்து விட்டு இவர் பதவி இறங்கினார். கி.பி.1853ல் இவர் மறைந்தார்.
தோள் சீலை போராட்டங்கள் மூன்று காலகட்டங்களாக நடந்தது. 1822-23, 1823-30 மற்றும் 1855-59 ஆகிய காலகட்டங்களில் நடந்தது. கி.பி.1822 மே மாதம் தேவாலயத்திற்கு மேலாடை அணிந்து சென்ற பெண்களை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட கலவரத்தால் மீட் பாதிரியார் திருவிதாங்கூர் ரெசிடென்டுக்கு விண்ணப்பம் செய்ய பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் கிறிஸ்தவ பெண்கள் மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பு கிடைத்தது. இரண்டாவது கலவரமும் கிறிஸ்தவ பெண்களுக்கு எதிராகவே நடந்ததால் குரலெழுப்பிய மீட் பாதிரியாரை கொல்லவும் முயற்சி நடந்தது. முடிவில் முதலில் வழங்கப்பட்ட தீர்ப்பை ஒட்டியே கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெண்களுக்கு தடையில்லை என்று தீர்ப்பு வந்தது.மூன்றாவது காலகட்டம் சுவாதி திருநாள் இரண்டாம் ராம வர்மாவின் காலத்தில் ஆரம்பித்து உத்திரம் திருநாள் இரண்டாம் மார்த்தாண்ட வர்மா காலத்தில் முடிந்தது. கி.பி.1847 மார்ச்சில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ நகைகள் அணியவோ கூடாது என்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் தீர்ப்பு வந்தது. ஆங்கில அரசின் வற்புறுத்தலால் வந்த தீர்ப்பினால் 80%க்கும் அதிகமான நாடார் இன மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். மெல்ல கி.பி.1865ல் மகாராஜா ஆயில்யம் திருநாள் மூன்றாம் ராம ராஜா விட்ட அறிவிப்பினால் மதம் மாறிய கிறிஸ்தவ பெண்கள் மட்டுமில்லாமல் அனைத்து சாதி பெண்களுக்கும் தோள் சீலை அணியும் உரிமை வழங்கப்பட்டது.
சுவாதி திருநாள் இரண்டாம் ராம வர்மா : (கி.பி.1829-1846)
புகழ்பெற்ற இசைக்கலைஞரான இவர் மகாராணி கெளரி லட்சுமி பாய்க்கு மகனாக கி.பி.1813 ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். இவர் கருவில் இருக்கும்போதே அரசராக அறிவிக்கப்பட்டதால் "கர்ப்ப ஸ்ரீமான்" என்று குறிப்பிடப்பட்டார். 16 வயது ஆனவுடன் ஆட்சிக்கு வந்தார். ஊழலை தடுக்க நடவடிக்கை எடுத்தார். நிலப்பிரச்சினையில் திவான் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதை கண்டித்து திவானை பதவி நீக்கினார். கி.பி.1834ல் திருவனந்தபுரத்தில் ஆங்கில பள்ளியை தொடங்கினார். இது பின்னர் மகாராஜா உயர்நிலை பள்ளியாகவும் பின்னர் மகாராஜா கல்லூரியாகவும் மாறியது. முன்சிஃப், மாவட்ட மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை தொடங்கி வைத்தார். கி.பி.1836ல் மாநிலத்தின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பை நடத்தினார். நவீன மருத்துவத்தை நடைமுறையில் கொண்டு வர அரண்மனை மருத்துவராக ஐரோப்பிய மருத்துவர் நியமிக்கப்பட்டார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் பொருட்டு மருத்துவமனைகள் துவங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் முன்னேறிய போதிலும் சாதிய பாகுபாட்டின் பிடியில் இருந்ததால் அய்யா வைகுண்டர் இவரை கடுமையாக விமர்ச்சித்தார். தோள் சீலை விவகாரத்தாலும் தீண்டாமை பாகுபாட்டினாலும் மன்னரை "அனந்தபுரியின் நீச்சன்" என்று அய்யா வைகுண்டர் விமர்சிக்க வைகுண்டர் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுவதாக சாதி இந்துக்கள் மன்னரிடம் புகார் அளித்து அவரை கைது செய்ய வைத்தனர். பின்னர் அரசால் விடுவிக்கப்பட்ட அவர் 18 வகுப்பு ஆண்களும் பெண்களும் தங்கள் மேல் உடலை துணியால் மூட அனுமதிக்காததை கண்டித்து எதிர்த்து போராடுமாறும் கிளர்ச்சிகள் செய்தார். இது "மேல் முண்டு சமரம்" என்றழைக்கப்பட்டது.
முதன் முதலில் இவரது ஆட்சியில் தான் அரசு அச்சகம் கோட்டயத்தில் தொடங்கப்பட்டது. இவர் இசையில் ஆழ்ந்த புலமை கொண்டவர். கர்நாடிக் மற்றும் இந்துஸ்தானி இசையில் 400க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய பெருமைக்குரியவர். இவர் மலையாளம், சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, கன்னடம்,௫ இந்துஸ்தானி பெங்காலி தமிழ் ஒரியா மொழிகளில் சரளமாக பேசும் திறமை கொண்ட பல்மொழி வித்தகர். தனது 33 வது வயதில் கி.பி.1846ல் மறைந்தார்.
இந்த அய்யா வைகுண்டரின் கால கட்டத்தில் தான் கன்னியாகுமரி அருகிலுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் இளம்பெண் தாலி மற்றும் மேலாடையுடன் அரச ஆணையை எதிர்த்து வந்த குற்றத்திற்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரச படைகளால் கொல்லப்பட்டார். அந்த இடம் இன்றும் "தாலியறுத்தான் சந்தை" என்ற பெயரிலையே அழைக்கப்பட்டு வருகிறது.
உத்திரம் திருநாள் இரண்டாம் மார்த்தாண்ட வர்மா : (கி.பி.1846-1860)
இவர் மகாராணி கெளரி லட்சுமி பாய்யின் இளைய மகன். அண்ணன் சுவாதி திருநாள் இரண்டாம் ராம வர்மாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் தான் தோள் சீலை போராட்டம் மூன்றாவது கட்டமாக தீவிரமடைந்தது. அனைத்து நாடார் இனப்பெண்களும் கிறிஸ்தவ பெண்களை போல தோள் சீலை அணியலாம் என்று கம்பெனியினரின் உத்தரவுக்கு இணங்கி கி.பி.1859ல் உத்தரவு பிறப்பித்தார்.
ஆயில்யம் திருநாள் மூன்றாம் ராம வர்மா : (கி.பி.1860-1880)
உத்திரம் திருநாள் இரண்டாம் மார்த்தாண்ட வர்மாவின் மருமகனான இவர் அவரின் மகளை மணந்து கொண்டவர். அவரின் மறைவிற்குப் பின்னர் ஆட்சி ஏறினார். கி.பி.1832ல் பிறந்த இவர் கி.பி.1860ல் ஆட்சியேறிய இவரின் சீர்திருத்தங்களுக்கு இவரின் திவான் டி. மாதவ ராவ் உதவியாக இருந்தார். பல கடன்களின் பிரச்சினையால் பல ஏகபோகங்கள் நிறுத்தப்பட்டு கி.பி.1863ல் முற்றிலும் பொதுகடனை அழித்தவுடன் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 50% உயர்த்தப்பட்டது. கல்வி, சட்டம், பொதுப்பணி விவசாயம் மருத்துவம் தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் பெற்றது. கி.பி.1866ல் அதுவரை ராஜா பட்டமாக இருந்த இவர் பிரிட்டிஷ் அரசால் "மகாராஜா" என்று அழைக்கப்பட்டார். இவரது இரண்டாவது மனைவியின் உருவப்படத்தை வரைந்து கொடுத்ததற்கு ராஜா ரவிவர்மாவுக்கு மிகப்பெரிய சன்மானம் அளித்தார். ராஜா ரவிவர்மாவும் பரப்ப நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் தான். திருவாங்கூர் அரச குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர். கி.பி.1872ல் திருவாங்கூர் 4 மில்லியன் ரூபாய் உபரி வருமானத்துடன் இருந்தது. மகாராஜாவுக்கு திவான் டி. மாதவ ராவ்வுடன் பிணக்குகள் ஏற்பட்டதால் அவர் திவான் பதவியிலிருந்து விலக சேஷய்யா சாஸ்திரி என்பவர் கி.பி.1872-77 வரை திவானாக இருந்தார். அதன் பிறகு திவானாக நானோ பிள்ளை என்பவர் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் நிலம் விவசாய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி.1880ல் இவர் மறைந்தார்.
விசாகம் திருநாள் நான்காம் ராம வர்மா : (கி.பி.1880-1885)
இவர் முந்தைய ஆட்சியாளரான ஆயில்யம் திருநாள் மூன்றாம் ராம வர்மாவின் சகோதரர். கி.பி.1837ல் பிறந்த இவர் அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் இளவரசனாக இருந்த போது மெட்ராஸ் பல்கலைகழகத்தின் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார். இந்திய சட்ட மேலவையின் வைஸ்ராய் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அந்த பதவியை மறுத்து விட்டார். இவருக்கு தாவரவியல் மற்றும் விவசாயத்தில் இருந்த ஆர்வத்தினால் மரவள்ளி கிழங்கு மற்றும் ரப்பர் சாகுபடியை அறிமுகப்படுத்தினார். மரவள்ளிக் கிழங்கு சாகுபடியே திருவாங்கூர் பெரும் பஞ்சத்தை தாங்க உதவியது. உடல்நல குறைவினால் இவரும் 48 வது வயதில் கி.பி.1885ல் மறைந்தார்.
மூலம் திருநாள் ஐந்தாம் ராம வர்மா : (கி.பி.1885-1924)
இவர் முந்தைய அரசர் விசாகம் திருநாள் நான்காம் ராம வர்மாவின் மருமகன். கி.பி.1857ல் பிறந்த இவர் மாமாவின் மறைவுக்குப் பின் ஆட்சி ஏறினார். இவர் மகாராஜாவான 3ம் ஆண்டில் கி.பி.1888ல் திருவாங்கூர் சட்டமன்றம் நிறுவப்பட்டது. இந்திய மாநிலங்களிலையே முதல் சட்டசபை அது. இந்திய வரலாற்றில் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட முதல் சட்டமன்றம். கி.பி.1888ல் அஞ்சல் அமைப்பு மேம்படுத்தப்பட்டது. கி.பி.1908ல் 2 பேருந்து சேவைகள் (திருவனந்தபுரம்-நாகர்கோயில் & திருவனந்தபுரம் - கொல்லம்) ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1918ல் செங்கோட்டை - குயிலான் ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. கி.பி.1886ல் புனலூரில் ஒரு காகித ஆலை கட்டப்பட்டது. குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் மாவேலிக்கரையில் உள்ள உறவினர்கள் குடும்பத்திலிருந்து சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகியோர் தத்தெடுக்கப்பட்டனர். இந்த இரு இளவரசிகளும் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பேத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆண்டியின் கடைசி காலத்தில் தான் வைக்கம் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் தொய்வடையும் நேரத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அங்கு வந்து பிரச்சாரம் செய்த போது அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறையில் இருந்து மீண்டதும் திரும்பவும் பிரச்சாரம் செய்தவரை திரும்பவும் 6 மாதங்களுக்கு சிறையில் அடைந்தார்.
பூராடம் திருநாள் சேது லட்சுமி பாய் : (கி.பி.1924-1931)
கி.பி.1895ல் மாவேலிக்கரையில் பிறந்த இவர் முந்தைய அரசரால் தத்தெடுக்கப்பட்டவர். புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் பேத்தி இவர். மூலம் திருநாள் ஐந்தாம் ராம வர்மாவின் ஆட்சியில் பெரியார் இரண்டாவது முறை வைக்கப்பட்ட 4ம் மாதத்தில் அவர் இறந்ததை ஒட்டி ரீஜென்ட் ராணியாக ஆட்சியேறிய சேது லட்சுமி பாய் அவர்கள் பெரியாரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். எல்லோரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உத்தரவையும் இட்டார். இவரது நிர்வாகத்தில் தான் தேவதாசி முறை ஒழிப்பு மற்றும் மிருக பலி தடை ஆகிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. கி.பி.1928ல் தாய்வழி முறை அகற்றப்பட்டு ஆணாதிக்க குடும்ப அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி.1926ல் பத்திரிகை ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றினார். திருவாங்கூர் முழுவதும் புதிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டது. தொலைபேசி சேவைகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. பின்னர் சித்திரை திருநாள் இரண்டாம் பலராம வர்மாவின் 19வது பிறந்தநாளுக்கு பிறகு இவர் ஆட்சியை அவரிடம் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். தனது 89வது வயதில் கி.பி.1985ல் பெங்களூரில் மறைந்தார்.
சித்திரை திருநாள் இரண்டாம் பலராம வர்மா : (கி.பி.1931-1971)
திருவாங்கூரின் கடைசி ஆண்ட மகாராஜா இவரே. இவர் முந்தைய ரீஜென்ட் ராணியாக இருந்த சேது லட்சுமி பாய்யின் சகோதரியின் மகன். இவரது தாய் வீணை வாசிப்பதில் வல்லவர். அவர் முன்னாள் மன்னரான ஸ்வாதி திருநாள் இரண்டாம் ராம வர்மாவின் படைப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார். இவரது ஆட்சியில் தான் கி.பி.1936ல் கோயில் நுழைவு பிரகடனம் இயற்றப்பட்டது. கி.பி.1937ல் திருவாங்கூர் பல்கலைக்கழகம் (தற்போது கேரளா பல்கலைக்கழகம்) ஆரம்பிக்கப்பட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம், கேரள சாலைவழி போக்குவரத்து கழகம், நீர் மின் திட்டம், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் போன்றவை தொடங்கப்பட்டது. கி.பி.1946 அக்டோபர் 25ல் திருவாங்கூரை சுதந்திர நாடாக மாற்றும் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் வயலூரில் 1000க்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் இதற்கு பதிலடியாக காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளை தாக்கி கொன்றனர். இதனால் திவான் சி.பி.ராமசுவாமி ஐயர் ஆலப்புழாவில் ராணுவ சட்டத்தை அறிவித்தார். அக்டோபர் 27ம் தேதி மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்ட வயலாரை தனிமைப்படுத்த திருவாங்கூர் கடற்படையினர் ராணுவத்திற்கு உதவி அளிக்க ராணுவம் உள்ளே சென்றது. 470க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்களும் 40க்கும் மேற்பட்ட திருவாங்கூர் வீரர்களும் மடிந்தனர்.இதனால் ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்ட் இயக்கம் முடக்கப்பட்டது. கி.பி.1947 ஜீன் 17ல் மகாராஜா சித்திரை திருநாள் திருவாங்கூர் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டார். அதை இந்தியா ஏற்றுக்கொள்ள வில்லை. பின்னர் திவானுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மெளண்ட்பேட்டன் பிரபு முன்னிலையில் சர்தார் படேல் திருவாங்கூர் சமஸ்தானத்தை மிரட்டி பணிய வைத்ததாக தெரிகிறது. கடைசியாக கி.பி.1949 ஜுலை 1ல் இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டு கி.பி.1949-1956 வரை திருவாங்கூர்-கொச்சி யூனியனின் ராஜபிரமுக் பதவியில் இருந்தார்.திருவாங்கூர் கொச்சி யூனியனின் மலையாள மொழி பேசும் பகுதியை மலபாருடன் இணைத்து கி.பி.1956 நவம்பர் 1ல் கேரளா மாநிலம் உருவாக்கப்பட்டது. கி.பி.1971ல் மகாராஜா பட்டம் மான்யம் ஒழிப்புக்கு பிறகு வெறும் பட்டத்து மகாராஜாவாக இருந்து பக்கவாத நோயால் கி.பி.1991ல் தனது 78வயதில் மரணமடைந்தார்.ஆனால் 1991 வரை பெயரளவுக்கு மஹாராஜா பட்டத்துடன் மறைந்தார்.
உத்திரம் திருநாள் மூன்றாம் மார்த்தாண்ட வர்மா : (கி.பி.1991-2013)
இவர் திருவாங்கூரின் கடைசி மகாராஜாவான சித்திரை திருநாள் பலராம வர்மாவின் இளைய சகோதரர். கி.பி.1922 மார்ச்சில் பிறந்த இவர் அண்ணனின் மறைவுக்கு பின்னர் திருவாங்கூர் அரச குணாம்சம் தின் தலைவராகவும் அதிகாரம் இல்லாத பட்டத்து மகாராஜாவாக கி.பி.2013 வரை இருந்து மறைந்தார்.
மூலம் திருநாள் ஆறாம் ராம வர்மா : (கி.பி.2013 - தற்போது வரை)
இவர் சித்திரை திருநாள் பலராம வர்மாவின் ஒரே மருமகன். உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவுக்கு பின்னர் திருவாங்கூர் மகாராஜாவாக இருந்து திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோவிலில் அறங்காவலராக இருந்து வருகிறார்.




Comments
Post a Comment