90) அன்னிய காலனியாதிக்கம் - போர்ச்சுகல்
இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம் :
போர்ச்சுக்கல் காலனியாதிக்கம் (கி.பி.1505-1961) :
வாஸ்கோடகாமா கி.பி.1498ல் இந்தியாவுக்கு ஜரோப்பாவிலிருந்து கடற்வழியை கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்துறங்கினார். ஆனால் அதற்கு முன்பிருந்தே கி.பி.13ம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுக்கு கடற்வழியை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க போப் ஆண்டவர் ஆசியினால் ஸ்பெயின், போர்ச்சுகல் அரசர்கள் முயன்று பலவித குழுக்களை அனுப்பியும் அவர்களால் அந்த முயற்சியில் வெற்றி அடையவில்லை. போர்ச்சுகலின் அரசன் ஹென்றி (ஹென்றி தி நேவிகேட்டர்) கடற் பயணத்தின் வழியே புது நாடுகளை கண்டறிவதில் ஆர்வமுடையவன். அவனின் முயற்சியினால் போப் ஆண்டவர் கடற் பயணத்தில் மரணமடைந்தால் அவர்களுக்கு மீட்சி நாளில் வீடுபேறு நிச்சயம் என்று ஆசி கூறி கடற்பயணிகளுக்கு ஆதரவு கொடுத்தார். கடைசியில் கி.பி.1486ல் போர்ச்சுகல் அரசர் அனுப்பிய பார்த்தலோமியா டயஸ் என்ற மாலுமி நன்னம்பிக்கை முனையை அடைந்தார். ஆனால் அங்கிருந்து கிளம்பியவர் பலத்த சூறாவளி புயல் இவற்றினால் மீண்டும் போர்ச்சுகல் திரும்பினார். அவருக்கு பின்னர் 8 ஆண்டுகள் கழித்து ஸ்பெயின் மன்னர் அனுப்பிய கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். ஆனால் அவர் அதை ஆசியாவின் ஒரு பகுதி என்றே நம்பினார். புதிய நிலத்தை கண்டுபிடித்ததை அவர் அறியவில்லை. அவருக்கு பிந்தையவர் "அமெரிக்கா வெஸ்புகி" என்பவரே பின்னர் கொலம்பஸ் கண்டுபிடித்தது புதிய நிலப்பகுதி என்று கூறினார். கடைசியில் அவர் பெயரிலையே அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது. பின்னர் மேற்கிந்திய தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படியாக இந்தியாவுக்கு கடற்வழி கண்டுபிடிக்க முயன்று ஒவ்வொருவரும் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடித்தனர். இந்தியா மீது இருந்த மோகம் புதிய நிலப்பரப்புகளின் கண்டுபிடிப்புக்கு அடிகோலியது. ஹென்றிக்கு பின்னர் கி.பி.1495ல் பட்டத்திற்கு வந்த மானுவல் அரசன் ஆசியினால் கடைசியில் கி.பி.1498ல் வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடற்வழியை கண்டுபிடித்தார். அவர் நாடு திரும்பிய பின்னர் அவருக்கு பின்னர் வந்த காப்ரல் கோழிக்கோடு அரசருடன் நடந்த மோதலினால் அவருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார். பின்னர் திரும்பவும் கி.பி.1502ல் வந்த வாஸ்கோடகாமா கோழிக்கோடு அரசருடன் மோதலை கடைபிடித்தாலும் கொச்சின் மற்றும் கண்ணணூர் அரசர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அதனாலையே கொச்சின் போர்த்துகீசியர்களின் மிக முக்கியமான வியாபார கேந்திரமாக மாறியது. அதற்கடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் போரத்துகீசிய காலனி இந்தியாவில் உதயமாகியது. இந்திய அரசர்கள் அவர்களது நவீன ஆயுதங்களுக்கு பயந்து அவர்களுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தனர். பின்னர் ஒவ்வொரு நாட்டினராக வந்த தங்களது வியாபார கேந்திரங்களை அமைக்க இந்திய அரசர்கள் தங்களது ஒற்றுமையின்மையால் அவர்களது உதவியை நாட பின்னர் அவர்கள் நாடு பிடிக்க ஆரம்பித்து கடைசியில் இந்தியா அடிமைப்படுத்தப்பட்டு அவர்களின் சுரண்டலுக்கு உள்ளானது. மெல்ல மெல்ல நாட்டை விழுங்க ஆரம்பித்தனர். காலனியாதிக்கத்தின் விளைவாக பஞ்சம், பட்டினி சாவுகள் இந்தியாவில் ஏற்பட்டது. மக்கள் அடிமைப்பட்ட நிலையில் சுதந்திர காற்றை சுவாசிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் ஆயுதரீதியாகவும்,அஹிம்சை ரீதியாகவும் (உலகமே முதன்முதலில் இப்படியும் போராட்டம் பண்ணலாம் என்பதை அறிந்தது) சுதந்திர போராட்டங்கள் நடந்தது.கி.பி.1502ல் வாஸ்கோடகாமா போர்ச்சுகல் புறப்பட்டு சென்றதும் கண்ணணூர் மற்றும் கொச்சினின் பொறுப்பாக நியமித்து விட்டு சென்ற அவரின் மாமா வின்சென்ட் சோட்ரே செழிப்பான அரேபிய கப்பல்களை கைப்பற்றும் முயற்சியில் அரேபியாவுக்கு அருகில் புயலில் சிக்கி அவருடைய கப்பல் மூழ்கியது. இந்த நல்வாய்ப்பை தவற விடாத கோழிக்கோடு மன்னர் சமுத்திரன் (ஜமாரியன்) வாஸ்கோடகாமா விட்டு சென்ற நபர்களை தன்னிடம் ஒப்படைக்க கொச்சின் மன்னரிடம் கேட்க அவர் மறுக்கவே இருவருக்கும் இடையே போர் மூண்டது. சமுத்திரன் மன்னருடைய படை கொச்சினை கைப்பற்றி தீக்கிரையாக்கியது. உயிர்தப்பிய படையினரும் போர்த்துகீசியர்களும் வைப்பின் தீவுக்கு தப்பி ஓடி அந்த நேரத்தில் அபோன்ஸோ டி அல்பெகர்க்யூவின் கப்பல் வந்து அவர்களை காப்பாற்றியது. கொச்சினில் போர்த்துகீசியர்கள் கோட்டை ஒன்றை கட்டிக்கொள்ள கொச்சின் மன்னர் அனுமதியளிக்க பனை மரத்தடிகளும் மண்ணும் போட்டு சதுர வடிவிலான கோட்டை கட்டி கோட்டையின் ஒவ்வொரு முனையிலும் பீரங்கி கட்டப்பட்டது. முழுகோட்டையை சுற்றி அகழி வெட்டப்பட்டது. கி.பி.1503 ஆகஸ்ட் 1ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டைக்கு பிரான்சிஸ்கன் மதப்போதகர் போர்ச்சுகல் மன்னரின் நினைவாக "மேனுவல் கோட்டை" என்று பெயரிட்டார். அரபிக்கடல் மீது செல்வாக்கு பெறுவதற்காக கட்டப்பட்ட முதல் கோட்டை இதுவே.
வைசிஸ்ராய்கள் & கவர்னர் ஜெனரல்
பிரான்சிஸ்கோ டி அல்மெல்டா : (கி.பி.1505-1509)
போர்ச்சுகல் மன்னரால் முதல் வைஸ்சிராய்யாக பதவி வழங்கப்பட்டு வந்தவர். ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே இருந்த பகுதிகளில் அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. யாருடனும் ஒப்பந்தம் செய்யவோ போர் புரியவோ அவருக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்தது. போர்ச்சுக்கல் போர்க்கப்பல்கள் வந்தவுடன் அரேபியர்கள் எதிர்வினையாக கி.பி.1507ல் போர்க்கப்பல்களை டையூ தீவுக்கு அனுப்ப டையூ தீவின் ஆளுநர் (முஸ்லீமாக மாறிய ரஷ்யர்) அவர்களுடன் சேர கோழிக்கோடு மன்னரும் இணைந்து தெற்கு நோக்கி புறப்பட்டு வந்ததை "ஷாகுல்" பகுதியில் அல்மமெய்டாவின் மகன் லாரென்ஸோ டி அல்மெய்டா தலைமையிலான போர்த்துகீசிய படையை தோற்கடித்து விரட்டியது. போரில் லாரென்ஸோ டி அல்மெய்டா இறந்து போனதால் கோபமுற்ற அல்மெய்டா கி.பி.1509 டையூ தீவில் எகிப்திய படைகளுடன் மோதியது. டையூ தீவின் ஆளுநர் தந்திரமாக போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கொண்டு எகிப்திய படைகளுக்கு உதவி செய்ய மறுத்ததால் கோழிக்கோடு சமுத்திரன் மன்னரின் படைகள் சின்னாபின்னமாகின. இதனால் எகிப்திய படைகள் இவர்களின் வலிமையை புரிந்து கொண்டு ஓடியவர்கள் திரும்ப வரவேயில்லை. கொச்சினுக்கு திரும்பி சிறைபட்டவர்களை விடுவித்து வழியில் பிடிபட்டவர்களை கொன்று குவித்தும் எதிர்த்த இஸ்ஸாமியர்களை பீரங்கிகளில் கட்டி வைத்தும் வெடித்து சிதற வைத்தார்.
அபோன்ஸோ டி அல்பெகர்க்யூ : (கி.பி.1509-1515)
அல்மெய்டாவுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. அதனால் கவர்னர் பதவியை ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றவுடன் கோவாவை கைப்பற்ற கி.பி.1510ல் கொச்சினில் இருந்து வடக்கு பக்கமாக 20 கப்பல்களுடன் கோவாவுக்கு வந்தவர் திமோஜாவை சந்திக்க அவர் வெறும் 200 துருக்கிய வீரர்கள் மட்டுமே காவலுக்கு இருக்கும் தகவலை கூற பன்ஜிம் (Panjim) பகுதியை தாக்க அவர்கள் பழைய கோவாவுக்கு தப்பி ஓடினர். பின்னர் கோவாவின் மன்னராக ஆனார் அல்பெகர்க்யூ. இரண்டு மாதம் கழித்து யூசுப் அடில்ஷா 60000 வீரர்களுடன் தீவை கைப்பற்றினார். ஒரு வார போராட்டத்திற்கு பின்னர் அல்பெகர்க்யூ தப்பி ஓடினார். கோவாவுக்கு எட்டு மைல் தெற்கே சில போர்த்துகீசிய கப்பல்களை பார்த்து அதனை கையகப்படுத்தி கொண்டு 1700 வீரர்கள் கொண்ட 28 கப்பற்படையுடனும் திமோஜாவின் (இவர் இந்து வணிகர். அல்மெய்ட்டாவின் ஆலோசகராக இருந்தவர். விஜயநகர மன்னர்களும் போர்த்துகீசியர்களுக்கு நட்புறவை உருவாக்கி இஸ்ஸாமிய ஆதிக்கத்தை ஒதுக்கி வைக்க முனைந்தார்) இந்து வீரர்கள் கப்பல்களுடன் சேர நவம்பர் மாதத்தில் மீண்டும் கோவாவை கைப்பற்றினார். புதிய கோட்டையை கட்டி நகரத்தை புணர்நிர்மாணம் செய்தார். சுங்கசாவடியும் செயிண்ட் கேத்தரீனுக்கு சிறிய சர்ச்சும் கட்டப்பட்டது. பின்னர் கோவாவின் பொறுப்புகளை ஹானவர் மன்னரின் உறவினரான திம்மய்யாவிடம் கொடுத்து விட்டு சொந்த நாடு திரும்பினார். பின்னர் அங்கிருந்து கி.பி.1512ல் திரும்பவும் இந்தியா வரும்நேரத்தில் அடில் ஷாவின் படைகளை கோவாவை முற்றுகையிட இரு படைகளுக்கு நடுவில் அடில் ஷாவின் படைகள் சிக்கி சிதறி ஓடினர். இந்த ஆக்கிரமிப்பு நிகழ்வானது போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்தை இந்தியாவின் மேற்கு கடற்கரையோரம் நிலைநிறுத்தியது. பின்னர் குதிரை வர்த்தகம் கோவாவின் வழியே தான் நடக்க வேண்டும் என்று உத்தரவிட விஜயநகர மன்னரும் அடில்ஷாவும் இவருடன் நட்பு கரம் நீட்டினர். குதிரை வர்த்தகத்தின் மூலம் கோவாவில் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. தங்கள் படையினரை உள்ளூர் பெண்களை மணமுடிக்க ஆதரவு அளித்ததுடன் கிறிஸ்தவ மதத்தை பரப்பவும் முனைந்தார். ஆனாலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஆசை நாயகியை மட்டும் வைத்திருந்தார். நைல் நதியை திருப்பி விட்டு எகிப்த்தை கைப்பற்றவும் அலெக்சாண்ட்ரியாவையும் சூயஸையும் கைப்பற்றவும் மெக்கா நகரை எரித்து நாசம் செய்யவும் நினைத்து கி.பி.1513ல் ஏடெனுக்கு பயணம் செய்து செங்கடலில் நுழையும் கோட்டையை கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கி.பி.1515ல் ஓர்முஸ் பகுதிக்கு பயணம் செய்யும்போது வம்சாவளி போரில் மன்னரை அகற்றி மன்னராகயிருந்த மருமகனை தந்திரமாக வீழ்த்தி மீண்டும் மன்னரை அரியணையில் ஏற்றி தன் கைப்பாவையாக ஆக்கி கொண்டார். திரும்பவும் கோவாவுக்கு வரும் வழியில் வயிற்றுபோக்கு ஏற்பட்டு பழைய கோவாவுக்கு நுழையும் சமயத்திலையே அவரின் உயிர் பிரிந்தது. அவர் உடல் "லேடி ஆஃப் த மவுண்ட்" சர்ச்சில் புதைக்கப்பட்டது. பின்னர் போப் ஆண்டவர் விருப்பப்படி அவர் உடல் கி.பி.1566ல் போர்ச்சுகல் கொண்டு செல்லபப்ட்டு அடக்கம் செய்யப்பட்டது.
லோபோ சோரஸ் டி அல்பெர்காரியா : (கி.பி.1515-1518)
இவர் இன்றைய ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரிலும் மற்றும் கொச்சினிலும் கோட்டைகள் கட்டினார். 3 ஆண்டுகளுக்கு பின்னர் போர்ச்சுகல் திரும்பி போனார்.
டியாகோ லோப்ஸ் டி செக்யூர்ரா : (கி.பி.1518-1522)
முன்னாள் கடற்பயணியான இவர் கி.பி.1509ல் மலாக்கா நகரின் ஆளுநராக இருந்தார். இவர் சவுல், மாலத்தீவு ஆகிய இடங்களில் கோட்டைகளை கட்டினார். எத்தியோப்பியா, பெரு மற்றும் சீனாவுக்கு தன் பிரதிநிதிகளை அனுப்பினார். 4 வருடங்களுக்கு பிறகு போர்ச்சுகல் திரும்பினார்.
டூயார்டே டி மெனுவஸ் : (கி.பி.1522-1524)
இவர் முன்னாள் அரசவை பிரபுவான டூயார்டோ டி மெனுவஸ்ன் பேரன். 2 ஆண்டுகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டு போர்ச்சுகல் திரும்பினார்.
வாஸ்கோடகாமா : (கி.பி.1524)
இரண்டாம் முறை கி.பி.1502ல் வந்து திரும்பிய பின்னர் அவருக்கு போர்ச்சுகலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நல்ல பட்டங்களை பெற்று நல்ல வசதியாக வாழ்ந்தவர் கி.பி.1524ல் வைஸ்சிராய்யாக திரும்பி வந்தார். வந்தவர் 3 மாதங்களிலையே இறந்து போக கொச்சியில் உள்ள சாண்டோ அண்டோனினோ சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டார். கி.பி.1539ல் அவரது உடல் போர்ச்சுகலுக்கு எடுத்து செல்லப்பட்டு தகுந்த இராஜ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கார்சியா டி நோரான்ஹா : (கி.பி.1538-1540)
இவர் காலத்தில் தான் முதல் போர்த்துகீசிய பிஷப் இந்தியா வந்தார். அத்துடன் போர்த்துகீசிய கிறிஸ்தவர்களுக்கும் இந்திய இந்துக்களும் இருந்த நட்புறவு முடிவுக்கு வந்தது. கி.பி.1540ல் இந்து கோவில்கள் அழிக்கப்பட்டு மதமாற்றம் தீவிரமடைந்தது. அடுத்த வருடத்திற்குள் அனைத்து இந்து கோயில்கள் நிலங்களும் சர்ச்களினால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டது.
எஸ்டிவா டா காமா : (கி.பி.1540-1542)
வாஸ்கோடகாமாவின் இரண்டாவது மகன் இவர். இரண்டு ஆண்டுகள் பதவியிலிருந்து பின்னர் போர்ச்சுகலுக்கே சென்று விட்டார்
மார்டிம் அபோன்ஸா டி ஸோஸா : (கி.பி.1542-1545)
இவர் வைஸ்சிராய்யாக இருந்த காலத்தில் பிரான்ஸிஸ் சேவியர் கி.பி.1542 மே மாதத்தில் இந்தியா வந்தார். இந்தியாவிலும் கிழக்காசியாவிலும் 10 வருடங்களில் ஏராளமானோரை மதம் மாற்றினார். தென் மலபார் பகுதியில் இருந்த 10,000 கிராமத்து மக்களை மதம் மாற்றினார். கோவாவிலும் ஆயிரக்கணக்கானோரை மதம் மாற்றினார். மத நிர்வாகம், பள்ளி நிர்வாகம் என அனைத்தும் மாற்றி அமைத்தார். ஏராளமான சர்ச்சுகள் கட்டப்பட்டன. ஏற்கனவே இருந்த சர்ச்சுகள், மடாலயங்கள், கான்வென்ட்டுகள் பெரிதுபடுத்தப்பட்டு அவற்றின் பணிகளான மதமாற்றம் தீவிரப்படுத்தப்பட்டது. கி.பி.1552ல் சீனாவின் கடலோர பகுதியில் இறந்த இவர் உடல் கி.பி.1554ல் கோவாவுக்கு கொண்டு வரப்பட்டு "பாம் ஜுஸஸ் பசிலிக்கா"சர்ச்சில் நல்லடக்கம் செய்யப்பட்டார். கி.பி.1622ல் அவருக்கு "புனிதர்" பட்டம் தரப்பட்டதால் இவருடைய கல்லறை வழிபாட்டு தலமாகியது. ஃபிரான்சிஸ் சேவியர் இறப்பதற்கு முன்பாக புனித அநீதி விசாரணை (இன்க்யிசிஷன்) மன்றத்தை தொடங்குவதற்கு போப்பிடம் கேட்டுக்கொண்டார். அது அவர் மறைந்த பிறகு கி.பி.1560ல் தொடங்கப்பட்டது.
ஜோவா டி காஸ்ட்ரோ : (கி.பி.1545-1548)
கவர்னராக இருந்தவர் வைசிஸ்ராயாக பதவி உயர்வு பெற்றபின் அடுத்த 4 மாதங்களிலையே மரணமுற்றார்.
கார்ஸியா டி ஸா : (கி.பி.1548-1549)
இந்தியாவில் தனது திருமணத்தை நடத்திய முதல் கவர்னர். அடுத்த ஆண்டே கோவாவில் மரணமடைந்தார்.
அபோன்ஸா டி நோரோன்ஹா : (கி.பி.1550-1554)
இவர் 5வது வைஸ்சிராய்யாக நியமிக்கப்பட்டவர். இவர் முதல் அனைத்து கவர்னர்களும் தலைநகர் லிஸ்பனில் நியமனம் செய்யப்பட்டு இங்கு வைஸ்சிராய்யாக நியமிக்கப்படும் நிகழ்வு தொடர்ந்தது. இவர் வட ஆப்பிரிக்காவின் சியாட்டா நகரின் கவர்னராக 1540-49 வரை இருந்தவர்.
கான்ஸ்டான்டினோ டி பிராஹன்ஸா : (கி.பி.1558-1561)
இவர் காலத்தில் தான் போர்த்துகீசியர்கள் அடில் ஷாவின் பழைய நீதிமன்றத்தை கைப்பற்றினார்கள். 5 அவிசுவாசிகள் பொதுவெளியில் எரித்து கொல்லப்பட்டனர். அவிசுவாசிகள் மீதான விசாரணை என்பது சர்ச்சுக்கு எதிராக செயல்படுபவர்களை குறிவைத்து தண்டனை அளிப்பதாகும். ஆனால் இங்கு கிறிஸ்தவத்திற்கு எதிராக இருக்கும் கிறிஸ்தவரல்லாதவர்கள் குறிவைக்கப்பட்டனர். இதனால் ஏராளமான இந்துக்கள் கூட்டமாக கிறிஸ்தவத்திற்கு மாறினர். தாழ்ந்த ஜாதி இந்துக்களாக வகைப்படுத்தப்பட்டிருந்த மக்களும் சிலர் தாமாகவே மதம் மாறினர். கிறிஸ்தவ தம்பதிகளுக்கு பிறந்தவர்களுக்கு தான் நில உரிமை என்று அறிவிக்கப்பட சிலர் குடும்பத்துடன் மாறினர். எஞ்சிய இந்துக்கள் வலுக்கட்டாயத்தின் பேரில் மதம் மாற்றப்பட்டனர். போர்த்துகீசிய மதபிரசாரகர்கள் அடிமைகளுடன் இந்துக்கள் வாழும் பகுதிக்கு சென்று அவர்களை சிறைப்பிடித்து வாயில் மாட்டுக்கறியை திணிப்பார்கள். இதனால் அவர்கள் ஜாதியை இழந்து தீண்டத்தகாதவர்களாக ஆனதும் அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் மதம் மாறினர். இதனால் 16,172 நபர்கள் புனித அநீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கி.பி.1774ல் இந்த நடைமுறை முடிவுக்கு வந்தது. பின்னர் கி.பி.1778ல் சிறிது மாற்றப்பட்டு மீண்டும் கொண்டு வரப்பட்டது இறுதியாக கி.பி.1812ல் முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டதால் எத்தனை அவிசுவாசிகள் எரிக்கப்பட்டதும் இருட்டறையில் கொல்லப்பட்டதுமான எண்ணிக்கை விவரம் தெரியவில்லை. பம்பாய்க்கு வடக்கே இருக்கும் பசேய்ன் கோட்டையில் (வசய் என்று அழைப்பார்கள்) உள்ள நீரோடையில் புனித நீராடுவது இந்துக்களின் வழக்கம். நீரோடையில் இருந்த ஏரிக்கரை கோயிலும் சிலைகளும் இடிக்கப்பட்டு கரை முழுவதும் சிலுவை நட்டு வைக்கப்பட்டது. பசுவை கொன்று இரத்தத்தை புனித நீர்நிலையில் தெளித்தனர். போர்ச்சுகலில் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறைவாசிகள் கிழக்கு நாடுகளுக்கு போக விருப்பப்பட்டால் அவர்களை இங்கே அனுப்பி வைத்தனர். இந்தியாவுக்கு வந்த இவர்களுக்கு கையில் காசில்லாதததால் கொள்ளையடித்தும் திருடியும் தங்கள் வாழ்க்கையை நடத்தினர். தனியார் துறைகளில் சேர்ந்தவர்கள் லஞ்சம் ஊழல் சுரண்டல்களில் ஈடுபட்டனர். இங்கே வந்த போர்த்துகீசியர்கள் சிலர் இங்கேயே திருமணம் செய்து கொண்டனர். சிலர் ஆசைநாயகிகளை வைத்துக் கொண்டனர். பெண்களை அடிமைகளாகவும் வைத்துக் கொண்டனர். கி.பி.1559ல் டாமன் (டாமோ) துறைமுகத்தை கைப்பற்றினார்கள். கி.பி.1565ல் விஜயநகர பேரரசு முஸ்லீம் மன்னர்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அனைத்து முஸ்லீம் மன்னர்களும் இணைந்து கி.பி.1570ல் கோவாவை முற்றுகையிட்டனர். பத்து மாதங்கள் தாக்குப்பிடித்து போர்த்துகீசியர்கள் முற்றுகையை முறியடித்து இந்திய பெருங்கடலில் தமது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொண்டதோடு நறுமண பொருட்களின் வணிகத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு வர கர்டஸ் (Curtz) என்ற அங்கீகாரம் முறையை அமலுக்கு கொண்டு வந்து அனுமதி பெற்று வியாபாரம் செய்யும் முறையை கொண்டு வந்தனர். இதற்கான ரோந்து பணிக்காக ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்கள் பலவற்றை இந்திய பெருங்கடலில் ஒடவிட்டனர். இவை இந்திய துறைமுகங்களில் வரும் அனைத்து கப்பல்களையும் கண்காணிக்கும் அளவுக்கு இருந்தது. வேகவேகமாக ஏராளமான கோட்டைகள் கட்டினார்கள். கோவாவில் பல முக்கியமான கோட்டைகளும் டையூ, டாமன், பஸின், சாகுல், கண்ணூர், கொடுங்கலூர் என்ற இந்தியாவில் மொத்தம் 50க்கு மேற்பட்ட இடங்களில் போர்த்துகீசிய கோட்டைகள் இருந்தன. கர்டஸ் வரிவதிப்பின் படி நல்ல வருவாய்யை பெற்றனர். இதெல்லாம் டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னர் மாறியது.
16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் குஜராத் முக்கிய வணிக மையமாக இருந்தது. அதனால் குஜராத்தை மொகலாயர்களை கி.பி.1533ல் ஆக்ரமிக்க முயன்றனர். மலபாரில் செல்வாக்கு பெற்ற பின் போர்த்துகீசியர்கள் குஜராத்திலும் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பினர். அந்த நேரத்தில் மொகலாயர்களும் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்ப குஜராத்தை ஆண்ட மன்னர்கள் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாட அதற்கு பதில் உதவியாக பெஸேன் மாவட்டம் மற்றும் பம்பாய் பகுதிகளை போர்ச்சுகீசிய வணிகத்திற்கு திறந்து விட்டனர். இரண்டு ஆண்டுகளில் டையூ தீவினை கைப்பற்றி கொண்டதும் குஜராத் மன்னர் கி.பி.1538 மற்றும் கி.பி.1546 ஆண்டுகளில் டையூ தீவினை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியுற டையூ போர்த்துகீசியர் வசமே நிரந்தமாயிற்று. இந்த நேரத்தில் டாமன் தொடங்கி ப்ரூச் வரையிலான கடற்கரை பகுதிகளை தீக்கிரையாக்கினார். கோஹா (இது பாவ் நகர் மாவட்டத்தில் உள்ளது) பகுதியில் கொலை செய்தவர்களை கோயிலில் குவியல் குவியலாக குவித்து வைத்ததுடன் பசுவை கொன்று அதன் ரத்தத்தை கோயில் முழுவதும் தெளித்தனர். கி.பி.1559ல் குஜராத் மன்னருடன் போர்த்துகீசியர்களுடன் தற்காலிக ஒப்பந்தம் செய்து கொண்டு டாமன் துறைமுகத்தையும் கைப்பற்றினார்கள். சூரத் அருகிலுள்ள மக்தலாவுக்கு தீ வைத்து அனைவரையும் கொன்று குவித்தனர். மேலும் பரூச் பகுதிக்கு அருகில் இருந்த ஹான்சாத் பகுதியையும் தீ வைத்தனர். சோம்நாத் நகரமும் தாக்கப்பட்டு அதன் கோவில்களும் மசூதிகளும் அழிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளால் குஜராத் வணிகர்கள் கர்டஸ் சான்று வாங்கி வரி கட்டவும் போர்த்துகீசியர்களின் வருவாய் அதிகரித்தது.
போர்த்துகீசியர்கள் வங்காள துணிகளை வாங்கி வியாபாரம் செய்ய முனைந்து சிட்டகாங்க், ஹூக்ளி பகுதிகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வியாபாரத்தில் கொழித்து வந்தனர். இதனால் மடாலயங்கள், சர்ச்சுகள் என்று கட்டி ஹூக்ளி அவர்களுக்கு முக்கிய நகரமாக இருந்தது. இந்த நேரத்தில் உள்ளூர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை அடிமைகளாக பிடித்து மதமாற்றம் செய்ய ஆரம்பித்தனர். உச்சகட்டமாக மொகலாய அரண்மனையின் சிறுமியை (இளவரசிகளுள் ஒருவர்) பிடித்து மெக்ஸிகோவுக்கு அனுப்பிவிட்டனர். அவர் மதம் மாறியதும் கேத்தரீனா தெ ஸான் ஹீவான்னாக பெயர் மாறியது. இதனால் மொகலாயர் அரசர் ஷாஜஹான் (கி.பி.1632) வங்காளத்தின் ஆளுநராக இருந்த காஸிம்கானை அனுப்பி போர்த்துகீசியர்களின் கோட்டையை சுற்றி வளைத்து பீரங்கியால் கோட்டையை தூளாக்கி 4000 போர்த்துகீசியர்களை சிறைப்பிடித்து ஆக்ராவுக்கு நடத்தியே அழைத்து சென்று உயிர் வேண்டுமானால் மதம் மாறவும் என்று சொல்ல பலர் மதம் மாறினர். சிலர் மதம் மாறாமல் சிறை தண்டனைகளை அனுபவித்தனர்.
கி.பி.1658ல் கொச்சினின் மன்னர் மறைந்தவுடன் போர்த்துகீசியர்கள் மன்னர் குடும்பத்தில் இளையவரை மன்னனாக்க மூத்த குடும்பத்தினர் டச்சுகாரர்களின் உதவியை நாட கி.பி.1663ல் கொச்சினுக்கு எதிர் திசையில் இருந்த "பள்ளிபுரம்" என்ற போர்த்துகீசிய கோட்டையை கைப்பற்றி கொடுங்கலூர் மற்றும் கொல்லத்தையும் கைப்பற்றினர். பின்னர் கொச்சினை கைப்பற்ற நடந்த போரில் 900 போர்த்துகீசிய வீரர்கள் இறப்புடன் டச்சுகாரர்களிடம் கி.பி.1663 ஜனவரி 6ல் சரண் அடைந்தனர். பின்னர் அடுத்த ஒரு வாரத்தில் மலபார் பகுதியில் இருந்த போர்த்துகீசியர்களின் கடைசி கோட்டையான கண்ணணூரையும் கைப்பற்றி மலபார் பகுதியில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை முடித்து வைத்தனர். பின்னர் கி.பி.1670ல் மஸ்கட்டில் இருந்த வந்த அரேபியர்களால் டையூ தீவு கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பின்னர் போர்த்துகீசியர்கள் டையூ மற்றும் கோவா பகுதிகளில் பெயரளவுக்கு இருந்தனர்.
கி.பி.18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர்கள் இராமேஸ்வரத்தை கைப்பற்றினர். அங்கு ஒரு இராணுவ தளம் அமைக்க முயற்சி செய்த போது திருச்சி அரசரிடம் அமைச்சராக பதவி வகித்த தாயுமானவர் சுவாமிகள் சேதுபதி மன்னரின் உதவியுடன் மறவர் குல அரசர்களை எல்லாம் திரட்டி போர்த்துகீசியர்கள் மீது போர் தொடுத்தார். அதே நேரத்தில் டச்சுகாரர்களும் போர்த்துகீசியர்கள் மீது போர் தொடுக்க இருபுறம் நெருக்குதலால் போர்த்துகீசியர்கள் இராமேஸ்வரத்தை விட்டு வெளியேறினர். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதபுரம் சேதுபதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.
கி.பி.1947 இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தியாவின் மேற்கு கடற்கரையோர பகுதிகளான கோவா, டையூ, டாமன், தாத்ரா மற்றும் ஹவேலி பகுதிகள் போர்த்துகீசிய கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி.1954ல் தாத்ரா மற்றும் ஹவேலி பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தது. பின்னர் கி.பி.1961ல் கோவா,டையூ மற்றும் டாமன் பகுதிகள் இந்திய ராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் கி.பி.1975வரை இந்த இணைப்பை போர்ச்சுகல் ஏற்றுக்கொள்ளாமல் முரண் பிடித்தது. கடைசியில் அந்த நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கி.பி.1975ல் ஏற்றுக்கொண்டது.
போர்த்துகீசியர்களால் பல பயனுள்ள தாவரங்கள் தென் அமெரிக்கா பகுதியிலிருந்து கொண்டு வந்து இங்கே பயிரிடப்பட்டது. பைனாப்பிள், சீதாப்பழம், பப்பாளி, பேரிக்காய், கொய்யா, கொடித்தோடை பழம், முந்திரிபருப்பு, நிலக்கடலை, சோளம்,மரவள்ளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை. விதையிட்டு வளர்ப்பதற்கு "ஒட்டுப் போடுதல்" முறை போர்த்துகீசியர்களால் இன்னும் விரிவாக வளர்க்கப்பட்டது.இந்தியாவில் அல்போன்சா மாம்பழ வகையை அறிமுகப்படுத்தினார்கள். அக்பரின் காலத்தில் புகையிலையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினர். அதை அக்பரின் மகனான ஜஹாங்கிர் தடை செய்தார். இந்தியாவில் பெருமளவு உபயோகப்படுத்தும் சாமந்தி பூவையும் அவர்களே அறிமுகப்படுத்தினர்.
உதவிய நூல்கள் :
The Theft of India - Roy Maxholm
வாஸ்கோடகாமா - எம்.டி.யேட்ஸ்
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் உதவி :
கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்



Comments
Post a Comment