91) அன்னிய காலனியாதிக்கம் - டச்சுக்காரர்கள்
இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம் :
டச்சு காலனி (கி.பி.1605-1825) :
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சில வணிகர்கள் தூரகிழக்கு நாடுகளுக்கு 4 கப்பல்களை அனுப்பி அவைகள் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளிலிருந்து மிளகை ஏற்றிக்கொண்டு நல்லபடியாக கி.பி.1594ல் திரும்பியதை அடுத்து டச்சு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வெரனிக்டே ஓஸ்டிண்டிசே கம்பெனி (Vereenigde oostindische compagnie - V.O.C) என்ற பெயரில் யூனைட்டட் ஈஸ்ட் இந்தியா கம்பெனியாக ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் கி.பி.1604ல் இந்நிறுவனம் 13 கப்பல்களை இந்தியாவின் மேற்கு பகுதிக்கு அனுப்ப அதன் தளபதி கோழிக்கோடு சமுத்திரன் மன்னரை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இப்படியாக இந்நிறுவனம் வளர்ந்து டச்சு சிலோன், டச்சு இந்தோனேஷியா, டச்சு மலபார், டச்சு கோரமண்டல், டச்சு சூரத் மற்றும் டச்சு வங்காளம் என்று ஆறு பிரிவுகளாக தனித்தனி தளபதிகளின் கீழ் செயல்பட ஆரம்பித்தது.
டச்சு மலபார் :
கி.பி.1663 ஏப்ரலில் போர்த்துகீசியர்களை மலபார் பகுதியிலிருந்து விரட்டியடித்து கொச்சினின் வியாபாரத்தை எடுத்துக்கொண்டனர். பின்னர் மெல்ல மெல்ல மலபார் பகுதியின் மிளகு வர்த்தகத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். இதற்கிடையே கொச்சினில் இருந்து மன்னர் குடும்பத்தில் உள்ள மோதல் டச்சுகாரர்களுக்கு சாதகமாக இருந்தது. கி.பி.1658ல் மன்னர் இறந்ததும் போர்த்துகீசியர்கள் மன்னர் குடும்பத்தில் இளையவரை மன்னராக்க மூத்தவர் டச்சுகாரர்களை அணுக வான் கோயன்ஸ் வி.ஓ.சி.யின் வழிகாட்டி குறிப்புகளை பொருட்படுத்தாமல் சிலோன், ஜாவா பகுதிகளில் இருந்து டச்சுபடைகளை திரட்டி கொச்சினுக்கு எதிர்திசையில் இருந்த பள்ளிபுரம் என்ற சிறிய போர்த்துகீசிய கோட்டையை கைப்பற்றி பின்னர் கொடுங்களுர் மற்றும் கொல்லத்தையும் கைப்பற்றினார். பின்னர் கொச்சினை கைப்பற்ற நடந்த போரில் 360 டச்சுகாரர்களும் 900 போர்த்துகீசியர்களும் மரணமடைந்தனர். முடிவில் கி.பி.1663 ஜனவரி 6ல் போர்த்துகீசியர்கள் வான் கோயன்ஸிடம் சரணடைந்தனர். பின்னர் மூத்தவர் மன்னராக சூட்டப்பட கொச்சினின் மிளகு வணிகம் டச்சுக்காரர்கள் வசம் வந்தது. மன்னரை வெறும் கைப்பாவையாக வைத்துக்கொண்டு அரசை ஆட்சி புரிய ஆரம்பித்தனர். ப்ராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களான இவர்கள் இந்தியாவில் இருந்த இந்து மற்றும் முஸ்லீம் செல்வந்த குடும்பங்களிலிருந்து பெண் எடுக்க விரும்பியும் யாரும் பெண் கொடுக்க வில்லை. அதனால் இந்தோ-போர்த்துகீசிய கலப்பில் பிறந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களையே திருமணம் முடித்தனர். கி.பி.1663ல் பியட்டர் டி பிட்டர் மற்றும் கார்னிலிஸ் வால்கன்பெர்க் ஆகியோர் தளபதிகளாக இருந்து மலபாரின் டச்சு ஆதிக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். பின்னர் சமுத்திரன் மன்னர் டச்சுகாரர்களிடம் இருந்து சற்று விலகி ஆங்கிலேயர்கள் மற்றும் டேனிஷ்காரர்களுடன் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தார். உள்ளூர் மக்களும் டச்சுக்காரர்கள் கேட்ட மலிவான விலையை விட அதிக விலைக்கு ஆங்கிலேயர்களிடம் தங்கள் பொருட்களை விற்க ஆரம்பித்தனர். டச்சுக்காரர்கள் கொச்சின் அரச குடும்பத்தின் நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்ததும் நாயர்களிடையே கலகம் மூண்டது. இதனாலும் ஆங்கிலேயர்களின் வணிக நடவடிக்கைகளாலும் கி.பி.1697ல் மலபாரில் தனது வியாபாரத்தை வி.ஓ.சி. கம்பெனி குறைத்துக்கொண்டது. பின்னாளில் கி.பி.1741ல் குளச்சல் போரில் டச்சு ஜெனரல் யூஸ்டாஷியஸ் டி லானாய் திருவாங்கூர் சமஸ்தான ராஜா மார்த்தாண்டவர்மனின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
தங்கள் படைகளுக்கு நவீன ஆயுதங்கள், போர்முறைகளை கற்றுக்கொடுத்தால் விடுதலை செய்வதாக வாக்களிக்க அவ்வாறே டச்சு ஜெனரல் திருவாங்கூர் படைகளுக்கு நவீன பயிற்சி அளித்தார். திருவாங்கூர் ராணுவத்தில் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை இவரே அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வே மெல்ல மெல்ல டச்சுக்களின் ஆதிக்கம் குறைந்து வருவதை உணர்த்தியது. கி.பி.1744ல் டச்சு ஆளுநர்களுக்காக போல்காட்டி தீவில் "போல்காட்டி அரண்மனை"என்ற அரண்மனை கட்டப்பட்டது. கியூ கடிதங்களின் படி டச்சு குடியேற்றப் பகுதிகள் பிரெஞ்சு படைகளால் கைப்பற்றப்படுவதை தடுக்க ஆங்கிலேயர்கள் வசம் சரணடைந்தனர். பின்னர் கி.பி.1824ல் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டச்சுக்காரர்கள் தாங்கள் இந்தியாவில் செய்த வாணிக ஸ்தலங்களை ஆங்கிலேயர்களிடம் விட்டு கொடுத்து விட்டு கி.பி.1825ல் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்..
டச்சு கோரமண்டல் :
சோழ மண்டல கடற்கரை தான் கோரமண்டல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இன்றைய சென்னையிலுள்ள பழவேற்காடு அன்று புலிக்காட் என்ற பெயரில் டச்சுக்களின் முக்கியமான இடமாக விளங்கியது. இங்கு தான் முதன்முதலில் டச்சுக்காரர்களின் கப்பல் தரையை தட்டி நின்றது. அப்போது உள்ளூர் முஸ்லீம் வணிகர்கள் அவர்களுக்கு உணவு மற்றும் வியாபாரத்திற்கான வசதிகளை செய்து கொடுத்தனர். கி.பி.1608ல் விஜயநகர அரசர் இரண்டாம் வெங்கடா (இவர் திருமலை தேவ ராயனின் இளைய மகன்) ஆட்சிகாலத்தில் அவரது மனைவியான ராணி இறைவி என்பவரின் அனுமதியுடன் புலிக்காட்டில் முதன்முதலில் கோட்டையை கட்டினார்கள். இவர்கள் கோட்டையை கட்டியதே தங்களது வியாபாரத்தை அந்நாளில் பெரிய போட்டியாக இருந்த போர்த்துகீசியர்களை சமாளிக்கவே. இந்த புலிக்காட் அடிமை வர்த்தகத்தின் முக்கியமான மையமாக விளங்குகியது. இங்கிருந்து ஆண்டுதோறும் 500 அடிமைகளை தூர கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதற்கேற்ப போர்த்துகீசியர்களும் கி.பி.1614,1623 & 1633 ஆண்டுகளில் புலிக்காட்டை கைப்பற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. கி.பி.1616 முதல் 1690வரை புலிக்காட் பகுதியே டச்சுக்களின் கோரமண்டல் பகுதியின் தலைமையகமாக இருந்தது. கி.பி.1620ல் புலிக்காட் பகுதியில் முதல் வெடிமருந்து தொழிற்சாலையை அமைத்தனர். பின்னர் கி.பி.1690ல் தலைமையகத்தை நாகப்பட்டினத்திற்கு மாற்றினார்கள். கி.பி.1781ல் ஆங்கிலேயர்கள் நாகப்பட்டினத்தை கைப்பற்றினார்கள். ஆனாலும் கி.பி.1784ல் பாரீஸ் ஒப்பந்தத்தின் பிறகும் (அதாவது 4வது ஆங்கிலேய-டச்சு போர்) நாகப்பட்டினம் டச்சுகளின் வசம் ஒப்படைக்கப்படாததால் தங்கள் தலைமையகத்தை மீண்டும் புலிக்காட் பகுதிக்கே மாற்றினார்கள். கி.பி.1746ல் பருவமழை தவறியதால் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதில் 15000 பேர் புலிக்காட் & சாந்தோம் பகுதியிலிருந்து இறந்து போனார்கள். இந்த பஞ்சத்திற்கு பின்னர் 1/3 கைத்தறி நெசவாளர்கள், ஓவியர்கள் மற்றும் துணி துவைப்பவர்கள் மட்டுமே மிஞ்சினார்கள். இந்த பஞ்சத்தினால் துணிகளின் விலையும் அதிகமாயிற்று. உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மீர் ஜும்லாவின் கோல்கொண்டா படைகள் இந்த பகுதியை ஆக்ரமித்த நிகழ்வு டச்சுகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. பிரெஞ்ச் படைகளின் தாக்குதலை சமாளிக்க டச்சு கவர்னர் ஆங்கிலேயர்களிடம் புலிக்காட் கோட்டையை ஒப்படைத்தார். பின்னர் கி.பி.1814ல் ஏற்பட்ட ஆங்கிலேய-டச்சு ஒப்பந்தத்தின் படி மீண்டும் டச்சுக்காரர்கள் வசம் வந்தது. பின்னர் கி.பி.1824ல் ஏற்பட்ட ஆங்கிலேய-டச்சு ஒப்பந்தத்தின் படி கி.பி.1825ல் ஆங்கிலேயர்களிடம் கோரமண்டல் பகுதிகளுடன் மற்ற பகுதிகளையும் ஒப்படைத்துவிட்டு அவர்கள் நாட்டுக்கு சென்று விட்டனர்.
கி.பி.1648ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சியில் டச்சுக்காரர்கள் காயல்பட்டினம் நகரில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி கேட்க அவரும் அனுமதி கொடுத்தார். அந்த நேரத்தில் திருமலைநாயக்கர் போர்ச்சுக்கீசியர்கள் உடன் வாணிப தொடர்பு வைத்திருந்தார் மேலும் போர்த்துகீசியர்கள் அவர்கள் வடபழனியில் அவருக்கு உதவியாக இருந்தனர் இதனால் டச்சுக்காரர்களின் கோட்டை கட்டுவதை போர்த்துகீசியர்கள் தனது படைபலம் கொண்டு அழித்தனர் டச்சுப் படை அப்போது மலபார் கொழும்பு ஆகிய இடங்களை கோட்டை கட்டி வலுவான நிலையில் இருந்தது. கொழும்பிலிருந்து காயல்பட்டணத்தில் இருந்த டச்சு படங்களுக்காக 10 படகுகளில் படைகள் அமைந்தது அந்தப் படங்களும் மணப்பாடு அருகே தரையிறங்கி வீரராமபட்டணத்தில் இருந்த போர்த்துகீசிய தேவாலயத்தை கைப்பற்றினர்.மேலும் முன்னேறி திருச்செந்தூர் முருகன் கோயிலையும் கைப்பற்றினர். இதனால் பொதுமக்கள் திரண்டு திருமலை நாயக்கரிடம் முறையிட திருமலை நாயக்கர் டச்சுகாரர்களை திருச்செந்தூர் கோயிலை விட்டு வெளியேற சொன்னார். காயல்பட்டினத்து கோட்டை தகர்க்கப்பட்டதற்கு நஷ்ட ஈடு தருவதாக கூறியும் கேட்காமல் தூத்துக்குடியையும் கைப்பற்றினார்கள். இதற்கிடையில் பொதுமக்கள் அவர்களாகவே படை திரண்டு டச்சுகாரர்களை எதிர்த்து போரிட்டும் வெற்றி பெற முடியவில்லை. முடிவில் டச்சுகாரர்கள் திருச்செந்தூர் கோயில் சிலைகளுடன் சிலோன் கிளம்பி போனார்கள். சிலைகளுக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரியால் பணம் கேட்டனர். திருமலை நாயக்கர் தன் வரிவசூல் அதிகாரியான வடமலை பிள்ளையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். டச்சு கவர்னர் திருமலை நாயக்கர் கொடுக்கும் பணய தொகையை பெற்றுக்கொண்டு சிலைகளை கொடுக்க உத்தரவிட கி.பி.1651ல் ஜனவரி மாதம் மீட்கப்பட்ட சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த நிகழ்வை சற்று பக்தி ரசம் ஊற்றி டச்சுக்காரர்கள் சிலையை நடுக்கடலில் போட்டதாகவும் வடமலைப்பிள்ளை கனவில் முருகன் தோன்றி இரு கழுகுகள் பறக்கும் இடத்தில் எலுமிச்சை பழம் கடலில் மிதக்கும் அந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்லியதாகவும் அதன்படி முத்து குளிப்பவர்கள் உதவியுடன் சிலைகளை மீட்டதாகவும் கதைகள் உள்ளது. திருச்செந்தூர் கோயில் பிரகாரத்தில் இந்த பக்திரசம் ஊற்றிய நிகழ்வு ஒவியப்படமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டச்சு வங்காளம் :
பெங்கால் பகுதியில் பிப்லி என்னுமிடத்தில் வியாபாரதலம் அமைத்து கி.பி.1615 முதல் கி.பி.1800 வரை டச்சுக்காரர்கள் வியாபாரம் செய்தனர். ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள சபர்ணரேகா நதி முகத்துவாரத்திலுள்ள பிப்லி என்ற இடமே முக்கியமான வியாபார தலமே விளங்கியது. இங்கு மொகலாயர்களின் அனுமதி பெற்று வியாபாரம் செய்து வந்தனர். வங்காள பகுதிகளில் ஏற்றுமதியாகும் 50% துணிகளும் 80% பட்டுகளும் தங்கள் நாட்டுக்கு அனுப்பினர். கி.பி.1615ல் வியாபாரத்திற்காக தொழிற்சாலை பாதுகாப்புக்காக கி.பி.1687ல் சுற்றுசுவர் கட்டப்பட்டது. கி.பி.1740ல் ஜெனரலாக இருந்த ஜான் அல்பர்ட் சிச்டர்மேன் என்பவரால் கோட்டை நான்கு வழி முகப்புகளுடன் கட்டப்பட்டது. கி.பி.1742ல் தேவாலயக்கூரையை கட்டினார். கி.பி.1757ல் பிளாசிப்போரின் வெற்றியினால் ஃபிரெஞ்சு காரர்களை விரட்டி ஆங்கிலேயர்கள் வங்காள பகுதிகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். கி.பி.1759ல் சின்சுராஹ் யுத்தத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியிடம் தோல்வியுற்றதால் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை வங்காளத்தில் தடுக்க முடியாமல் போயிற்று. கி.பி.1795ல் டச்சு வங்காளம் ஆங்கிலேயர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மீண்டும் ஆங்கிலேய-டச்சு ஒப்பந்தத்தின் படி கி.பி.1814ல் டச்சுக்காரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கி.பி.1824ல் ஏற்பட்ட ஆங்கிலேய-டச்சு ஒப்பந்தின்படி டச்சுக்கள் டச்சு வங்காளபகுதிகளை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து விட்டு தங்கள் நாட்டுக்கு போயினர்.
டச்சு சூரட்டே (சோர்டே) :
கி.பி.1616ல் பியட்டர் வான் டென் ப்ரோக்கே என்பவர் சூரத் நகரில் டச்சு வியாபார தலத்தை பலமுறை அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டு பின்னர் ஆரம்பித்தார். கி.பி.1668ல் ஆங்கிலேய மற்றும் டச்சு வியாபாரிகள் இணைந்து இந்தியாவில் முதல் வியாபார தலத்தை ஆரம்பித்தனர். பின்னர் பிரெஞ்சு புரட்சியின் சமயத்தில் ஆசியாவிலுள்ள டச்சு பகுதிகளை பிரான்ஸ் ஆக்ரமிக்க முயற்சித்த சமயத்தில் சூரத் பகுதியை கி.பி.1795ல் ஆங்கிலேயர்கள் வசம் ஒப்படைத்தனர். பின்னர் கி.பி.1818ல் மீண்டும் டச்சுக்கள் வசம் வந்தது. பின்னர் கி.பி.1824ல் நடந்த ஆங்கிலேய-டச்சு ஒப்பந்தத்தின் படி சூரத்தை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து டச்சுக்கள் தங்கள் தாய்நாட்டுக்கு கிளம்பி போனார்கள்.
கி.பி.16ம் நூற்றாண்டில் இந்த பகுதியில் வாணிகம் செய்து வந்த போர்த்துகீசியர்கள் அடுத்த 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த பகுதியில் வாணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் தங்கள் இடத்தை விட்டு இடம் பெயர்ந்தனர். பின்னர் இந்த இடத்திலிருந்து டச்சு & ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய ஆரம்பித்தனர். இதற்கிடையில் இருவரும் இணைந்தே வாணிக மையம் ஆரம்பித்தனர். மொகலாய பேரரசின் நிலையற்ற தன்மையினால் (மூன்றாம் பானிபட் போரினால் ஆப்கானிய அப்தாலி டெல்லியை கைப்பற்றி கொள்ளையடித்தும் அதற்கு முன்பிருந்தே தொடர்ச்சியான படையெடுப்புகளாலும்) சூரத்தின் வர்த்தகம் குறையவே கி.பி.1759ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் பெருமளவு குறைந்து போனது. பெரும்பாலான வர்த்தகங்கள் ஆங்கிலேயர் வசமிருந்த பாம்பாய்க்கு நகர்ந்தது. இதற்கிடையில் மூன்றாம் கர்நாடக போரில்கி.பி.1763ல் ஆங்கிலேயர்கள் பெற்ற வெற்றியினால் சூரத் நகரம் பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாக மாறியதால் டச்சு வணிகர்களும் அவர்களுக்கு கட்டுப்பட்டே சூரத்தில் வியாபாரத்தை தொடர்ந்தனர். ஆசியாவில் டச்சு குடியேற்ற பகுதிகளை பிரான்ஸ் கைப்பற்றுவதை தடுப்பதற்காக தங்களது பகுதிகளை கி.பி.1795ல் ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்தனர். பின்னர் கி.பி.1814ல் திரும்ப டச்சுகாரர்களிடமே ஒப்படைக்கப்பட்டு கி.பி.1824ல் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி கி.பி.1825ல் தங்களது குடியேற்றப் பகுதிகளை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.
கி.பி.1691ல் ஹென்ரிக் வான் ரீட் என்ற டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக இயக்குநர் கொச்சியிலிருந்து சூரத் வரும் வழியிலையே மரணமடைய அவர் சூரத்திலுள்ள டச்சு-ஆர்மெனியன் கல்லறையில் புதைக்கப்பட்டார். இந்த கல்லறை தற்போது பராமரிப்பு இன்றி நகரின் மையத்தில் சிதைவடையும் நிலையில் உள்ளது. அதே போல் ஆக்ராவில் மஹாராஜா மகாதாஜி ஷிண்டேயின் படைகளின் ஆலோசகராக இருந்த டச்சு வீரர் ஜான் வில்லம் ஹெஸ்ஸிங் ன் கல்லறை உள்ளது.
உதவிய நூல்கள் :
The Theft of India - Roy Maxholm
விக்கிபீடியா தகவல்கள்
திருநெல்வேலி சரித்திரம் - இராபர்ட் கார்டுவெல்
படங்கள் :
கூகுள் படங்கள் & திருமுத்துகுமரன்




Comments
Post a Comment