92) அன்னிய காலனியாதிக்கம் (டேனிஷ்காரர்கள்)
இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம் டேனிஷ் காலனி : (கி.பி.1620-1869)
இந்தியாவில் போர்த்துகீசிய,டச்சு கம்பெனிகள் தங்களது வியாபாரத்தை ஆரம்பித்து கொடிகட்டி பறந்த நேரத்தில் ஆங்கிலேயர்களும் அனுமதி பெற்று வியாபாரத்தை ஆரம்பித்தனர். அதற்கு அடுத்து டென்மார்க்-நார்வே (நார்வே கி.பி.1814ல் நெப்போலியன் போருக்கு பின்னர் ஸ்வீடன் நாட்டுக்கு கொடுக்கப்பட்டது) நாட்டின் மன்னர் நான்காம் கிறிஸ்டியன் என்பவரால் இந்தியாவுக்கு வணிகம் செய்ய கி.பி.1616ல் ஏற்படுத்தப்பட்டது தான் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம். இவர்கள் முதன்முதலில் வந்து இறங்கியது இன்று தரங்கம்பாடி என்றும் டிரான்கோபர் என்று அழைக்கப்படும் நகரமாகும். இந்த நகரம் கி.பி.1306ல் குலசேகர பாண்டியன் மன்னரால் ஏற்படுத்தப்பட்டு மணிவண்ணீஸ்வரமுடையார் என்ற பெயரில் சிவன் கோயிலும் கட்டப்பட்டது. இது காரைக்கால் அருகிலுள்ளது. இன்றைய சென்னை மாநகரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் தான் முன்பு டேனிஷ்களின் காலனியாக விளங்கியது. அட்மிரல் ஓவ் ஜிஜெடா என்பவரால் ஏற்படுத்தப்பட்ட முதல் டேனிஷ் காலனியாக இந்தியாவில் உதயமாகியது. இங்கு தான் பார்த்தலோமியஸ் சீகன்பால்க் முதன்முதலில் அச்சு இயந்திரத்தில் முதன்முதலாக பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழாக்கம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கி.பி.1616ல் டென்மார்க்-நார்வே இணைந்த அரசின் மன்னரான நான்காம் கிறிஸ்டியன் மிகப்பெரிய தொகையை முதலீடாக தந்து டென்மார்க் வணிகர்களால் சில டச்சு வணிகர்களின் ஆலோசனையின்படி டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி உதயமாயிற்று. கி.பி.1618ல் கோபர்ஹெகனிலிருந்து 2 கப்பல்களுடன் துணையாக ஒரு கப்பலும் பாதுகாப்புக்காக 2 போர் கப்பல்களுமாக முதலில் சிலோனுக்கு வந்தனர். அங்கிருந்த கண்டி மன்னர் அவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காததால் இந்தியாவின் தென்மேற்கு பகுதியான தரங்கம்பாடிக்கு வந்தனர். அங்கிருந்த தஞ்சாவூர் பிராந்திய கவர்னர் டேனிஷ்காரர்களுக்கு வரியின்றி வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார். மேலும் தரங்கம்பாடியில் வாணிக மையம் அமைக்கவும் கோட்டை கட்டிக்கொள்ளவும் அனுமதி அளித்ததுடன் ஆங்கிலேய,டச்சுகாரர்களுக்கு தமது பிராந்தியத்தில் வாணிகம் செய்ய தடை விதித்தார். டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் நல்ல அனுபவம் பெற்ற வணிகரான "ரோலண்ட் க்ரேபே" தரங்கம்பாடி நிர்வாக பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். அதையடுத்து "டான்ஸ்போர்ட்" என்ற பெயரில் மிகப்பெரிய கோட்டை கட்டப்பட்டது.
டென்மார்க்கிலிருந்து கி.பி.1623ல் வந்த கப்பல் கி.பி.1625ல் விலைமதிப்பற்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பியது. ஆங்கிலேயர்-டச்சுக்கள் மோதலினால் நடுநிலை வகித்த டேனிஷ்காரர்களுக்கு தஞ்சாவூர் மன்னர் நிரம்ப சலுகை கொடுத்தார். வரியின்றி வாணிகம் செய்யவும் கப்பல்களின் பாதுகாப்புக்கு தஞ்சாவூர் வீரர்களை நியமித்ததாலும் டேனிஷ்களுக்கு செலவு நிரம்ப குறைந்ததால் பொருட்களை மற்றவர்களை விட குறைவான விலைக்கே விற்று நல்ல இலாபம் சம்பாதித்தனர். டேனிஷ்காரர்கள் மசூலிப்பட்டினம், பாண்டிச்சேரி பகுதிகளிலும் வங்காளத்தில் பிப்லி பகுதியிலும் வாணிக கிடங்குகளை ஆரம்பித்தனர். நிரம்ப முதலீடு தேவைப்பட்டதாலும் அந்தநேரத்தில் ஜெர்மனியுடன் 30 ஆண்டுகால போருக்கு தயாராகி கொண்டிருந்ததால் போதிய முதலீடு கிடைக்காமல் உள்ளூர் வாணிகத்தின் மூலம் வாணிகக்கிடங்குகளை நடத்தினர். பின்னர் மெல்ல நிலைமை சீர்பட ஆரம்பித்த சமயத்தில் கி.பி.1637ல் க்ரேபே பதவி விலக புதிய இயக்குநராக வில்லியம் லெயல் டென்மார்க்கிலிருந்து கி.பி.1639ல் கிளம்பி வர அவரது கப்பல் கேனரி தீவில் மாட்டிக்கொண்டு கி.பி.1643ல் இந்தியா வந்து சேர்ந்தார். அதுவரை டச்சு வடிகரான "பேரண்ட் பெசர்ட்" நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தார்.
நிர்வாக பொறுப்புகளை கையாண்ட பெசர்ட் வில்லியம் லெயல் வந்து பொறுப்பேற்பதற்குள் தனக்கு என்று பெரும்பாலானவற்றை சுருட்டிக்கொண்டு லெயலை கூட்டிக்கொண்டு மதராஸ் மற்றும் மசூலிபட்டிணத்தில் பொருட்களை வாங்கி போர்ச்சுகல் அனுப்பலாம் என்று அவரை கூட்டிக்கொண்டு வர மசூலிப்பட்டிணத்தில் பெசர்ட் பெருமளவு கடன் வாங்கி ஊழலில் ஈடுபட்டது தெரிந்து அவரை கைது செய்ய முயல பெசர்ட் தப்பியோடினர். பின்னர் கி.பி.1644 ஜூனில் தரங்கம்பாடி வந்து பொறுப்பேற்று கோட்டையை சீர்படுத்தி வைத்தாலும் ஐரோப்பாவில் மூண்ட போரினால் கி.பி.1639-69 வரை எந்த டென்மார்க் கப்பலும் தரங்கம்பாடிக்கு வந்து பொருட்களை ஏற்றி செல்லாததால் நிதி நிலைமை சுமாராகவே இருந்தது. அந்த நேரத்தில் லெயல் வணிகர்களின் உள்வாணிகங்களை கண்டுபிடித்ததால் அவருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு அவரை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கி.பி.1648ல் மன்னர் நான்காம் கிறிஸ்டியன் மறைந்தால் அவர் மகன் இரண்டாம் பிரடெரிக் பட்டத்திற்கு வந்தார். வந்த இரண்டு வருடங்களில் கி.பி.1650ல் நிதி வருமானம் இல்லாததால் கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. ஆனாலும் காலனி அரசின் சொத்தாகவே இருந்தது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட லெயல் பின்னர் டென்மார்க் அனுப்பப்பட கோபன்ஹெகனில் நடந்த விசாரணையில் அவர் நிரபராதி என்று அறிந்தனர். அவருக்கு பின் வந்த பவுல் ஹேன்சென் கொசோர் கி.பி.1655ல் மறைந்தவுடன் எஸ்கிஸ்ட் ஆண்டர்சன் கோங்க்ஸ்பகே என்பவரை தேர்ந்தெடுக்க அவர் உள்ளூர் மக்களின் உதவியுடன் 14 ஆண்டுகள் கோட்டையை பாதுகாத்தார். பின்னர் கி.பி.1669ல் டென்மார்க் அரசு மீண்டும் வாணிக மையத்திற்கு ஆதரவு தெரிவித்து கோங்க்ஸ்பகேயை தரங்கம்பாடி வணிக வளாகத்தின் கவர்னராக்கினர். 29 ஆண்டுகள் கழித்து டேனிஷ் கப்பலை அனுப்பியதுடன் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு நிதி உதவி அளித்து நிலைமையை சீராக்கினர். இதனால் இரண்டாவது டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி கி.பி.1670ல் மீண்டும் துவங்கியது. கி.பி.1688-97 வரை நடந்த போரினால் இங்கிலாந்து மற்றும் டச்சு பொருளாதாரம் சீர்கெட்ட நிலையை நன்கு பயன்படுத்தி இந்தியாவில் நல்ல லாபம் ஈட்டினர். கி.பி.1729ல் டேனிஷ்-நார்வே மன்னர் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியை தனக்கு பணம் கடனாக தரவேண்டும் என்று வற்புறுத்தி பெற்றதுடன் அதை திரும்பவும் செலுத்தாததால் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இரண்டாவது முறையாக கி.பி.1732ல் மூடுவிழா நடத்தி பின்னர் டேனிஷ் ஏசியாடிக் நிறுவனம் என்ற பெயரில் மீண்டும் உதயமாயிற்று.
டென்மார்க்கின் மன்னர் நான்காம் பிரடெரிக் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு உட்பட்ட இடங்களில் கிறிஸ்தவத்தை பரப்ப எண்ணம் கொண்டதை டென்மார்க் லூத்தரன் சபை ஏற்றுக்கொள்ள வில்லை. பின்னர் ஜெர்மானியரான போர்த்தாமஸ் சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளூட்ச்சோ ஆகியோரை தேர்தெடுத்து ஜெர்மானிய லூத்தரன் சபை அனுப்ப இவர்கள் டென்மார்க் வந்து மன்னரின் சார்பில் கி.பி.1705 நவம்பர் 29ல் இந்தியாவுக்கு கிளம்பி வந்தனர். 7 மாத கடற் பயணத்திற்கு பின்னர் கி.பி.1706 ஜூலை 9ம் நாள் தரங்கம்பாடி வந்தடைந்தனர். வந்தவுடன் சுற்றியிருந்த தொழிலாளர்களால் போர்ச்சுக்கீசிய மொழியையும் தமிழ் மொழியையும் கற்றார். மணலில் தமிழ் எழுத்துக்களை எழுதி பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்று தேர்ந்தார். பின்னர் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் ஏற்படுத்தினார். கிறிஸ்தவ போதனைகளை சொல்லி நிறைய இந்தியர்களை மதம் மாற்ற இதனால் கவர்னராக இருந்த ஹாசியஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்தார். புதிய கிறிஸ்தவர்கள் எப்போதும் கிறிஸ்தவத்திலையே நிலைத்திருக்க எண்ணி அவர்களின் மொழியிலையே பைபிளை எழுத வேண்டும் என்று எண்ணி கி.பி.1708 அக்டோபர் 17ல் பைபிளை தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
ஏற்கனவே கத்தோலிக்கர்கள் ஆராதனையில் மொழிபெயர்த்து பயன்படுத்தும் வார்த்தைகளையும் சேர்த்து சாதாரண மக்களின் பேச்சு நடையிலான மொழிபெயர்ப்பான புதிய ஏற்பாட்டை கி.பி.1711 மார்ச் 31ல் முடித்தார். பின்னர் அந்த எழுத்துக்களுகான அச்சு இயந்திரமும் எழுத்துக்களையும் ஜெர்மனியில் இருந்த அவரது நண்பர்கள் கொடுத்து உதவ வழியில் பிரெஞ்சு படைகள் அவற்றை கைப்பற்றின. பின்னர் மதராஸ் ஆளுநரின் உதவியினால் அச்சு இயந்திரத்தையும் எழுத்துக்களையும் திரும்ப பெற்றாலும் வரும் வழியிலையே அச்சு இயந்திர முதலாளி மறைந்து விட்டதாலும் வந்திருந்த அச்சு எழுத்துக்கள் பெரியவையாக இருந்ததால் அந்த நாளில் நிலவிய பேப்பர் கட்டுப்பாட்டின் காரணமாக தரங்கம்பாடியிலையே சிறிய வடிவிலான அச்சு எழுத்துக்களை வார்தெடுத்து அச்சு இயந்திரம் உபயோகிக்க தெரிந்த டேனிஷ் படைவீரனின் உதவியால் கி.பி.1715 ஜீலை 15ம் நாள் தமிழில் முதன்முதலாக பைபிளின் புதிய ஏற்பாடு இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் அச்சடிக்கப்பட்டு வெளி வந்த பெருமைக்கு உள்ளானது. பின்னர் தாய் நாடான ஜெர்மனிக்கு புறப்பட வழியிலையே தமிழ் இலக்கண நூலையும் எழுதி முடித்து ஜெர்மனியின் ஹாலே நகரில் அதையும் அச்சிடித்து முடித்தார். பின்னர் அதே ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டு அடுத்த ஆண்டு கி.பி.1716ல் தரங்கம்பாடியில் புதுமண தம்பதிகளாய் "இறையியல் கல்லூரி"யை ஆரம்பித்தார். பின்னர் உடல்நலக்குறைவால் கி.பி.1719ல் சீகன்பால்க் மறையவே தரங்கம்பாடியில் அவரது கல்லறை கட்டப்பட்டது.
தமிழ்மொழியை பற்றிய இவரது கண்ணோட்டமானது மற்றவர்களை விட வேறுபட்டது. "மற்றவர்களை போல நானும் தமிழையும் தமிழர்களையும் தரமற்றது என்று நினைத்து இருந்தது இங்கே வந்து இவர்களிடம் பழகியதுடன் இவர்களது மொழியறிவையும் ஆழ்ந்த புலமையையும் கண்டு என் முடிவை மாற்றிக் கொண்டேன். தமிழ் உலகமொழிகளில் மிகப் பழமையானது. தமிழர்கள் பனைவோலைகளில் எழுத்தாணிகளை கொண்டு தமிழை வளர்த்தனர். தமிழ் இலக்கணம் எந்தவித தவறுகளும் இன்றி சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடற்வாணிபகத்திலும் நிர்வாகத்திலும் மிகச் சிறந்தவர்கள். இவர்களது ஆட்சி முறையும் சட்டமும் நிர்வாகமும் மிகச் சிறந்ததாக உள்ளது. வேத நூல்களில் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்களாக உள்ளனர்" என்று புகழ்ந்து கூறிய சீகன்பால்க் தமிழனாகவே மாறி தமிழ் மொழியில் பல நூல்களை எழுதி தமிழ் மண்ணிலையே உயிர் துறந்தது தான் கடைசியில் நடந்தது.
கி.பி.1732ல் மன்னர் ஆறாம் கிறிஸ்டியன் ஆசியாட்டிக் நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் சீனாவிற்கு வர்த்தகம் செய்ய 40 ஆண்டுகால வர்த்தக உரிமையை கொடுத்தார். முந்தைய நிறுவனங்கள் தொடர்ச்சியான வியாபாரத்தில் ஈடுபடாததே அவர்களின் தோல்விக்கு காரணம் என்று உணர்ந்து இந்தமுறை லாபத்தை அடையாமல் விடக்கூடாது என்று முடிவுடன் இந்தியாவிலிருந்து குறிப்பாக சோழமண்டலக் கடலிருந்தும் வங்காளத்திலிருந்தும் பருத்தி துணிகளை வாங்கி கப்பலில் அனுப்ப ஆரம்பித்தனர். கி.பி.1752-91க்கு இடைப்பட்ட காலத்தில் காலிகட் பகுதியில் இருந்து மிளகை வாங்குவதற்கு வணிக நிலையம் அமைத்தனர். கி.பி.1754 நவம்பரில் தரங்கம்பாடியில் டேனிஷ்-நார்வே கம்பெனியின் நிர்வாகத்தினர் ஒன்று கூடி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிளகு, இலவங்கப்பட்டை, கரும்பு, பருத்தி மற்றும் காபி ஆகியவற்றை பயிரிடலாம் என்று முடிவெடுத்து இங்கேயே காலனி அமைத்தனர். ஆனால் தொடர்ச்சியான மலேரியா பரவல் காரணமான கி.பி.1848ல் அதை ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டு முழுவதுமான விட்டு வெளியேறினர். கி.பி.1755 அக்டோபரில் இன்றைய வங்காளத்திலிலுள்ள செரம்பூரில் காலனி அமைத்தனர். கி.பி.1763ல் ஒரிஸாவின் பாலசோர் பகுதியில் காலனி அமைத்தனர். கி.பி.1757ல் ஏற்பட்ட பிளாசி போரின் வெற்றியினால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் அதிகமாயிற்று. மெல்ல அந்தமான் காலனியை கி.பி.1789ல் அவர்களிடம் விற்றுவிட்டனர். பின்னர் நெப்போலியனுடன் ஆங்கிலேயர்கள் நடத்திய போரில் நடுநிலை வகித்து இங்கிருந்து டென்மார்க் தலைநகருக்கு பொருட்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கத்தாலும் மெல்ல கி.பி.1839ல் செரம்பூர் காலனியையும் கி.பி.1845 தரங்கம்பாடி காலனியையும் கி.பி.1868ல் நிக்கோபார் தீவுகளையும் பிரிட்டனிடம் முழுமையாக விற்றுவிட்டு கி.பி.1869ல் தங்கள் நாடு திரும்பினர்.
உதவிய நூல்கள் :
The Theft of India - Roy Maxholm
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்






Comments
Post a Comment