93) அன்னிய காலனியாதிக்கம் (பிரெஞ்சுக்காரர்கள்)

இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம் - பிரெஞ்சு காலனி : (கி.பி.1664-1794)

போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள் இவர்களை தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்குள் வாணிகம் செய்வதற்காக நுழைந்தனர். பிரெஞ்சுக்காரர்கள் மூலமே இந்தியாவில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. இவர்கள் உள்ளே நுழையும் நேரத்தில் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலம் ஆரம்பித்து இருந்தது. ஒளரங்கசீப்பின் காலத்திற்கு பின்னர் அவருடைய மகன்கள் தங்களுக்குள் ஆட்சி அதிகாரத்திற்கு சண்டையிட ஆரம்பிக்க மெல்ல மெல்ல மொகலாயர்கள் வலுவிழக்கும் நேரத்தில் மராத்தியர்கள் வலுப்பெற ஆரம்பித்தனர். இதனால் இருவருக்கும் இடையே மோதவிட்டு தங்களது இராஜ தந்திரத்தை பிரெஞ்சுக்காரர்கள் ஆரம்பித்து வைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.


கி.பி.1604ல் ஒரு கம்பெனி தொடங்கப்பட்டது. அந்த கம்பெனிக்கு கிழக்கத்திய நாடுகளுக்கும் பிரான்சுக்கும் இடையே 15 ஆண்டுகள் வாணிகம் செய்ய ஏகபோக உரிமையை மன்னர் வழங்கினார். ஆனால் அந்த கம்பெனி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.‌ அப்படியே முடங்கிப் போனது. பின்னர் கி.பி. 1642 இல் கார்டினல் ரிச்செலியூ வேறொரு கம்பெனிக்கு நிதி உதவி வழங்கினார். மடகாஸ்கரில் நடந்த மோதலில் இந்த கம்பெனி தோல்வியை சந்தித்தது உள்ளூர் மக்கள் காலனியை கடுமையாக எதிர்த்ததால் கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. பின்னாடி இந்தியாவுடன் கிபி 1664 இல் தீவிரமான வர்த்தகத்தில் ஈடுபட ஒரு பிரெஞ்சு கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. பிரான்ஸ் மன்னன் பதினாறாம் லூயியின் நிதி அமைச்சரான ஜான் பாப்டிஸ்ட் கோல்பர்ட் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நிதி உதவி வழங்கினார். 50 ஆண்டுகளுக்கு இந்த கம்பெனிக்கு கிழக்கத்திய நாடுகளில் வாணிகம் செய்ய சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. மேலும் முதல் பத்து ஆண்டுகளில் ஏற்படும் நஷ்டம் முழுவதும் அரசாங்கமே ஈடு செய்யும் என்று சொல்லப்பட்டது. அந்த நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை அரசு வாங்கிக் கொண்டது. அதுவே இந்நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த கம்பெனி முதலில் மடகாஸ்கரில் தனது வணிகத்தை முன்னெடுத்தது. அங்கு சென்ற பிறகுதான் இந்தியாவுடன் வணிகம் செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகளை தெரிந்து கொள்ள முடிந்தது. கி.பி.1666ல் ஆறு கப்பல்கள் மடகாஸ்கர் சென்றது. அதில் 2 கப்பல்கள் அங்கிருந்து கொச்சினுக்கு கிளம்பி சென்றது. அதன் பின்னர் சூரத்துக்கு கி.பி.1668ல் சென்று அங்கு தான் இந்தியாவில் முதல் பிரெஞ்சு வாணிக கிடங்கு அமைக்கப்பட்டது. வணிக கிடங்குக்கு ஜெனரலான பிரான்சிஸ் கேரன் தான் இந்திய தலைவராக இருந்தார். அவருக்கு உதவியாக ஆர்மேனியரான மர்கரா அவன்ஷின்ஸ் இருந்தார். அவர் கோல்கொண்டாவிலும் மசூலிப்பட்டிணத்திலும் வாணிக உரிமை பெற்று கொடுத்தார். கேரன் மிளகு பொருட்கள் வாணிகத்தில் ஈடுபட சிலோனுக்கு குழுவை அனுப்பி கண்டி மன்னரிடம் காலேவிலிருந்து டச்சுக்காரர்களை விரட்ட உதவி புரிய தயார் என்று கூற அவரும் சம்மதிக்கவே கி.பி.1672ல் காலேவை பிரெஞ்சு படைகள் தாக்கினாலும் தோல்வியுற்று திரும்பினார்கள். இதனால் அங்கிருந்த பிரெஞ்சு வாணிக கிடங்கை டச்சுக்காரர்கள் கைப்பற்றிக்கொள்ளவே அங்கிருந்து கிழக்கு கடற்கரையோரம் செயிண்ட் தோம் பகுதிக்கு வந்து டச்சுக்காரர்கள் வசமிருந்த போர்த்துகீசிய கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் பிஜப்பூர் மன்னருடன் ஒரு வாணிக கிடங்கு அமைக்க ஃப்ரன்காய்ஸ் மார்ட்டினின் முயற்சி வெற்றியடையவே மதராஸ்க்கு தெற்கே 100 மைல் தொலைவில் இடம் ஒதுக்கப்படவே கி.பி.1674 ஏப்ரலில் அங்கு வாணிக கிடங்கு மற்றும் குடியேற்றம் அமைக்கவே அதுவே இன்றைய பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் நகரமானது. உள்ளூர் ஆட்சியாளர்களிடம் நல்லவிதமாக நட்பு கொண்டு பாண்டிச்சேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வரிவசூல் செய்யும் பொறுப்பையும் கோட்டையை கட்டிக் கொள்ளவும் அனுமதி பெற்றார். மார்ட்டினின் ஆட்களுக்கும் நிலம் தரப்படவே அவர்களும் வீடு கட்டி கொண்டனர். கி.பி.1693ல் 19 கப்பல்கள், 2000 வீரர்களுடன் டச்சுக்காரர்கள் வந்து பாண்டிச்சேரியை முற்றுகையிடவே மார்ட்டின் சரணடைந்து ஐரோப்பாவுக்கு சென்று விட்டார். பின்னர் கி.பி.1697ல் ரிஸ்விக் ஒப்பந்தப்படி கைப்பற்ற பகுதிகள் திருப்பி தரப்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படி பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்கள் வசம் வரவே மார்ட்டின் திரும்பவும் புதுச்சேரி வந்து சேர்ந்தார். திரும்ப வந்தவர் பாண்டிச்சேரியின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். இலாபமில்லாமல் சூரத்தில் இயங்கி வந்த வணிக கிடங்கை மூடிவிட்டு பாண்டிச்சேரியே இந்திய வாணிக தலைமையிடமாக கி.பி.1701ல் மாற்றப்பட்டு மார்ட்டினே டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். உள்ளூர் ஆட்சியாளர்களுடன் நல்ல நட்புறவை வளர்த்துக்கொண்டு பல இந்தியர்களை பாண்டிச்சேரியில் குடியமர்த்தினார். கி.பி.1706ல் அவர் மறைந்தபோது பாண்டிச்சேரி மக்கள்தொகை 40 ஆயிரம் பேராக இருந்தது. நிறுவனத்தின் மூலம் நல்ல இலாபம் வந்தாலும் அதை இராணுவத்துக்கே செலவிடவேண்டி இருந்ததால் நிதிநிலை மோசமாகவே இருந்தது. கி.பி.1714ல் 50  ஆண்டுகால வர்த்தக உரிமை முடிந்தாலும் கி.பி‌1725 வரை நீட்டிக்கப்பட்டது.  கி.பி.1720ல் "பெர்பச்சுவல் கம்பெனி ஆஃப் தி இண்டிஸ்" என்று பெயர் மாற்றம் பெற்று கி.பி.1723‌ முதல் பாண்டிச்சேரிக்கு பல கப்பல்களை அனுப்பினர். மிளகு பொருட்களுக்காக வணிக கிடங்கு அமைப்பதற்கு தலசேரியில் பிரிட்டிஷ் வாணிக கிடங்குக்கு தொலைவில் இருந்த மஹி என்னும் இடத்தை கைப்பற்றி கி.பி.1725ல் வாணிக கிடங்கை அமைத்தனர்.


கி.பி.1676ல் ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தில் வங்காள கவர்னர் ஹூக்ளி நதிப்பகுதிகளில் ஃபிரெஞ்சு காரர்கள் குடியேற அனுமதித்தார். பின்னர் கி.பி.1688ல் அந்த பகுதியை பிரெஞ்சுகாரர்களுக்கே கொடுக்க அங்கு அவர்கள் கோட்டையை கட்டி இருந்தனர். கி.பி.1701ல் மார்ட்டின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டபோது ஹூக்ளி கோட்டையும் பாண்டிச்சேரியின் கட்டுப்பாட்டில் வந்தது. கி.பி.1731ல் ஜோசஃப் ஃபிரான்ஸ்வா தூப்ளே ஹூக்ளியின் சந்திரநகருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பின்னர் அதன் வாணிகம் அதிகரிக்க ஆரம்பித்தது.  தூப்ளே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர் ஒருவரின் மகன். இள வயதிலையே அவருக்கு பாண்டிச்சேரி அரசில் முக்கியமான பதவிகள் கிடைத்தது. தனது 23வது வயதில் கி.பி.1720ல் பாண்டிச்சேரியில் ராணுவ ஜெனரல் மற்றும் கவுன்சிலர் பதவியில் அமர்ந்தார்.  கம்பெனியின் வணிக நடவடிக்கைகளுடன் தனது சொந்த வாணிகத்தையும் தீவிரப்படுத்தி நல்ல இலாபம் ஈட்டினார். இங்கே தூப்ளே இருந்த காலத்தில் அவருக்கு ஆனந்தரங்க முதலியார் என்பவர் உதவியாளராக இருந்தார். அவரது டைரிக்குறிபபுக்களின் மூலமே பின்னாட்களில் கம்பெனியின் வர்த்தகத்தையும் அங்கு நிலவிய சூழலையும் அறிய முடிந்தது. கி.பி.1726ல் கம்பெனியின் இயக்குனர்களுடனான மோதலில் தூப்ளே பதவியை இழந்தார். அவர் மீது விசாரணை நடந்தது. அதில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் கி.பி.1731ல் வங்காளத்தின் ஹூக்ளி பகுதியான சந்திரநகருக்கு இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். தூப்ளே பாண்டிச்சேரியில் சம்பாதித்த பணத்தை கப்பல் வாங்கி உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டதுடன் இந்தியர்களை அங்கு தங்கி வாணிகம் செய்ய ஊக்குவித்தார். கம்பெனி நலனுக்காகவும் கம்பெனி அனுமதி பெற்று சொந்த கணக்கிலும் இந்த வணிக செயல்பாடுகளை செய்தார். இப்படியாக கம்பெனிக்கும் பணம் சம்பாதித்துக் கொடுத்தார். தன் பங்குக்கும் பணம் சேர்த்தார். சிறிய கிடங்காக இருந்த சந்திரநகர் முக்கியமான வாணிக கிடங்காக வளர்ந்து இங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு பிரான்சுக்கு சென்றன. சில கப்பல்களில் இந்தியாவின் பிற துறைமுகங்களுக்கும் அரேபியர்களுக்கும் பொருட்களை ஏற்றிக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். பீரங்கிக்கான வெடி மருந்து தயாரிக்க உதவிய வெடியுப்பு இங்கிருந்து மிகுதியாக கொள்முதல் செய்யப்பட்டு ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. மலபார் கடற்கரை பகுதிகளில் பொருட்கள் வாங்கி கொள்ளப்பட்டது. மத்தியதரைக் கடலில் இருந்து பவழமும் வாங்கப்பட்டது. தூப்ளே சந்திரநகரில் பிரெஞ்சு வாணிகத்தை பெருக்கிய அதே நேரத்தில் பாண்டிச்சேரியில் புதிய கவர்னர் ஜெனரலான பியர்ரே அரசியல் வலிமையை பெருக்க ஆரம்பித்தார். கர்நாடகா நவாப் தோஸ்த் அலிகானுடன் நல்லுறவை உருவாக்கினார். மொகலாய நாணயங்களில் பாண்டிச்சேரி முத்திரையுடன் பிரெஞ்சுகாரர்கள் அச்சிட அனுமதி கேட்டு பெற்று நல்ல தரத்தில் நாணயங்கள் அச்சிட்டார். இதற்கிடையில் கி.பி.1739ல் கர்நாடக நவாப் மராத்திய படையெடுப்பில் கொல்லப்பட அவரின் மனைவி உறவினர்களுடன் பாண்டிச்சேரியில் அடைக்கலம் புக மராத்திய தளபதி பாண்டிச்சேரிக்கு அருகில் படைகளை குவிக்க மராத்தியர்களின் தூதுக்குழுக்களை வரவழைத்து கோட்டையையும் சுற்றி காண்பித்து மராத்திய தளபதிக்கு உயர்தர மதுபாட்டில்களை ஜெனரல் தூமாஸ் அனுப்பி வைத்தார். கோட்டையை சுற்றி பார்த்தவர்கள் அதன் பாதுகாப்பை பற்றி மராத்திய தளபதியுடன் விவாதிக்க நட்புறவுடன் பாண்டிச்சேரியை விட்டு அகன்றனர். இதனால் மொகலாய அரசர் தூமாஸ்க்கு "நவாப்" பட்டம் அளித்து 4500 குதிரைப்படை வீரர்களையும் கொடுத்து கெளரவித்தார். ஆற்காடு நவாபு மறைவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மகன் சப்தர் அலிகானுக்கும் மருமகனான சந்தா சாகிப் இருவருக்கும் இடையேயான பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சப்தர் அலிகானையும் ஆதரிக்க முடிவில் ஆங்கிலேயர் ஆதரவு பெற்ற சப்தர் அலிகான் ஆற்காடு நவாப்பானார்.


கி.பி.1741ல் தூமாஸ்க்கு பிறகு தூப்ளே பாண்டிச்சேரி வணிக மையத்தின் பிரெஞ்சு இயக்குனரானார். இந்தியாவில் ஃபிரெஞ்சு ஆட்சியை விரிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு சிற்றரசர்களுடன் நட்பு கொண்டார். இந்தியர்களை கொண்டு சிப்பாய்கள் இராணுவப் படையை உருவாக்கினார். மைசூரின் ஹைதர் அலியும் பிரெஞ்ச் படைகளுடன் நல்ல நட்புறவில் இருந்தார். பேரழகியான கவுன்சிலர் ஒருவரின் விதவை மனைவியான  வின்சென்ட் ழான் ஆல்பர்ட்டை திருமணம் செய்துகொண்டார். இந்த மனைவிக்கு ஏற்கனவே 11 குழந்தைகள் உண்டு. இவருக்கும் தூப்ளேவுக்கும் பிறந்த 12வது குழந்தை சில நாட்களிலையே இறந்து போனது. சாதாரண வணிகரின் மனைவியாக பாண்டிச்சேரியில் இருந்த ழான் தூப்ளேவின் மனைவியான பின்னர் முறைகேடுகளில் ஈடுபட்டு பணத்தை குவிக்க ஆரம்பித்தார். தனது கணவர் தூப்ளேவை தூண்டி விட்டு பாண்டிச்சேரி பிரபல சிவன் கோயிலை இடித்து தள்ளினார். இதற்கிடையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சீனாவுக்கு செல்லும் பிரெஞ்ச் கப்பல்களை கைப்பற்றவும் கர்நாடக நவாப்பிடம் உதவி கேட்க அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது நண்பர்களான பிரெஞ்சுகாரர்களை தாக்கினால் தானும் களத்தில் இறங்கவேண்டி வரும் என்று மிரட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி போரிலிருந்து பின்வாங்கியது. 

கி.பி.1746ல் மதராஸ்ஸை தூப்ளேவும் லா போர்டும் இணைந்து தாக்கி கைப்பற்றினர். லாபோர்டு பணம் பெற்று பிரிட்டிஷாரிடமே விடுவோம் என்று கூற தூப்ளே இந்தியாவில் ஆங்கிலேயர் துரத்தி அடிக்கபடவேண்டும் என்று கூற கர்நாடக நவாப் தன்னிடம் ஒப்படைக்க கூற அப்படியே செய்வதாக கூறிய தூப்ளே ஒரு மாதமாகியும் ஒப்படைக்காததால் நவாப் தன் மகன் மஹ்ஃபஸ்கான் தலைமையில் படையை அனுப்பினார். அந்த படையை தூப்ளேவின் தளபதி பராடிஸ் சிறிய படையுடன் விரட்டியடித்து வெற்றி பெற்றார். இதுவே இந்தியாவில் நவீன சிறிய நேர்த்தியான படைகள் பெரும் இந்திய படைகளை வெல்லமுடியும் என்பதை ஐரோப்பியர்களுக்கு கோடிட்டு காட்டியது. இது முதலே ஜரோப்பியர்கள் தங்கள் ஆயுத பலத்தால் இந்தியாவை ஆக்ரமிக்க ஆரம்பித்தனர். கி.பி.1748ல் ஆங்கிலேயர்கள் பாண்டிச்சேரி மீது தாக்குதல் நடத்தியதில் தூப்ளேவின் தளபதி பராடிஸ் கொல்லப்பட தூப்ளேவே களத்தில் இறங்கி ஆங்கிலேயர்களை விரட்டியடித்தார்.

கி.பி.1754ல் இராபர்ட் கிளைவ்வால் பிரெஞ்ச் படைகள் தோற்கடிக்கப்பட்ட பின்  பிரான்ஸ்-பிரிட்டன் நட்புறவு ஒப்பந்தம் காரணமாக மோதல்கள் நிறுத்தப்பட்டவுடன் பிரான்ஸ் அரசு தூப்ளேவை திரும்ப அழைத்தது. அவரின் மீது கடன் வழக்குகள் நடந்தது. தன் கனவுகளை நிறைவேற்றி கொள்ள கம்பெனிக்கு நிறைய கடன் கொடுத்திருந்தார். சிலரிடம் கடனும் பட்டிருந்தார். அந்த கடன்களை உரியவர்கள் நீதிமன்றத்தில் முறையிடும் போது கம்பெனி இவருக்கு உதவவில்லை. ழான்னை பிரான்ஸ் வரவேண்டாம் என்று தடுத்தும் அவரும் உடன் சென்றார். பிரான்ஸில் வழக்குகளால் வறுமையில் வாடினார். பாண்டிச்சேரி திரும்ப வேண்டும் என்று எண்ணிய ழான் அந்த ஆசை நிறைவேறாமலையே கி.பி.1756ல் தனது 50வது வயதில் காலமானார். வறிய நிலையில் தூப்ளே கி.பி.1763 நவம்பர் 10ல் மரணமடைந்தார்.  இவர் காலத்திய நிகழ்வுகள் உரை பெயர்ப்பாளராகவும் தூப்ளேவின் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி குறிப்புகள் மூலமாகவும் அறிய முடிகிறது.


கி.பி.1736-1761 வரையிலான நிகழ்வுகளை நாட்குறிப்புகளாக எழுதியுள்ளார். கி.பி.1751ல் 72 கள்ளர் நாடுகளுக்கு பிரெஞ்ச் அரசை ஆதரிக்கவேண்டும் என்று எழுதிய நாள்குறிப்புகளும் உள்ளது.

ஆங்கிலேயர்களின் போட்டிகளினால் முக்கிய பகுதிகளை பிரெஞ்சு கம்பெனி இழந்தது. நிறுவனத்தால் தனது நிதி நிலைமையை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. கி.பி.1769ல் பதினாறாம் லூயி அரசாணை வெளியிட்டு பங்குகள் வைத்திருப்பவர்கள் முதலீடுகளை திரும்ப பெற வலியுறுத்தினார். அதன்படி கி.பி.1785ல் நிறுவனம் மறுபடியும் சீரமைக்கப்பட்டது. கி.பி.1790ல் பிரெஞ்சு புரட்சியின் விளைவாக எல்லோரும் வர்த்தகம் புரிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. கடைசியில் கி.பி.1794ல் நிறுவனம் மூடுவிழா கண்டது. ஆனால் கி.பி.1954வரை பாண்டிச்சேரி மற்றும் சந்தன்நகர் பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி.1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 7 ஆண்டுகள் கழித்தே இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

உதவிய நூல்கள் :

The Theft of India - Roy Maxholm

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு. இராமசுவாமி

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு