94) அன்னிய காலனியாதிக்கம் (ஆங்கிலேயர்கள்) - பகுதி 1

இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம் - பிரிட்டிஷ் காலனியாதிக்கம்

வர்த்தகத்தில் ஆரம்பித்து போர் மற்றும் ஆதிக்கம் :

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி : (கி.பி.1600-1774)

இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்காக கி.பி.1600ல் பிரபல இங்கிலாந்து வணிகர் தாமஸ் ஸ்மைதி ஆரம்பித்த கம்பெனி அந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இங்கிலாந்து மகாராணியால் ஒப்புதல் வழங்கப்பட்டது . பின்னர் வியாபாரிகள் அனைவருடன் கூட்டு சேர்ந்து பங்கு நிறுவனமாக உதயமாயிற்று. இந்த கம்பெனிக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு இருந்தது. அதற்கு முன்னரே கி.பி.1583ல் பிரிட்டிஷ் மகாராணி "ஜான் நியூபெரி" என்ற வணிகரை அக்பரின் ஆட்சியிலையே தூது அனுப்ப அந்த முயற்சி தோல்வியிலையே முடிந்தது. பின்னர் கி.பி.1600ல் பிரிட்டிஷ் மகாராணி மீண்டும் "ஜான் மில்டன் ஹால்" என்பவரை தூதுவராக அனுப்பியும் அந்த முயற்சியும் பலனில்லாமல் போயிற்று.  பின்னர் கி.பி.1608ல் ஹாக்கின்ஸ் என்பவர் ஜஹாங்கீரின் அனுமதியை வேண்டி அவர் மறுக்கவே பின்னர் கி.பி.1616ல் சர் தாமஸ் ரோ என்பவர் பிரிட்டிஷ் அரசியின் தூதுவராக வந்து ஜஹாங்கீரிடம் சூரத்தில் வாணிக மையம் அமைக்க ஆதரவு பெற்றார்.



சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரின் பலவீனத்தை அறிந்து கொண்டு உயர்தர ஐரோப்பிய மது வகைகளை அவருக்கு அளித்து நட்பு பூண்டார். இருவரும் மாலை வேளைகளில் ஒன்றாக மது அருந்துவதும் வழக்கமாயிற்று. தாமஸ் ரே குறிப்புகளின் படி தினமும் 20-30 அவுன்ஸ்களாவது மது அருந்துவது ஜஹாங்கீரின் வழக்கமாக இருந்ததாகவும் நல்ல காரமான நாட்டு சரக்கு முதற்கொண்டு எதையும் விட்டு வைத்ததில்லை என்றும் மதுவோடு அபினையும் எடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். மெல்ல மெல்ல இந்திய மன்னர்களின் உட்பூசல்களை கண்டவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து மெல்ல மெல்ல தங்கள் கைப்பாவையாக மாற்றிக்கொண்டு இந்தியாவை சுரண்ட ஆரம்பித்தனர். இதற்கு கி.பி.1757ல் ஆங்கிலேயர்கள் வென்ற பிளாசிப்போரே முதல் சுழியை இட்டது. மெல்ல மெல்ல மொத்த இந்தியாவையும் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்தனர். அதற்கு கி.பி.1757-59களில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் யுத்தமும் ஒரு காரணமாக அமைந்தது. அந்த போரில் ஆப்கானிய அப்தாலி மொகலாயர்கள் மற்றும் மராத்தியர்களின் வலிமையை குறைந்ததும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை மராட்டியர்கள் மற்றும் ஏற்கனவே வீழ்ந்து கொண்டிருந்த மொகலாய பேரரசின் மீதும் நிலைநாட்டி ஒட்டு மொத்தமாக இந்தியாவை விழுங்க ஆரம்பித்தனர். ஒரு கம்பெனி ஆட்சி நடத்துமா எப்படி? என்று செயலாற்றி காட்டினார்கள். மெல்ல மெல்ல அவர்களின் நடவடிக்கைகளின் விளைவாக மக்களும் பாதிக்கப்பட மக்களுக்குள் எதிர்ப்பு உணர்வு வர கி.பி. 1857ல் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியின் காரணமாக கி.பி.1858 நவம்பர் 1முதல் பிரிட்டிஷ் அரசின் காலனி நாடுகளுள் இந்தியாவும் ஒன்றானது. அன்றிலிருந்து கம்பெனி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு ஆங்கிலேய அரசின் வைஸ்சிராய்கள் மேற்பார்வையில் அந்நிய ஆட்சி ஏற்ப்பட்டது. மெல்ல மெல்ல கம்பெனிக்குள் ஏற்பட்ட ஊழல்கள்/சுரண்டல்களால் கம்பெனி கி.பி.1874ல் மூடுவிழா நடத்தியது. இந்தியாவின் பரப்பை விட 20 மடங்கு குறைந்த அளவு பரப்பளவு உடைய பிரிட்டன் இந்தியாவை அடிமைப்படுத்தி சுரண்டியது தான் வேதனை. ஏன் நம்மால் அவர்களை எதிர்க்க முடியவில்லை?

ஆரம்ப ஆண்டுகளில் ஆசியாவின் மற்ற பகுதிகளில் பயணம் செய்து பின்னர் கி.பி.1608 ஆகஸ்டில் சூரத் துறைமுகத்தில் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் தனது கப்பலை நிறுத்தி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வருகையை அறிவித்து அந்த நேரத்தில் அக்பர் மரணமடைந்து ஜஹாங்கிர் பேரரசராக ஆன நேரத்தில் அவரை சந்திக்க ஆக்ரா சென்றும் அவருடன் நல்லமுறையில் நட்பாக இருந்தாலும் வணிகத்திற்கான அனுமதியை பெற இயலவில்லை. பேரரசர் அனுமதி வழங்காததற்கு அப்போது வணிகம் செய்து வந்து வந்த போர்த்துகீசிய டச்சு வணிகர்கள் அரசரிடம் தவறாக சொல்லியது தான் காரணமாக சொல்லப்பட்டாலும் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இரண்டு வருடங்கள் ஆக்ராவில் தங்கி வாணிக அனுமதியை பெறாமலையே கி.பி.1610ல் இங்கிலாந்து திரும்பினார். கி.பி.1612 செப்டம்பரில் தாமஸ் பெஸ்ட் சூர்த்தில்  வந்திறங்க அவருக்கு தற்காலிக வாணிக அனுமதி தரப்பட்டது. போர்த்துகீசியர்கள் நங்கூரமிட்ட இங்கிலாந்து கப்பல்களை தாக்க இங்கிலாந்து கப்பல்கள் திருப்பி பதில் தாக்குதல் நடத்தி 3 போர்த்துகீசிய கப்பல்களை மூழ்கடித்தது. கி.பி.1613 ஜனவரி 7ல் ஜஹாங்கீர் இங்கிலாந்தினருக்கு சூரத்தில் வாணிகம் செய்யவும் கோட்டை கட்டிக்கொள்ளவும் அனுமதி அளித்தார். இங்கிலாந்து கப்பல்கள் போர்த்துகீசியர்களை தாக்கியதால் ஜஹாங்கீரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆங்கிலேயருக்கு அனுமதியை நிறுத்தி வைத்தனர். பின்னர் கி.பி.1615ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சர் தாமஸ் ரோ ஆக்ராவை அடைந்து ஜஹாங்கீரின் பலவீனத்தை அறிந்து அவருக்கு உயர்தரமான ஐரோப்பிய மது வகைகளை அன்பளிப்பாக கொடுத்தார். மெல்ல மெல்ல ஜஹாங்கீருடன் மாலை வேளைகளில் மது அருந்தும் அளவுக்கு நல்ல நட்புறவு கொண்டார். ஆனாலும் ஜஹாங்கீர் அவருக்கு வணிக மையம் அமைக்கும் உரிமையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். முடிவில் ஒரு வருடத்திற்கு பிறகு கி.பி.1616ல் சூரத்தில் வாணிக மையம் அமைக்க அனுமதியளித்தார். அதே நேரத்தில் சென்னையிலும் வாணிக மையம் விஜயநகர மன்னரான ஸ்ரீரங்கதேவ ராயர் அனுமதி பெற்று ஆரம்பித்தனர். மூன்று ஆண்டுகள் இருந்துவிட்டு பின்னர் இங்கிலாந்து திரும்பினார். கி.பி.1620ல் பாரசீகத்தின் ஏற்றுமதி முழுவதையும் ஏகபோக உரிமை கொண்டாட முயன்ற போர்த்துகீசியர்கள் பாரசீகத்தின் ஓர்முஸ் தீவை கைப்பற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் பாரசீகர்களுடன் இணைந்து தீவை மீட்டனர். அதன் பின்னரும் போர்த்துகீசிய டச்சு படைகளுடன் சிறு சிறு மோதல்களுக்கு பின்னர் கி.பி.1633ல் போர்த்துகீசியர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோவா உள்ளிட்ட பல போர்த்துகீசிய வாணிக மையங்களை ஆங்கிலேயருக்கு அனுமதி அளித்தனர். வாணிகத்தை விரிவுபடுத்தலாம் என்ற நேரத்தில் இந்தியாவில் மேற்கு பகுதிகளில் பருவமழை புயல் வெள்ளத்தில் அனைத்து விளைச்சலும் நீரில் மூழ்கி போயின. காலரா டைஃபாய்டு காய்ச்சலும் பெருமளவில் பரவியது. சூரத் தெருக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்ததாக அந்த நேரத்தில் இங்கு கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்ய வந்த பீட்டர் மாண்டி தனது குறிப்புகளில் எழுதியுள்ளார். இதற்கிடையில் கி.பி.1635ல் முதலாம் சார்லஸ் மன்னர் சர் வில்லியம் கோர்ட்டின் தலைமையிலான இன்னொரு நிறுவனத்திற்கும் வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார். மன்னரும் அதில் 10 ஆயிரம் பவுண்ட்கள் முதலீடு செய்திருந்தார். அந்த கம்பெனியின் கப்பல்கள் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களை கொள்ளையடித்ததை அறிந்து அந்த கப்பலை வளைத்து பிடித்து பொருட்களை மீட்டனர். பின்னர் தி கோர்ட்டன் அசோசியேஷன் கி.பி.1636ல் இந்தியாவை நோக்கி ஜான் வெட்டெல் என்பவரின் தலைமையில் கோவாவில் வந்தது. அதில் முன்பு கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்த பீட்டர் மாண்டியும் ஒருவர். கோவாவை சுற்றி பார்த்து அதன் செழுமையை கண்டு வியந்தார். கி.பி.1637ல் மலபார் கடற்கரையோரத்தில் கோவாவுக்கும் மங்களூருக்கும் இடையில் இருந்த பத்கல் பகுதியில் வாணிக மையம் அமைக்க இக்கெரிக்கு பயணம் செய்து மன்னரிடம் அனுமதி பெற்றனர். கி.பி.1639ல் பத்கல் மன்னர் போர்த்துகீசிய நெருக்கடியினால் கோர்ட்டனின் நிறுவனத்திற்கு தந்த வர்த்தக உரிமையை ரத்து செய்தார். இந்த நிறுவனத்தின் கப்பல்கள் இரண்டு மூழ்கியதாலும் பெரும் நஷ்டத்தின் காரணமாக கி.பி.1649ல் கோர்ட்டன் நிறுவனம் கிழக்கிந்திய கம்பெனியுடன் தன்னை இணைத்துக் கொண்டது. ஒளரங்கசீப்பிற்கு பிறகு வாரிசு பிரச்சினையின் போது பரூஃக்ஷியார் ஆட்சிக்கு வந்த புதிதில் அவருக்கு ஏற்பட்ட விரைவீக்கத்திற்கு ஆங்கில மருத்துவர்‌ மருத்துவம்  அளித்து குணப்படுத்தினாலும் சூரத்தில் தடையில்லா வணிகம் செய்ய அனுமதி வழங்க தாமதப்படுத்த ஆங்கிலேயர்கள் தாங்கள் சூரத்தை விட்டு வெளியேறுவதாக கூற மொகலாய அரசுக்கு வரும் வருவாய்யை இழக்க வேண்டாம் என்று பரூஃக்ஷியார் ஆங்கிலேயர்களுக்கு சூரத் நகரில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையை பத்திரத்தில் எழுதி கொடுத்தார்.

கி.பி.1630-40களில் சந்திரகிரி மன்னரிடம் இருந்து சென்னையில் கடற்கரை ஓரத்தில் இடம் வாங்கினார்கள். அந்த இடத்தில் ஒரு துறைமுகத்தையும் கோட்டை ஒன்றையும் கட்ட ஆரம்பித்து கி.பி.1640ம் ஆண்டு ஏப்ரல் 23 புனித ஜார்ஜ் நினைவு தினத்தன்று கட்டி முடிக்கப்பட்டதால் கோட்டைக்கு "புனித ஜார்ஜ் கோட்டை" என்றே பெயர் வைத்தனர்.


கோட்டையை சுற்றி சிறு நகரமாக ஜார்ஜ் டவுன் உருவாக மெல்ல மெல்ல இன்றைய சென்னை உருவாக ஆரம்பித்தது. கோட்டைக்கு உள்ளே ஒரு பெரிய சர்ச் கட்டப்பட்டது. கோட்டைக்கு உள்ளே இருந்த காலனி "ஒயிட் டவுன்" என்றும் கோட்டைக்கு வெளியே இருந்த காலனி "ப்ளாக் டவுன் (Black Town)" என்றும் வழங்கப்பட்டது. அங்கிருந்து ஆற்காடு, ஸ்ரீரங்கபட்டினம் ஆகிய இடங்களுக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. கோட்டையை கட்டிய பிரான்ஸிஸ் டே மலிவாக பொருட்களை கிடைக்கும் பருவத்தில் வாங்கி கோட்டையில் பாதுகாப்பாக பண்டக சாலையில் வைத்து பருவக்காற்று சாதகமாக வீசும்போது சரக்குகளை கப்பலில் ஏற்று அனுப்பினார். அதன்பிறகே கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர்களுக்கு கோட்டையின் அவசியமும் புரிய வந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பு பெற கி.பி.1642ல் முதன்முறையாக இந்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கொண்ட இராணுவப்படையை சென்னையில் தான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பித்தது. வியாபாரம் பெருக பெருக புலிக்காட், பாண்டம், மசூலிப்பட்டினம் ஆகிய பகுதிகளின் நிர்வாகமும் ஜார்ஜ் கோட்டையிலிருந்து நடந்ததால் முகவர் என்ற பதவி சரிப்படாது என்று கி.பி.1652 முதல் பிரஸிடென்ஸி நிலைக்கு உயர்த்தப்பட்டு ஸர் ஆரான் பேக்கர் முதல் பிரஸிடென்ட்டாக நியமிக்கப்பட்டார். 

கி.பி.1750களில் கர்நாடகா நவாப்பாக சந்தா சாகிப்பும் முகமதுதலியும் போட்டியிட்டு தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். ஆங்கிலேயர்கள் ஆதரித்த முகமதுதலியின் கை ஓங்கியது. இவர்களுக்கு இடையே சண்டை நடைபெற்றதால் தமிழக பாளையக்காரர்கள் இவர்களுக்கு வரி கட்டுவதை நிறுத்தி தங்களை சுதந்திர அரசு என்று அறிவித்து கொண்டனர்.  இதனால் வரிவசூலிப்பதை ஆங்கிலேயர்கள் வசம் முகமதுதலி ஒப்படைக்க அவர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். எட்டயப்புரம் மன்னராக இருந்த மதுரை முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தனது தளபதி அழகுமுத்துகோன் வீரத்தின் மீது இருந்த நம்பிக்கையால் எதிர்க்க ஆங்கிலேயருடன் போரிட்டு தோற்று ஒளிந்து கொள்ள அவரது தம்பி ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் கொண்டு அழகுமுத்துக்கோன் இருக்குமிடத்தை காட்டிக்கொடுக்க ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த 247 வீரர்களின் வலது கை வெட்டப்பட்டது.


மேலும் அழகுமுத்துக்கோன் மற்றும் 6 வீரர்களை பீரங்கி முனையில் வைத்து சுட்டு வீழ்த்தினார்கள். கி.பி.1750ல் இராபர்ட் கிளைவ் திருச்சியில் யூனியன் ஜாக் கொடியை ஏற்றி வைத்து பாளையக்காரர்கள் தன்னை வந்து சந்திக்க வருமாறு மிரட்டலான அழைப்பு  விடுக்க பூலித்தேவன் திருச்சிக்கு படையெடுத்து வந்து ஆங்கிலேயரை தோற்கடித்து விரட்டினார். பின்னர் மாவீரன் பூலித்தேவனை  எதிர்க்க தளபதி ஹெரான் என்பவனை அனுப்ப அவர் பணம் வேண்டாம். நெல்லையாவது வரியாக செலுத்துங்கள் என்று கூற நெல்லையும் எதற்கு வரியாக கட்டணும் என்று மறுத்ததால் பூலித்தேவன் ஊருக்கு "நெற்கட்டான்செவல்" என்ற பெயர் வந்ததாக கும்மிபாட்டு செய்திகள் கூறுகின்றன.

ஹெரான் பூலித்தேவனிடம் போரில் தோற்று திரும்பினர். பூலித்தேவனின் தளபதியான ஒண்டிவீரன் ஒருமுறை போரில் ஆங்கிலேயர்கள் முகாமுக்குள் தனியாக நுழைந்து பீரங்கிகளை இடம் மாற்றி வைத்து அவர்களை அவர்களே தாக்குதல் நடத்துமாறு வைத்து குழப்பம் செய்த நிகழ்வில் தனது வலது கையை இழந்தார். கையை இழந்தாலும் ஆங்கில முகாம்மை ஒண்டிவீரனாக தனது பேருக்கு ஏற்ப சிதைத்து விட்டு வந்தார்.

பூலித்தேவன் அவரை கட்டி தழுவி உனக்கு பொற்கையே செய்து போடுகிறேன் நண்பா என்று உறுதியளித்தார். கடைசியில் கான்சாகிப் (என்ற) மருதநாயகத்தை ஆங்கிலேயர்கள் அனுப்பினார்கள். கான்சாகிப் ஜரோப்பிய போர்கலையில் வல்லவர். அவரிடம் தோற்று போனார். இந்த போரில் பூலித்தேவன் தளபதியான வெண்ணிகாலாடியின் வீரம் போற்றுதலுக்குரியது. அவர் மறைந்த இடம் "காலாடிமேடு" என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இதே கான்சாகிப் மருதநாயகம் மதுரையை தன்னிச்சையாக ஆட்சி புரிய தலைப்பட ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியினால் கான்சாகிப்பை பிடித்து தூக்கிலிட்டு கொன்றனர். மதுரை சம்மட்டிபுரம் தர்காவில் கான்சாகிப் சமாதி உள்ளது.


பின்னர் கான்சாகிப் மறைந்தது டன் கி.பி.1767ல் டொனால்டு காம்ப்பெல் என்ற தளபதியை அனுப்ப பூலித்தேவர் தோற்று சங்கரன்கோவில் கோயிலுக்கு உள்ளே சென்றவர் திரும்ப வரவேயில்லை. இன்றும் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோயிலில் பூலித்தேவன் மறைந்த இடம் என்று அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவ்வாறாக 17 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பூலித்தேவன் மறைவுக்கு பின்னர் ஒண்டிவீரன் அவர் மகன்களுக்கு சாதகமாக நின்று போரிட்டு ஆங்கிலேயர்களை எல்லா போர்களிலும் வென்றவர் கி.பி.1771ல் மறைந்தார். 

கி.பி.1760ல் ஏற்பட்ட வந்தவாசி போரின் முடிவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. அந்த நேரத்தில் மைசூரில் கிருஷ்ணராஜ உடையாரின் படையில் சாதாரண வீரனாக இருந்த ஹைதர் அலி மெல்ல மெல்ல தளபதியாக உயர்ந்து உடையார் மன்னனை ஓரங்கட்டி தன்னையே மைசூரின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். இவரது வெற்றியினால் மிரண்ட ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் கூட்டு சேர்ந்தனர். ஆங்கிலேயரை விரட்ட மதராஸ் நோக்கி படையெடுக்க அவர்கள் ஹைதர் அலியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தின் படி நடக்க வில்லை. இந்த நேரத்தில் பிரான்ஸ்க்கு சொந்தமான மாஹிம்மை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற ஹைதர் அலி ஆற்காட்டை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றினார். அந்த நேரத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் ஸர் அயர் கூட் என்ற தளபதியின் தலைமையில் படையை அனுப்பி சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் கி.பி.1781ல் ஹைதர் அலியை தோற்கடித்தார். இதற்கிடையில் தண்டுவட புற்றுநோயினால் ஹைதர் அலி அவதியுற்ற தந்தையின் தோல்விக்கு மகன் திப்புசுல்தான் கர்னல் பிரைத் ஒயிட் தலைமையில் வந்த படையை  தோற்கடித்து விரட்டினார். இதனால் ஆங்கிலேயர் தங்களது கவனத்தை டச்சுக்காரர்கள் மேல் திருப்பி அவர்கள் வசமிருந்த நாகப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், புலிக்காடு ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதற்கிடையில் ஹைதர் அலி கி.பி.1783ல் புற்றுநோயால் இறக்க திப்புசுல்தான் மைசூர் மன்னராக முடி சூட ஃபிரெஞ்சுகாரர்கள் அவனுக்கு உதவியாக இருந்தனர். கி.பி.1787ல் பிரான்ஸ்,பெர்ஷியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு ஆங்கிலேயர்களை விரட்ட உதவி கேட்டு கடிதம் அனுப்ப பிரான்ஸ் மட்டும் ஆயுத உதவிகளையும் படைவீரர்களுக்கு பயிற்சியும் அளித்தது. அதி நவீன ஆயுதங்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டினார். அதி நவீன ராக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் தயாரித்து வைத்து அதை பயன்படுத்த படைவீரர்களையும் தயார்படுத்தி வைத்திருந்தார். இதனால் திப்புவின் ராக்கெட்டை கண்ட ஆங்கிலேயர்கள் மிரண்டாலும் மெல்ல சூழ்ச்சி செய்து கி.பி.1799ல் நடந்த ஸ்ரீரங்கப்பட்டினபபோரில் திப்புவை வீழ்த்தினார்கள். 

சூரத், சென்னை, மசூலிப்பட்டினம் ஆகியவற்றை அடுத்து "பம்பாய் ஏழு தீவுகள்"பகுதியில் வர்த்தகத்தை ஆரம்பித்தனர். போர்ச்சுகல் வசம் இருந்த "பம்பாய் ஏழு தீவுகள்" பகுதி போர்ச்சுகல் இளவரசி கேத்தரீனை பிரிட்டிஷ் இளவரசர் இரண்டாம் சார்லஸ் திருமணம் செய்ததால் கல்யாண சீதனமாக ஆங்கிலேயர் வசம் வந்தது. கி.பி.1668 மார்ச் 27ல் இரண்டாம் சார்லஸ் கிழக்கிந்திய கம்பெனிக்கு பம்பாய் தீவுகளை குத்தகைக்கு கொடுத்தார். ஏழு தீவுகளில் ஒன்றான வொர்லியில் கோட்டை ஒன்றை கட்டி கண்காணித்தனர். இந்த நேரத்தில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் மொகலாய அரசை எதிர்த்து கடற்புறங்களில் தங்கள் வலிமையை மேமபடுத்தினார்கள். இதனால் ஜான்சிரா சித்திகளின் உதவியை நாடினார். பம்பாய் துறைமுகத்தின் வாசலில் இருந்த அந்தேரி தீவுகளை மராத்தியர்கள் கைப்பற்றினார்கள். சித்திகள் கிழக்கிந்திய கம்பெனியினரை அணுகி அவர்களை விரட்ட கேட்க அவ்வாறே மராத்தியர்களை விரட்டி அந்தேரி தீவினை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது. சூரத்தில் பல பிரச்சினைகள் இருந்ததால் கி.பி.1687ல் தனது தலைமையகத்தை பம்பாய்க்கு மாற்றியது. கி.பி.1689ல் மொகலாய தளபதி யாகூத்கான் ஒளரங்கசீப் ஆணைப்படி பம்பாய்யை முற்றுகையிட அந்த நேரத்தில் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த "சர் ஜான் சைல்ட்" ஒளரங்கசீப்பிடம் தாக்குதலை நிறுத்த பணம் அளித்தார். பின்னர் முற்றுகை விலக்கி கொள்ளப்பட்டது. கி.பி.1691ல் சூரத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கப்பல் டேனிஷ் கொள்ளையர்களால் பிடிக்கப்பட ஒளரங்கசீப் ஆங்கிலேயர்களுக்கு வாணிக தடை விதித்தார். பின்னர் தவறு அவர்கள் பக்கம் இல்லை என்றவுடன் தடை விலக்கப்பட்டது. ஆங்கில கடற்கொள்ளையரான ஹென்ரி எவ்ரி கி.பி.1694ல் ஒளரங்கசீப்புக்கு சொந்தமான கப்பலை கொள்ளையடித்தார். ஆத்திரமடைந்த ஒளரங்கசீப் ஜான்ஜுரா சித்திகளை கம்பெனியினருக்கு எதிராக பம்பாயின் கம்பெனி கிளை மீது தாக்குதல் நடத்தியது. சூரத்தில் இருந்த அதன் பணியாளர்கள் சிறைபிடிக்கப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தனர். 

கி.பி.1642ல் அரண்மனையில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஷாஜஹானின் மூத்த மகளான ஜஹனாரா பேகம் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டு ஆழமாக வடு காயங்களாக முகம் ஆனது. அதை கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவரான டாக்டர் காப்ரியேல் பெளட்டன் தனது மருத்துவத்தால் சரிப்படுத்த மருத்துவரின் விருப்பப்படி ஆங்கிலேயர்களுக்கு வங்காளத்தில் வியாபாரம் செய்ய ஹீக்ளி நதியை ஒட்டி தொழிற்சாலையை கட்டி கொள்ள ஷாஜஹான் உரிமம் அளித்தார். இந்த நிகழ்வு அரபு அடிமை யாகூப் பச்சிலை மருத்துவத்தால் குணமானது என்றும் கூறுவர் . பின்னர் கி.பி.1690ல் கம்பெனி கதநூதி, கோவிந்த்பூர் மற்றும் காளிகட்டம் என்ற 3 கிராமங்களை வாங்கியது.  இதுவே பின்னாளில் கல்கத்தா மாநகரமானது. சென்னையை போலவே இங்கும் ஒரு கோட்டையை கட்டி அதற்கு "வில்லியம் கோட்டை" என்று பெயர் வைத்தனர். இந்த கோட்டையில் இருந்து தான் முதல் கம்பெனி கவர்னர் ஜெனரலாக இராபர்ட் கிளைவ் ஆட்சி நடத்த நியமிக்கப்பட்டார். கி.பி.1740ல் வங்காளத்தில் நவாப்பாக ஆட்சிக்கு வந்த "அலிவர்த்திகான்" மறைவுக்கு பின்னர் அவரது மகளின் மகனான "சிராஜ் உத்தவுலத்"கி.பி.1756ல் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு ஆங்கில கம்பெனியை பிடிக்காமல் போகவே பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவு இருந்ததால் வில்லியம் கோட்டை மீது படையெடுத்தார். ஆனால் அவரது தளபதி மீர்ஜாபர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியுடன் ரகசிய நட்புறவு வைத்திருந்தார். இதற்கிடையில்  கம்பெனியின் அதிகாரிகளை பிடித்து ஒரு சிறிய அறையில் சிராஜ் உத்தவுலத் அடைத்து வைக்க தண்ணீரும் காற்றும் இல்லாமல் மூச்சுதிணறியே 40 பேர் இறந்து போக இராபர்ட் கிளைவ் நவாப் சிராஜ் உத்தவுலத் மீது போர்தெடுத்தார். நவாப்புக்கு ஃபிரெஞ்சு படைகள் உதவிக்கு வந்தன. வங்கதேசத்தில் உள்ள முர்ஷிதாபாத் அருகிலுள்ள பிளாசி என்ற கிராமத்தில் இரு படைகளும் மோதின. இதுவே "பிளாசி யுத்தம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நவாப் சிராஜ்ஜின் தளபதியான மீர்ஜாபருக்கு பீஹாரையும் உத் பகுதியையும் தருவதாக இராபர்ட் கிளைவ் வாக்குறுதி அளித்தார். நவாப் படைகளில் 50000 பேர்கள் இருந்தாலும் துப்பாக்கி வீரர்கள் வெறும் 40 பேர் தான் இருந்தனர். ஆங்கிலேயரிடம் 10000 பேர்களே இருந்தாலும் அவர்களிடம் கனரக ஆயுதங்கள் இருந்ததாலும் மீர்ஜாபரின் துரோகத்தாலும் கி.பி.1757 ஜூலை 23 அன்று காலை 7 மணிக்கு துவங்கிய யுத்தம் அடுத்த சில மணி நேரங்களிலையே ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக முடிய சிராஜ் உத்தவுலத் போர்களத்தில் இருந்து தப்பி ஒடவே பின்னர் மீர்ஜாபரின் மகனால் பிடிக்கப்பட்டு மரண தண்டனை அளித்து கொல்லப்பட்டார்.


கி.பி.1757ல் வங்கதேசம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது.  முதன்முதலாக அதுவரை வர்த்தகமே செய்து வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆட்சிக்கு வந்தது.  இதுவே இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி மெல்ல மெல்ல தனது ஆக்டோபஸ் கரங்களை மெல்ல விரித்து பரந்துபட்ட இந்திய பகுதிகளை (அப்போது ஒவ்வொரு சிறு பகுதியும் ஒவ்வொரு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது) வளைக்க ஆரம்பித்தது. அவ்வாறாக பரந்துபட்ட இந்தியாவை (இன்றைய இந்தியா, பாகிஸ்தான், ஆப்கான்,வங்காளதேசம், ஸ்ரீலங்கா பகுதிகள்) கைப்பற்ற பிளாசி போரே தளம் அமைத்து கொடுத்தது. இங்கிலாந்துக்கு திரும்பிய கிளைவ் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரின் எதிரிகள் அவரின் மீது பழிசுமர்த்தி மக்களவையில் வழக்கு தொடர்ந்ததால் மக்களவை உறுப்பினருக்கு உரிய கவுரவம் அளிக்கப்படவில்லை. வழக்கை திறம்பட எதிர்கொண்டு வாதாடி வழக்கிலிருந்து மீண்டார். இதனால் அவரின் உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டது.

பிளாசிப்போரை வெற்றிகரமாக முடித்து ஆட்சியை ஆரம்பித்து வைத்த இராபர்ட் கிளைவ் மனச்சிதைவு நோயினால் "ஓபியம்" போதையை அதிகமாக உட்கொண்டு பேனா கத்தியினால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு கி.பி.1765ல் இறந்தார்.

அடுத்து மெல்ல மெல்ல வட இந்தியாவில் சில சில போர்களை நடத்தி பல பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தவுடன் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து மிர்காசிம், வங்கதேசத்து நவாப், அயோத்தி நவாப் சுஜா உத்தவுலா மற்றும் மொகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோர் கூட்டணியாக கி.பி. 1764 அக்டோபர் 22ல் வங்காளத்தில் கங்கை நதிக்கரையில் பக்ஸர் யுத்தத்தில் மோதினார்கள். முடிவில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்று அலகாபாத் ஒப்பந்தம் நிறைவேற்றியது. இதன்படி இன்றைய மேற்கு வங்காளம், பீஹார்,ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் மற்றும் வங்காளதேசத்தில் 10 கோடி ஏக்கர் நிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமையையும் போர் இழப்பாக சுஜா உத்தவுலாவிடம் 50 லட்சம் நஷ்ட ஈடும் பெற்றனர். இரண்டாம் ஷா கிழக்கிந்திய கம்பெனி தரும் மாதாந்திர பென்ஷன் தொகையை பெற்று பெயரளவுக்கு மன்னர் பதவியில் இருந்தார். இந்த அலகாபாத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில 1/8 பங்கை கிழக்கிந்திய கம்பெனி பிடித்தது. இந்த பாக்ஸர் யுத்தமே கிழக்கிந்திய கம்பெனி தனது காலனி ஆதிக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்ல அடிகோலியது. அதன் பின்னர் சில மன்னர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் படி இன்றைய வங்காளம், மேகாலயா, பீஹார்,ஒரிஸ்ஸா ஆகியவை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. பின்னர் ஒருங்கிணைந்த வங்காள மாநிலம் உருவாக்கினர். இதற்கு பின்னர் உத்திரபிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப், ஹரியானா,இமாச்சல பிரதேசம் ஆகியவைகளும் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம் பகுதிகளில் சில பகுதிகளும் கம்பெனி ஆட்சிக்கு வந்தது.  கி.பி.1640ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் வசமிருந்த  சென்னை ஜார்ஜ் கோட்டையை ஒருமுறை பிரெஞ்சுகாரர்கள் தூஃப்பே தலைமையில் கைப்பற்றினார்கள். கி.பி.1746-1749 வரை மூன்று ஆண்டுகள் அவர்களின் வசமே இருந்தது. முடிவில் பிரிட்டன்-பிரான்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக மீண்டும் சென்னை ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்தனர். சென்னையில் எழுத்தராக வேலைக்கு இருந்து மெல்ல மெல்ல உயர்ந்து படைகளில் தன்னை இணைத்துக்கொண்டு போரிட்டு இராபர்ட் கிளைவ் மெல்ல தன் பதவியை உயர்த்திக்கொண்டு வந்து படைகளின் ஜெனரல் பதவியை பிடித்தார். திருச்சிப்பராப்பள்ளி போரில் சந்தா சாஹிப் மற்றும் பிரெஞ்சு படையை இராபர்ட் கிளைவ் தோற்கடித்து முகமது அலியை தக்காணத்தின் மிகப்பெரிய சக்தியாக இராபர்ட் கிளைவ் ஆக்கியது அவரின் புகழை மேலும் உயர்த்தியது.  திருச்சி போருக்கு பின்னர் மேலும் 2 சிறிய போர்களில் வென்றார். பின்னர் மதராஸ்ஸில் உணவு பொருட்கள் வழங்கும் பிரிவில் பொறுபபேற்றுக்கொண்டார். சிறுநீரக கற்கள் பிரச்சினையால் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்து கப்பலில் டிக்கெட் புக் பண்ணியபிறகு நண்பரின் சகோதரியான மார்க்ரெட்டை சந்தித்து காதலாகி மதராஸ்ஸிலையே திருமணம் முடித்து கி.பி.1753 மார்ச்சில் இங்கிலாந்து புறப்பட்டவர் அக்டோபர் மாதம் இங்கிலாந்து சென்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அரசியல் சூழ்ச்சியினால் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். திரும்பவும் இந்தியாவுக்கு 5 ஆண்டு ஒப்பந்தத்தில் வர சம்மதிக்க செயிண்ட் டேவிட் கோட்டைக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். மதராஸ்ஸின் கவர்னராகவும் லெப்டினெட் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார். அந்த நேரத்தில் வங்காள நவாப் இறக்க சிராஜ் உத்தெளலா ஆட்சியில் ஏறினார். பிரிட்டிஷ்ஷாரின் தலையீட்டை எதிர்த்து கல்கத்தா கோட்டையை சுற்றி வளைத்து ஆங்கிலேயர்களை சிறிய அறையில் சிறை வைக்க மூச்சுவிட முடியாமல் 20-40 பேர் இறந்ததாக சொல்லப்பட்டாலும் அதிகமான நபர்கள் இறந்திருக்கலாம். இந்த "ப்ளாக் ஹோல் ஆஃப் கல்கத்தா" நிகழ்வால் கல்கத்தா பிரிட்டிஷ்ஷாரிடம் இருந்து நவாப் கைகளுக்கு மாற திரும்பவும் இராபர்ட் கிளைவ் கல்கத்தாவை மீட்க வங்காளத்துக்கு புறப்பட்டார்.  கல்கத்தாவை அடைந்து சிராஜ் உத்தெளலாவுடன் போரில் ஈடுபட்டார். இந்த பிளாசிப்போரில் வங்காள நவாப்பின் தளபதிக்கு லஞ்சம் பதவி ஆசை காட்டி தன் பக்கம் இழுத்து பிளாசி போரில் வென்று ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை வங்காளத்தில் ஆரம்பித்து வைத்தார். வங்காள விரிவாக்கத்திற்கு பின்னர் தற்போதைய பாகிஸ்தானின் வடமேற்கு பிரதேசம் பஞ்சாப்பின் ஒரு பகுதி மற்றும் பர்மாவின் பெரும்பகுதியையும் கம்பெனி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. வர்த்தகம் செய்ய வந்தவர்கள் விற்பனையில் சம்பாதித்ததை விட வளைத்து போட்ட இடங்களில் வந்த வரிவசூல் மூலம் செழிக்க ஆரம்பித்தனர். நிலவரி கடுமையாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டது. மொத்த உற்பத்தியில் 50% நிலவரியாக எடுத்து கொள்ளப்பட்டது.  கி.பி.1770ல் வங்காளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உணவு பஞ்சத்தினால் ஒரு கோடி இறந்தனர். அன்றைய தேதியில் வங்காளத்தில் வசித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்தனர். அன்றைய வங்காள பஞ்சத்திற்கு காரணமே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தான். உணவு பொருட்களை பயிர் செய்ய விடாமல் போதை தரும் கஞ்சா அபின் வகைகளை பயிரிடச்சொல்லி அதை இங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்து மெல்ல மெல்ல சீனாவிலும் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை படரவிட்டனர். பஞ்சத்தின் காரணமாக இருப்பவர்களுக்கே உணவு இல்லாமல் தவிக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வரிவசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கம்பெனியின் பணியாளர்கள் ஊழலில் ஈடுபட்டு நல்ல செல்வ செழிப்புடன் தான் இருந்தார்கள். கால்பணம் அரைபணத்திற்கெல்லாம் அன்று சிறுவர் சிறுமியரை அடிமையாக விலைக்கு வாங்கி தங்களுடைய உதவிக்கு வைத்துக் கொண்டனர். மேலும் நிறைய இந்தியர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி கப்பல்களில் தூரதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில் பணம் நிறைய சேர்த்து வைத்திருந்தனர். பஞ்சத்தினால் வரிவசூல் பாதிப்பால் கி.பி.1772ல் கிழக்கிந்திய கம்பெனி திவாலாகும் நிலை ஏற்பட்டது. அதனால் பிரிட்டிஷ் அரசிடம் உதவி கேட்டது. கம்பெனியில் முறைகேடுகளால் திளைப்பதாக பிரதமர் லார்டு நார்த் கருதினார். இதனால் பிரிட்டிஷ் பொருளாதாரமே வீழும் நிலை ஏற்படக்கூடும் என்று கருதி கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பிரிட்டிஷ் அரசே எடுத்துக்கொள்ளுவதே சரி என்று நினைத்தார். ஆனால் அதை செயல்படுத்தினால் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் பல முனைகளில் இருந்து எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்று புரிந்துக்கொண்டார். எனவே கம்பெனியின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த "ஒழுங்குமுறை சட்டம்" ஒன்றை கொண்டு வந்தார். இச்சட்டமானது இந்தியாவில் உள்ள கம்பெனிக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதி அதிகாரம் பிரிட்டிஷ் அரசிடமே இருக்கும் என்றும் வங்காளம் மற்றும் மற்ற பகுதிகளை கம்பெனி நடவடிக்கைகளை கண்காணிக்க பிரிட்டிஷ் அரசு ஒரு கவர்னர் ஜெனரலை நியமிக்கும் என்றும் அவர் கல்கத்தாவிலிருந்து நிர்வாகம் செய்வார் என்றும் பம்பாய் மற்றும் சென்னை அவரின் கீழ் இயங்கும் என்று கூறியது. அவ்வாறு முதன்முதலில் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் தான் வாரன் ஹேஸ்டிங்ஸ். 


உதவிய நூல்கள் :

The Theft of India - Roy Maxholm

கிழக்கிந்திய கம்பெனி - நிக் ராபின்சன்

விக்கிபீடியா தகவல்கள்

மொகலாயர்கள் - முகில்

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை இராமசாமி

இந்தியா உருவான கதை -  க.சிவஞானம்

எனது இந்தியா - எஸ்.இராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.இராமகிருஷ்ணன்

தமிழக பாளையங்களின் வரலாறு - மு.கோபி சரபோஜி

சிப்பாய்கலகம் - சிவதர்ஷினி

சிவகங்கை வீர மங்கை வேலு நாச்சியார் - நெல்லை ஜெனா

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

சீக்கியர்கள் - எஸ்.கிருஷ்ணன்

திப்புசுல்தான் - மருதன்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு