95) அன்னிய காலனியாதிக்கம் (ஆங்கிலேயர கவர்னர் ஜெனரல்கள்)

இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம்:

பிரிட்டிஷ் காலனியாதிக்கம் : (கி.பி.1774-1858)

போர்கள் - சுரண்டல்கள் -  கம்பெனி ஆட்சி - சிப்பாய் புரட்சி 

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி கி.பி.1772ல் மிகப்பெரிய அளவு நஷ்டத்தை சந்தித்து மூடுவிழா நடத்தும் நிலைமைக்கு சென்றது. ஆனால் அதன் பணியாளர்கள் நல்ல செல்வ செழிப்புடன் இருந்தனர். இதனால் கம்பெனியில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டன் பிரதமரின் எண்ணப்படி இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தை கவனிக்க கவர்னர் ஜெனரல் நியமிக்கப்பட்டார். அவர் கல்கத்தாவிலிருந்து நிர்வாகத்தை கவனிப்பார் என்றும் பம்பாய் மற்றும் சென்னை ஆளுநர்கள் அவருக்கு கீழ் பணிபுரியவும் பிரிட்டிஷ் அரசு உத்தரவின் படி முதல் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார்.வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் கானிங் பிரபு வரை இருந்த கவர்னர் ஜெனரல்களின் காலத்தில் மெல்ல மெல்ல மொத்த இந்தியாவும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரால் விழங்கப்பட்டது. அதன் நிர்வாக வசதிக்காக சாலைகளும் இருப்புப்பாதைகளும் போடப்பட்டு அதன் மூலம் இந்தியாவில் சுரண்டப்பட்ட சொத்துக்கள் இங்கிலாந்துக்கு கப்பல் ஏறிப்போயின. சுரண்டல் மற்றும் அவர்களின் அடக்குமுறையும் இந்தியர்களை நாயினும் கீழாக மதித்த தன்மையும் மத ரீதியான விஷயங்களும் அதிகமாகவே கி.பி.1857ல் மங்கள்பாண்டே என்ற சிப்பாய் பன்றியின் கொழுப்பும் பசுவின் கொழுப்பும் அடங்கிய என்பீல்ட் துப்பாக்கியின் குண்டுகளை (துப்பாக்கி குண்டின் மேலுறை பல்லினால் கடித்து கிழித்து தான் துப்பாக்கியில் ஈடவேண்டும். அந்த மேலுறைக்கு மசவு எண்ணெய்யாக பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது) உபயோகிக்க மறுக்கவே அவரை ஆங்கில அதிகாரிகள் தாக்க முனைய திருப்பி தாக்கி ஆங்கிலேய அதிகாரியை கொன்று போட ஆங்கிலேயர்கள் அவரை பிடித்து தூக்கில் போட சிப்பாய் புரட்சி நாடெங்கும் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மராத்திய பேஷ்வாவின் வளர்ப்பு மகனான நானா சாகிப்பும் ஜான்சியின் ராணியும் தாந்தியா தோபேவும் புரட்சிக்கனலை ஏந்தி நடக்க டெல்லியில் மொகலாய மன்னராக பெயரளவுக்கு இருந்த இரண்டாம் பகதூர் ஷாவை இந்தியாவின் மன்னராக அறிவித்து புரட்சியை தொடர்ந்து நடத்தினர். முடிவில் புரட்சி ஒடுக்கப்பட்டு இரண்டாம் பகதூர் ஷாவை ரங்கூன் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஜான்ஸி ராணி தாந்தியா தோபே போரில் மடிந்தனர். நானா சாகிப் போன இடம் தெரியாமல் மறைந்து போகவே புரட்சி அடங்கியது. பின்னர் இங்கிலாந்து அரசு கி.பி.1858 நவம்பர் 1ம் தேதி விக்டோரியா மகாராணியின் உத்தரவுப்படி தன்னுடைய நேரிடையான ஆட்சியின் கீழ் அடங்கிய காலனி நாடாக இந்தியாவை அறிவித்தது. அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த கானிங் பிரபுவே காலனி ஆட்சியின் முதல் கவர்னர் ஜெனரலாக ஆனார்.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை ஆளுநர்கள் :

1) வாரன் ஹேஸ்டிங்ஸ் (கி.பி.1774-1785) :


இவர் கி.பி.1750ம் ஆண்டில் கல்கத்தாவில் கம்பெனியின் எழுத்தராக பணியாற்றினார். அங்கு இருக்கும்போது உருது, பாரசீகம் ஆகிய மொழிகளை கற்றார். கி.பி.1752ல் பதவி உயர்வு பெற்றார். கி.பி.1756ல் வங்காள நவாப் சிராஜ் உத்-தெளலா படைகளால் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் சென்னையிலிருந்து படைகளுடன் வந்து இராபர்ட் கிளைவ் கி.பி.1757ல் பிளாசி போரில் வென்று மீர் ஜாபரை அரியணையில் ஏற்றி வாரன் ஹேஸ்டிங்ஸ்ஸை சிறையிலிருந்து மீட்டார். முதல் ஆங்கிலேய-மைசூர் போரின் போது சென்னையை கைப்பற்ற வந்த ஹைதர் அலியை எதிர்கொள்ள சென்னைக்கு வந்தார். அந்த நேரத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா பகுதிகள் தனித்தனி ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்திய சட்டப்படி பம்பாய் மற்றும் சென்னை ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்படும் பதவியை இழந்து கொல்கத்தாவின் ஆளுநரின் கீழ் செயல்படும் நிலை வந்தது. இவர் காலத்தில் கி.பி.1770ல் வங்காள பஞ்சம் வந்தது. இதில் 1 கோடி பேர் இறந்தனர். பஞ்சம் வந்ததற்கு காரணமே உணவுப்பொருட்களை விட அபின் அவுரி செடிகளை பயிரிட ஆங்கிலேயர்கள் விவசாயிகளை வதைத்ததே காரணமாயிற்று. வங்காளத்தில் பருத்தி துணிகளை குறைந்த விலையில் விற்க நெசவாளர்கள் வலியுறுத்தப்பட்டனர். இதனால் சில நெசவாளர்கள் தங்களது வலதுகை கட்டை விரலை வெட்டிக்கொண்டனர். வங்காள ஆளுநராக கி.பி.1773ல் பதவியேற்ற இவர் கி.பி.1774ல் இந்தியாவின் தலைமை கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த காலத்தில் கல்கத்தா கம்பெனியின் ஆட்சியின் தலைநகராக மாறியது. 10 வருடங்கள் பணியை நிறைவு செய்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தனது தலைமை ஆளுநர் பதவியை இழக்க நேரிட்டது. ஊழல் வழக்குகளால் லண்டன் உயர்நீதி மன்றத்தால் விசாரணை கி.பி.1787ல் நடத்தப்பட்டு பின்னர் கி.பி.1814ல் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தில் இராபர்ட் கிளைவ்வுக்கு பிறகு அதிகம் பேசப்பட்டவர் இவரே. கி.பி.1818ல் தனது 85வது வயதில் இங்கிலாந்தில் மரணமடைந்தார். இவரது காலத்தில் தான் "இரட்டை ஆட்சிமுறை" ஒழிக்கப்பட்டு தனது முகவர்கள் மூலம் நிலவரியை கம்பெனி வசூலிக்க தீர்மானித்தது. நவாப்பிற்கு வழங்கிய நிதியுதவியை பாதியாக குறைத்தார். மொகலாய பேரரசுக்கு வழங்கிய ஓய்வூதியத்தை நிறுத்தினார். இவர் காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆங்கிலேய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரின் கீழ் உரிமையியல் நீதிமன்றமும் இந்திய நீதிபதியின் கீழ் குற்றவியல் நீதிமன்றத்தையும் ஏற்படுத்தினார். மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இந்திய மற்றும் அயல்நாட்டு பொருட்களுக்கு ஒரே 25% சுங்கவரி விதிக்கப்பட்டது. ஒரே மாதிரியான முன் கட்டண அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தினார். ஒழுங்குமுறை சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒரே மாதிரியான நிர்வாக முறையை ஏற்படுத்தினார்.

2) ஜான் மெக்பெர்சன் (கி.பி.1785-1786) :

வாரன் ஹேஸ்டிங்ஸ் ராஜினாமாவை அடுத்து கவுன்சிலின் மூத்த உறுப்பினராக இருந்த இவர் அடுத்த கவர்னர் ஜெனரலாக ஆனார். இவரது காலத்தில் நிதி விவகாரங்களை திறம்பட நிர்வகித்து செலவினங்களை குறைத்து வசூலில் கவனம் செலுத்தி நிதி ஆதாரத்தை மேம்படுத்தினார். 20 மாதங்கள் பதவியில் இருந்த இவர் பின்னர் இங்கிலாந்துக்கு திரும்பினார். 

3) காரன் வாலிஸ் (கி.பி.1786-1793) :


ஜான் மெக்பெர்சனுக்கு பிறகு கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். இவரது காலத்தில் தான் கி.பி.1789-92ல் மூன்றாம் மைசூர் யுத்தத்தில் மைசூரின் திப்புசுல்தானை வென்றார். இவர் காலத்தில் கீழ் நீதிமன்றங்களும் முறையீட்டு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டது. இவர் காலத்தில் பீஹார் மற்றும் வங்காளத்தில் நிலப்பிரபுக்கள் நிலவரியை கிழக்கிந்திய கம்பெனியிடம் கொடுக்க ஒப்புக்கொண்டனர். இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தினார். இவர் காலத்தில் சமஸ்கிருத வித்யாலயா வாரணாசியில் அறிமுகப்படுத்தப்பட்டது.  தனது பதவிக்காலம் முடிந்தவுடன் கி.பி.1794ல் இங்கிலாந்து திரும்பியவருக்கு பிரிட்டிஷ் படைகளின் ஜெனரலாக பதவி கிடைத்தது. பின்னர் கி.பி.1798ல் பிரபுவாகவும் அயர்லாந்தின் தலைமை கமாண்டராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் கி.பி.1805ல் ஜீலை 30ல் திரும்பவும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர் அடுத்த 67 நாட்களில் அக்டோபர் 5,1805ல் இன்றைய உத்திரபிரதேசத்திலுள்ள காஸிப்பூர் நகரில் மரணமடைந்தார்.

4) ஜான் சோர் (கி.பி.1793-1798) :

இவர் காரன்வாலீஸ்க்கு பிறகு கவர்னர் ஜெனரலாக வந்தார். இவர் பிரிட்டிஷ் மற்றும் அயல்நாடுகளின் பைபிள் அஸோஸியனின் முதல் தலைவராக இருந்தார். காரன்வாலீஸ்க்கு பிறகு அடுத்த கவர்னர் ஜெனரலாக அறிவிக்கப்பட்ட இவர் மார்ச் 10,1793ல் கல்கத்தா நகருக்கு வந்தாலும் காரன்வாலீஸ் பதவிக்காலம் முடிந்த பிறகே 28 அக்டோபர்,1793ல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். இவர் காலத்தில் கி.பி.1794ல் இரண்டாம் ரோஹில்லா போர் நடந்தது. கி.பி.1795ல் மராத்திய படைகளுக்கும் ஹைதராபாத் நிஜாம்களுக்கும் இடையே நடைபெற்ற கார்டா யுத்தத்தில் மராத்தியர்கள் வெற்றி பெற்றனர். போரின் விளைவாக 3 கோடி ரூபாய்களை மராத்தியர்களுக்கு கொடுக்க நிஜாம் ஒப்புக்கொண்டார். இந்த போரில் ஆங்கிலேயர்கள் நிஜாம்முக்கு ஆதரவாக தலையிடாமல் இருந்ததால் நிஜாமின் நம்பிக்கையை இழந்தனர். இவர் காலத்தில் முதல் மலபார் கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஜெய்ப்பூர் (கி.பி.1793) & திருவிதாங்கூர் (கி.பி.1794) ஆகிய மன்னராட்சி நாடுகள் கம்பெனி பாதுகாப்பில் வந்தது. கி.பி.1796ல் அந்தமான் தீவுகளை கைப்பற்றினர். அதே ஆண்டு டச்சுகாரர்களிடமிருந்து இலங்கையின் கடற்கரை பகுதிகள் கைப்பற்றப்பட்டது. பெரிய அளவில் மைசூரின் திப்புசுல்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து விட்டார். 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தவுடன் இங்கிலாந்து திரும்பினார்.

5) அலூர்டு கிளார்க் (கி.பி.1798-1798)‌‌ : 

இரண்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். அடுத்த கவர்னர் ஜெனரலாக வெஸ்ஸெஸ்லி பிரபு பதவியேற்கும் வரை தற்காலிக கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்தார். கி.பி.1796 ஆரம்பத்தில் சென்னை வந்து இறங்கிய இவர் இராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். வெல்லெஸ்லி பதவியேற்கும் வரை தற்காலிக கவர்னர் ஜெனரலாக இருந்த இவரின் தலைமையின் கீழ் கி.பி.1799ல் நான்காவது மைசூர்-ஆங்கிலோ போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு வெற்றி பெற்று கொடுத்தார். இந்த போரில் தான் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மைசூர் புலி "திப்புசுல்தான்" கொல்லப்பட்டதுடன் மைசூரும் சமஸ்தானமும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்திற்கு வந்தது. அவர்கள் மீண்டும் உடையார் வம்சத்திடம் ஆட்சியை ஒப்படைத்து வரிவசூல் விவகாரங்களை பொறுப்பேற்றது தனிக்கதை. பின்னர் கி.பி.1802ல் இங்கிலாந்து திரும்பி இராணுவ சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு ஃபீல்ட் மார்ஷல் பதவி வரை உயர்ந்தார். கி.பி.1832ல் வேல்ஸ்ஸில் மறைந்தார்.

6) வெல்லெஸ்லி (கி.பி.1798-1805) :


இவரது காலத்தில் தான் நான்காவது மைசூர்-ஆங்கிலோ யுத்தத்தில் திப்பு சுல்தான் வீழ்ந்தார். திப்பு சுல்தான் வீழ்ந்தவுடன் அதை கேள்விப்பட்ட இவர் உதித்த வார்த்தை தான் "இன்று முதல் இந்தியா முழுவதும் நம் வசம் வந்தது". கி.பி.1803ல் மராத்தியர்களுக்கு எதிரான போரிலும் இவரின் பங்கு அதிகம். இவர் காலத்தில் ஏற்பட்ட போர்கள் மற்றும் அதன் பின் ஏற்பட்ட ஒப்பந்தங்களினால் இந்தியாவில் பிரெஞ்ச் ஆதிக்கம் பாண்டிச்சேரியில் மட்டுமே என்று குறுகியது. வெல்லெஸ்லி கொண்டு வந்த துணைப் படை திட்டத்தினால் எல்லா சமஸ்தானங்களிலும் அவர்களின் படைகள் கலைக்கப்பட்டு கூட்டணி படைகள் நிறுவப்பட்டு அதன் செலவுகளுக்கு சமஸ்தானத்தின் வருமானம் செலவிடப்பட்டது. அவர்களின் பாதுகாப்புக்காக படையை கொடுத்து அவர்களை வெறும் பெயரளவுக்கு பதவியில் இருத்தியது. இதனால் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பலம் அதிகரித்தது. கல்கத்தாவிலுள்ள "வில்லியம் கோட்டை கல்லூரி" இவர் காலத்தில் கி.பி.1800ல் ஆரம்பிக்கப்பட்டது. கல்கத்தா ராஜ்பவன் கி.பி.1803ல் நிறுவப்பட்டது. பின்னர் இவர் பதவி விலகிய பின்னர் மீண்டும் காரன்வாலிஸ் பதவி ஏற்று 67 நாட்களில் காலமானதை தொடர்ந்து ஜார்ஜ் பார்லோ அடுத்த கவர்னர் ஜெனரலாக ஆனார்.

7) ஜார்ஜ் பார்லோ (கி.பி.1805-1807) :

இவர் கி.பி.1778ல் வங்காளத்தில் சிவில் சேவைகளுக்காக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு வங்காளத்தில் நிரந்தரமாக குடியேறினார். காரன்வாலீஸ் பிரபு இறந்த பிறகு கி.பி.1807ல் லார்டு மின்டோ பதவிக்கு வரும்வரை இடைக்கால கவர்னர் ஜெனரலாக பரிந்துரைக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மின்டோ பிரபு பதவிக்கு வந்த பின் இவர் ஜார்ஜ் பார்லோ மெட்ராஸ்ஸின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் கி.பி.1812ல் இங்கிலாந்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் தான் வேலூரில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. இதை கலகம் என்று சொல்லுவதை விட இந்தியாவின் முதல் சுதந்திர போரின் முன்னோடி போர் என்று சொல்லுவதே பொருத்தம். இவர் காலத்தில் நிறுவப்பட்ட பேங்க் ஆஃப் கல்கத்தா பின்னர் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்று மாறி தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற பெயரில் தொடர்ந்து பயணிக்கிறது.

8) முதலாம் மிண்டோ பிரபு (கி.பி.1807-1813)

இடைக்கால கவர்னர் ஜெனரலுக்கு பிறகு முதலாம் மின்டோ பிரபு கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். இவரது காலத்தில் லாகூர் பகுதிகளில் வளர்ந்து வந்த சீக்கிய மகராஜாவான ரஞ்சித் சிங்கிற்கும் இடையேயான போரில் ஆங்கிலேயர் முன்னேற்றம் கண்டனர். இதனால் தனது படையின் பலவீனத்தை உண்ர்ந்து ரஞ்சித் சிங் கி.பி.1809ல் அமிர்தசரஸ் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் சட்லெஜ் நதிக்கு மறுகரை வரையிலான பகுதிகளில் அவரின் ஆட்சியினை ஆங்கிலேயர் ஏற்றனர். இவரின் காலத்தில் தான் கி.பி.1813ல் சாசனச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இங்கிலாந்து திரும்பிய இவர் அடுத்த ஆண்டே மறைந்தார்.

9) மார்க்வெஸ் ஹேஸ்டிங்ஸ் (கி.பி.1813-1823)

மின்டோ பிரபுவுக்கு பின்னர் 10 ஆண்டுகாலம் கவர்னர் ஜெனரலாக இருந்த இவரின் காலத்தில் நிறைய போர்களில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று தங்கள் ஆதிக்கத்தை அதிகரித்தனர். நேபாள படைகளுடனான கூர்க்கா யுத்தத்தில் (கி.பி.1814-16) வெற்றி பெற்றதுடன் மராட்டியர்களுடனான 3வது ஆங்கிலோ-மராத்திய போரில் (கி.பி.1817-18) வெற்றி பெற்றனர். கி.பி.1817ல் கல்கத்தாவில் இந்து கல்லூரி (தற்போதைய பெயர் பிரசிடென்ஸி பல்கலைக்கழகம்) உருவாக்கப்பட்டது. வட இந்தியா கல்கத்தா மத்திய இந்தியா பகுதிகளில் மிகுந்த அளவு வழிப்பறி கொள்ளை கொலைகள் செய்து வந்த பிண்டாரிகள் என்ற கூட்டத்தை அடியோடு அழித்தார். அந்த நிகழ்வு பின்டாரி போர் (கி.பி.1817-18) என்றே அழைக்கப்படுகிறது. இவர் காலத்தில் தான் கி.பி.1818ல் பம்பாய் பிரசிடென்ஸி (பம்பாய் மாகாணம்) உருவாக்கப்பட்டது. கி.பி.1819ல் சிங்கப்பூர் தீவை வாங்கினார்கள். கி.பி.1820ல் மெட்ராஸ்ஸில் ரயோத்வாரி அமைப்பையும் கி.பி.1822ல் வட இந்தியாவில் மஹால்வாரி அமைப்பையும் நிறுவி நிலவரி வசூலிப்பை முறைப்படுத்தினார். கம்பெனியின் பேங்கிங் ஹவுஸ் விவகாரத்தில் இவருக்கு எதிராக சிலர் சூழ்ச்சியாக குற்றம் சாட்டினார். குற்றச்சாட்டில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டாலும் அந்த நிகழ்வு இவருக்கு வருத்தத்தை அளித்ததால் கி.பி.1821ல் ராஜினாமா செய்தார். ஆனாலும் அடுத்தவர் பதவி ஏற்கும்வரை கி.பி.1823 ஜனவரி 9ம் தேதி வரை பதவியில் இருந்து அடுத்த கவர்னர் ஜெனரலாக வில்லியம் ஆமேர்ஸ்ட் பிரபு வரும்வரை 7 மாதங்களுக்கு தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் செயலாளராக இருந்த ஜான் ஆடம்மை தற்காலிக கவர்னர் ஜெனரலாக நியமித்து விட்டு இந்தியாவை விட்டு போனார். பின்னர் கி.பி.1824ல் மால்டா கவர்னராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றி நேப்பிள்ஸ் கடற்பகுதியில் மறைந்தார்.

10) வில்லியம் ஆமேர்ஸ்ட் பிரபு (கி.பி.1823-1828)

 இவரது காலத்தில் தான் முதல் ஆங்கிலேய - பர்மிய போரில் அஹோம் பேரரசு மற்றும் பர்மா அரசை வீழ்த்தி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அசாம், மணிப்பூர் மற்றும் பர்மாவின் அரக்கான் மலைப்பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1824ல் பராக்பூர் சிப்பாய் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. 

11) வில்லியம் பென்டிங்க் பிரபு (கி.பி.1828-1835)‌‌ :


 

இவரது காலத்தில் கி.பி.1833ல் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு கம்பெனியின் கவர்னர் ஜெனரல்லாக இருந்த பதவி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று மாற்றப்பட முதல் இந்திய கவர்னர் ஜெனரல் என்ற பெருமையை வில்லியம் பென்டிங்க் பிரபு பெற்றார். இவரது காலத்தில் தான் இராஜாராம் மோகன்ராய் இந்துக்களின் மறுமலர்ச்சிக்கு பிரம்மசமாஜம் துவக்கினார். அவரின் பெருமுயற்சியினால் வில்லியம் பென்டிங்க் பிரபு உடன்கட்டை ஏறல் பழக்கத்தை ஒழிக்கும் சட்டத்தை கி.பி.1829ல் இயற்றினார். வழிப்பறி கொள்ளை கட்டுப்படுத்தும் சட்டமும் இவரின் காலத்தில் இயற்றப்பட்டது. மைசூரின் மன்னராட்சி பகுதிகள் கம்பெனியின் நிர்வாக வரம்பில் கொண்டு வரப்பட்டது. கி.பி.1833ல் இயற்றப்பட்ட செயிண்ட் ஹெலினா சட்டம் (அல்லது) சாசன சட்டத்தின் படி மிஷனெரிகள் இன்றைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் உரிமையை பெற்று மதத்தை பரப்ப ஆரம்பித்தனர். கி.பி.1834ல் குடகு ராஜ்ஜியம் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1835ல் கல்கத்தாவில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இவர் காலத்தில் தான் கி.பி.1835ல் ஆங்கில கல்வி சட்டம் இயற்றப்பட்டது.

12) சர் சார்லஸ் மெட்கால்ஃப் (கி.பி.1835-1836)

லார்டு வில்லியம் பென்டிங்க்கிற்கு பிறகு தற்காலிக கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். இவர் காலத்தில் தான் கி.பி.1836ல் கல்கத்தா பொது நூலகத்தை நிறுவப்பட்டது. இது இன்று இந்தியாவின் தேசிய நூலகம் என்று அழைக்கப்படுகிறது. இவர் காலத்தில் தான் பத்திரிகைகளின் சுதந்திரம் முதலியவற்றில் முக்கிய நடவடிக்கை எடுத்தார். கி.பி.1838வரை கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்று இங்கிலாந்தில் குடியேறினார்.

13) ஜார்ஜ் ஈடன் (கி.பி.1836-1842)

வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு பின்னர் இவர் தலைமை கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். இவர் காலத்தில் வடமேற்கு மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் நிறுவப்பட்டது. இந்திய முழுவதும் கி.பி.1837ல் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆக்ரா பஞ்சம் (கி.பி.1837-38) இவரின் காலத்தில் ஏற்பட்டது. மத்திய தரைக்கடல் நாடான யேமன் நாட்டிலுள்ள ஏடன் நகரம் கி.பி.1839ல் கைப்பற்றப்பட்டது. இவரின் காலத்தில் தான் முதல் ஆங்கிலேய-ஆப்கானிய போர் கி.பி.1839-42 ஆண்டுகளில் பிரிட்டிஷ்ஷாருக்கு ஆரம்பத்தில் வெற்றி கிடைத்தாலும் இறுதியில் போரிலிருந்து வெளியேறினர்.

14) எல்லன்பரோ பிரபு (கி.பி.1842-1844)

ஜார்ஜ் ஈடனுக்கு பிறகு பதவியேற்ற இவர் காலத்தில் முதல் ஆங்கிலோ-ஆப்கானிய போர் முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் கம்பெனி படைகள் காபூலிருந்து திரும்பி வந்தது. இவரின் காலத்தில் தான் சிந்து மாகாண அரசு கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது.

15) வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் பேர்ட் (கி.பி.1844)

எல்லன்பரோ பிரபுக்கு பிறகு அடுத்த கவர்னர் ஜெனரலாக ஹென்றி ஹார்டிங்கே வரும் வரை 1 1/2 மாதங்கள் தற்காலிக கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு வங்காளத்தின் தூணை ஆளுநராக பணியாற்றினார்.

16) ஹென்றி ஹார்டிங்கே (கி.பி.1844-1848)

எல்லன்பரோ பிரபுவுக்கு பின்னர் கவர்னர் ஜெனரலாக பதவிக்கு வந்த இவரின் காலத்தில் முதல் ஆங்கிலேய-சீக்கிய போர் (கி.பி.1845-46) ஆண்டுகளில் நடந்தது. போரின் முடிவில் லாகூர் உடன்படிக்கையின் படி சீக்கியர்கள் ஜலந்தர், தோவாப் மற்றும் காஷ்மீர் பகுதிகளை கம்பெனிக்கு விட்டு கொடுத்தனர்.

17) டல்ஹளசி பிரபு (கி.பி.1848-1856)‌‌ :


  

ஹென்றி ஹார்டிங்கேவுக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக டல்ஹளசி பிரபு நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இருந்த உயரடுக்கு உயர் கல்வியுடன் வெகுஜன கல்வியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினார். பயணிகள் ரயில், மின்சார தந்தி மற்றும் அஞ்சல் வசதிகளை நாடு முழுவதற்கும் அறிமுகப்படுத்தினார். இவரது காலத்தில் தான் முதன்முதலில் கி.பி‌.1853ல் பாம்பே-தானே ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்தியாவில் பொதுப்பணி துறையை நிறுவினார். காலனி ஆட்சியின் நல்ல நிர்வாக அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். ஆனாலும் அவரது காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தின் அறிகுறிகளை கவனிக்க தவறியதால் அவரின் கடைசி காலத்தில் இங்கிலாந்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கி.பி.1860ல் இங்கிலாந்தில் தனது 48வது வயதில் மரணமடைந்தார். 

கி.பி.1849ல் இவரது தலைமையில் ஆங்கிலேயர்கள் பஞ்சாப்பை கைப்பற்றி பஞ்சாப்பின் மகாராஜாவான துலீப் சிங்கிடமிருந்து புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை கைப்பற்றி விக்டோரியா மஹாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.


கி.பி.1852ல் இரண்டாம் பர்மிய போரின் விளைவாக பர்மாவின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டன. மன்னருக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் அவரின் இராஜ்யங்கள் கம்பெனியுடன் இணைக்கப்படும் என்ற அவகாசியிலிக் கொள்கையின் படி சில ராஜ்ஜியங்களை இணைத்துக்கொண்டார். அவாத் (அயோத்தியா) ராஜ்ஜியத்தின் இணைப்பும் ஜான்சி, சதாரா, ஜெய்ப்பூர், சம்பல்பூர் மற்றும் நாக்பூரின் இணைப்பும் மற்றும் மராத்திய பேஷ்வா (இரண்டாம் நானா சாகிப்) விவகாரமும் பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த இந்திய வீரர்களை வருத்தமடைய செய்தது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இவ்விஷயங்களே பின்னாளில் சிப்பாய் கலகத்திற்கு வழிவகுத்தது. கி.பி.1856ல் இந்து விதவைகள் மறுமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் இவருக்கு பின் வந்த கானிங் பிரபு அதை நடைமுறைப்படுத்தினார். கி.பி.1849ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பெத்துன் கல்லூரிப் பள்ளி இவரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் காலத்தில் தான் சிம்லாவில் கோடைக்கால தலைநகர் நிறுவப்பட்டது. முதல் தந்தி லைன் டைமண்ட் ஹார்பர் முதல் கல்கத்தா வரை போடப்பட்டது. கி.பி.1855ல் சந்தால் கிளர்ச்சியின் போது 15,000 சந்தால் இன பழங்குடி மக்கள் பிரிட்டிஷ் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். பெண் சிசுக்கொலை மற்றும் மனித பலியிட தடை விதிக்கப்பட்டது.

18) கானிங் பிரபு (கி.பி.1856-1858) & (கி.பி.1858-1862) :


டல்ஹவுசி பிரபுக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக கி.பி.1856 பிப்ரவரி 28ல் பதவிக்கு வந்த இவரின் காலத்தில் தான் சிப்பாய் கலகம் நடந்தது. சிப்பாய் கலகம் முற்றிலும் ஒடுக்கப்பட்ட பின் கி.பி.1858 நவம்பர் 1முதல் கம்பெனி ஆட்சியிலிருந்து பிரிட்டிஷ் காலனி நாடுகளுள் ஒன்றாக இந்தியா ஆனது.  அதன்படி அக்டோபர் 31,1858 வரை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர் விக்டோரியா மகாராணியின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்ட பின் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ஆனார். டல்ஹவுசி பிரபு அறிமுகப்படுத்திய இந்து விதவைகள் மறுமண சட்டத்தை கி.பி.1856ல் நடைமுறைப்படுத்தினார். இவரின் காலத்தில் தான் கி.பி.1857ல் கல்கத்தா,பம்பாய் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டது.

உதவிய நூல்கள் :

The Theft of India - Roy Maxholm

கிழக்கிந்திய கம்பெனி - நிக் ராபின்சன்

விக்கிபீடியா தகவல்கள்

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை இராமசாமி

இந்தியா உருவான கதை -  க.சிவஞானம்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு