96) அன்னிய காலனியாதிக்கம் (ஆங்கிலேயர்கள்)

 இந்தியாவில் அன்னிய காலனியாதிக்கம் - பிரிட்டிஷ் காலனியாதிக்கம் (கி.பி.1774-1858)

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் காலனியாதிக்கம் அதிகரிக்கவே இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டது. அந்த நேரத்தில் மிகவும் வலுவாக இருந்தவர்கள் மொகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள். கி.பி.1739ல் பாரசீக மன்னன் நாதிர்ஷா டெல்லியை கைப்பற்றி கொள்ளையிட்டு இரத்த ஆறு ஒட செய்த நிகழ்வுககு பின்னர் மொகலாயர்கள் தம் வலுவை இழந்தது நின்றனர். சரியாக 20 வருடம் கழித்து ஆப்கானிய மன்னன் அலி அப்தாலி மொகலாயர்கள் மற்றும் மராத்தியர்களை வீழ்த்தி மீண்டும் டெல்லியை கொள்ளையிட்டு தன் நாடு திரும்பினான். இந்த நிகழ்வுகளால் மேற்கண்ட மொகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் பலமிழந்து இருந்த காரணமே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு ஒரு காரணமாக ஆயிற்று. ஆங்கிலேயர்கள் முதலில் உள்ளூர் அரசர்களுக்கு படை ஆயுதங்கள் உதவி செய்து வாணிகமும் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர். மெல்ல மெல்ல பலவீனமான அரசர்களுக்கு படை உதவி செய்து தங்களின் பின்புலத்தில் அவர்களை இருத்திக் கொண்டனர். பின்னர் படை வலிமையை பெருக்கி கொண்டு பாளையக்காரர்கள் மற்றும் சிற்றரசர்களை வரிவசூல் என்ற பெயரில் மிரட்டி தங்கள் வசம் கொண்டு வந்தனர். பின்னர் துணைப் படை திட்டம் என்ற பெயரில் உள்ளூர் அரசர்களது படையை கலைத்து அவர்களது பாதுகாப்புக்கு படையுதவி செய்து அவர்களை பொம்மை அரசாக மாற்றினர். பின்னர் வாரிசில்லாமல் இறக்கும் மன்னர்களின் இராஜ்ஜியத்தை "அவகாசியிலி"கொள்கை மூலம் அபகரித்தனர். மெல்ல கம்பெனி படை வீரர்கள் எந்த மதசின்னங்களை நெற்றியில் அணியக்கூடாது என்றும் என்பீல்டு துப்பாக்கியின் தோட்டங்களில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பும் அடங்கிய உறையை பற்களால் கடித்து துப்பாக்கியில் இடணும் என்ற செய்தி இந்திய இந்து மற்றும் முஸ்லீம் வீரர்களை கொதித்து எழு வைத்தது. அதுவே சிப்பாய் புரட்சியாகவும் வெடித்து முடிவில் புரட்சி அடக்கப்பட்டு கம்பெனி ஆட்சி விக்டோரியா மகாராணியின் கீழ் ஒப்படைக்கப்பட்டு கி.பி.1858 நவம்பர் 1 முதல் இந்தியா பிரிட்டிஷ் அரசின் காலனி நாடுகளுள் ஒன்றாக மாறியது.

ஹைதர் அலி - திப்புசுல்தான்:

மைசூரில் கிருஷ்ணராஜ உடையாரின் படையில் சாதாரண வீரனான ஹைதர் அலி மெல்ல உயர்ந்து படை தளபதியாக உயர்ந்து பொம்மை மன்னனான உடையாரை ஓரங்கட்டி தானே மைசூர் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். பாளையக்காரர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிஜாம் ஆகியோரின் எதிர்ப்புகளை முறியடித்து வந்தான்.  ஆங்கிலேயர்கள் மராத்தியர்கள் நிஜாம் என்று கூட்டு சேர்ந்தாலும் தந்திரமான நிகழ்வுகளால் அவர்களை சமாளித்து வந்த ஹைதர் அலியை எதிர்க்க வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தளபதியான ஸர் அயர் கூட் என்பவரை அனுப்ப சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை போரில் கி.பி.1781ல் ஹைதர் அலி தோற்றார். இதனால் வெகுண்ட அவரின் மகன் திப்புசுல்தான் ஆங்கிலேயரை பழிக்கு பழி வாங்க கர்னல் பிரைத் ஒயிட் தலைமையில் வந்த படையை வென்று விரட்டினார். தண்டுவட புற்றுநோயினால் கி.பி.1783ல் ஹைதர் அலி இறக்கவே திப்புசுல்தான் பட்டத்திற்கு வந்தார். பிரான்ஸ், பெர்ஷியா , துருக்கி நாடுகளுக்கு நட்பழைப்பு அனுப்பி ஆங்கிலேயரை விரட்ட முனைந்தார். பிரான்ஸ் அவரது வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. திப்புசுல்தான் இரும்பு வாணங்கள், பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரித்து வைத்திருந்தார். அவரின் ராக்கெட்டுகளை கண்டு ஆங்கிலேய படை மிரண்டது. முடிவில் துரோகத்தின் சாயல் திப்புவின் மீதும் படிந்தது. அவரின் அமைச்சரான பூர்ணய்யாவின் மகளை திப்புவின் வீரர்கள் மானபங்கப்படுத்திய போது திப்புவிடம் நியாயம் கேட்டு சென்றவரிடம் அவரது மகளை தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கூற மனமுடைந்த பூர்ணய்யா மைசூர் மகாராணி மூலம் ஆங்கிலேயர்களிடம் தகவல்களை சேர்த்ததாகவும் செவிவழி செய்திகள் உண்டு. அதனால் தான் பின்னாளில் திப்பு வீழ்ந்த பின்னர் இவரையே திவானாக ஆங்கிலேயர்கள் நியமித்தனர். கி.பி.1799ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில் திப்புசுல்தான் வீரமரணமடைந்தார். தாய்நாட்டிற்காக போராடிய மாவீரன் மரணமடைந்த செய்தியை கேட்ட அப்போதைய படையின் தளபதி இருந்தவர் இன்று முதல் இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் வந்தது என்று குறிப்பிட்டதிலிருந்து திப்பு ஆங்கிலேயர்களுக்கு எவ்வளவு தொல்லையாக இருந்திருக்கிறார் என்று தெரிய வரும்.

வேலுநாச்சியார் - பெரிய மருது - சின்ன மருது - குயிலி :

சேது நாட்டின் மன்னரான சுந்தரேசுவரர் ரகுநாத சேதுபதியை கொன்று விட்டு பவானி சங்கர் சேது நாட்டை கைப்பற்றினார். பட்டத்துக்கு உரியவரான முத்துவிசய ரகுநாத சேதுபதியும் தஞ்சை மன்னரிடம் உதவி கேட்க அதே நேரத்தில் சசிவர்ண தேவரிடமிருந்து வெள்ளிக்குறிச்சி ஆளுநர் பதவியையும் பவானி சங்கர் பறிக்கவே அவரும் தஞ்சை மன்னரிடம் உதவி கேட்டார். இருவரும் இணைந்து தஞ்சை மன்னரின் படைகளுடன் பவானி சங்கரை கொன்று நாட்டை மீட்டனர். பின்னர் சேதுநாட்டை 3/5 பங்கு சேது நாடு "பெரிய மறவர் நாடு" அல்லது இராமநாதபுரம் சீமை என்றும் 2/5 பங்கு சேது நாடு "சின்ன மறவர் நாடு" அல்லது "சிவகங்கை சீமை" என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு மன்னரான சசிவர்ண தேவர் பெருங்காடாக இருந்த பகுதிகளை அழித்து ஒரு நகரத்தை உருவாக்கி "சிவகங்கை" என்று பெயர் சூட்டினார். சசிவர்ணருக்கும் அவரது இரண்டாவது மனைவி பூதக்கா நாச்சியாருக்கும் மகனாக பிறந்தவர் தான் முத்து வடுக நாதர். இவர் தான் வீர மங்கை வேலு நாச்சியாரின் கணவர். முத்து வடுக நாதருக்கும் இராமநாதபுரம் சீமை மன்னரான செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகளான வேலு நாச்சியாருக்கும் கி.பி.1746ல் திருமணம் நடந்தது. கி.பி.1749ல் மன்னரான முத்து வடுக நாதர் ஆங்கிலேயரை எதிர்த்து வரி கொடுக்காமல் இருந்தார். அவரை மிரட்டி பணிய வைக்க முயன்ற ஆங்கிலேயர் தோற்று ஓடினார்கள். போர்களத்தில் ஜெயிக்க முடியாத இவரை சமாதானம் என்று கூறிவிட்டு ஆயுதம் இல்லாமல் காளையார் கோவிலுக்கு சென்ற முத்து வடுகநாதரை ஜோசப் ஸ்மித், பான் சோர் என்ற தளபதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர் ஆட்சியேறிய இராணி வேலு நாச்சியார் ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயரை எதிர்த்தார். அந்த போரில் தன் கணவரை கொன்ற இரு தளபதிகளையும் தோற்கடித்தார்.‌ இந்த போரில் தான் முதல் தற்கொலை போராளியாக வேலு நாச்சியாரின் பெண்கள் படைஅணி தளபதி குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்குக்குள் புகுந்து வெடிக்க வைத்து தன்னுயிரை ஈந்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்த போரிலும் இவருடன் இணைந்து பெரிய மருது சின்ன மருது சகோதரர்கள் தளபதிகளாக இருந்தனர். பின்னர் வயோதிகத்தால் ஒதுங்கிய வேலு நாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருக்கு பட்டம் சூட்டினார்.  இவரது மகளான வெள்ளச்சி நாச்சியார் கி.பி.1793ல் மறைந்த துக்கம் தாளாமல் கி.பி.1796ல் வேலு நாச்சியார் மறைந்தார். மகளுக்கு பிறகு மருமகனான வேங்கை பெரிய உடையனத்தேவர் மன்னரானார். அவருக்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர். சகோதரர்கள் இருவரும் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் காளையார் கோவிலை பீரங்கி கொண்டு தகர்க்க போவதாக கூறியதால் சரணடைந்த மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியாரின் மருமகன் உட்பட 500 குடும்பத்தினரை கி.பி.1801ல் தூக்கிலிட்டு கொன்றனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் - ஊமைத்துரை - சுந்தரலிங்கம்‌ - வடிவு :

கட்டபொம்மனின் தந்தை காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயருக்கு வரி கட்டிக்கொண்டிருந்தது. கி.பி.1790ல் ஆட்சிக்கு கட்டபொம்மன் வந்தவுடன் பாஞ்சாலங்குறிச்சி அன்னியரின் ஆளுமையை எதிர்க்க ஆரம்பித்தது.  முதலில் மாக்ஸ்வெல் என்னும் அதிகாரி தூதராக வந்தான். அவரை மரியாதையாக வரவேற்றார். வரி பாக்கி என்றவுடன் கட்டபொம்மன் கொதித்தெழ அந்த அதிகாரி பணிவாக பலமுறை கூறியும் வரி கட்ட மறுத்தார். அதன் பிறகும் பல அதிகாரிகள் வந்தனர். கட்டபொம்மனின் துணிவை கண்ட மற்ற பாளையக்காரர்களும் துணிச்சல் பெற்றனர். பழசி ராஜா, விருப்பாச்சி கோபால் நாயக்கர் மற்றும் மருது பாண்டியர்களுடன் கூட்டணி அமைத்தார். மைசூரின் திப்பு சுல்தானின் ஆதரவும் இருந்தது. உடனே கம்பெனி ஜாக்ஸன் என்பவரை திருநெல்வேலி கலெக்டராக நியமித்து வரிவசூல் செய்ய அனுப்ப அவர் கட்டபொம்மனை அழைத்து அவமரியாதை செய்ய கொதித்து எழுந்த கட்டபொம்மன் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியை வெட்டி வீழ்த்தி வெளியேறினார். ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை அழிக்க கட்டபொம்மனின் தளபதியான தளபதி சுந்தரலிங்கமும் அவரின் காதலி வடிவும் காவலாளியை வெட்டி வீழ்த்தி விட்டு தீப்பந்தத்துடன் வெடிமருந்து கிடங்கை தகர்த்து வீரமரணம் அடைந்தனர். பின்னர் கி.பி.1799ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கினர். அந்த போரில் கோட்டை முழவதும் சேதமடைய தப்பி சென்ற கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையை புதுக்கோட்டை எட்டப்ப நாயக்கர் காட்டி கொடுத்த நிகழ்வில் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களிடம் சிறைப்பட ஊமைத்துரை தப்பி சென்று விட்டார். பின்னர் நீதிமன்றத்தில் விசாரித்து கி.பி.1799ல் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் புளியமரத்தில் தூக்கிலிட்டு கொன்றனர். பின்னர் தப்பி போன ஊமைத்துரை பிடிபட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சி மக்கள் மீண்டும் கோட்டையை கட்டி முடிக்க ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி பாஞ்சாலங்குறிச்சி வந்து அரசாண்டார். மீண்டும் வெள்ளையர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்து கோட்டையை உடைக்க ஊமைத்துரை அங்கிருந்து தப்பி மருது சகோதரர்களுடன் இணைந்து கொண்டார். பின்னர் ஊமைத்துரை பிடிபட்டு கி.பி.1801ல் பாஞ்சாலங்குறிச்சி ஊர்மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.

தீரன் சின்னமலை - விருப்பாச்சி கோபால் நாயக்கர் :


கோவை ஈரோடு பகுதிகளில் தென்னாட்டு புரட்சி படையில் சேர்ந்த தீரன் சின்னமலை மற்றும் நண்பர்கள் திப்பு சுல்தானின் வீரர்களிடம் பயிற்சி பெற்றனர். கி.பி.1800ம் ஆண்டில் கோவை கோட்டையை தாக்க முடிவு செய்த தீரன் சின்னமலை முடிவெடுத்த நாளுக்கு முன்னதாக தாக்குதல் நடத்தி தோல்வியை தழுவினார். அவரின் படைவீரர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இந்த கோவை தாக்குதலுக்கு பிறகு விருப்பாச்சி கோட்டை தாக்கப்பட கோபால் நாயக்கர் தப்பி சென்றார். பணத்திற்காக அவர் காட்டி கொடுக்கப்பட கைது செய்யப்பட்டு திண்டுக்கல்லுக்கு வெளியே ஒரு குளக்கரையில் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார். இதன் பின்னர் ஆவேசமான தீரன் சின்னமலை அடுத்தடுத்து 3 போர்களில் கம்பெனி படையினரை ஒட ஒட விரட்டினார். மூன்றில் ஒரு பங்கு வரி செலுத்துமாறு கம்பெனி இறங்கி வந்தும் சின்னமலை சம்மதிக்கவில்லை. கள்ளிக்கோட்டையிலிருந்து பீரங்கி படையை அனுப்ப தீரன் சின்னமலையும் சகோதரர்களும் கருமலை காட்டுக்குள் சென்று வசிக்க சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட சின்னமலையும் அவன் சகோதரர்களும் கைது செய்யப்பட்டு கி.பி.1805, ஜீலை 31ல் தூக்கிலிடப்பட்டனர்.

கேரளவர்மா பழசி ராஜா :

கோட்டயம் ராஜ வம்சத்தைச் சேர்ந்த கேரளவர்மா பழசி ராஜா ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து ஹைதர் அலியையும் திப்பு சுல்தானையும் எதிர்த்து வந்தார். பின்னர் ஆங்கிலேயரின் சூழ்ச்சி அறிந்து அவர்களை எதிர்த்து பல ஆண்டுகள் எதிர்த்து வந்தார். தென்னாட்டு போர்களில் மருது பாண்டியர்கள்,வேலு நாச்சியார்,கட்டபொம்மன் முதலியவர்களுடன் இணைந்து போராடினார். கடைசியில் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு கி.பி.1805 நவம்பரில் கொல்லப்பட்டார்.

வீரன் வேலுதம்பி :

இவர் திருவாங்கூர் சமஸ்தானத்தை மன்னர் தர்மராஜா ஆண்ட போது அவரிடம் தளவாய்யாக பணியாற்றியவர். கி.பி.1789ல் திப்புசுல்தான் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மீது போர்தொடுத்த போது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் உதவியுடன் முறியடித்தார். இதனால் இருவருக்கும் நல்ல உடன்படிக்கை உறவு இருந்தது. சமஸ்தான படைகளும் சம்பள பிரச்சினை ஏற்பட்டபோது கூட வேலுதம்பி ஆங்கில தளபதி மெக்காலே உதவியுடன் புரட்சியை அடக்கினார். பின்னர் ஆங்கிலேயர்கள் கப்ப தொகையை உயர்த்த இவர் போர்க்கொடி தூக்கினார். மெக்காலே மன்னரை தூண்டிவிட்டு வேலுதம்பியை பதவிநீக்கம் செய்ய மக்களுடன் சேர்ந்து "குண்டறைப் பிரகடனம்" விடுக்க மெக்காலே பயந்து கொச்சிக்கு ஓடினார். கொச்சி மந்திரி வேலுதம்பிக்கு ஆதரவாக இருக்க இரு இடங்களிலும் போர் மூண்டது. வெற்றி தோல்வி இருதரப்புக்கும் மாறி மாறி ஏற்பட போர்களத்தில் தோல்வியை தழுவும் நிலையில் வெள்ளையர் கையால் சாவதை விரும்பாத வேலுதம்பி தனது படைத்தளபதியிடம் தன்னை வெட்டி கொல்ல உத்தரவிட்டும் அவர் அதை செய்ய மறுக்கவே தனது வாள் கொண்டு தன் கழுத்தை அறுத்துக்கொண்டு கி.பி.1809ல் மாண்டார்.

ஜயகிருஷ்ண ராஜகுரு மஹாபாத்ரா - ஜகபந்து  :

இவரது பரம்பரையினர் ஒரிஸ்ஸாவின் குர்தா மன்னரின் ராஜகுருவாக பணியாற்றினார்கள். அவர்களின் வழியில் இவரும் இராஜகுருவாக இருந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் அண்டை நாடுகளை தம் வசப்படுத்தி வந்த நிலையில் இவர் கம்பெனியின் படைகளை எதிர்த்து நின்றார். இவரின் துணிச்சலான முயற்சியால் மற்ற குறுநில மன்னர்களும் இவரது அணியில் இணைந்தனர். பழங்குடி இன மக்களின் ஆதரவுடன் கி.பி.1804ல் மகாநதி கரையில் ஆங்கில படைகளை ஓட ஓட விரட்டியடித்தார். பின்னர் மெட்ராஸிலிருந்து வந்த படைகளையும் தோற்கடித்து விரட்ட மீண்டும் "பரூனி" யுத்தகளத்தில் ஆங்கிலேயர் லஞ்சம் கொடுத்தும் நிலங்கள் தருவதாகவும் வாக்களித்து  சிலரை தம் பக்கம் இழுத்து இராஜகுருவை மறைந்திருந்த இடத்தில் கைது செய்தனர். நீதி விசாரணையில் மன்னிப்பு கேட்க மறுத்த அந்த மாவீரனை இரு மரங்களின் கிளைகளை இழுத்து பிடித்து இரு கால்களையும் ஒவ்வொரு கிளையில் கட்டி கிளையை விட்டு விட கை வேறு கால் வேறு உடல் பிளந்து துடிதுடிக்க கி.பி.1806 டிசம்பர் 12ல் கொன்றனர். இதன் பிறகு பைக்கா இன மக்கள் பொறுமையாக காத்திருந்தனர். குர்தா படைத்தலைவனான ஜகபந்து குர்தா அரசனை கம்பெனியினர் பதவியிலுருந்து இறக்க மக்களை திரட்டி கி.பி.1817ல் மக்கள் புரட்சியில் இறங்க காவல் நிலையங்கள், தபால் நிலையங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் கிழக்கிந்திய கம்பெனியின் படை கட்டாக்,பூரி, குர்தா பகுதிகளுக்கு சென்று குர்தா மன்னனை சிறைபிடித்தனர். 8 வருடங்கள் தலைமறைவாக மிரட்டி கொண்டிருந்த ஜகபந்து கி.பி.1825ல் சரணடைந்து கி.பி.1829ல் சிறையில் மரணமடைந்தார்.

வேலூர் சிப்பாய் புரட்சி:

வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியினர் திப்புசுல்தான் மகனையும் குடும்பத்தினரையும் அடைத்து வைத்திருந்தனர். அவர்களை கண்காணிக்க லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் ஒருவரை அமர்த்தி கண்காணித்தனர். திப்புவின் குடும்பத்தினரின் தேவைகளை கவனிக்க முஸ்லீம் ஊழியர்களை நியமிக்க புரட்சியாளர்கள் ஊழியர் போர்வையில் திப்புவின் மூத்த மகன் படேல் ஹைதருடன் ரகசிய ஆலோசனைகள் செய்து வந்தனர். கி.பி.1806ல் ஜுலை 7ம் நாள் புரட்சியாளர்கள் தலைவன் நூர் முகம்மது  படேல் ஹைதரை சந்தித்து வந்த பின் ஜூலை 10ம் தேதி இரவு 2மணிக்கு புரட்சி சிப்பாய்கள் ஒன்று கூடி ஆயுதங்கள் தாங்கி ஆங்கிலேய படை அதிகாரிகளை கொன்று குவித்தனர். 100க்கு மேற்பட்ட ஆங்கில சிப்பாய்கள் கொல்லப்பட கோட்டையில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் சிப்பாய்களின் வசம் வந்தது. கோட்டை முழுவதும் கைப்பற்ற பின்னர் புரட்சி வீரனில் ஒருவர் கஜானா இருக்குமிடத்தை கண்டுபிடித்து உடைத்து தங்க நாணயங்களுடன் வெளியே வர பொதுமக்களும் தங்கம் கிடைக்கிறது என்று குவிய இந்த குளறுபடியால் ஆற்காட்டில் இருந்து கர்னல் இஸ்லேபியின் குதிரைப்படை காலை 9 மணிக்கு கோட்டைக்குள் உள்ளே நுழைந்து புரட்சியாளர்கள் பொதுமக்கள் என வித்தியாசம் இல்லாமல் 300 பேருக்கு மேல் கொன்று குவித்து 600 பேரை கைது செய்து தண்டனை அளித்தனர். சுதந்திரத்திற்காக நடைபெற்ற இந்த போராட்டமே முறையான முதல் சுதந்திர போர் என்று சாவர்க்கார் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் பணத்தாசை காரணமாக இந்த சிப்பாய் புரட்சி தோல்வியில் முடிந்தது.

மதராஸ் சிப்பாய் புரட்சி:

ஸர் ஜார்ஜ் பார்லோ தற்காலிக கவர்னர் ஜெனரல் பதவி வகித்த பின் கி.பி.1808ல் சென்னை கவர்னராக நியமிக்கப்பட்டார். இராணுவத்துக்கு டென்டர் விஷயங்களில் சில ராணுவ அதிகாரிகள் லஞ்சம் மற்றும் ஊழல் புரிந்தனர். இதனால் அதை கவர்னர் நிறுத்தவும் அதிகாரிகள் கொதித்து எழுந்து கவர்னருக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை. 3 ராணுவ அதிகாரிகள் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இந்த நிலையில் கவர்னர் ஜெனரலுக்கு கவர்னரை நீக்குமாறு கடிதம் எழுதப்பட தலைமையகம் கவர்னருக்கு ஆதரவாக நிற்க இராணுவ கலகம் அடக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆங்கில சிப்பாய்கள் மட்டுமே கலகத்தில் ஈடுபட்டனர். இந்திய சிப்பாய்கள் கம்பெனியுடன் எந்த தகராறும் இல்லை.

ராணி சென்னம்மா - சங்கொலி ராயன்னா : 

பெல்காமுக்கும் தார்வாருக்கும் இடைப்பட்ட சிறு பிரதேசம் தான் கிட்டூர். மராத்தியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மராத்திய பரம்பரையில் வந்த அரசன் மல்லசர்ஜா கி.பி.1782-1816 வரை ஆண்டார். மல்லசர்ஜா இளைஞரான இருந்த சமயத்தில் வேட்டைக்கு சென்ற சமயத்தில் புலியின் மீது அம்பெய்தி கொன்றார். அதே நேரத்தில் புலியின் மீது இன்னொரு அம்பும் பாய்ந்திருந்தது. குதிரையில் வந்த காகத்தி நாட்டு இளவரசி சென்னம்மாவின் அம்பு தான் அந்த இன்னொரு அம்பு. சென்னம்மாவின் வீரத்திலும் அழகிலும் மயங்கிய மல்லசர்ஜா அவரை திருமணம் செய்து கொண்டார். மல்லசர்ஜாவின் 2வது மனைவியான சென்னம்மா அரசவை நிர்வாகத்தில் பங்கு கொண்டார். கி.பி.1816ல் மல்லசர்ஜா இறங்கவே அவர் மகன் சிவலிங்க ருத்ர சர்ஜா அரசு ஏறினார். அவரும் வாரிசில்லாமல் இறக்க சென்னம்மாவின் ஒரே மகனும் இறக்க வாரிசு பிரச்சினைக்காக சென்னம்மா ஒரு சிறுவனை தத்தெடுக்க முயன்றார். ஆங்கில கம்பெனியினர் அதை ஏற்றுக்கொள்ளாமல் அரசை பிடுங்கிக்கொண்டு சென்னம்மாவுக்கு பென்ஷன் வழங்குவதாக கூறினார்கள். இனி பொறுப்பதில்லை என்று முக்கிய தலைவர்களை சந்தித்து புரட்சியின் மூலம் ஆங்கில அதிகாரிகளை கைது செய்து கோட்டையை கைப்பற்றினார். விடுதலை செய்த அதிகாரிகள் துணையுடன் பெரும்படையுடன் கலெக்டர் தாக்கரே கோட்டை கதவை தகர்த்து உள்ளே நுழைய ராணி அம்பு மழை பொழிந்து ஆங்கிலேயரை விரட்டினார். கலெக்டர் தாக்கரேயின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. கி.பி.1824 அக்டோபர் 23ம் தேதி நடந்த இந்த போர் முடிவில் ஆங்கிலேயர்கள் சென்னம்மாவின் வீரத்தையும் அவரை குறைத்து மதிப்பிட்டதையும் உணர்ந்து பெரும்படையுடன் வந்து சென்னம்மாவை போரில் சிறைபிடித்தனர். ராணியின் திட்டங்களுக்காக அவரின் தளபதியான சங்கொலி ராயன்னா ஆங்கிலேயர்க்கு பெரும்தலைவலியாக கொரில்லா முறையில் போரிட்டார். மாவீரரான அவர் அவரது இனத்தை சார்ந்த சிலரால் காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ராணி சென்னம்மா பிப்ரவரி 2,1829ல் சிறைச்சாலையில் மரணமடைந்தார்.

சர் தாமஸ் மன்றோ :

ஆதிக்கத்தை செலுத்தினாலும் மக்கள் நலனுக்காக சில நல்ல திட்டங்களை ஆங்கிலேய கவர்னர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். கி.பி.1820ல் சென்னை கவர்னராக வந்த சர் தாமஸ் மன்றோ திண்ணை பள்ளிக்கூடங்களுக்கும் நிதியுதவி அளித்தார். பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மதராஸ் ஸ்கூல் புக் சொஸைட்டியை ஏற்படுத்தினார். இந்திய கலாச்சாரத்தினை மதித்தார். இவருடைய நிர்வாகத்தில் நிறைய இந்தியர்களுக்கு வாய்ப்பளித்தார். அனைத்து தரப்பு மக்களிடமும் கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஒரு அறக்கட்டளையை நிறுவினார். இவரது காலத்தில் தான் சென்னையில் ரயத்துவாரி வரிவசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிர்வாக செயல்பாடுகள் வட்டார மொழிகள் இருக்கவேண்டும் என்று அதற்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். மிகவும் நேர்மையானவராக இருந்ததால் ஆங்கிலேய அரசு அவருக்கு கவர்னர் ஜெனரல் பதவி அளிக்க வந்தது. மன்றோ அப்பதவியை மறுத்து இறுதிகாலத்தை தாய்நாட்டில் கழிக்க ஆசைப்பட்டு தாய்நாடு திரும்பும் முன் முன்பு பணி செய்த கடப்பா மாவட்ட மக்களை பார்க்க சென்ற நேரத்தில் அங்கு பரவிய காலரா நோய் தாக்கி கி.பி.1827 ஜூலை 6ம் தேதி இறந்து போனார். அவரது உடல் சென்னை ஜார்ஜ் கோட்டையிலுள்ள செயிண்ட் மேரீஸ் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மனைவி தர்மபுரியில் நினைவிடத்தை அமைத்துள்ளார். இன்றும் அந்த இடத்தில் மன்றோ நினைவு தூண் உள்ளது.

சீக்கியர்கள் :

கி.பி  1806 இல் மராட்டியர்கள் தளபதியான ஹோல்கருக்கும்  ஆங்கிலேயர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் மராத்தியர்களின் விரட்டி வர அவர்கள் அமிர்தசரஸ் நகருக்குள் அடைக்கலம் புகுந்தனர். இந்த நேரத்தில் ரஞ்சித்சிங் மகராஜ் என்ன செய்வது என்று கல்சா அமைப்பிடம் முடிவு எடுக்க சொன்னார். கடைசியில் ஆங்கிலேயர்களுடன் சமாதானமாக போகுமாறு சீட்டு வரவே மராத்தியர்கள் இடம் சமாதானமாக செல்லுமாறு அறிவுறுத்தினார். கடைசியில் சீக்கியர்கள்- ஆங்கிலேயர் ஒப்பந்தம் 1806 கையெழுத்தானது. அதே நேரத்தில் கிழக்கிந்திய கம்பெனி தன் மீது எப்போதும் படையெடுக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் தனது இராணுவத்தை பலமாக வைத்திருக்க ஜரோப்பியர்களை படையில் சேர்ந்து நவீன ஆயுதங்களை தனது படையினருக்கு இயக்குவதற்கு பயிற்சி அளித்திருந்தார். ஆப்கன் மீது படையெடுத்து பெஷாவர் மற்றும் முல்தானை கைப்பற்றினார். ஜம்மு காஷ்மீரையும் பஞ்சாப்புடன் இணைத்தார். சீக்கியர்கள் வளர்ந்து வருவது கிழக்கிந்திய கம்பெனியிருக்கு உறுத்தலாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் பலமாக இருந்தது மராத்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் தான். மராத்தியர்களை வீழ்த்தி கைக்குள் அடக்கியபிறகு மீதி இருந்தது சீக்கிய அரசு. இந்த நேரத்தில் ரஞ்சித் சிங் மரணமடைய அவருக்கு பின்னர் அவரது மகன்கள் ஆட்சிக்கு வந்தனர். உட்பூசல்கள் காரணமாக சீக்கிய அரசு பலவீனமாக இருந்த நேரத்தில் கி.பி.1845ல் பெரோஸெபூர் என்ற இடத்தில் நடந்த போரில் சட்லஜ் மற்றும் பயஸ் நதிக்கு இடையேயான பிரதேசங்கள் கம்பெனி வசம் வந்தது. பின்னர் காஷ்மீரையும் கைப்பற்றியது. அந்த நேரத்தில் ரஞ்சித் சிங்கின் 7 வயது மகனான துலீப் சிங் ஆட்சியில் இருந்தார். இதற்காக தேசத்தை மேற்பார்வையிடும் பொறுப்பை கம்பெனியே எடுத்துக்கொண்டு சில அதிகாரிகளை பஞ்சாப்பில் விட்டு வைத்தது. கி.பி.1848ல் சீக்கிய படை வீரர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அதிகாரியை கொலை செய்தனர். மறுபடியும் பிரிட்டிஷ் படை பஞ்சாப்பில் புகுந்தது. இரண்டாவது சீக்கிய யுத்தம் கி.பி.1848ல் ஆரம்பித்து கி.பி.1849ல் இருதரப்புக்கும் லாகூர் ஒப்பந்தத்தின் மூலம் முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப்பும் கம்பெனி வசமாகியது. துலீப் சிங் கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க அது விக்டோரியா மகாராணி வசம் சென்று சேர்ந்தது. துலீப் சிங் ஒய்வூதியம் பெறும் மன்னரானார். இவ்வாறாக ஒவ்வொரு பிரதேசங்களும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. அவகாசியிலிக் கொள்கை மூலம் வசப்படுத்திய நாடுகளின் வாரிசுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் அவர்களின் கோபங்கள் எல்லாம் சேர்ந்து சிப்பாய் புரட்சியில் ஒன்றாக சேர்ந்து வெடிக்க நாடு மிகப்பெரிய கலவரத்தை சந்தித்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை இந்த புரட்சி முடித்து வைத்து பிரிட்டனின் காலனி நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை அடையாளம் காட்டியது.

உதவிய நூல்கள்:

இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசாமி

இந்தியா உருவான கதை - க.சிவஞானம்

விக்கிபீடியா தகவல்கள்

படங்கள் :

கூகுள் படங்கள்

Comments

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு