97) சிப்பாய் புரட்சி (முதல் இந்திய சுதந்திர போர்)
சிப்பாய் புரட்சி (அல்லது) முதல் இந்திய சுதந்திர போர் (1857-1858):
இந்திய நாடு முழுவதும் சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் ஆண்ட மன்னர்களின் ஒற்றுமையின்மையாலும் உதவி செய்வதாகவும் கூறி மெல்ல மெல்ல தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து நாட்டை முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் உள்ளுக்குள் இந்திய மன்னர்களின் மற்றும் சிப்பாய்களின் மனதில் நெருப்பு கனன்று கொண்டிருந்ததை அப்போதைய கவர்னர் ஜெனரலான டல்ஹவுசி பிரபு அலட்சியப்படுத்தியதின் விளைவு சிப்பாய் புரட்சி அல்லது முதல் இந்திய சுதந்திர போர் என்றழைக்கப்படும் சிப்பாய்களால் ஆரம்பிக்கப்பட்ட புரட்சியே ஆகும். இதன் அதிர்வலைகள் வட இந்தியா முழுவதும் பரவின. ஆனாலும் அந்த நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் அந்த புரட்சி ஏற்படவில்லை. ஏன் ? தொலைதொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததாலும் புரட்சியை ஆரம்பித்த சிப்பாய்கள் ஒருங்கிணைப்பு இல்லாததாலும் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் புரட்சி ஏற்படாததாலும் தென்னிந்தியா பகுதிகளில் இருந்து (மதராஸ் பகுதிகளில் இருந்து படை கிளம்பி வட இந்தியாவில் ஏற்பட்ட புரட்சியை அடக்கியது) படை சென்று புரட்சியை அடக்கியதாலும் புரட்சியாளர்களால் முன்னிறுத்திய இரண்டாம் பகதூர் ஷா (மொகலாய மன்னர்) முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் ஏன் மீண்டும் மீண்டும் அடுத்த மதத்தவர்கள் ஆட்சியில் இந்தியா இருக்க வேண்டுமா? என்ற காரணத்தால் புரட்சியாளர்கள் ஒற்றுமையின்மையாலும் சீக்கியர்கள் இரண்டாம் பகதூர் ஷாவை மீண்டும் மன்னராக்குவதை ஆதரிக்காமல் புரட்சியில் கலந்து கொள்ளாமலும் இருந்ததே புரட்சியின் தோல்விக்கு காரணமாயிற்று. சிப்பாய் புரட்சி நடக்கும்போது கிழக்கிந்திய படையில் 50000 ஆங்கில,ஜரோப்பிய சிப்பாய்களும் 200000 இந்திய சிப்பாய்களும் இருந்தனர். சிப்பாய்களில் முக்கால்வாசி பேர் விசுவாசம் என்ற பெயரில் புரட்சியில் ஈடுபடாமல் போனதாலும் புரட்சி பிசுபிசுத்தது. சீக்கியர்கள் படை வீரர்கள் அந்த நேரத்தில் கிழக்கிந்திய படையில் சேர்ந்து பணியாற்றிய காரணத்தால் புரட்சியில் ஈடுபடாமல் தவிர்த்தனர்.
சிப்பாய் புரட்சிக்கு முதல் வித்து வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலத்தில் ஆரம்பித்தது. பிளாசி போரிலும் பாக்ஸர் யுத்தத்திலும் கம்பெனி படைகளுக்கு எதிராக போரிட்டவர்கள் இராணுவத்தில் இணைந்ததை சந்தேக கண்ணுடன் பார்த்தார். அதனால் அயோத்தி காசி பகுதிகளிலிருந்து இராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்தார். பெரும்பாலும் கிராமப்புற பிராமணர்கள் மற்றும் இராஜபுத்திர உயர் சாதி இந்துக்களை தேர்வு செய்தார். உடற் தகுதியை விட சாதி முக்கியமான தகுதியாக கருதப்பட்டது. இராணுவத்தில் சேர்ந்த உயர்ஜாதி இந்துக்களுக்கு கடல் கடந்து வெளிநாடு செல்லுவது அவர்களின் மத நம்பிக்கைப்படி விலக்கு அளிக்கப்பட்டது கல்கத்தாவில் மட்டும் பின்பற்றப்பட்டது. அங்கு அவர்கள் தனியாக உணவு உண்ணும் வசதியும் மத நம்பிக்கை சம்பிரதாயங்களை பின்பற்றவும் சென்னை பம்பாய் மாகாணங்களில் இல்லை. டல்ஹவுசி பிரபு இந்த வேறுபாட்டை களைய முயற்சி செய்தாலும் அவருக்கு பின் வந்த கானிங் பிரபு புதிதாக சேருபவர்களுக்கு வெளிநாட்டு சேவையில் விலக்கு கிடையாது என்றும் அறிவித்தார். இதனால் ராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய்கள் அந்த சலுகை தங்களுக்கும் பறிக்கப்பட்டு விடுமோ என்று பயந்தனர். அதனால் தங்கள் வாரிசுகளை ராணுவத்தில் சேர்ப்பதை தவிர்த்தனர். உள்ளுக்குள் குமுறி கொண்டு இருந்தவர்களுக்கு மற்றொரு பிரச்சினை பிரிட்டிஷ் ராணுவத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கி வடிவில் வந்தது. புரட்சியின் முதல் விதை பாரக்பூர் ராணுவ முகாமில் ஆரம்பித்தது. கி.பி.1857 மார்ச் 29ம் தேதி "மங்கள் பாண்டே" என்ற பிராமண வீரன் என்ஃபீல்டு துப்பாக்கியின் தோட்டாக்களில் காகித மேலுறையில் மசகு எண்ணெய்யாக பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவியிருப்பதாக கூறி அந்த துப்பாக்கியை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி மற்ற ராணுவ வீரர்களையும் சேர்த்து கொண்டு புரட்சியில் ஈடுபட்டார். சார்ஜெண்ட் மேஜர் ஹியூஸன் மங்கள் பாண்டேவை கைது செய்ய மற்ற வீரர்களுக்கு கூற அவர்கள் மறுக்கவே அமளிதுமளியில் மங்கள் பாண்டே தனது துப்பாக்கியால் சார்ஜெண்ட் மேஜரை சுட்டு கொல்ல கர்னல் வீலர் விரைந்து சென்று ஜெனரலை சந்தித்து விவரம் கூறி ஐரோப்பிய வீரர்களை அழைத்து வந்து மங்கள் பாண்டேவை கைது செய்ய முயல அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து புரட்சியில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று வினவ மற்றவர்களை காட்டி கொடுக்க மறுத்தார். பராக்பூரில் தூக்கிலிடுபவர் இல்லாததால் கல்கத்தாவிலிருந்து ஆளை வரவழைத்து கி.பி.1857 ஏப்ரல் 8ம் தேதி மங்கள் பாண்டேவை தூக்கிலிட்டனர்.
மங்கள் பாண்டேவை தூக்கிலிடப்பட்ட பின்னர் 34வது படைப்பிரிவை ஆங்கில கம்பெனி அரசு கலைத்து விட்டது. ரகசிய கூட்டங்கள் நடத்தியதாக அதன் சுபேதார் ஈஸ்வரி பிரசாத்திற்கு மரண தண்டனை கொடுத்தனர். வேலையிழந்த சிப்பாய்கள் சந்தோஷமாக சீருடைகளை கிழித்து எறிந்து விட்டு நதியில் நீராடி கடவுளுக்கு நன்றி சொல்லினர். இராணுவ குல்லாய்களை தரையில் போட்டு மிதித்தது ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தது. சிப்பாய்கள் அம்பாலா நகரில் இரவில் ஆங்கிலேய அதிகாரிகளின் வீடுகளுக்கு தீ வைத்தனர். கி.பி.1857 மே-31ம் தேதி இந்துஸ்தானம் முழுவதும் ஒரே நேரத்தில் புரட்சியை தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது தான் ஆங்கிலேயர்களால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு படையை நகர்த்த முடியாது என்று திட்டம் போட்டனர். ஆனால் அதற்கு முன்பே லட்சுமணப்புரி வீரர்களால் பொறுத்திருக்க முடியவில்லை. மெக்காம் என்ற அதிகாரியை தாக்கி உயிர்ப்பிச்சை அளித்து விரட்டினர். அவர் விரைந்து சென்று உயர் அதிகாரியிடம் விவரத்தை சொல்ல மீரட் படைத்தளத்தின் அதிகாரி கர்னல் மைக்கேல் ஸ்மித் சிப்பாய்கள் கொழுப்பு தடவிய தோட்டாக்களை உபயோகிக்கிறார்களா என்று பார்க்க அணிவகுப்பை நடத்த 90 பேரில் 5 பேரை தவிர மற்றவர்கள் உபயோகிக்க மறுத்து விட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மே 9ம் தேதி தண்டனை பெற்றவர்களை மைதானத்தில் நிறுத்தி அவர்களின் சீருடையை அகற்றினர். மாலை 5 மணிக்கு சிப்பாய்கள் விரைந்து சென்று சிறைக்கதவுகளை உடைத்து சிப்பாய்களை மீட்டனர். தளவாடக்கிடங்கை உடைத்து ஆயுதத்தை சிலர் கைப்பற்ற கடைக்காரர்கள் கடையை மூடிவிட்டு உள்ளேயே பதுங்கி கொண்டனர். கிராமவாசிகள் திருட்டு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள் கொலை கொள்ளையில் இறங்கினார்கள். ஒரு வீரன் கர்னல் ஃபின்னிஸ்ஸை சுட்டு கொன்றான். புரட்சியாளர்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் ஆங்கில அதிகாரியின் மனைவியை வெட்டி கொன்றனர். மீரட்டில் ஆயுதமேந்திய 1500 ஐரோப்பிய வீரர்கள் படை இருந்தது. இந்த நேரத்தில் சில புரட்சியாளர்கள் ரோஹில்கண்ட் சென்றனர். பெரும்பாலோனோர் டெல்லி சென்றனர். ஆங்கில படை புரட்சியாளர்களை பின்தொடர்ந்தது டெல்லி சென்றிருந்தால் டெல்லி புரட்சியாளர்கள் கையில் விழுவதை தவிர்த்திருக்கலாம். சுங்க சாவடி அதிகாரியை சுட்டு கொன்று டெல்லியின் உள்ளே நுழைந்து யமுனை ஆற்றை படகுகளின் மூலம் கடந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.
டெல்லி அரண்மனைக்கு வெளியே கூச்சல் குழப்பம் கேட்டவுடன் இரண்டாம் பகதூர் ஷா புரட்சியாளர்கள் டெல்லிக்கு நுழைந்து விட்டனர் என்று உணர்ந்து தனது நம்பிக்கைக்குரிய ஆலோசகர் ஹக்கீம் அசனுல்லாவை கூப்பிட்டு அனுப்பி நிலவரத்தை கேட்டறிந்தார். புரட்சிக்கு இரண்டாம் பகதூர் ஷா தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்று கூற இரண்டாம் பகதூர் ஷா பிடி கொடுக்க வில்லை. ஆனால் அவரது மகனான "மிர்ஸா மொகல்"க்கு திரும்பவும் ஆட்சியை பிடிப்பதில் ஆசை இருந்ததால் பகதூர் ஷாவை தலைமை தாங்க சம்மதிக்க வைத்தார். ஆனாலும் புரட்சியாளர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள் என்று உணர்ந்த பகதூர் ஷா ஆங்கிலேயரிடமும் கலகக்காரர்கள் மீரட்டில் இருந்து டெல்லி வந்து விட்டார்கள் என்ற செய்தியை ஆக்ராவில் தங்கியிருந்த லெஃப்டினென்ட் கவர்னருக்கு செய்தி அனுப்பினார். ஒரு வழியாக கலகக்காரர்களின் வேண்டுக்கோளுக்கு அவரின் வாரிசுகளின் வற்புறுத்தலினால் படைக்கு தலைமையேற்க ஒப்புக்கொண்டு 21 பீரங்கிகள் முழுங்க அவர் ஆட்சிபீடம் ஏறினார். டெல்லி முழுமையாக புரட்சியாளர்கள் வசம் வந்தது. தார்யா கஞ்ச் பகுதியில் இருந்த கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் கொல்லப்பட்டனர். வங்கி கொள்ளையடிக்கப்படடது. வங்கி அதிகாரி மற்றும் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டனர். "டெல்லி கெஜட்" என்ற செய்தித்தாள் அச்சகமும் பணியாற்றியவர்களும் தாக்கப்பட்டனர். நகருக்குள் வேட்டையாடி 50 ஐரோப்பியர்களை அரண்மனைக்கு இழுத்து சென்று கொன்றார்கள். ஐரோப்பியர்கள் கர்னால், அம்பாலா, மீரட் பகுதிகளுக்கு ஒடி தங்கள் நாட்டவருடன் ஒன்று சேர்ந்து கொள்ள முயற்சி செய்தனர். டெல்லியின் ஆயுதக் கிடங்கு ஆங்கிலேயர்கள் புரட்சியாளர்கள் கைப்பற்ற முயற்சி செய்ததால் தீ வைத்து ஆயுதகிடங்கை வெடிக்க வைத்ததில் 25 புரட்சியாளர்களும் 300 பொதுமக்களும் இறந்தனர். டெல்லி முழுமையாக புரட்சியாளர்கள் வசம் வந்தது.
கி.பி.1857 மே மாதத்தில் கான்பூரில் 3000 வீரர்கள் இருந்தனர். மீரட் டெல்லி ஆகியவற்றில் நடந்த கலவரங்கள் கான்பூருக்கு வந்தது. உதவிபடை கான்பூருக்கு வருவது வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார். கோதுமை மாவில் பன்றி,மாட்டு எலும்புகள் கலந்திருப்பதாக வதந்தியால் ஐரோப்பிய முகாமில் பதற்றம் ஏற்பட்டது. அதிகாரிகள் தங்கள் மனைவி குழந்தைகளின் பாதுகாப்புக்காக மராத்திய பேஷ்வாவாக இருந்த இரண்டாம் நானா சாகிப் அகழி சூழ்ந்த கோட்டையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து கருவூலத்தை காப்பாற்றும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். ஆங்கில குதிரைப்படை சிப்பாய் இந்திய சிப்பாய்யை குடிவெறியில் கொன்று விடவே ஆங்கில சிப்பாய்யை நீதிபதி போதையில் சுயநினைவில்லாமல் செய்து விட்டார் என்று கூறி விடுதலை செய்ததும் இந்திய குதிரை படையினரும் காலாட்படையினரும் கருவூலத்தை கைப்பற்றி சூறையாடினர். படைக்கு தலைமையேற்க நானா சாகிப்பை வலியுறுத்த டெல்லி சென்று பகதூர் ஷாவை சந்திக்க சென்றவர் பாதி வழியில் புரட்சியின் தலைவர் பகதூர் ஷா என்று நீங்களே ஒப்புக்கொண்டால் அவருக்கே முக்கியத்துவம் கிடைக்கும். நீங்கள் கான்பூரில் இருந்து புரட்சியை தொடர்ந்தால் தனிப்பெரும் தலைவர் என்ற மதிப்பு கிடைக்கும் என்று அவர் ஆலோசகர் கூறியதால் கான்பூர் திரும்பி வந்தார்கள். கோட்டையை சுற்றி அகழி அரணை தாக்கபோவதாக நானா சாகிப் கேப்டன் வீலருக்கு கடிதம் எழுதினார். கான்பூரில் தன்னை சுயேட்சை மன்னராக நானா சாகிப் அறிவித்து கொண்டார். ஜெனரல் டிக்கா சிங் என்பவர் சேனாதிபதியாக பொறுப்பேற்றார். 21 நாட்களுக்கு பிறகு ஆயுதங்கள் தாங்கி ஆங்கிலேயர்கள் கோட்டையை விட்டு வெளியேற நானா சாகிப் ஒப்புக்கொண்டார். பீரங்கிகள் போர் தளவாடம் ஆகியவற்றை நானாவிடம் ஒப்படைத்து அலகாபாத் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர்களை பத்திரமாக வெளியேற்றும் பொறுப்பை "தாந்தியா தோபே" ஏற்றிருந்தார். கோட்டையிலிருந்து படகுதுறைக்கு வெளியேறும் சமயத்தில் படகோட்டிகள் தண்ணீரில் எகிறி குதித்து ஒடியதும் வெள்ளைக்காரர்கள் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். உடனே கரையில் இருந்த சிப்பாய்கள் திருப்பி சுட ஆரம்பிக்க சில படகுகள் கவிழ்ந்தன. படகுகள் தீப்பிடிக்க ஆரம்பித்தது. சிப்பாய்களின் கையில் கிடைத்த ஆங்கிலேயரின் தலைகள் வெட்டியெறியப்பட்டன. ஆற்றங்கரையில் கலவரம் நடப்பதை அறிந்த நானா சாகிப் பெண்களையும் குழந்தைகளையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று உத்தரவு அனுப்ப 125 பெண்களும் குழந்தைகளும் படுகொலையிலிருந்து தப்பினர். இந்த படுகொலைகள் தாந்தியா தோபே மற்றும் பாலா சாகிப் தூண்டுதலின் பேரில் தான் நடந்தது என்றும் கூறுகிறார்கள்.
கி.பி.1847ல் அயோத்தி நவாப்பாக பதவியேற்ற வாஜித் அலி ஷாவை ஆங்கிலேயர்கள் பதவி நீக்கம் செய்து தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். கி.பி.1857 மே 2ம் தேதி அயோத்தி சிப்பாய்களும் என்பீல்ட் துப்பாக்கியை பயன்படுத்த மறுக்க அவர்களை நோக்கி பீரங்கிகளை திரும்ப அவர்கள் ஓட்டம் பிடிக்க அவர்களை இழுத்து வந்து மைதானத்தில் நிறுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்டனர். படைத்தலைவர் ஹென்றி லாரன்ஸ் சிப்பாய் பிரிவு தலைவர்களையும் சிப்பாய்களையும் கூட்டத்தில் அழைத்து வீரர்களின் மனதை கவர முயன்றார். லக்னோவை சுற்றி பல இடங்களில் ஆங்கில படை தங்கியிருந்தது. தினமும் புரட்சியை எதிர்பார்த்த ஆங்கிலேயர் ஏமாந்து போயினர். பின்னர் மே30ம் தேதி இரவு 9 மணிக்கு புரட்சியாளர்கள் தாக்குதலை தொடங்கினர். இராணுவ உணவு விடுதிக்கு தீ வைக்கப்பட்டது. கட்டிலுக்கு அடியில் பதுங்கிய லெப்டினென்ட் கிராண்ட்டை வெளியே இழுத்து கொன்றனர். ஹாண்ட்ஸ் கூப் என்ற அதிகாரியும் கொல்லப்பட்டார். மறுநாள் 7வது குதிரைப்படை பிரிவும் புரட்சியாளர்களுடன் சேர்த்தனர். 50 மைல் தொலைவில் இருந்த சீதாப்பூர் ராணுவ முகாமுக்கு சென்ற புரட்சியாளர்கள் ஆங்கிலேயர் வீடுகளுக்கு தீ வைத்தனர். அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் பின்னர் ஃபருகாபாத் கோட்டைக்கு சென்று அதிகாரிகளை விரட்டியடித்தனர். நவாப் ஹீசேன்கான் மீண்டும் ஆட்சியேறினார். அயோத்தியின் கிழக்கு மாகாணமான பைஜாபாத் படை முகாமில் இருந்த ஆங்கிலேயர்கள் வேறு வழியின்றி மான்சிங் என்ற செல்வாக்கான தலைவரிடம் தஞ்சம் புகுந்தனர். இந்திய சிப்பாய்கள் அன்னியர் உத்தரவுக்கு கட்டுப்படமுடியாது என்றும் சுபேதார் திலீப் சிங் தான் படைத்தலைவர் என்று அறிவித்தனர். சிறைபிடிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அயோத்தி முழுவதும் புரட்சித் தீ கொழுந்து விட்டு எரிந்தது. புரட்சியாளர்கள் கூட்டம் லக்னோவில் கூடியது. வாஜித் அலி ஷாவின் அதிகாரம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். அடைக்கலம் தேடிய ஆங்கிலேயர்களை பொதுமக்கள் அன்புடன் ஆதரித்து தங்க இடமும் உணவும் கொடுத்து உதவினார்கள்.
மீரட்டிலிருந்து டெல்லிக்கு புரட்சியாளர்கள் புகுந்து விட்டார்கள் தீ வைப்பு சம்பவங்கள் நடக்கின்றன என அம்பாலா,லாகூர், ராவல்பிண்டி ஆகிய இடங்களுக்கு தந்திகள் பறந்தன. இதற்கிடையில் டெல்லி குழப்பத்தில் தடுமாறியது. புரட்சியாளர்களுக்கு உணவும் இருப்பிடமும் இல்லை. ஐரோப்பியரை தேடும் சாக்கில் மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட்டது. கடைகள் மூடபப்ட்டு வியாபாரம் நடைபெறவேயில்லை. பேரரசர் யானையில் அமர்ந்தபடி நகரில் தெருத்தெருவாக வலம்வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் கொலை கொள்ளைகள் சகஜமாக நடந்தது. பேகம் ஜுனத் மஹாலை ஆங்கிலேயரின் கையாள் என்றே புரட்சியாளர்கள் நினைத்தனர். மீரட் புரட்சியாளர்களுக்கும் டெல்லி வீரர்களுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. மீரட்டிலிருந்து வந்தவர்கள் தாங்கள் பசி பட்டினியால் வாடுவதாகவும் டெல்லி வீரர்கள் கருவூலத்தை கொள்ளையிட்டு செல்வம் சேர்த்து விட்டதாகவும் குறை கூறினார்கள். இந்த நிலையில் டெல்லிக்கு 5 மைல் வெளியே நடந்த சண்டையில் புரட்சியாளர்களின் 26 பீரங்கிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி டெல்லியை சுற்றியுள்ள குன்று பகுதிகளை தம் வசப்படுத்தினர். டெல்லியை கைப்பற்றினால் புரட்சியாளர்கள் மனரீதியாக ஒடுங்கி விடுவார்கள் என்று டெல்லிக்கு பஞ்சாப்பிலிருந்து படைகள் கூடுதலாக அனுப்பப்பட்டது. புரட்சிபடைகளும் எல்லா இடங்களில் இருந்து வந்து குவிந்தது. பிரிட்டிஷ் துப்பாக்கி படையில் 40 வருடம் பணிபுரிந்து அனுபவம் பெற்ற "பக்த் கான்" பேரரசின் ஆசிர்வாதத்துடன் புரட்சி படைகளுக்கு தலைவரானார். இதற்கிடையில் ஆங்காங்கே புரட்சி வீரர்கள் ஆங்கில படையுடன் மோதிக்கொண்டு இருந்தனர். அம்பாலாவிருந்து 2500 வீரர்கள் அடங்கிய படையுடன் நிக்கல்சன் என்ற அதிகாரி டெல்லி வந்ததும் ஆங்கில படைக்கு புதுப்பலம் கிடைத்த தெம்பில் "ரோதக்" என்ற இடத்திலிருந்த கோட்டையை தாக்கி கைப்பற்றினர். கடைசியில் ஆங்கில 3வது படைப்பிரிவு காஷ்மீர் வாயிலை கைப்பற்றி உள்ளே நுழைந்தது. அன்று இரவுக்குள் நகரின் பெரும்பகுதிகள் ஆங்கிலேயர் வசமானது. தளவாட கிடங்கை கைப்பற்றியவர் அடுத்து சலீம்கர் கோட்டையையும் அரண்மனையும் கைப்பற்றினர். தளபதி வில்சன் தனது அலுவலகத்தை அரண்மனைக்கு மாற்றிக்கொண்டார். கடைசியாக டெல்லி ஆங்கிலேயர் வசமாயிற்று. அரண்மனை பிடிபட்டபோது அரசர், இளவரசர்கள், அரசிகளை காணவில்லை. அவர்கள் முன்பே அரண்மனையை விட்டு வெளியே மறைந்து கொண்டனர். பக்த் கான் பேரரசரிடம் அயோத்தி சென்று போரை தொடர்ந்து நடத்துமாறு கூறினார். ஆனால் அரசி ஜுனத் மஹால் சரணடைவதே நல்லது என்று கூறினார். பழைய டெல்லிலுள்ள ஹூமாயூன் சமாதி வளாகத்தில் பதுங்கியிருந்த பேரரசர் உடன் ஆங்கிலேயர் பேச்சுவார்த்தை நடத்தி கி.பி.1857 செப்டம்பர் 21ம் தேதி சரணடைய வைத்தனர். அடுத்த 2வது நாள் செப்டம்பர் 23ம்தேதி கர்னல் ஹட்சன் இளவரசர்களான மிர்ஸா மொகல், மிர்ஸா கிஸர் சுல்தான், மிர்ஸா அபுபக்கர் ஆகியோரை கைது செய்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக டெல்லிக்கு அழைத்து வந்து அவர்களின் ஆடையை களைந்து இளவரசர்களை அரண்மனை வாசலில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அந்த இடம் khooni dharwaza (கொலை வாசல்) என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. அதையடுத்து 20 இளவரசர்கள் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். விசாரணை கூடத்தில் பேரரசரையும் ராணியையும் இளவரசர்களுக்கும் உரிய மரியாதை தரப்படவில்லை. அவருக்கு மரண தண்டனை விதித்தால் நாடு முழுவதும் கலவரம் பெருகிடும் என்பதால் தூர தேசமான அந்தமான் தீவு, ஆப்பிரிக்கா, ஹாங்காங் போன்ற இடங்களுக்கு அனுப்பலாம் எடுத்து முடிவெடுத்து கடைசியில் பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் இளவரசர் ஐவான் பக்த், ராணி ஜுனத் மஹால் ஆகியோருடன் அரசரின் சகோதரர்கள் சிலரும் நாடு கடத்தப்பட்டு அங்கேயே மரணமடைந்தனர். கி.பி.1862ல் ரங்கூனில் பகதூர் ஷா மறைந்தார்.
மீரட்டிலும், டெல்லியிலும் செய்தி அறிந்த கானிங் பிரபு லெப்டினென்ட் நெயில் தலைமையிலான மதராஸ் படைப்பிரிவை கல்கத்தாவுக்கு வரவழைத்தார். நெயில் படைவீரர்களுடன் காசிக்கு புறப்பட்டு சென்ற நேரத்தில் அஸம்காரில் புரட்சி தொடங்கிய செய்தி கிடைத்தது. 37ம் படையினர் ஆயுதங்கள் பிடுங்கி கொள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளிதுமளியில் ஐரோப்பிய வீரர்கள் அவர்களை சுட சீக்கிய வீரர்களும் முறைசாரா படைவீரர்களும் புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். நெயில் ஆங்கிலேயர் பலமானவர்கள் என்பதை காட்ட மனரீதியாக புரட்சியை பிசுபிசுக்க வைக்க அனைத்து வகையிலான குற்றவாளிகளையும் தேடி பிடித்து கூட்டம் கூட்டமாக தூக்கிலிட்டு கொன்றார். சாலையோரத்து மரங்களில் எல்லாம் பிணங்கள் தொங்கியது. காசியில் புரட்சியாளர்கள் எதிர்ப்பு காட்டிய செய்தி அலஹாபாத்தை எட்டியதும் அங்கு போல் இங்கும் ஆயுதங்கள் பறிக்கப்படலாம் என்று பேசிக்கொண்டு சிப்பாய்கள் சிறைக்கதவுகளை உடைத்து கைதிகளை விடுவித்தனர். ஐரோப்பியர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டனர். தன் குதிரை வண்டியில் அமர்ந்து அலகாபாத் வந்த நெயில் வந்தவுடன் தாராகஞ்ச், கைட்கஞ்ச் பகுதியில் கலகக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் புரட்சியாளர்கள் நகரை விட்டு அகன்றனர். படகுகள் மூலமும் சாலை வழியாகவும் ஐரோப்பிய வீரர்களை அனுப்பி கான்பூர் செல்லும் வழியெங்கும் இஷ்டம்போல் ஜனங்களை கொன்று குவித்தார். இந்த நேரத்தில் வீலர் நானாவிடம் சரணடைந்ததால் கான்பூரையும் அவரிடம் சிக்கியிருந்த ஆங்கிலேய பெண்மணிகளையும் காப்பாற்றும் பொறுப்பு ஹென்றி ஹாவ்லக் என்ற அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஹென்றி ஹாவ்லக்கை போரில் வெல்வது கடினம் என்பதை உணர்ந்த புரட்சியாளர்கள் பீபீகர் கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பெண்மணிகள் மற்றும் குழந்தைகளை ஒரு பெண்ணுடன் வந்த சிலர் கசாப்புகடை கத்தியுடன் அத்துமீறி நுழைந்து அனைவரையும் வெட்டி கொன்றனர். ஹாவ்லக்கின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நானா சாகிப் ஜீலை 18ம் தேதி பித்தூரிலிருந்து வெளியேறினார். கங்கையில் குதித்து உயிர்விடப்போவதாக கூறிய அவர் அயோத்தியில் இருந்து விட்டு நேபாளம் சென்று விட்டார். அதன் பிறகு அவரை காணவேயில்லை. அவரின் தளபதியான தாந்தியா தோபே அங்கிருந்து தப்பித்து ஜான்சிக்கு சென்றுவிட்டார்.
ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் கி.பி.1852ல் வாரிசின்றி மறைந்தார். அதனால் டல்ஹவுசி பிரபு அவகாசியிலி கொள்கைப்படி ஜான்சியை அபகரிக்க அதன் மகாராணி லட்சுமிபாய் முறையிட்டும் பலனில்லை. அவரை அரண்மனையை விட்டு வெளியேற்றினர். நகரில் ஒரு மாளிகையில் தங்கி கொண்டு அங்கிருந்து பெண்களுக்கும் வீரர்களுக்கும் தற்காப்பு கலைகளையும் போர்கலைகளையும் கற்று கொடுத்தார். ஜான்சி படைகள் கலைக்கப்பட்டது. ராணுவத்தின் 12வது படை ஜான்சி கோட்டையில் நியமிக்கப்பட்டனர். என்பீல்ட் தோட்டா விவகாரம் மீரட் டெல்லிக்கு பிறகு ஜான்சியிலும் பரவியதை தொடர்ந்து ஜுன் 5ம் தேதி கலவரம் துவங்கியது. புரட்சியாளர்கள் ஸ்டார் கோட்டையையும் வெடிமருந்து கிடங்கையும் கஜானாவையும் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் கலவரத்தை அடக்க குவாலியருக்கும் கான்பூருக்கும் செய்தி அனுப்பினர். புரட்சிபடையால் காப்டன் டன்லப் மற்றும் ஒரு லெப்டினென்ட் சுட்டு கொல்லப்பட்டனர். ஜுன் 12ம் தேதி ராணியை கட்டாயப்படுத்தி பெருந்தொகையை புரட்சியாளர்கள் பெற்றுக்கொண்டு டெல்லி நோக்கி பயணப்பட்டனர். ஆங்கில படைகள் செயலற்று போயிருந்ததால் ராணி லட்சுமிபாய்யே நாட்டில் அமைதியை நிலைநாட்ட முயன்றார். அந்த நேரத்தில் ஜான்சி வாரிசுக்கு போட்டி போட்ட சதாசிவராவ் ஜான்சிக்கு 30 மைல் தொலைவில் இருந்த கோட்டையை கைப்பற்றி தன்னை ஜான்சி மஹாராஜா என்று அறிவிக்க லட்சுமிபாய் அங்கிருந்து அப்புறப்படுத்த அவர் சிந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று கொள்ளையடித்து பின்னர் ஜான்சி சிறையில் தள்ளப்பட்டார். ராணி பீரங்கிகள் வெடிமருந்துகள் தயாரிக்க தொடங்கினார். கி.பி.1858ல் மார்ச் மாதத்தில் சர் ஹியூரோஸ் படைகளுடன் ஜான்சி நோக்கி வர மார்ச் 22ல் முற்றுகை ஆரம்பித்தது. மார்ச் 31ம் தேதி தாந்தியா தோபே லட்சுமிபாய் யின் படைகளுக்கு உதவி செய்யும் பொருட்டு படைகளுடன் வர ஹியூரோஸ் அந்த அனுபவமற்ற படைகளை விரட்டியடித்து கோட்டையை உடைத்து அரண்மனையை அடைந்தனர். புரட்சி படையின் தளபதிகள் ராணியை தாந்தியோ தோபே வுடன் இணைந்து புரட்சியை தொடர்ந்து நடத்துமாறு கூறி அவரை தப்பிக்க வைத்தனர். அங்கிருந்து கல்பி நகருக்கு சென்று குவாலியர் கோட்டைக்கு சென்று விட்டார். அங்கும் கி.பி.1858 ஜீன் 18ல் ஆங்கிலப்படை வந்து உக்கிரமாக போர் புரிய ராணி ஆணுடை தரித்து போராடினார். ராணியை சுற்றி வளைத்த வீரர்கள் அவரை படுகாயப்படுத்தினார்கள். மயக்கமுற்று சரிந்த ராணியை விசுவாசிகள் ராணியை தூக்கி சென்று குடிசையில் வைத்தனர். அவரது விருப்பப்படி தனது உடல் கூட ஆங்கிலேயருக்கு கிடைக்கக்கூடாது என்பதால் அவசரமாக எரியூட்டினார்கள். ஆங்கிலேயர்கள் வந்து பார்க்கும்போது ராணியின் எலும்பு துண்டுகளும் சாம்பலும் மட்டுமே மிஞ்சி இருந்தது. ஜான்சிக்கு ராணியுடன் போர்களில் துணை நின்ற தாந்தியோ தோபே அவரின் வீழ்ச்சிக்கு பின்னர் காடுகளில் மறைந்து வாழ்ந்து கொரில்லா தாக்குதல்களினால் ஆங்கிலேயரை தொல்லைபடுத்தினார். காடு மேடுகளிலும் நதிகளிலும் அவரை விரட்டியும் அவரை பிடிக்க முடியாத ஒரு மாயாவியாக விளங்கினார். குவாலியர் சமஸ்தானத்து தளபதி மான்சிங் என்பவரால் காட்டில் இருக்கும் சமயத்தில் காட்டி கொடுக்கப்பட்டு கி.பி.1859 ஏப்ரல் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவில் ஏப்ரல் 18ம் தேதி அவரை தூக்கிலிட்டனர். ஞாபக சின்னமாக அவரின் தலைமுடியை ஆங்கிலேயர் சிறிது சேகரித்து கொள்ள போட்டி போட்டனர்.
தாந்தியோ தோபேவிடம் இருந்து பிரிந்து சென்ற ராவ் பகதூரும் கி.பி.1862ல் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். நேபாளம் சென்ற நானா சாகிப் மன்னர் ஜங் பகதூருக்கு அவரை தலைவராகவும் கொண்டு புரட்சியை தொடர்ந்து நடத்தி ஆங்கிலேயரை விரட்டுமாறு விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்துவிட்டார். ஆனாலும் அவர் அங்கேயே நானா சாகிப்புக்கு அடைக்கலம் அளித்தார். கி.பி.1862ல் நானா சாகிப்பும் பாலா சாகிப்பும் காலரா நோயினால் நேபாளத்திலையே மரணமடைந்தனர். ஆனாலும் நானா சாகிப் இறக்கவில்லை அவரின் சகோதரர் தான் இறந்தார் என்றும் அலகாபாத் கும்ப மேளாவுக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள். கி.பி.1885,1897,1906 ஆண்டுகளில் பார்த்ததாக கூட தகவல்கள் வெளிவந்தது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அஸ்ஸாமில் முதன்முதலில் தேயிலை தோட்டம் அமைத்தவர் மணிராம் தெவான். ஆரம்பத்தில் இவர் பிரிட்டிஷாருடன் நட்புறவாக பழகினார். அஸ்ஸாமில் சிங்க்போ மக்கள் விளைவிக்கும் தேயிலையின் சிறப்பை பற்றி அவர்களிடம் சிலாகித்து சொல்ல வெள்ளையர்கள் அவர்களும் தேயிலை தோட்டம் போட்டதுடன் தெவான் தேயிலை தோட்டம் போடக்கூடாது என்று தடையும் போட்டனர். இந்த நேரத்தில் சிப்பாய் கலகம் நடந்தது. ஆங்கிலேயர்களை விரட்டி அஹோம்களின் பழைய ஆட்சியை கொண்டு வர தெவான் மற்றும் அவரது நண்பர்களும் போட்ட திட்டங்கள் கசிந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மணிராம் தெவான் மற்றும் அவரது நண்பரான பியோலி பரூவாவும் கி.பி.1858 பிப்ரவரி 26ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இதிலிருந்து தான் ஆங்கிலேயர்கள் தேயிலை தோட்டங்களுக்கு மக்களை கொத்தடிமையாக உபயோகிக்க ஆரம்பித்தனர். மலேசியா, இலங்கை, இந்தியா மற்றும் அவர்களின் காலனி நாடுகளில் எல்லாம் தேயிலை தோட்டங்களை அமைத்து மக்களின் உழைப்பையும் தேநீருடன் சேர்ந்து உறிஞ்ச ஆரம்பித்தனர்.
பாபு வீர் குன்வர் சிங் இன்றைய பீகாரின் போஜ்பூர் பகுதியிலுள்ள ஜெகதீஸ்பூர் பகுதியை ஆண்டு வந்தார். சிப்பாய் புரட்சி நடக்கும்போது அவருக்கு வயது 80. புரட்சி சமயத்தில் குன்வர் சிங், அவரது தம்பி பாபு அமர் சிங் மற்றும் அவரது தளபதி ஹரே கிருஷ்ணா ஆகியோர்கள் பீகார் பகுதிகளில் ஆங்கிலேயர் ஆண்ட பகுதிகளை தாக்கி பிடித்து ஆங்கிலேயர்களை போரில் கொன்று குவித்தார்கள். இவர் பீகாரின் ஆங்கிலேய தலைமையிடமான ஆரா பகுதியை கைப்பற்றி பின்னர் அஸம்கார்க் பகுதியையும் கைப்பற்றினார். இவர் கொரில்லா யுத்தத்தில் வல்லவர் என்பதால் ஆங்கிலேய படைகள் இவரை எதிர்கொள்ள தடுமாறின. கங்கை கரையில் நடந்த போரில் இவரது இடது தோளில் ஆங்கிலேயரின் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மருத்துவ வசதி கிடைக்காமல் போகவே பாதிக்கப்பட்ட இடது கையை வெட்டி எறிந்தார். பின்னர் நடந்த போரில் கி.பி.1858 ஏப்ரல் 23,24 தேதிகளில் ஜெகதீஷ்பூர் பகுதியில் நடந்த போரில் வெற்றி பெற்றாலும் பலத்த காயமுற்றார். ஜெகதீஷ்பூர் கோட்டையில் ஆங்கிலேய யூனியன் ஜாக் கொடியை இறக்கி இந்திய கொடியை பறக்க விட்ட இவர் காயத்தினால் அடுத்த 3 நாட்களில் மரணமடைந்தார்.
இந்தியாவின் வடக்கே இப்படியாக பிரளயம் நடந்த போது தெற்கே அதன் எழுச்சி சரியான தருணத்தில் நடக்க வில்லை என்று தான் கூற வேண்டும். ஹைதராபாத் நிஜாம் பொங்கியெழுந்த தன் வீரர்களை அடக்க தன் படைவீரர்களுக்கு எதிராகவே படையை அனுப்பி அடக்கிய கதையும் நடந்தது. நிஜாம் தெற்கே புரட்சியை அடக்கிய போதும் அருகேயிருந்த சோராப்பூரின் ஹிந்து அரசன் அரேபியர்கள் மற்றும் பதான்கள் அடங்கிய படையை உருவாக்கி காலம் கனியட்டும் என்று காத்திருந்த வேளையில் மக்கள் பொங்கியெழுந்தனர். மக்களின் தீரத்தை கண்ட மன்னனும் பேஷ்வாவின் பெயரில் போரிடத் தொடங்கினான். அவனை அடக்க ஆங்கில படைகளுடன் நிஜாமின் படைகளும் வந்தது. இனி தாக்குபிடிக்க போதும் என்று போரிட்டு கி.பி.1858 பிப்ரவரி மாதம் ஹைதராபாத் சென்றவரை சாலர்ஜங் உத்தரவின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரை சந்தித்த நெருங்கிய நண்பனான வயதில் மூத்த ஆங்கிலேயர் மீடோஸ் டெய்லர் கூட்டாளிகள் யார் என்று சொன்னால் உன்னை விடுவிக்க முயற்சி செய்வதாக கூறியும் அந்த ஈன காரியத்தை என்னை செய்ய சொல்லாதீர்கள் அப்பா என்று அந்த மன்னர் மறுத்து என்னை தூக்கில் தொங்க விடாமல் சுட்டு கொல்ல உத்தரவிடச்சொல்லுங்கள் என்று கூற அந்த ஆங்கிலேயர் மற்ற அதிகாரிகளுடன் போராடி அவருக்கு தீவாந்தர தண்டனை வாங்கி கொடுத்தார். அந்த மன்னர் அந்தமானுக்கு செல்லும் வழியில் வார்டனின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து "எனது மக்களே சிறையில் கிடந்து உழல்வதை விரும்பாத நானா சிறைக்குள் உழல்வேன்" என்று கூறி தன்னை தானே சுட்டு வீரமரணம் அடைந்தார். அவருடைய நண்பனான நர்குண்ட் என்ற இடத்தின் தலைவனான பாபா சாஹிப் மற்றும் அவனது மனைவியும் இணைந்து ஆங்கிலேயர்களை தாக்கினர். போரிட்டு வந்த மான்சன் என்ற அதிகாரியை சுட்டு கொன்றனர். ஆனாலும் ஆங்கில படைகளின் வரவினால் சமாளிக்க முடியாமல் பிடுபட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார். அவரது மனைவியும் தாயும் மலபிரபா நதியில் விழந்து உயிரை விட்டனர்.
இந்த சிப்பாய்களின் புரட்சியால் அதிர்வுற்ற பிரிட்டிஷ் அரசு இந்தியா தம் கையை விட்டு நழுவ வாய்ப்புள்ளதை உணர்ந்து இனி கம்பெனி ஆட்சியால் அதை தக்கவைக்க முடியாது என்று உணர்ந்து கி.பி.1858 நவம்பர் 1ல் தன் நேரடி மேற்பார்வையில் இந்தியாவை பொறுப்பில் எடுத்துக்கொண்டு தனது காலனி நாடுகளுள் ஒன்றானதாக விக்டோரியா மகாராணி அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த கானிங் பிரபுவே மீண்டும் முதல் முதலாக நேரடி ஆட்சியின் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ஆனார்.
உதவிய நூல்கள் :
சிப்பாய் கலகம் - சிவதர்ஷினி
இந்தியா உருவான கதை - க.சிவஞானம்
இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசுவாமி
Saffron Swords - Manoshi Yogaditya
படங்கள் :
கூகுள் படங்கள்





Comments
Post a Comment