98) சிப்பாய் புரட்சிக்கு பின்னர் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்கள்
இந்தியாவில் பிரிட்டனின் காலனியாதிக்கம் : (கி.பி.1858-1947)
சிப்பாய் புரட்சி ஏற்பட்டவுடன் அதை கண்டு பிரிட்டன் அரசு அரண்டு தான் போனது. தங்களது சிப்பாய்களே தங்களுக்கு எதிராக புரட்சி கொடியை தூக்கியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்தியாவின் வளங்களால் தான் பிரிட்டனின் பொருளாதாரம் ஏற்றம் பெற்றதால் இந்தியாவை இழக்க விரும்பவில்லை. அதனால் அதை எப்படியும் தக்க வைக்க வேண்டும் என்று நினைப்பில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்ததை நேரடி பிரிட்டிஷ் அரசின் கீழ் காலனி நாடுகளுள் ஒன்றாக மாற்றும் பிரகடனத்தை கி.பி.1858 நவம்பர் 1ல் விக்டோரியா மகாராணி வெளியிட்டார்.
அது முதல் அடுத்த 89 ஆண்டுகள் பிரிட்டனின் காலனி நாடுகளுள் ஒன்றாக ஆனதுடன் அனுபவித்த கஷ்டங்களும் போராட்டங்களும் உலகமே அறிந்தது. விக்டோரியா மகாராணியின் பிரகனடத்துக்கு பிறகு அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு கானிங் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ஆனார். அவர் முதல் மெளண்ட்பேட்டன் வரை பலர் கவர்னர் ஜெனரல்களாக இருந்துள்ளனர். கடைசி கவர்னர் ஜெனரலான மெளண்ட்பேட்டன் காலத்தில் இந்தியா கி.பி.1947ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்கு பிறகு முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக டாக்டர் ராஜகோபாலாச்சாரியர் பதவி வகித்தார். இனி ஒவ்வொரு கவர்னர் ஜெனரல்கள் காலத்தில் நடந்த சம்பவங்களை பார்ப்போம்.
1) சார்லஸ் கானிங் பிரபு (கி.பி.1856-58) & (கி.பி.1858-1862) :
கி.பி.1857ல் புரட்சி நடந்த போது கம்பெனியின் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் புரட்சிக்கு பின் கி.பி.1858 நவம்பர் 1ல் விக்டோரியா மகாராணியின் பிரகனடத்தினால் இந்தியாவின் முதல் வைஸ்ராய்யாக ஆனார். இவரது காலத்தில் தான் தற்போதும் புகழுடன் இருக்கும் சென்னை பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் ஆகியவை நிறுவப்பட்டது. கிளர்ச்சிக்கு பிறகு அரசை மறுசீரமைப்பதற்கும் தலைமை தாங்கினார். கி.பி.1860ல் மெக்காலே வரைவு செய்யப்பட்ட குறியீட்டின் அடிப்படையிலான இந்திய தண்டனை சட்டம் இவர் காலத்தில் கி.பி.1862ல் நடைமுறைக்கு வந்தது. கி.பி.1858 முதல் இந்திய யூனியனின் பட்ஜெட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி.1858 முதல் இம்பீரியல் சிவில் சர்வீஸஸ் முறை (அதாவது இந்திய குடிமக்கள் பணிக்கான ஐ.சி.எஸ் தேர்வுப்பணி) உருவாக்கப்பட்டது. கி.பி.1859ல் வங்காளத்தின் நாடியா மாவட்டத்தின் செளகாச்சா கிராமத்தில் இண்டிகோ தோட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த இண்டிகோ விவசாயிகளின் எழுச்சி இவர் காலத்தில் நடந்ததாகும். இண்டிகோ தோட்டக்காரர்கள் அதிக வட்டிக்கு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி உணவுப்பயிர்களுக்கு பதில் இண்டிகோ பயிர்களை பயிரிட வற்புறுத்தினார்கள். சந்தை விலையில் 2.5% மட்டுமே விவசாயிக்கு கிடைத்ததால் அவர்களால் லாபம் ஈட்ட முடியாததால் அவர்களுக்கு கீழ்படியாமல் இருந்தனர். இதனால் தோட்டகாரர்களும் ஜமீன்தார்களும் இணைந்து போராடிய விவசாயிகளின் மீது கடுமையான அடக்குமுறையை கையாண்டனர். இதனால் சில விவசாயிகள் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். சில விவசாயிகள் தப்பி ஓடி விட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் ஜமீன்தார்களால் ஆதரிக்கப்பட்ட பெரிய போலீஸ் மற்றும் ராணுவப் படைகள் பல விவசாயிகளை ஈவுஈரக்கமின்றி கொன்று கிளர்ச்சியை அடக்கியது. கி.பி.1861ல் சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரை இயக்குநர் ஜெனரலாக கொண்டு இந்திய தொல்லியல் துறையை உருவாக்கினார். இதன் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல் ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விக்டோரியா மகாராணியின் அறிவிப்பின்படி கிளர்ச்சியின் போது ஆங்கில குடிமக்களின் கொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் தவிர புரட்சியில் பங்கு கொண்ட எல்லா மக்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதால் கானிங் பிரபுவை "கருணை மிகு கானிங்" என்றழைத்தனர். ஆனால் மகாராணியின் அறிவிப்பு வெற்று வார்த்தைகளின் பத்திரம் என்று தான் கூற வேண்டும்.
2) ஜேம்ஸ் புரூஸ் எல்ஜின் (கி.பி.1862-1863) :
கானிங் பிரபுவுக்கு பிறகு பதவிக்கு வந்தவர். இவரது ஆட்சியில் தான் கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் அடுத்தடுத்து நிறுவப்பட்டது. இஸ்லாமிய மதத்தில் பழமைவாதம் பேசிய வஹாபி இயக்க செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டது. இவர் திடிரென்று கி.பி.1863ல் தர்மசாலாவில் மரணமடைந்தார்.
3) ராபர்ட் நேப்பியர் (கி.பி.1863) :
12 நாட்கள் மட்டுமே வைஸ்ராய் பதவியில் இருந்தார். கி.பி.1857ல் சிப்பாய் புரட்சியில் லக்னோ மீட்பு படைகளுக்கு துணை தளபதியாக இருந்தவர். போரில் காயம்பட்டு பின்னர் குணமடைந்தார். கி.பி.1858ல் குவாலியர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு தாந்தியோ தோபேவின் படைகளை தோற்கடித்தார். இந்த முற்றுகை போரின் போது ஆண் உடை அணிந்து போரிட்ட ஜான்சி ராணி லெட்சுமி பாய் படுகாயமுற்று மரணமடைந்தார். பின்னர் குவாலியரின் தலைமை பொறுப்பை ஏற்றார். இந்திய கவர்னர் ஜெனரலின் கவுன்சிலின் ராணுவ உறுப்பினராக இருந்த இவர் திடிரென்று நிகழ்ந்த எல்ஜின் பிரபு மரணத்திற்கு பிறகு தற்காலிக கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
4) தாமஸ் வில்லியம் டெனிஸன் (கி.பி.1863-64) :
40 நாட்கள் மட்டுமே வைஸ்ராய் பதவியில் இருந்தார். கி.பி.1861-1866 வரை சென்னையின் ஆளுநராக இருந்த இவர் இந்த இடைப்பட்ட காலத்தில் இடைக்கால வைஸ்ராய்யாக பதவி வகித்தார். சர் ஜான் லாரன்ஸ் பதவி ஏற்கும் போது மீண்டும் சென்னை ஆளுநராக தொடர்ந்து அதன் பின்னர் கி.பி.1866ல் இங்கிலாந்து சென்றவர் பின்னர் கி.பி.1871ல் மறைந்தார்.
5) சர் ஜான் லாரன்ஸ் (கி.பி.1864-1869) :
கி.பி.1863 முதல் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லா ஆனது. அலகாபாத் உயர்நீதிமன்றம் கி.பி.1866ல் நிறுவப்பட்டது. கி.பி.1864-65ல் ஆங்கிலேய-பூட்டான் போரில் வென்று அஸ்ஸாம் பூட்டான் மற்றும் வங்காள கூச் பீஹார் பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஹூக்ளி ஆற்றில் இறந்தவர்களை எறியும் இந்து நடைமுறையை தடை செய்தார். உப்பு மீதான வரிவிதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தார். கி.பி.1866ல் ஒரிஸாவில் ஏற்பட்ட பஞ்சம் லாரன்ஸின் பதவி காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும். 5 ஆண்டு காலத்திற்கு பின் இங்கிலாந்து திரும்பினார்.
6) ரிச்சர்ட் போர்கே (கி.பி.1869-1872) :
சர் ஜான் லாரன்ஸ்க்கு பின்னர் இந்திய வைஸ்ராய்யாக ஆனார். இவர் காலத்தில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கியது. இந்திய இளவரசர்களின் அரசியல் பயிற்சிக்காக ராஜ்கோட்டில் ராஜ்குமார் கல்லூரியும் அஜ்மீரில் மாயோ கல்லூரியும் திறக்கப்பட்டது. வஹாபி இயக்கத்தை சமாளிக்க தேசத்துரோக சட்டம் கி.பி.1870ல் இயற்றப்பட்டது. கி.பி.1872ம் ஆண்டு அந்தமான் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் உள்ள குற்றவாளிகளின் குடியேற்றப் பகுதிகளுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த போது ஆப்கானிய நாட்டு குற்றவாளியான ஷேர் அலி அஃப்ரிடியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
7) சர் ஜான் ஸ்ட்ராச்சி (கி.பி.1872) :
வெறும் 15 நாட்கள் மட்டுமே இடைக்கால வைஸ்ராயாக முந்தைய வைஸ்ராய் ரிச்சர்ட் போர்கே (லார்டு மோயோ) கொலை செய்யப்பட்ட சமயத்தில் தற்காலிகமாக பதவியில் இருந்தார். இவர் கி.பி.1861ல் கானிங் பிரபுவால் காலரா தொற்று நோய்யை விசாரிக்கும் கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். கி.பி.1868ல் கவர்னர் ஜெனரல் கவுன்சில் உறுப்பினரானார். இதன் மூலம் லார்டு மோயோ கொல்லப்பட்ட பின்னர் தற்காலிக வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். பின்னர் கி.பி.1874ல் வடமேற்கு மாகாணங்களின் லெப்டினென்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
8) நேப்பியர் பிரபு (கி.பி.1872) :
வெறும் 70 நாட்கள் மட்டுமே வைஸ்ராய் பதவியில் இருந்தார். இவரே கி.பி.1866-1872 வரை சென்னையின் ஆளுநராக பணியாற்றினார். இவரது காலத்தில் கி.பி.1869ல் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நேப்பியர் பாலம் சென்னையில் மிகப்பிரபலமான ஒன்று. இன்றும் அந்த பாலம் இவர் பெயரை தாங்கி நிற்கிறது. தனது ஆட்சிக்காலத்தில் பல பெரிய நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தினார். முல்லை பெரியாறு அணை இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா மற்றும் திருவனந்தபுரத்தில் நேப்பியர் அருங்காட்சியகம் ஆகியவை அவரது நினைவாக அமைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு கவர்னர் நேப்பியரின் நன்கொடையினால் கட்டப்பட்டது.
9) தாமஸ் ஜார்ஜ் பேரிங் நார்த்புரூக் (கி.பி.1872-1876) :
மோயோ பிரபு கொல்லப்பட்டதற்கு பிறகு இடைக்கால வைஸ்ராய்யாக வந்த நேப்பியர் பிரபுவுக்கு பிறகு இவர் வைஸ்ராய்யாக பொறுப்பேற்றார். இவர் காலத்தில் தான் மகாராஷ்டிராவில் சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிராக மகாத்மா ஜோதிராவ் புலே "சத்யசோதக் சமாஜ்" என்னும் அமைப்பை தொடங்கினார். கி.பி.1876ல் நாடக நிகழ்ச்சிகள் மூலம் அரசுக்கு எதிராக கருத்து கூறுவதை தடுக்க "நாடக நிகழ்ச்சிகள் சட்டம்" இயற்றப்பட்டது. ஆங்கிலேய- ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்காக அவர் வைஸ்ராய் பதவியில் இருந்து விலகினார்.
10) லிட்டன் பிரபு (கி.பி.1876-1880) :
இவர் காலத்தில் தான் கி.பி.1876-78ல் மிகப்பெரும் பஞ்சம் ஏற்பட்டது. உணவுப்பொருட்களை பஞ்ச காலத்தில் கூட இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தாமலும் உணவு பொருட்களுக்கு பதிலாக வாணிக பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டதாலும் மட்டுமே பஞ்சம் பெருகியது. முழுக்க முழுக்க இது ஆங்கிலேய ஆட்சியின் ஏகாதிபத்திய வெறியினால் ஏற்பட்ட பஞ்சமே.
பஞ்சத்தை தொடர்ந்து பஞ்ச கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தியர்கள் ஐ.சி.எஸ் எனப்படும் தேர்வுகளில் அதிகளவு தேர்வாவதால் தங்களுக்கு இணையாக வருவதை தடுக்க அதிகபட்ச வயதை 21 லிருந்து 19 ஆக குறைத்தார். தக்காண விவசாய சட்டம் கி.பி.1876ல் நிறைவேற்றப்பட்டது. ராயல் டைட்டில்ஸ் சட்டம் (1876) மூலம் கி.பி.1877 ஜனவரியில் விக்டோரியா மகாராணி"இந்தியாவின் பேரரசி" என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார். மக்கள் பஞ்சத்தில் வாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தர்பார் கூடி ராணியின் தலை பொறித்த புதிய தங்க நாணயம் வெளியிடப்பட்டது. இதற்காக டெல்லியில் தர்பார் நிகழ்வு வைஸ்ராய் தலைமையில் நடந்தது. இரண்டாம் ஆங்கிலோ-ஆப்கான் யுத்தத்தில் பிரிட்டிஷ் படைகள் வெற்றி. கி.பி.1878ல் வெர்னாகுலர் பத்திரிகை சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிரான தலையங்கங்களை தணிக்கை செய்து வெளியிட்டனர். லிட்டன் பிரபுவின் மூத்த மகனின் மருமகனான "சர் எட்வின் லுட்யென்ஸின்" தான் புது டெல்லியை வடிவமைத்த கட்டிட கலைஞர். அடுத்தது கி.பி.1878ல் இந்தியர்கள் யாரும் அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் என்று ஆயுதச்சட்டம் கொண்டு வந்தார். இந்த நிகழ்வை தான் இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஒரு உறுப்பினர் இந்தியனாகிய நான் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள கூடாது. ஆனால் எனது பாதுகாவலராகிய ஆங்கிலேயர் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம். என்ன ஒரு முரண்பாடு என்று பின்னாட்களில் குறிப்பிட்டார். கி.பி.1879ல் லிட்டன் பிரபுவை கொல்ல முயன்ற நிகழ்வு தோல்வியில் முடிந்தது. கி.பி.1880ல் வைஸ்ராய் பதவியை ராஜினாமா செய்து இங்கிலாந்து சென்றவர் கி.பி.1887-91ல் பிரான்ஸ்க்கான பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றினார்.
11) ரிப்பன் பிரபு (கி.பி.1880-1884) :
முந்தைய வைஸ்ராய்யின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெர்னாகுலர் பிரஸ் சட்டம் கி.பி.1882ல் ரத்து செய்யப்பட்டது. முதல் தொழிற்சாலை சட்டம் கி.பி.1881ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பஞ்சாப் பல்கலைக்கழகம் அடிக்கல் நாட்டப்பட்டது. முதன் முதலில் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்திய மக்களுக்கு கல்வியும் ஊராட்சி அளவில் ஆட்சி பொறுப்பும் கொடுக்கப்படவேண்டும் என்று ஊரக ஆட்சி தீர்மானத்தை கி.பி.1882ல் கொண்டு வந்தார். ஊராட்சி மன்றங்களுக்கும் நகராட்சிகளுக்கும் உறுப்பினர்களை மக்களே தேர்தெடுக்கும் உரிமையை வழங்கினார்.கி.பி.1882ல் வில்லியம் ஹண்டர் என்பவர் தலைமையில் கல்வி ஆணையம் ஒன்றை அமைத்தார். உப்பு வரியை குறைத்தார். இவர் வைஸ்ராய் ஆனதும் "இல்பெர்ட் மசோதா" கொண்டு வந்தார். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் குற்றம் செய்தால் அதை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்பதாக அதன் ஷரத்து அமைந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களே போராட்டம் நடத்தி அந்த மசோதாவின் ஷரத்துகளை மாற்ற வைத்தனர். மெட்ராஸ்ஸில் கி.பி.1909ல் மின்டோ பிரபுவால் கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடத்திற்கு "ரிப்பன் கட்டிடம்" என்று பெயர் வைக்கப்பட்டது. ரிப்பன் எங்கள் அப்பன் என்று சென்னை மக்களால் போற்றப்பட்டவர். மக்களால் போற்றப்பட்ட ரிப்பன் பிரபு கி.பி.1884ல் தன் பதவியை ராஜினாமா செய்து இங்கிலாந்து திரும்பினார்.
12) ஃபிரடெரிக் ஹாமில்டன் டுஃபெரின் பிரபு (கி.பி.1884-1888) :
இவர் காலத்தில் தான் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயரால் இந்திய தேசிய காங்கிரஸ் கி.பி.1885 டிசம்பர் 27ல் பம்பாயில் உதயமாயிற்று. ஆங்கிலேயர்கள் தங்களது ஏகாதிபத்திய ஆட்சியை தக்கவைக்க அதே நேரத்தில் இந்தியர்களை பிரதிநிதித்துவம் கொண்ட அமைப்பு தங்களது பிரச்சினைகளை சொல்லுவதற்காக உருவாக்கினர். கடைசியில் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்தாக முளைத்தது தான் வேடிக்கை. கி.பி.1885ல் வங்காள குத்தகை சட்டம் இயற்றப்பட்டது. கி.பி.1885ல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய-பர்மா யுத்தத்தின் முடிவில் பர்மா ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளுள் ஒன்றானது. நவீன இந்திய இராணுவத்திற்கு அடித்தளம் அமைத்தவர் இவரே. கி.பி.1888ல் வங்காளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளை பற்றிய அறிக்கையை (டஃப்ரின் அறிக்கை) வெளியிட்டார்.
13) லான்ஸ்டவுன் மார்க்வெஸ் (கி.பி.1888-1894) :
கி.பி.1883-88ல் கனடாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்து விட்டு இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். கி.பி.1890ல் ஆங்கிலோ-மணிப்பூர் போருக்கு பின் மணிப்பூர் ஆங்கில அரசுடன் இணைந்தது. இந்திய கவுன்சில் சட்டம் கி.பி.1892ல் இயற்றப்பட்டது. கி.பி.1890ல் இந்திய தொழிற்சாலை கமிஷன் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையின் படி கி.பி.1891ல் தொழிற்சாலை சட்டம் நிறைவேற்றப்பட்டது. கி.பி.1891ல் பெண்களின் திருமண வயது 12 ஆக உயர்த்தப்பட்டது. 6 ஆண்டுகள் வைஸ்ராய் பணி முடிந்து இங்கிலாந்து திரும்பினார்.
14) விக்டர் புரூஸ் எல்ஜின் பிரபு (கி.பி.1894-1899) :
கி.பி.1896-97களில் பண்டேல்கண்டில் ஆரம்பித்த பஞ்சம் மத்திய மாகாணங்கள், பம்பாய், பீஹார், பெரார், இராஜபுதனா, ஹைதராபாத் மற்றும் மெட்ராஸ் முதலிய நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு 4.5 மில்லியன் மக்கள் இந்த பஞ்சத்தினால் இறந்ததாக வைஸ்ராய் ஒப்புக்கொண்டார். இவருடைய காலத்தில் தான் கி.பி.1897ல் பேலூர் மடத்தில் சுவாமி விவேகானந்தரால் "ராமகிருஷ்ணா மிஷன்" நிறுவப்பட்டது. பம்பாய் நகரில் ப்ளேக் பரவியது. சந்தால் மக்கள் எழுச்சியும் ஜார்கண்ட்டின் "பிர்ஸா முண்டா" புரட்சியும் ஒடுக்கப்பட்டது.
15) கர்சன் பிரபு (கி.பி.1899-1905) :
இவர் ஆட்சிகாலமே பஞ்சத்துடன் துவங்கி 4.5 மில்லியன் மக்களை மத்திய மாகாணங்கள், பம்பாய், இராஜபுதனா, ஹைதராபாத், கத்தியவார், வங்காளம், சென்னை மற்றும் வடமேற்கு மாகாணங்கள் என மொத்தத்தில் பலி வாங்கியது. சுதந்திரமான பத்திரிக்கைகளை கட்டுப்படுத்த கி.பி.1904ல் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இவரது ஆட்சியில் 2வது முறையாக டெல்லி தர்பார் கூட்டப்பட்டது. இவர் வைஸ்ராயாக இருந்த காலத்தில் பழங்குடியினரின் எழுச்சி காரணமாக கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் பிரதேசத்தை உருவாக்கினார். கல்வி, நீர்ப்பாசனம், காவல்துறை மற்றும் நிர்வாகத்தில் பல கமிஷன்களை அமைந்தார். இவர் கி.பி.1901ல் ஐ.சி.சி (இம்பீரியல் கேடட் கார்ப்ஸ்) எனப்படும் இந்திய இளவரசர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கும் அமைப்பை ஏற்படுத்தினார். கி.பி.1903ல் பூசா விவசாய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் கி.பி.1904ல் உருவாக்கப்பட்டது. பனாரஸ் இந்து பெண்கள் பள்ளி (கன்யா வித்யாலயா) கி.பி.1904ல் அன்னிபெசண்ட் அம்மையாரால் உருவாக்கப்பட்டது. கி.பி.1905ல் ஜுலை 19ம் தேதி கர்சன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அக்டோபர் 16ல் நடைமுறைப்படுத்தப்பட்ட "வங்கப்பிரிவினை" அரசியல் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்றுபட்ட வங்காள மாநிலத்தை இந்துக்கள் மிகுதியாக மேற்கு வங்காளமும் முஸ்லீம்கள் மிகுதியாக வாழும் கிழக்கு வங்காளமாகவும் பிரிக்கப்பட்டது.
பலவித போராட்டங்களுக்கு பின்னர் கி.பி.1911ல் வங்காளபிரிவினை ரத்து செய்யப்பட்டது. இன்று ஜார்கண்ட் ஆதிவாசிகளால் பகவான் என்று அழைக்கப்படும் "பிர்ஸா முண்டா" காலத்தில் ஆங்கில அரசாங்கம் ஆதிவாசிகளின் நிலங்களை இணைத்து பெரிய ஜமீன்தார் வசம் ஒப்படைத்தது. நிலங்களை அபகரித்த ஜாகீர்தாரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ச்சியை தூண்டி விட்டான். காவல் நிலையங்கள் தகர்க்கப்பட்டன. முதலில் தங்களது நிலங்களை திரும்ப பெறும் முடிவோடு கிளர்ச்சிகள் நடத்தியவன் பின்னர் ஆங்கிலேய ஆட்சியை விரட்டுவதே நோக்கம் என்று அறிவித்து கி.பி.1899 டிசம்பர் 24 பெரும்புரட்சிக்கு நாள் குறித்தார். அன்று வில்லம்பு போராட்டம் தொடங்கியது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு பணத்திற்காக சில துரோகிகளால் காட்டி கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டு கி.பி.1900 மே-20 அன்று இறந்தார். பிர்ஸா இறந்தபிறகு அவன் விரும்பியபடி ஆதிவாசிகள் தங்கள் பண்பாட்டோடு வாழவும் சீர்திருத்தப்பட்ட நிலங்கள் அவர்களுக்கு சொந்தமாகவும் சட்டம் இயற்றப்பட்டது. கர்சன் பிரபு "இந்தியா பிரிட்டிஷ் பேரரசின் மையமாக விளங்குகிறது. வேறு எந்த பகுதியை இழந்தாலும் நாம் வாழலாம். ஆனால் இந்தியாவை இழந்தால் நம் பேரரசின் சூரியன் அஸ்தமித்து விடும்" என்று கூறியதிலிருந்து இந்தியாவே பிரிட்டனின் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் என்று அறியலாம். ஆப்கானிய பிரச்சினை காரணமாக இந்திய இராணுவ ஜெனரலுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்து இங்கிலாந்து திரும்பினார்.
16) மின்டோ பிரபு (கி.பி.1905-1910) :
கர்சன் பிரபு ராஜினாமாவுக்கு பின்னர் இந்திய வைஸ்ராய் பதவியில் வந்தவர். இவர் காலத்தில் தான் கி.பி.1906ல் ஆகா கான் III, முஸ்லீம் லீக்கை ஆரம்பித்தார். கி.பி.1907ல் ஜாம்ஷெட்ஜி டாடா இந்திய ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தை ஜாம்ஷெட்பூரில் தொடங்கினார். கி.பி.1907ல் தீவிரவாத இயக்கத்தை கட்டுப்படுத்த "தேசத்துரோகங்கள் கூட்டங்கள் தடை சட்டம்" கொண்டு வரப்பட்டது. மின்டோ-மோர்லி சீர்த்திருத்தங்கள் சட்டம் கி.பி.1909ல் கொண்டு வரப்பட்டதாலும் அதில் முஸ்லீம்களுக்கு தனி தொகுதிகள் வழங்கப்பட்டதாலும் இந்துக்கள் வெறுப்பு அடைந்தனர். அதுவரை இந்து முஸ்லீம் என்ற பாகுபாடு இல்லாமல் இருந்தது கொஞ்சம் விரிசல் விட ஆரம்பித்தது. கி.பி.1910ல் இந்திய பத்திரிக்கைகள் சட்டம் கொண்டு வரப்பட்டு துணிக்கைகள் செய்து வெளியிடப்பட்டது.
17) சார்லஸ் ஹார்டிங் பென்ஷர்ஸ்ட் (கி.பி.1910-1916) :
இவரது காலத்தில் தான் கி.பி.1911ல் மூன்றாவது டெல்லி தர்பார் கூடி "ஜந்தாம் ஜார்ஜ்" மன்னர் இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு கி.பி.1911ல் மாற்றப்பட்டது. வங்காள பிரிவினை ரத்து செய்யப்பட்டது. பீஹார் மாகாணம் கி.பி.1912ல் உதயமானது. கி.பி. 1914ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே "மக்மஹோன் எல்லைக்கோடு" ஒப்பந்தமாயிற்று. கி.பி.1915ல் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். கி.பி.1912ல் வைஸ்ராய் தலைநகரை கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றும் சந்தர்ப்பத்தில் சம்பிரதாய ஊர்வலத்தில் அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்ததில் அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த முயற்சி "ராவ் பீஹாரி போஸ்" தலைமையில் பசந்த குமார் பிஸ்வாஸ் என்பவரால் நடத்தப்பட்டது. பின்னர் பசந்த குமார் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
18) செம்ஸ்ஃபோர்ட் பிரபு (கி.பி.1916-1921) :
இவரது காலத்தில் தான் கி.பி.1916ல் அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் பாலகங்காதர திலகர் இணைந்து "ஹோம் ரூல் இயக்கம்" ஆரம்பித்தனர். கி.பி.1920ல் இதன் பெயர் "ஸ்வராஜ்ய சபை" என மாற்றப்பட்டது. கி.பி.1916ல் லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே நடைபெற்றது. இது இந்து-முஸ்ஸீம் ஒற்றுமையின் நம்பிக்கையாக பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் ஜின்னா காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் என இரண்டு கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். கி.பி.1919ல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருதங்களின் படி சுயாட்சி நிறுவனங்கள் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் உலகப்போரில் இந்தியா பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரில் இறங்கியது. கி.பி.1919ல் ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி எந்த காரணமும் இல்லாமல் ஒருவரை கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறை எடுத்துக்கொண்டது. இந்த செயலுக்கு எதிராக காந்தி சத்தியாகிரகம் செய்ய மக்களை அழைத்தார். பஞ்சாப்பில் எதிர்ப்பு இயக்கம் வளர்ந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர்களான டாக்டர் சத்யபால் மற்றும் சைபுதீன் கிச்லேவ் கைது செய்யப்பட்டு தர்மசாலாவுக்கு கொண்டு போகப்பட்டனர். இதனால் பைசாகி தினத்தன்று மக்கள் கூட்டமாக இரு தலைவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஏப்ரல் 13ல் ஒன்று கூடினர். மைதானத்தை சுற்றி வளைத்து ஜெனரல் டயர் வெடிமருந்துகள் தீரும் வரை மக்களை சுட்டு கொன்றான். இந்த நிகழ்வில் 1500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது மிதவாத போக்கை விட்டு போராட்ட நிலையை எடுத்தனர். ரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு கொடுத்த "நைட்" பட்டத்தை துறந்தார். கி.பி.1921ல் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா (இப்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) நிறுவப்பட்டது. கி.பி.1920ல் இந்திய தேசிய காங்கிரஸ் 1920ல் நடந்த முதல் பிராந்திய தேர்தலை புறக்கணித்தது. மூன்றாவது ஆங்கிலோ-ஆப்கான் போர் ஆரம்பித்தது. காந்தியடிகள் தனது முதல் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.
19) ரூஃபஸ் ஐசக்ஸ் மார்க்வெஸ் (கி.பி.1921-1926) :
இவரது ஆட்சிகாலத்தில் தான் கி.பி.1921-22ல் கேரளாவில் மாப்பிள்ளை கிளர்ச்சி (மலபார் கலகம்) நடந்தது. இதில் மாப்பிள்ளைமார்கள் என்றழைக்கப்படும் முஸ்லீம்களுக்கும் உயரடுக்கு இந்துக்களும் இடையேயான கலவரமாக ஆங்கிலேயர்களின் அரசால் மாற்றப்பட்டது. இதில் 2500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி பின்னாளில் வன்முறையாக இந்துக்களுக்கு எதிரான கலவரமாக மாறியது. இதில் 600 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் 2500 பேர் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர் என்றும் ஆர்யசமாஜ் கூறியது எந்தளவுக்கு அதன் எண்ணிக்கை உண்மை என தெரியவில்லை. கி.பி.1921ல் ரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைகழகத்தை நிறுவினார். கி.பி.1925ல் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தை கி.பி.1921-22ல் காந்திஜி ஆரம்பித்தார். ஆனால் கி.பி.1922ல் "செளரி செளரா" என்னுமிடத்தில் நடந்த காவல்நிலையத்தை பொதுமக்கள் எரித்ததால் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார். கி.பி.1922ல் பஞ்சாப்பில் சீக்கிய கலவரத்தை அடக்கினார். மேலும் காந்தியை தேசத்துரோக குற்றத்திற்காக கைது செய்தார்.
20) இர்வின் பிரபு (கி.பி.1926-1931) :
கி.பி.1928ல் இந்தியாவின் அரசியல் சூழ்நிலைகளை பற்றி அறிக்கையிடுவதற்காக "சைமன் கமிஷன்" ஒன்றை அமைக்க அதில் இந்தியர்கள் யாரும் இல்லை என்பதால் "லாலா லஜபதி ராய்" சைமன் கமிஷனே திரும்பி போ என்று பொது கூட்டத்தில் முழக்கம் செய்ய லாகூரில் அவர் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டது. இதனால் காயமுற்ற அவர் அடுத்த 15 நாட்களில் இறந்தார். இதனால் கோபமுற்ற பகத் சிங், சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தாப்பர் மற்றும் சந்திரசேகர் ஆசாத்துடன் இணைந்து அவரின் மரணத்திற்கு பழிவாங்க முனைந்தனர். லாகூர் உதவி கண்காளிப்பாளரான சாண்டர்ஸ்ஸை சுட்டு கொன்றனர். இதனால் சந்திரசேகர் ஆசாத் தவிர மற்ற மூவரும் கி.பி.1931 மார்ச் 23ல் தூக்கிலிடப்பட்டனர். கி.பி.1928ல் ஜின்னா காங்கிரஸ்ஸீடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும் முஸ்லிம் லீக்கை புத்துயிர் பெற செய்வதே லட்சியம் என 14 புள்ளிகள் அடங்கிய கோரிக்கைகளை அளித்தார். இதுவே கி.பி.1947ல் பாகிஸ்தான் ஸ்தாபிக்கப்படும் வரை முஸ்லீம்களின் சிந்தனையை பெரிதும் பாதித்தது. கி.பி.1930 ஜனவரி 26 அன்று பூர்ண ஸ்வராஜ்யமே காங்கிரஸ்ஸின் நோக்கம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. கி.பி.1930 ஏப்ரல் 18ம் தேதி சிட்டகாங்க் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் சூர்யா சென் கைது செய்யப்பட்டு ஜனவரி 12,1934ல் தூக்கிலிடப்பட்டார்.
நவம்பர் 30, 1930ல் கிங் ஐந்தாம் ஜார்ஜ் லண்டனில் முதல் வட்டமேஜை மாநாட்டை தொடங்கினார். காந்திஜி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் பிரதிநிதிகள் யாரும் பங்கு கொள்ளவில்லை. பின்னர் ஜனவரி 1931 சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு கி.பி.1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் பேரில் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் பிரிட்டிஷ் பொருட்கள் புறக்கணிப்பு ஆகியவை நிறுத்தப்பட்டது.
21) ஃப்ரீமேன் தாமஸ் வில்லிங்டன் (கி.பி.1931-1936) :
கி.பி.1932ல் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் நடந்தது. கி.பி.1932ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்ததால் காந்தியை கைது செய்தார். காங்கிரஸ் கட்சியை சட்டவிரோதம் என்று கூறி அதன் உறுப்பினர்களை சிறையில் அடைத்தார். முகம்மது அலி ஜின்னா "பாகிஸ்தான் பிரகடனம்" என்ற செய்தியில் தனிநாடு கோரிக்கையை எழுப்ப ஆரம்பித்தார். கி.பி.1934ல் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் இயற்றியதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. கி.பி.1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா மற்றும் ஆச்சார்யா நரேந்திர தேவா ஆகியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1935ல் இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டது.
22) விக்டர் அலெக்சாண்டர் ஹோப் லின்லித்கோ (கி.பி.1936-1943) :
இவர் காலத்தில் தான் இங்கிலாந்து மன்னர் எட்டாம் எட்வர்ட் இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். கி.பி.1935ம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்தின் படி 1936-37ல் மாகாணத்தேர்தல்கள் நடந்தன. கி.பி.1939ல் வைஸ்ராய் லின்லித்கோ பிரபு இந்தியா பிரிட்டனுடன் இண்டாம் உலகப்போரில் ஈடுபடுவதாக அறிவித்தார். கி.பி.1940ல் ஜின்னா லாகூர் தீர்மானத்தில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கினார். கி.பி.1942ல் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தொடங்கினார். கி.பி.1943ல் வங்காள பஞ்சம் ஏற்பட்டது.
23) ஆர்க்கிபால்ட் வேவல் (கி.பி.1943-1947) :
இவர் பதவியில் வந்து அமர்ந்தவுடன் பஞ்சத்தில் வாடும் கிராமப்புற வங்காளிகளுக்கு நிவாரண பொருட்களை வினியோகிக்கும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்டார். கி.பி.1944ல் ராஜாஜி சூத்திரம் (CR சூத்திரம்) இந்தியாவின் சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையேயான வேறுபாட்டை தீர்க்க முனைந்தது. இந்தியா பிரிவுபடுவதை காங்கிரஸ் எதிர்த்தது. இந்தியாவின் சுய அரசு தொடர்பாக கி.பி.1945ல் சிம்லா மாநாடு நடந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடுகளால் அவருக்கு இடையூறு ஏற்பட்டது கி.பி.1946ல் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. கி.பி.1946ல் ராயல் இந்தியன் நேவி கலகமும் நடந்தது.
24) மெளண்ட்பேட்டன் பிரபு (கி.பி.1947-1948) :
இவரே பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்லாக இருந்தார். கி.பி.1947 மார்ச்ல் இந்திய வைஸ்ராய்யாக நியமிக்கப்பட்டார். இந்திய சுதந்திர தீர்மானம் நிறைவேறி இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தது. கி.பி.1948 ஜுன் மாதம் வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரல்லாக பணியாற்றினார். மெளண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினா ஜவஹர்லால் நேருவுடன் உறவில் இருந்ததாக வதந்திகளும் உண்டு. இவரின் மனைவி எட்வினா கி.பி.1962ல் மறைந்த போது நேரு இந்திய போர்கப்பலை அனுப்பி அஞ்சலி செலுத்தினார். மெளண்ட்பேட்டன் மீது நிறைய கள்ள உறவு சர்ச்சைகளும் முறையற்ற தொடர்பு சர்ச்சைகளும் உண்டு.
25) டாக்டர் ராஜகோபாலாச்சாரி (கி.பி.1948-1950) :
மெளண்ட்பேட்டன் பிரபுவுக்கு பின்னர் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகவும் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் டாக்டர் ராஜாஜி பொறுப்பேற்றார். பின்னர் கி.பி.1950 ஜனவரி 26ல் இந்திய குடியரசு நாடாகும் வரை அந்த பதவியில் இருந்தார்.
உதவிய நூல்கள் :
இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு.இராமசுவாமி
இந்தியா உருவான கதை - க. சிவஞானம்
விக்கிபீடியா தகவல்கள்
படங்கள் :
கூகுள் படங்கள்


















Comments
Post a Comment