99) இந்திய சுதந்திர போராட்டம் (காந்தியின் வருகைக்கு முன்பு)
இந்திய சுதந்திர போராட்டம் (காந்தியின் வருகைக்கு முன்பு):
இந்தியாவின் சுதந்திர போராட்டம் 3 விதமாக நடந்தது.
- காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தின் வழியாக நடந்த வெகுஜன மக்கள் கிளர்ச்சி.
- பகத்சிங் போன்ற புரட்சியாளர்கள் நடத்திய ஆயுதம் தாங்கிய போராட்டம்.
- நேதாஜி போன்ற புரட்சியாளர்களின் போராட்டம்
பக்தி மார்க்கமும் தேசியமும் :
நாடு மிகப்பெரிய வழிகளில் சுதந்திர போராட்டத்துக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில் நாடு முழுவதும் ஆன்மீகமும் தடையற பரவலாக பரவியிருந்தது. தெற்கே தமிழ்நாட்டில் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற பெயரில் எல்லா மதங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு மார்க்கத்தை வகுத்து "அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" என்னும் ஒளி வழிப்பாட்டை நிலைநாட்டினார். கேரளாவில் நாராயண குரு என்பவர் சாதி மத வேறுபாடின்றி எல்லோரும் இறையை வழிபட முடியுமென்றார். தர்ம பரிபாலன சபை மூலம் ஒற்றுமையையும் தேசிய எழுச்சியையும் ஏற்படுத்தும் பணிகளை செய்தார். வங்காளத்திலே நடந்த சன்னியாசி போராட்டத்தை பற்றி "ஆனந்த மடம்" நாவலில் சொல்லிய பக்கிம் சந்திர சட்டர்ஜி "வந்தே மாதரம்" என்ற தேசிய பாடலை எழுதினார். இது மட்டுமில்லாமல் சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம், மோகன்ராய்யின் பிரம்ம சமாஜமும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியது. இவர்களுடன் சுவாமி ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தரின் பங்கும் முக்கியமானது. விவேகானந்தர் "பழம் பெருமையை சொல்லி அத்தோடு நின்றுவிடாமல் புதுமையை முயன்று பார்க்கணும். அதற்கு தேவை அச்சமின்மை. விழித்தெழு. எழுச்சி கொள். உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை நிறுத்தி விடாதே என்று சொல்லி தேச பக்தியையும் வளர்த்தார். இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ண மிஷனின் இடங்கள் புரட்சியாளர்கள் கூடி திட்டமிடும் இடங்களாக இருந்திருக்கிறது. லாகூர் சதி வழக்கில் தொடர்புடைய ராஷ் பிஹாரி போஸ் உள்ளிட்ட ஐவரும் ராமகிருஷ்ண மிஷனோடு தொடர்புடையவர்கள்.
ராஜாராம் மோகன் ராய் இந்து குடும்பத்தில் பிறந்தாலும் அதில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். குழந்தை திருமணம், சதி கொடுமைகளை கண்டு அதை அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதனால் பிரம்ம சமாஜம் என்னும் வழிபாட்டு முறையை வகுத்தார். பிரிட்டிஷாரின் உதவி கொண்டு சதியை ஒழித்தார். கிறிஸ்தவ மதத்திற்கு பலவந்தமாக மாற்றப்பட்டவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்ப சுவாமி தயானந்த சரஸ்வதி தொடங்கிய "ஆர்ய சமாஜம்" வழிவகுத்தது. பின்னர் அதுவே தேசிய இயக்கமாக வளர்ந்தது. இந்து மத சீர்திருத்தங்கள் போலவே முஸ்லீம்களும் தங்களது கருத்துக்களை பரப்ப முயற்சித்தனர். கி.பி.1873ல் சர் சையது அகமது கான் என்பவர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் 'முகமதிய ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரி"யை தொடங்கினார்.
சிப்பாய் புரட்சி ஏற்பட்ட பின்னர் ஆங்கிலேய அரசும் இந்திய மக்களின் குமுறல்களை உணர்ந்தே இருந்தது. அதனாலையே நிர்வாகங்களில் நிறைய சலுகைகளை இந்தியர்களுக்கு வழங்கி அவர்களை சமாதானப்படுத்த முயன்றது. அவர்களின் பிரச்சினையை சொல்ல ஒரு அமைப்பு இருந்தால் அதன் மூலம் அவர்களை சமாதானப்படுத்தி வைக்க முடியும் என்றும் அது அடித்தட்டு மக்கள் என்றால் அவர்கள் பிரச்சினைகளை பெரிதுபடுத்த வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் படித்த மேல்தட்டு மக்கள் என்றால் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று ரிப்பன் பிரபுவிடம் கி.பி.1883ல் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயர் ஒரு அமைப்பை உருவாக்கும் அவசியத்தை சொல்ல அவரும் ஒப்புக்கொண்டாலும் அடுத்து வந்த வைஸ்ராய் டுஃபெரின் பிரபு காலத்தில் தான் கி.பி.1885 டிசம்பரில் காங்கிரஸ் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. பூனேவில் ஆரம்பிக்கப்பட இருந்த காங்கிரஸ் அமைப்பு அங்கு அந்த நேரத்தில் காலரா பரவியதால் பம்பாயில் டிசம்பர் 28ல் காங்கிரஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் அதன் பொதுச்செயலாளராகவும் கல்கத்தாவை சேர்ந்த உமேஸ் சந்திர பானர்ஜி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தரப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுள் பெரும்பாலும் இந்துக்கள். இவர்கள் பெரும்பாலும் பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் இருந்து வந்திருந்தனர். காங்கிரஸ் அமைப்பை முஸ்லீம்கள் இந்துக்களின் ஆதிக்கம் தான் இருக்கும் நமது குரல் எடுபடாது என்று நினைத்தனர். தீவிர இந்துத்துவவாதிகளும் காங்கிரஸ் இந்து கலாச்சாரத்தை அழித்து மேலை நாட்டு கலாச்சாரத்தை புகுத்தும் அமைப்பு என்றே சந்தேக கண் கொண்டே பார்த்தனர். இந்தியர் ஒருவர் தொடங்கி வைத்தால் அரசு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம் என்பதால் இந்திய தியாசாஃபிகல் சொஸைட்டியுடன் தொடர்புடைய சர் ஹியூம்மை தொடர்பு கொண்டு ஒரு தேசிய அமைப்பை தொடங்க உதவுமாறு கேட்டதாக "பிபின் சந்திரா" தன் நூலில் இந்திய தேசிய காங்கிரஸ்ஸின் உருவாக்கத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
முதல் காங்கிரஸ் மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை கேள்விப்பட்ட ஆங்கிலேயருக்கு இந்தியர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. 2வது காங்கிரஸ் மாநாடு கி.பி.1886 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடந்தது. மாநாட்டிற்கு தலைமை தாங்கிய தாதாபாய் நெளரோஜி "இந்து முஸ்ஸீம்களான எங்களை யாரும் பிரிக்க முடியாது" என்று முழங்கி விக்டோரியா மஹாராணிக்கு வாழ்த்துப்பா தான் பாடினார். 3வது மாநாடு மதராஸ்ஸில் நடந்தது. இதில் தான் முதன்முதலில் சுதேசிய மொழியின் முழக்கம் கேட்டது. இந்த மாநாட்டில் மு.வீரராகவாச்சார்யார் எழுதி வெளியிட்ட "காங்கிரஸ் வினா விடை" என்ற நூலை வெளியிட ஆங்கிலேய அரசு வெறுப்படைந்தது. 4வது காங்கிரஸ் மாநாடு அகமதாபாத்தில் நடைபெற்றதை தடுக்க முயற்சித்தும் இரவோடு இரவாக நவாப் ஒருவரின் மாளிகையில் நடத்தி முடித்தனர். அதில் பேசிய ஒருவர் எனது வேலையாளான ஆங்கிலேயர் ஆயுதம் வைத்து கொள்ளலாம். நான் வைத்து கொள்ளக்கூடாது? என்ன ஒரு முட்டாள்தனமான சட்டம் என்று ஆயுத சட்டத்தை நீக்க தீர்மானம் போட்டார்கள். 5ம் மாநாடு பம்பாயில் நடந்தது. அதன் பின்னர் அரசுக்கெதிராக தங்கள் கருத்துக்களை வன்மையாக கூற ஆரம்பித்தனர். இறக்குமதி பொருட்களின் மீதும் பருத்தியின் மீது ஆயத்தீர்வை விதிக்கப்பட வன்முறை தவிர்த்து இந்திய முழுவதும் போராடினர். மெல்ல மெல்ல காங்கிரஸ் தலைவர்கள் இந்தியா எப்படி சுரண்டப்படுகிறது என்றும் விளக்க ஆரம்பித்தனர்.
விக்டோரியா மகாராணியின் வைரவிழா ஏற்பாடுகளின் போது கி.பி.1897 ஜூன் 27ம் தேதி தாமோதர் என்பவர் ராண்ட் என்ற ஆங்கிலேயரை சுட்டுக்கொன்றார். அவரை பிடித்து தூக்கிலிட்டதால் அவரை காட்டி கொடுத்தவர்களை அவரது சகோதரர்கள் கொன்றதால் அவர்களையும் தூக்கிலிட்டனர். இந்த கொலைக்கு உடந்தை என்று பாலகங்காதர திலகர் 18 மாதங்கள் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் "அபிநவ பாரத்" என்ற இளைஞர் குழுவை வீர் விநாயக் சாவர்க்கர் நடத்தினார். அதில் கடவுளின் பெயரால் பாரத மாதாவின் பெயரால் பூரண சுதந்திரத்திற்காக எந்த தியாகத்தையும் செய்வோம் என்று உறுதிமொழி எடுத்தார். இதை செயல்படுத்த அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு என்ற கோஷத்தோடு அன்னிய துணியை சேகரித்து திலகர் முன்னிலையில் கொளுத்தி ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிர்ப்பை கி.பி.1905ல் ஆரம்பித்து வைத்தனர்.
பிரபலமான வாட்சன் ஹோட்டலில் ஆங்கிலேயர் தவிர இந்தியர்கள் நுழையக்கூடாது என்று தடுத்ததால் ஜாம்ஷெட்ஜி டாடா 560 அறைகளையும் 44 அறைத்தொகுதிகளையும் கொண்ட 7 மாடி நட்சத்திர ஹோட்டலான இந்திய-சரசெனிக் முறையில் கட்டப்பட்ட "தாஜ் மஹால் பேலஸ்" கி.பி.1903 டிசம்பர் 16ல் திறக்கப்பட்டது.
கி.பி.1905ல் வங்காள பிரிவினையை கர்சன் பிரபு ஆரம்பித்து வைத்தார். நிர்வாக வசதிக்காக இந்துக்கள் வாழும் பகுதியை மேற்கு வங்காளம் என்றும் முஸ்லீம்கள் வாழும் பகுதியை கிழக்கு வங்காளம் என்றும் சொல்லிக்கொண்டு ஒற்றுமையாக இருந்த மக்களை பிரிக்க அறிவிப்பு விட வங்காளம் கொதித்தெழ ஆரம்பித்தது. இந்த நேரத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய "வந்தே மாதரம்" புரட்சியாளர்களின் கோஷமாக மாறியது. ரவிந்திரநாத் தாகூர் கூட கோபப்பட்டு எழுதிய பாடல் இன்றைய வங்காள தேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. சுரேந்திர நாத் பானர்ஜி, விபின் சந்திர பால் ஆகியோரின் தலைமையில் பிரிவினையை எதிர்த்து கூட்டங்கள் நடந்தது. இந்த நேரத்தில் "சுதேச மித்திரன்" பத்திரிக்கையில் ஆசிரியராக சேர்ந்திருந்த பாரதியார் பிரிவினையை எதிர்த்து சுதந்திர தீ பரவ எழுத ஆரம்பித்திருந்தார். சென்னை கடற்கரை திடலில் நடந்த கூட்டத்தில் "வங்கமே வாழிய" என்ற பாடலை பாடினார். எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 16ல் வங்க பிரிவினை நிறைவேறியது. சுரேந்தர் நாத் பானர்ஜி வங்காளத்திலுள்ள "பாரிசால்" என்னுமிடத்தில் கூட்டம் கூடி வந்தே மாதரம் பாட தேச பக்தர்கள் ஒன்று கூடி கர்சன் பிரபுவின் கொடும்பாவி எரித்து அவருக்கு இறுதி சடங்கை நிகழ்த்த பிரச்சினை வீரியம் ஆனது. சுரேந்திர நாத் பானர்ஜி "தலையை வெட்டினாலும் வந்தே மாதரம் பாடுவேன்" என்ற முழங்கினார். கி.பி.1906 ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஊர்வலத்தை கண்ட ஆங்கிலேயர்கள் ஆணையிட இந்திய போலீசார் தொண்டர்களை லத்தி தாக்குதல் நடத்தி இரத்த ஆறு உண்டாக்கினார். கண்மூடி தாக்குதல்களால் தேசபக்தர்கள் சோர்வடையவில்லை. முன்னிலும் ஆக்ரோஷமாக "வந்தே மாதரம்" புதிய போர் கோஷமானது. இதனால் அந்த ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் காலனி ஆட்சிக்கு வங்காளத்தில் எந்த ஒத்துழைப்பும் தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸின் தேசியவாத உறுப்பினர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் காலனி ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் காங்கிரஸில் இருந்த மிதவாதிகள் காலனி ஆட்சியை கோபப்படுத்தும் செயல்களில் இறங்க வேண்டாம் அன்னிய பொருட்களை மட்டும் புறக்கணித்தால் போதுமானது என்று கூற இந்த சூழ்நிலையில் கி.பி.1907ல் சூரத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் மிதவாதிகள் கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நெளரோஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா தலைமையிலான மிதவாதிகள் பிரிவு வெற்றி பெற்றனர். பால கங்காதர திலகர் தலைமையிலான தீவிர தேசியவாதிகள் காங்கிரஸ்ஸை விட்டு வெளியேற இரு தரப்பும் பலவீனமடைந்ததால் காலனி ஆட்சி திலகரின் சுதேசி இயக்கத்தை ஒடுக்கி விட்டது. மேலும் அரசுடன் மிதமான அணுகுமுறையை கொண்டதால் இளைய தலைமுறையினர் காங்கிரஸை புறக்கணித்தனர்.
முஸ்லீம்கள் லார்ட் மின்டோ பிரபுவை சந்தித்து மக்கள்தொகையின் அடிப்படையில் இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் முன்பு அவர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் தனித்தொகுதிகள் வழங்கப்படவேண்டும் என்று கூறினர். மின்டோ பிரபுவும் அவ்வாறே கவனிப்பதாக உறுதி கூறினார். மின்டோ பிரபு இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியர்கள் என்பதை மறந்து இருவரும் தனித்தனி நாட்டினர் என்று கருத தொடங்கியதே பிரிவினைக்கு வித்திட்டது. கி.பி.1886ல் அலிகாரில் சர் செய்யத் அஹ்மத் கான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட "மொஹம்மடன் எஜூகேஷனல் கான்பரன்ஸ்" அமைப்பின் மாநாடு கி.பி1906ல் டாக்காவில் கூடியது. முஸ்லீம்களின் நலனையும் உரிமைகளையும் காக்க அமைப்பு தேவை என்று விவாதிக்கப்பட்டு "அகில இந்திய முஸ்லீம் லீக்" என்று கட்சி தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இரண்டும் இணைந்தே பணியாற்றி வந்தது. ஒருவர் இரு கட்சியிலும் உறுப்பினராகவும் இருந்தனர்.
இதற்கிடையில் சிப்பாய்கலகம் மீண்டும் அதன் பொன்விழா ஆண்டில் திரும்பவும் நடைபெற இருப்பதாகவும் லாலா லஜபதி ராய் அதற்கு தலைமை தாங்க போவதாகவும் "சிவில் மிலிட்டரி கெஸட்" கற்பனை பயத்தால் எழுத அதனால் ஆங்கில அரசு அவரை கைது செய்து கி.பி.1907 மே7ல் பர்மாவிலுள்ள மாண்ட்லே சிறைக்கு அனுப்பியது. அடுத்த இரண்டு வாரங்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளை வந்தே மாதரம் என்ற மந்திரம் பொறித்த கொடியுடன் "லாவோ" & "காலியா" என்ற கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தினார். பின்னர் அந்த வருடம் சூரத் மாநாட்டில் நடந்த தள்ளுமுள்ளுகளால் திலகர் காங்கிரஸை விட்டு பிரிந்தார். அடுத்த ஆண்டு 1908 மார்ச் மாதத்தில் விபின் சந்திரபால் கைதாகி விடுதலை பெற்ற தினத்தை சுயராஜ்ய தினமாக கொண்டாட மார்ச் 9ல் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமண்ய சிவா முனைந்தனர். கலெக்டர் விஞ்ச்சை சந்தித்து தங்களது தரப்பை விளக்கியும் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் மார்ச் 10ம் தேதி தடையை மீறி பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடத்த 12ம் தேதி கலெக்டர் விஞ்ச் வ.உ.சி.யையும் சுப்ரமணிய சிவாவையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்க மார்ச் 13ம் தேதி திருநெல்வேலி ஸ்தம்பித்தது. திரளாக ஊர்வலம் சென்ற மக்களை நோக்கி டெபுடி கலெக்டர் ஆஷ் சுட்டதில் 4 பேர் இறந்து போயினர். பின்னர் நடந்த வழக்கு விசாரணையில் கி.பி.1908 ஜூலை 8ம் தேதி வ.உ.சிக்கு அரச நிந்தனை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் தீவாந்திர தண்டனையும் சிவாவுக்கு உதவிய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் தீவாந்திர தண்டனையும் சுப்ரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் தீவாந்திர தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இத்தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. கோயம்புத்தூர், கண்ணணூர் சிறையில் மாட்டிற்கு பதிலாக எண்ணெய் செக்கை இழுக்க வைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். இதனால் "செக்கிழுத்த செம்மல்" என்று அழைக்கப்பட்டார். இவரை சிறைக்கு அனுப்பியவுடன் இவரது கப்பல்களை ஆங்கிலேய அரசு பறித்துக்கொண்டது. சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. சிறையில் இருக்கும்போது வழக்கறிஞர் லைசன்ஸ்யையும் பிடுங்கி கொண்டது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் குடும்பம் நடத்தவே சிரமப்பட நேர்ந்தது. பிழைப்புக்காக மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். இவரின் பரிதாப நிலையை கண்ட தென்ஆப்பிரிக்கா இந்தியர்கள் பணம் வசூலித்து காந்தியிடம் கொடுத்து கொடுக்க சொன்னார்கள். இந்தியா வந்து நிறைய வருடங்கள் கழித்தே அந்த பணத்தை வறுமையினால் வாடிய போதும் காந்தி சிதம்பரம் பிள்ளையிடம் கொடுக்க மறந்து போய் நினைவூட்டலுக்கு பிறகே கொடுத்தார். பின்னாளில் தூத்துக்குடி கலெக்டராக வந்த வாலீஸ் என்பவர் அவருக்கு வழக்கறிஞர் உரிமத்தை திரும்ப கொடுத்தார். அந்த நன்றியுணர்ச்சியினால் தன் மகனுக்கு "வாலேஷ்வரன்" என்று பெயரிட்டார். வ.உ.சி கைது நிகழ்வே பின்னாளில் புரட்சியாளர் நீலகண்ட பிரம்மச்சாரி தலைமையின் கீழ் கி.பி.1911 ஜூன் 17ம் தேதி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் செல்ல இருந்த டெபுடி கலெக்டர் ஆஷ் துரையை "வாஞ்சி நாதன்" சுட்டு கொன்று ரயில் பெட்டியின் கழிப்பறையில் தானும் தன்னை சுட்டு கொண்டு தற்கொலை செய்ய காரணமாயிற்று. வாஞ்சிநாதன் பாண்டிச்சேரி சென்று வ.வே.சு.ஐயரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுக்கொண்டு வந்து ஆஷ் துரையை சுட்டுகொன்றார். கி.பி.1908ல் நடந்த "அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு" சார்பாக அரவிந்தர் உட்பட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட அவர்களுக்காக தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் வாதாடினார். அலிப்பூர் சிறைச்சாலையில் இருக்கும்போது அரவிந்தர் இறை தரிசனம் கிடைத்து முழுக்க முழுக்க ஆன்மிகவாதியாக மாறிவிட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தர் முதலாம் உலகப்போருக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் அமைத்து இறை பணியில் ஐக்கியமாகி விட்டார். கி.பி.1908 ஜூன் 24ல் கேசரி பத்திரிக்கை தலையங்கத்திற்காக திலகரை கைது செய்தனர். பம்பாயிலும் பூனேவிலும் கலவரம் வெடித்தது. திலகருக்காக முகமதலி ஜின்னா வாதாடினார். முடிவில் 6 ஆண்டுகள் தீவாந்திர தண்டனை கொடுக்கப்பட்டது பர்மாவுக்கு அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து தலையங்கம் எழுதிய பாரதியை கைது செய்ய வர அவர் பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு சென்று அங்கிருந்து புரட்சிக்கனல் முழங்கினார்.
கி.பி.1909 ஜூலை 1ம் தேதி வங்காள பிரிவினைக்கு காரணமான கர்சன் பிரபு, மோர்லி பிரபு ஆகியோரை நெருங்க முடியாமல் ஆலோசகரான சர் கர்சான் வைலியை திங்ரா என்பவர் சுட்டுகொன்றார். சுட்டவுடன் மாட்டிக்கொள்ள முயலாமல் நீதிமன்றத்தில் எனது நாட்டிற்கு இழைத்த அநீதி காரணமாக கொன்றேன் என்று முழங்கி தூக்கு கயிறு ஏறினார். அவரது செயலை கண்டித்த கூட்டத்தில் வீர் சாவர்க்கார் மற்றும் வ.வே.சு ஐயர் தீர்மானத்தை கண்டித்து வெளியேறினர். இதற்கிடையில் தாதாபாய் நெளரோஜி " லண்டன் இந்தியா சொஸைட்டி" என்ற அமைப்பை ஆரம்பித்து பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் உறுப்பினராகி பிரிட்டிஷ் அரசு எவ்வாறு இந்தியாவை சுரண்டுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவை சுரண்டியதால் தான் செல்வ செழிப்புள்ள இந்தியா பஞ்சத்தில் உழ ஆரம்பித்தது என்று பார்லிமென்ட்டில் முழங்கினார்.
கி.பி.1911ல் வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அதே ஆண்டு டெல்லியில் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தர்பார் நிகழ்வை டெல்லியில் வைஸ்ராய் ஹார்டிஞ்ச் பிரபு நடத்தி டெல்லியை இந்தியாவின் தலைநகராக அறிவித்தார். அதையொட்டி நிகழ்வில் அவர் மீது ராவ் பிஹாரி போஸ் மற்றும் அவரது நண்பர்களும் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றதில் படுகாயங்களுடன் வைஸ்ராய் உயிர் தப்பினார். இதற்கிடையில் நாஸிக்கில் ஆங்கிலேயர் ஒருவரை கொலை செய்த வழக்கில் சாவர்க்காரின் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கார் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு துப்பாக்கியை லண்டனில் இருந்து கொடுத்ததாக வீர் சாவர்க்கார் குற்றம் சாட்டப்பட்டு லண்டனில் கைது செய்யப்பட்டு இந்தியா அனுப்பும் வழியில் கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பித்து பிரெஞ்சு கடற்படையில் மாட்ட அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அவரிடம் ஒபபடைத்தனர். இந்திய நீதிமன்றத்தில் விசாரித்து அவருக்கு 20 ஆண்டுகள் தீவாந்திர தண்டனையாக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்தமான் சிறையில் சகோதரர்கள் இருவரும் அடைக்கப்பட்டாலும் அவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் பிரித்து வைக்கப்பட்டு இருந்தனர். 9 வருடம் 10 மாதங்கள் சிறை தண்டனைக்கு பிறகு அந்தமான் சிறையிலிருந்து எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார். அதற்கு அவர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் தான் அவ்வாறு ஆங்கிலேயர் மன்னித்து விடுதலை செய்தனர் என்று சொல்லுவார்கள். அந்தமான் சிறையில் சக கைதிகளுக்கு புரட்சியின் வரலாற்றையும் அதை பற்றிய விவரங்களையும் அவர்களுக்கு எழுத படிக்கவும் வைத்தார். சிறையில் மடிந்து போவதை விட மெல்ல வெளியே வந்து சுதந்திர போராட்டத்தை நடத்தலாம் என்ற எண்ணத்தில் ஆங்கிலேயர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தும் 9 1/2 வருடங்கள் சிறையில் வாடி வெளியே வந்த சாவர்க்கர் கி.பி.1915ல் மதன் மோகன் மாளவியாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகாசபையில் இணைந்து பின்னர் கி.பி.1920ல் தலைவராக உயர்ந்தார். இவர் லண்டனில் இருக்கும்போது எழுதிய சிப்பாய்கலகத்தை பற்றி "எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திர போர்" என்ற புத்தகம் எழுத்து பிரதியாக இருக்கும்போதே தடை செய்யப்பட்டது. கி.பி.1948ல் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்ற வழக்கில் இவர் மீதும் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. கோட்சே இவரை அந்த்யந்தமாக பின்பற்றிய சீடர்களுள் ஒருவர் என்ற காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை முடிவில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில் கி.பி.1914ல் முதலாம் உலகப்போர் துவங்கியது. அந்த நேரத்தில் சென்னையை ஜெர்மானிய கப்பலான "எம்டன்" செப்டம்பர் 22ம் தேதி தாக்கியது. அரை மணி தாக்குதலில் பர்மா ஷெல் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. ஆங்கில கடற்படை வீரர்கள் சுதாரித்து தாக்குவதற்குள் எம்டன் கப்பல் சிலோனை சுற்றி ஒடி தப்பித்தது. இந்த கப்பல் தாக்குவதற்கு துணை நின்றவர் தான் செண்பகராமன் பிள்ளை. பின்னாளில் ஜெர்மனியில் ஹிட்லருடன் நட்பு கொண்டு இந்தியர்களை கொண்டு ஒரு படையை திரட்டியிருந்த இவரே "ஜெய்ஹிந்த்" என்ற சொல்லை பயன்படுத்தியவர். இந்த சொல் பின்னாளில் நேதாஜியின் மூலம் பிரபலமாயிற்று. கர்த்தார் சிங் கி.பி.1912ல் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் விமானங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு கி.பி.1915ல் ஒரே சமயத்தில் புரட்சியில் ஈடுபடுவது என்று முடிவு செய்த போது துரோகிகளால் காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த வாழ்க்கையே "முதல் லாகூர் சதி வழக்கு" என்று குறிப்பிடுவர். பின்னாளில் பகத் சிங் இந்த கர்த்தார் சிங்கை தான் தனது குரு என்று குறிப்பிட்டார்.
கி.பி.1909ல் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் செயல்பாடுகளை பற்றி கேள்விப்பட்ட பாரதியார் தனது பத்திரிக்கையில் காந்தி இந்தியா திரும்பி காங்கிரஸின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று "இந்தியா" பத்திரிக்கையில் எழுதினார்.
அந்த தென்னாப்பிரிக்க போராட்டத்தின் போது கோபால கிருஷ்ண கோகலேயின் நட்பு காந்திக்கு கிடைத்தது. கி.பி.1915ல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா திரும்பினார். இனி தான் அவர் "மகாத்மா" என்ற பெயரால் அழைக்கப்படும் சரித்திரம் அறியாமல் இந்தியா வந்திறங்கினார்.
உதவிய நூல்கள் :
இந்திய சுதந்திர போராட்டம் - இலந்தை சு. இராமசாமி
அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - என்.சொக்கன்
அந்தமான் சிறை அனுபவங்கள் - சாவர்க்கார்
எனது இந்தியா - எஸ்.இராமகிருஷ்ணன்
மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். இராமகிருஷ்ணன்
இந்தியா உருவான கதை - க.சிவஞானம்
படங்கள் :
கூகுள் படங்கள்








Comments
Post a Comment