முன்னுரை

ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சரித்திரத்தின் மீது ஒரு ஈடுபாடு உண்டு. அதனால் சரித்திரம் சம்பந்தப்பட்ட நூல்கள் தான் அதிகம் என்னுடைய புத்தக அலமாரியில் இருக்கும். நண்பர் Nandakumar (Trichy)  நல்ல புத்தக வாசிப்பாளர். அவரிடம் நிறைய புத்தகங்கள் கேட்டுருந்தேன். பதிப்பகங்களில் தேடி வாங்கி அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்துவிட்டு படித்த புத்தகங்களின் விமர்சனத்தை எழுதுங்க என்று கோரிக்கை விடுத்தார். எனக்கு விமர்சனம் எழுத வராது வேண்டுமென்றால் இதுவரை படித்த புத்தகங்களின் இருந்து தொகுத்து பிரபலமான அரசர்களை பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்‌ என்று சொன்னேன். அப்படி சாணக்யரில் ஆரம்பித்து அசோகர் போனது. மெல்ல அந்த வம்சம் எப்படி ஆரம்பித்தது அதன் முடிவு எப்படியானது என்று சேர்த்து எழுதலாம் என்று ஆரம்பித்து எழுத ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பல அரசுகள் தொடர்ந்து ஒவ்வொரு அரசுகளை பற்றி படித்தவற்றையும் கூகுளில் தேடியவற்றையும் சேர்த்து எழுதியுள்ளேன். தேட தேட விஷயங்கள் ஊற்று போல ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்தது. அக்பர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் லக்கிபாக் என்ற பெயரில் 1 லட்சம் மாமரங்கள்  கொண்ட மாம்பழ தோட்டம் பீஹாரில் அமைத்திருந்தார் என்பதும் மீரா பாய் பிரபல இராஜபுத்ர மேவார் அரசர் ராணா சங்காவின் மருமகள் என்பதும் புதிய விஷயங்களாக தெரிய வந்தது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் சமஸ்தானங்கள் இணைப்பின் போது பரோடா மன்னர் தனது இரண்டாவது மனைவியுடன் அரச கஜானாவில் இருந்து தனது மனைவி பெயரில் வெளிநாட்டில் சொத்து சேர்த்து அந்த நாட்டில் செட்டிலானது வரை மிகவும் புதிய விஷயங்களாக தெரிய வந்தது. மொகலாயர்களில் ஒளரங்கசீப்பின் அண்ணனான தாரா ஷீக்கோ ஏக பத்தினி விரதனாக ஒரு மனைவியோடு மட்டும் வாழ்ந்தார் என்று அபூர்வ தகவலும் கிடைத்தது. சீக்கியர்களின் பண்டா பகதூர் ஒளரங்கசீப்பிற்கு பின்னர் மொகலாய பேரரசை கலகலக்க வைத்த செய்தியும் லாகூர் அருகிலுள்ள சுங்க சாவடியில் (அந்த காலத்திலையே ரோடு டேக்ஸ் இருந்திருக்கிறது) மொகலாயர்கள் முன்பே கல்சா வரிவசூல் செய்த இரு சீக்கியர்கள் வெறும் தடிகளாலையே மொகலாயர்களை விரட்டி அடிக்க பெரும் படைகளுடன் ஆயுதம் சகிதமாக வந்தவர்களையும் எதிர்த்து போரிட்டு மாண்டு போன நிகழ்வுகளும் சீக்கியர்களின் நெஞ்சுரத்தை விளக்கும் புதிய செய்திகள். மேலை கங்கர்களின் முதல் அரசனான அனந்தவர்மன் சோடகங்கன் கீழை கங்கர்களின் வம்சத்தில் வந்தவர் என்பதும்  முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகளான இராஜ பூசுந்தரியின் மகன் என்ற தகவலும் புதியதாக இருந்தது. அரபுகளின் படையெடுப்பை மேவார் இராஜபுத்ர பப்பா ராவல் விரட்டியடித்தவுடன்  இனியும் படையெடுத்து வராமல் தடுப்பதற்காக ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திற்கும் 1000 வீரர்கள் அடங்கிய எல்லைகாப்பு படையை அமைத்து அரபுகளின் அன்னியர்களின் ஊடுருவலை தடுத்த செய்தியும் தெரிய வந்தது. மொகலாய பேரரசர் ஒளரங்கசீப் எண்ணற்ற இந்து கோயில்கள் ஏன் காசி விஸ்வநாதர் கோயில் மட்டுமல்ல ஒரு வருடம் 1000 ஆட்களை பணியில் அமர்த்தி நாடு முழுவதும் உள்ள கோயில்களை இடிக்க வைத்தார். ஏன் புகழ்பெற்ற எல்லோரா கைலாசநாதர் குகை கோயிலை இடிக்க முடியாமல் அதன் உருவங்களை மட்டும் சிதைத்து விட்டு போயினர். ஆனாலும் சில இந்து கோயில்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார். ஏன் குமரகுருபரருக்கு காசியில் மடம் அமைக்க இடம் வழங்கியதோடு இல்லாமல் நிதியுதவியும் வழங்கியுள்ளார் என்ற விவரமும் தெரிய வந்தது. அதிலும் மொகலாய இளவரசர்கள் எல்லாரும் மது அபின் என்று போதையிலையே மூழ்கியவர்களாக இருந்தாலும் வாழ்நாளில் மதுவை ஒருமுறை கூட அருந்தாதவர் தான் ஒளரங்கசீப். மொத்தத்தில் சரித்திரத்தில் புரிந்து கொள்ளமுடியாத அரசர் அவரே. மொகலாயர்கள் காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்கள் மட்டுமல்ல கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை திரும்ப கட்ட உதவியதுடன் சோம்நாத்தில் இடிக்கப்பட்ட ஜோதிர்லிங்க கோயிலை திரும்ப கட்டி கொடுத்தார் இந்தூரின் மகாராணி அஹில்யா பாய் ஹோல்கர் என்ற விவரமும் அறிய வந்தது. அசோகரை பற்றி எல்லோரும் 100 சகோதரர்களை கொன்று குவித்து ஆட்சியேறினார் என்று நம்பிட்டு இருந்தது எல்லாம் கட்டுக்கதை. அதெல்லாம் பெளத்த மதத்தை பின்பற்ற ஆரம்பித்தவுடன் அவரை புனிதர் பிம்பத்திற்கு முன்பு வெறியராக காட்ட இலங்கையின் புத்த மதத்தினர் கட்டி விட்ட கதைகள் என்பதும் அறிய வந்தது. மதுரையில் நாயக்கர் வம்ச ஆட்சியை தொடங்கி வைத்த விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பகாரராக (அடைப்பகாரர் என்பது வெற்றிலை மடித்து கொடுப்பவர். இந்த பணியை அவரின் நம்பிக்கையான மெய்காவல் தலைவருக்கு தான் கொடுப்பார்கள். ஏனெனில் வெற்றிலை தாம்பூலத்தில் விஷமிட்டு கொன்று விடக்கூடாது என்பதால்) பணியாற்றியதும் அவரின் தந்தையான நாகம நாயக்கர் கிருஷ்ண தேவராயர் உத்தரவுபடி மதுரையின் கலகத்தை அடக்கி தன்னுடைய ஆட்சியை ஆரம்பித்ததும் அவரை மகனான விஸ்வநாத நாயக்கரே அடக்கி கைது செய்து கிருஷ்ண தேவராயர் வசம் ஒப்படைக்க அவரின் விசுவாசத்தை பாராட்டி தந்தையை விடுவித்து மகனை மதுரையின் அரசனாக்கிய விவரமும் அறிய வந்தது. இந்த காலத்தில் மட்டுமல்ல அந்த காலத்திலும் வதந்திகள் பரவிட்டு தான் இருந்தது போலும். ஷாஜஹானுக்கும் அவரின் மகளான ஜஹனாராவுக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும் இருந்த வதந்தியை அவரது மகனான ஒளரங்கசீப்பே கிளப்பியிருக்கலாம் என்று பெர்னியர் தனது குறிப்புகளில் கூறுகிறார். ஒளரங்கசீப் முறையற்ற கள்ளக்காதல் புரிந்த தனது இன்னொரு அக்காவான ரோஸனாரா பேகத்திற்கு இந்த விஷயத்தால் விஷமிட்டு தண்டனை கொடுத்தார். ஆனால் ஜஹனாரா பேகத்திற்கு தண்டனை எதுவும் கொடுக்காமல் அவருக்கு பாத்ஷா பேகம் பதவி அளித்தார் என்பதிலிருந்து அந்த வதந்தி பொய் என்பது தெளிவாக அறிய முடிகிறது. ஒளரங்கசீப்பின் மகள் ஜெப்உன்னிஸ்ஸா பேகம் தான் இன்று பெண்கள் அணியும் குர்தியை வடிவமைத்தவர் என்பதும் தெரிய வந்தது. காம்பிளி தேசத்து அரசனுடன் போரில் முகமது பின் துக்ளக் வென்று அவர்களின் தளபதிகளை சிறைப்பிடித்து முஸ்ஸீம்களாக மாற்றினார். பின்னர் நாட்டின் நிர்வாகத்திற்காக அவர்களை அனுப்ப இங்கே வந்து சிருங்கேரி சாரதா பீடத்தின் ஆச்சார்யர் வித்யாரண்யரினால் மனமாற்றம் பெற்று மீண்டும் இந்து மதத்திற்கு மாறி இந்து தர்மத்தை காக்க ஹரிஹரர் மற்றும் புக்கர் மற்றும் அவரின் மீதமுள்ள 4 சகோதரர்களால் (மொத்தம் 6 சகோதரர்கள்) ஆரம்பிக்கப்பட்ட அரசு தான் விஜயநகர பேரரசு. இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களாக ஒவ்வொரு அரசுகளாக 104 அத்தியாயங்களாக சாணக்கியரில் ஆரம்பித்து இந்திய பிரிவினை மற்றும் காரணங்கள் சமஸ்தானங்கள் இணைப்பு வரை எழுதியுள்ளேன். இன்னமும் கூட நிறைய எழுதலாம். வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் எழுதலாம். இதுவே கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு மேல் ஒய்வு நேரத்தில் எழுதியது தான். இதை எழுத உதவி புரிந்த என் மனைவிக்கு நன்றி கூறுகிறேன். இந்த ப்ளாக் ஐடியாவை கூறி இதில் எழுத உதவிய நண்பன் ஆழ்வாரப்பன் மற்றும் லே-அவுட் டிசைனிங் செய்த நண்பன் ஜோக்கர் சுரேஷ் பாபு மற்றும் ப்ளாக் வடிவமைத்து கொடுத்த என் மகன் திருமுத்துகுமரன் (என்ற) சஞ்சீவ்வுக்கும் உதவி புரிந்த தம்பி மகள் மகிதராவுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன். ஆரம்பத்தில் முகநூல் பக்கமாக இதை ஆரம்பித்து கொடுத்த அன்பு அண்ணன் திரு. மோகனசுந்தரம் கந்தசாமிக்கும் என்‌ நன்றியை கூறிக்கொள்கிறேன். நான் ஒவ்வொரு அத்தியாயமாக எழுத எழுத எனக்கு ஊக்கம் கொடுத்த என் சித்தப்பா திரு.மோகன் மற்றும் எனது அன்பு உடன்பிறவா தம்பிகள் பாலாஜி மற்றும் விஷ்ணுகாந்த் அவர்களுக்கும் என் நன்றிகள். 

Comments

Post a Comment

Popular posts from this blog

70) மொகலாய பேரரசு - அக்பர்

1) மெளரிய பேரரசு - சாணக்யர்

25) மைத்ரகா அரசு